வெள்ளி, 4 நவம்பர், 2022

உலகாய்தத்தை உணர்த்த உம்பர் உலகு சென்றாரோ பேரா.க.நெடுஞ்செழியன்!

அகரமுதல





பேரா.க.நெடுஞ்செழியன் மறைவு!

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று வைகறை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79.

தமிழறிஞர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தமிழ் மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல், தமிழர் சமயம் ஆகிய துறையினரால் போற்றப்பட்டவர். ஆசீவகம் பற்றிய இவருடைய ஆய்வு தமிழாய்வு உலகில் மிகவும் முதன்மையானது.

திருச்சி மாவாட்டம், இலால்குடி வட்டத்தில் உள்ள படுகை ஊரில் 15.06. 1944-இல் பிறந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று திருச்சியில் உள்ள ஈ.வே.இரா பெரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றினார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பெரியாரியல் சிந்தனையாளர், தமிழின அடையாள மீட்பர், தமிழ் மெய்யியல் மீட்பர், சிறந்த தமிழறிஞர், தமிழ்த் தேசப் பேரொளி முதலான விருதுகளைப் பெற்றுள்ளார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும், கடந்த மாதம், செம்மொழி நிறுவனத்தின் கலைஞர் பொற்கிழி விருதை முதலமைச்சர் மு.க. தாலினிடம் இருந்து பெற்றார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், சித்தன்ன வாசல், ஆசீவம் என்னும் தமிழர் அணுவியம், சங்க காலத் தமிழர் சமயம், தமிழரின் அடையாளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஆசீவகமும், ஐயனார் வரலாறும் என்ற இவரது ஆய்வு ஆசீவகம் பற்றிய ஆய்வில் முக்கியமானது.

சாதி மறுப்பு திருமணம் செய்தவர் பேராசிரிய க. நெடுஞ்செழியன். திராவிட இயக்கங்களிலும் தமிழ் அரசியலும் ஈடுபாடு கொண்டவர். மறைந்த திமுக பொதுச் செயலர் க. அன்பழகனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்.

இவருக்கு மனைவி சக்குபாய், மகன் பண்ணன், பெண்மக்கள் நகைமுத்து, குறிச்சி, மருமக்கள், பேரன், பேத்திகள் உள்ளனர்.

திருச்சி கே.கே.நகரில் வீட்டில் வசித்து வந்த பேராசிரியர் க. நெடுஞ்செழியன் முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவப் பண்டுவத்திற்காகச் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் மறைவு தமிழ் ஆய்வாளர்கள், திராவிட இயக்கத்தினர், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு முதலமைச்சர் மு.க. தாலின், தலைவர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.தாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். கடந்த ஆகத்து மாதம்தான் அவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை’ தான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அவர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்கள். தமிழுக்கும் தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன். பல்வேறு நூல்களைப் படைத்தவர். தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வருபவர் பேராசிரியர். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது ஆகும்” என்று நான் குறிப்பிட்டேன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு பொது மருத்துமனைக்கு நேரில் சென்று பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பெரும் பங்களிப்பை செய்த ஆய்வறிஞர் பேராசிரியர் நெடுஞ்செழியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என மதுரை நா.உ.,எழுத்தாளர்,சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பெரும் பங்களிப்பை செய்த ஆய்வறிஞர் பேராசிரியர் நெடுஞ்செழியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழர் சிந்தனை மரபை நிலைநிறுத்தக் கருத்தியல் தளத்திலும், களத்திலும் அவர் நிகழ்த்தியுள்ள போராட்டம் என்றென்றும் நினைவுகூரப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய உடல் திருச்சி கே.கே.நகரில் உள்ள இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரான படுகையில் சனிக்கிழமை (நவம்பர் 5) நல்லடக்கம் நடைபெற உள்ளது.

– தமிழ்.இந்தியன் எக்சுபிரசு 04.11.2022

+++

க. நெடுஞ்செழியன் (K. Nedunchezhiyan, 15, சூன் 1944 – 4 நவம்பர் 2022) தமிழகத் தமிழறிஞரும், ஆய்வாளரும் ஆவார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர். “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” போன்ற 18 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “தமிழரின் அடையாளங்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

எழுதிய நூல்கள்

இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும் (1989)

தமிழர் தருக்கவியல்

தமிழரின் அடையாளங்கள்

சங்ககாலத் தமிழர் சமயம்

தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்

ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்

தமிழர் இயங்கியல் (தொல்காப்பியமும் சரக சம்கிதையும்) (2000)

உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்

சமூக நீதி

சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும் (2007)

மரப்பாச்சி (2010)

தொல்காப்பியம் திருக்குறள் காலமும் கருத்தும் (2010)

சித்தண்ணவாயில்

ஆசிவகமும் ஐயனார் வரலாறும் (2014)

– விக்கீபீடியா

+++

பேரா.நெடுஞ்செழியன் ஐயாவின் மறைவு தமிழனத்திற்கு ஒரு பேரிழப்பாகும்!

தமிழ் தேசியத்தையொட்டி, அவரோடு பல நேரங்களில் பயணித்த போதும், 2005-இல் அவர் ஐயா பெங்களூர் (வெங்காளூர்) குணா-வோடு வெடி மருந்து வைத்திருந்ததாகவும், முதன்மைக் கன்னடத் தலைவர்களைக் கொலை செய்யச் சதி செய்ததாகவும், விடுதலைப் புலிகளை ஆதரித்தாகவும், தனித் தமிழ் நாடு கோரிக்கையை மறைமுகமாகச் செயல்படுத்த உறுதுணையாக  இருப்பதாகவும் சொல்லி, இப்போது காங்கிரசு தலைவராக பதவியேற்றுள்ள மல்லிகார்சுன கார்கே, அன்றைய கருநாடக உள்துறை அமைச்சராக இருந்த போது தமிழர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய்யான வழக்கின் கீழ்த் தமிழ் அறிஞர்களுடன் கைது செய்யப்பட்டார்கள். 

சிறைப்பட்ட தமிழர்களின் விடுதலை வேண்டி, அன்று எனது தலைமையில் இயங்கிய ‘மனிதம்’ என்ற மனித உரிமை அமைப்பின் மூலம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டு, நம்மால் ஆன சிறு உந்துதலை வழங்கினோம். இப்படிப் பல நேரங்களில் ஐயா பேரா. நெடுஞ்செழியனோடு பயணித்தோம்.

இன்று அந்த அறிஞர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றார். மறைந்த பேரா.நெடுஞ்செழியன் உடல், சென்னைப் பொது மருத்துவமனைக் கல்லூரியில் சில மருத்துவ நிகழ்வுக்குப் பின்பு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, நண்பர்களோடு உடனிருந்து அவரைத் திருச்சி-க்கு வழியனுப்பி வைத்தோம்.

– அக்கினி சுப்ரமணியம்

உலகத் தமிழர் பேரவை

www.worldtamilforum.com

++

பேரா.க.நெ.குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள

 98949 67911



வியாழன், 3 நவம்பர், 2022

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 25, 26 & 27: இணைய அரங்கம்

 அகரமுதல







செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 25, 26 & 27 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 20, 2053 ஞாயிறு 06.11.2022 காலை 10.00

“தமிழும் நானும்”

உரையாளர்கள்:

எழுத்தாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர்

சிலம்புநம்பி முனைவர் இளவரச அமிழ்தன்

புலவர் ச.ந. இளங்குமரன்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                            

வரவேற்புரை: திருமதி புனிதா சிவக்குமார்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: மாணவர் தமிழன் கார்த்திக்கு