சனி, 2 மே, 2020

மே இரண்டு, செந்தமிழ் அரிமா இலக்குவனார் சிறைமை நாள் – மறைமலை இலக்குவனார்


மே இரண்டு, செந்தமிழ் அரிமா இலக்குவனார் சிறைமை நாள்

02.05.1965 செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் வேலூர்க் கொட்டடியில் தளைப்படுத்தப்பட்ட நாள்.
நேற்று நடந்தது போன்று நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.
எங்கள் வீட்டு வாசலில் ஒரு வாடகை மகிழ்வுந்து வந்து நின்றது.
வண்டியிலிருந்து இறங்கிய நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் “ஐயா,மாடியில்தானே இருக்கிறார்கள்?” என்னும் வினாவை எழுப்பியவாறே எங்கள் விடைக்குக் காத்திராமல் மாடிக்கு ஏறிவிட்டார்.
சற்றுப் பொறுத்து, வந்தவருக்குக் காப்பிக் குவளையுடன் நான் மாடிக்குச் சென்றேன்.
“ஐயா,ஒன்றுமில்லை.கொஞ்சம் கலந்துரையாடல். அப்புறம் உங்களை வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிடுவோம்.”என்கிறார் அவர்.
“ஐயா, தயங்காதீர். நான் பெட்டி படுக்கை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்.” எந்தத் தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் அப்பா கூறுகிறார்.
எனக்கு மின்னலடித்தது. “ஓ!அப்பாவைத் தளைப்படுத்தப் போகிறார்கள்”
இவரை எனக்கு நினைவிருக்கிறது. அழுத்தமும் தெளிவும் நிறைந்த குரலில் ஒரு சொற்பொழிவாளருக்குரிய தோரணையில் பேசுவார்.
நடராசன் எனப் பெயர்.
சிறைப்படுத்த வருபவர்கள் ஏன் வாடகை மகிழ்வுந்து கொண்டுவரவேண்டும?. கீழே கறுப்பு வண்ணமும் மேலே மஞ்சள் வண்ணமும் கொண்ட அந்த அம்பாசடர் வண்டி ஒரு கறுப்பு சிவப்புக் கொடியைத் தாங்கியிருந்தது வியப்பிலும் வியப்பு.
ஏதோ தி.மு.க.கூட்டத்துக்குப் பேராசிரியர் இலக்குவனார் பேசப் போகிறார் என்று மக்கள் எண்ணவேண்டுமாம். என்ன புத்திசாலித்தனம்!
“ஐயா,அரை மணி நேரத்தில் திரும்பிவிடலாம்.” என்கிறார் ஆய்வாளர் நடராசன்.
“என்னய்யா சொல்கிறீர்? திருநகரிலிருந்து மதுரை செல்லவே நாற்பது நிமிடம் ஆகுமே?” என்னும் பேராசிரியரின் வினா வந்தவர் பொய்யுரைப்பதை எள்ளலுடன் புலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
வண்டி கிளம்பிவிட்டது.சற்றுமுன் தனக்கன்குளம் மொட்டைமலையில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த நண்பர்கள் சாந்தமூர்த்தியும் தினமணியும் வீட்டுக்கு வெளியே நின்றவாறு “யார் வந்து போகிறார்கள்?” என வினவியவர்கள் என் விடைக்குக் காத்திராமல் “ஏன் மீண்டும் கைது செய்கிறார்கள்?” எனக் கேட்டார்கள்.
எங்கள் வீட்டுக்குமுன் வந்துநின்ற வாடகைவண்டியை மட்டுமே நான் பார்த்திருந்தேன். ஆனால் தெருக்கோடியில் நின்றிருந்த காவல்துறையின் மூடுந்து அவர்களுக்குக் காட்சியளித்துள்ளது. எனவே வந்துசென்றவர் காவல்துறை அதிகாரி என்பதிலும் இலக்குவனார் சிறைக்குத்தான் அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதிலும் அவர்களுக்கு எள்ளளவும் ஐயமிருக்கவில்லை.
“அப்புறம் ஏன் பெட்டி படுக்கை எடுத்துச்செல்ல இசைவளிக்கவில்லை?” என்னும் வினா என் பேதையுள்ளத்தில் எதிரொலித்தவாறிருந்தது.
மாலையில் என் தமையனார் பொறியாளர் திருவேலன் வந்துசேர்ந்த சற்றுநேரத்தில் தொலைபேசியில் காவல்துறையின் அழைப்பு. அப்பா வெளியூர் செல்லப் போவதாகவும் ஒருவாரத்துக்குரிய துணிமணிகளை எடுத்து வருமாறும் தெரிவிக்கப்பட்டது.
அப்பா வழக்கமாக வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்லும் பொருள்நிறைக்கும் மெத்தை(Hold-all) துணிகளுடனும் பற்பசை, வழலை முதலான வழமையான தேவைப்பொருள்களுடனும் ஆயத்தமானது.
அதுவரை எந்தக் கலக்கமும் இன்றி இயங்கிக்கொண்டிருந்த எனக்கு அப்போது கவலையும் குழப்பமும் மனத்தை நிறைத்தது.
அண்ணன் எந்த வண்டியில் எப்படிச் சென்றார் என நான் அப்போதும் பார்க்கவில்லை, இப்போதும் நினைவில் இல்லை. ஆனால் ஒருமணி நேரத்தில் திரும்பிவிட்டார்.அப்போது மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தாமரை என நினைவு; மண்டலத் துணைத்தலைவர் டயசு. “பேராசிரியரது துணிமணிகளுடன் அழைத்து வந்திருக்கலாமே? அவருக்கு ஏன் வீண்தொல்லையளித்தீர்கள்?” என ஆய்வாளர் நடராசனைக் கடிந்துகொண்டார்களாம். ஏனெனில் தமையனார் திருவேலன் துணிமணிகளைக் கொண்டுசென்றவுடன் அப்பாவை அழைத்துச் செல்ல வண்டி ஆயத்தமானது. அவரது அகவையையும் முதன்மையையும் கருத்தில்கொண்டு அவரை மூடுந்து ஒன்றில் அழைத்துச் செல்வதனைத் தவிர்த்து வாடகை மகிழ்வுந்துவண்டியிலே அழைத்துச் சென்றார்களாம். செல்லுமிடம் இருநூற்றைம்பது கல் தொலைவில் உள்ள வேலூர் ஆயிற்றே!
மறுநாள் செய்தித்தாள்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஒரு பேராசிரியர் தளைப் படுத்தப்பட்டார் என்பதனால் ஊரிலுள்ள பேராசிரியர்களனைவரும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்? எல்லாரும் வாய்புதைத்து வாளாவிருந்தார்கள் என்பதுதான் வரலாறு. சிலம்புச்செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமைத் தலைவர் கே.டி.கே.தங்கமணி இருவரும் பேராசிரியர் சிறைப்படுத்தப்பட்டதனை வன்மையாகக் கண்டித்திருந்தார்கள்.

மே முதல்நாள் மதுரையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு வரவேற்பு. அவர் பாளையங்கோட்டையிலிருந்து விடுதலைபெற்று வந்திருந்தார். பெப்பிரவரி இறுதியில் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளியில் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் விடுதலை பெற்று வந்ததனை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க. அவருக்கு வழங்கிய வரவேற்புவிழா. பேராசிரியர் சி.இலக்குவனாரும் கலந்துகொண்டார்.கலைஞர் தமது உரையில் இலக்குவனாரைக் குறிப்பிடும்போதெல்லாம் தமிழ்ச்சிங்கம் என்றுதான் குறிப்பிட்டார். சிறை விடுதலை பெற்ற மகிழ்ச்சியை விட- திரளான கூட்டம் தமக்கு வரவேற்பு வழங்கியதை விட- எதிர்பாரா வகையில் தம ஆசான் இலக்குவனார் கலந்துகொண்டு வாழ்த்தியது அவருக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது.
அதற்கு அடுத்த நாளே (2/5/65) தம் ஆசானும் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையாகிய பாதுகாப்புச்சட்டத்தில் சிறை என்பது அவருக்குப் பேரதிர்ச்சி. ஏனெனில் பதுகாப்புச் சட்டம் மிகக் கொடுமையானது. இச் சட்டப்படி கைது செய்யப்பட்டவர்கள் எந்த நீதிமன்றத்திலும் முன்னிறுத்தப்படவேண்டிய தேவையில்லை. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைத்துவைக்கலாம். முதல்நாள் தமக்கு வரவேற்பும் பாராட்டும் வழங்கிய ஆசான் அடுத்த நாளே கொடுஞ்சிறையில் அடைத்து வைக்கப்படுவதைக் கலைஞர் எதிர்பார்க்கவில்லை. கடுமையாக அரசுக்குத் தமது கண்டனத்தைத் தெரிவித்தார். ஏனைய தி.மு.க.தலைவர்கள் அமைதி காத்தனர். ஏனெனில் இலக்குவனார்க்கு நேர்ந்த கதி அவர்களுக்கும் வந்துவிடலாமே. மேலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும் தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிஞர் அண்ணா மார்ச்சுத் திங்களில் அறிக்கை விடுத்திருந்தார்.அப்படியே அந்தச் சொற்றொடரைக் கூறுவதாயின் “மாணவர்கள் நடத்தும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும் தி.மு.க.வுக்கும் ஒட்டும் இல்லை;உறவும் இல்லை” என்பதுதான் அண்ணா வழங்கிய செய்தி.
இந்த அறிக்கையை ஏன் வெளியிட்டார்? சனவரி 25-ஆம் நாள் தொடங்கி இரண்டு மாதங்களான பின்னும் இந்தி எதிர்ப்புப் போராட்டப் பெருநெருப்பு தணியவில்லை முதலமைச்சர் பக்தவத்சலம் அண்ணாவைத் தொடர்புகொண்டு இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொணருமாறும் சட்டம்-ஒழுங்கு சீர்பெறவும் மக்கள்நலத் திட்டங்கள் தொடர்பு செயற்படவும் அமைதியான சூழல் தேவையெனவும் கேட்டுக்கொண்டார். அதற்கு விடையளித்த அறிஞர் அண்ணா இந்தப் போராட்டம் தி.மு.க.நடத்தும் போராட்டம் அல்ல எனவும் 25-ஆம் நாள் கறுப்புக்கொடியேற்றவும் ஒரு சிலர் சட்டப்பிரிவின் நகலை எரிப்பதும் மட்டுமே அவர்களின் செயல்திட்டம் எனவும் அதன்பின் நடந்த போராட்டத்தைத் தி.மு..க.நடத்தவில்லை எனவும் விடையளித்திருந்தார். இது முற்றும் முழுமையும் மாணவர் போராட்டம் எனவும் இதனை முடிவுக்குக் கொணரும் ஆற்றல் பேராசிரியர் சி.இலக்குவனார்க்கே உரியது எனவும் அண்ணா அரசுக்குத் தெரிவித்திருந்தார். மார்ச்சுத் திங்கள் நிறைவு வாரத்தில் உயர்மட்ட அலுவலர்கள் பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தொடர்பு கொண்டு இந்தச் செய்தியைத் தெரிவித்தனர்.
மெல்லிதாகப் புன்னகைத்தவாறே செந்தமிழ் அரிமா கூறினார். “இந்தப் போராட்டம் நான் சொல்லி எழுந்ததல்ல. மாணவர்கள் தங்கள் வருங்காலம் குறித்த அச்சத்தாலும் மொழி உரிமை பறிபோவதைத் தடுக்கவும் நன்கு சிந்தித்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். உங்கள் வேண்டுகோளைக் கேட்டு நான் போராட்டத்தை நிறுத்துமாறு அறிவுரை கூறினால் நான் ஒரு நல்ல ஆசிரியன் அல்லன்; அப்படியே நான் சொல்லி மாணவர்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டால் அவர்கள் என் மாணவர்களும் அல்லர்.” காவல்துறை கையைப் பிசைந்தது.

இந்த முன்னிகழ்வுகளை மனத்துள் கொண்டு நோக்கினால் தி.மு.க. அமைதி காத்ததற்குக் காரணம் தெரியும். ஆனால் கலைஞர் பாளையங்கோட்டையிலிருந்து வந்த சூடு தணியாமல் இருந்ததும் முதல் நாள் மாலை தமக்கு இனிய வரவேற்பு வழங்கிய இலக்குவனார் அடுத்தநாள் மாலை கடுஞ்சிறையேகும் கொடுமையைப் பொறுத்துக்கொள்ளமுடியாததும் கலைஞர் கடும் கண்டனம் தெரிவிக்கக் காரணமாயமைந்தன.
வேலூர்ச் சிறையில் அவர் அடைந்த இன்னல்களும் மதுரையில் அவரது குடும்பம் பட்டறிந்த துன்பங்களும் அவர் சிறைக்குச் சென்று சில வாரங்களிலேயே தியாகராசர் கல்லூரி நிருவாகம் அவரது பணிநீக்க ஆணையைச் சிறைக்கு அனுப்பிய செய்தியும் விரித்துத் தனியே ஒரு காப்பியம் படைக்க வேண்டும்.ஆற்றல் எனக்கு உள்ளதா எனத் தெரியவில்லை.

வேலூர்ச் சிறையில் அரசியல் கைதிகள் தளைப்பட்டிருந்த நிகழ்வைக் கல்வெட்டுகளால் தி.மு.க. ஆட்சி பதித்துவைத்தது.ஒரு மூத்த தமிழறிஞர் பதவியைத் துச்சமெனக் கருதி வாழ்வெல்லாம் போராடி, மொழிஉரிமைப் போராளி என்பதற்காக இங்கே தளைப்பட்டிருந்தார் என்னும் செய்தியை -தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ– எந்த அரசுமே கல்வெட்டாகப் பதிக்கவில்லை. எனினும் மொழிஉரிமைக்காக ஒரு பேராசிரியர் காலமெல்லாம் போராடிக் கொடுமையான இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வரலாறு காலத்தால் அழியாது. அந்தத் தியாகத்தைக் கல்வெட்டால் பதிக்காமல் புறக்கணித்தாலும் அந்த வரலாற்றை மறைக்கவோ மறக்கவோ இயலாது. அதனை அறியும் வாய்ப்பைப் பெற்ற நாளைய தலைமுறையினர் நெஞ்சில் தமிழியக்க வீறுணர்ச்சி வழிவழி போற்றப்படும் என்பது திண்ணம்.
– மறைமலை இலக்குவனார்

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

“மதுக்கடைகளை நிலையாக மூடுக” மகளிர் ஆயம் வேண்டுகோள்!


மதுக்கடைகளை நிலையாக மூடுக”

மக்கள் முழக்கமாகட்டும் !

மகளிர் ஆயம் வேண்டுகோள்!

மகுடை(கொரோனா) ஊரடங்கால், தமிழ்நாட்டில் அரசுசாராயக் கடைகள் கடந்த மார்ச்சு மாதம் 27-இலிருந்து ஒரு மாதமாக மூடிக்கிடக்கின்றன. அன்றாடம் குடித்துப் பழகிப் போனவர்கள் 90 விழுக்காட்டினர் ஒரு மாதமாகக் குடிக்க வழியில்லாமல், குடிக்காமல் இருந்து பழகிவிட்டார்கள். குடிகாரர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே தவறான வழிகளில் சாராயத்திற்கு மாற்றாக வேறு தயாரிப்புகளைக் குடித்திருப்பார்கள்.
அரசுக் கடைகள் திறந்திருந்த போது, பள்ளி, கல்லூரி மாணவர்களும் குடித்துச் சீரழிந்தார்கள். அவர்களும் இப்போது 1 மாதமாகக் குடிக்கவில்லை.
எனவே இது தக்க தருணம், முழு மது விலக்கைச் செயல்படுத்தத் தமிழ்நாட்டில் சாராயக் கடைகளை நிலையாக மூடிவிடுமாறு தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் பிரிவான மகளிர் ஆயம் கேட்டுக் கொள்கிறது.
மற்ற மாநிலங்களில், மற்ற நாடுகளில் மதுக்கடைகள் திறந்திருக்கின்றனவே என்று ஆட்சியாளர்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். நம் தமிழ்நாட்டிற்கு சாராயக் கடைகள் திறந்திருப்பது பேரழிவாய் ஆகிவிட்டதை நடைமுறையில் பார்த்து விட்டோம்!
தமிழ்நாடு அரசு தனது வருமானத்திற்காக சாராய வணிகம் செய்வதைக் கைவிட்டு அதை ஈடுகட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதற்குமான பால் கொள்முதல் பால் விற்பனை போன்றவற்றைத் தமிழ்நாடு அரசே மேற்கொண்டால் அதன் வழியாக ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். இப்போது தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டின் மொத்த விற்பனையில் 20 விழுக்காடு மட்டுமே விற்கிறது. இதன் வழியாக ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டுகிறது.
அரசுக்  கடைகளைநிலையாக மூடும்படித் தமிழ்நாடு அரசுக்கு  வேண்டுகோள் வைக்கும் வகையில் நாளைக்கு (28.04.2020) ஒவ்வொருவரும் பின்வரும் குறிச் சொற்களை (hashtag) பதிவு செய்து சாராய ஒழிப்பு அறப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மகளிர் ஆயம் சார்பில் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
# அரசு DontOpenTASMACShops
#மதுஆலைகளைத்திறக்காதே
#DontOpenLiquorDistilleries
ம.இலட்சுமி
மதுக்கடைகளைத்திறக்காதே
#தலைவர், மகளிர் ஆயம்
கைப்பேசி:7373456737

திங்கள், 27 ஏப்ரல், 2020

ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! – இலக்குவனார் திருவள்ளுவன்


ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்!

கேட்டாரையும் கேளாரையும் பிணிக்கும் நாவரசர் ஒளவை நடரசான் அவர்களின் எண்பத்தைந்தாவது பிறந்தநாள் பெருமங்கலம் இன்று(24.04.2020). அவரிடம் அலைபேசியில் பேசும் பொழுது “புதுச்சொல் புனையும் திறனாளர் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தி மகிழ்வித்தார்.
நான், மதுரையில் உள்ள தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்ற பொழுது அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து உரையாற்றினார். அவருடைய தம்பி மெய்கண்டான்,(இப்பொழுது குழந்தைகள் நரம்பியல் மருத்துவ வல்லுநர் முனைவர் ஒளவை மெய்கண்டான்) என்னுடன் படித்தார். மிகவும் சிரிப்பாகவும் கல்வியை வலியுறுத்தியும் சிறப்பாக அவர் பேசினார்.
அப்பொழுது எல்லோரையும் சிரிக்க வைத்த ஒன்று,
தம்பி வாடா
கடைக்குப் போடா
வாங்கிட்டு வாடா
வின்செண்ட்டு சோடா
என்பது. (மதுரையில் மிகவும் புகழ் பெற்றது வின்செண்ட்டு நிறுவனம்.) இப்பொழுது இதைக் கேட்பவர்களுக்குச் சிரிப்பு ஒன்றும் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், அன்று அதை நாங்கள் பல நாள் சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம்.
தந்தையார் இருந்த பொழுது அவர் நடத்திய ‘குறள்நெறி’ இதழில் திரைப்படக் கருத்துரை எழுதினார். பூம்புகார் பற்றிய கண்ணோட்டத்தை அவர் எழுதியதன் மூலம் திரைப்படத் திறனாய்விற்கு நல்ல தமிழ் அழகு சேர்க்கிறது என்பதைப் புரிய வைத்தார். இவ்வாறு அவ்வப்பொழுது அவரைப்பற்றிய செய்திகளைத் தமையன்மார் மூலமும் செய்திகள் மூலமும் அறிய வந்தாலும் சென்னை வந்தபின்தான் நேரடிப்பழக்கம் தொடர்ந்தது.
நான் கலைச்சொற்கள் தொடர்பாக  மறைமலை அண்ணனிடம் அடிக்கடி ஏதேனும் கேட்டுக்கொண்டிருப்பேன். 1979 இல் நான் சென்னை வந்தபொழுது, அவர் உனக்குச் சரியான ஆள் ஒளவை நடராசன்அண்ணன்தான் அவரைச் சந்தி என்றார். அப்பொழுது அவர் மொழிபெயர்ப்பு இயக்குநராக இருந்தார். உயர் பொறுப்பில் இருக்கும் அவரை எப்படிச்சந்திப்பது என்று தயங்கினேன்.
அதிகாரப் பகட்டு எல்லாம் அவரிடம் இருக்காது. அவரைச் சந்தி” என்றார்.அதன் பின்னர் அவரைச் செயலகத்தில் சந்தித்தேன். எளிமையாகப் பழகும் அவரிடம் மறைமலை அண்ணன் ஆற்றுப்படுத்தியது சரிதான் என்று உணர்ந்தேன். அவரைச்சந்திக்கும் பொழுதெல்லாம் சில சொற்களைப்பற்றியேனும் உரையாடுவது வழக்கம். அவரும் என்னிடம் சில சொற்கள் குறித்து, இது சரியா என்றெல்லாம் கேட்பார். அல்லது “இதற்குச்சரியான சொல் கிடைக்கவில்லை. ஏதேனும் சுருக்கமான சொல் கூறுங்களேன் தம்பி” என்பார். (தம்பி அல்லது இராசா என்றுதான் விளிப்பார்.)
நானும் அவரும் கலைச்சொற்களைக் குறித்து வைத்துக் கொண்டு சந்திக்கும் பொழுது அவை குறித்துப்பேசி முடிவெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
அவர் என்னிடம் என்று இல்லை. யாராக இருந்தாலும் “இந்த இடத்தில் என்ன சொல் சொல்வீர்கள்” என்பார். அல்லது “இந்தச் சொல்லில் நீங்கள் புரிந்து கொள்வது என்ன” என்று கேட்டு சொற்களின் பயன்பாட்டு நிலையை முடிவெடுப்பார். நான் இதில் ஈடுபாடு காட்டுவதால் என்னிடம் மிகுதியாகப் பேசும் நிலை வந்தது.
எனினும் இதைக் குறிப்பிடுவதன் காரணம்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், குறள் எண்:423)
என்பதற்கேற்ப மெய்ப்பொருள் காண்பதுதான் நோக்கம் என்பதால் மிகக் கீழ்நிலையில் உள்ளவரிடமும் கருத்து கேட்பார்.
அப்பொழுதும் பின்னர் அவர் தமிழ்வளர்ச்சித்துறை செயலராக இருந்த பொழுதும் அவரரைச் சந்திக்கும் பொழுது பிறர் அவரைச் சந்திக்க வருவார்கள். அவரைச் சந்திப்பதன் மூலம் ஊக்கம் பெற்றுச் செல்வார்கள். அவரவர் தேவைக்கேற்ப நல்லாற்றுப்படுத்துவார். அப்படி அவரைச் சந்தித்தவர்கள், பேராசிரியர்களாக, உயர் அலுவலர்களாக, சட்ட மன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக, மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்கும் நிலைக்கு வந்தார்கள். கூர்த்த உளவியலறிவு இருந்தால்தான் யாவரையும் நெறிப்படுத்தி உயர் நிலை அடையச் செய்ய முடியும்.
அவர் தமிழ்வளர்ச்சித்துறைச் செயலராக இருந்த பொழுது தமிழ் வளர்ச்சித்துறைக்குத் தமிழ்க்குருதியை ஏற்றினார். கலைஞர் மு.கருணாநிதி முதன்முறை தமிழக முதல்வராக இருந்த பொழுது தமிழறிஞர்களின் பிள்ளகளைத் தமிழ் வளர்ச்சித் துறையில் பணியேற்கச் செய்து தமிழ் உணர்வுள்ள துறையாக மாற்ற வேண்டும் என விரும்பினார். ஆனால் மற்றொரு மூத்த அமைச்சர், இவர்களால் ஆய்விற்குச் செல்ல இயலாது. உள்ளாட்சித் துறை முதலான பிற துறைப்பணிகளில் உள்ளவர்களால்தான் இயலும எனக்கூறி அதனைத் தடுத்து விட்டார். தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றியவர்கள், தாங்கள் அத்துறையின் தமிழ்ஆட்சிப்பணிக்கான தனி அலுவலர்களாக / உதவி இயக்குநர்களாக வரவேண்டும் என்ற ஆசையை வைத்துக் கொண்டு தாங்கள் அதற்குரிய தகுதியைப் பெறும்வரை யாரும் அமர்த்தப்படாமல் பார்த்துக் கொண்டார்கள். அவ்வாறு வெவ்வேறு துறைகளில் இருந்து தமிழ்வளர்ச்சி இயக்ககப் பணிக்கு வந்தவர்கள், பதவி உயர்வைமட்டும் நாடினார்களே தவிர, தமிழ்வளர்ச்சியில் உரிய நாட்டம் இல்லை. எனவே, தமிழ் முனைவர் பட்டம் பெற்றவர்களை அமர்த்த வேண்டும்  என்பதே பலரின் எண்ணமாக இருந்தது. இதன் தொடர்ச்சியாகச் செயலர் ஒளவை நடராசன், தமிழக முதல்வர் கலந்து பேசிய எடுத்த முடிவே அத்தகையோரைத் தமிழ் வளர்ச்சித் துறையில் பணிகளில் அமர்த்த வேண்டும் என்பது.  உதவி இயக்குநராக நேரடியாக அமர்த்தப்பட முடியாது என்பதால் தமிழ் ஆய்வு அலுவலர்கள் என்ற பதவிப்பெயர்களில் உதவி இயக்குநர் பணிக்கு ஒரு நிலை கீழாக வைத்து அமர்த்தப்பட்டார்கள். சில ஆண்டுகளுக்குப்பின்னர் அனைவருக்கும் த.வ.உ.இ.பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
            த.வ. இயக்ககத்தினர் இதை வேண்டா வெறுப்பாகப் பொறுத்துக் கொண்டார்கள். ஆனால், பிற துறைகளில் இருந்து அலுவலர் நிலையில் வருகின்றனர். இங்குள்ளோர் வெறும் கண்காணிப்பாளர் நிலைதான். எனினும் இதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயன்றனர். பிற துறைகளில் இருந்து அறுவரும் த.வ.துறையில் அறுவரும் பணியமர்த்தத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். பிற துறைகளில் ஒருவர் அரசு நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளர் நிலையில் இருந்த பொழுது  விண்ணப்பித்திருந்தார். ஆனால், பணியமர்த்த ஆணைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் உதவியாளராகக் கீழிறக்கம் செய்யப்பட்டு அழுகையில் ஆழ்ந்து விட்டார். த.வ. இயக்ககத்தினர் அவர் பணியமர்த்தத்திற்குத் தகுதியற்றவர்; எனவே, அவர் பெயரை நீக்கிவிட்டு அமைச்சருக்குக் கோப்பை அனுப்ப வேண்டும் என்றனர். நான் அந்தப் பாதிப்புற்றவரிடம் “உங்கள் பழைய பணிகளை விட்டுவிட்டு நேரடியாக வருவதாக இருந்தால் அதற்கு விதி இருக்கிறது. வருகிறீர்களா?: என்றேன். :நான், த.வ.உதவி இயக்குநராகப் போகப்போவதாக எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். போகவில்லை என்றால் நான் அவமானமாக உணர்வேன். ஆனால், வழியில்லையே” என்றார்.  நான் ஒளவை அவர்களிடம், நேரடி நியமனத்திற்கு விதிகளில் இடம் இருக்கிறது. இவரைப் பணிமாறுதலில் இல்லாமல் நேரடி நியமனத்திற்குப் பரிந்துரைக்கலாம் என்ற என் கருத்தைச் சொன்னேன். அவரும் உடன்பட்டார். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து அவர் உதவி இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். த.வ.இயக்ககத்தில் தமிழ் படித்த ஒருவர் வருவதற்கும் உள்ளடி வேலை செய்து விதிகளில் இடமில்லை எனப் போர்க்கொடி தூக்கினர். முன் நிகழ்வு இருப்பதால் அவரைத் தேர்ந்தெடுக்கத் தடையில்லை என்பதை ஒளவை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதுதான் சரி என ஒளவை அவர்கள் அவர் பணியமர்த்தத்திற்கும் வழி வகுத்தார்.
துறைக்கு வரும் முன்பே இவன் ஏதோ செய்கிறானே. இவனை வரவிடக்கூடாது என எண்ணிய சிலர் செயலரிடம், “திருவள்ளுவன் தமிழ்வளர்ச்சி உதவிஇயக்குநர் ஊதியததை விடக் கூடுதல் ஊதியம் பெறுகிறார். எனவே வர விரும்பமாட்டார். அவருக்கு மாற்றாக வேறொருவரை அமர்த்தலாம்” என்றார்.
ஆணைக்கான ஒப்பம் பெற முதல்வரிடம் கோப்பு சென்ற நிலையில்தான் இது நடந்தது.  உடன் ஒளவை அவர்கள், “நான் அவருக்காகத்தான் இதில் சேர எண்ணுவதாகவும் ஊதிய ஆதாயம இல்லை என்பதால் விருப்பமின்றி இருப்பதாகவும் கூறுகிறார்களே. நான் ஆணையை வெளியிடட்டுமா? அல்லது வேறு யாரையும் அமர்த்தலாமா” என்றார். முன்னர் ஒரு முறை நான் அவரிடம் மொரிசீயசில் தமிழாசிரியர் வேலைக்கு ஆள்எடுக்கிறார்களாம். விண்ணப்பிக்கலாமா என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், “நீண்டகாலமாக அரசிடம் கேட்டுக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், இந்திய அரசு தடையாக உள்ளது. எப்பொழுதும் அப்பணி அமர்த்தத்திற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், விண்ணப்பம் அளித்தால், திருவள்ளுவன் மொரிசியசு செல்ல உள்ளார். அதனால் அவர் பெயரை எடுத்துவிடலாம் எனச்சொல்லி எடுத்து விடுவார்கள். எனவே,அதை மறந்துவிடுங்கள்” என்றிருந்தார். எனவே, இப்போதைய் குழப்பத்தில் உண்மை இருக்கலாமோ என்ற ஐயத்தில்தான் கேட்டார். நான், ஊதிய நிலை குறித்தது உண்மைதான் என்றும் ஆனால், தமிழ்வளர்ச்சித் துறைக்கு வருவதில் ஆர்வமாக உள்ளேன் என்றும் கூறினேன். உடன் “ஆணை ஆங்கிலத்தில் உள்ளது.  மற்றொருவரைக் குறிப்பிட்டு அவருடன் இணைந்து தமிழ் ஆணை எழுதுங்கள்” என்றார். இவையெல்லாம் செயலகப்பணிதானே. ஏன், பிறரிடம் கூறுகிறார் என எண்ணலாம். துறையில் பலர் கழித்துக் கட்டியவர்களாக இருப்பார்கள். மேலும், அவர்களிடம் இருந்து த.வ.இயக்ககத்தினர் செய்தியை அறிந்து கொள்வார்கள். எனவேதான் எங்களிடம் கூறினார். நாங்களும் தமிழ் ஆணையை எழுதித் தந்தோம்.
நாங்கள் பணியில் சேர்ந்தாலும் ஆணையம் ஒன்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் சேரவில்லை. அவர்களைக் காரணம் கேட்ட பொழுது “பணிக்கான விண்ணப்பத்தைத் துறைவழியாக அனுப்பவில்லை எனக்கூறி அவர்களைப் பணிகளில் இருந்து விடுவிக்கவில்லை. எனவே, சேர இயலவில்லை” என்றனர். இருவர் வராததால் அந்த இடத்தில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள இருவரை அமர்த்த த.வ.இ.னர் முயன்றனர். இதை அறிந்த நான், ஒளவையிடம் கூறினேன். “துறை அமைச்சரான பேராசிரியர்(அன்பழகன்) இதில் உடனடி நடவடிக்கை எடுப்பார். அவரைச் சந்திக்க அவர்களிருவரும் போகவேண்டா. இச்சூழலில் அவர்கள் அஞ்சுவார்கள். நீங்களே சந்தித்துக் கூறுங்கள்” என்றார்.
 நானும் பேராசிரியரைச் சந்தித்து இன்னும் இருவர் மட்டும் த.வ.உதவி இயக்குநர் பணியில் சேரவில்லை என்றேன். ஏனென்றார். விவரத்தைக் கூறினேன். அவர் எப்பொழுதும் யார் உதவிகேட்டாலும் அது முறையானதுதானா என்று அறிந்துதான் உதவுவார். “ஆணையம் செய்தது சரிதானே” என்றார். நான், “அவர்கள் விண்ணப்பங்கள்  அனுப்பி அதன் முன்படிகளை அரசிற்கு அனுப்பியுள்ளார்கள். ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றுபவர்கள் இங்கிருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அரசு அவர்களை பணியமர்த்தியுள்ளது. ஆனால், அவர்களை வெளியே விடக் கூடாது என்பதற்காக அந்த ஆணையத்தில் இருந்து விண்ணப்பத்தை அரசிற்கு அனுப்பவில்லை” என்றேன். உடனே உதவியாளர் மூலம் அந்த ஆணையத்திற்குத் தொலைபேசி இணைப்பு கொடுத்து, ஏன் அவர்களை விடுவிக்கவில்லை எனக் கேட்டார். “துறை மூலமாக அவர்கள் விண்ணப்பிக்கவில்லை. எனவே, விடுவிக்கவில்லை” என்றார்கள். ”துறை என்பது அரசைவிடப் பெரியதா? முதலமைச்சர் தெரிவுசெய்து பணி ஆணை வழங்கிய பின்னர் நீங்கள் எப்படிக் கூறமுடியும்? உடனேஅவ்விருவரையும் விடுவியுங்கள். இல்லையேல் அரசே விடுவிப்பாணை வழங்கும்” என்றார். உடனே ஆணையத்திலிருந்து இருவரையும் விடுவித்தனர்.
உடன் ஒளவையிடம் இதனைத் தெரிவிததேன். “நீங்கள் சரியாகவும் துணிவாகவும் விளக்குவீர்கள் என்பதால்தான் உங்களைப் போகச்சொன்னேன். மகிழ்ச்சி” என்றார்.
இ.ஆ.ப.இல்லாத முதல் செயலர், இதுவரை ஒரே செயலர் என்ற பெருமை இவருக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர். எனினும் அதனால் இடர்ப்பாடுகளையும் சந்தித்துள்ளார். இ.ஆ.ப., இ.கா.ப. அலுவலர்களிடம் நேரடியாகத் தெரிவுசெய்யப்பெற்று வந்தவர்கள், பதவி உயர்வில் வந்தவர்கள், மாநில வகையினர், இன வகையினர் என்றெல்லாம் பாகுபாடு உண்டு. உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களிடம்தான் தாழ்ந்த எண்ணம் இருக்கிறது. அதற்கு மற்றோர் காரணம் தங்கள் உரிமை போய்விடுமோ என்ற அச்சம்தான்.
ஆனால், இ.ஆ.ப.இல்லாத செயலர் என்ற வகையில் இவர் ஒருவர் மட்டுமே. இவரை அறிஞராக மதித்தவர்கள் இவருக்கு உரிய மதிப்பு தரத் தவறவில்லை. இ.ஆ.ப.வாலில்லாததை இளக்காரமாக எண்ணிய அதிகாரிகள் சிலரும் உண்டு. அவர்களுள் ஒருவர் தலைமைச்செயலராக வந்தார். அவர் இவர் சந்திக்கச் சென்றால் காத்திருக்கச் செய்து இவரது கட்டுப்பாட்டிலுள்ள இ.ஆ.ப. அலுவலர்களை எல்லாம் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிவிட்டு இறுதியில் இவரை ஒப்புக்கு அழைப்பார். தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகப் பேச வருபவருக்குத்தான் இந்த நிலை. இது குறித்து வருத்தப்பட்டாலும் “இதனால் துறை சரியாக இயங்காது என்பது இவருக்குத் தெரியவில்லையே” என்பார்.
ஒருமுறை ஏணறை(மின்னேணி)யில் அந்தத் த.செ. செல்லும்பொழுது இவரைப்பார்த்த ஏணறை இயக்கியர் இவருக்காக அதனை நிறுத்திவிட்டார். தன்னுடன் இவரா என முகம்சுளித்த அந்தத் த.செ. வேண்டா வெறுப்பாக உள்ளே வாருங்கள் எனச்செய்கையில் தெரிவித்தார்.  உடனே உள்ளே நுழைந்த ஒளவை அவரிடம், “ஐயா, நீங்கள்தான் மிகப்பெரிய அலுவலர். இது யாவரும் அறிந்ததே. இயக்கியர், என்னைத் தொலைக்காட்சியில் அவ்வப்பொழுது பார்த்துவிட்டு ஏதோ பெரியவன் என எண்ணி நிறுத்தி விட்டார். ஆனால், நான் சிறியவன். நீங்கள்தான் பெரியவர் என அவரும் அறிவர்” என்றார்.
ஒருமுறை இவர் முதல்வரைச் சந்திக்கச் சென்றிருந்தார். இவருக்கு முன்னதாக அந்தத் த.செ.உம் மேலும 20பேரும் இருந்தனர். அந்தக் காத்திருப்புக் கூடத்திற்கு வந்த முதல்வர் செயலலிதா நேரடியாக இவரைப் பார்த்து “என்ன திரு.ஒளவை எப்படி இருக்கின்றீர்கள்” என்று கேட்டுக்கொண்டேவந்தார். அப்பொழுதாவது அந்த த.செ.வுக்கு “முதல்வரே மதித்கிறாரே நாம் புறக்கணிக்கிறோமே” என்ற உணர்வு வந்ததா எனத் தெரியவில்லை.
எல்லாரிடமும் கலகலப்பாகப் பேசுவதால் அனைவரிடமும் சரணடையும் போக்கு உடையவர்போல் தோன்றும். ஆனால், தன்மானத்திலும் தன்மதிப்பிலும் கருத்தாக இருப்பார். அதற்கோர் எடுத்துக்காட்டு. ஒரு முறை சென்னையில் நடைபெறும் இவர் மகன் திருமணத்திற்காக உறவினர்கள் தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாளில் முன்னரே அறைகள் பதிவாகி இருந்தமையால் எங்கும் கிடைக்கவில்லை. நான் அவரிடம் அவரின் செல்வந்த நண்பர் வைத்திருக்கும் விருந்தினர் மாளிகை சும்மாதா்ன இருக்கிறது. கேட்டுப் பார்க்கலாமே என்றேன். உடனே அவர், “நாம் கேட்கலாமா? நாம் கேட்கலாமா? தமிழ்மண்டியிடுவதா? அவராக விவரம் அறிந்து மகனுக்குத் திருமணமாமே என் விருந்தினர் மாளிகையப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றாலும், ஐயா, நன்றி. நான் முன்னரே ஏற்பாடு செய்துவிட்டேன் என்றல்லவா சொல்ல  வேண்டும். நாம் போய் உதவி என்று நிற்கலாமா” என்றார்.
இவைபோல் ஒளவை பற்றிக் கூறுவதற்கு நிறைய செய்திகள் உள்ளன. நான் கேட்ட அவரது இலக்கிய உரைகளை எழுதினால் அவை என்உரைபோல் அமையும் என்பதால்தான் அவற்றை எழுதவில்லை. எனினும் பிறவற்றை நேரம் வாய்க்கும் பொழுது எழுதுவேன்.
இத்தகு தன்மான உணர்வும் தன்மதிப்பு உணர்வும் மிக்க, நான் போற்றும்,என் மீது அன்பு கொண்டுள்ள, எனக்கு வழிகாட்டும் தகைமையாளர் வாழ்த்தின் தொடர்பான என் எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்!
இலக்குவனார் திருவள்ளுவன்