சென்னை, ஜூலை 15: மத்திய அரசின் அங்கன்வாடி பணியை ஆகஸ்ட் மாதம் முதல் செய்யப் போவதில்லை என்றும், ஆனால் மாநில அரசின் சத்துணவுப் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவர் கே.தமிழரசி தெரிவித்தார்.அங்கன்வாடி ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி புதன்கிழமை, அண்ணா சாலை பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு போலீஸôர் அனுமதி மறுத்தனர்.இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 280 பஸ்களில் வந்திருந்த ஆயிரக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் அண்ணா சாலை பெரியார் சிலை பகுதியில் திரண்டனர். அவர்களிடம் போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகும்படி கூறினர்.ஆனால் அவர்கள் கோட்டை நோக்கி ஊர்வலம் செல்வதில் முனைப்புடன் இருந்தனர். காலை 10 மணி முதல் 12 மணி வரை இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.இதைத்தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்களை போலீஸôர் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு சென்றனர்.அங்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தலைவர் கே.தமிழரசி கூறியது:நாங்கள் மத்திய அரசின் அங்கன்வாடி மற்றும் மாநில அரசின் சத்துணவு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி மத்திய அரசுப் பணி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்றும், மாநில அரசுப் பணி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஈடுபட வேண்டும் என்று அரசாணை உள்ளது.இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தின் போது எங்களை பகுதி நேர ஊழியர்கள் என்று அறிவித்துள்ளார். ஏற்கெனவே உள்ள அரசாணையின்படி மத்திய அரசின் அங்கன்வாடி, மாநில அரசின் சத்துணவு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது முதல்வர் அறிவித்துள்ள கருத்து, அங்கன்வாடி ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது.ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் எங்கள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், முதல்வர் பேரவையில் கூறிய வார்த்தையை வாய்மொழி உத்தரவாக எடுத்துக்கொண்டு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சத்துணவுப் பணியை மட்டும் செய்வது என்று முடிவு எடுத்துள்ளோம்.அங்கன்வாடி பணிக்கு மத்திய அரசு வழங்கும் ஊதியத்தை தமிழக அரசு வழங்கினால் மட்டுமே அப் பணியை மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் (அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1,500, உதவியாளர்களுக்கு ரூ.750) என்றார் அவர்.
கருத்துக்கள்
பகுதி நேர ஊழியர்கள் என்று சொல்லி விட்டுக் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேலைவாங்குவது சரியல்லவே! செலவுகளில் சிக்கனங்களை மேற்கொண்டாலும் ஒப்பந்தப் புள்ளிகளை நேர்மையான முறையில் செயல்படுத்தினாலுமே அரசிற்குப் பல்லாயிரம் கோடி உரூபாய் ஆதாயம் கிட்டும். அமைச்சர்கள், துணை முதல்வர், முதல்வர் பங்கு கொள்ளும் கூட்டங்களுக்குச் செயற்கையாகக் கூட்டத்தைத் திரட்டுவதைக் கைவிட்டால் அதிலும் பல கோடிகளைச் சேமிக்கலாம். இத்தகைய விழாக்களுக்குத் தரப்படும் விளம்பரங்களை மட்டுப்படுத்தினால் அதிலும் பல கோடிகளைச் சேமிக்கலாம். இவ்வாறான சேமிப்புகளில் கருத்து செலுத்தி உழைப்பவர் வயிற்றில் அடிக்கும் தற்போதைய நிலையை மாற்றுவதன் மூலம் சத்துணவுப் பணியாளர்கள் முதலானவர்கள் கோரிக்கையை நிறைவேற்றலாம். அரசு தாய்மை உள்ளத்துடன் செயல்படுவதாக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/16/2009 6:54:00 AM
7/16/2009 6:54:00 AM