சனி, 17 ஆகஸ்ட், 2019

தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன.


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன.

செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சிபுரம் – செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கான தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா ஆடி 30, 2019 / 15.8.2019 அன்று காலை 11 மணிக்குச் செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய – இரசிய பண்பாட்டு நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப.தங்கப்பன்  27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி  தலைமையில் விருது பெற்றவர்கள்:
  1. குரு.சம்பந்தம் – தொல்காப்பியர் விருது
  2. கோ.செழியன் – கபிலர் விருது
  3. சா.கா.பாரதிராசா – இளங்கோவடிகள் விருது
  4. ம.ச.முனுசாமி – ஒளவையார் விருது
  5. நாகை மனோகரன் – திருமூலர் விருது
  6. சு.பழனிச்சாமி – கம்பர் விருது
  7. அசோகன் – செயங்கொண்டார் விருது
  8. தயானி அன்பு – ஆண்டாள் விருது
  9. இராம.மாணிக்கம் – அப்பர் விருது
  10. கோ.வெள்ளைச்சாமி – வள்ளலார் விருது
  11. கோசுவா சாம்டேனியல் – கால்டுவெல் விருது
  12. சந்திரசேகர் – உ.வே.சா. விருது
  13. அமுதகீதன் – மறைமலை அடிகள் விருது
  14. இ.மணிவாசகன் – பாரதிதாசன் விருது
  15. செங்கை பூ.சுந்தரம் – பெரியார் விருது
  16. வெற்றிக்கண்ணன் – அண்ணா விருது
  17. த.கு.கருணாநிதி – கலைஞர் விருது
  18. பாரதி சிபுரான் – புதுமைப்பித்தன் விருது
  19. தோ. உருக்மாங்கதன் – பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் விருது
  20. மல்லை தமிழச்சி – செயகாந்தன் விருது
  21. பேராசிரியர் கிள்ளிவளவன் – பாரதியார் விருது
  22. முத்துக் கிருட்டிணன் – கண்ணதாசன் விருது
  23. உமர்தாசன் – அப்துல் ரகுமான் விருது
  24. நா.மணிமாறன் – வைரமுத்து விருது
  25. சிவக்குமார் – வைரமுத்து விருது
  26. செந்தமிழ் – வைரமுத்து விருது
  27. வல்லம் சோமு – வைரமுத்து விருது
கு.இராசா, அ.அசோக்கு நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். பிரவீன், மோகன், முத்துகிருட்டிணன், மா.பாலகிருட்டிணன், சுனில்குமார், எழிலரசன், பிற தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்!

 அகரமுதல

நூற்று ஐந்து அகவை கடந்த ..வைத்தியலிங்கம்இயற்கை எய்தினார்!

பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு ஊரில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்று ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரதுஇல்லத்தில் இயற்கை எய்தினார்.
 சிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார்.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு இருந்த ஐயா வைத்திலிங்கம் அவர்களின் குடும்பம் பின்னர் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் குடியேறியது.
சிங்கப்பூர் நாட்டில் பணியாற்றித் தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் ஐயா வைத்திலிங்கம்.
நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் ஐயாவின் நிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்தன என அவரே அடிக்கடிப் பல்வேறு கூட்டங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறந்த கவிபுனையும் ஆற்றல் கொண்ட ஐயா அவர்கள் பதிப்பிக்கப் படாமல் பல்வேறு கவிதைகளைக் கையெழுத்துப் படிகளாகவே வைத்திருக்கிறார்.
சமூகத்திற்குச் சான்றாக வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த ஐயாவின் நூற்றாண்டு விழாவில் மெய்ச்சுடர், புரட்சிப் பெரியார் முழக்கம் ஏடுகள் சிறப்பு மலர் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பேராவூரணி திருக்குறள் பேரவை ஐயா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
– இரமேசு

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் இரத்தத்தான முகாம்

அகரமுதல

ஆவணி 06, 2050 / 23.08.2019

வெள்ளிக்கிழமை

காலை 9.00 முதல் நண்பகல் 1.00  மணி வரை

அசுகான் இல்லம் அருகில், துபாய் தேரா பகுதி

இந்தியாவின் 73-ஆவது விடுதலைநாளையொட்டி
துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் சார்பில்
துபாய் இரத்தத்தான மையத்துடன் இணைந்து

இரத்தத்தான முகாம் 

இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது அமீரக அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய
 தேவிப்பட்டினம் நிசாம் : 050 3525 305
முதுவை இதாயத்து : 050 51 96 433
தேவிபட்டினம் சமீர் அகமது : 055 6577 168
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்க!

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 21 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


அகரமுதல



திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 21


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்இறைமாட்சி, குறள் எண்:388)
 அறமுறை ஆட்சியால் மக்களைக் காப்பாற்றும் நாட்டின் தலைவன் மக்களால் உயர்ந்தோனாக மதிக்கப்பட்டுப் போற்றப்படுவான்  என்கிறார் திருவள்ளுவர்.
அரசறிவியல்,  நீதிமுறைசெய்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது நாட்டை ஆள்வோர் கடமை என்கிறது. இதைத்தான் திருவள்ளுவர் இங்கே குறிப்பிடுகிறார்.
‘இறை’ என்பதைப் பலரும் கடவுள்/ தெய்வம் என்றே குறிப்பிடுகின்றனர். அப்படியானால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது பொருந்துமா?  இறை மறுப்பாளர்கள், தாங்கள் இல்லை என்று சொல்லக்கூடிய கடவுளாக எப்படி ஒருவரைக் கருதுவர்? இறை என்றால் உயர்ந்தோன் என்றும் பொருள். எனவே, உயர்ந்தோன் எனக் கூறுவது கடவுள் ஏற்பாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் ஆகிய இரு தரப்பாருக்கும் பொருந்தும்.
முறை என்பதற்குச் செங்கோல் முறைமை, ஆட்சி முறைமை, நீதி முறைமை, அறமுறைமை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருகின்றனர். இதை மேலும் தெளிவாக மணக்குடவர், “குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்” என உரை வழங்கியுள்ளார். எனவே, முறைமை என்பது உலக உயிர்களுக்குத் தீங்கிழைப்போரிடம் இருந்து எல்லா உயிர்களையும் காத்தல் என்கிறார். எனவே, மக்களை மட்டுமல்லாமல், பிற உயிர்களையும் காப்பாற்றவேண்டியது ஆள்வோர் கடமை எனச் சிறப்பாகக் கூறுகிறார் எனலாம்.
காலிங்கர் மேலும் சிறப்பாக,  “அளித்தலும் செறுத்தலும் ஆகிய செய்தியின் கூறுபாடு அறிந்து, மற்று அவரவர்க்குத் தக்காங்கு செய்யும் முறை வழுவாமல் செய்து, மற்று இங்ஙனம் காத்தலைப் புரியும் மன்னவன்”  என்று விளக்குகிறார். அஃதாவது, குற்றவாளிகளைத் தண்டித்தல்(செறுத்தல்) மட்டுமல்ல, மக்களுக்குப் பிறரால் தீங்கு வராவிட்டாலும் வாழ்விற்குத் தேவையானவற்றைப் பெறாமல் துன்புறலாம் அல்லவா? அத்தகையோர்க்குத் தக்கபடி அளித்தலும் முறைமைதான் என்கிறார்.  
மணக்குடவரும் பரிப்பெருமாளும் நாயகனென்று எண்ணப்படுவான் எனச் சீர்திருத்த உரையாசிரியர்களுக்கு முன்னோடியாகக் குறிப்பிடுகின்றனர்.
காத்தல் என்பது அரசால், அரசைச் சுற்றியுள்ளோரால், கள்வரால், பகைவரால், விலங்கு முதலியவற்றால் மக்கட்கு எந்தவகையான தீமையும் நேராவண்ணம் பாதுகாத்தல் என அறிஞர்கள் விளக்குவர். எனவே, ஆள்வோரால் மட்டுமல்ல, அவரது சுற்றத்தாராலும் சுற்றியுள்ள அதிகாரிகளாலும் தீமை வராமல் காத்தல் என்னும் நடுநிலை அறத்தை அன்றே திருவள்ளுவர் கூறியுள்ளார்.
அடிமை எண்ணமோ அச்சமோ இன்றி வாழும் சூழலைத் தருவதே உண்மையான முறை செய்யும் ஆட்சியாகும். மேலும், அனைவருக்கும் பொருள் ஈட்டும் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, மருத்துவ வாய்ப்பு, ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்குமாறு ஆள்வதே முறை செய்து காப்பாற்றல் ஆகும்.
திருவள்ளுவர் அக்கால மன்னராட்சி முறைப்படி மன்னன் எனக் குறிப்பிட்டாலும் நாட்டின் ஆட்சியாளன் என்று பொருள் கொள்வது எக்காலத்திற்கும் ஏற்றதாக அமையும்.

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி 16.08.2019

மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ

அகரமுதல


தொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை நிதிசேர் தொடர்பாக

மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ

Fundraising  for University of Toronto Tamil Chair
Grand Tamil Knowledge Competition
 தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிக்கும் நோக்கிலும் மாணவர்களுக்குத் தமிழ், தமிழர் தொடர்பான அறிவை ஊட்டும் நோக்கோடும் மாணவர்களுக்கான மாபெரும் தமிழறிவுப் போட்டி நடைபெறவுள்ளது.
நிலைகள்
கீழ்ப்பிரிவு    12 வயது வரை         80 வினாக்கள்
மேற்பிரிவு    18 வயது வரை         120 வினாக்கள்
இப்போட்டிகளுக்கான வினாக்களும் விடைகளும் இணையத் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
  காலம் / இடம்

ஆவணி 07 – 08, 2050 * 24-25.08.2019 

 தமிழர் விழாவில் அமைக்கப்பட்டிருக்கும்

தமிழ் இருக்கைக்கான அரங்கு.

பதிவு விவரம்
      இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான முன் பதிவைக் கனடியத் தமிழர் பேரவை அலுவலகத்தில் செய்வது வரவேற்கப்படுகின்றது.
போட்டி நடைபெறும் நாட்களிலும் பதிவு செய்யக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
       போட்டியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் ஒருவருக்கு 10 தாலர் ஆகும்.
போட்டி வடிவம்
      கணிணியில் குறித்த கால எல்லை வரை வினாக்கள் 4 விடைகளோடு தோன்றிக்கொண்டிருக்கும். வேகமாகவும் பொருத்தமாகவும் விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
வெற்றியாளர்
        குறித்த நேரத்துக்குள் மிகக் கூடிய மதிப்பெண் பெறுபவர், அதாவது கூடிய வினாக்களுக்கு சரியான விடையைச் சொல்பவர்  வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார்.
       ஒன்றுக்கு மேற்பட்டோர் சம மதிப்பெண் பெற்றிருந்தால், குறைந்தளவு வினாக்களில் கூடிய மதிப்பெண் பெற்றவர் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார்
        இதன்பின்பும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக இருக்குமிடத்து பரிசுகள் பகிர்ந்தளிக்கப்படும்.
பரிசு விவரம்
         இரு நிலையிலும் முதல் மூன்று வெற்றியாளருக்கு பதங்கமும், பரிசும் வழங்கப்படும்
   முதற்பரிசு 250 தாலர்
   இரண்டாம் பரிசு 150 தாலர்
   மூன்றாம் பரிசு 100 தாலர்
         போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
        சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசுகள் தொரண்டோ தமிழ் இருக்கைகான  நிதிசேர் நீள்நடை நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
பதிவு/கூடுதல் விவரங்களுக்கு
இணையத்தளம்: www.tamilfest.ca
தொலைபேசி: (416) 240-0078
அலுவலகம்: இசுகார்பரோ (513-10 Milner Business Ct, Scarborough, ON M1B 3C6)

இலக்கிய அமுதம் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’


அகரமுதல

ஆவணி 01, 2050 / 18.08.2019

குவிகம் இல்லம்

6, மூன்றாம் தளம்வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலைதியாகராயர்நகர்,
சென்னை 600 017

இலக்கிய அமுதம் 
 சித்திரா பாலசுப்பிரமணியன் :
 ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

கருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்! 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!]


கருத்துக் கதிர்கள் 21 & 22

[21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!  22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!]

21 வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!
வேலூர் தேர்தல் முடிவு, வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்?(03 ஆகத்து 2019) என முன்னர்த் தெரிவித்தவாறுதான் அமைந்துள்ளது.  “சண்முகத்தின் தனிப்பட்ட செல்வாக்கும் அ.தி.மு.க.வின் செல்வாக்கும் இவரை வெற்றியின் பக்கம் தள்ளும். ஆனால், பா.ச.க. வின் செயல்பாடுகள் இவரைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். “பா.ச.க.வை விட்டு விலகி நின்றால் வெற்றி வாய்ப்பு உள்ள சண்முகம், வெற்றிக்கனியைக் கதிர் ஆனந்திடம் பறிகொடுக்கவே வாய்ப்பு உள்ளது.” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
 அதுபோல் சண்முகம் வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். தி.மு.க.வின் கதிர் ஆனந்து குறைந்த வேறுபாட்டில் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றி வெற்றிதான். இடைத்தேர்தல் போன்ற தனித் தேர்தலில் அமைச்சரவையே தேர்தலில் பம்பரமாகச் செயல்பட்டாலும் பொதுவான இடைத்தேர்தலில் வெற்றி காணும் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
 ஆளுங்கட்சி மக்களிடம் செல்வாக்கு மிகுதியாக,  மக்கள் எதிர்க்கும் திட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். இரு மொழிக்கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் கூறுவதால் பா.ச.க.வின் இந்தித் திணிப்பையும் சமசுகிருதத் திணிப்பையும் கடுமையாக எதிர்த்து நிறுத்த வேண்டும். நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 இல் மிகுதியாக வாக்குகள் வாங்கிவிட்டோம் என்று போலி மயக்கத்தில் இருக்கக் கூடாது.
தி.மு.க.வும் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்பொழுது சரிவு ஏற்பட்டுள்ளதை உணர வேண்டும். மக்கள் நலத்திட்டங்களிலும் தமிழ்க்காப்புத் திட்டங்களிலும் முனைப்பு காட்ட வேண்டும்.
“பா.ச.க. ஒதுங்கினால் வெற்றி பெறுவோம் என்று அதிமுக சொன்னது; நாங்கள் ஒதுங்கியதால் அது தோற்று விட்டது” எனத் தமிழிசை கூறுகிறார். அவர் மனத்திற்குத் தெரியும் உண்மை. முற்பகலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பிற்பகலில் சுறுசுறுப்பு அடைந்ததற்குக் காரணம் பா.ச.க.வின் சம்மு காசுமீர் உறிமைகள் பறிப்பு ஆணை வெளிவந்ததே.
குறுக்கு வழியில் ஆட்சிக்கட்டிலில் ஏறும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கைவிட வேண்டும். மக்கள் உள்ளத்தில் அமர்ந்தால்தான் ஆட்சியில் அமர முடியும் என்பதை உணர வேண்டும்.
நாம் தமிழர் கட்சி முன்னேற்றத்திற்கான முத்திரையைப் பதிக்கும்  எனக் குறிப்பிட்டவாறு முத்திரையைப் பதித்துள்ளது. வாக்குகளை விலைக்கு வாங்காமல் பெற்ற வாக்குகள் என்ற அளவில் இதுவே வெற்றிக்கு ஒப்பானதுஎனலாம்.
வேலூர் வாக்காளர்கள் முதன்மைக் கட்சிகளுக்கு நம்பிக்கையையும் எச்சரிக்கையையும் ஒரு சேர வழங்கும் வகையில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இதனைப்புரிந்து கொண்டு அனைத்துக் கட்சியினரும் மக்கள் நலனில் மட்டும் கருத்து செலுத்தி. வாக்குகளை விலைபேசும் மனப்போக்கிலிருந்து விலக வேண்டும்.
மக்களுக்கு வெற்றி கிடைக்கும் வகையில் தேர்தல்கள் அமையும் காலம் வரட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்

 22 ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!

இப்பொழுது கணிணியில் தட்டச்சிடும் வழி தெரியாமல் புது வகை எழுத்துச் சிதைவு பரவி வருகிறது. ‘தூ’, ‘நூ’ என்பனவற்றை ஒவ்வொரு எழுத்துருவில் ஒவ்வோர் விசையைப் பயன்படுததித் தட்டச்சிடுமாறு வைத்துள்ளார்கள். எழுத்துரு வடிவம் வெவ்வேறாக இருந்தாலும் விசைகள் குறிக்கும் எழுத்துருக்களில் மாற்றம் இருக்கக் கூடாது. இதற்கு அரசு தக்க வழிகாட்ட வேண்டும்.
தகர, நகரங்களில் ஊகாரங்கள் அச்சிடுவதற்குச் சில எழுத்துரு அமைப்பில் தகர, நகரங்களை மாற்று விசையில் தட்டச்சிட்டால் வரும். சிலவற்றில்  தகர, நகரங்களைத் தட்டச்சிட்ட பின் ஊகாரக் குறியீட்டை – மேல்வரிசையில் ஆங்கில விசைப்பலகையில் பகர அடைப்புக்குறியை-த் தட்டச்சிட்டால் வரும். 
 இதுபோல் கணியச்சிடுவோர் தங்கள் விசைப்பலகையில் தாங்கள் பயன்படுத்தும் எழுத்துருவிற்கான விசைப்பலகை எழுத்தமைப்பை அறிந்து கொண்டு அதற்கேற்பப் பயன்படுத்த வேண்டும்.  ஆனால், எவ்வாறு ‘தூ’, ‘நூ’ முதலியவற்றைத் தட்டச்சிட வேண்டும் எனத் தெரியாமல் முதலில் குறிப்பிட்டவாறு துாரம், துாறல், நுால், நுாறு, என்பனபோல் ‘துா’, ‘நுா’  எனத்  தவறாகவே தட்டச்சிடுகின்றனர்.வேண்டுமென்று இந்தத் தவற்றைச் செய்ய வில்லை. எனினும் சரி செய்வதற்கான போதிய முயற்சியை மேற்கொள்ள வில்லை.
இந்த எழுத்துச்சிதைவு போக்கிற்கு முற்றுப்புள்ளி இடுமாறு இதழ்க்குழுவினரையும் தட்டச்சிடுவோரையும் அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்