செவ்வாய், 14 ஜூலை, 2009

திருவள்ளுவர் சிலையைத் திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு



பெங்களூர், ஜூலை 13: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.


பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 9-ல் திறந்துவைக்கிறார்.

அதேபோல சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆகஸ்ட் 13-ம் தேதி திறந்துவைக்கிறார்.


இந்நிலையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து கன்னட கலாசார சங்கம் மற்றும் ஜெய் கர்நாடகா அமைப்பு போன்றவற்றைச் சேர்ந்தோர் மல்லேஸ்வரம் தேவய்யா பூங்கா அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"தமிழக அரசு மேற்கொண்டுவரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து, அங்கு இரு மாநிலங்கள் சேர்ந்து கூட்டு சர்வே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட பிறகு திருவள்ளுவர் சிலைத் திறக்கலாம்' என்று கன்னட அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர்.

கருத்துக்கள்

'ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால் சாக இந்தியா என்று சாற்றிடுவோம்!' என முழங்கியவர்கள்தாம் இதற்கு மறுமொழி தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் திருக்குறள் கட்டாயமாகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட ஒத்தூதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் முதல் குடிமகனாகத் தமிழனே இருந்தபோதும் திறக்கப்படாத் திருவள்ளுவர் சிலை நமக்கு எந்த சூடு சொரணையும் தராத பொழுது நாம் இதுபற்றிப் பேச என்ன இருக்கிறது? அங்குள்ள தொலைக்காட்சிக் கட்டமைப்புகள் கொட்டிக் குவிக்கும் பணத்தைப் பாதுகாத்தால் போதுமே! சிலை - அது வெறும் கல்! அதைப்பற்றி நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? தமிழக அரசியல் கட்சிகளின் தலைமை தமிழ்இன நல ஆன்றோர்களிடம் இருந்தால்தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். இல்லையேல் கொத்தடிமைத் தமிழர்கள் குத்துக் கல்லாக உட்கார்ந்து கொண்டிருப்பதை விட வேறு எதுவும செய்ய மாடடோம். ஓங்குக குறள்நெறி! இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/14/2009 4:44:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக