அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், ""இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது'' என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.
25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர்.
அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7.1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸôரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.
சி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். ""இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது'' என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.
நீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.
ஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.
வெலிக்கடையிலிருந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. (வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.
இக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.
ஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.
27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.
இரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.
27.7.1983 அன்று மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.
ஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.
சுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.
முதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.
சிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வைகளைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல்மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.
மத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. ""நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது'' என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.
டாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் ""நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை? எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்?'' என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.
இடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.
இக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.
தாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் ""கொட்டியாவ மறண்ட ஓன'' ""கொட்டியாவ மறண்ட ஓன'' (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொல்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் படை ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.
மாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி நடத்தினார்.
நாளை: திட்டமிட்டு நிறைவேற்றிய சதி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக