(தோழர் தியாகு எழுதுகிறார் 30 தொடர்ச்சி)
ஏ. எம். கே. (9)
நாங்கள்… எங்கள்…
தஞ்சையார் எனப்படும் தஞ்சை அ. இராமமூர்த்தி மாணவராய் இருந்த காலத்திலிருந்தே தமிழக அரசியல் உலகில் நன்கறியப்பட்டவர். ஆனால் வழக்கறிஞரான பிறகும் கூட சட்ட உலகில் அந்த அளவுக்கு அறியப்படாதவராகவே இருந்தார்.
சட்டப் படிப்பு படிக்கும் போதும் அது முடிந்த பிறகுங்கூட தஞ்சையார் அநேகமாய் முழுநேர அரசியல்வாதியாகவே செயல்பட்டு வந்தார்.
காமராசரின் வழிகாட்டுதலில் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டு, சென்னை தொடங்கி அடுத்தடுத்த மாவட்டத் தலைநகரங்களில் மாநாடுகள் நடத்தப்பட்ட போது சென்னை சட்டக் கல்லூரி மாணவராக இருந்த தஞ்சை இராமமூர்த்தி தலைமையில்தான் யாவும் நடைபெற்றன. குடந்தைக் கல்லூரி மாணவனாயிருந்த அடியேனும் இந்தப் பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கேற்றேன். குறுகிய காலம் என்றாலும் செறிவான பட்டறிவூட்டிய அந்தக் கதையைத் தனியாகத்தான் சொல்ல வேண்டும்.
இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லலாம். எனக்கு அப்போதே (1968-69) ‘நக்சலைட்டு’ முத்திரை விழுந்து விட்டது. என் பேச்சும் எழுத்தும் அப்படித்தான் என்னை அவர்களுக்குக் காட்டிற்று. கருப்பையா மூப்பனார் வழக்கமாக என்னைப் பிரசங்கி என்பார். “நாங்கள் பிரசிங்கிகளாகவே இருக்கிறோம், நீங்கள் தலைவர்களாகவே இருங்கள்” என்று சொல்வேன், சிரிப்பார். கடைசியில் “தீவிரவாதி” என்று அழைக்கத் தொடங்கினார். இதே முத்திரையைப் பயன்படுத்தி மாவட்ட மாணவர் காங்கிரசுத் தலைமைக்கு நான் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். அந்தக் கட்டத்தில் தஞ்சையார் என் பக்கம் நின்றார். என் நிலைபாடுகளை ஆதரித்தார்.
முழுமையாக இயக்கத்துக்கு வருமுன் தஞ்சையாரை சந்திக்கச் சென்றிருந்தேன். ‘வாங்க நக்சலைட்டு” என்றார். தஞ்சாவூர் சீனிவாசநகரில் அப்போதுதான் வீடுகட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. இரவு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம். முழுக்க அரசியல்தான். என் பேச்சிலிருந்து என் சிந்தனைப் போக்கைக் கணிப்பது அவருக்கு எளிதாய் இருந்திருக்க வேண்டும். “கொள்கைதான் பெரிது என்று நினைக்கும் போது சரியெனத் தோன்றுவதைச் செய்யுங்கள். என் வாழ்த்து எப்போதும் உண்டு” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.
ஒரு முறை நான் தஞ்சையாரிடம் கேட்டேன்.
“என்னண்ணா வக்கீலாயிட்டீங்க. நீதிமன்றத்துக்கெல்லாம் போறதில்லையா?”
“ஞாயிற்றுக் கிழமையில்தான் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. அன்றைக்கென்று நீதிமன்றத்தை மூடுகிறார்களே, என்னசெய்வது?
தஞ்சையார் காலம் தாழ்ந்தே வழக்கறிஞராகத் தொழில் புரியத் தொடங்கினார் என்றாலும், வெகு விரைவில் தஞ்சாவூரில் முதன்மையான வழக்கறிஞர்களில் ஒருவராகி விட்டார்.
சரி, கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராகத் தோழர் ஏஎம்கே தஞ்சை அமர்வு நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த வழக்கில் வாதிடும் வாய்ப்பு எதிர்பாராமல் தமக்கு வந்த போது தஞ்சையார் பெருமகிழ்வுற்றார்.
அரசியலில் நிலைப்பாடுகள் என்று இருப்பது போல் நாட்டங்கள் அல்லது மனச்சாய்வுகள் என்ற ஒன்றும் உண்டு. நிலைப்பாடுகளில் எப்படி இருந்த போதிலும் தஞ்சையாருக்கு ஓர் இடதுசாரி மனச்சாய்வு இருந்தது. அதற்கு இந்த வழக்கு ஏற்றதாய் இருந்தது.
இரண்டாவதாக,
தோழர் ஏ.எம். கோதண்டராமனைப் பொறுத்த வரை இது முழுக்கப் பொய் வழக்கு என்பது தஞ்சையாருக்குத் தெரிந்திருந்தது. வழக்கு நடத்த ஏஎம்கே ஒத்துழைக்க மாட்டார் என்பதும் அவருக்குப் புரிந்ததுதான். குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு வழக்கறிஞரால் வழக்கு நடத்தி வெற்றி காண முடியுமா? கடினம்தான்!
இருந்தாலும், இந்த வழக்கில் அது சாத்தியம் என்றே தோன்றியது. சாட்சியம் என்ற பெயரில் சாட்சிகள் உளறிக் கொட்டியதைக் கேட்டு தஞ்சையார் மட்டுமல்லாமல் ஏனைய வழக்கறிஞர்களும் கூட அப்படித்தான் நினைத்தார்கள். நீதிபதியும் கிட்டத்தட்ட அப்படி ஒரு மனநிலைக்கு வந்து விட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.
காவல்துறை வழக்கின்படியே கூட, கொலையில் ஏஎம்கேயின் பங்கு என்பது தூண்டுதலாகவும் உடந்தையாகவும் இருந்தார் என்பதுதான். ஆனால் இதற்கே கூட நம்பும்படியான சாட்சியங்கள் இல்லை. அரசுத் தரப்புச் சாட்சியத்தில் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருந்தாலும் அதை வாதுரையில் தகர்த்து விட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தஞ்சையாருக்கு இருந்தது.
இந்த நிலையில்தான் நீதிபதியின் கேள்விகளுக்கு ஏஎம்கே சொல்லப் போகும் விடைகள் முக்கியத்துவம் பெற்றன. ஏஎம்கே வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம், ‘நான் குற்றவாளி அல்ல’ என்று சொன்னால் போதும், அல்லது ‘இது பொய் வழக்கு’ என்றோ ‘இந்தச் சாட்சிகள் சொல்வது உண்மையல்ல’ என்றோ சொன்னாலே போதும், மற்றதைத் தஞ்சையார் பார்த்துக் கொள்வார்.
தஞ்சையார் கெஞ்சாத குறையாய் விடுத்த வேண்டுகோளுக்கு ஏஎம்கே எந்தப் பதிலும் சொல்லாமல் புதிராக முறுவலித்த போது, இந்த மனிதர் பதில் சொல்ல மறுக்கப் போகிறார் என்றுதான் தஞ்சையார் நினைத்தார்:
‘சரி, ஏதாவது செய்யட்டும். மெளனம் இச்சூழலில் மறுப்பின் அடையாளம் என்று வாதிடலாம்.’
ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ஏஎம்கே பதில் சொன்னார். அந்தப் பதிலும் யாருமே எதிர்பார்க்காதது:
”ஆம், நாங்கள்தான் செய்தோம். அது எங்கள் கடமை”
ஏஎம்கே அப்படிச் சொன்ன போது, தஞ்சையாருடன் சேர்ந்து நீதிமன்றமே அதிர்ந்து போனது. நீதிபதி கையிலிருந்த பேனாவைத் தூக்கிப் போட்டுவிட்டு இருக்கையில் சாய்ந்து விட, வழக்கறிஞர்களிடையே “போச்சு, போச்சு” என்ற முணுமுணுப்பு எல்லோரும் ஏஎம்கேயைத் திரும்பிப் பார்க்க, அவர் அவர்களை நோக்கி வழக்கமான புன்முறுவலை வீசினார்.
தஞ்சையார் நீதிமன்றக் கூடத்துக்கு வெளியே எழுந்து சென்று ஒதுக்குப்புறமாய் மரத்தடியில் நின்று ஒரு சேவல் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு யோசித்தார். ஏ.எம்.கே. உதிர்த்த சொற்களை மனத்துக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தார். ஆங்… அப்படித்தான் இருக்க வேண்டும்…..
முறுக்கு மீசையைத் தடவிக் கொண்டு முகம் மலர நீதிமன்றக் கூடத்துக்குத் தஞ்சையார் திரும்பி வந்த போது, சிக்கலுக்கு அவர் ஒரு தீர்வு கண்டு விட்டதாகத் தோன்றியது.
இறுதி வாதுரைகளுக்கான நாளில் முதலில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டு முடித்த பின், தஞ்சையார் எழுந்து நின்றார்.
“நாங்கள்தான் செய்தோம், இது எங்கள் கடமை” என்ற ஏ.எம்.கே.யின் பதிலுக்குத் தஞ்சையார் தரப்போகும் விளக்கத்தை அறிய நீதிமன்றமே ஆவலுடன் காத்திருந்தது.
தஞ்சையார் சொன்னார்:
“என் கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார் என்று சொல்வது தவறு. நீதிமன்ற நடவடிக்கைகளை அவர் புறக்கணித்ததாலேயே, அவர் மீதான குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது எனக் கொள்வதற்கில்லை. என் கட்சிக்காரர் ‘நாங்கள்’ என்று குறிப்பிட்டது தன்னையும் அல்ல, தான் உள்ளிட்ட அனைத்து எதிரிகளையும் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் நாங்கள் என்பது யார்? இந்த வழக்கு வழக்கத்துக்கு மாறான ஒன்று என்பதை நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன். அரசுத் தரப்பு வழக்கின் படியே கூட என் கட்சிக்காரர் எந்த ஒரு சொந்த நோக்கத்துக்காகவும் குற்றம் புரிந்ததாக தெரியவில்லை. இவர் ஒரு புரட்சிக்காரர், ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையுள்ளவர் என்பதை நானும் மறுக்கவில்லை. இவர் ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர். நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். இயக்கத்தில் சாதாரண உறுப்பினர் அல்ல, மாநிலச் செயலாளர். இயக்க உறுப்பினர்கள் இயக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக என்ன செய்தாலும் அதற்கு இயக்கமே பொறுப்பேற்றுக் கொள்கிறது. இயக்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இது தார்மிகப் பொறுப்புதானே தவிர வேறல்ல. இப்படி ஒரு தார்மிகப் பொறுப்பை (moral responsibilityஐ) என் கட்சிக்காரர் ஏற்றுக்கொள்வது நேரடியாக இந்த வழக்கில் சாட்டப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக்கொள்வதாகாது. நாங்கள்தான் செய்தோம் என்று சொன்னதோடு, இது எங்கள் கடமை என்றும் என் கட்சிக்காரர் சொல்லியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நாங்கள்’ ‘எங்கள்’ என்றெல்லாம் என் கட்சிக்காரர் சொல்லும் போது, அவர் சார்ந்த இயக்கத்தைக் குறிப்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும்.”
தஞ்சையாரின் வாதுரை ஏனைய வழக்கறிஞர்களையும் மற்றவர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. தன்னைப் பாராட்டியவர்களுக்கெல்லாம் அவர் ஒரே பதில்தான் சொன்னார்:
“உண்மையைச் சொன்னேன், வேறு ஒன்றுமில்லை.”
தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்துத் தஞ்சையார் எவ்வித ஊகமும் சொல்ல விரும்பவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒத்துழைக்காத நிலையிலும், தம்மால் இயன்ற வரை சிறப்பாக இந்த வழக்கை நடத்த முடிந்தது என்ற மனநிறைவு அவருக்கு இருந்தது.
அமர்வு நீதிமன்றம் அளிக்கிற தீர்ப்பே இறுதியானதன்று. அது பாதகமாக அமைந்து விட்டால் எதிர்த்து மேல்முறையீடு (அப்பீல்) செய்யலாம். கீழமை நீதிமன்றத்தில் வழக்கை நன்றாக நடத்தியிருந்தால்தான் மேலமை நீதிமன்றத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டு வெற்றி பெற முடியும். கீழே கோட்டை விட்டு விட்டு மேலே கோட்டை கட்ட நினைத்தால் முடியாது.
அமர்வு நீதிமன்றத்தில் தாம் வழக்கு நடத்திய விதம் உடனே பலன் தரா விட்டாலும் மேல்முறையீட்டில் பலன் தரும் என்ற நம்பிக்கை தஞ்சையாருக்கு இருந்தது.
இது பொய் வழக்கு என்பது தெளிவாகக் காட்டப்பட்டு விட்டது. ஏதாவது ஒரு கட்டத்தில் இது உடைந்தாதக வேண்டும்.
சில நாள் தள்ளிப் போட்டுப் பிறகு தீர்ப்புச் சொல்லப்பட்டது. ஆயுள் சிறைத் தண்டனை!
அன்று மாலை ஏஎம்கே திருச்சி மத்திய சிறை வாயிலில் இருந்த போதே எங்களுக்குத் தகவல் வந்து விட்டது. ஆயுள் தண்டனையோடு வந்திருக்கிறார் என்ற செய்தி தந்த வருத்தத்தைக், காட்டிலும், இதோ அவர் வரப்போகிறார், இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பின் அவரைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சிப் பரவசம்தான் மேலோங்கி நின்றது.
எங்களைத் தனிக்கொட்டடிகளில் அடைத்த பிறகு, ஏஎம்கேயைக் கொண்டுவந்தார்கள். அவர் ஒவ்வொரு தோழரிடம் சிறிது நேரம் பேசி விட்டு வந்தார். நானும் இலெனினும் இருந்தவை கடைசிக் கொட்டடிகள். அவர் எங்கள் எதிரில் வரும் வரை நாங்கள் அவரைப் பார்க்க முடியாது!
தாயின் முகம் பார்க்கக் காத்திருக்கும் பிள்ளைகள் போல் அவருக்காகக் காத்திருந்த அந்த ஒருசில மணித்துளிகள்! ஆழ்ந்த அன்பிற்குரிய ஒருவருக்காகக் காத்திருக்கும் போது நேரமே முடமாகிப் போகுமோ!
வந்து விட்டார் ஏ.எம்.கே.! அன்றுதான் முதன்முதலாகக் கைதிச் சீருடை உடுத்தியிருந்தார். என்னிடம் சிறிது நேரம், இலெனினிடம் சிறிது நேரம் பேசி விட்டுத் திரும்பும் போது, ஒரு புத்தகத்தை என்னிடம் தந்து, குறியிட்ட சில பகுதிகளையும் எடுத்துக்காட்டி விட்டு நாளை விவாதிப்போம் என்று கூறிச் சென்றார்.
அது மாமேதை லெனின் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்’ [IMPERIALISM HIGHEST STAGE OF CAPITALISM] என்ற நூல்.
நாங்கள் ஏ.எம்.கே.யுடன் விவாதிக்க ஆவலுடன் காத்திருந்தது போலவே அவரும் எங்களுடன் விவாதிக்க விரும்புவதாகப் புரிந்து கொண்டோம்.
இரண்டு மூன்று நாள் கழித்து ஒரு மரத்தடியில் அமர்ந்து அந்த அரசியல் விவாதத்தை ஆரம்பித்தோம். ஏஎம்கே ஒரு பக்கம், நானும் இலெனினும் ஒரு பக்கம். மற்றத் தோழர்களில் ஒருசிலர் மட்டும் ஆர்வத்துடன் இந்த விவாதத்தைக் கேட்க வந்தனர்.
இ.பொ.க.(மா.இலெ.) [CPI(M.L.)] திட்டமும் அதன் வரையறுப்புகளும் சரி, செயல்பாடுகள் மற்றும் போராட்ட வடிவங்களில் வேண்டுமானால் தவறு இருக்கலாம், அது பற்றி விவாதிக்கலாம் என்பது ஏஎம்கே நிலைப்பாடு!
ஒரு கட்டத்தில் ஏஎம்கே சொன்னார்:
”இப்படிப் பட்டிமன்றம் போல் தொடர்ந்து விவாதித்துக் கொண்டே போவதில் பொருளில்லை.
. சரி, இப்போதைக்கு உங்கள் நிலை அது, எங்கள் நிலை இது என்று வைத்துக் கொள்வோம். சிறையில் நம்மால் சேர்ந்து செய்யக் கூடியவற்றைச் செய்து கொண்டிருப்போம்.”
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 22