சனி, 24 மே, 2025

சனாதனம் பிராமணர்களை உயர்த்திச் சொல்வதாகச் சொல்வதைப் பொய் என்னும் பொய்யும் வள்ளலாரை, சனாதனத்தின் உச்ச நட்சத்திரமாகச் சொல்லும் பித்தலாட்டமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      24 May 2025      கரமுதல



(சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை- இரவி; திருவமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூசரிதானா? – தொடர்ச்சி)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (மனு 1. 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே சீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (மனு , 1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (மனு , 1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்ய வராயுமிருக்கிறார்கள் (மனு , 1 : 101).

இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துகளைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (மனு  2:31, 32)

பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது (மனு , 2 : 176-178).

தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு:

பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த் தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த் தண்டனையே உண்டு (மனு , 8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (மனு , 8 : 379).

பிரம்மஃகத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (மனு , 8 : 379).

பிராமணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (மனு , 8 : 281).

பிராமணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பிராமணன் வேலை வாங்கலாம் (மனு , 8 : 412).

இவற்றையெல்லாம் படித்த பின் யாரும் சனாதனம் பிராமணர்களை உயர்த்தவில்லை என்று பொய் மூட்டையை அவிழக்கமாட்டார்கள்.

  • ஆரியர் தோற்றமே பத்தாயிரம் ஆண்டுகள் இல்லை என்னும் பொழுது அவர்களின் சனாதனம் மட்டும்  பத்தாயிரம் ஆண்டுப் பழமையாக எப்படி இருக்க முடியும்? கி.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கீதையில் முதன் முறை சொல்லப்பட்ட சனாதனம் பழமையானது அல்ல என முன்னே கூறியிருக்கிறோம். அப்படியே இருந்தாலும் மனித நேயத்திற்கு எதிரான அதனை எப்படித் தமிழ் நெறியுடன் ஒப்பிட இயலும்?

துணிந்து பொய் கூறுவதே ஆரியவாதிகளின் வழக்கம். எனவேதான், சனாதனவாதிகள் இங்ஙனம் கூறுகிறார்கள். சனாதனவாதிக்கு எதிரான வள்ளலார் இராமலிங்க அடிகளைச் சனாதனவாதியாகச் சித்திரிக்கிறார்கள்.

சாதியும் மதமும் சமயமும் பொய்என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி

என்றும்

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்

என்றும்

சாதி, மத, சமயத்திற்கு எதிரான வள்ளலாரை,

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

என வேண்டிய வள்ளலாரைச் சாதி சமயக் குப்பையில் மூழ்கிய சனாதனத்தின் உச்ச நட்சத்திரமாகக் கூறுவது தண்டனைக்குரிய செயல் அல்லவா? பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையாகத் திரித்துக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

(தொடரும்)

ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(செல்வம் திரட்டச் செல்வோம்! – அன்றே சொன்னார்கள்: தொடர்ச்சி)

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனத் தெய்வப்புலவரின் தமிழ்மறை (குறள் 247) உணர்த்துகிறது. எனினும் பொருளைத் திரட்டுவதில் தகாத முறை எதுவும் பின்பற்றக் கூடாது என்பதுதான் தமிழர் நெறி. தனி மனிதனாயினும்  அரசாயினும் முறைவழியே பொருள் ஈட்டி நல்வகையில் செலவழிக்க வேண்டும் என்று இக்காலத்தில் வலியுறுத்துவதை அன்றே நம்மவர்கள் வலியுறுத்தியமையால் வேறு சில பாடல்களையும் இன்றும் நாளையும் பார்ப்போம்.

       கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
      கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
      ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து
      . . . . . .       . . . . . . .        . . . . . . . .
      செயல் அருஞ் செய்வினை முற்றினம்                   (அகநானூறு 93 : 1-7)

இப்பாடலில், உறவினர்களின் துன்பங்களைப் போக்கி அவர்களைத் தாங்கிடவும் சுற்றத்தார் குறைகளைத் தீர்த்திடவும் உறவினர்  அல்லாதவரும் உறவினர்போல் பழகிடவும் ஆள்வினைக்கு வேண்டிய முயற்சியுடன் சிறந்து பொருள் ஈட்டும் அருஞ் செயலை ஊக்கத்துடனும் விருப்பத்துடனும் முடித்தோம் எனத் தலைவன் தனக்குள் எண்ணுவதாகக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியுள்ளார். 

(கேள்-நெருங்கிய உறவினர்;  கிளைஞர்-தொலைநிலை சுற்றத்தார்;  கேள்அல் கேளிர்- உறவினரல்லாத ஆனால் உறவினர் போல் கருதப்பட வேண்டிய அயலார்; கெழீஇயினர் ஒழுக- நெருங்கிப் பழகுதல்;) 

இப்பாடல் வரிகளைப் படிக்கும் நாம் முழுப்பாடலில் உள்ள வேறு சிறப்புகளையும் அறிதல் நன்று.

இப்பாடலில் 1) (ஆத்திமாலை அணிந்த) சோழனின் அறம் பொருந்திய நல்ல அவையை உடைய உறையூரைப் போன்ற சிறந்த அணிகலன்களைப் பெற்றதாகப் பெருமிதம் கொள்கிறான்.

      ஆரங்கண்ணி அடுபோர்ச் சோழர்
     அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன
     பெறல் அரு நன் கலம் எய்தி                 (அகநானூறு 93 : 4-6)

2) தலைவியின் நெற்றியும் (வேம்பு மாலை அணிந்த பாண்டியனின்) மதுரையில் உள்ள நாளங்காடியைப் போன்ற நறுமணம் மிக்கது எனப் பாராட்டுகிறான்.
     வாடா வேம்பின் வழுதி கூடல்
     நாள் அங்காடி நாறும் நறுநுதல்
     நீள் இருங் கூந்தல்                       (அகநானூறு 93 : 9-11)

3) அச்சம் தரும் யானையையும் பெரிய தேரையும் உடைய சேரனின் செல்வம்  மிகுந்த அகன்ற தலைநகரான கருவூர் என மகிழ்கிறான்.
           கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
          திரு மா வியல் நகர்க் கருவூர்
            (அகநானூறு 93 : 20-21)
அருமையான உவமைகள் மூலமாக மூவேந்தர் சிறப்புகளையும் நம்மால் ஒரே பாடலில் அறிய முடிகிறது.

(இப் பாடலில் வரும் வானளாவிய நகர் பற்றியும் நுரைப்படுக்கை பற்றியும்உள்ள செய்திகளைத் தொடர்புடைய தலைப்பில் பார்ப்போம்)

பாடலின் தொடக்கத்தில், கடமையை முடித்துத் திரும்பும் தலைவன் உழைப்பின் நோக்கத்தைக் கூறுவது மிக உயர்ந்ததல்லவா? இதன் வழியாகப்,  பொருள் ஈட்டுவது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிந்திராத அயலாருக்கும் என்பதே ஒவ்வொரு தமிழனின் அற நெறியாக உள்ளது என்பது நன்கு தெளிவாகிறதல்லவா? 

இன்றும் நாம், உயர்ந்த நோக்கத்துடன் பொருள் ஈட்டினால் உலகம் நம் குரல்களுக்குச் செவிமடுக்கும்! அடிமை விலங்கினை  அறுத்தெறியும்! அக்காலம் விரைவில் வருவதாக!

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3

*** இக் கோப்பில் 6 வது விழா எனக் குறிக்கப்பட்டுள்ளது. எண்ணுடன் சேர்த்துப் படித்தால் ‘ஆறுவது விழா’ என வருகிறது. ஆறுவது சினம் ஆக இருக்கட்டும்; விழாவாக வேண்டா. ஆறாவது விழா என்பதை 6-ஆவது விழா என்றே குறிக்க வேண்டும். ’வது ’ என்னும் சொல் ‘வரன்’ என்பதற்கு எதிர்ச் சொல்லாகும். பெண்ணிற்கு ‘வரன்’ பார்ப்பது போல் பலர் தவறாகப், ‘பையனுக்குப் பெண் பார்ப்பதற்கும்’ ‘வரன்’ பார்க்கிறேன் என்பார்கள்.

‘வது’ என்னும் சொல்லை மறந்ததால்தான் பார்வை மடல்களின் எண்ணிக்கை, ஆண்டு எண்ணிக்கை முதலியன போன்று எண்ணிக்கை வரிசை முறையைக் குறிப்பிடுகையில் எண்ணையும் எழுத்தையும் இணைத்து இவ்வாறு 2- வது ஆண்டு விழா,  3 – வது கூட்டுறவு வார விழா, 10 – வது பொருட்காட்சி, 100 – வது கைத்தறிக் கண்காட்சி

எனத் தவறாகக் குறித்து வருகின்றனர்.

2  ஆவது ஆண்டு விழா

3 ஆவது கூட்டுறவு வார விழா

10 ஆவது பொருட்காட்சி,

100 ஆவது கைத்தறிக் கண்காட்சி,

என -ஆவது என்றே குறிக்க வேண்டும். அல்லது எழுத்திலேயே

இரண்டாவது

மூன்றாவது

பத்தாவது

நூறாவது

என்பன போல் குறிக்க வேண்டும்.

மேலும்

10 ஆவதுத் திட்டம், நாற்பதாவதுக் கண்காட்சி , 50 – ஆவதுச் சந்தை

அறுபதாவதுப் பணி மனை

என வல்லெழுத்து இடையில் சேர்க்கப்படுவதும் தவறாகும்.

10 ஆவது திட்டம்

நாற்பதாவது கண்காட்சி

50 ஆவது சந்தை

அறுபதாவது பணிமனை

என்றே எழுத வேண்டும்.

இவ்வறிவுரையில் களப்பணியாளர்கள் பொதுமக்களை சந்திக்க வேண்டும்

எனக் குறிக்கப் பெற்றுள்ளது

பொது மக்களைச் சந்திக்க வேண்டும் என வர வேண்டும்.

இரண்டாம் வேற்றுமை உருபான  ’ அடுத்து வல்லினம் மிக வேண்டும்.

சான்றாக, ‘முதல்வர் ’ என்பதுடன் 2 ஆம்வேற்றுமை உருபான  ‘ஐ’ சேரும்பொழுது  முதல்வரை என்றாகிறது. முதல்வரை என்னும் சொல்லுக்கு அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்து வல்லெழுத்தாக இருந்தால், அதற்குரிய இன மெய்யெழுத்து தோன்றும்.  க,ச,ட,த,ப,ற, என்னும்வல்லின எழுத்துகளில் ட, ற, ஆகியன சொற்களின் முதலில் வாரா. ஆகவே, க, கா, கி,…என்பனபோல் ‘க’ வரிசை, ‘ச’ வரிசை, ‘த’ வரிசை, ‘ப’ வரிசை ஆகியனதாம் சொல்லின் தொடக்க எழுத்தாக வரும். இவ்வரிசைகளிலும் சில எழுத்துகள் சொற்களின்முதலில் வரா. அவற்றைப் பின்னர்ப் பார்ப்போம். இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து இவ்வல்லின எழுத்துகள் தொடக்கமாக அமைந்தால் உரிய வல்லினத்தின் மெய்யெழுத்து சேர்க்கப்பட வேண்டும்.

அஃதாவது ’க வரிசை வந்தால் ’க்’

ச வரிசை வந்தால்  ’ச்’

த வரிசைவந்தால் ’த்’

ப வரிசை வந்தால் ’ப் ’

எனக் கூடுதலாக மெய்யெழுத்தைச் சேர்த்து  ஒலிக்க வேண்டும்.

சான்றாக, முதல்வரை என்பதற்கு அடுத்துக் ‘கண்டார்’ என வந்தால்,

‘முதல்வரைக் கண்டார்’ எனவும்,

‘சந்தித்தார்’  என்று வந்தால் ‘முதல்வரைச் சந்தித்தார்’  என்றும்

 ‘தொடர்ந்தார்’ என வந்தால் ‘முதல்வரைத் தொடர்ந்தார்’ என்றும் 

‘ பின்பற்றினார்’ என வந்தால் ‘ முதல்வரைப் பின்பற்றினார்’ என்றும் வரும்.

இங்குள்ள கோப்புகளின் அடிப்படையிலும் பொதுவாக நாம் பயன்படுத்தும் தொடர்களின் அடிப்படையிலும் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 22 மே, 2025

மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி -இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? –தொடர்ச்சி)

உழைப்பிலும் உழைப்பிலிருந்து கிடைக்கும் ஊதியத்திலும் பாகுபாடு கற்பித்து இழிவுபடக் கூறும் சனாதனத்தை ஏற்போர் மனித நேயமற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.

பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்” (மனு 8.413) என்கிறது சனாதனம். பிராமணன் உழைக்கமாட்டானாம் . சூத்திரன் என அவனால் சொல்லப்படும் பிரிவினர் உழைக்கும் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வானாம்.

“ஒருவேளை, சூத்திரன் எனப்படுவோன் தான் உழைத்துப் பெற்ற ஊதியத்தைப் பிராமணனுக்குத் தராவிட்டால் என் செய்வது?  “சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அஃது அவனுடைய எசமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றிச் சம்பாதித்தவனுக்குச் சேராது” (மனு 8.416.) என்கிறது சனாதனம். எனவே,  “பிராமணன் சந்தேகமின்றிச் சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்” (மனு 8. 417)  என்கிறது சனாதனம். பிராமணன் இருந்துண்டு உண்பானாம்.   சூத்திரன் எனப்படுவோன் உழைத்துண்டு உண்ணக்கூடாதாம். இதுதான் சனாதனம்.

தான் உழைப்பதிலிருந்து பெறும் ஊதியத்தைக்கூடப் பயன்படுத்த உரிமையில்லை எனப் பிரிவினையையும் தீண்டாமையையும் காட்டும் சனாதனத்தைத்தான்  மெத்த படித்தவர்கள் எனப்படுபவர்களும் உயர்த்திக் கூறுகிறார்கள்.

வெளிப்படையாகச் சனாதனம் கூறும் பாகுபாட்டை இல்லை என்பவர்களை நாம் எந்த வகையில் சேர்ப்பது?

இவ்வாறு மிகுதியான பாகுபடுத்தும், இழிவு படுத்தும் கருத்துகளைப் பார்க்கலாம். மேலும் சிலவற்றையும் பார்ப்போம். பின்வரும் சனாதனக் கருத்துகளைப் படிப்பவர்கள் யாரும் அதில் பாகுபாடு இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார். ‘’நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் ஊரிலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (மனு 4 : 61).

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (மனு 8 : 21)

நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (மனு 8 : 22).

அன்றாடப் பின்பற்றலை மேற்கொள்ளாத பிராமணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது. வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (மனு 8 : 417)

வருணமற்றவர் – நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர்- என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார். தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (மனு 10 : 47 – 49)

இவர்கள் வாழும் இடமாக ‘’இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்’’ (மனு 10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.

‘சண்டாளர்களின்’ இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார். ஊருக்கு வெளியில் சண்டாளனும், சுவபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது. (மனு 10 : 52)

இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும் (மனு 10 : 52).

இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார் மனு. ‘’ பிராமணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு’’ (மனு 10 : 62). என்கிறார்.

(தொடரும்)

நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே! – அன்றே சொன்னார்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்



(பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர், அன்றே சொன்னார்கள்,தொடர்ச்சி)

நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே!

நலம்சார் பொருளியல் (Normative Economics) குறித்து ஆடம் சுமித், ஆல்பிரட்டு மார்சல் முதலானவர் கருத்துகளை முன்னரே தமிழ் இலக்கியங்கள் தெளிவாக்கியுள்ளதை  நாம் பார்த்தோம். இவர்களுக்குப் பின்னர் வந்த அறிஞர்கள் பொருளியல் இயல்புரை அறிவியலா? நெறியுரை அறிவியலா? (Positive Science or Normative Sciene)எனக் கேள்வி கேட்டனர். பொருளியல் ஒரு புறம் உள்ளதை உள்ளவாறு ஒழுங்குபடுத்தப்பட்டு விளக்கும் அறிவியல் என்றனர். மறு புறம் , ஆசிமாகாபுளசு (Asimakopulos) என்னும் அறிஞர்   பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற நெறியுரைக் கோட்பாட்டை வகுக்கும் இயல் என்றார். முன்னது நிகழ்வனவற்றை விளக்கும் என்றால் பின்னது பொருளியலானது நீதி நெறி, ஒழுக்க நெறிக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தும் அறம் சார் கருத்துகளை வலியுறுத்துவது.

செல்வம் என்பது அதன் அளவைப் பொறுத்து அமையாமல் எவ்வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது? எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும் என்பதும் நலம்சார் பொருளியலின் அடிப்படைக் கருத்தாகும்.

தமிழர் நெறி என்பதும் அறவாழ்வு வாழ்வதற்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்பதே. தன் முயற்சியில் நேர்மையாக உழைத்துப் பொருள் ஈட்டிப் பிறர் துன்பம் போக்க அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழர் நெறி. இதனை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருள்செயல் வகை என்றும் நன்றியில் செல்வம் என்றும் இரண்டு அதிகாரங்களைத் திருக்குறளில் வைத்திருப்பதே நலம்சார் பொருளியல் என்று சொல்லலாம்.

வினைத்தூய்மையிலும்கூடத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறுக்கு வழியில் பொருள் ஈட்டக்கூடாது எனத் தனி மனிதனுக்கு அறிவுறுத்துகிறார். பச்சை மண் பாத்திரத்தில் நீரைப் பாதுகாத்தால் பாத்திரமும் அழிந்து அதில் சேமிக்கப்பட்ட நீரும் வீணாகும் என உணர்த்தும் வகையில் அவர்,

 
               சலத்தால் பொருள்செய்துஏ மார்த்தல் பசுமண்

 கலத்துள்நீர் பெய்து இரீஇ யற்று                             (திருக்குறள் 660)

என்கிறார். (சலத்தால் – தீய வழிகளால்; ஏமார்த்தல் – பாதுகாத்தல் )

            நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
            நச்சு மரம்பழுத் தற்று                                                     (திருக்குறள் 1008)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறருக்குப் பயனின்றிப் பிறரால் விரும்பப்படாமல் போகும் செல்வம் ஊர் நடுவே நஞ்சுமரம் பழுத்ததுற்கு ஒப்பாகும் எனக் கூறிச் செல்வத்தின் பகிர்வு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

(நச்சப்படாதவன் – விரும்பப்படாதவன்; நச்சு மரம் – நஞ்சு மரம்; )

இதற்கு எதிரிடையாக உள்ளூரில் பழுக்கும் பயன்மரம் பிறருக்குப் பயன்படுவதுபோல் செல்வம் பிறருக்குப் பயன்படவேண்டும் என்பதை வலியுறுத்த
                  பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
                நயனுடை யான்கண் படின்                                          (திருக்குறள் 216)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மேலும் அவர், ஊருணி ஊரார்க்குப்பயன்படுவதுபோல் செல்வம் உலகோர்க்குப் பயன்பட வேண்டும் என வலியுறுத்தி,
              

       ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்
              பேரறி வாளன் திரு (திருக்குறள் 215)
என்றும்
மருந்து மரம் எல்லா வகையிலும் பிறருக்குப் பயன்படுவதுபோல் பெருந்தகைமை உடையவர் செல்வம் பிறருக்குப் பயன்படும் என விளக்குதற்காக
                 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
                 பெருந்தகை யான்கண் படின்                                        (திருக்குறள் 217)
என்றும் கூறிச் செல்வம் பிறர் பயன்பெற பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அற வழியில் பொருள் ஈட்டி அனைவரும் பயன்பெற பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை அறக்கருத்தாக மட்டும் பார்க்காமல் மேனாட்டார் கூறும்  நெறியுரைப் பொருளியலை அன்றே வெளிப்படுத்தி உள்ள பாங்காகவும் பார்ப்பதுதானே முறை!

புதன், 21 மே, 2025

பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர், அன்றே சொன்னார்கள், இலக்குவனார் திருவள்ளுவன்

      20 May 2025      கரமுதல



(புலம் பெயர் பறவைகள் – அன்றே சொன்னார்கள் – தொடர்ச்சி)

 பொருள் அல்லது செல்வம் என்றாலே அதனால் வரும் தீமைகளை மட்டும் எண்ணி அதனை ஒதுக்க வேண்டும் என்பது போன்றே உலகெங்கும் அறிஞர்களும் ஆன்றோர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். புத்தர் முதலான சமய அறிஞர்களும் அவ்வாறே மக்களிடம் பொருளாசை துன்பம் தரும் எனக் கூறிப் பொருள் தேடலுக்கு எதிரான கருத்தையே பரப்பி வந்தனர். பொருள் அடிப்படையிலான இயல் பொருளறிவியல் அல்லது பொருளியல் (பொருளாதார இயல்) என உருவானதும் அதன் இன்றியமையாமை உணரப்பட்டதும் 18 ஆம் நூற்றாண்டில்தான் எனலாம். ஆதம் சுமித் (Adam Smith: 1723-1790) என்னும் பொருளியல் அறிஞர் முதலில் பொருளியல் இலக்கணத்தை வரையறுத்தவர் ஆவார்; 1776 ஆம் ஆண்டு நாடுகளின் செல்வமும் அதன் இயல்பும் காரணங்களும் (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம் ) என்னும் நூலை வெளியிட்டுப் பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என அறிவித்தார்.


இதற்கு முன்னர் அறிஞர்கள் கார்லைல், இரசுகின் முதலானோர், பொருளியலை மகிழ்வற்ற அறிவியல் என்றும் இருண்டஅறிவியல் என்றும் கூறியதற்கு மாறாக அமைந்தது இவரது விளக்கம்.

அடுத்த நூற்றாண்டில் வந்த பொருளியல் அறிஞரான ஆல்பிரட்டு மார்சல் (Alfred Marshal: 1842-1924) பொருளியலை நல இலக்கண அடிப்படையில் (Welfare Economics) வரையறுத்தார். 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட பொருளியல் கோட்பாடுகள் என்னும நூலில் இதனை அவர் தெளிவுபடுத்தினார். பொருளியல் ஒரு புறம் செல்வததையும் மற்றொரு புறம்  அதனை விட முதன்மையாக மனிதனையும் ஆராயும் இயல் என விளக்கினார்.


அறிஞர் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள், எனத் தொல்காப்பியத்தை வகுத்ததும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறளை அளித்ததும் பொருளை மக்களுக்கான பயன் அடிப்படையில் நோக்கியதே ஆகும். எனவே, இவர்களின் இலக்கியங்கள் வாழ்வியல் இலக்கியங்களாக ஒளிர்கின்றன.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருளின் இன்றியமையாமையை விளக்குவதற்குப்,


பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்                                       (திருக்குறள் 751)
என்கிறார். மேலும்,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்                                                (திருக்குறள் 754)

எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொருள் முறையாயும் தீயவழியில் அல்லாமலும்  வரவேண்டிய வழியை விளக்குகையிலே மேனாட்டாரின்  நலம்சார் பொருளிலக்கணத்தை அன்றே நம்மவர்கள் அறிந்து தெளிந்திருந்தனர் எனலாம்.


19 ஆம் நூற்றாண்டில் பொருளியல் பற்றிப் பிற நாட்டார் எண்ணி ஆராய்ந்திருக்கையில் பழந்தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதனைப் பற்றிச் சிந்தித்து உள்ளனர் என்பது மட்டுமல்ல, இன்றைய சிந்தனையின் வெளிப்பாடு அன்றே அவர்களிடம் இருந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.  இலக்கியங்களில் இவை இடம் பெற்றுள்ளமையாலேயே இவற்றை நாம் இலக்கியக் கற்பனைகள் என்று ஒதுக்குவது தவறு. மாறாக இலக்கிய நூல்களிலேயே அறிவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன எனில், துறை நூல்களில் மிகுதியான அறிவியல் செய்திகள் இடம் பெற்றிருக்க வேண்டுமே என எண்ண வேண்டும்.


இன்றைக்குப் பொருளுக்கு அல்லாடும் நாம் அன்றைக்குப் பொருள்  திரட்டலில் சிறந்திருந்ததன் காரணம் பொருள் பற்றிய தெளிவான எண்ணமும் முயற்சியும் இருந்தமைதான். எனவே, தொடர்ந்து வேறு சில பாடல்களையும் அடுத்தடுத்துக் காணலாம்.-         இலக்குவனார் திருவள்ளுவன்