சனி, 16 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!


நவம்பர் புரட்சி நாள் வாழ்த்து! சென்ற ஆண்டு இதே நவம்பர் புரட்சி நாளில்தான் தாழி மடல் எழுதத் தொடங்கினேன். இன்றும் அதே ஊக்கத்துடன் எழுத விரும்புகிறேன். உடல்நிலைதான் நலிந்துள்ளது. பெரிதாக ஒன்றுமில்லை. கண்வலிதான், ஆனால் காலையில் வந்து மாலையில் போவதாக இல்லை. மூன்று நாளாக வதைக்கிறது. இந்தக் கண்வலிக்கு ‘சென்னைக் கண் (மெட்ராசு-ஐ)’ என்ற பெயர் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயரை வைத்து நடந்த ஒரு கூத்தை உங்களுக்குச் சொல்கிறேன். –
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


சென்னை – ‘ஐ’ வந்தாலும் வரலாம்,
காங்கிரசு- ‘ஐ’ வந்து விடக் கூடாது!

1979ஆம் ஆண்டு இறுதிப் பகுதியாக இருக்க வேண்டும். கோவை மத்தியச் சிறையின் 10ஆம் தொகுதியில் வள்ளுவன், கோபால், குமார், தமிழரசன், கந்தசாமி, கிருட்டிணசாமி, பஞ்சலிங்கம் ஆகியோருடன் நானும் அடைக்கப்பட்டிருந்தேன். மொத்தம் 9 அல்லது 10 பேர்! ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக் கொட்டடி. முதல் மூன்று கொட்டடிகளில் வள்ளுவன், கோபால், நான்! மாலை அடைப்பு முடிந்த பின் அன்றைய செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்! அவரவர் கொட்டடியில் இருந்த படி பேசுவதால் உரத்த குரலில் பேச வேண்டியிருக்கும்.

அப்போதெல்லாம் அண்ணா என்ற பெயரில் ஒரு நாளேடு வந்து கொண்டிருந்தது. அதிமுக ஆட்சிக் காலம் என்பதால் அரசு செலவில் சிறைக் கைதிகள் படிப்பதற்கு வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நாளேட்டில் திரு காளிமுத்து “குன்றத்து விளக்கு” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அவர் எழுதுவதை நாங்கள் நாள்தோறும் படித்துச் சுவைத்துப் பேசிக் கொண்டிருப்போம். குறிப்பாக இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு-ஐ பற்றிய அவரது எள்ளல் சிறப்பாக இருக்கும்.

குறிப்பிட்ட நாளில் காளிமுத்து தன் கட்டுரைக்குத் தந்திருந்த தலைப்பு: மெட்ராசு-ஐ வந்தாலும் வரலாம், காங்கிரசு-ஐ வந்து விடக் கூடாது!

கட்டுரையை மூவரும் படித்து முடித்த பின் கோபால், “தோழர் தியாகு, எப்படி எழுதியிருக்கிறார் காளிமுத்து?” என்று கேட்டார்! நான்: “நன்றாகத்தான் எழுதியுள்ளார்! வள்ளுவன், நீங்கள் படிச்சுட்டீங்களா?”

வள்ளுவன் சொன்னார்: “நடையும் கூட நல்லாத்தான் இருக்கு!”

நாங்கள் உரக்கப் பேசிச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த போதே, சிறை அலுவலர் (செயிலர்), முதன்மைத் தலைமைக் காவலர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்கள் தொகுதியை ஒட்டியிருந்த சாலையில் அன்றைய கணக்கு முடித்து விட்டுச் சிறை வாயில் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். இது அன்றாடம் நடப்பதுதான்!

இரு நாள் கழித்து சிறைக் கண்காணிப்பாளர் பகவதி முருகனை அவரது அலுவலக அறையில் பார்த்துப் பத்தாம் தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த எங்கள் சில கோரிக்கைகள் பற்றிப் பேசப் போயிருந்தேன். சுமுகமாகப் பேசி முடித்த பின் கண்காணிப்பாளர், “உங்களிடம் வேறு ஒரு செய்தி பேச வேண்டும், காத்திருங்கள்(வெயிட் பண்ணுங்க)” என்றார். அடுத்த சில நிமிடத்தில் சிறை அலுவலர் அங்கு வந்து விட்டார்.
கண்காணிப்பாளர் சொன்னார்: “தியாகராசன், இதை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.” நீங்கள் சொல்வது புரியவில்லை, விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.

சிறை அலுவலர் ஆழ்வார் நாகையா எங்கள் மீது முறைப்பாடு செய்திருந்தார்: நாங்கள் அவரைக் கேலி செய்தோம் என்று. நான் இல்லவே இல்லை என்றேன். உடனே சிறை அலுவலர் நேரில் அழைக்கப்பட்டார். இரண்டு நாள் முன்பு தானும் மற்ற அதிகாரிகளும் பத்தாம் தொகுதியை ஒட்டிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது நானும் வள்ளுவனும் அவரது நடையைக் கேலி செய்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம் என்பது குற்றச்சாட்டு.

நினைவைக் கொஞ்சம் குடைந்த போது விளங்கி விட்டது. குன்றத்து விளக்கில் காளிமுத்துவின் நடையை (மொழி நடையை) முன்வைத்து நாங்கள் பேசியதை ஆழ்வார் நாகையா தன் நடை (சாலையில் நடக்கும் விதத்தை) குறித்துப் பேசியதாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து விட்டது. அதற்கொரு காரணம் உண்மையிலேயே அவர் நடப்பது சற்றே மாறுபட்டதாக (கெந்திக் கெந்தி நடப்பது போல்) இருக்கும். உண்மையில் நடந்தது என்ன என்பதை விளங்கிக் கொண்ட பின் அனைவரும் சிரித்து விட்டனர். “வள்ளுவனோ தியாகுவோ மற்றத் தோழர்களோ அப்படிப் பேசக் கூடியவர்கள் அல்ல என்றுதான் நானும் நினைத்தேன்” என்று பகவதி முருகன் சொல்லி முடித்தார். “வேண்டுமானால் அவர்கள் நேருக்கு நேர் கடுமையாகப் பேசக் கூடியவர்களே தவிர எவர் ஒருவரையும் உருவத்துக்காகவோ நடை உடைக்காகவோ கேலி பேசக் கூடியவர்கள் அல்ல” என்றார்!

அதிகாரிகளை நாங்கள் எங்களுக்குள் கேலியாகப் பேசி மகிழ்வது உண்டுதான். ஆனால் எப்போதுமே ஆழ்வார் நாகையா மீது எனக்கொரு மதிப்பு இருந்தது. அவர் பகுத்தறிவாளர். சிறைக் கைதிகளைச் சோதனையிடும் போது பணம் பிடிபட்டால் விடுதலை, உண்மை போன்ற ஏடுகளுக்கு உறுப்புக் கட்டணம் (சந்தா) கட்டச் சொல்வார் என்று கேள்விப்பட்டிருந்தேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 367

வெள்ளி, 15 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு

      15 December 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை! – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!


தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் – தஞ்சை மாநாடு


நேற்று 10.10.2023 தஞ்சையில் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் நடத்திய இன உரிமை எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைய தமிழ்நாட்டு, இந்திய நாட்டு, பன்னாட்டுச் சூழலைப் புரிந்து கொள்ள உதவக் கூடும் என்பதால் அவற்றை ஈண்டு பகிர்கிறேன். –
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இன உரிமை இலட்சிய மாநாடு
தஞ்சை, 2023 அட்டோபர் 10
தீர்மானங்கள்

  1. பாலத்தீனம்:

இசுரேலின் இனவழிப்புப் போரை எதிர்த்து, காசாப் பகுதியின் பாலத்தீன மக்கள் நடத்தி வரும் தற்காப்புப் போரில் பாலத்தீன மக்கள் வெற்றி பெற வேண்டுமென தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு உளமார வாழ்த்துகிறது. இன்றைய உலகில் அப்பாவி மனித உயிர்களைப் பலியிட்டுப் போர் வழியில் தீர்வுகள் தேடும் இசுரேலிய யூதவெறி அரசின் அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அமெரிக்காவின் பைடன் ஆட்சியும் இந்தியாவின் மோதியாட்சியும் பாலத்தீன மக்களுக்கு எதிரான இசுரேலிய யூதவெறி அரசின் இனவழிப்புப் போருக்கு அளித்துள்ள ஆதரவை வன்மையாகக் கண்டிக்கிறோம். உக்கிரைன் மீது உருசியா தொடுத்த வன்பறிப்புப் போரின் அழிவுகள் தொடரும் நிலையில் இசுரேலிய அரசு பாலத்தீன மக்களது தாயகத்தின் மீது நடத்தி வரும் கொடும்போர் உலக அமைதிக்குப் பெருங்கேடு விளைவிக்கும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது. ஐ.நா. தீர்மானங்களின் படியும் 1993 ஆசுலோ உடன்படிக்கைகள், ஆசுலோ செயல்வழியின் படியும் பாலத்தீனர்களின் இறைமையை உறுதி செய்து, போரை நிறுத்தி அமைதியை மீட்கும் படி, பன்னாட்டுலக அமைதி ஆற்றல்களைத் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு வேண்டிக் கொள்கிறது.

  1. மோதியாட்சி:

நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய சனதா கட்சியின் ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்ட வழியிலான குடியாட்சியக் கூறுகளுக்கும், மொழிவழி மாநில அமைப்புக்கும், தேசிய இன உரிமைகளுக்கும், சமூகநீதி சார்ந்த உரிமைகளுக்கும், தொழிலாளர்-உழவர் நலனுக்கும் எதிராகத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. இது வல்லரசிய(பாசிச) ஆட்சியாகவே நிலைபெற்றுக் கொடுங்கோன்மை வளர்ந்து வரும் நிலையில் இந்த மோதியாட்சியைத் தூக்கி எறிய ஒடுக்குண்ட தேசிய இனங்களும், உழைக்கும் மக்களும், அனைத்துக் குடியாட்சிய ஆற்றல்களும் ஒன்றுபட்டுக் கிளர்ந்தெழத் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு அறைகூவி அழைக்கிறது.

  1. காவிரி உரிமை:

தமிழ்நாட்டின் காவிரி உரிமை மீண்டும் மீண்டும் சிக்கலுக்குள்ளாகி வருகிறது. காவிரி ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான சட்டப் பொறிமுறை எதையும் மதிப்பதில்லை என்பதில் கருநாடகம் பிடிவாதமாக உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைப் பங்கைப் பெற்றுத்தர வேண்டிய கடமைப் பொறுப்பை இந்திய அரசு வேண்டுமென்றே தட்டிக் கழித்து வருகிறது. தமிழக அரசோ வேண்டுகோள்கள், வலியுறுத்தங்கள், அனைத்துக் கட்சித் தூதுக் குழுக்கள், சட்டப் பேரவைத் தீர்மானங்கள் என்ற வழிகளிலேயே காவிரி உரிமையை மீட்க முடியும் என்ற மயக்கத்தை உண்டாக்கி வருகிறது. மாறாகத், தமிழக மக்களை இந்திய அரசுக்கும் கருநாடகத்துக்கும் எதிராக உறுதியான நீடித்த போராட்டங்களில் அணி திரட்டுவதன் வாயிலாகவே காவிரி உரிமையையும் மொத்தத்தில் தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையையும் காக்கவும் மீட்கவும் இயலும் என்பதைத் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

  1. தே.ப.க.(என்.எல்.சி.யின்) நிலப்பறிப்பு:

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் சுரங்கங்களை விரிவாக்குவதன் பெயரால் உழவர்களின் நிலங்களைப் பறிக்க எடுத்து வரும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். நெய்வேலி நிலக்கரி மீதும் அனல்மின் நிலையத்தின் மீதுமான தமிழ்நாட்டு மக்களின் இறைமையை உறுதிசெய்ய அவற்றைத் தமிழ்நாட்டுடைமையாக்க வேண்டுமென தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பை முன்னிட்டும் புதை படிவ எரிபொருள் ஆக்கத்தைக் குறைத்துக் கைவிடும் நோக்கிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மென்மேலும் கண்டறிந்து பயன்படுத்த அரசுகள் முன்வர வேண்டுமென தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. த.எ.த.(ஊபா), தே.பு.மு.(என்ஐஏ) அடக்குமுறைச் சட்டங்கள்:

த.எ.த(ஊபா) போன்ற அடக்குமுறைச் சட்டங்களையும், தே.பு.மு.(என்ஐஏ) போன்ற காவல் பொறிமுறைகளையும் குடியாட்சிய உரிமைகளுக்கு எதிராகவும், குறிப்பாகச் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருவதையும், இந்த அடக்குமுறைக்குத் தமிழ்மாடு மாநில அரசு உடந்தையாக இருந்து வருவதையும் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

  1. உறுதியேற்பு:
    தமிழ்நாட்டின் இறைமை மீட்புக்கும், குடியாட்சியக் காப்புக்கும், சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத புதிய வாழ்வுக்கும் அறிவார்ந்த முறையில் தன்னளிப்புடன் தொடர்ந்து போராடவும், அனைத்துலகிலும் இவ்வகையில் மாந்தக்குல முன்னேறத்துக்காக நடைபெறும் போராட்டங்களுடன் தோழமை கொள்ளவும் செவ்வியக்க மரபில் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் மீண்டும் உறுதி ஏற்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 340

வியாழன், 14 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை!

தமிழ்நாட்டில் தமிழைக் கல்விமொழி ஆக்குவதற்காக நீண்ட நெடுங்காலமாய்ப் பற்பல வகையிலும் போராடி வருகிறோம். ஆனால் நம் இலக்கை அடைய முடியவில்லை என்பது மட்டுமன்று. அது நம்மை விட்டு விலகி விலகிப் போய்க் கொண்டுமிருக்கிறது.

கல்விமொழி என்றால் முதற்பயில்மொழியும் ஒரே பயிற்றுமொழியும் என்று பொருள். பொதுவாக உலகில் ஒவ்வொரு தேசமும் அதனதன் தேசிய மொழியையே – அம்மக்களின் குமுகத் தாய்மொழியையே – கல்விமொழியாக ஆண்டு வரக் காண்கிறோம். இதுதான் குமுக வளர்ச்சிக்கும் குமுக அறத்துக்கும் நல்லறிவுக்கும் ஏற்ற வழி என்பதை அறம்சார்ந்த அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினரும் மாநில ஆட்சியாளர்களும் கல்வித் தமிழைப் புறக்கணிப்பதிலும், ஆங்கிலத்தை ஒரு பயில்மொழியாக மட்டுமின்றி, அனைத்து நிலைகளிலும் பயிற்றுமொழியகவும் திணிப்பதிலும் குறியாக உள்ளனர். இது போதாதென்று ஒன்றிய அரசினர் இந்தியையும் சமற்கிருதத்தையும் கூட திணிக்கத் துடிக்கின்றனர்.

முற்போக்கான கல்வி என்பது குடியாட்சியத்தையும் குமுக நிகர்மையையும் வளர்ப்பதற்கு இன்றியமையாத் தேவையாகும். ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த குமுகத்தில் நிகர்மைக்கான போராட்டத்தில் அது ஒரு முகன்மைக் கருவியாகும். மாறாக. பிற்போக்கான கல்வி என்பது நிகர்மையை மறுத்து ஆளும் வகுப்பினரின் தேவைகளை நிறைவு செய்வதாகவும், அவர்தம் குமுகக் கருத்தியலைப் பரப்புவதாகவும் அமைகிறது. இறுதி நோக்கில் அது அனைவருக்கும் கல்வி என்ற பெருங்குறிக்கோளுக்குத் தடை போடுகிறது.

இந்தியாவில் பார்ப்பனியமும் குடியேற்றியமும்(காலனியமும்) புகுத்தியுள்ள பிற்போக்கான கல்விமுறை மொத்தத்தில் ஆளும் வகுப்பின் தேவைகளுக்கும் கருத்தியலுக்குமே சேவை செய்து வருகிறது. குடியேற்றியம் (காலனியம்), பார்ப்பனியம், முதலியம், புதுத் தாராளியம் என்ற பகைப்புலங்களில் வருணாசிரமத்தின் குருகுலக் கல்வி, மெக்காலேயின் ஆங்கிலேயக் கல்வி, மோதியரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைக்குமான இந்திய வல்லரசின் அடுக்கடுக்கான கல்விக் கொள்கைகளின் பண்பும் பயனும் இவ்வளவுதான்.

அனைவருக்குமான கல்வியை மறுதலித்து, சிறுபான்மைக் கூட்டத்தின் கல்விசார் முற்றுரிமையை நிறுவுதல், கல்வியை வணிகமயம், இந்திய மயம், இந்துமயம் ஆக்கும் மும்முனைத் தாக்குதல் ஆகிய இந்தப் போக்குகளுக்கு அயல்மொழித் திணிப்பு ஒரு நுட்பமான கருவியாகப் பயன்படுகிறது; வருண வகையிலும் வகுப்பு (வர்க்க) வகையிலும் பெரும்பான்மையான வெகுமக்களை ஒடுக்க உதவுகிறது.

இந்த ஒடுக்குமுறையை எதிர்க்கவும் முறியடிக்கவும் தமிழ்நாட்டில் தமிழே கல்விமொழி என்ற முழக்கம் வழியமைக்கிறது. முதல் பயில்மொழியும் தமிழ், பயிற்று மொழியும் தமிழ் என்பதே இதன் பொருள். இரண்டாம் பயில்மொழியாகத் தேவையைப் பொறுத்து ஆங்கிலமோ பிற அயல்மொழியோ `பயில்வதற்கு இது தடையன்று என்பதைக் கூறத் தேவையில்லை அல்லவா?

இந்தப் பிற்போக்கான கல்விமுறையின் முதன்மைப் பொறியாக இயங்குவது இந்திய வல்லரசியம், அதன் அரசுக் கட்டமைப்பு என்பது வெள்ளிடை மலை. இதை எதிர்த்து நிற்க வேண்டியவர்கள் தமிழ் மக்கள், அவர்களுக்குத் துணைநிற்க வேண்டியவர்கள் மாநில ஆட்சியாளர்கள்! ஆனால் மெய்ந்நடப்பில் மாநில ஆட்சியாளர்களிடம் இதற்கான தெளிவும் துணிவும் இல்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.

தமிழ் மக்களிடம் கல்வியார்வம் மிகுந்துள்ள அளவுக்குக் கல்வித் தெளிவு வளர வில்லை. என்ன கற்பது? எப்படிக் கற்பது? எம்மொழியில் கற்பது? என்ற புரிதல் இல்லாமையால் கல்வி வணிகக் கொள்ளையர்தம் கையில் சிக்கி அலைக்கழிகின்றார்கள். அவர்கள் கல்வியை என்ன விலை கொடுத்தேனும் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள். குமுகத்தின் பொது நன்மைக்கு அப்பால் தத்தமது தனி நன்மை பேணக் கருதுகின்றார்கள். அவர்கள் எழுப்பும் வினா: தமிழ் சோறு போடுமா?

ஆங்கிலவழிக் கல்வி பெற்றவர்களெல்லாம் பாதுகாப்பான வேலை பெற்று நிம்மதியாக வாழ்ந்து வருவது போன்ற மயக்கத்தில், தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது ஒரு சரியான குடியாட்சிய எதிர்பார்ப்பு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 45 “அரசமைப்பு தொடங்கி பத்தாண்டுக் காலத்துக்குள் அகவை 14 வரைக்குமான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவய, கட்டாயக் கல்வி வழங்க அரசு பாடுபடும்” என்று கட்டளையிட்டாலும், இஃது ‘அரசுக் கொள்கையின் திசைநெறிகள்’ என்ற நான்காம் பகுதியில்தான் இடம்பெற்றுள்ளது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மதிக்கப்பெறவில்லை. அரசமைப்பு தொடங்கி பத்தாண்டு என்ன, 70 ஆண்டு கழிந்த பின்னும் இது செயலாக்கம் பெறவில்லை. நூறாண்டு கழிந்த பிறகும் செயலாக்கம் பெறும் வாய்ப்பு தென்படவில்லை.

ஆனால் அரசமைப்புச் சட்டத்துக்கு 2002ஆம் ஆண்டு 86ஆம் திருத்தம் செய்யப்பட்டு உறுப்பு 21-அ சேர்க்கப்பட்டது. இது பகுதி 3 அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கல்வியுரிமையை நிறுவுகிறது. ஆனால் இந்தக் கல்வியுரிமை ஆறு முதல் பதினான்கு வயது வரைக்குமான குழந்தைகளுக்கு மட்டுமே. அதாவது தொடக்கக் கல்விக்கு மட்டும்தான். இந்தத் தொடக்கக் கல்வியியிலும் கூடத் தனியார் கல்வி வணிகம் செய்வதை அறவே தடுக்க அரசு சட்டம் இயற்றவில்லை என்பதால் இந்தக் கல்வியுரிமையும் முழுமையானதன்று.

அனைத்து நிலைகளிலும் அனைத்துக் கல்வியும் கட்டணமில்லாமல் பெறுவதற்கான உரிமை அடிப்படை உரிமை எனும் நிலைதான் உண்மையான கல்வியுரிமை ஆகும். அதே போது ஒன்றிய அரசும் மாநில அரசும் கல்வியில் வணிகமயத்தைத் திட்டமிட்டு வளர்த்து வருவது மக்களின் கல்வியுரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். கல்வியுரிமைக்கும் வேலையுரிமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. “அனைவர்க்கும் கல்வி, அனைவர்க்கும் வேலை” என்ற முழக்கம் இந்தத் தொடர்பையே குறிக்கிறது. படிப்பு வேண்டும், படிப்புக்கு ஏற்ற வேலை வேண்டும். படித்தவர்க்குப் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்றால் அது படித்தவர்க்கு மட்டுமன்று, அவரைப் படிக்க வைத்த குமுகத்திற்கும் இழப்பாகும்.

இந்திய அரசமைப்பில் வேலையுரிமை பெயரளவுக்குக் கூட அடிப்படை உரிமையாக அறிந்தேற்கப்படவில்லை. பகுதி 4 இல் இடம்பெற்றுள்ள உறுப்பு 41 வேலையுரிமை, கல்வியுரிமை, வேலையில்லாக் காலத்திலும் முதுமைக் காலத்திலும் நோய்க் காலத்திலும் பொது உதவி பெறும் உரிமை ஆகியவற்றைக் குறிப்பிட்ட போதிலும் அரசு தன் பொருளியல் வல்லமை, வளர்ச்சி ஆகியவற்றின் வரம்புகளுக்கு உட்பட்டு இந்த உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று கூறி விடுவதால் இதனை வேலையுரிமைக்கான வழிவகை என்று சொல்வதற்கில்லை.
கல்வியுரிமையைப் போலவே வேலையுரிமையையும் அரசுகள் காலில் போட்டு மிதித்து வருவதே மெய். முதலியத்தின், குறிப்பாகப் புதுத் தராளியத்தின் வளர்ச்சி கல்வியையும் வேலையையும் அங்காடிச் சரக்குகளாக்கி விட்ட நிலையில் கல்வியுரிமையையும் வேலையுரிமையையும் நிலைநிறுத்த உறுதியான போராட்டங்கள் தவிர வேறு வழியில்லை.

தமிழில் கல்வி என்பது கல்வியுரிமையின் பாற்பட்டது என்பது போலவே தமிழில் படித்தோருக்கே தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு என்பதும் வேலையுரிமையின் பாற்பட்டதாகும். இந்திய அரசின் பொருளியல் கொள்கையும் கல்விக் கொள்கையும் குடிமக்களின் கல்வியுரிமைக்கும் வேலையுரிமைக்கும் நேர் எதிராக இருப்பதைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும்.

சில துறை அரசுப் பணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது போல் அவ்வப்போது மாநில ஆட்சியாளர்கள் வெளியிடும்
அறிவிப்புகளும் ஆணைகளும் வெறும் கண்துடைப்பே
 ஆகும். ஏனென்றால், முதலாவதாக இந்த நாட்டில் அரசுத் துறை வேலைவாய்ப்புகள் தனியார் துறை வேலைவாய்ப்புகளை விட மிகமிகக் குறைவு. அரசுத் துறைகளிலும் மாநில அரசு அறிவிப்புகள் ஒன்றிய அரசுத துறைகளுக்குப் பொருந்த மாட்டா. மாநில அரசுத் துறைகளிலும் ஒருசில துறைகளில் மட்டும் ஒருசில கீழ்நிலைப் பணிகளுக்கு மட்டுமே ஒப்புக்கு சப்பாணியான இடஒதுக்கீடு வழங்கப்படுவது யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது போலத்தான்! அது மட்டுமல்ல இந்த அறிவிப்புகள் தமிழில் படித்தவர்களை உண்மையில் இழிவு செய்யும் அறிவிப்புகளும் ஆகும்.

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் முன்னுரிமை அரசுத் துறைகளுக்கு மட்டுமல்லாமல் தனியார் துறைக்கும் பொருந்தும் படிச் செய்ய வேண்டும். மாநில அரசுத் துறைகளுக்கு மட்டுமல்லாமல் ஒன்றிய அரசுத் துறைகளுக்கும் பொருந்தும் படிச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அது என்ன முன்னுரிமை? முற்றுரிமை அல்லவா வழங்க வேண்டும்? தேவையானால், தமிழில் படிக்காதவர்களுக்கு இடைகாலமாக விலக்குரிமை வழங்கலாம்.

தமிழில் படித்தால்தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்பதை உறுதி செய்யாமல் தமிழ்க் கல்வியும் தமிழ்வழிக் கல்வியும் ஏற்றம் பெற வாய்ப்பில்லை என்பதைத் தமிழ் மக்கள் உணரச் செய்ய வேண்டும். அதற்காக அரும் பாடாற்ற அணியமாவோம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல்
 333

புதன், 13 டிசம்பர், 2023

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு

 

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3

திலீபன் நினைவுப் பேருரை 3/3 :

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு

இந்த அறிவிப்பில் நேர்மை இருக்குமானால், இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நடந்திருப்பது இனவழிப்பு. அதற்காக இராணுவ வகையிலும் அரசியல் வகையிலும் குற்றம் புரிந்தவவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உயர்ஆணையர்கள் அறிக்கையிட்டுள்ளார்கள். அதைச் செய்ய வேண்டும். செய்வதற்கு ஆதரவு தர வேண்டும். இலங்கைக்கு ஆதரவு தரக் கூடாது, நடுநிலைவகிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களின் போராட்டத்தை முறியடிக்கக் கூடாது. இனியாவது இதைச் செய்வார்களா? இந்த அறிவிப்பு உண்மை என்றால், இதைச் செய்ய வேண்டும். செய்யுமாறு நாம் வலியுறுத்த வேண்டும். அது தமிழீழ மக்களுடைய நீதிக்கான போராட்டத்திற்குச் செய்யக் கூடிய ஓர் உதவியாக அமையும் என்று தமிழ்நாட்டிலே தமிழீழ ஆதரவு அமைப்புகள் நம்புகின்றன.

எத்தனையோ அரசியல் வேறுபாடுகளுக்கு இடையில் இந்திய அரசு தன்னை இனவழிப்புக்கு எதிராக மாற்றிக் கொள்ளுமானால், அதை வரவேற்க நாம் அணியமாக இருக்கிறோம். அந்த மாற்றத்தின் அடையாளமாகும் ஐ. நா. மனிதஉரிமைப் பேரவையில் அடுத்தடுத்து வரக் கூடிய விவாதங்களிலும், தீர்மானங்களிலும் தமிழீழ மக்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளுக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இதில் நமக்குப் பெரிய மயக்கம் ஏதும் இல்லை. நடந்தால் நன்று! நடக்கா விட்டாலும் நம்முடைய போராட்டம் தொடரும். நான் அடிக்கடி சொல்வதுண்டு. தந்தை செல்வா அவர்களும், தலைவர் பிரபாகரன் அவர்களும் இந்தியாவை நம்பியோ ஐநாவை நம்பியோ, வேறு உலக நாடுகளை நம்பியோ இந்தப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. அவர்கள் தமிழீழ மக்களை நம்பித்தான் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்கள். அவர்கள் பக்கம் இருக்கின்ற வரலாற்று நியாயத்தை நம்பியே இந்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்கள். இந்த வரலாற்று ஏரணம் இன்றைக்கும மறைந்து விடவில்லை.

தீலீபனின் பெயரால் நான் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். திலீபன் மக்கள் புரட்சியிலே நம்பிக்கை வைத்தார். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று முழங்கித்தான் தன்னுடைய இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினார். இன்றைக்கும் அந்த மக்கள் புரட்சியிலே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நீங்களும் மக்கள் புரட்சியிலே நம்பிக்கை வையுங்கள்! தாயகத்திலே, தமிழீழ மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும். அதற்கு ஆதரவாக நாமும் போராட வேண்டும். இன்று இதுதான் இன்றியமையாத் தேவை.

ஒன்றுக்கும் உதவாத வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்ட பதின்மூன்றாம் திருத்தம் என்ற பம்மாத்து வேலையை இந்திய அரசும சிங்களஅரசும் செய்கின்றன. இதற்கு ஒருபோதும் தமிழீழ மக்கள் மயங்கி விடக் கூடாது.

அன்றைக்கு 1987-88இல் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றை இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? இந்திய அரசுக்கு நேர்மை இருக்குமானால், அஃது இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்னாயிற்று? என்று கேள்வி எழுப்ப வேண்டும். அதுதான் பன்னாட்டு உடன்படிக்கை. நமக்கு அதில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அதன் வழியாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேச மாட்டார்கள். இந்திய இலங்கைஒப்பந்தத்தைப் பற்றிப் பேச மாட்டார்கள். தமிழீழத் தாயத்தை அங்கீகரிக்க மாட்டார்கள். பதின்மூன்று, பதின்மூன்று என்று கிளிப்பிள்ளை போலப் பேசிக் கொண்டேஇருப்பார்கள்.

தமிழீழ மக்கள் இந்த நாசகாரத் திட்டத்தை முறியடிக்க வேண்டும். பதின்மூன்றாம் திருத்தம் என்ற ஒரு திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட காலத்தில் இது ஒரு கேலிக்கூத்து என்று என்று இராசீவு காந்திக்குக் கடிதம் எழுதிய மூன்றுபேரில் ஒருவர்தான் ஐயா சம்பந்தன் அவர்கள். சிவசிதம்பரமும், அமிர்தலிங்கமும் மற்ற இருவர். இராசீவு காந்தி இல்லாமல் போய் விட்டார். ஆனால் அந்தக் கடிதம் இருக்கிறது. கேலிக் கூத்து மாறி விட்டதா? அப்படி நிலைமையில் என்ன மாற்றம் வந்து விட்டது? இந்தியா சொல்வதை நாம் ஏன் கேட்டு நடக்க வேண்டும்?

எனவே நாம் நம்முடைய மக்களை நம்பி நம்முடைய நிலத்தில் போராட வேண்டும். அதற்காகத் தமிழகத்திலே போராட வேண்டும். உலகெங்கும் போராட வேண்டும். நம்முடைய கோரிக்கைகளில் மாற்றம் இல்லை. ஏனென்றால் தமிழர்கள் இன்றைக்கு நாதியற்றவர்கள் ஆகி விட்டார்கள், வலிமை இழந்து விட்டார்கள் என்ற கருத்து தாயகத்திலும் வெளியிலும் நிலவுகிறது. நமக்கென்று என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒரு வகையில் நியாயமாகத் தோன்றக் கூடிய கேள்விதான்.

விடுதலைப் போராட்டத்தினுடைய தலைமைப் படை நசுக்கப்பட்டு விட்டது. கட்டளைத் தலைமை அழிக்கப்பட்டு விட்டது. நாம் நம் படைகளை இழந்தோம். படை வீரர்களை இழந்தோம். போராடி மீட்ட நிலத்தை இழந்தோம். இறைமை இழந்தோம். ஆனால் இத்தனையும் இழந்தாலும் நாம் புதிதாக ஒரு வலிமையை ஈட்டி இருக்கிறோம். அதுதான் நம்முடைய அற வலிமை. Moral Strength. இந்த அறவலிமை முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் ஈகத்தினால், இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஈகத்தினால் நமக்குக் கிடைத்திருப்பதாகும்.

இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட போதும் தங்களுக்கு ஒரு நாட்டைப் பெற்றுக் கொள்வதற்கு, அவர்களுக்கு இந்த அறவலிமை உதவியது. இந்த நாடு எங்கே பெறப்பட்டது என்பது வேறு செய்தி. ஆனால் இங்கே தமிழீழ மக்கள் தம்முடைய மரபுவழித் தாயகத்தில் தங்கள் இறைமையை மீட்டுக் கொள்வதற்கு இந்த அறவலிமை அவர்களுக்குத் துணைநிற்கும். யுகொசுலாவியாவில் செருபியாவுக்கு அடங்கிக் கிடந்த பல்வேறு தேசங்கள் – கொசோவோ வரைக்கும் – இந்த அற வலிமையைக் கொண்டுதான் தங்கள் இறைமையை மீட்டுக் கொண்டன. கிழக்குத் தைமோரில் இதுதான் நடந்தது. பாலத்தீனத்தில், குருதிசு மண்ணில் இந்த அற வலிமைதான் அவர்களுக்குத் துணை நிற்கிறது.

நாமும் அற வலிமையோடு இருக்கிறோம். இந்த அற வலிமையை அரசியல் வலிமையாக மாற்றுவதன் மூலமாக நம்முடைய கோரிக்கைகளில் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையோடு நம் போராட்டத்தைத் தொடர்வோம். திலீபன் நினைவைச் சொல்லுகிற போது. இதைத்தான் ஒரு செய்தியாக நான் கொடுக்க நினைக்கிறேன்.

இந்தியாவிற்கும் சீனாவிற்குமான சதுரங்கப் பலகையாக இலங்கை மாற்றப்படுவது நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், இதற்கான தீர்வு இந்தியாவிற்கு எதிராகச் சீனத்தையோ சீனத்திற்கு எதிராக இந்தியத்தையோ ஆதரிப்பது அல்ல. இரண்டு வல்லரசுகளுக்கு இடையே நடைபெறுகின்ற அரசியல் சூதாட்டத்திற்கு நடுவில் நாம் நீதியின் பக்கம், நம் மக்களின் தேவையின் பக்கம் நின்று நம்முடைய போராட்டத்தை நாம் முன்னெடுப்போம். நம்மைப் பொறுத்த வரைக்கும் எதிர்கால இந்தியா மட்டும் இல்லை, இன்றைக்கு இருக்கிற இந்தியாவே எதைப் பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறதோ, அந்தப் பாதுகாப்புக்கு ஈழத்தினால் ஒருபோதும் எந்தத் ஊறும் ஏற்பட்டது இல்லை. எதிர்காலத்தில் ஏற்படப் போவதுமில்லை. ஆனால் ஈழத்தின் பாதுகாப்புக்குத்தான் இந்தியா மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியது என்பதை நாம் மறக்கவில்லை.

எனவே எச்சரிக்கையோடு நாம் விழிப்போடு இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்மால் இந்தியாவிற்கு ஆபத்து என்ற ஒரு பொய்ப் பரப்புரையைச் செய்வார்களானால், வரலாறு அதை மறுத்து நிற்கிறது. இன்றைய உண்மைகள் அதை மறுத்து நிற்கின்றன. இந்தியப் படைகளால் தமிழ்மண்ணில் கொலையுண்ட தமிழ்மக்கள் என்ற ஒரு ஒரு கணக்கு உண்டு. தமிழ்ப் படைகளால் இந்திய மக்கள் யாரும் எங்கும் கொல்லப்படவில்லை.

தமிழ் மக்கள் என்றென்றைக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்கள் மண்ணில் போராடி இருக்கிறார்கள். இந்தியப் படை செய்தது போல் வேறு மண்ணிலே போய் ஆக்கிரமித்தது இல்லை. எனவே நமக்கு நாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க வேண்டா. நம் நியாயமான கோரிக்கைகளை எதிர்த்து நம் தமிழ் மக்களையே திரட்டுகின்ற முயற்சிகளை மறுதலிக்க வேண்டும். நாம் எச்சரிக்கையோடு நம்முடைய கோரிக்கைகளை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தால் மகிழ்ந்து வரவேற்போம். ஆனால் இதன் பொருள் இந்தியா அரசியல் சதுரங்கத்தில் நம்மைப் பகடைகளாக உருட்ட முடியும் என்பது இல்லை. நாம் அதை அனுமதியோம்.

திலீபன் நமக்கு ஒரு வரலாற்று உண்மையை உணர்த்துவதற்காகப் பன்னிரண்டு நாள் பட்டினிப் போர் புரிந்தார். அவர் உணவுண்ணாமல் பட்டினியை உண்டார். அவர் பசி இன்னும் தீரவில்லை. ஈகத்தின் மறுபெயராக விளங்கினார். உலகம் உள்ள வரை தமிழ் கூறும் மக்கள் உள்ள வரை தீலீபனின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். தீலீபனின் பெயரால் நாம் அவரது அந்த உரையை நினைவுபடுத்திக் கொள்வோம்.

“ஒரு காலத்திலே இந்தக் கோட்டையிலே ஒல்லாந்தர் கொடி பறந்தது, பிறகு பிரித்தானியர் கொடி பறந்தது. இன்று சிங்களர் கொடி பறக்கிறது. தமிழீழக் கொடி பறக்கும் நாளே உண்மையான விடுதலை நாள்.”

திலீபனின் ஈகத்திலிருந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கூட ஊக்கமும் உரமும் பெற்றிருக்கிறோம்.

தமிழ் மண்ணில் புதையுண்ட வீர விதைகளுக்கு… அறிவை நீராக்கி, உணர்வை உரமாக்கி, அமைப்பை வயலாக்கித் தமிழ்த் தேசங்களில் புதிய விளைச்சல் காண்போம். நன்றி! வணக்கம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324

செவ்வாய், 12 டிசம்பர், 2023

இணையவழியில் ஆளுமையர் உரையும் என்னூல் திறனரங்கமும் – 17.12.2023 காலை

 


தமிழே விழி!                                                                                          தமிழா விழி!

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 79 & 80 : இணைய அரங்கம்

மார்கழி 01, 2054 / 17.12.2023 முற்பகல் 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

தொடர்ந்து முற்பகல் 11.00 | என்னூல் திறனரங்கம் 4

இலக்குவனார் திருவள்ளுவனின் முந்நூல் குறித்த  இணையவழித் திறனாய்வரங்கம்

நிறைவுரை :  தமிழ்த் தேசியர்  தோழர் தியாகு








தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1-தொடர்ச்சி)

திலீபன் நினைவுப் பேருரை 2/3 :

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு


எல்லைப் பாதுகாப்பு என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எத்தனையோ வகையில் தீர்த்துக் கொள்ளமுடியும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் மட்டும்தான் எல்லைச் சிக்கல் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும எல்லைச் சிக்கல் இல்லையா? மராட்டியத்துக்கும் கருநாடகத்திற்கும் இல்லையா? இந்திய வடகிழக்கின் ஏழு சகோதரிகள் என்னும் ஏழு மாகாணங்களுக்கு இடையே இல்லையா?

பாதுகாப்பு என்பது சரியாகச் சொன்னால் செக்யூரிட்டி என்னும் இடர்காப்பு அமைதியான, நீதியான சமூகம் அமைவதைப் பொறுத்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம போற்றும் சமூகத்தில்தான் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க முடியும்.

அத்தகைய ஒரு பாதுகாப்பு இந்தியாவில் அடங்கியிருக்கின்ற பல்வேறு மக்களினங்களுக்கும் தேவை. என்ற படிப்பினையை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

ஈழம், என்ன தீங்கு செய்தது? இந்திய வல்லரசு எதற்காக ஈழத்தை அழிக்க முற்பட்டது? தங்களுக்குப் பகை நாடு பாக்கித்தான் என்கிறார்கள். பகை நாடு சீனம் என்கிறார்கள். ஆனால் சீனா, பாக்கித்தான் ஆகியவற்றோடு கூட்டாகச் சேர்ந்து இனவழிப்புச் செய்தது இந்தியா. அவர்களுக்கான போரை நாங்கள் நடத்தினோம் என்றார் இராசபட்சர். அதனால்தான் நாம் இந்தியாவில் அடங்கியிருக்கின்ற. பல்வேறு தேசிய இனங்களோடும் தோழமை கொள்ள வேண்டும். அரசுகளற்ற தேசங்களோடும், போராடிக் கொண்டிருக்கிற மக்களோடும், இந்தியப் பாட்டாளிகள், உழவர்கள், பெண்கள், சிறு வணிகர்கள் … அனைத்து மக்களோடும் தோழமை கொள்ள வேண்டும். அவர்களுடைய எதிர்காலம் பற்றிய கவலை நமக்கு இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய நீதிக்கான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வெறும் அரச தந்திரவுத்திகள் வாயிலாக, அரசுதந்திர உரையாடல்கள் வாயிலாகப் பாதுகாப்பை நாம் ஏற்படுத்திவிட முடியாது. கடந்த காலத்தில் தமிழீழம் என்பது தமிழ் இனத்திற்கான அந்தப் போர் என்பது புறநிலையில் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழீழப் போரையும், தலைவர் பிரபாகரன் வழிநடத்திய வீரம் செறிந்த போராட்டத்தையும் பார்த்து காசுமீர் மக்கள் ஊக்கம் பெற்றார்கள். காசுமீர் பச்சைப் புலிகள் என்ற அமைப்பு கூட நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் அரசியலுக்குத் தொடர்பு இல்லாமல் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்இனவழிப்புப் போரை நிறுத்த “போரை நிறுத்து(Stop the War)” என்ற ஒற்றை முழக்கத்தின் பின்னால் திரண்டு அமைப்புகளாகத் திரண்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால் ஏன் நம்மால் மிக அருகாமையில் சில காதத் தொலைவில் இருக்கிற ஈழத்தின் மக்கள் அழிக்கபடுவதைத் தடுக்க முடிய வில்லை? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்ததன் பயன் என்னவென்றால், இந்த உலகில் தமிழர்களுக்கு இறைமை இல்லை. தமிழ்நாட்டிற்கு இறைமை இல்லை, தமிழ்த் தேசம் இறைமையற்றுக் கிடக்கிறது! இந்தியச் சிறையில் அடைபட்டுக் கிடைக்கின்ற காரணத்தினால்தான் ஈழத்திற்கு ஆதரவாக உலக அரங்கத்தில் நம்மால் குரல் கொடுக்க முடியவில்லை என்ற உண்மை வலிக்க வலிக்க உணரப்பட்டது.

நாடுகடந்து பல்வேறு நாடுகளில், வெப்பத்திலும் குளிரிலும் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ்மக்கள் தம் பங்குக்குப் போராடினார்கள். இந்தியாவில் மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டது. தாங்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலேயே அந்தந்த அரசுகளிடம் போராடிப் பெற்ற அந்த நலன்களைக் கூடத் தமிழ்நாட்டிலே இந்தியாவிடமிருந்து பெற முடியவில்லை. அதனால்தான் தமிழ் இளைஞர்கள் தீக்குளிக்க நேரிட்டது. இந்தி எதிர்ப்புக்காகத் தீக்குளித்ததைக் காட்டிலும் ஈழத்துக்கான தீக்குளிப்புகளே அதிகம் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் எல்லாத் தரப்பட்ட மக்களும் போராடினார்கள். , வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்திற்கு உள்ளே வைத்துத் தாக்கப்பட்டார்கள், வணிகர்கள் போராடினார்கள், ஏழை எளிய மக்கள் போராடினார்கள். தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் போராடினார்கள். போராட்டத்தின் வாசமே தெரியாத இ.தொ.நு.(ஐ.ஐ.டி.) போன்ற நிறுவனங்களுக்கு உள்ளே போராட்டம் நடந்தது. இதன் ஒரு விளைவு என்னவென்றால், நம்மால் ஏன் இப்படி இனவழிப்புப் போரைத் தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி எழுந்தது. இந்த இனஅழிப்புக்குத் துணைபோன இந்தியாவின் முகத்திரை கிழிந்தது. நாம் தெரிந்து கொண்டோம், இந்த இந்தியா இப்படித்தான் இருக்கும் என்று! தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் என்ற ஒரு கருத்து ஈழமண்ணில் ஏற்பட்ட அழிவின் சாம்பலில் இருந்து எழுந்து வளர்ந்தது.

தமிழ்நாட்டிலே அதற்கு முன்பும் தமிழ்த் தேசியத்துக்காக உழைத்து இருந்தோம். இதற்கு முன் எப்போதும் இல்லாத எழுச்சி இப்போது ஏற்பட்டது.1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டம் ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியாகவே நடந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு 1967 தேர்தலில் திமுக பதவிக்கு வந்த பிறகு மங்கிப்போன தமிழ்த் தேசிய உணர்ச்சி 1983ஆம் ஆண்டு சூலைப் படுகொலையின் போது மீண்டும் கிளர்ந்தெழுந்தது. ஆனால் அதுவும் பின்னுக்குப் போன நிலையில் 2009 இனவழிப்பு. போரின் விளைவுகள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய எழுச்சியைத் தோற்றுவித்தன. தமிழ்த தேசியம் என்பதே இன்றைக்கு ஆற்றல் பொருந்திய ஒரு சக்தியாக, கணக்கில் கொள்ள வேண்டிய சக்தியாக உருப் பெறுவதற்கு ஈழ மக்கள் செய்திருக்கின்ற அந்த ஈகத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

நமமுன் இருக்கின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான். இனவழிப்பின் மூலமாகப் பகைவன் என்ன சாதித்தான்? முற்றாக அழித்து விட்டோம், இனித் தமிழர்கள் போராடவே மாட்டார்கள் என்று இறுமாந்திருப்பான். ஆனால் போராட்டம் ஈழத் தாய்மண்ணிலே மட்டுமல்ல, உலகமெங்கும் பல தலைநகரங்களில் தமிழர்கள் போராடுகிறார்கள், இன்றும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் அந்த போராட்டத்திற்குத் துணைநிற்கிறது. உலகத் தமிழர்களோடு இணைந்து நிற்கிறோம். .ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் ஒருமாநாடு நடத்தித் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தோம்.

தமிழக அரசே! எங்களுக்குத் தெரியும், தமிழ்நாட்டிலே அயலுறவுத் துறை இல்லை. தமிழ்நாட்டுக்கு என்று சட்டப்படி இறைமை கிடையாது. எல்லாமே எமக்குத் தெரியும். ஆனால் அதே நேரத்தில் தலைவர் பிரபாகரன் அன்று சொன்னது போல, ஏழுகோடித் தமிழ்மக்களின் உணர்வுகளைச் சரியாக எதிரொலிக்கும் அறப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? வடக்கு மாகாணசபை ஒரு தீர்மானம் இயற்றினால் என்ன மதிப்பு உண்டு? தமிழர்கள் சட்டப்படித் தேர்ந்தெடுத்த அமைப்பு என்ற மதிப்பு உண்டல்லவா?

தமிழகச் சட்டப் பேரவையில் அடுக்கடுக்கான தீர்மானங்கள் இயற்றப்பட்டன. போர் நடந்த போது போர்நிறுத்தம் கோரித் தீர்மானம் இயற்றினோம். பிறகு அங்கு நடந்தது இனவழிப்பு என்றும் இலங்கையைப் பகைநாடாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கைக்கு எதிராகப் பொருளியல் தடைகள் விதிக்க வேண்டும் என்றும தீர்மானங்கள் இயற்றினோம். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பெரிய கட்சி, சிறிய கட்சி எல்லாக் கட்சிகளுக்கும் இடையே ஒரு பொதுவான கருத்தொற்றுமை எதிலே உண்டு என்றால், ஈழத் தமிழரின் நீதிக்கான போராட்டத்தை ஆதரிப்பதிலே உண்டு. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரிப் போராடுவதிலே உண்டு. தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழீழத் தேசிய இன மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதிலே உண்டு.

83 சூலை இனப் படுகொலையின் போது, இந்திய நாடாளுமன்றத்திலேயே அன்றைக்குத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் “இலங்கையில் நடப்பது இனக்கொலை, நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று அறிவித்து, அயலுறவுத் துறை அமைச்சர் நரசிம்ம இராவை நேரிலே அனுப்பினார். ஆனால் இனக்கொலைக்கு ஆளாகிற மக்களுக்கு விடுதலைக்குப் போராடவும் இறைமை மீட்கவும் உரிமை உண்டு என்பதை இந்திய அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவே இல்லை. இதையும் ஓர் அரச தந்திர புவிசார் அரசியல் விளையாட்டாக மட்டுமே கருதிக் கையாண்டார்கள். அண்மையிலே இந்திய உள்துறை அமைச்சர் அமித்துசா அவர்கள் இராமநாதபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் “காங்கிரசும், திமுகவும் இனவழிப்புக்குத் துணை போனார்கள்” என்று அவர் இந்திமொழியில் பேசியிருந்தார். அவர் பேசியதை நான் வரவேற்கிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும் சரி, அப்படிப் பேசியது நல்லது.

இனவழிப்பை அறிந்தேற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்பது நம் கோரிக்கை. இஃது உலகெங்கும் நம் முழக்கம். ஆனால் அதற்கு அடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனவழிப்பு என்று சொல்லி விட்டு இனஅழிப்புக்கு எதிராகப் போராடும் தமிழீழ மக்களுக்குத் துணைநிற்பீர்களா? ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே இனவழிப்பு ஆட்சியாளர்களுக்கு எதிரான தீர்மானங்களை ஆதரிப்பீர்களா? நேற்றைய வரலாறு நம்பிக்கை தருவதாக இல்லை. அது மாறுமா? அவர்களைப் பொறுத்த வரை தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்காக இந்த அறிவிப்பைச் செய்திருக்கலாம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324