செவ்வாய், 14 ஜூலை, 2009

லசந்தவை போட்டுத்தள்ளியது நானே
அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்க அறிவிப்பு
பிரசுரித்த திகதி : 14 Jul 2009

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அதிகமாகத் துள்ளினார். அவருக்கு வேலையைக் கொடுத்தேன். போத்தலயவும் துள்ளினார். அவரது காலை உடைத்துப் போட்டேன். தற்போது எனது தேர்தல் தொகுதியில் எங்களது ஒருவனே எனக்கு விளையாட்டுக் காட்டுகின்றார். அவரது ஊருக்கே வந்து, இன்று நான் இதனைக் கூறுகின்றேன், அவருக்கு நான் இன்னமும் ஐந்து நாட்கள் மாத்திரம் கொடுக்கின்றேன். களனி பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகவில்லையென்றால், நான் கெட்டவன் என்று கூறவேண்டாம். அதன்பின்னர் என்னை யாரும் குறைகூறக் கூடாது. எனது வார்த்தை மீறிச் சென்றால், அவரையும் லசந்தவை அனுப்பிய இடத்திற்கு அனுப்பிவிடுவேன்' என அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

களனி, ஹூனுபிட்டியவில் ச.தொ.ச நிலையமொன்றைத் திறந்துவைக்கும் நிகழ்விற்காக கடந்த வியாழக்கிழமை (09) ஹூனுப்பிட்டிய பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமொன்றிலேயே அமைச்சர் மேர்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார். மேர்வின் சில்வாவின் இந்த பகிரங்க உரையின் ஒலிநாடவை ஜனாதிபதிக்கும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக, இந்தத் தகவல்களை வழங்கிய களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரை இந்தக் கூட்டத்தின்போது அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும் வரையில் தாம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை எனவும், எந்தவொரு சக்திக்கும் அடிபணியப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா கெக்கரித்துள்ளார்.

மேர்வின் சில்வாவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டு சில தினங்களான நிலையில், நேற்று முன் தினம் (12) அதிகாலை களனி, ஹூனுபிட்டி, பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள களனி பிரதேச சபையின் தலைவரின் வீட்டிற்குள் பிரவேசித்த இனந்தெரியாத குழுவினர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிரதேச சபைத் தலைவரின் மனைவி, சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக