வெள்ளி, 3 ஏப்ரல், 2020

தமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி


தமிழ்ச்சரம்.காம் – வலைப்பதிவர்களுக்கான

சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி

தமிழ் வலைத்தள எழுத்துகளை ஒருங்கிணைத்து எழுதுபவர்களையும், வாசிப்பவர்களையும் ஊக்குவிப்பதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) இந்தக் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது.
இந்தச் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கு இரண்டு பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவு-1 : (உறவுகள் – என் பார்வையில்)
தாய், தந்தை என்ற உறவில் தொடங்கி பின் மகன், மகள், தம்பி, தங்கை, காதலன், காதலி, அத்தை, மாமன்…. என நீளும் பல உறவுகளின் சங்கமமே மனித வாழ்வு.  ஆனால், இன்றைய குமுகாயச் சூழலில் உறவுகளுக்கிடேயே எதிர்பார்ப்புகள் மாறி நாளுக்கு நாள்  உறவு  சிக்கலாகிக் கொண்டே இருக்கின்றது.
இந்த உறவுகளில்,  நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றிரண்டு உறவு குறித்தும், உங்கள் பார்வையில் அந்த உறவுகளைப் பேணி, மேம்பட செய்ய வேண்டியது குறித்தும் “உறவுகள் – என் பார்வையில்” என்ற தலைப்பில் எழுதுங்களேன்.
பிரிவு-2 : (அன்றாட வாழ்வில் நகைச்சுவை)
‘நகைச்சுவை’ தமிழர் வாழ்வில் இழையோடிய ஒரு பண்பு என யாராவது சொன்னால் அதை நாம் கொஞ்சம் மாற்றுக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது. 
ஏனேன்றால், இங்கே பட்டி மன்றங்கள், திரைப்படங்கள், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைத் தாண்டி அன்றாட வாழ்வில் ஒரு வேடிக்கையான தருணம், முரண்பாடு, சிறு குழப்பம் போன்றவை கண்ணுக்குப்பட்டால் அதில் உள்ள நகைச்சுவை பெரும்பாலும் சுவைக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
இது பற்றிய உங்கள் பார்வையை “அன்றாட வாழ்வில் நகைச்சுவை” எனும் தலைப்பில் (கொஞ்சம் நகைச்சுவையாகவே) எழுதுங்களேன்.
பரிசு விவரங்கள்:
முதல் பரிசு உரூ. 3,500
இரண்டாம் பரிசு உரூ. 2,500
மூன்றாம் பரிசு உரூ. 1,000

விதிமுறைகள்:
இந்தக் கட்டுரைகளைப் போட்டியாளர்கள் தங்களுடைய (blogspot, wordpress  போன்ற) வலைப்பூ (blog) அல்லது இணையத்தளங்களில் எழுதி வெளியிடவேண்டும்.
அந்தப் பதிவில்   #tccontest2020 என்ற குறிச்சொல்(tag) சேர்த்திருக்க வேண்டும்.
அந்தத் தளங்கள் தமிழ்ச்சரத்துடன் முறையாக இணைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டியது இன்றியமையாதது..
முறையாகத் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்ட தளங்களில் இருந்து உங்கள் படைப்புகளை எழுதி வெளியிடவேண்டிய நாள் பங்குனி 19, 2051- சித்திரை 01, 2051 / 01-ஏப்பிரல்-2020 முதல் 14-ஏப்பிரல்-2020 வரை (இந்திய நேரம்).
அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் ஒருவர் மேலே சொன்ன ஒரு பிரிவில் மட்டுமே எழுத இசைவளிக்கப்படுவார்.
வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய அறிவிப்பு மே முதல் வாரம் அறிவிக்கப்படும்.
மேலே சொன்ன உள்ளடக்கத்துடன் இல்லாத படைப்புகள் ஏற்கப்படா.
படைப்புகள் குறைந்தது 1000 சொற்களாவது இருக்கவேண்டும்.
இந்தப் படைப்புகள் இதற்கு முன் மற்ற இதழ்கள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் வெளியிடப்படவில்லை என்பதைப் படைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

வியாழன், 2 ஏப்ரல், 2020

பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்


பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு

திட்டமிட்ட பொழுதுபோக்கும் ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துவனவாகும். 
உழைப்போர்க்கு ஓய்வு இன்றியமையாதது.  ஓய்வு, ஒன்றும் செய்யாது மடிந்திருப்பதனால் மிகு பயன் தாராது.  எப்படியாவது பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக எதிலும் ஈடுபடுதலும் நற்பொழுதுபோக்கு ஆகாது. பொழுதுபோக்கால் உள்ளத்திற்கு இன்பம், உடலுக்குப் பயிற்சி ஏற்பட்டு மீண்டும் தம் கடமையிலீடுபடப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் பெறுதல் வேண்டும். தாமே தனியாகப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதினும் பிறருடன் கூடிப்பொழுதுபோக்கலே நற்பயன் தருவதாகும்.
சங்கக்காலத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை ஆடவரும் பெண்டிரும் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கில் இன்பம் கண்டுள்ளனர்.  விளையாட்டும், ஆடலும் பாடலும், இன்ப உரையாட்டும் எல்லாருடைய உள்ளங்களையும் கவர்ந்துள்ளன.
பூங்காக்களுக்குச் சென்றும், நகரைவிட்டு வெளியிடங்களை அடைந்தும் அன்றும் பொழுது போக்கியுள்ளனர். கடற்கரையில் அலவனாட்டுதல், வண்டல் விளையாடுதல், பாவையை வைத்துக்கொண்டு விளையாடுதல், விளையாட்டுக் குதிரை, தேர் முதலியவற்றை இழுத்து விளையாடல், ஒருவரோடு ஒருவர் கைகோத்து ஆடல், பந்தாடல், நீர்நிலைகளிற் சென்று முழுகி விளையாடல், கிளி வளர்த்தல், திருவிழாக்களுக்குச் செல்லல், ஆடவர் பெண்டிர் இருசாரார்க்கும் உரிய அக்காலப் பொழுது போக்குகளாகும்.
            ஆடவர் மற்போர் புரிதலையும் கோழிப் போர், யானைப் போர் காண்டலையும், வேட்டையாடுதலையும் தமக்குரியனவாகக் கொண்டுள்ளனர். ஆடவரில் முதுமையுற்றோர் ஓரிடத்தில் அமர்ந்து வல்லாட்டம் (சூதாட்டம்) ஆடிப் பொழுதுபோக்கியுள்ளனர்.  சூதாடுவதற்கெனத் தனி அகங்கள் இருந்துள்ளன (புறம்-52).  வல்லாட்டத்திற்குரிய பலகை, காய் முதலியனபற்றித் தொல்காப்பியத்தில கூறப்படுவதனால் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் வல்லாட்டம் பொழுதுபோக்காக அமைந்துள்ளது என்று அறியலாம்.
கெடவரல், பண்ணை, ஓரை முதலியன விளையாட்டின் பெயர்களாகும்.
‘ஓரை ’ என்பது மகளிர்க்குரிய விளையாட்டு என்பதும் அதில் ஆடவரும் சேர்ந்து விளையாடுவர் என்பதும் “ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்” (நற்றிணை-155) என்பதிலிருந்து அறியக் கிடக்கின்றது.
ஊஞ்சல் ஆடுதல் மகளிர்க்கே உரிய விளையாட்டு,  ‘தெற்றி’ என்பதும் மகளிர்க்கே உரிய விளையாட்டாகும் (புறம்-53).  அது இன்ன விளையாட்டு என அறிய முடியவில்லை.  “கழங்கு ஆடுதல்” என்பதும் (அகம்-334) மகளிர்க்குரிய ஒன்றாகும்.
கடற்கரையில் நண்டுகள் ஓடி ஓடி மறைதலைக் காண்பது வியத்தகு காட்சியாகும்.  அதனைக் கண்டு பொழுதுபோக்கலைச் சிறு விளையாடலாகக் கருதினர் என்பது “செம்பேர் ஈரளை அலவற் பார்க்கும் சிறு விளை யாடல்” (நற்றிணை-123) என்று கூறுவதனால் அறியலாம்.
காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் எவ்வாறு பொழுது போக்கில் ஈடுபட்டு மகிழ்ந்தனர் என்பது பட்டினப்பாலையில் கற்போர் உள்ளம் கவருமாறு கவினுறக் கூறப்பட்டுள்ளது ( வரிகள் 62-117)
தொழிலாளர்கள் கடற்கரைக்குச் சென்று கடல் இறா மீனைச் சுட்டுத் தின்பர்; வயலாமையைப் புழுக்கி உண்பர்; அடும்பு மலரையும் ஆம்பல் மலரையும் அழகுறச் சூடிக் கொள்வர்.  ஆடவர்கள் பலர் கூடிக் கையாலும் கருவிகளாலும் போர் செய்வர்.  ஒருவரை ஒருவர் சுற்றிச் சுற்றிப் பொருது கொள்வது நாள்மீன்கள் (நட்சத்திரங்கள்) கோள்மீனைச் (கிரகம்) சுற்றிவருவது போல் இருக்கும்.  கவண் வீசுவர்; ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை, கவுதாரிச் சண்டை முதலியன கண்டு களிப்பர்; பெண்கள் சுறாமீன் கோடு நட்டு வணங்கி வாழ்த்துவர்.  பரதவர் உவா நாளில் மீன்வேட்டைக்குச் செல்லாது வீட்டிலிருந்து பெண்களுடன் உண்டு ஆடி மகிழ்வர்;  கடலில் குளிப்பர்; பின்னர் நன்னீர்க் குளத்தில் முழுகி மகிழ்வர்; அலவனாட்டியும், அலைகளில் நடந்தும் பதுமைகளைப் புனைந்தும் ஐம்பொறிகளால் நுகரும் பொருள்களை நுகர்ந்து மயங்குவர்; பகலில் இவ்வாறு விளையாடிய பின்னர்க் காதலனும் காதலியும் பட்டாடையை நீக்கிப் பருத்தியாடையை அணிவர்; மட்டு நீக்கி மது மகிழ்வர்.  மைந்தர் கண்ணியை மகளிர் சூடுவர்; மகளிர் கோதையை மைந்தர் மலைவர்; பாடலோர்ப்பர்; நாடகம் நயப்பர்.  வெண்ணிலாவில் வீற்றிருந்து மகிழ்வர்.  பின்னர் அங்குள்ள மணல்மேடுகளில் துயின்று இரவைக் கழிப்பர்.
இவ்வாறெல்லாம் அக்கால மக்கள் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர்.
எளிய மக்களும் இனிய முறையில் பொழுது போக்கினர் என்பதைப் பின்வரும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம்.
“நெல்லரியும் இருந்தொழுவர்
 செஞ்ஞாயிற்று வெயில்முனையின்
 தெண்கடல்திரை மிசைப்பாயுந்து
 திண்திமில் வன்பரதவர்
 வெப்புடைய மட்டுண்டு
 தண்குரவைச் சீர்தூங்குந்து
 தூவற் கலித்த தேம்பாய் புன்னை
 மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
 எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
 வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
 முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்
 இரும்பனையின் குரும்பைநீரும்
 பூங்கரும்பின் தீம்சாறும்
 ஓங்குமணல் குவவுத்தாழைத்
 தீநீரோடு உடன் விராஅய்
 முந்நீருண்டு முந்நீர்ப் பாயுந்”     (புறம்-24)
கடலில் குளித்தலும் கள்ளுண்டலும் குரவையாடலும் மாலைகளைச் சூடி விளையாடலும், மகளிருடன் நடனமாடுதலும் மூன்று வகை நீரும் கலந்த கலவை நீரையுண்டு மகிழ்ந்து கடலில் பாய்ந்து விளையாடலும் இன்றைய மேனாட்டார் பொழுதுபோக்கோடு ஒத்திருக்கின்றனவன்றோ?
மற்போர்பற்றி ஆமூர் மல்லனைச் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி வென்ற நிலை வண்ணிக்கப்பட்டுள்ளது.  அக்கால மற்போர் இக்கால மற்போர் போலவே நடந்துள்ளது.  சாத்தந்தையார் எனும் புலவர் அம்மற்போரை நேரிற் கண்டு பின்வருமாறு கூறியுள்ளார்:
“இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
 மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
 ஒருகால் மார்பு ஒதுங்கின்றே; ஒருகால்
 வருதார் தாங்கிப் பின்ஓதுங் கின்றே;
 நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப்
 பொரல்அருந் தித்தன் காண்கதில் அம்ம
 பசித்துப்பணை முயலும் யானை போல
 இருதலை ஓசிய எற்றிக்
 களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே” (புறம்-80)
மற்போரைக் கண்டவர் ஆர்ப்பரவம் ஏழ்கடல் ஒலியினும் மிகுதியாய் இருந்தது என்று அப் புலவரே  கூறியுள்ளமையால் (புறம்-81) மற்போரைக் கண்டு போதுபோக்கியோர் கூட்டம் இக்காலம் நடைபெறும் மற்போர், விளையாட்டுப் பந்தயங்கள் முதலியவற்றைக் கண்டு களித்துப் பொழுதுபோக்கும் பெருங்கூட்டத்தைப் போன்று இருந்திருக்கும் என்று உய்த்துணரலாம்.
மற்போரைக் கண்டு மகிழ்ந்தது போன்றே யானைப் போரைக் கண்டும் மகிழ்ந்தனர் என்பது,
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால்  தன்கைத்துஒன்று
 உண்டாகச் செய்வான் வினை”  (குறள்-758)
எனும் திருக்குறளால் தெளியலாம்.
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
 வல்லா ராயினும் புறம்மறைத்துச் சென்றோரைச்
 சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
 நல்லிதின் இயக்கும்அவன் சுற்றத் தொழுக்கமும்”
என்னும் மலைபடுகடாம் அடிகளால் (77-80) இயற்றமிழும்,
குழலினிது யாழினிது என்ப” எனும் திருக்குறளால் இசையும்,
கூத்தாட் டவைக்குழாத் தற்றே” எனும் திருக்குறளால் நாடகமும், அக்கால மக்களின் பெரும் பொழுதுபோக்காய் அமைந்திருந்தன என்று அறிய இயலும்.  பாடும் புலவரும் பாணரும் ஆடும் விறலியும் பொருநரும் அக்காலத்து நன்கு மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டனர் என்பதனாலும் இவை மக்களுக்குப் பயன் விளைக்கும் பொழுதுபோக்காய் அமைந்திருந்தன என்றும் தெரியலாம்.  சங்கக்காலத் தமிழ்மக்கள் பொழுதுபோக்கு முறையிலும் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர் என்பதில் ஐயமின்று.
– தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
தினச்செய்தி 02.04.2020

குவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்

அகரமுதல

பங்குனி 23, 2051 / ஞாயிறு / 05.04.2020

மாலை 6.30 மணி

‘தமிழ் இனி’ குறும்படம் பற்றிய

இணைய வழி அளவளாவல்


திங்கள், 30 மார்ச், 2020

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருவள்ளுவர் வரையறுத்த

வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4

– 
 5.2.0.வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும்.?
      காரணங்கள் — தொகுப்பு
1.உலக வாழ்வின் இன்பத்தை இல்லாது ஆக்கும்
2.நாளும் தொடர்ந்து வரும் வறுமை, அறிவாற்றலை அழிக்கும்
3.வழிப்பறியைச் செய்விக்கும்
4.வறுமை பாவங்களைச் செய்யும்; செய்விக்கும்; இந்தப் பிறப்பு,, மறுபிறப்பு என்றெல்லாம் பாராது; எப்பொழுது வேண்டுமானாலும் வந்தடையும்; துன்புறுத்தும்.
5.வறுமைத் துயர், பழங்குடியின் பெருமையையும் உடல் 
அழகைம் மொத்தமாகக் கெடுக்கும்.
6.உயர்குடிப் பிறந்தார் ஆயினும் இழிவுச் சொற்களைச் சொல்லும் படியான  தாழ்வினை உண்டாக்கும். 
7.வறுமைச் சூழல் பல துயரங்களைக் கொண்டுவந்து சேர்க்கும்.   
8.நன்கு உணர்ந்து சொன்னாலும் வறியவரது நற்கருத்திற்கு மதிப்பு இராது.
9.அறம் சாராத வறுமை அடைந்த தனது மகன் பெற்ற தாயாலும் அயலானாகப் பார்க்கப்படுவான்.  
10.”நேற்று கொன்றது போன்று வந்த துன்பம் இன்றும் வந்துவிடுமோ” என்னும் துன்ப எண்ணத்தைத் தரும் 
6.0.0.வான்மழை வழங்கும் வறுமை — குறள்கள் 4
            பொருட் செல்வம் பெருகவும் வறுமை அருகவும் வான் மழையும் இன்றியமையாதது. வான் மழையாலும் வறுமை வரும் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்; அதைப் பருவத்தே பெய்விக்கும் வழிமுறைகளைச் சிந்திக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே, வான் மழை தரும் வறுமைபற்றி வான் சிறப்பு அதிகாரத் தில் [2] 4 குறள்களில் பதிவு செய்துள்ளார் குறளாசான்.   
6.1.0.அக்குறள்கள்:
            13, 14, 15,19.
6.2.0.வான்மழை வழங்கும் வறுமை — தொகுப்பு
1.வான் மழையை வழங்காவிடின், பசிக் கொடுமை வயிற்றுக்குள் வந்து கடுமையான துயரைக் கொடுக்கும்
2.பொய்க்கும் மழை, உழவுத் தொழிலைத் தடுக்கும்; வறுமையைக் கொடுக்கும் 
3.பொய்க்கும் மழை, உழவுத் தொழிலைக் கெடுக்கும்; வறுமையைக் வழங்கும் எல்லாத் துன்பங்களையும் தரும் 
4.வானம் விரும்பும் மழையை வழங்காவிடின், வறுமையை  ஒழிக் கும் தானம் நடவாது; மேன்மேலும் வறுமையே கூடும்
7.0.0.வறுமையின் விதைகள் — குறள்கள் 16
            வறுமையை விதைக்கும் விதைகளாகத் திருவள்ளுவர்  16 குறள்களில் விதைத்துள்ளார். அவற்றைத் தங்கள் வாழ்வில் விதைத்துக் கொண்டவர்கள், அறுவடை செய்யவன எல்லாம் தீராத் துன்பங்கள், அகலா இழப்புகள், மாறாக் கேடுகள் போன்ற வைகள்தான். அவற்றை உணர்ந்து, அந்த நச்சு விதைகளை யாரும் தங்கள் விதைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் திருவள்ளுவரின் இதய வேட்கை. அவரது இதய வேட்கையை அனை வரும் நிறைவேற்றி, வறுமையின் வேரினை அறுப்போம்; வள வாழ்வு பெறுவோம். அந்த நச்சு விதைகள் கீழே விதைக்கப்பட் டுள்ளன.
7.1.0.அக்குறள்கள்:
            135, 166, 167, 177, 178, 179, 616. 617, 626 909,       
      911, 913, 920,925, 932, 933.  
7.2.0.வறுமையின் விதைகள் [காரணங்கள்] தொகுப்பு
 1.பொறாமையை உடைமையாகக் கொள்ளல்
2.ஒருவர் மற்றவர்களுக்கு வேண்டிய ஒன்றைக் கொடுக்கும் போது பொறாமையால், அதைத் தடுத்தல்
3.பொறாமை
4.பிறர் பொருளைக் கைப்பற்றுதல் 
5.பிறர் கைப்பொருள்களைக் கைப்பற்றுதல்
6.அறத்தை அறியாமையும் பிறர் பொருளைக் கைப்பற்றக் கருதும்
   அறிவும்
7.செல்வம் சேர்க்கும் முயற்சி இல்லாமை
8.வறுமையை ஒழிக்க முயலாமல் சோம்பிக் கிடத்தல்
9.பெற்ற செல்வத்தைப் பேணிக் காவாமை
10.மிகுகாமத்தால் மனைவிக்கு அடிமை ஆதல்
11.பொருள் விழையும் வரைவின் மகளிர் நாட்டம்
12.பொருள் பறிக்கும் வரைவின் மகளிர் தொடர்பு
13.கள் உண்ணல்
14.தந்நிலை அறியாத  கள் குடி
15.சூதாடி என்னும் ஒரு பெயரைமட்டும் தந்து, நூறு மடங்கு   பொருளை இழக்கச் செய்யும் சூதாட்டம் 
16.சூதில் விடாது தொகை கட்டி ஆடும் ஆட்டம்
8.0.0.பொருட் செல்வம் ஈட்டல் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10
வறுமை ஒழிப்பு முயற்சியில் ஈதல் ஒப்புரவு ஆற்றுதல்  வேண்டுநர்களுக்கு உதவுதல் போன்ற அறமுறைச் செயல்களுக்கு பொருள் இன்றியமையாதது. சீரழிக்கும் வறுமையின் வேரறுக்கப் பொருள்  மிக மிகத் தேவை.
அத்தகு சமுதாயக் கடைமைகளைச் சிறப்புறச் செய்தற்குப் பொருள் செழிப்பு மிக மிகத் தேவை. அந்தச் செல்வத்தின் சிறப்புகளை எல்லாம் சொல்லி, அதனைச் சேர்க்க வேண்டியதன் தேவையையும் சொல்லியிருக்கின்றார் திருவள்ளுவர்.
8.1.0.அக்குறள்கள்:
             120, 328, 496, 512, 616, 754, 756, 759, 760,,870.
8.2.0.பொருட் செல்வம் ஈட்டல் அளவில்  வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு
1.அறம் பிறழாது வணிகம் செய்து பொருள் வளம் திரட்டல்
2.நல்வழியில் வரும் செல்வம்தான் பெருமை தரும் என உணர்ந்து பொருள் ஈட்டல்
3.வருவாய் வருவழிகளைப் பெருக்கிப் பொருள் வளம் பெருக்கல்  
4.கடல் கடந்தும் சென்று பொருள் திரட்டுதல்
5.இடைவிடாத முயற்சியால் பொருளை ஆக்குதல் 
6.பொருள் ஈட்டும் அறமுறை அறிந்து, தீது இல்லா வழியில் பொருளைச் செய்தல்  
  1. கைப்பொருள்கொண்டு பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுப் பொருள் ஈட்டல்
  2. அனைத்து அறமுறைச் செயல்களுக்கும் பொருள் மிக மிகத் தேவை என்பதால், பொருள் ஈட்டல்
9.புகழ் தருவழியில் பொருள் திரட்டுதல்
10.சிறிது அளவும் பொருள் இல்லாரைப் புகழ் பொருந்தாது என்பது உணர்ந்து புகழ் வழியில் பொருள் சேர்த்தல்

                பேராசிரியர் வெ.அரங்கராசன்
 முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்
 கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவிற்பட்டி — 628 502