கணித்தமிழ் ஆர்வலரின் செவ்வி!
தமிழார்வம் மிக்க கணிப்பொறியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாக.இளங்கோவன்.
கால்நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கணிணி வல்லுநராகப் பணியாற்றுபவர்.
1995 முதல் தமிழ் இணையத்தில் கருத்து செலுத்தி வருபவர்.
2009-ல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற
பெயரில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகள் நடைபெற்ற பொழுது பொங்கி
எழுந்தவர்களுள் இவரும் ஒருவர். நடக்க இருந்த தமிழ்ச் சிதைப்பைக் கட்டுரை
மூலமாக மட்டுமல்லாமல் தமிழ் எழுத்துக் காப்பியக்கத்தின்
ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டு அதன் எதிர்ப்புப் பணிகளில்
தன்னை இணைத்துக் கொண்டவர்.
ஒருங்குகுறியில் 2010 இல் நிகழ இருந்த
கிரந்தக் கலப்பை, பலரும் அறியும் வண்ணம், எளிதாகப் புரிந்து கொள்ளும்
வகையில் தமிழ் உலகிற்கு இணையம் வழியாகவும், இதழ்கள் வழியாகவும் எழுதி
விழிப்பூட்டியவர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், உத்தமம்,
அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 11 ஆவது உலகத்தமிழ் இணைய
மாநாட்டில், தமிழ்க்கணிமைத் துறையில், “தமிழ் அறிதியியல்” (Tamil
informatics) என்ற கருத்தியலை அறிமுகப்படுத்தி இவர் அளித்த (“An
Introduction to Thamizh Informatics and Thamizh Intelligence)
கட்டுரைக்கு “பேரா.மு.அனந்தகிருட்டிணன் விருது” அளித்துள்ளமை இவரது
கருத்து வளமைக்குச் சான்றாகும்.
‘சிலம்பு மடல்கள்’ என்றொரு நூலை எழுதிவெளியிட்டுப் படைப்புலகிலும் தடம் பதித்துள்ளார்.
இலக்கிய ஆர்வமும் கலைச்சொல் ஆர்வம் மிகுந்தவர். இணையத்தில் தனித்தமிழ் பயன்படுத்தும் சிலருள் இவரும் ஒருவர்.
இவரது பட்டறிவை இணையக்கல்விக்கழகம்
பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இவரிடம்
ஒருங்குகுறி குறியேற்றத்தின் மூலம் தேவையற்ற முறையிலும் தமிழ் வளர்ச்சிக்கு
ஊறு நேர்விக்கும் வகையிலும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து
அகரமுதல மின்னிதழுக்கு “ஒருங்குகுறி பேணல் – தொடரும் தவறுகளும், குலைப்புகளும்” என்னும் பொருண்மையில் இவர் அளித்த செவ்வி.
- தற்போது ஒருங்குகுறியில், புதியதாகச் சேர்க்கப்படும் குறியீடுகள் பற்றிப் பல குறைபாடுகள் சொல்லப்படுகின்றன. அவை பற்றி அறிமுகமாகச் சொல்லுங்கள்.
நடப்புத் தமிழ் நெடுங்கணக்கை ஒருங்குகுறியில் தமிழ்நாடு சேர்க்கவில்லை. அதை ஒருங்குறிச் சேர்த்தியமே ‘சி-டாக்’
நிறுவனத்திடம் இருந்து பெற்று, பத்தாண்டுகளுக்கும் முன்பாக, பல குறைகளோடு,
தமிழ் இலக்கணத்திற்குப் புறம்பான அடிப்படைகளோடு ஒருங்குகுறியில் சேர்த்தது
என்பதை நீங்கள் அறிவீர்கள். (அதில் தமிழகத்தில் புழங்கும் 5 கிரந்த
எழுத்துகளும் இருந்தன.) அது தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களுக்கும்
பல்கலைக்கழகம் போன்ற தமிழ் நிறுவனங்களுக்கும் தெரியாமலேயே நடந்தது. அது
முதற்கட்டம்.
தமிழ் நெடுங்கணக்கில் அதிகப்படியான
சமற்கிருத எழுத்துகளை ஒவ்வொன்றாகக் கலக்கத் தொடங்கினர். அதுவும்
தமிழறிஞர்களுக்குத் தெரியாமல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக 26 சமற்கிருத
எழுத்துகளைச் சேர்க்க முனைந்தபோது அது தமிழ் உலகிற்குத் தெரியவந்து பெரிய
கொந்தளிப்பு ஏற்பட்டதும் தமிழ்க்காப்புக் கழகம் முன்னெடுப்பால் தமிழக அரசு
தலையிட்டு 2010 இல் நெருக்கடியான சூழலில் அதனைத் தடுத்ததும் இரண்டாவது
கட்டம்.
இதுவரை செய்யப்பட்டனவெல்லாம் நெடுங்கணக்கு சார்ந்த, சாராத எழுத்துகளைப் பற்றியன.
- குறியீடுகள் தொடர்பான தற்போதைய நிலை என்ன?
தற்போது, பழந்தமிழ்ப் பின்னங்கள், நாணய
மதிப்புகள், நிறுத்தல், நீட்டல் அளவைகள், பரப்பு அளவைகள், வேளாண் நிலம்,
தானிய அளவைகள், கணக்கு வழக்குகள், நில ஆவணங்கள் முதலான பலவற்றிற்கும்
பயன்படுத்தப்பட்ட பழங்காலக் குறியீடுகளை ஒருங்குறியில் சேர்க்கும் முயற்சி
செய்யப்படுகிறது. ஏறத்தாழ 55 குறியீடுகளைச் சேர்க்கவேண்டுமென ஒருங்குகுறிச்
சேர்த்தியத்திற்குப் பரிந்துரை சென்றுள்ளது. எடுத்துக்காட்டாகப், ‘பைசா’
என்பதற்கு என்ற குறியீட்டையும் பிள்ளை என்ற வகுப்பு அல்லது பட்டப் பெயரைக் குறிக்க என்ற குறியீட்டையும் இன்னும் இதுபோன்ற 53 குறியீடுகளையும் சேர்க்கப் பரிந்துரைத்திருக்கிறார்கள். முழுமையான பட்டியல்: http://www.unicode.org/L2/L2015/15078-tamil.pdf
- பழந்தமிழ்க்குறியீடுகள் சேர்க்கப்படவேண்டும் என்பது சரிதானே!
ஆழ்ந்த மொழியறிவும், வரலாற்றறிவும், தொல்லியல் அறிவும் உடையவர் இதற்கான பரிநந்துரையை அளித்தால் தவறில்லை.
- ஒருங்குகுறியில் குறியீடுகளைச் சேர்க்கும் முயற்சிகளைச் செய்யும் அறிஞர்கள், ஆர்வலர்கள் யாவர்?
தமிழறிஞர் யாரும் இவ்வாறான சிதைவு
முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. 55 பழஞ்சின்னங்களைச் சேர்க்கும் முன்
மொழிவைச் செய்திருப்பவர் திரு.சிரீரமணசர்மா எனும் சமற்கிருதச்
சார்பினராவார். ஆக, இதனால் விளைவனக் கேடுகளாகத்தான் இருக்கும் என்பதைப்
புரிந்து கொள்ளலாம். நான் மேற்குறிப்பிட்ட இரண்டாம் கட்டத்தில் வடமொழி
கிரந்த எழுத்துகளைத் தமிழ்-ஒருங்குகுறியிலும், தமிழ் எழுத்துகளைக்
கொண்டுபோய் கிரந்த-ஒருங்குறியிலும் சேர்க்கும் முன்மொழிவுகளை ஒருங்குகுறிச்
சேர்த்தியத்திற்கு அனுப்பித் தமிழ்நாட்டைக் கொந்தளிக்க வைத்த இருவரில்
இவரும் ஒருவர்.
ஒருங்குகுறி தொடர்பில் தமிழ்நாட்டு
அறிஞர் மன்றங்களும், ஆசிரியர் குமுகமும் தொடர்ந்த கவனம் வைப்பதில்லை
என்பதால், “ஒருங்குகுறிச் சேர்த்தியத்தோடு தொடர்பில் இருக்கும் யார்
வேண்டுமானாலும் சிறிய தாள் ஆதாரத்தை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும்
சேர்க்க முடியும் என்ற நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது” என்றே சொல்ல
வேண்டும்.
- இதற்கு முன்னர் செய்யப்பட்ட குறியேற்றத்திற்கும் தற்போதைய குறியேற்ற முயற்சிகளுக்கும் வேறுபாடு என்ன?
இதுவரை செய்யப்பட்டவை நெடுங்கணக்கு
சார்ந்தவை. இக்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் நடப்பு எழுத்துகளைக்
கணித்திரையில் காட்டவும் அச்சு செய்யவும் எடுக்கப்பட்ட முயற்சி(alphabets
encoding). இக்கால எழுத்து வடிவம் என்பதால் சிறுகுழந்தைக்கும் இது என்ன
எழுத்து என்று தெரியும் என்பதால் இந்தக் குறியேற்றம் ஒப்பீட்டில் எளிமையான
ஒன்று.
ஆனால், இப்போது மேற்கொள்ளப்படும்
முயற்சிகள், பெரும்பாலும் இக்காலப் பயனில் இல்லாத பல்வேறு வகையான
பழஞ்சின்னங்கள்(archaic symbols encoding). இக்குறியீடுகள் தமிழ்
எழுத்துகள், சொற்கள், தொடர்களுக்கு இடையே ஆங்காங்கே, பழைய முறையில்
எழுதப்பட்டவை ஆகும். அவற்றொடு, தமிழ் முறையிலேயே எழுதப்பட்ட பின்ன எண்களின்
பழைய வடிவங்களும், அளவைகளின் குறியீடுகளும் அடங்கும். இவற்றின் இருப்பு,
பல நூற்றாண்டுகளின் ஆவணங்களில் இருக்கின்றன. கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள்,
பட்டயங்கள், அரசர்காலச் சாசனங்கள் போன்றவற்றில் காணப்படுபவை. இவற்றிற்கு
நெடிய வரலாறும், கால வேறுபாடுகளும், வழக்கு வேறுபாடுகளும் அதிகம் உள்ளன.
எடுத்துக் காட்டுக்காகச் சொல்ல வேண்டுமானால், அரை என்ற பின்ன எண்ணை, சோழர்
காலத்தில்
என்ற குறியீட்டால் எழுதினார்கள். ஒரு நூற்றாண்டு முன்பு “இ” என்ற
குறியீட்டால் இதை எழுதினார்கள். இதுபோல அரை என்பதற்கு மட்டும் 4
வடிவங்களில் ஆன குறியீடுகள் இதுவரை தென்படுகின்றன. காலத்தால் இப்படி
வேறுபாடுகள் இருக்கிறதென்றால், இடத்தாலும் குறியீடுகள் வேறுபடுகின்றன.
காட்டாக, வருடம் என்பதற்கு என்ற குறியீட்டை வடதமிழ்நாட்டிலும், என்ற குறியீட்டைத் தென்தமிழ் நாட்டிலும் அதிகம் புழங்குவர் என்பார் அறிஞர் இராம.கி.
ஆகவே, இந்த இரண்டுவிதமான குறியேற்றத்திற்கும் அடிப்படைகளிலும், பயன்பாட்டு நோக்கங்களிலும் தன்மை வேறுபாடு இருப்பது தெரிகிறதல்லவா?
- இத்தகைய குறியேற்றத்தால் பயன் என்ன? என்பதையும் தெரிவியுங்கள்.
இக்காலத்தில் தமிழைக் கணிணியில் எழுத,
படிக்க நெடுங்கணக்குக் குறியேற்றம் (alphabet encoding)பயன்படுகிறது. ஆனால்
இந்தப் பழஞ்சின்னக் (archaic symbols) குறியேற்றமானது, பழைய ஆவணங்களைக்
கணிணியில் எழுத, படிக்கப் பயன்படும். பழைய ஆவணங்களில் தமிழ்
எழுத்துகளுக்கிடையே வரும் இந்தக் குறியீடுகள், அவ் ஆவணத்தை அப்படியே கணிமை
செய்வதற்குப் பயன்படும். தமிழின் பெருமையே அதன் வரலாறு எனும்போது அதன்
ஆவணங்கள் அதே எழுத்து வடிவத்தில் காக்கப்படுதற்கு இம்முயற்சி முறையாகச்
செய்யப்பட்டால் பயனாக இருக்கும். மாறாக, தவறாகச் செய்தால் மிகப்பெரிய
வரலாற்றுத் திரிவு ஏற்பட்டுப் பாழாய்ப்போகும்.
- நீங்கள் குறியேற்றத்தை எதிர்க்கவில்லை. குறைபாடுடன் குறியேற்றம் மேற்கொள்ளக்கூடாது என்றுதானே சொல்கிறீர்கள்.
ஆமாம். அது மட்டுமல்ல பழஞ்சின்னங்களின் குறியேற்றத்தால் உரிய பயன் விளையுமா என்பதையும் ஆராய வேண்டுமல்லவா?
- அப்படியானால், பழஞ்சின்னக் குறியேற்றத்தின் (archaic symbols encoding) பயனாளிகள் யாவர்? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தக் கேள்வியைத்தான் ஒருங்குறிச் சேர்த்தியமும் அவர்களின் விண்ணப்பம் வழியாக திரு.சிரீரமணசர்மாவிடம் முறைப்படி கேட்டுள்ளது.
நீங்களே சொல்லுங்கள்? பழஞ்சின்னங்களைப்
பயன்படுத்துபவர்கள் யாராக இருக்க முடியும்! தமிழ்நாட்டின் கல்வெட்டு
ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், அவற்றைப் பாதுகாக்கும் தொல்லியற்துறை
வல்லுநர்கள், ஓலைச்சுவடி ஆய்வாளர்கள், ஓலைச்சுவடியைப் பாதுகாக்கின்ற
நூலகங்கள், அவற்றை நூலாக வடிக்கும் ஆய்வாளர்கள் ஆசிரியர்கள், தமிழ்
மொழிசார் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், வரலாற்றை ஆய்வு செய்யும்
அறிஞர்கள், மாணவர்கள், தமிழில் முதுகலை, முனைவர் பட்டம் படிக்கும்
மாணவர்கள், மருத்துவம், கணிதம், பழம் அறிவியல் போன்றவற்றை ஆய்வு செய்யும்
பல்துறை அறிஞர்கள், மாணவர்கள், பழம் ஆவணங்களை எண்மமயம் செய்யும் பணியில்
இருப்பவர்கள், தமிழ்நாட்டு ஆவணக் காப்பகத்தில் பணியாற்றுநர், இந்தப்
பழஞ்சின்னக் குறியேற்றத்தைப் பயன்படுத்தி தமிழ்க்கணிமை சார்ந்த புதுக்குகள்
செய்ய முனையும் கணிஞர்கள், பொறிஞர்கள், இன்னுஞ் சொல்லப்போனால்
இக்குறியீடுகளில் சிலவற்றை இன்றைய கணிப்புழக்கத்துக்குக் கொண்டுவர
விரும்பும் பொதுமக்கள், ஆர்வலர்கள் போன்றவர்கள்தானே?
ஆனால், இரமணசர்மா யாரைச் சொல்லியிருக்கிறார் தெரியுமா? ‘சி-தமிழ்‘ என்ற ஒரு மடற்குழு, உத்தமம் பணிக்குழு-02, ஐ.சி.டி.ஏ என்றொரு இலங்கை நிறுவனம் (http://www.icta.lk/index.php?lang=en) ஆகிய இம்மூன்றை மட்டுமே இக்குறியேற்றத்தின் பயனர் குமுகமாகக் காட்டியிருக்கிறார்.
- விரிவான பயனாளர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் நல்லதுதானே! ஏன், மறைக்க வேண்டும்?
விரிவான பயனாளர்கள் உள்ளனர் என்றால் அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டுமல்லவா?
இரண்டு மடற்குழுக்களும் இலங்கை நிறுவனம்
ஒன்றும் மட்டுமே பழஞ்சின்னக் குறியேற்றத்தின் பயனாளர்கள் என்றால்,
அவர்களின் கருத்து மட்டும் போதும் அல்லவா? அதனால்தான் இந்த ஏமாற்று வேலை!
அப்படியானால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பயனர் குமுகம் ஆய்வு செய்ய ஒன்றுமே
இல்லை என்றாகிறது. இலங்கையின் தகவல் நுட்பத்துறையைப் பயனாளியாகக்
காட்டுபவர், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தகவல் நுட்பத்துறையை முற்றிலுமாகப்
புறக்கணித்திருக்கிறார். அவ்வளவு ஏன் தமிழ் இணையக் கல்விக் கழகத்தையே
பயனாளியாகச் சேர்க்கவில்லை. த.இ.க.முதலான தமிழ்நாட்டின் தொல்லியற்துறை,
வரலாற்றுத்துறை, ஆவணத்துறை, மொழித்துறை என்ற அனைத்துத் துறைகளையும்
இரமணசர்மா மறைத்துத் தன் முன்மொழிவை அளித்துள்ளார்.
அந்த இரண்டு மடற்குழுவிலும் கூட என்ன
தேடிப்பார்த்தாலும் இந்தக் குறியீடுகளின் வடிவம், தேர்ந்தெடுத்த முறை,
அவற்றின் கால, இட வேறுபாடுகள் பற்றி எந்த ஓர் ஆய்வும் உரையாடலும்
கருத்தாடலும் நடக்கவே இல்லை. இப்போதுதான் உத்தமம் பணிக்குழு மெல்ல
பேசமுற்படுகிறது.
ஆக, இந்த முன் மொழிவின் உள்ளடக்கம்
பற்றிய எந்த ஓர் ஆய்வும், கருத்தாடலும் நடக்காமலேயே ஒருங்குகுறியில்
பழஞ்சின்னங்கள் சேர்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
- நீங்கள் பழஞ்சின்னக் குறியீடுகள் தேவை. ஆனால், சரியானவற்றை ஆராய்ந்து சேர்க்க வேண்டும் என்கிறீர்கள். அப்படித்தானே!
ஆமாம்! சரியான வடிவங்களைத் தேர்ந்தெடுத்துச் சேர்க்க வேண்டும்.
- அப்படியானால், பழஞ்சின்னக் குறியீடுகளில் எந்த மாதிரியான ஆய்வுகள் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
ஒரு குறியீடு என்றால் அதற்கொரு வடிவம்
வேண்டும். அந்தக் குறியீடு ஒரே வடிவத்தில் புழங்கியிருந்தால் குழப்பமில்லை.
பழைய குறியீடுகள் என்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் குறியீடுகள்
இருக்கின்றன. அப்படி என்றால் ஒருங்குகுறிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும்
வடிவத்தைத் தேர்ந்தெடுக்க ஒரு முறை, நெறி வேண்டுமல்லவா? அப்படி ஒரு
நெறியும் முறையும் பின்பற்றப்படவில்லை. காட்டாக, 1/16 என்ற பின்னத்துக்கு என்ற 5 வடிவங்கள் வரலாற்றில் காணக்கிடைக்கின்றன.தமிழக அரசு இதில், என்ற வடிவத்தை ஏற்கெனவே அரசாணை வழியாக ஒருங்குகுறியில் சேர்த்திருக்கிறது. ஆனால், இரமணசர்மா அரசாணையைப் பொருட்படுத்தாமல், என்ற
வடிவத்தை ஒருங்குகுறியில் சேர்த்திருக்கிறார். இது தமிழக அரசிற்கு எதிரான
அடிப்படையற்ற செயற்பாடு. இதை முறையாகச் செய்யவேண்டுமானால்,
இக்குறியீட்டின் காலவாரி பயன்பாட்டளவு என்ன?
இடவாரியாகப் பயன்பாட்டளவு என்ன?
அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும் வடிவம் எது?
இவற்றின் மூலக்குறியீடு என்ன?
எந்தவிதமான ஆவணங்களில் அதிகம் காணப்படுகிறது; அதன் முதன்மை என்ன?
என்பன போன்ற ஆராய்ச்சி முடிவுகளின்படி
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற ஆய்வுகளை ஒரு குறியீட்டிற்குக் கூட
இரமணசர்மாவின் முன் மொழிவில் காணமுடியவில்லை. வெறுமே பூவா தலையா போட்டுப்
பார்த்துத் தன் மனம்போன போக்கில் தேர்ந்தெடுத்திருப்பதைப் புரிந்துகொள்ள
முடிகிறது.
ஒவ்வொரு குறியீட்டின் தமிழ்ப்பெயர்,
வடிவம், அதற்கான விளக்கம், அதைத் தேர்ந்தெடுத்த ஆய்வுமுறை, அதன் காலம்,
அதன் உரோமன் எழுத்துப் பலுக்கல் என்ற அனைத்தும் முறையாகச்
செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- நீங்கள் கூறுகிற ஆய்வுமுறையை யாரும் செய்திருக்கிறார்களா? சான்றுண்டா?
இதுபோன்றுதான் தொல்லியல் அறிஞர்கள்,
குறியீட்டு அறிஞர்கள், வரலாற்று ஆய்வு அறிஞர்கள் செய்கிறார்கள். முறையான
ஆய்வுநெறிகளின்படி, அறிவியல் முறைப்படி தங்கள் ஆய்வுகளை நிறுவுகிறார்கள்.
காட்டாக, ஒய்.சுப்பராயலு என்ற தொல்லியல் அறிஞரின் ஆய்வுக் கட்டுரையில்
(“Land Measurements in Medieval Tamilnadu”), “கோல்” என்ற அளவையை அவர்
ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் பாங்கினை இப்படத்தில் பாருங்கள்.
16சாண்=கோல் என்பதுதான் காலவாரியாக 800ஆம்
ஆண்டில் இருந்து 1350வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட கோல் ஆகும். அதன்
இடவாரிப் பயன்பாட்டையும் அவர் ஆய்ந்திருக்கிறார். இதன் முடிவின்படி,
16சாண்=கோலே அதிகம் புழங்கியிருப்பது தெரிகிறது. இந்தப் பதினாறு சாண் கோலை
வைத்துத்தான் “குழி” என்ற பரப்பை கணக்கிடுகிறார்கள். அதன்படி, 121 சதுர அடி
என்பதே “குழி”யின் பரப்பளவு. இதனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
மாதவிக்கு அமைத்துக்கொடுக்கும் நடனமேடை அளவுகளை வைத்து, இதே அளவுகோல்தான்
சிலம்பு காலத்திலும் இருந்தது என்பார் முனைவர் இராம.கி. பார்க்க: (http://valavu.blogspot.in/2009/07/5.html).
தொன்மையைக் காக்கவும் வேண்டும், உண்மையை எழுதவும் வேண்டும் என்றால் 121
ச.அடியைத்தானே தேர்ந்தெடுக்க வேண்டும்?. இம்மாதிரி ஆய்வு எதுவுமில்லாமலும்,
இம்மாதிரி ஆய்வு செய்தவர்களை மீள்பார்வைக்கும் உட்படுத்தாமலும், குழி
என்றால் 144ச.அடி என்று இரமணசர்மாவே தன்னிச்சையாக அறிவித்துவிட்டார்.
ஒவ்வொரு குறியீட்டுக்கும் இம்மாதிரியான ஆய்வுகளைச் செய்து, அல்லது
இம்மாதிரி ஆவணங்களை/நூல்களை மேற்கோள் காட்டி, முறையாக, தமிழ்நாட்டு
அறிஞர்களின் மீளாய்வுக்குட்படுத்தித்தான் குறியேற்றம் செய்யவேண்டுமே தவிர,
ஒற்றையா இரட்டையா போட்டுத் தேர்வு செய்தல், வரலாற்றுப் பிழைகளை உருவாக்கி
விடுமல்லவா?.
- அரசாணை மீறப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்களே! அது எப்படி?
தமிழக அரசாங்கம் 2010ஆம் ஆண்டு அரசாணை எண்
29 வழியாக, ஒருங்குகுறித் தரப்பாடு பற்றி வெளியிட்ட ஆவணத்தில் சில
பின்னங்களுக்கும் குறியீட்டு வடிவம் கொடுத்திருக்கிறது. ஆனால், இரமணசர்மா
அவற்றை மாற்றியிருக்கிறார். காட்டாக, 1/16, 1/5, 1/32 முதலான குறியீடுகளைச்
சொல்லலாம். இதுபற்றி யாதொரு விளக்கமும் தென்படவில்லை.
- தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் இதுபற்றி ஒரு கலந்தாய்வு கடந்தவாண்டு மார்ச்சு 5ஆம் நாள் நிகழ்ந்ததே?
ஆமாம். அது இக்குறியீடுகளை உரோமன்
எழுத்துகளில் எப்படி எழுதுவது என்று கலந்துரையாடிய சிறிய ஒன்றரை மணிநேர
நிகழ்வேயன்றி, உள்ளடக்க ஆய்வு பற்றிய நிகழ்வு அல்ல. காட்டாக, வராகன் என்பதை
உரோமனில் varaaKan என்று எழுதுவதா அல்லது varaaGan என்று எழுதுவதா என்பது
பற்றிய கூட்டம் மட்டுமே. பிள்ளையே அரைகுறையாய்ப் பிறந்து உயிருக்குப்
போராடுகையில் அதற்கு என்ன பெயர் வைப்பது என்று மட்டுமே அனைவரும்
பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அதை எப்படிச் சரிசெய்வது என்று யாருமே
பேசுவதில்லை.
- அப்படியானால் இக்குறைபாடுகள் பற்றி தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்குத் தெரிவித்தீர்களா?
கடந்த 5 மாதங்களில் 3 முறை தமிழிலும்
ஆங்கிலத்திலும் சுட்டிக்காட்டி விளக்கமாக எழுதியிருக்கிறேன். ஆனால், அதை
அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதைவிட, அவசர அவசரமாக ஓர் உயர்மட்டக் குழுவை
உருவாக்கி, அதில் இந்தப் பிழையான ஆவணத்தை உருவாக்கி அனுப்பிய
திரு.இரமணசர்மாவையும் உறுப்பினராக்கி, உயர்மட்டக் குழு முடிவு
செய்துவிட்டது அவ்வளவுதான் என்று ஆக்கிவிட்டார்கள். எங்கேயாவது, தான்
உருவாக்கிய ஆவணத்தைத், தானே அங்கீகரிக்க முடியுமா? அது தமிழ்நாட்டில்
மட்டும்தான் முடியும் என்பது தொடரும் அவலத்தினைக் காட்டுகிறது. ஒருங்குறி
உயர்மட்டக் குழு விவரம்: http://tamilvu.org/tvateam/html/uni_high_level_committee.htm.
ஏன் இந்த அவசரம்? எங்கிருந்து இத்தனை
அழுத்தம் வருகிறது? ஏன் தொல்லியற்துறை அறிஞர்கள் ஒருவர்கூட உயர்மட்டக்
குழுவில் இல்லை என்பதெல்லாம் நமக்குப் புரிவதில்லை.
எனினும், இந்த நிலையில், இக் குறியேற்றம்
வருமேயானால், அதன் விளைவுகளை மெல்ல மெல்ல நாம் உணரத்தலைப்படுவோம். அது
நல்லதாயிருக்காது. அதேபோல, 2010 இல் பல பாடங்கள் பெற்றும், இன்னமும்
ஒருங்குகுறிக் கண்காணிப்பும் பேணலும் இம்மிகூட முன்னேற்றம் காணாமல்,
மாறாகப் பின்னோக்கிப் போவது தமிழ் உலகம் தொடர்ந்து தனது தலையில் தானே மண்ணை
வாரிப்போட்டுக் கொள்கிறது என்று சொல்வதைத் தவர வேறொன்றுமில்லை.
- குறியேற்றம் என்பது திட்டமிடாமலும் தமிழக அரசின் ஆணைக்கு மாறாகவும் உண்மையான பயனாளிகளைக் கருத்தில் கொள்ளாமலும் அறிமுகப்படுத்த முனைவதால் தீங்கு விளையும் எனத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. தமிழ் இணையக் கல்விக்கழகம் இனியேனும் நடுநிலையுடன் செயல்பட்டு இது போன்ற சிதைவு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நன்றி! வணக்கம்
-அன்பு