புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார்
தமிழ்த்தேசிய உணர்வாளரும் தமிழீழச் செயற்பாட்டாளரும் திரைப்படப்பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் (புரட்டாசி 20, 1966 /06.10.1935 – ஆவணி 23, 2052 / 08.09.2021)இன்று மீளாத்துயில் கொண்டார்.
கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் உயர்மிகு கருப்பண்ணன் – தெய்வானையம்மாள் இணையருக்குப் பிறந்தவர் இராமசாமி. ஒருமுறை இந்தி ஆசிரியர் ஒருவர், இவரைப் பைத்தியக்காரன் என விளையாட்டாகக் கூற, “ஆம்.நான் பைத்தியக்காரன்தான். தமிழ்மீது பைத்தியம் கொண்டவன்” எனச்சொல்லித் தன் பெயரைப் புலமைப்பித்தன் என மாற்றிக்கொண்டவர்.
பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின்னர் கோவை, சூலூரில் உள்ள பஞ்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்தார். அப்பொழுது பேரூர் தனித்தமிழ்க்கல்லூரியில் படித்துப் புலவர் பட்டமும் பெற்றார். இதனால், கோவை, நெல்லை, சென்னையில் தமிழாசிரியராகவும் வேலை பார்த்தார்.
1978 ஆம் ஆண்டு, புலமைப்பித்தன் மேல் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் மேல் சபையின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். அரசின் அவைக்களப் புலவராகவும் வீற்றிருந்தார்.
புரட்சித்தீ, பாவேந்தர் பிள்ளைத்தமிழ்,எது கவிதை, முதலான நூல்களை எழுதியுள்ளார். இவர் படைப்புகள் குறித்த முழு விவரம் கிடைக்கவில்லை. பொதுவாக இவரின் திரைப்படப்பாடல்கள் குறித்தே அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். இவரின் பாவேந்தர் பிள்ளைத்தமிழ் புத்தகம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ் முதுகலைக்குப் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுதுதான் திரைவாய்ப்பைப்பெற்றார். எம்ஞ்சியாரின் ‘குடியிருந்த கோவிலில்’ இடம்பெற்ற நான் யார், நான் யார் என்பதே இவரின் முதல் பாடல்(1968). ஏறத்தாழ ஆயிரம் திரைப் பாடல்கள் எழுதி நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினைப் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினையும் புலமைப்பித்தன் பெற்றுள்ளார்.
தமிழ்ஞாலத் தேசியத்தலைவர் பிரபாகரனும் வேறு சில விடுதலைப்புலிகளும் புலமைப்பித்தன் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள்போல் தங்கித் தம் பணிகளை ஆற்றியுள்ளனர். தமிழ்ஈழ வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு என எழுதினால் புலமைப்பித்தன் குறிப்பிடத்தக்க இடம் பெறுவார். புரட்சித்தலைவர் எம்ஞ்சியாருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உறவுப்பாலமாகச் செயல்பட்டார் என ஈழத்தமிழர்கள் பாராட்டுவார்கள்.
இவரைப்பற்றிய குறிப்புகள் என்றாலே திரைப்படப்பாடல்கள் பட்டியலாகத்தான் உள்ளன. எனவே, புலமைப்பித்தன் குறித்த என் நினைவலைகளில் சிலவற்றைப் பதிகின்றேன்.
ஒரு நாள் மதுரையில் திருநகரில் உள்ள எங்கள் வீட்டிற்குப் புலமைப்பித்தன் வந்தார். “நான் பஞ்சாலைத் தொழிலாளி. கோவையில் இருந்து வந்துள்ளேன். (இலக்குவனார்)ஐயாவைப் பார்க்க வேண்டும்” என்றார். திருநகரிலுள்ள சீதாலட்சுமி ஆலையில் இருந்தும் பசுமலையில் உள்ள மகாலட்சுமி பஞ்சாலையில் இருந்தும் அவ்வப்பொழுது தொழிலாளர்கள் தமிழார்வத்துடன் வந்து அப்பாவைச் சந்தித்துச் செல்வதால் அத்தகைய உணர்வாளர் என எண்ணி மேலே அழைத்துச் சென்றேன். கோவையிலிருந்து வருவதைக் குறிப்பிட்டுத் தன்னுடைய எம்ஞ்சியார் பிள்ளைத்தமிழ்நூலுக்கு அணிந்துரை வேண்டும் என்றார். “இதற்காக நெடுந்தொலைவு வரவேண்டுமா? அஞ்சலில் அனுப்பியிருந்தால் படித்து அனுப்பியிருப்பேனே” என்றார் அப்பா. “நான் பஞ்சாலைத்தொழிலாளி அஞ்சலில் அனுப்பியிருந்தால் படிப்பீர்களோ மாட்டீர்களோ என்று எண்ணினேன். என் முதல் நூல் எம்ஞ்சியாரைப்பற்றித்தான் இருக்க வேண்டும். முதல் அணிந்துரை உங்களிடம் இரு்நதுதான் பெற வேண்டும் என்பதற்காக நேரில் வந்தேன்” என்றார். பஞ்சாலை நமக்கு நூலை அளிப்பதுபோல் பஞ்சாலைத் தொழிலாளி நூலை அளிக்கக்கூடாதா என்பதுபோல் சில சொல்லி அவரை ஊக்கப்படுத்தினார்கள். “நடிகருக்குப் பிள்ளைத்தமிழா? அதற்கு அப்பா அணிந்துரையா?” எனப் பள்ளி மாணவனாக இருந்த நான் எண்ணிக் கொண்டேன்.
அவர் முன்னிலையிலேயே நூலைப்படித்து ஆங்காங்கே வெளிப்பட்ட அவரின் புலமை நயத்தைப் பாராட்டினார்கள். அணிந்துரையும் வழங்கினார்கள். “உங்களை ஏழைத் தொழிலாளியாக எண்ண வேண்டா. புலமைச் செல்வராக எண்ணுங்கள். செல்லுங்கள். வெல்லுங்கள்” என வழியனுப்பியும் வைத்தார்.
அதன்பின் வந்த பலரிடமும் ஆலைத்தொழிலாளியாக இருந்து சிறப்பான இலக்கியம் படைத்துள்ளார் எனப் புலமைப்பித்தனைப் பாராட்டிக் கூறினார்கள். முதலில் நான் எண்ணிய எண்ணம் தவறு என்பதை உணர்ந்தேன்.
ஒருமுறை இவர் சப்பான் செல்வதாக இருந்தது. அப்பொழுது மூத்த அண்ணன் பொறி.இ.திருவேலன் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே, அவர் மூலம் அவருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் செய்திருந்தேன். ஆனால் பயணம் மேற்கொள்ளவில்லை. அவர் சப்பான் செல்லாமலேயே அங்கே சென்று வந்ததுபோன்ற செய்தி பரவியது. அவ்வாறு நம்பும் வகையில் வேண்டிய ஏற்பாடு செய்தமை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார். அதன் பின்னர் அவர் பயணம் மேற்கொண்ட பொழுது மேலவைத் துணைத்தலைவராக இருந்தமையால், அரசு முறையில் ஏற்பாடு செய்து கொண்டார்.
நான் சென்னை வந்த பின்னர், மறைமலை அண்ணன், கவிஞர் இளந்தேவன், ஆசிரியர் தங்கப்பாண்டி ஆகியோருடன் புலமைப்பித்தனும் இணைந்து நால்வர் அணியாக இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று தமிழுக்கு எதிராகப்பேசுவோருக்கு எதிராகக் குரல் கொடுத்ததை அறிந்துள்ளேன். நானும் அவரை அழைத்துக் கூட்டங்கள் நடத்தியுள்ளேன். அவர் பேசும் கூட்டங்களுக்குச் சென்று அவர் உரைகளைக் கேட்டுள்ளேன். அவ்வாறு கூட்டங்களுக்குச் செல்லும் பொழுது அவரைச் சந்தித்துப்பேசி விட்டு வருவேன். அவ்வாறு ஒரு முறை (1980) அரசு கசுதூரிபாய் காந்தி உயர்நிலைப்பள்ளிக்கு அவரைச் சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தேன். அப்பொழுது மேலவைத் துணைத்தலைவராக இருந்தார். அப்பள்ளி, பொதுமக்களுக்கு உயர்நிலைப்பள்ளியாக இருந்தாலும் உண்மையில் தவறிழத்த சிறுமிகளுக்கான சீர்திருத்தப்பள்ளி என்றும் துன்பத்திலிருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிப் பெருந்துன்பத்தில் மாட்டிக்கொண்டோரே மிகுதி என்றும் அவரிடம் கூறினேன். வாசமிலா மலரிது என்னும் தே.இராசேந்தர் (டி.ஆர்.) பாடல் மெட்டில்
பாசமில்லா உலகிது
பணத்தைத்தான் நாடுது
என நான் பாடல் எழுதிப் பேச்சில் குறிப்பிட்டேன். (அகரமுதல இதழில் இப்பாடல் வந்துள்ளது.) சிறுமிகளின் நிலை யறிந்து அழுகை உணர்வுடன் தளுதளுத்த குரலில் பேசி, “இவர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். உதவுகிறேன்” என்றார். வீரமான அவரின் உரையைக் கேட்ட எனக்கு அவர் அழுகை உணர்வு அவரின் மென்மை உள்ளத்தை வெளிப்படுத்தியது.
ஒரு முறை அவரது எந்தக்கூட்டம் குறித்தும் கேள்விப்படாமையால் அவரது இல்லம் சென்று ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அரசின்நிலைப்பாடு அல்லது அவர் கட்சியின் நிலைப்பாட்டினால் அமைதி காக்கிறாரா எனக்கேட்டேன். “யாருடைய நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். என் நிலைப்பாடு தமிழ்ஈழ விடுதலைதான்” என்றார். வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொண்டிருந்ததாலும் நலக்குறைவாலும் கூட்டங்களில் சில காலம் பங்கேற்க முடியாமல் போனதாகக் குறிப்பிட்டார்.
இசைஞானி இளையராசாவைத்தலைவராகக் கொண்டு கவிஞர் மு.மேத்தா துணைத்தலைவர், பேரா.மறைமலை செயலர், திரு வேலுச்சாமியும் நானும் ஒருங்கிணைப்பாளர்கள் முதலான பொறுப்புகளில் இருக்கும் வகையில் ‘அன்னை நற்பணி மன்றம்’ என ஓர் அமைப்பினை நடத்தினோம். அதன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்பொழுது இளையராசாவைச் சந்தித்துக் ‘கோவில் புறா’ என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற புலமைப்பித்தனின் “அமுதே, தமிழே” பாடலை முதல் பாடலாகப் பாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். அமைதியாக என்னைப் பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. பேசாத்துறவியாக இருக்கிறார் எனக் கேள்விப்பட்டுத்தான் பேசினேன். அதனால் ஒன்றும் எண்ணவில்லை. ஆனால், மேடையில் பாட வந்தபொழுது அப்பாடலை மட்டுமே பாடினார். மகிழ்ச்சியாக இருந்தது.
நான் 1990-95 இல் மதுரையில் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநராகப்பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது சவகர் சிறுவர் மன்றத்தின் செயலராக இருந்து பல்வேறு கலைப்பயிற்சிகளை அளித்து வந்தேன். திரைப்படப் பாடல்களைப் பாடக்கூடாது என்றும் அப்பாடல்களுக்கு ஆடக்கூடாது என்றும் விதித்திருந்தேன். எனினும் பாரதியார், பாரதிதாசன் முதலான தமிழ்ப்பெருங்கவிஞர்களின் பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தாலும் திரைப்பாடல்களாகக் கருதக்கூடாது எனத் தெரிவித்திருந்தேன். இதே வரிசையில் “அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே” பாடலுக்கு ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் நாட்டியப் பயிற்சி அளிக்கச் செய்து மேடையேற்றம் செய்தேன். சென்னைக்குக் கலைபண்பாட்டுத்துறைக்கு வந்த பின்னர் நான் சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் இப்பாடலுக்கு நாட்டியப்பயிற்சியை அளிக்கச்செய்தேன். இதனை அவரிடம் ஒரு முறை தெரிவித்த பொழுது நாட்டியத்தின் மூலமும் பாட்டைப் பரப்பியதற்குப் பாராட்டினார். திரைப்படப்பாடல்களுக்கு இலக்கியத் தகுதி கொடுத்துள்ளதாகத் தம் பாடல்களைப்பற்றி அவர் கூறுவார். இதுவும் அதற்குச்சான்று என்று கருதினார். புலமைப்பித்தனின் பல பாடல்களின் சுவைகண்டு நான் மகிழ்ந்துள்ளேன். இருப்பினும் இப்பாடலைத் தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடலாகக் கருதிப் பெரிதும் விரும்புகிறேன்.
உணர்வு பொங்கப்பேசி மக்களின் எண்ணங்களை மடைமாற்றம் செய்யும் வல்லமை மிக்கவர் புலமைப்பித்தன். கேட்போருக்கு இனஉணர்வையும் மொழி உணர்வையும் ஊட்டும் திறன் மிக்கவர். திரைப்பாடல்களிலும் புலமை நயத்தை வெளிப்படுத்தும் திறனாளர். அவரது தமிழீழுழக் கனவை நம்மிடம் விட்டு விட்டு மீளாத் துயில் கொண்டுவிட்டார். அவர் கனவை நனவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
புலமைப்பித்தன் புகழ் ஓங்குக!
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல