சனி, 30 ஏப்ரல், 2016

திருவள்ளுவர் ஏன் ‘வீடுபேறு’ பற்றிப் பாடவில்லை? – கே.கே.பிள்ளை




அட்டை-தமிழக வரலாறும் பண்பாடும்-கே.கே.பிள்ளை : attai_thamizhakavaralarum_panbaadum_k.k.pillai

திருவள்ளுவர் ஏன் வீடுபேறு பற்றிப் பாடவில்லை?

  பழந்தமிழகத்தில் மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டி வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்தெய்தும் என்பது தமிழரின் கொள்கையாக இருந்தது. இக்காரணத்தினாலேயே திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலை மட்டும் பாடினார்; வீட்டைப் பற்றிப் பாடினாரில்லை.
  அவருடைய காலத்திலேயே ஆரியரின் பழக்க வழக்கங்களும், தொன்மங்களும், மெய்யியல்களும் (தத்துவங்களும்) தமிழகத்தில் குடி புகுந்து விட்டன. தருமம், அருத்தம், காமம், மோட்சம் என்னும் ஆரியரின் கோட்பாடுகளைத் திருவள்ளுவர் அறிந்திருப்பார். இருப்பினும் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையே தமிழரின் பண்பாட்டுக்கு உடன்பாடாகக் கொண்டு, மரபு வழுவாது அவர் திருக்குறள் என்னும் அறநூலை இயற்றினார். ‘இல்லற மல்லது நல்லற மன்று’ என்பது பிற்காலத்து எழுந்த கொன்றைவேந்தன் மொழியாகும்.
– வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் கே.கே.பிள்ளை:
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
தரவு:   பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - peyar_name_e.bhu.gnanaprakasan02

எதுகை மோனை தமிழ்மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை! – கி.வா.சகந்நாதன்




அட்டை-மலையருவி :attai_malaiaruvi

எதுகை மோனை தமிழ்மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை!

 நாடோடிப் பாடல்களுக்கென்று சிறப்பான சில இயல்புகள் உண்டு. குறிப்பிட்ட ஒரு பாடலை முதல் முதலில் யாரேனும் ஒருவர் இயற்றியிருக்கத்தான் வேண்டும். அவர் இலக்கியப்புலமை படைக்காவிட்டாலும் மற்ற பாமரர்களைப் போல் இல்லாமல் ஓரளவு சொல்வன்மை உடையவராகவே இருப்பார். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம் உள்ள இயற்கையான ஆற்றலால் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இலங்கையில் மட்டக் களப்பு என்னும் பகுதியில் இன்றும் இவ்வாறு பாடல்கள் முளைக்கின்றன.1 எதுகை, மோனை, ஓசை என்னும் மூன்றும் தெரிந்தவர்கள் பாடல்களைப் பாடிவிடலாம்.
எதுகை மோனை
  எதுகை மோனை என்பவை தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை என்றே சொல்லவேண்டும். “மானங் கெட்டவளே – மரியாதை கெட்டவளே, ஈனங் கெட்டவளே – இடுப் பொடிந்தவளே” என்ற வசவில்கூட எதுகையும் மோனையும் இருக்கின்றன. அடிமுதலில் எதுகை வருவதென்பது தமிழுக்கே அமைந்த தனிச்சிறப்பு. பேச்சு வழக்கில் எத்தனையோ தொடர்கள் எதுகைச் சிறப்புடையனவாகப் புரளுகின்றன. அக்கிலி பிக்கிலி, அக்கம் பக்கம், அசட்டுப் பிசட்டு, அடிதடி, அமட்டல் குமட்டல், ஆசாரம் பாசாரம், ஏழை பாழை, கண்டதுண்டம், காமா சோமா என்பவைபோல உள்ளவற்றைக் காண்க. அப்படியே மோனை நயம் அமைந்த தொடர்களுக்கும் குறைவில்லை. அல் அசல், ஆடி அமாவாசை, கல்யாணம் கார்த்திகை, கொள்வினை கொடுப்பினை, பற்றுப் பாத்திரம், கோயில் குளம், தோப்புத் துரவு முதலியவற்றைக் காண்க. பேச்சு வழக்கில் தண்ணீர் பட்டபாடாக வழங்கும் எதுகை மோனைகள் பழமொழிகளில் சிறப்பாக அமைந்திருப்பது வியப்பன்று. ‘அக்கரைக்கு இக்கரை பச்சை’, ‘அகதியைப் பகுதி கேட்கிறதா?’, ‘அகம் ஏற சுகம் ஏறும்’, ‘ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு’, ‘குட்டையில் ஊறிய மட்டை’ என்பனபோல ஆயிரக்கணக்கான பழமொழிகளில் எதுகை அமைந்திருக்கிறது. அப்படியே, ‘சிங்கத்தின் காட்டைச் சிறுநரி வளைத்தாற்போல’ ‘சூலிக்குச் சுக்குமேல் ஆசை’, ‘தலை ஆட்டித் தம்பிரான்’, ‘தீயில் இட்ட நெய் திரும்புமா?’, ‘பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு’, ‘மனப்பால் குடித்து மாண்டவர் அநேகர்’ என்பன போன்றவற்றில் மோனை நயத்தைக் காணலாம்.
  1. நூலாசிரியர் குறிப்பிடுவது, அவர் காலத்து இலங்கையின் நிலைமையை. மற்றபடி, இன்று அங்கு தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே!
– சிலேடைப் புலி கி.வா.சகந்நாதன்: மலையருவி
கி.வா.சகந்நாதன் :Ki.Vaa.Ja_ki.vaa.sakanathan


தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்




வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்

  சித்திரை  முழுநிலா அன்று இளங்கோஅடிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள
 இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் சமூகச்சேவை அலுவலர் திரு. எசு.எசு. சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
  இந்நிகழ்வில் முன்னாள்  நகரத்துணைத்தலைவரும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான திரு. க. சந்திரகுலசிங்கம், மாவட்டச்சிற்றூர் ஆட்சி அலுவலர் திரு. எம். விசயரட்ணம், மாவட்டக் கலைபண்பாட்டு அலுவலர் திரு. இ.நித்தியானந்தன், நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எசு. சந்திரகுமார் (கண்ணன்) செயலாளர் திரு. மாணிக்கம் செகன், தமிழ்த் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு. சு. காண்டீபன், செயலாளர் திரு. கேசவன், பொருளாளர் திரு. நிகேதன், அமைப்பாளர் திரு. பிரதீபன், கலைமகள் நற்பணிமன்றத் தலைவர் திரு. பா. சிந்துசன, சிவன் கோவில் நிருவாகத்தினர், சிவன் சிறுவர் இல்லச் சிறுவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.
முத்திரை,டிடிஎன் : muthirai_ttn_logo
குறிப்பு : சித்திரை  வெள்ளவா அன்று கண்ணகி சிலைக்கு மாலை அணிவிக்கும் தமிழக அரசு இளங்கோ அடிகள் சிலைக்கும் மாலை அணிவிக்கலாமே!