சனி, 1 ஜூன், 2019

கருத்துக் கதிர்கள் 06-08 – இலக்குவனார் திருவள்ளுவன் [06. திருமாவளவன் அவை நடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]

அகரமுதல

கருத்துக் கதிர்கள் 06-08 : [06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]

 06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும்.

 நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக அவை நடத்துநர் பட்டிப்பு (Panel of Chairpersons) உருவாக்குவர். பதின்மருக்குக் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஒழிவிடமானால், இவர்கள் அந்த இடத்திற்கு வர முடியாது. ஆனால், அவர்கள் பதவிகளில் இருக்கும் பொழுது அவைக்கு இருவரும் வர இயலாச் சூழல் நேர்ந்தால் இந்தப் பட்டிப்பில் உள்ள ஒருவர் அவையைத் தலைமைதாங்கி நடத்துவார்.இதில் தொல்.திருமாவளவன் இடம் பெற வேண்டும். விடுதலைச்சிறுத்தைக்கட்சியின் தலைவரான அவர் அவையைத் திறம்பட நடத்துவார்.
 7. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா?
தினகரன், கட்சியைவிடடு யாரும் விலகுவார்களாக என்ற செய்தியாளர் கேள்விக்கு, யாரும் போக வேண்டும் என்றால் போவார்கள். அதில் என்ன இருக்கிறது. 10 பேர் போவதால் கட்சி அழிந்து விடும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா  என்று பேசியுள்ளார். போக நினைப்பவர்கள் போகலாம் என்று சலிப்பின் அடிப்படையிலும் பேசலாம். யாரை நம்பியும் இக்கட்சி இல்லை என்று தன்னம்பிக்கையிலும் பேசலாம். அடுத்து அவர்,  செந்தில் பாலாசி தி.மு.க.வுக்கு சென்று வெற்றி பெற்றிருப்பது அவரது புத்திசாலித்தனம். என்று சொன்னது புத்திசாலியாக இருந்தால் வேறு கட்சிக்குப் போ எனச் சொல்வதுபோல் இருக்கிறது. இருப்பினும் அக்கட்சியின் ஓசூர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த கருநாடகப் புகழேந்தி இதற்கு எதிரான கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பது அவரது வழக்கம்.
ம.தி.மு.க.வில் வைகோவிற்குக் கட்டுப்படாமல் தத்தமக்கு முதன்மை இருப்பதாகக் காட்டிக் கொண்ட சிலரால்தான் அக்கட்சி சிறுத்தது. நாளை அ.ம.மு.க.விற்கும் இந்நிலை நேரும். எனவே, அடுத்த நிலையில் உள்ளவர்கள் கட்சித்தலைமையிடம் தனிப்பட்ட முறையில் மாற்றுக்கருத்தைத் தெரிவிக்கலாமே தவிர,அவர்கள் பொது வெளியில் கூறக்கூடாது என்னும் நிலையைத் தினகரன் உருவாக்க வேண்டும். தம்மைத் தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்றோ தமக்குக் கட்டுப்பட்டதுதான் தலைமை என்றோ எண்ணுபவர்களால் கட்சி அழியும்.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. (திருவள்ளுவர், திருக்குறள் 790)
 8. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!
கடந்த அரசின் அமைச்சரவையில், பொன்.இராதா கிருட்டிணன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தகுதி படைத்த முழுநிலை அமைச்சராக்கப்படவில்லை.  துறை அமைச்சர் சொன்னால் மட்டும் உதவியாக வேலைபார்க்கக்கூடிய இளநிலை அமைச்சராகத்தான் அமர்த்தப்பட்டார். அமைச்சக ஊழியராகத்தான் இப்பதவி உள்ளது. மரபுப்படி இளநிலை அமைச்சர்களைத் திரு.அமைச்சர் என்று கூட அழைக்கக்கூடாது. இம்முறை அவ்வாறுகூட யாரும் இளநிலை அமைச்சராக்கப்படவில்லை. (இணையமைச்சர் என்றால் துறை அமைச்சருக்கு இணையானவர் என்ற தவறான பொருள் வருவதால் அவ்வாறு குறிப்பிட விரும்பவில்லை.) ஒருவேளை தோற்றவர்களுக்குக் கொல்லைப்புற வழியில் அமைச்சர் பதவி தர விரும்பவில்லை என்றால் வரவேற்கலாம். ஆனால், அவ்வாறில்லை. எனினும் தேர்தலில் போட்டியிடாத கட்சிக்காக உழைத்த தலைவர் எவருக்கேனும் அமைச்சர் பதவி வழங்கியிருக்கலாம். அல்லது பா.ச.க.வுடன் கூட்டணி வைத்துத் தேய்ந்துபோன அ.தி.மு.க.விற்கு ஆறுதலாக அமைச்சர் பதவி வழங்கியிருக்கலாம்.அதுவும் இல்லை. அமைச்சரவையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்கள் நிருமலா சீத்தாராமனும் சுப்பிரமணியன் செய்சங்கரும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கும் அவர்கள் மாநிலங்களுக்கும் இடையிலான சிக்கல் என்றால் கண்டிப்பாக அவர்கள் தமிழ்நாட்டின் பக்கம் நிற்க இயலாது. அவர்களால் தமிழ்நாட்டிற்குக் குறிப்பிடத்தக்க பயன் எதுவும் விளையாது. எனவே, அவர்களைத் தமிழ்நாட்டின் சார்பாளர்களாகக் கூறுவது நம்மை ஏமாற்றவதாகும். எனவே, மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விரைவில் இடம்பெற வேண்டும்.
பொதுவாகவே தமிழ்நாட்டு நலன்களைப் புறக்கணிக்கும் மத்திய அரசில் தமிழ்நாட்டவர்களையும் புறக்கணிப்பது அக்கட்சிக்கும் நல்லதல்ல!
இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 31 மே, 2019

தேர்தலுக்குப்பின்னர் - இலக்குவனார் திருவள்ளுவனின் நான்கு கட்டுரைகள்

அளவளாவல் : திரு ம.நித்தியானந்தம்

அகரமுதல


வைகாசி 19, 2050 / ஞாயிறு / 02.06.2019

மாலை 5.00

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,
சென்னை 600 017

அளவளாவல்: திரு ம.நித்தியானந்தம்

எழுத்தாளர், நூலக / திருத்தல ஆர்வலர் 

மூத்தோருக்கான தமிழ் வகுப்பு, கிங்குசுடன்

அகரமுதல


மூத்தோருக்கான தமிழ் வகுப்பு, கிங்குசுடன்

வைகாசி 18, 2050 சனி  01.06.2019

முதல் சனிக்கிழமை தோறும்

பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரை

துளசி, கிங்குசுடன்

மூத்தோருக்கான தமிழ் வகுப்பு

ஆர்வலர்களே! தமிழ் அறிய வருக!


புதன், 29 மே, 2019

கருத்துக் கதிர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]

அகரமுதல


கருத்துக் கதிர்கள் : 1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி.  2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3.  மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும்.  4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.


  1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி : தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபுதான். அந்த வகையில் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை  அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா போட்டியிலிருந்தார். அவர் தலைவராயிருந்தால் பா.ச.க. இருக்கும் இடம் தெரியாமல் எப்பொழுதோ போய் இருக்கும். இப்பொழுதும் எப்படியும் அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். பா.ச.க. தலைமை மரு.தமிழிசையை அமைச்சராக்குவதே  அதற்கு நல்லது.
  2. நாங்குநேரிக்கு ம.தி.மு.க.: இடைத்தேர்தல் வந்தால், அத் தொகுதியில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிக்கே அந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும். இதுவே முறையாகும். ஆனால் இதற்கு முன்னர்த் தி.மு.க. இதனை மீறியுள்ளது. இப்பொழுதும் பொதுநலன் கருதி மீறலாம். நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க.விற்கு ஒற்றைத் தொகுதி (+மாநிலங்களவை)  ஒதுக்கியிருந்தும் அவரும் அக்கட்சியினரும் கட்டுக்கோப்பாகத் தி.மு.க.கூட்டணிக்காக உழைத்தனர். தமிழகச் சட்டமன்றத்தில் ம.தி.மு.க. குரல் ஒலிக்க வேண்டும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் விலகியதால் ஒழிவிடமான நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியை ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும். இதனைப் பேராயக்(காங்.)கட்சியும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 3.மாநிலங்களவைக்குச் சுப.வீ., வேல்முருகன் அனுப்பப்படவேண்டும்:
வழக்குரைஞர் கரூர் தமிழ் இராசேந்திரன் முகநூலிலும் பகிரியிலும் குறிப்பிட்டவாறு தமிழ்நாட்டு நலன் கருதி தமிழக நலப் போராளிகளான பேரா.சுப.வீரபாண்டியன், வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல் முருகன் ஆகிய இருவரையும் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். கூட்டணித் தோழர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
 4.தமிழ்நாட்டிற்குப் பா.ச.க. அரசு உதவாதெனில் அதற்குத்தான் இழிவு:
நாடாளுமன்றத்திற்குப் பா.ச.க.ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறும் வாய்ப்பைத் தமிழக மக்கள் அளிக்கவில்லை. ஓரிடம் நீங்கலான அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணியால் பயனில்லை எனப் பேசுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் பொழுதுதான் கட்சிச்சார்பு. வென்ற பின்னரும் அரசு அமைத்த பின்னரும் கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவருக்கும் உரியவர்களே. எனவே, பா.ச.க.அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் கட்சிச்சார்பில் அணுகுமுறையை மேற்கொண்டால் அதற்குத்தான் இழுக்கு. எனவே, பா.ச.க. நடுவுநிலையுடன் நடந்து மக்கள் நலனில்  – திழக மக்கள் நலனில் கருத்து செலுத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் பொறுப்பு கிடைக்வில்லை என்று கவலைப்படாமல் சோர்ந்து போகாமல் தமிழக நலன்களுக்காகக் குரல் கொடுத்துத் தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும்! தமிழ் மொழியின் காவலர்களாக இருக்க வேண்டும்!
  1. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை: இராகுல் காந்தி தன் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், கட்சியின் பிற பொறுப்பாளர்களும் தலைவர்களும் அவரே தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். அடுத்தவர்களின் அழுத்தத்திற்கு அவர் இணங்கினால் இதுவரை நாடகமாடியதான அவப்பெயர்தான் வரும். அதேநேரம் அக்கட்சிக்கும் அவர் தலைவரவாக நீடிப்பது நல்லதுதான். எனவே, இரண்டிற்கும் இணக்கமாக இராகுல்(காந்தி)யும் இணைந்த கூட்டுத்தலைமையைப் பேராயக்(காங்.)கட்சிக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் காரமாக இரு தரப்பார் கருத்திற்கும் மதிப்பளித்ததாக இருக்கும்.
இலக்குவனார் திருவள்ளுவன்



ஞாயிறு, 26 மே, 2019

விடுதலை இதழின் 85 ஆம் ஆண்டு விழா, வாசகர் மாநாடு, விருது விழா, சென்னை

அகரமுதல


வைகாசி 18, 2050 சனி  01.06.2019 மாலை4.00
பட்டிமன்றம்
தொடக்கவுரை:  வழ..அருள்மொழி
நடுவர் : பேரா.சுப.வீரபாண்டியன்
வாசகர் சந்திப்பு
கலந்துரையாடல்: திராவிட இயக்க இதழியல்
.திருநாவுக்கரசு
கோவி.இலெனின்
.குமரசேன்
ஆளூர் சா நவாசு
இரா.விசயசங்கர்
விருது பெறுநர்:
பொத்தனூர் .சண்முகம்
கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
முகம் மாமணி
 பாராட்டுரை :

 மானமிகு கி.வீரமணி

வாழ்த்துரை :
தா.பாண்டியன்
.இராமசாமி
.மா.சாமி