(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4) – தொடர்ச்சி)
“பொதுக் குடியியல் சட்டத்தைப் பெண்கள் வேண்டுவது ஏன்? ” -நந்திதா அக்குசர்
மதச் சுதந்திரம் பொதுக் குடியியல் சட்டத்தை மறுக்க முடியும் என்றால், எல்லா மதத்தினரும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரமாக மீற முடியும் என்று அருத்தமா?
பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் நாட்டைப் பற்றிக் கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெண் வெறுப்பாளர்களால் தூண்டப்படுகின்றன.
சிறுபான்மை உரிமைகள் என்பதைப் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக நிறுத்துகின்றனர்; மனித உரிமைகள் பெண்களின் அடக்குமுறையை நியாயப்படுத்தவும், பழங்குடி மக்களின் உரிமைகள் பழங்குடிச் சமூகங்களுக்குள், தாய்வழிச் சமூகங்களுக்குள் நிலவும் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆணாதிக்கச் சமூகங்களில் வாழும் பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் ஒடுக்குமுறைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பெண்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் இரண்டுமே அவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன. உலகில் ஆணாதிக்கம் இல்லாத சமூகங்கள் எதுவும் இல்லை – வேண்டுமானால் அதன் அளவு மட்டும் மாறுபடலாம்.
1986ஆம் ஆண்டில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுக் குடியியல் சட்டத்தை வேண்டி, பெண்களுக்கான சட்டத்தின் மறைநீக்கம் (Demystification of Law for Women) என்ற புத்தகத்தை நான் எழுதினேன். அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்தில் நான் இன்றும் உறுதியாக உள்ளேன்.
உச்ச நீதிமன்றம் சா பானு வழக்கில் அவருக்குச் சீவனாம்சம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில் அந்தப் புத்தகம் வெளிவந்தது. “முசுலிம்கள்” என்னைத் தாக்குவார்கள் என்று பலர் என்னை எச்சரித்தனர். ஆனால் அந்தப் புத்தகத்திற்கு ஒரு சிறு எதிர்ப்பு கூட வரவில்லை . இத்தனைக்கும் பங்களாதேசில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் அந்த நூலை வங்காள மொழியில் வெளியிட்டது.
அந்தப் புத்தகத்தில், மதமும் – எல்லா மதங்களும் – குடும்பமும் இரட்டை மதிப்பீடுகள் கொண்டுள்ளன, ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு மற்றொன்றுமாக இரட்டை மதிப்பீடுகள் கொண்டுள்ளன, இந்த அடக்குமுறையை நியாயப்படுத்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்றேன்.
மேலும் ஆணாதிக்கச் சமூகத்தில் சட்டம், பன்னாட்டு மனித உரிமை மதிப்பீடுகள் தொடங்கி இந்திய அரசியலமைப்பு மற்றும் எல்லா உள்நாட்டுச் சட்டங்களும் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையே. இது பழங்குடி மரபுச் சட்டங்களுக்கும் பொருந்தும். வேண்டுமானால் அதன் அளவு கூடக் குறைவாக இருக்கலாம். ஆனால் அடிப்படைப் பண்பு ஒன்றுதான்.
.
மல்யுத்த விளையாட்டுக் குழுவில் பதவியில் இருந்து கொண்டு பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்த நாடாளுமன்ற உறுப்பினரை, வழக்கு தொடுத்த பின்னரும், அந்த நபரை அதே விளையாட்டுக் குழுப் பதவியிலும் மற்றும் கட்சி உறுப்பினராகவும் நீடிக்க அனுமதிப்பதை கெட்டிதட்டிப்போன ஆணாதிக்கச் சமூகம் மட்டுமே நியாயப்படுத்த முடியும்.
2017இல் நாகாலாந்தில் 12 நகரங்களில் நடந்த நகராட்சித் தேர்தல்களின் போது பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராகக் கலவரம் வெடித்தது. திமாபூர் நகரில் மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை நாகா குழுக்கள் எதிர்த்தன. இது நாகா மரபுச் சட்டங்களுக்கு எதிரானது என்ற அநீதியான கூற்றின் அடிப்படையில் அவர்களின் எதிர்ப்பு இருந்தது
மதங்களை நிறுவிய சான்றோர்கள் அவர்கள் காலத்தில் பெண்களின் உரிமைகளைப் பற்றிப் பேசினர். ஆனால் ஒவ்வொருவரும் அவர் வாழ்ந்த காலத்தின் கைதியாக இருநதனர். மேலும் அவர்கள் அனைவரும் ஆண்கள்.
புத்தர் பெண்களைத் துறவிகளாக இருக்க அனுமதித்தார் ஆனால் ஆண் துறவிகளுக்கு வழங்கிய மரியாதை பெண் துறவியர்களுக்கு இல்லை. உங்களில் யோக்கியமானவன் இந்த விபசாரியின் மீது கல்லெறிய முன்வாருங்கள் என இயேசு பேசிய போது, அது அவருடைய ஆழமான நீதி உணர்வைப் பிரதிபலித்தது, ஆனால் அவருடைய 12 சீடர்களில் யாரும் பெண் இல்லை.
முசம்மது நபி திருமணத்தை ஓர் ஒப்பந்தம் என்று அங்கீகரித்தார், எனவே விவாகரத்தை அனுமதித்தார்; திருமணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினார், ஆனால் சமகால மதிப்பீட்டின் படி, அவர் மனைவியின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மேலும் குருநானக் பெண்களை சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார், மேலும் சீக்கிய நம்பிக்கையில் சபைகளை வழிநடத்தவும் ஆன்மீகத் தலைவர்களாகப் பணியாற்றவும் பெண்களை அனுமதித்தார். இருப்பினும், சீக்கியத் தலைவர்கள் கெட்டிதட்டிப்போன ஆணாதிக்கவாதிகள்.
ஒவ்வொரு மதச் சமூகமும் அதனுள் சொந்தச் சீர்திருத்தத்தைத் தொடங்குவதற்கும், பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பற்றிய சமகாலப் புரிதலின் வெளிச்சத்தில் அதன் புனித நூல்களை விளக்குவதற்கும் விரும்புகிறார்கள். அதன் சில பெண்கள் அமைப்புகள் இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கின்றன. அவர்களின் முயற்சிகள் துணிச்சலானவை. ஆனால் அதனால் எந்தப் பலனுமில்லை.
இன்று, நம் நாட்டில் உள்ள மதத் தலைவர்களுக்கு அத்தகைய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான தார்மீக அடிப்படையோ அரசியல் விருப்பமோ இல்லை. அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், கத்தோலிக்க அல்லது புரட்டஸ்டன்ட் தேவாலயங்கள் மற்றும் இந்து மடங்கள், பார்ப்பனிய நிறுவனங்கள், இந்து மதத் தலைவர்கள் உட்பட, ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவனமயப்பட்ட மதத்தின் எந்தவொரு மதத் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலிலும் பெண்கள் உரிமை என்பது இல்லை. எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நல்ல நோக்கில் ஒரு அரசு பொதுச் சிவில் சட்டம் கொண்டு வந்தால் அதனை வரவேற்க வேண்டும்.
பெண்களின் உரிமைகள் – எதிர் – பழங்குடியினர் உரிமைகள்
பெண்களின் உரிமைகளுக்கும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை நான் முதன்முதலில் மது கிசுவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது உணர்ந்தேன்.
திசம்பர் 1980இல், மது கிசுவர், இன்றைய சார்கண்டில், அப்போது பிரிக்கப்படாத பீகாரின் சிங்குபூம் மாவட்டத்தில் உள்ள பழங்குடிப் பகுதிக்கு மக்கள் குடிமை(சிவில்) உரிமைக் கழகம் (PUCL) உண்மையறியும் குழுவில் சென்றிருந்தார். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க அக்குழு சென்றிருந்தது, அப்போது ஃகோ பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடிப் பெண்களைக் கிசுவர் சந்தித்தார், அவர்கள் பழங்குடியினர் சட்டத்தின் கீழ்ப் பெண்களுக்கு நில உரிமை இல்லை என்று தெரிவித்தனர். அதனால், கணவர் இறந்த பிறகு, அவர்கள் மிகவும் சிரமப்படுவதாகக் கூறினர்.
இதனால் பழங்குடிப் பெண்களுக்கு நில உரிமை மறுக்கும் சோட்டா நாக்குபூர் குத்தகைச் சட்டம், 1876 என்ற சட்டத்தை எதிர்த்துக் கிசுவார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்தச் சட்டம் பழங்குடியினரின் நிலங்களைப் பழங்குடியினர் அல்லாதவர்கள் வாங்குவதிலிருந்து பாதுகாத்தது. [கிசுவர் இப்போது இந்துக்களையும் மற்றும் இந்து அடையாளத்தையும் பொதுக் குடியியல் சட்டம் பாதிக்கும் என்ற அடிப்படையில் அது கொண்டுவரப்படுவதை எதிர்க்கிறார்.]
உச்ச நீதிமன்றம் சோட்டா நாக்குபூர் குத்தகைச் சட்டத்தை நீக்கிப் பழங்குடியினரின் சொத்துக்கான ஃகோ பெண்களின் உரிமையை உறுதி செய்தால், மற்றொரு புறம் பழங்குடி நிலத்தைப் பிறர் வாங்கும் நிலை உருவாகி, அனைத்துப் பழங்குடியினரும் தங்கள் நிலத்தை சட்டபூர்வமாகப் பாதுகாக்கும் உரிமையை இழக்க நேரிடும் என இராஞ்சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து 2011இல் மறைந்த முக்கிய அறிவாளர் இராம்தயாள் முண்டாவின் மனைவி ஃகேசல் (உ)லூட்சு எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் பிப்பிரவரி 1983இல் இராஞ்சியில் நடைபெற்ற ஆறாவது இந்திய நாட்டுப்புறக் காங்கிரசில் “பழங்குடியினப் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கான இயக்கம் தொடர்பான கேள்விகள், நில உரிமைகள்” (“Questions Relating to the Movement to Grant Tribal Women’s ‘Equal Rights’ in Land”) கட்டுரை அளித்தார்.
அந்தக் கட்டுரை என்னை ஆழமாகப் பாதித்தது . தனிப்பட்ட பெண்களின் உரிமைகளுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்தின் உரிமைகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் போது எழும் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. “மனித உரிமைகள் வழக்காடல்: ஒரு பெண்ணியக் கண்ணோட்டம்” (“Human Rights Lawyering: A Feminist Perspective”) என்ற கட்டுரையில் இந்த சிக்கலைப் பற்றி 1999ஆம்ஆண்டு எழுதினேன்.
இந்திய அரசியலமைப்பு பழங்குடியினக் குழுக்களின் சமூக உரிமைகளை அங்கீகரிக்கிறது, அவர்களின் நிலம் மற்றும் இயற்கை வளங்களை மேம்பட்ட சமூகங்களிடமிருந்து பாதுகாக்க சட்டம் உள்ளது. மேலும் வளர்ச்சியின் பலன்கள் பழங்குடியின மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யச் சிறப்பு நலத்திட்டங்கள் உள்ளன.
ஆனால் பழங்குடிச் சமூகங்களை வெளிப்புறச் சுரண்டலிலிருந்து பாதுகாக்கும் நிலையில், பழங்குடியினப் பெண்களை அவர்கள் வாழும் சமூகங்களுக்குள்ளான அடக்குமுறையிலிருந்து பாதுகாக்க அரசியலமைப்பு எதுவும் செய்யவில்லை.
சிறுபான்மையினர் உரிமைகள் – எதிர் – பெண்களின் உரிமைகள்
சிறுபான்மையினருக்கும் (முசுலிம்) பெண்களின் உரிமைகளுக்கும் இடையிலான மோதல் சா பானு வழக்கிற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது. வரலாறு இருக்கட்டும், பிரச்சினைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ஆவது பிரிவில் மையங்கொண்டிருந்தன. இது முசுலிம் தனிப்பட்ட சட்டம் பற்றியதாக இல்லை. சட்டத்தின் இதே போன்ற கேள்விகளை உள்ளடக்கிய பல முந்தைய தீர்ப்புகள் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன. அந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குர்ஆனை விளக்க முயற்சிப்பதாகத் தேனியல் இலத்திஃபி என்பவர் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கினார்.
இந்திய முசுலீம்கள் உண்மையான மற்றும் நியாயமான சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. முன்னாள் போர்த்துகீசிய குடியேற்றமான கோவாவில் ஒரே மாதிரியான பொதுக் குடியியல் சட்டத்தை கொண்டுவந்த போது அவர்கள் எதிர்க்கவில்லை. மேலும் உலகெங்கிலும் உள்ள முசுலீம் பெரும்பான்மை உள்ள நாடுகள் திருமணம், விவாகரத்து போன்றவற்றில் பெரிய சீர்திருத்தங்களை
மேற்கொண்டுள்ளன.
தற்போது முன்மொழியப்பட உள்ள பொதுக் குடியியல் சட்டத்திற்கு இந்தியச் சட்ட ஆணையத்திற்கு சுமார் 40 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆட்சேபனைகள் வந்துள்ளன. அதற்கு இந்த ஆட்சியாளர்கள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முசுலிம்கள், கிருத்துவர்களுக்கு செய்த அவமரியாதை மற்றும் அநீதியால் எழுந்துள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவ மதத்திற்கு மாறிய பழங்குடியினரின் சிறப்பு அந்தசுத்தைப் பறிப்பதற்கான ஒரு படியாகவும் இது இருக்கலாம்.
மனித உரிமைகள – எதிர் – பெண்கள் உரிமைகள்
மனித உரிமைகள் பெண்களின் உரிமைகளுடன் முரண்பட்டால் என்ன ஆகும்?
குரானை எட்டி உதைக்கவும், அதன் பக்கங்களைக் கிழிக்கவும் ஓர் ஈராக்கியரை சுவீடன் காவல்துறையினர் அனுமதித்த சம்பவத்தைக் குறிப்பிடுவதன் மூலம் மனித உரிமைகள் எந்த அளவுக்கு ஓர் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது என்பதைக் காணலாம். இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்குள் விவாதிக்கப்படுகிறது, மேலும் நேட்டோ அமைப்பு அத்தகைய நடத்தை விரும்பத்தக்கது அல்ல, ஆனால் இது கருத்து சுதந்திரம் என்று கூறுகிறது.
முசுலீமாக இருந்தாலும் இல்லா விட்டாலும், ஒரு மத உணர்வும் இல்லாத ஒவ்வொரு நபரும் கூட, இந்த வெறுப்பு மற்றும் கோபத்தை நிலைநிறுத்துவதற்குக் கெட்ட நோக்கத்திற்காக நிகழ்த்தப்படும் இந்த திட்டமிட்ட அழிவுச் செயலால் கடுமையாகப் புண்படுத்தப்படுவார்கள்.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி மேற்கத்திய நாடுகள் ஆப்கானித்தானை ஆக்கிரமித்து, அதனை எப்படி நியாயப்படுத்தியது என்பதை நினைவு கொள்வோம். மலாலா யூசுப்சாய் என்ற பெண்ணை அதன் அடையாளமாக மாற்றினார்கள். இப்படித்தான் பெண்களின் உரிமைகளையும் ஆயுதமாக்கினார்கள்.
பழங்காலத்தில் பெண்கள் நிலை சிறப்பாக இருந்தது என்று கூறி அவமானப்படுத்துகின்றனர். தினசரி வாழ்க்கையில் பெண்கள் படும் எல்லாத் துன்பங்களுக்கும் உடந்தையாக இருப்பது இந்தியாவில் உள்ள – மதம், சட்டம், குடும்பம், ஊடகங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், பாலிவுடு என நிறுவனங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தேர்தல் அரசியலின் நிர்ப்பந்தங்களை ஒதுக்கி வைத்தால், ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தும் ஒரேமாதிரியான பொதுக் குடியியல் சட்டத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இது பாபாசாகேபு அம்பேத்துகர் ஆதரித்த ஒரு சட்டமாகும். ஆனால் நாடு முழுவதும் உள்ள மதங்களில் உள்ள அனைத்து பிற்போக்கு மற்றும் ஆணாதிக்க சக்திகளின் ஆதரவுடன் நமது அரசியலமைப்பின் நேரான பார்வையை இந்து தேசியவாதிகள் கடத்திச் செல்வதை அனுமதிக்கக முடியாது.
பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில், பாசிசமும் மத அடிப்படைவாதமும் ஆணாதிக்கத்தில் வேரூன்றியுள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று நம்புகிறேன். ஆணாதிக்கம் நம் அனைவரையும் மனித நேயமற்றவர்களாக மாற்றுகிறது. பெண்களின் மீதான அடக்குமுறை, சுரண்டல் மற்றும் சீரழிவுகளை உணர நீங்கள் பெண்ணியவாதியாக இருக்க வேண்டியதில்லை. ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் ,மனித விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதி என்பதால் நீங்கள் மனிதனாக இருந்தால் போதும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 288