சனி, 27 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 113: நிலத்தில் அமிழும் நிலம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 112: சனவரி 26 – தொடர்ச்சி

தோழர் தியாகு எழுதுகிறார்

சோசிமத்து: நிலத்தில் அமிழும் நிலம்

விழுங்கப்படுமுன் விழித்துக் கொள்வோமா?  

“இயற்கையின் மீது நம் மாந்தக் குலம் ஈட்டிய வெற்றிகளைச் சொல்லி நம்மை நாம் பாராட்டிக்கொள்ள வேண்டா. ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்த்த வெற்றிகளைக் கொண்டுவருவது மெய்தான். ஆனால் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் அது அறவே வேறான எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் முதலில் கிடைத்ததைப் பல நேரம் ஒழித்து விடுவதே உண்மை….”

இது 1876ஆம் ஆண்டில் பிரெடெரிக்கு எங்கெல்சு தந்த எச்சரிக்கை. (கட்டுரை: மாந்தக் குரங்கிலிருந்து மாந்தராக மாறிச் செல்வதில் உழைப்பு வகித்த பங்கு)

இன்று இந்த 2023ஆம் ஆண்டில் வட இந்தியாவில் இமயமலைத் தொடருக்கு நடுவில் உத்தரகாண்டு மாநிலத்தில் சோசிமத்து(Joshimath) என்ற அழகிய சிறு நகரத்தை நிலமடந்தை விழுங்கிக் கொண்டிருக்கிறாள். இயற்கைச் சீற்றமும் அதனால் ஏற்படும் பேரழிவுகளும் இந்த மாநிலத்துக்கும் ஊருக்கும் புதியவை அல்ல என்றாலும் இம்முறை மாந்தர்தம் பேராசையாலும் செயற்கையான வளர்ச்சி வெறியாலும் இந்த அவலம் நேரிட்டிருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

உத்தரகாண்டு மாநிலத்துக்கு இயற்கைப் பேரிடர்கள் புதியவை அல்ல. 1880க்கும் 1999க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலநடுக்கங்களும் நிலச்சரிவுகளுமான ஐந்து நிகழ்ச்சிகளில் மட்டும் 1,300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000 – 2009 காலத்தில் மட்டும் நிலச் சரிவுகளாலும் முகில் வெடிப்புகளாலும் திடீர் வெள்ளப் பெருக்குகளாலும் 433 உயிர்கள் பறிபோனதாக அதிகார முறைத் தரவுகள் சொல்கின்றன. 2010 – 2020 ஆண்டுகளுக்கிடையே மோசமான பருவநிலையின் கொடுந்தாக்கத்தால் 1,312 உயிர்கள் பலியாகின. சற்றொப்ப 400 சிற்றூர்கள் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உகந்தவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் நிலச்சரிவுகளும், திடீர் வெள்ளப்பெருக்குகளும், பனிப்புயல்களும் 300க்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டன.

“மழைப் பொழிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. இந்த மாற்றங்களுக்குக் காலநிலை மாற்றமே காரணம்” என்று பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் கருதுகின்றனர். இத்துடன் இவ்வளவு இடர்முனைப்பான பகுதிகளில் மனிதர்களின் கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களும் சேர்ந்து கொண்டதன் விளைவே சோசிமத்து அமிழ்வு என்னும் பேரிடருக்கு மூலக் காரணம் என்று சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

கடல்நீர் உள்வாங்குதல் பலநேரம் நாம் கண்டிருப்பதுதான், மண்சரிவுகளும் கூட மலைப் பகுதிகளில் புதியவை அல்ல. ஆனால் சோசிமத்தில் நாம் கண்டு வருவது வேறு வகையான நிகழ்வு. இதனை நில அமிழ்வு (land subsidence) என்று கூறுவர். இதில் நிலம் மெல்ல மெல்லக் கீழிறங்கும். ஊரே அடித்தளமில்லாத கட்டடம் போல் உள்வாங்கிச் செல்லும். இதுதான் சோசிமத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நில அமிழ்வினால் இப்போதைக்குச் சோசிமத்தில் கால் பகுதி பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உத்தரகாண்டு முதலமைச்சர் புட்கர் சிங்கு தாமி (Pushkar Singh Dhami)சொல்கிறார். சற்றொப்ப 25,000 மக்கள் வாழும் சோசிமத்து நகரத்தில் 2.5 சதுர அயிரை8ப்பேரடி(கிலோமீட்டர்) பரப்பில் 4,500 கட்டடங்கள் உள்ளன. இவற்றில் இது வரை 800க்கு மேற்பட்ட கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற கட்டடங்களை அதிகாரிகள் இடித்து வருகின்றார்கள். இந்த அமிழ்வைத் தடுத்து ஊரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்று நிலக்கூறியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். மலைச் சரிவில் மரங்கள் அடர்ந்து பசும் போர்வையாக அமைந்திருக்குமானால் மண்சரிவையும் நில அமிழ்வையும் தடுக்கலாம். இருந்த மரங்களை எல்லாம் வளர்ச்சிப் பூதம் விழுங்கி முடித்து விட்டது. இப்போது திடீரென்று ஒரு நாளில் பசும்போர்வையை மந்திரத்தால் வரவழைக்க அலாவுதீனின் அற்புத விளக்கு யாரிடமும் இல்லை.

ஒரு நூற்றாண்டுக்கு மேல் முன்னதாக நடந்த நிலநடுக்கத்தால்  மண்சரிந்து அந்த மண்மேட்டில்தான் சோசிமத்து நகரமே கட்டப்பெற்றது. அது நிலநடுக்க இடர்முனைப்பான ஒரு பகுதியில் அமைந்திருப்பது வேறு.     

இப்படியொரு பகுதியில் இந்திய அரசின் ‘வளர்ச்சி’ வெறி எப்படியெல்லாம் செயல்பட்டுள்ளது, பாருங்கள்.   

1976ஆம் ஆண்டே சோசிமத்தில் திண்ணிய கட்டடங்கள் கட்டக் கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என்று அரசு அறிக்கை முன்மொழிந்தது. மண்ணின் சுமைதாங்கும் திறனை ஆய்வு செய்த பிறகே கட்டுமானப் பணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றது. ஆனால் அரசே என்ன செய்தது பாருங்கள். திட்டவரைமுரையற்ற கட்டுமானத்துக்கு இடமளித்தது மட்டுமல்ல, முறையான வடிகால் வசதி செய்யவும் தவறியது. நீர்மின் திட்டநிலையங்கள் அமைத்தது. இந்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) தபோவன் விட்ணுகாடு(Tapovan Vishnugad) நீர்மின் திட்டம் என்ற ஒன்றை அமைத்து வருகிறது. இந்தத் திட்டத்துக்காக மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைப் பாதைதான் சோசிமத்தின் நில அமிழ்வுக்கு முகன்மைக் காரணம் என்று உள்ளூர் மக்கள் கருதுகின்றார்கள்.

நிலத்தடி நீரை மிகையாக உறிஞ்சி எடுப்பதும், நிலத்தடி நீர்ப்படுகைகளை வற்றச் செய்வதும் கூட நில அமிழ்வுக்குக் காரணமாகக் கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்தோனேசியத் தலைநகர் சகர்த்தா உலகிலேயே மிக விரைவாக அமிழ்ந்து கொண்டிருக்கும் நகரமாக இருப்பதற்கு இதுவே காரணம் எனப்படுகிறது. உலக அளவில் 80 விழுக்காட்டுக்கு மேல் நில அமிழ்வுக்குக் காரணமாயிருப்பது மிகையளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதுதான் என்று அமெரிக்க நிலக் கூறியல் ஆய்வகம் சொல்கிறது.

சோசிமத்து சிறிய நகரமே என்றாலும், பத்துரிநாத்து போன்ற புனிதத் தலங்களுக்கு நுழைவாயிலாகத் திகழ்கிறது. சில காலம் முன்பு இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி பத்துரிநாத்தில் வழிபாடு செய்யும் காட்சி படம்பிடிக்கப்பட்டு விரிவாக விளம்பரம் செய்யப்பட்டது. இவ்வகையில் சோசிமத்து முக்கியச் சுற்றுலாத் தலமாக இருப்பதால் பெருமளவிலான நீர்த் தேவையை சமாளிக்க நிலத்தடி நீர் ஒட்ட உறிஞ்சப்படுவதும் இப்போதைய அவலத்துக்கான காரணங்களில் ஒன்று.  

இந்திய அரசின் ‘வளர்ச்சி’ வெறியோடு இந்து மதவெறியும் சேர்ந்து கொண்டால் என்னாகும்? இதே உத்தரகாண்டில் உள்ள அரித்துவாரில் 2021 திசம்பரில் நடைபெற்ற ‘தரும சம்சத்து’ நிகழ்வில்தான் ‘சாது’க்கள் ஒன்றுகூடி இசுலாமியர்களை இனக் கொலை செய்ய வேண்டும் என்று வெறியோடு வெறுப்புமிழ்ந்தார்கள்.

அயோத்தியில் பாபர் மசூதியை அநியாயமாக இடித்துத் தரைமட்டமாகிய இடத்தில் இராமர் கோயில் கட்டுவது என்ற மதவெறித் திட்டத்தோடு நாடெங்கும் புனித யாத்திரைத் தலங்களை மேம்படுத்தி இந்துக் கடவுளர் மேல் பக்தி வளர்த்து மதவாத அரசியலுக்குத் தூபமிடுவதும் இந்துத்துவ ஆற்றல்களின் திட்டம்தான். இந்தத் திட்டத்தின் ஒரு கூறுதான் கேதர்நாத்து, பத்துரிநாத்து, கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய நான்கு புனித யாத்திரைத் தலங்களை இணைக்கும் ‘சார் தாம்’ சாலைத் திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக சோசிமத்து ஊடாக புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வந்தது. மக்கள் போராட்டங்களுக்குப் பின் இந்தப் பணி நிறுத்தபட்டுள்ளது. போராடியவர்களும் இந்துக்களே! இந்துக் கோயிலுக்குப் புனித யாத்திரை சென்று சாமி கும்பிடுவதற்கும் மண்ணில் அமிழ்ந்து போய் விடாமல் உயிரோடிருக்க வேண்டுமல்லவா?

இந்திய அரசைப் பொறுத்த வரை சோசிமத்து துயரத்திலிருந்து படிப்பினை கற்றுத் தன் ‘வளர்ச்சி’த் திட்டங்களை மீளாய்வு செய்வதற்கு மாறாக உண்மைச் செய்திகள் வெளிவராமல் தடுப்பதில்தான் கண்ணும் கருத்துமாகச் செயல்படுகிறது. இது சீன எல்லையோர நகரம் என்று சாக்குச் சொல்கின்றனர். பாதுகாப்புக் காரணங்கள் சொல்லி அகக் கட்டமைப்பு என்ற பெயரில் புதுப்புதுக் கட்டுமானங்கள் வரப் போகின்றன என்று பொருள்!

சோசிமத்து துயரம் உத்தரகாண்டுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் புதுத் தாராளிய வளர்ச்சி வெறி கொண்டு அலையும் ஒவ்வொரு நாட்டுக்கும் எச்சரிக்கையே!

இறுதியாக, மா எங்கெல்சின் தொலைநோக்கான எச்சரிக்கையோடு நிறைவு செய்வோம்:          

“… அயல்நாட்டு மக்கள் மீது படையெடுத்து வெற்றி கொள்கிறவனைப் போல், இயற்கைக்கு வெளியே நிற்கிற யாரோ போல், நாம் இயற்கையை எவ்விதத்தும் அடக்கியாள முடியாது என்று ஒவ்வோர் அடியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது. நாம் சதையும் குருதியுமாய் இயற்கைக்குச் சொந்தம், அதற்கு நடுவில் வாழ்கிறோம். இயற்கையின் மீதான நம் வல்லமை என்பதெல்லாம்: இயற்கையின் நெறிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பயன்படுத்த மற்ற விலங்குகளால் முடியாது, நம்மால் முடியும் என்பதே.”  

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
 83

வெள்ளி, 26 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 112: சனவரி 26

      26 May 2023      அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 111: கரிகாலனின் அரும்பணி- தொடர்ச்சி)

சனவரி 26

இன்று 74ஆம் இந்தியக் குடியரசு நாள். முடியரசு ஆட்சிமுறையோடு ஒப்புநோக்கின் குடியரசு ஆட்சிமுறை என்பது வரலாற்று நோக்கில் ஒருபெரும் முன்னேற்றப் பாய்ச்சல் என்பதில் ஐயமில்லை.

அடிமையுடைமைக் குமுகத்திலேயே குடியரசுக் கொள்கையைக் கடைப்பிடித்த பெருமை கிரேக்கத்துக்கும் உரோமாபுரிக்கும் உண்டு — அது ஆண்டைகளுக்கும் உயர்குலத்தினருக்குமான குடியரசாகவே இருந்த போதிலும்.   குடியரசுக் கொள்கையை அம்மக்கள் மதித்துப் போற்றினார்கள். சூலியசு சீசர் உரோமாபுரிக் குடியரசில் தனக்குக் கிடைத்த புகழில் மயங்கி தன்னை முடிமன்னனாக்கிக் கொள்ள முற்பட்ட போது அவனுடைய நெருங்கிய நண்பன் புருட்டசே அவனைக் குத்திக் கொன்றான். “நான் சீசரை நேசிக்கவே செய்தேன், ஆனால் அவனை விடவும் உரோமாபுரியைக் கூடுதலாக நேசித்தேன்” என்று சொல்லி அந்தக் கொலையை நியாயப்படுத்திய போது மக்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

குடியரசு பெயரளவுக்கான குடியரசாக இருந்தால் போதாது. அது குடியாட்சிய உள்ளடக்கம் கொண்ட குடியரசாகவும் இருக்க வேண்டும். முடியரசு அல்லாதவை அனைத்துமே வடிவ அளவில் குடியரசுகள்தாம். குடியாட்சிய உள்ளடக்கம் இல்லாத பல குடியரசுகளை உலகம் கண்டுள்ளது, இன்றும் கண்டு வருகிறது. இராணுவ வல்லாட்சிகள் பலவும் குடியரசுகளாகவே அறியப்படுகின்றன. அவை குடியாட்சிய உள்ளடக்கம் இல்லாத குடியரசுகள். பெயரளவுக்குக் குடியரசுகளாக இருப்பினும் செயலளவில் ஒரு குடும்பம் அல்லது குறுங்குழுவின் வல்லாட்சியப் பிடியில் இருக்கும் குடியரசுகளும் உண்டு. ஒற்றைக் கட்சி ஆளுமையில் உள்ள குடியரசுகளும் முழுமையான குடியாட்சியக் குடியரசுகளாக இருக்க முடியாது.

குடியரசுக் கொள்கை வரலாற்றுநோக்கில் முற்போக்கானதாக இருப்பினும், இன்றைய உலகம் மொத்தத்தில் முடியரசுக் காலத்தைக் கடந்து குடியரசுக் காலத்துக்குள் நுழைந்து விட்டதென்பது உண்மையானாலும், குடியாட்சிய உள்ளடக்கம் பெற்ற குடியரசுகளுக்கான போராட்டத்தை உலக மக்களும் மக்களினங்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.   

குடியாட்சியம் (சனநாயகம்) என்பதற்கு வாக்குரிமையும் தேர்தலும் இன்றியமையாதன. ஆனால் அவை மட்டுமே குடியாட்சியம் ஆகி விட மாட்டா. ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களை உள்ளடக்கிய ஒரு குடியரசில் அந்தத் தேசங்கள் தன்-தீர்வுரிமை (சுய நிர்ணய உரிமை) பெற்றுள்ள போதுதான் அது உண்மையான குடியாட்சியக் குடியரசு ஆகும்.

இலங்கைத் தீவில் குடியேற்றஆதிக்க(காலனியாதிக்க)க் காலத்திலேயே 1930௧ளின் தொடக்கத்தில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை (universal adult franchise) வழங்குவதற்கான தோனமோர் ஆணையப் பரிந்துரைகள் பற்றித் தமிழர் தலைவர்களில் ஒருவரான பொன்னம்பலம் இராமநாதன் (“தோனமோர், தமிழ்சு நோ மோர்” [Donough more Tamils no more]) என்று கூவினாராம்! தோனமோர் வந்தால் தமிழன் செத்தான்! ஏனென்றால் சிங்களர் முக்கால் பங்கும் தமிழர் கால் பங்கும் இருக்கிற நாட்டில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது பெரும்பான்மையான சிங்களரின் ஆதிக்கத்துக்கு வழிகோலும், தமிழர்களை இரண்டாந்தகைக் குடிமக்களாக்கி விடும்! இராமநாதனின் அச்சத்தைப் பின்வந்த வரலாறு மெய்ப்பித்து விட்டது.  

ஒரு தேசிய இனம் பெரும்பான்மையாகவும் மற்றொரு தேசிய இனம் சிறுபான்மையாகவும் இருக்கும் சூழலில் பெரும்பான்மையாதிக்கம் ஏற்படாமல் தடுக்க ஒரே வழி பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட தன்-தீர்வுரிமைதான்! தேசிய இனங்களின் நிகர்மையையும் விடுமையையும் இது ஒன்றே உறுதி செய்யும். இலங்கைத் தீவில் சிறுபான்மை நலன்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறிக் கொண்ட ‘சோல்பரி’ அரசமைப்பினால் சிங்களப் பேரின வெறிக்கு அணைபோட முடியவில்லை.

டொமினியன்’ தன்னரசுத் தகுநிலையில் இருந்த ‘சிலோன்’ 1972ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்கா தலைமையில் முதல் குடியரசு அரசமைப்பை ஏற்ற போது வடிவ அளவில் அது ஒரு முன்னேற்றமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது சிங்களப் பேரினவாதத்துக்கு முழுமையான சட்ட வடிவம் கொடுக்கும் ஏற்பாடே என்பதால் தந்தை செல்வா தலைமையில் தமிழ்மக்கள் அந்தக் குடியரசைப் புறக்கணித்தார்கள். இன்றளவும் சிறிலங்கா குடியரசு என்பது தமிழ்மக்களின் ஒப்புதல் பெறாத ஒன்றாகவே நீடித்து வருகிறது. சிறிலங்கா தன்னைக் குடியாட்சியக் குடியரசாகவும், ஏன், குமுகியக் (சோசலிச) குடியரசாகவும் கூட அறிவித்துக் கொள்ளலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அது சனநாயகக் குடியரசு அல்ல, இனநாயகக் குடியரசே ஆகும். It is not democracy, but ‘ethnocracy’. இந்த இனநாயகத்தின் உச்ச வெளிப்பாடுதான் இனவழிப்பு.

சிங்கள, தமிழ்த் தேசங்களின் நிகர்மையும் இரு தேச உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் நிறுவப்பட வேண்டுமானால் சிறிலங்கா மெய்யாகவே குடியாட்சியக் குடியரசாக — எந்தத் தேசமும் மற்றத் தேசத்தை ஒடுக்குதல் இல்லாத குடியாட்சியக் கூட்டாட்சிக் குடியரசாக — மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு குடியரசாக வழி இல்லையென்றால் இரு குடியரசுகளாக வேண்டும்.  ஒரு சிங்களக் குடியரசும் ஒரு தமிழ்க் குடியரசுமாக அமைத்துக் கொண்டால் இரண்டுமே குடியாட்சியக் குடியரசுகளாக இருக்க முடியும். இனவெறி ஒழியும். மக்கள் ஒற்றுமை மலரும். இஃதல்லாத எந்தத் தீர்வும் இனநாயகத் தீர்வாக இருக்குமே தவிர சனநாயகத் தீர்வாக இருக்க முடியாது.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இனவெறி அரசும் கறுப்பின மக்களை ஒடுக்கும் இனஒதுக்கல் அரசாக இருந்து கொண்டே தன்னைக் குடியரசாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தது. ‘ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு’ என்ற முழக்கத்துடன் நெல்சன் மண்டேலா தலைமையில் தென் ஆப்பிரிக்க மக்கள் உண்மையான குடியாட்சியக் குடியரசுக்காகப் போராடி விடுதலை பெற்றார்கள்.   

ஒரு குடியரசு பெயரளவில் அல்லது வடிவளவில் மட்டும் குடியரசாக இருந்தால் போதாது. அது குடியாட்சிய உள்ளடக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு குடியரசின் தோற்றம் என்பது ஒருநாள் நிகழ்வன்று. ஒரே ஒருவரால் அல்லது ஒரே ஒரு கட்சியால் நிகழ்வதுமன்று. குடியரசு ஆக்கம் என்பது ஒரு போராட்டச் செயல்வழி. ஒரு காலத்தில் அல்லது கட்டத்தில் முற்போக்காக இருந்து குமுக முன்னேற்றத்துக்குத் துணை செய்யும் ஒரு குடியரசு பிறிதொரு காலத்தில் அல்லது கட்டத்தில் முன்னேற்றத்துக்குத் தடைபோடும் பிற்போக்குக்குக் குடியரசாக மாறிப் போவதும் உண்டு.

இந்தியக் குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் தன்னை இறைமையுள்ள குமுகிய சமயச்சார்பற்ற குடியாட்சியக் குடியரசு (SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC) என்று அறிவித்துக் கொள்கிறது. இறைமை, குமுகியம், சமயச் சார்பின்மை, குடியாட்சியம் இவையெல்லாம் எந்த அளவுக்கு மெய்? எந்த அளவுக்குப் பொய்? எந்த அளவுக்கு மெய்யும் பொய்யுமான கலவை? என்று விரிவாகப் பேச முடியும். வெறும் சொற்களை மட்டும் பிடித்துக் கொண்டிராமல் இந்த அரசமைப்பு கருவாகி உருவாகித் திருவான வரலாற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். புதுக்குடியேற்ற9காலனிய), புதுத்தாராளிய ஊழியில் இறைமையை எங்கு போய்த் தேடுவது? இன்று இந்தியாவின் இறைமை என்பதற்கு ஒரே பொருள் மாநிலங்களாகக் குறிக்கப் பெறும் பல்வேறு தேசங்களின் இறைமையை மறுப்பது தவிர வேறொன்றுமில்லை.

குமுகியமா (சோசலிசமா?) ஆழாக்கு என்ன விலை? சமயச் சார்பின்மை என்றெல்லாம் மோதி காலத்தில் கனவு காணவும் முடியுமா? விலைக்கு வாங்கப்படும் எம்எல்ஏ.க்களிடமும், வோட்டுக்குத் ‘துட்டு’ வாங்கும் வாக்காளர்களிடமும் கேட்டுக் குடியாட்சியத்தின் மதிப்பைத் தெரிந்து கொள்ள்ளுங்கள்.

மையம் மனமிரங்கினால் அரைக் கூட்டாட்சி, அது கோலெடுத்தால் கண்டிப்பான ஒற்றையாட்சி – இதுதான் இந்திய அரசமைப்பு. இந்தப் பொய்க் கூட்டாட்சியைத்தான் இந்திய அரசமைப்பின் அடிக் கட்டுமானங்களில் ஒன்று என்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்!  

அரசியல் குடியாட்சியத்துக்கே பஞ்சம் என்னும் போது அம்பேத்கர் வலியுறுத்திய குமுகக் குடியாட்சியம் (சமூக சனநாயகம்) பற்றிப் பேச என்ன இருக்கிறது? இந்தியாவை ஒரு தேசம் என்று திணிக்கும் முயற்சியில் இந்தியாவிலடங்கிய பல்வேறு தேசங்களுக்கும் உரித்தான தன்-தீர்வு (சுய நிர்ணயம்) மறுக்கப்படுவது மட்டுமல்ல, தேசம் என்ற ஓர்மையே (அடையாளமே) மறுக்கப்படுகிறது. எனவேதான் இந்திய அரசமைப்பை தேசங்களின் அடிமைமுறியாகப் பார்க்கிறோம்.

சமூக நீதிக் கண்ணோட்டத்திலும் வரலாற்றுவழி வந்த போராட்ட முத்திரைகளாகச் சில முற்போக்கு நெறிகளைத் தாங்கியுள்ள போதும் இந்திய அரசமைப்பு இறுதி நோக்கில் சாதிகாக்கும் சட்டமாகவே இருக்கிறது. எனவேதான் தந்தை பெரியார் சாதி ஒழிப்புப் போராட்டத்தை சட்ட எரிப்புப் போராட்டமாக நடத்தினார். அரசமைப்பின் சிற்பி என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்துகரும் மூன்றாண்டு காலத்துக்குள் அதற்கான பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

அறிவுத் தளத்தில் இந்திய அரசமைப்பின் அடிப்படையிலான இந்தியக் குடியரசை அறிஞர் ஆனந்து தெல்துமுதே சாதிக் குடியரசு என்றே வண்ணித்தார். இந்த அரசமைப்பை அம்பேத்துகர் பெயரில் நியாயப்படுத்தும் முயற்சிகளையும் உறுதியாக மறுதலித்தார். சரி, என்ன செய்யலாம்?

இந்திய அரசமைப்பு வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டாலும் அரசியல் வழியில் காலாவதியாகி விடவில்லை. இந்த அரசமைப்பும் அதன் சார்பியலான முற்போக்குக் கூறுகளும் (relatively progressive aspects) இப்போது மக்களுக்குப் பகையான பிற்போக்கு ஆற்றல்களின் நச்சு நோக்கங்களுக்குத் தடையாக நிற்கின்றன. முகப்புரை உட்பட எங்கெல்லாம் நல்ல குறிக்கோள்கள் சொல்லப்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றைச் சிதைக்க விரும்புகின்றார்கள்.

சமயச் சார்பற்ற இந்தியக் குடியரசை வெளிப்படையான இந்துக் குடியரசாக அறிவித்து இந்து இராட்டிரத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் இப்போதுள்ள மொழிவழி மாநில அமைப்பைக் கலைத்து விட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அரசு என்று வெளிப்படையான ஒற்றையாட்சியை ஏற்படுத்த விரும்புகின்றார்கள்.

இந்திய அரசமைப்பின் சமூக நீதிக் கூறுகளை ஒழித்துக் கட்ட ஆசைப்படுகின்றார்கள். பொருளியலில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில் பார்ப்பனருக்குச் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய இடஒதுக்கீட்டுக்குக் கல்லறை கட்டும் முதல் முயற்சியே தவிர  வேறல்ல.

தொழிலாளர் நலம், உழவர் நலம், மாதர் நலம், இளைஞர் நலம் உள்ளிட்ட சேமநலக் கூறுகளை அடியோடு நீக்கி விட்டுப் பன்னாட்டுப் பெருங்குழுமங்களின் கட்டற்ற சுரண்டல் வேட்டைக்கு வழியமைப்பதே அவர்களின் விருப்பம்.

இவையெல்லாம் நாளை நடந்து விடும் என்பதல்ல, இன்றே இப்போதே நடந்து கொண்டிருக்கும் கொடுமுயற்சிகள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகார வெறியினால் பிரெஞ்சு அரசமைப்பைச் சீர்குலைக்க முயன்ற உலூயி போனபார்ட்டைப் போல இந்துத்துவ வெறியோடு இந்திய அரசமைப்பைச் சீர்குலைக்க முயலும் நரேந்திர மோதி கும்பல் குறித்து நமக்கு எச்சரிக்கை தேவை.

இந்திய அரசமைப்பை இந்துத்துவ பாசிச அதிகாரத்தின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில்தான் நாம் விரும்பும் தமிழ்த் தேசக் குடியரசுக்காகப் போராடும் களத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். இந்தக் களத்தை இழந்தால் இந்தியாவின் முற்போக்கு முழுவதற்கும் அழிவுதான் மிஞ்சும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 
81

வியாழன், 25 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 111: கரிகாலனின் அரும்பணி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 110 : புதிய அறிவாய்தங்கள் தொடர்ச்சி)

கரிகாலனின் அரும்பணி

நேற்று நமது செய்தி அரசியல் இணைய அரங்கில் (உ)ரூட்சு வலையொளியின் அன்பர் கரிகாலன் ‘வேங்கைவயல் இழிவு’ குறித்து விரிவாகப் பேசினார். அன்பர்களின் வினாக்களுக்கும் விடையளித்தார். ஒற்றை வீரர் படையாக அவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது. புறஞ்சார்ந்து புலனாய்வு செய்து உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
குடிநீரில் மலங்கலந்த கொடியவன் அல்லது கொடியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் நிலையை அவர் நெருங்கி விட்டார். ஆனால் அந்த இறுதி உண்மையை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறைதான். காவல்துறை என்ன செய்துள்ளது? என்ன செய்யாமல் உள்ளது? ஏன்? ஏன்? காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டுகிறோம்.
கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறிமதி சாவையொட்டி அப்பாவி மக்கள் மீது காவல்துறை தொடுத்த அடக்குமுறையையும் பொய் வழக்குகளையும் திறம்பட அம்பலமாக்கியவர் இதே (உ)ரூட்சு கரிகாலன்தான். அவர் வெளிப்படுத்திய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் ஆங்கில நாளேடு இந்து ஒரு செய்திக் கட்டுரையே வெளியிட்டது. காவல் துறையின் கண்மூடித்தனமான அனாட்சிக்கு (அராசகத்துக்கு) ஓரளவு கடிவாளமிட்டதே கரிகாலனின் அயரா முயற்சிதான். குண்டர் சட்டப் பொய் வழக்கில் சிறைவைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர் இராமலிங்கத்துக்காக அறிவுரைக் கழகத்தில் நான் வாதிட்ட போதும் கரிகாலன் வெளிப்படுத்திய உண்மைகளைத்தான் சான்றாகக் கொண்டேன். இராமலிங்கம் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதை நீதியர்களே ஒப்புக் கொண்டனர். அரசு அவரை விடுதலை செய்து விட்டது.


ச. தமிழ்ச செல்வனின் செவ்வினாக்கள்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் நேற்று இந்து தமிழ் திசை நாளிதழில் ‘இடையிலாடும் ஊஞ்சல்’ பகுதியில் “போதுமான அதிர்ச்சி இல்லாப் பொதுச் சமூகம்” என்ற தலைப்பில் வேங்கைவயல் இழிவு குறித்து எழுதியுள்ளார்.
தாழி அவரைப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரையை அனைவரும் படிக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ்ச்செல்வனின் எழுத்தில் எடுப்பாக வெளிப்படும் சில பார்வைகள் – உள்ளத்தின் அடியாழத்திலிருந்து அவர் எழுப்பும் செவ்வினாக்கள் – நம் ஆழ்ந்த கவனத்துக்குரியவை:
1) வெண்மணி (1968), திண்ணியம் (2002) வரிசையில் மற்றுமொரு கொடுமை இறையூர் வேங்கைவயல்.

2) தமிழ்ச் சமூகம் இந்த இழிவு குறித்துத் அதிர்ச்சி அடைய வில்லை, தலித் மக்களுக்கு அநீதி நிகழும் போது அசட்டையாக இருக்கிறது என்றால், நம் சமூகம் என்கிற பொதுச் சமூகம் ஒன்று இருக்கிறதா?
3) உண்மையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்பதாக நம் சமூகம் பிளவுண்டிருப்பதை விட ஒடுக்கப்பட்டோர் -ஓடுக்கப்படாதோர்(தலித்து – தலித்து அல்லாதோர்) என்கிறதாகத்தான் ஆழமாகப் பிளவுண்டு கிடக்கிறது.
4) சாதி இந்துச் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பப் பேரியக்கமாக ஓர் அறிவியக்கம் தேவைப்படுகிறது.
உரையாடல் மட்டுமல்ல, ஒன்றுபட்ட முயற்சிகளும் தொடர வேண்டும். கரிகாலனும் தமிழ்ச்செல்வனும் ஏற்றியுள்ள சுடர்களைக் கொண்டு பல விளக்குகள் ஏற்றலாம். ஏற்றுவோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 79

புதன், 24 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 110: புதிய அறிவாய்தங்கள்

 




(தோழர்தியாகுஎழுதுகிறார்  109 : ‘ஆளுநர்உரை’ – ஓர்ஊடுநோக்கு (3) தொடர்ச்சி)

புதிய அறிவாய்தங்கள்

இனிய அன்பர்களே!

பெருந்தொற்றுக் காலத்தில் நான் முகநூல் இடுகைத் தொடராக எழுதிய         நூல் – தமிழ்நாட்டில் திரவிட, தமிழ்த் தேசிய ஆளுமைகளிடையே வெடித்த அறிக்கைப் போரில் என் இடையீடு – ஈழம் மெய்ப்படும் –  நீண்ட காலத் தாழ்வுக்குப் பின் அச்சேறி  நூலாக வெளிவந்துள்ளது.

 பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற என்னுரைக்கு மறுப்பாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் எழுதிய நூல் திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? இந்நூலில் அவர் தேசிய இனச் சிக்கல் தொடர்பான மார்க்குசிய அணுகுமுறை மீதும், அது தொடர்பான என் மார்க்குசியப் புரிதல் மீதும் தொடுக்கும் தாக்குதலுக்கு மறுமொழியாக உரிமைத் தமிழ்த்தேசம் திங்களேட்டில் நான் எழுதிய கட்டுரைத் தொடர் தேசியத்தின் உரையாடல். இதுவும் நீண்ட காத்திருப்புக்குப் பின் நூல்வடிவம் பெற்று வெளிவந்துள்ளது,

மார்க்குசியம் அனா ஆவன்னா ஐந்தாம் பதிப்பு வெளிவந்துள்ளது. மார்க்குசின் தூரிகை புதிய பதிப்பு அச்சுக்கு அணியமாய் உள்ளது.

காலநிலை மாற்றமும் அதன் தீய விளைவுகளும் பற்றி நிறைய எழுதியுள்ளோம். தொடர்ந்து எழுதியும் வருகிறோம். ஆனாலும் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டதாகச் சொல்வதற்கில்லை. அரசியல், மெய்யியல், பொருளியல் கல்வி போலவே சூழலியல் கல்வியும் பரவலாக  விதைக்கப்படுவது உடனடித் தேவையாக உள்ளது. இந்தத் தேவையைச் சிறப்பாக நிறைவு செய்யக் கூடிய நூல் தோழர் சமந்தாவின் சூழலியல் அடிப்படைகள். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் வெள்ளிதோறும் இணைய வகுப்பில் அவர் நடத்திய பாடங்கள், உரிமைத் தமிழ்த்தேசம் ஏட்டில் அவர் தொடர் கட்டுரைகளாக எழுதியவை தொகுக்கப்பெற்று இப்போது நூல் வடிவம் பெறுகின்றன. விரைவில் உங்கள் கையில் ஓர் அறிவாய்தமாக மிளிரும்.(இந்நூல் இப்பொழுது வெளிவந்து விட்டது.)

‘தமிழ்நாடு இனி’ என்ற தலைப்பில் கடந்த ஈராண்டுக்கு மேலாக இணையத்தில் அறிவன் தோறும் நான் நடத்தி வரும் அரசியல் வகுப்புகள் தொடர்வரிசையாக நூல் வடிவம் பெறவுள்ளன.

இவையெல்லாம் நீங்கள் படிக்கவும் பரப்பவும் மட்டுமல்ல, உரையாடவும் விவாதிக்கவும் கூட! அறிவூட்டி உணர்வூட்டி அணிதிரட்டும் நம் பணி அரசியல், பொருளியல், சூழலியல் கல்வியிலிருந்து தொடங்கட்டும்!

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 77

செவ்வாய், 23 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 109 ; ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3)

 




(தோழர் தியாகு எழுதுகிறார்  108: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3)– தொடர்ச்சி)

ஆளுநர் உரை’- ஓர் ஊடுநோக்கு (4)

இலவு காத்த கிளியாகத் திமுக அரசு

நலங்கிள்ளி எழுதுகிறார்

ஆகத், தோழர் பொன்முருகு பொதுத்தேர்வு(நீட்டு) கட்டாயப் பயிற்சி தேவை என்கிறார். தோழர் பொன்முருகு கூறுவது அநியாயம். மருத்துவராக விரும்பும் மாணவர்களுக்குப்பொ.தே.( நீட்டு) பயிற்சி அளிப்பதில் தவறில்லை. ஆனால் கட்டாய ப்பொ.தே.(நீட்டு) பயிற்சி கூடாது என்கிறேன். மருத்துவராகவே விருப்பமில்லாத மாணவரைப் பொ.தே.( நீட்டு) எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது மாணவர்களின் விருப்பத் தேர்வில் தலையிடுவது. இதைத்தான் தனியார் பள்ளிகள் செய்கின்றன. அதையே அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் நாடு அரசும் நீட்டிக்க வேண்டும் எனத் தோழர் பொன்முருகு கவின்முருகு கூற வருகிறார். அவர் அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகள் போல் இயங்க வேண்டும் என நினைக்கிறார்.

மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் சருவாதிகாரக் கல்வித் திட்டத்தை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது.

தோழர் தியாகு கூட தாழி 72இல் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்குக் கட்டாய நீட் பயிற்சி அளிக்கிறது என நான் கூறியதற்குப் பதிலளிக்காமல் தவிர்த்து விட்டார் என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நான் பதிலளிக்காமல் தவிரத்து விட்டேன் எனபது சரியன்று. தாழி மடல் 72க்குப் பிறகு அது பற்றி நான் எதுவும் எழுதவில்லை.

மருத்துவராகவே விருப்பமில்லாத மாணவர்களைக் கட்டாயப்படுத்திப் பொ.தே.( நீட்டு) எழுதச் சொல்கிறார்களா? ஆம் என்றால் அது தவறுதான். மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் சருவாதிகாரக் கல்வித் திட்டத்தை ஏற்க முடியாது என்பதும் சரிதான்.

பொ.தே.(நீட்டு) தொடர்பாகத் தமிழக அரசு என்ன செய்கிறது? என்ன திட்டம் வைத்துள்ளது? என்பதை வெளிப்படையாகத் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதி சட்டப்படி பொ-வு(நீட்டி)லிருந்து விலக்குப் பெறும் முயற்சிகளை அக்கறையோடு தொடர்வோம் என்பதாக இருந்திருப்பின் குறை சொல்ல முடியாது.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே பொ-வு.வைட(நீட்டை) ஒழித்து விடுவோம் என்று வாக்களித்து வாக்கு வேட்டை நடத்தியது தவறு. இதனைத் திமுக தலைமை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். நீட்டைக் கொண்டுவந்தது நீயா நானா என்று அதிமுகவுடன் இலாவணடிக் கச்சேரி நடத்திக் கொண்டிருப்பதால் பயனில்லை.

பொ-வு(நீட்டு) விலக்குச் சட்டத்துக்கு ஆளுநர் / குடியரசுத் தலைவர் ஒப்புதல் வேண்டித் தமிழ்நாட்டு மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். தமிழ்நாடு அரசல்ல, திமுக எனும் அரசியல் கட்சி போராட வேண்டும்.

இந்திய அரசமைப்பு எப்படி மாநிலத் தன்னாட்சிக்கு எதிராக உள்ளது என்பதைப் பெரியாரும் அண்ணாவும் எடுத்துக்காட்டியது போல் பரப்புரை செய்ய வேண்டும்.

இலவு காத்த கிளி போல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பது கையறு நிலையின் வெளிப்பாடே தவிர வேறல்ல. ஆளும் கட்சிக்குப் போராட மனமில்லாமல் இருக்கலாம். ஆனால் போராட முன்வருவோரைத் தடை செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

20.01.2023, திருவள்ளுவராண்டு 2053, தை 6, வெள்ளி

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 76


திங்கள், 22 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 108: இசுலாமியர் தொடர்பான உரையாடல்




(தோழர் தியாகு எழுதுகிறார் 107 : ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3) – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இசுலாமியர் தொடர்பான உரையாடல் தொடர்கிறது.

நலங்கிள்ளி ஓர் ஐயம் தெரிவித்திருந்தார் (தாழி மடல் 69):

சங் பரிவார் இசுலாமியர்களை எதிர்க்கிறார்கள், உண்மைதான். ஆனால் அந்த எதிர்ப்பில் ஓர் ஐந்து விழுக்காடு அளவுக்குக் கூட கிறித்துவர்கள் மீது காட்டுவது இல்லையே, ஏன்? மசூதிகளைக் குறிவைக்கும் கடப்பாரைகள் தேவாலயங்களைக் குறி வைப்பதில்லையே, ஏன்?

நலங்கிள்ளியின் வினாவுக்கு விடையளிக்க முற்பட்ட நான்
“எனக்குத் தோன்றும் காரணங்கள்” என்று 6 கருதுகோள்கள் முன்வைத்திருந்தேன்:

1) இசுலாமியரோடு ஒப்பிட்டால் கிறித்தவர்களின் தொகை குறைவு.

2) இசுலாத்தோடு ஒப்பிட்டால் கிறித்துவம் பார்ப்பனியத்துடனும் சாதியத்துடனும் கூடுதலாக இணக்கம் கொண்டது.

3) பிரித்தானியருக்கு முந்தைய இந்திய வரலாற்றில் இசுலாமியர் ஆளும் வகுப்பாக இருந்த காலங்கள் உண்டு. கிறித்துவர்கள் அப்படி இருந்ததாகத் தகவல் இல்லை.

4) இப்போதும் கூட கிறித்தவர் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இந்துத்துவ வெறியர்களால் குறி வைக்கப்படுகின்றார்கள். தமிழ்நாட்டில் குமரி மாவட்டம். ஒரிசாவிலும் சார்க்கண்டிலும் பழங்குடிகள் வாழும் பகுதிகள். இசுடான் கொலை செய்யப்பட்டார். இசுடான் சுவாமிக்கு நேரிட்ட கதி தெரிந்ததே.

5) கிறித்தவர்கள் சமயம் கடந்த உலகியல் அமைப்புகளில் கூடுதலாகப் பங்கு வகிப்பதால் கூடுதலாகப் பாதுகாப்பு பெற்றுள்ளார்கள். இசுலாமியர்கள் பெரும்பாலும் சமயம்சார்ந்த அமைப்புகளில் திரள்வது போல் பொது அமைப்புகளில் திரளாமளிருப்பது குறை. இது அவர்களைத் தனிமைப்படுத்த இந்துத்துவர்களுக்கு உதவுகிறது. அண்மைக் காலத்தில்தான் இசுலாமிய அமைப்புகளிடையே ஒரு மீளாய்வும் மாற்றமும் தென்படுகின்றன.
இவை மேலாய்வுக்குரிய கருதுகோள்களே என்பதையும் தெளிவாக்கியிருந்தேன். பொதுவாக மொழிக்கும் தேசிய இனத்துக்கும் கிறித்துவர்கள் தரும் முக்கியத்துவம் இசுலாமியர்கள் தருவதில்லை. மதத்தின் பெயரால் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தித் தாக்குவது இதனால் எளிதாகி விடுகிறது என்றும் கருத்துச் சொல்லியிருந்தேன்,

இதற்கு மறுமொழியாக நலங்கிள்ளி எழுதினார்:
சங் பரிவார் என்றில்லை. நான் நேரடியாகப் பார்த்த வரை, தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு இசுலாமியர் என்றால் அவ்வளவு வெறுப்பு. வீடுகளில் இசுலாமியர்களை மிகக் கேவலமாகப் பேசுவார்கள். நாம் மீசை வைத்து தாடி மழித்தால் அவன் மீசை மழித்து தாடி மழிக்கிறான் ; நாம் இடமிருந்து வலம் எழுதினால், அவன் வலமிருந்து இடம் எழுதுகிறான்; நாம் வேட்டி கட்டினால் அவன் கைலி கட்டுகிறான். இப்படி பல பல கேலிகள்.

மக்கள் தொகை எனப் பார்த்தால் வட தமிழ்நாட்டில் இசுலாமியர்களை விட கிறித்துவரக்ள் அதிகம். இசுலாமியப் படையெடுப்புகளால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனாலும் பார்ப்பனர்களுக்கு இசுலாமியர்களைக் கண்டால் அவ்வளவு கேலி, கிண்டல்.

பார்ப்பனர்களின் இந்த இசுலாமிய வெறுப்பு மெது மெதுவாக இப்போது பார்ப்பனரல்லாதோரிடமும் பரவி வருவது ஆபத்தான அறிகுறி.

தோழர் சமந்தா தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் (தாழி மடல் 70) “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர், கிறித்தவ சகோதர சகோதரிகளும் பொங்கல் திருநாள் கொண்டாடுகிறார்களா? கிறித்தவர்கள் கிறித்துமசு பண்டிகையையும், இசுலாமியர் ,ரம்சான் பண்டிகையையும் தங்களுக்கே உரிய சொந்தப் பண்டிகையாகக் கொண்டாடுவது போல் பொங்கல் திருநாளைக் கருதும் சூழல் உள்ளதா?” என்று வினாத் தொடுத்திருந்தார். “பழக்க வழக்க அடிப்படையில் பொங்கல் பண்டிகையில் காணப்படும் இந்து மத மேல்பூச்சு பண்டிகையின் பொதுமைப் பொருளையே திரித்து அதை இந்துக்களின் பண்டிகையாகக் குறுக்கும் போக்கும்” காணப்படுவதாக வருத்தப்பட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக அன்பர் இரவி (பரிவாதினி நூலகம்) எழுதுகிறார்

தாழி மடல் 72 இல் பொன்முருகு கவின்முருகு, தமிநாட்டில் உள்ள சிறுபான்மையினர் தங்களுக்கே உரித்தான பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் போல் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். ‘இல்லை’ என்பதுதான் இக்கேள்விக்குள்ளேயே இருக்கும் அவரின் மனக்குறை.

  • தாழி மடல் 69இல் தோழர் தியாகு அவர்கள், தோழர் நலங்கிள்ளியின் ஐயத்திற்கு பதிலளிக்கும் பகுதியில், இசுலாமியர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்த அமைப்புகளில் திரள்வது போல் பொது அமைப்புகளில் திரளாமல் இருப்பது ஒரு குறை. இது அவர்களைத் தனிமைப்படுத்த இந்துத்துவர்களுக்கு உதவுகிறது என்று பதிலளித்துள்ளார்.
    ………..
    நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் தாத்தாவின் தொழிலகத்தின் வரவுசெலவுகளை நிருவகித்தவர் ஓர் இசுலாமியப் பெரியவர்தான். ஆபுகானிலிருந்து வந்திறங்கியது போன்ற தோற்றத்தில்தான் எப்பொழும் இருப்பார். அவரை நாங்கள் சின்னையா என்றுதான் அழைப்போம். அவரை மட்டுமல்ல, அவரது மருமகன்களையும் அவ்வாறே விளிப்போம். அவர் வீட்டு பெண்களை எல்லாம் சித்தி என்று விளிப்போம். எங்கள் குடும்பப் பிரச்சனைகளில் தலையிட்டு அனைவரையும் கண்டிக்கும் நிலையில் இருந்தார். குடும்ப உறுப்பினரைப் போன்று அவரது பேச்சிற்கு எங்கள் குடும்பத்தில் மரியாதை இருந்தது. நாங்கள் குல தெய்வ வழிபாட்டிற்குச் செல்லும் போது அனைத்தையும் முன்னின்று நடந்துபவர் சின்னையாதான். எங்களுடன் அவர் உறவாடுவதிலும் அவருடன் நாங்கள் உறவாடுவதிலும் அவரது இசுலாமிய தோற்றமோ மதமோ ஒரு பொருட்டாகவே தென்பட்டதில்லை.
    ….
    தான் நோய்வாய்ப்பட்டிருந்த போது தனக்கு மருத்துவம் பார்த்து பிழைக்க வைத்த மொகைதீன் பிச்சை என்ற இசுலாமியப் பெரியவரின் நினைவாக தனது பெயரை மொகைதீன் பிச்சை என்று மாற்றிக் கொண்ட எங்களின் உறவுகாரப் பெரியப்பா ஒருவரும் இருந்தார்.
    ………
    இப்படி நிறைய சொல்லிக் கொண்டே செல்லலாம். இசுலாமியர்களை உறவு முறைகளை சொல்லித் தானே நாமும் நமக்கு முந்தைய தலைமுறையினரும் அழைத்தோம்.

இப்பொழுது இசுலாமியர்களை ‘பாய்’ என்ற ஒற்றை விளிச்சொல்லால் விளிக்கும் போக்கு உள்ளது. முன்பிருந்த உறவுப் பெயர்களின் இடத்தில் இந்த ‘பாய்’ என்ற சொல் எப்பொழுது எப்படி வந்து ஆக்கிரமித்தது? இந்தப் பொதுச் சமூகம் ‘பாய்’ என இசுலாமியர்களை விளிக்கும் போது அவர்களிடமிருந்து ஒரு விலகலைக் கடைபிடிக்கவில்லையா?
…..
கடந்த சில பத்தாண்டுகளாக இசுலாமியர்களிடமிருந்து பொதுச் சமூகம் விலக ஆரம்பித்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். இசுலாமியர்களிடம் காணப்படும் மிக ஆழமான மத நம்பிக்கையை இந்தப் பொதுசங சமூகம் அடிப்படைவாதமாக காண்கிறது. இசுலாமியர்களுக்கு நிகரான மத நம்பிக்கை ஏனைய மதப் பிரிவினரும் கடைபிடிக்கத்தான் செய்கின்றனர்.

அரசியல் முறையாக சில இசுலாமிய அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கையின் எதிரிடையான விளைவுகளுக்கு ஒட்டுமொத்த இசுலாமியச் சமூகமும் விலக்கி வைக்கப்படும் நிலையே இன்று நிலவுகிறது.
…….
இசுலாமியர்களுக்கு எதிராக ஊட்டப்படும் வெறுப்புணர்வுப் பரப்புரை இச்சமூகத்தின் கூட்டு நனவிலியில் படிந்து விட்டதாகத் தோன்றுகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மகுடை( கொரோனா) பெருந்தொற்று.

மகுடை(கொரோனா) பெருந் தொற்றிற்கு முதல் உயிர்பலி மதுரையை சார்ந்த ஓர் இசுலாமியர். அயல்நாட்டிலிருந்து வந்த அவரது உறவினரால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட இசுலாமியர்களால் இந்தியா முழுவதும் தொற்று பரவியதாக செய்திகள் வெளியாயின.

அதுவரையில் தனது தெருவிலேயே இருக்கும் – பக்கத்துத் தெருவிற்குக் கூட போகாத – இசுலாமியரைக் கண்ட உடன் இந்த பொதுச் சமூகம் அதுவரையில் தாடையில் அணிந்திருந்த முகக் கவசத்தை அவசர அவசரமாக மூக்கிற்கு எற்றிக்கொண்டதை காண முடிந்தது.

மகுடை(கொரோனா) தொற்றின் போது தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. இசுலாமியர் என்பதற்காக இந்த இடைவெளி சற்று கூடுதலாகவே இருந்தது.
……..
இசுலாமியர்களோடு உறவு முறை கொண்டாடிய இச்சமூகத்தின் கூட்டு நனவிலியில் இசுலாமியர்கள் மாற்றார் என்ற கருத்து பொதிய வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தொடக்கத்தில் உள்ள பத்திகளுக்கு வருவோம். தோழர்கள் இருவரின் கருத்துகளும், இப்பொதுச் சமூகமும் இசுலாமியர்களிடமிருந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டு, இசுலாமிய சமூகம் பொது சமூகத்திடமிருந்து விலகி நிற்பதாக காட்டுகின்றன. இங்கும் கூட்டு நனவிலி வேலை செய்கிறதா?

  • சமரன் (18.01.2023)

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 75