மும்பை, ஜூலை 16: மும்பையில் பாந்த்ரா-வொர்லி இடையிலான கடல்வழி இணைப்புச் சாலைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை வைப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி இறந்ததற்குப் பின்னர் சுமார் 330 அமைப்புகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ் மானே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார். ராஜீவ் காந்தி மும்பையில் பிறந்தவர் என்பதால், மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் அவரது பெயர் கடல்வழிச் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளது கேலிக்குரியதாக உள்ளது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ராஜீவ் நினைவு இல்லம் அமைப்பதற்கு ரூ.21 கோடியும் அரசு செலவழித்துள்ளது. இந்நிலையில் அம்பேத்கருக்கும் கான்சிராமுக்கும் சிலை அமைப்பதற்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர், கான்சிராம் மற்றும் கெüதம புத்தர் ஆகியோருக்கு மகாராஷ்டிரத்தில் நினைவு இல்லங்கள் அமைக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வீர் சிங் தெரிவித்தார்.
கருத்துக்கள்
சரியான கோரிக்கை. உரியவர்கள் செவிமடுக்க வேண்டும். இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/17/2009 4:32:00 AM
7/17/2009 4:32:00 AM