சனி, 9 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!- நலங்கிள்ளி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (2) – தொடர்ச்சி)

பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரியைத் திறந்து விட வேண்டுமெனக் காவேரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்ச நீதிமன்றம் கூறுகின்றன.

எந்த நீதிக்கும் சட்டத்துக்கும் அறத்துக்கும் கட்டுப்பட மறுக்கிறது கருனாடகம். கேட்டால், எங்களிடமே தண்ணீர் இல்லை என்கிறது.
உண்மை நிலவரம் என்ன?

கிருட்டிணராவ சாகர் அணை
முழுக் கொள்ளளவு 124.8 அடி உயரம்
இன்றைய கொள்ளளவு 90 அடி
கபினி அணை
முழுக் கொள்ளளவு 65 அடி உயரம்
இன்றைய கொள்ளளவு 57 அடி
ஆரங்கி அணை
முழுக் கொள்ளளவு 129 அடி
இன்றைய கொள்ளளவு 127 அடி
ஏமாவதி அணை
முழுக் கொள்ளளவு 117 அடி
இன்றைய கொள்ளளவு 91

வானிலை ஆய்வறிக்கையின்படி, கருனாடகத்தில் காவிரி நீர்ப் படுகையில் 21.7 செமீ மழை பெய்துள்ளது. வரும் நாட்களில் கருனாடகாவில் மழை இரட்டிப்பாக இருக்கும்.
அப்படியானால், காவிரியில் நீர் இல்லை எனக் கருனாடகம் கைவிரிப்பதன் பொருள் என்ன?

எங்கள் அணைகள் வழிய வழிய நிரம்பிக் கருனாடகமே வெள்ளக்காடாகும் நிலை வந்தால்தான், உபரி நீரை வெளியேற்றி, தமிழ்நாட்டை எங்களின் வடிகாலாகப் பயன்படுத்திக் கொள்வோம் – இதுதான் 1974 முதல் கருனாடகத்தின் நிலைப்பாடு. இதில் எந்தக் கட்சி மாறுபாடும் இல்லை.

கருனாடகத்தில் காவிரிச் சிக்கல் தலையெடுக்கும் போதெல்லாம் கன்னடர்கள் தமிழர்களை வெட்டிக் குவிக்கிறார்கள். பேருந்துகளை எரிக்கிறார்கள். இது கருனாடக அரச பயங்கரவாதம். ஏனென்றால் இது வரை கருனாடக அரசு கன்னட இனவெறியர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்ததில்லை.

காவிரிச் சிக்கலை வெறும் உழவர் சிக்கலாகப் பார்ப்பது தமிழ்நாட்டு அரசியலின் பெரும் தவறு. தஞ்சாவூரில் வேளாண்மையே நடக்கா விட்டாலும் நமக்குத் தண்ணீர் தேவை. காவிரி தமிழ்நாடெங்கும் சல சலவென ஓட வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் குறையாது பாதுகாப்பாக இருக்கும். ஆற்று மீன்வளம் இருக்கும். தமிழ்நாட்டின் பக்கம் அவ்வளவு நீதி இருந்தும் தமிழ்நாடு மயான அமைதியாக இருக்கிறது.

ஆனால் கருனாடகத்தில் கன்னட இனவெறியர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். கன்னடர் நடிகர் சிவராசு குமார் போன்ற நட்சத்திர நடிகர்கள் “நம் காவிரி நம் உரிமை” எனக் களத்தில் நிற்கிறார்கள்.

கருனாடக அரசைக் கலைத்து, ஒன்றிய அரசு அணைகளைப் பொறுப்பில் எடுத்து, நமக்கான உரிமை நீரைத் திறந்து விட வேண்டும். ஒன்றிய அரசு மறுத்தால் நாம் வரி கொடா இயக்கம் நடத்த வேண்டும்.

கருனாடகம் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

இந்த வழியில் போராடாமல் நமக்கு உரிமையான ஒரு சொட்டுக் காவிரி நீரையும் நம்மால் பெற முடியாது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 320

வெள்ளி, 8 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (2)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (1) – தொடர்ச்சி)

புதுவைக் குயில் தமிழ்ஒளி (2)


பன்னாட்டியத்தில் (சருவதேசியம்) ஊன்றிப் பாடும் போது தமிழ்ஒளியிடம் மற்றொரு பாவேந்தர் பாரதிதாசனைப் பார்க்கிறோம்: .

“இமை திறந்து பார்! விழியை அகலமாக்கு!
என் கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்
திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்!
சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வா நீ!”

1948 இறுதியில் ‘பொதுவுடைமைக் கட்சி’ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போது, கட்சியின் பரப்புரைப் பொறிகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அந்தச் சூழலில் ‘முன்னணி’ ஏடு மலர்ந்தது; கவிஞர் குயிலனும், தமிழ் ஒளியும் இணைந்து செயல்பட்டனர்.

அந்த ஏடு தமிழ் ஒளிக்கு நல் வாய்ப்பாய் அமைந்தது. உணர்ச்சிமயமான கவிதைகள், கதைகள், ஓரங்க நாடகங்கள் என இதழ்கள் தோறும் அவருடைய எண்ணங்கள் பதிவாகி வந்தன.

குறிப்பாகச், சீனாவில் நடை பெற்று வந்த மக்கள் யுத்தம், மாசேதுங்கு தலைமையில் வெற்றி வாகை சூடியதை வரவேற்று அவர் படைத்த கவிதைகள் நான்கு. அத்துடன், உலகத் தொழிலாளி வருக்கம் எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை வென்றெடுத்த வீர வரலாற்றை – மே நாட் செய்தியை – வீர காவியமாகப் படைத்துள்ளார் தமிழ் ஒளி.

இவை வரலாற்றுக் கருவூலங்கள்.

குடந்தையில் (1948) நகர் சுத்தித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தில், காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டதைக் கண்டித்து கவிஞர் படைத்த கவிதை, அதே ஆண்டில், ஈரோடு நகர சுத்தித் தொழிலாளர் நடத்திய போராட்டத்தின் போதும் அச்சிட்டுப் பரப்பப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில், தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு தோழரைப் பற்றிக் கவிஞர் தமிழ்ஒளி படைத்த கவிதை ‘தாய் செய்த குற்றம்’ என்ற தலைப்பில் ‘அமுதசுரபி’ ஏட்டில் வெளி வந்தது. (1949).

தலைமறைவாக இருந்துவந்த தோழர் ஒரு நாள் தாயைக் காண வீட்டிற்கு வருகிறார். இரு தினங்கள் இருந்து விட்டுச் செல்கிறார்.

இந்தச் செய்தி காவலர்களுக்கு எட்டி விடுகிறது. விரைந்து வந்த அவர்கள் வீட்டைச் சோதனையிட்டனர். தோழர் இல்லாததால் தாயிடம் வாக்குவாதத்தில் இறங்கினர்.

இதோ கவிஞர் தமிழ்ஒளியின் எழுத்தில்:

காவலர்: இங்குன் மகனும் ஒளிந்திருந்தான், எமை ஏமாற்றி நீயிங்கொளித்து வைத்தாய்; அந்தப் பயலுக்குச் சோறுமிட்டாய், மிக ஆபத்தான குற்றம் செய்துவிட்டாய்!

தாய் சீறுகிறாள்: மூச்சும் பேச்சும் அவன் எய்து முனம், ஒரு முந்நூறு நாளாக நான் அவனைப் பத்திரமாக ஒளித்து வைத்தேன், மண்ணைப் பார்க்க அவன் ஒருநாள் பிறந்தான்!

“பாம்புக்குப் பாலிடும் மாந்தரையும் இங்குப்
பாதகர் என்பவர் யாரு மில்லை!
பாம்பல்ல, என்னுடை அன்பு மகன்; அவன்
பாயும் விலங்கல்ல, ஆசை மகன்!”
“பெற்று வளர்த்திட்ட என்மகனை, இங்குப்
பேணி வளர்ப்பது குற்றமென்றால்
தாய்க்குலம் மாண்டு மடிவதுவோ? அன்றி
தருமம் தலைசாய்ந்து வீழ்வதுவோ?
என்னுடைப் பிள்ளைக்குச் சோறிடவும், அவன்
இளைப்பாறி நிற்க இடம் தரவும்
அன்னை யெனக்கிங் குரிமை யுண்டாம், இதை
ஆண்டவன் வந்தாலும் விட்டுக் கொடேன்!”

  • தாயின் கோபம் அடங்கவில்லை, ‘தாய் தன் மகனை அரவணைப்பது நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் உறவு முறை. இதைக் குற்றமெனக் கூறுவது மனிதத் தன்மையற்ற செயல். இதுதான் சட்டம் என்றால் அதனை எதிர்ப்போம்’ என்றும் கூறுகிறாள். காவலர்கள் மறு மொழி கூறாமல் சென்று விடுகின்றனர்.

பாட்டாளி மக்களின் வாழ்க்கை அவலங்களைக் கவிஞர் தமிழ்ஒளி உயிர்ச் சித்திரமாக வரைந்து காட்டினார்.

உழவனின்’ பொங்கல் கனவு, ‘நெசவாளி’ விரும்பாத தீபாவளி, துயரச் சுமை தூக்கும் ‘துறைமுகத் தொழிலாளி’ கடலைப்பார்த்து கண்ணீர் சிந்தும் ‘மீனவர்’, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் ‘சலவைத் தொழிலாளி’, எப்போதும் ஏக்கப் பெருமூச்சுவிடும் ‘அரிசன மக்கள்’, வீதியில் நின்று கையேந்தும் ‘கழைக்கூத்தாடி’, விதியை நொந்து விடிவு காணாத விதவையர் பற்றிய கவிதைகள் அனைத்துமே தமிழ்ஒளியின் புரட்சிப் பாடல்கள்தாம். ஆனாலும் உவமைகள் ஒளி வீச, அணி நலன்கள் அலை புரள, கலை ஓவியமாகத் திகழும் கவிதை வடிவங்கள்.

தமிழ் ஒளி இயற்கை நிகழ்வுகளை வண்ணிக்கும் போதும் மக்கள் புரட்சிக்குத்தான் உவமையாக்குகின்றார் ‘இயற்கை அன்னையின் கோபம்’ என்ற தலைப்பில் அவர் பாடக் கேளுங்கள். பேய்க்காற்றும் பெருமழையும் இணைந்து இடியோசை எழுப்பி இப் புவியினை அதிர வைக்கிறது. இதனைக் காணும் நம் கவிஞருக்கு எண்ணம் எங்கே செல்கிறது தெரியுமா? கொடுங்கோலாட்சியை எதிர்த்து மக்கள் தொடுத்த யுத்தம் வெற்றி கொள்ளுவதையே நினைவூட்டுகிறது.

“கொட்டி கொட்டி எழுந்தாள் – அன்னை
கோபத்திலே மின்னல் தீயை யுமிழ்ந்தாள்!
கட்டிக் கிடந்திடும் மேகம் – எனும்
கார்மலை யாம்குடம் எற்றிப் புரட்டிக்
கொட்டினாள் கால வெள்ளத்தை – அவள்
கொக்கரித்தாள் திசை எட்டும் நடுங்க
தட்டி எழுப்பினள் காற்றை – அது
தாவி யுருட்டுது மாமரக் காட்டை!”

முடிவில்,
“மக்கள் தொடுத்திடும் யுத்தம் – என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க
செக்கென ஆட்டுது காற்று – பெருஞ்
செல்வர், மணிமுடி, சட்டம், சிறைகள்
பொக்கென வீழ்வது போலே – யாவும்
போயின பொட்டென்று விட்டது காற்று!
செக்கச் சிவந்தது வானம்-அன்னை
சேல்விழி காட்டினள் வந்தது காலை!”

புயல் போன்றது மக்கள் புரட்சி! புரட்சியின் முடிவில் விடியல்! போதுமா?

தனிக் கவிதைகள் தவிர ‘தமிழ்ஒளி’ படைத்த காவியங்கள் ஒன்பது. அவற்றுள் ‘மாதவி காவியம்’ தவிர்த்த ஏனைய எட்டும் குறுங்காப்பியங்கள். இவற்றில் ‘புத்தர் பிறந்தார்’ துறவுக் காப்பியம்.

கவிஞர், புத்தர் வரலாற்றை முழுக்காவியமாகப் படைக்கவே விரும்பினார். எதிர்பாராத இடர்ப்பாடுகள் அடிக்கடி எழுந்து முயற்சியைத் தடைப்படுத்தி வந்தன. இதன் விளைவாக, புத்தர் சனனம் என்ற அளவில் காவிய முயற்சி நின்று போனது.

‘புத்தர் பிறந்தார்’ என்ற காவியப் பகுதியை “தமிழ்ஒளியின் கவிதைகள்” தொகுப்பில் கண்ட மு. வரதராசனார் “புத்தர் பிறந்தார்” என்ற அருமையான காவியம் முடிக்கப்படாமலே குறையாக நின்று விட்டது, தமிழிலக்கியத்தின் குறையாகவே ஆகி விட்டது’ என்றார்.

‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘மே தின (உ)ரோசா’ ஆகிய மூன்றும் புரட்சியமான தலித் இலக்கியங்கள் எனலாம்.

இவற்றுள் ‘வீராயி’ காவியத்திற்கும், பாரதியார் பாடிய ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாடலே அடித்தளம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் ‘செங்கொடி’ ஏற்ற வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுந்த நூல் ‘மே தின (உ)ரோசா’. பொதுவுடைமைக் கட்சியில் காலூன்றாத காலத்தில் எழுதப்பட்ட ‘நிலை பெற்ற சிலை’ பொதுவுடைமைப் பூங்காவாகிய சோவியத்து ஒன்றியத்தின் பெருமை பேசப்படுகிறது.

பேராசிரியர் இராகுல சாங்கிருத்தியாயன் படைத்துள்ள புகழ் பெற்ற நூல் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. அதில் இடம் பெற்றுள்ள ‘பிரபா’ என்ற கதையினை அடிப்படையாக வைத்து புனைந்த புரட்சிகரமான குறுங்காப்பியம் ‘கோசலக்குமரி’.
தமிழ்ஒளி மக்களிடையே புகழ் பெறாத போதும் அறிஞர்களிடையே மதிக்கப்பெற்றார். மு. வரதராசனார், எழுத்தாளர்கள் பூவண்ணன், விந்தன், செயகாந்தன் போன்றோர் தமிழ் ஒளியைப் பாராட்டினார்கள். மா.சு. சம்பந்தம் தமிழ்ஒளியின் கவிதைகளை வெளியிட்டார். செ. து. சஞ்சீவி தமிழ்ஒளியின் கவிதைகளையும், காவியங்களையும் திரட்டித் தொகுத்து வெளியிட்டார்.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்த போதும், சோவியத்து ஒன்றியம் (இசு)புட்னிக் என்னும் விண் கலத்தை ஏவிய போதும வரவேற்றுக் கவிதைகள் படைத்தார் தமிழ்ஒளி. அணுகுண்டு அச்சுறுத்தலை எதிர்த்தும் பாடினார்.

மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. ‘ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்’ என்று எழுதினார்.

தமிழ்ஒளியின் கவிதைகள் தமிழ்நாட்டு மக்களிடையே போதிய புகழ் பெறவில்லை என்ற குறை நமக்குண்டு.
ஆனால் அவர் விதைத்து கீரையன்று உடனே முளைத்து உடனே பயன் தருவதற்கு. பனை நட்டுள்ளார், வளரக் காலமெடுக்கும், வளர்ந்த பின் நின்று பயன் தரும். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்பட வேண்டும் என்பதுதான் தமிழ்ஒளியின் இலக்கியக் கொள்கையாம்! வாழ்வு உயருதல் என்பதைப் பொதுமை நோக்கில் புரிந்து கொண்டால் அது சட்டென்று தோன்றி சட்டென்று மறையும் உயர்வன்று என்பது தமிழ் ஒளிக்குத் தெரியாதா, என்ன?

“கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்!” சொன்னவர் தமிழ்ஒளி! அவர்தம் படைப்புகள் புதிய தமிழகத்தைப் படைக்கும் பணிக்குக் கருவியாகும் காலம் விரைவில் வரும். அப்போது தமிழ்ஒளியின் படைப்புகள் தமிழின வைப்பகத்திலிருந்து வெளிவந்து ஒளிவீசும்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 319

வியாழன், 7 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (1)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கலியுகமும் கிருதயுகமும்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! இவர்களை நீங்கள் அறியாதிருக்க முடியாது. ஆனால் இந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்க கவிஞர் தமிழ்ஒளியை உங்களில் பலரும் அறிந்திருக்க மாட்டீர்களோ? செ.து. சஞ்சீவி அவர்கள் அந்தப் பாவலரையும் அவர்தம் படைப்புகளையும் எனக்கு அறிமுகம் செய்வதற்கு முன் நானும் தமிழ்ஒளி குறித்து இருளில்தான் இருந்தேன். அவரைப் பற்றிப் புதுமலரில் எழுதும் படி அன்பர் குறிஞ்சி அழைத்த போது மீண்டும் ஒரு முறை தமிழ்ஒளியில் நனையும் வாய்ப்புப் பெற்றேன். இதோ தமிழ்ஒளி பற்றி உங்களை மேலும் அறியத் தூண்டும் ஓர் அறிமுகம் —

புதுவைக் குயில் தமிழ்ஒளி அறிவீரா?

இப்போதாவது அறிக!

இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதலாக மே நாள் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எனும் பெருந்தமிழர். மே நாளைப் போற்றித் தமிழிலே முதல் கவிதை இயற்றியவர் பெருங்கவிஞர் தமிழ்ஒளி!

கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”

என்று மே நாளை வாழ்த்தி வரவேற்றார்.

மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி கையில்

விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட
பொய்யர் குலம் நடுங்கப் பொங்கி வந்த மே தினமே!

தாழ்வைத் தகர்க்கத் தலைநிமிர்ந்த மேதினியில்
வாழ்வின் சமாதானம் வாய்ந்த நெடுந்திரையில்
சீவியமாய் நின்றதொரு சித்திரம் நீ; வானமரர்
காவியம் நீ; கற்பனை நீ; காணுமொரு காட்சியும் நீ!
தீரா இருளொழிந்து திக்கு விளங்க
இதோ வாராய் வளர்பொருளே
மே தினமே வாராய் நீ!”


“பொந்தில் உயிர்வாழ்ந்தார்;
போக்கற்றார்; இன்பமிலார்
கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்
ஏற்றி வைத்த நின்பெருமை
என்னுயிர்க்கும் மேலன்றோ!
போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக!’


தமிழ் ஒளிக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல்” என்று தி க. சிவசங்கரன் அவர்களால் பாராட்டப் பெற்ற செ.து. சஞ்சீவி அவர்கள்தான் இதை எழுதும் எனக்குத் தமிழ் ஒளியின் பெயரையும் படைப்புகளையும் அறிமுகம் செய்தவர். தமிழ் ஒளி எழுதியவையும், அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியவையுமான சில படைப்புகளின் வெளியீட்டு விழாவை செ.து. சஞ்சீவி சென்னை பெரியார் திடலில் நடத்திய போது என்னை அழைத்துத் தமிழ் ஒளியின் கவிதைகள் பற்றிப் பேசச் செய்தார். எப்போது என்று நினைவில்லை. 1990 வாக்கில் இருக்கக் கூடும். அதன் பிறகுதான் அவரிடம் ஆர்வம் கொண்டு படிக்கலானேன்.

பாரதி வழி வந்தவர், பாரதிதாசனின் மாணவர் என்றெல்லாம் அவர் பலவாறு அறியத் தரப்பெற்ற போதிலும் தூய பொதுமைப் பாவலராக விளங்கியதுதான் அவரது தனித் தன்மை என மதிக்கிறேன்.

விசயரங்கம் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ்ஒளி 1924 செட்டம்பர் 21ஆம் நாள் புதுவையில் பிறந்தார். சற்றொப்ப 41 ஆண்டு வாழ்ந்து 1965 மார்ச்சு 29ஆம் நாள் மறைந்தார். சற்றொப்ப 39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த பாரதியாரை விடவும், 72 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து மறைந்த பாரதிதாசனை விடவும் அரசியலில் தெளிவான முடிவுகளுக்கு வந்தவர் தமிழ் ஒளி என்பது என் துணிவு. யார் சிறந்த கவிஞர் என்பதன்று இந்த ஒப்பீடு. எல்லாவகையிலும் பாரதியார் மீது பாரதிதாசன் கொண்டிருந்த உயர் மதிப்பு சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றன்று. ஆனால் பாரதியார் அடிப்படையில் இந்தியத் தேசியப் பாவலராகவே விளங்கினார் எனபதும், பாரதிதாசன் தமிழ்த் தேசியத்தின் தலைப் பாவலர் என்பதும் மாற்றவொண்ணா வரலாற்று உண்மைகள். தமிழ்ஒளி தூயப் பொதுமைப் பாவலராக விளங்கினார் என்பது சொல்லால் மட்டுமன்று, செயலாலும் உறுதிப்படும்.

புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியிலும் கலவைக் கல்லூரியிலும் படித்த தமிழ்ஒளி மாணவராய் இருந்த போதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையைப் படித்ததுதான் அவரது பொது வாழ்வின் தொடக்கமாக இருக்க வேண்டும்.

பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். திராவிடர் கழகத்தில் இருந்த போதே பொதுமைப் பாக்கள் புனையத் தொடங்கி விட்டார். மே நாள் வாழ்த்துப் பா குறித்துத் தொடக்கத்திலேயே பார்த்தோம்.

1949ஆம் ஆண்டில் ‘புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்‘ என்னும் கவிதை எழுதினார். நிலை பெற்ற சிலை, வீராயி, மே தின (உ)ரோசா ஆகிய மூன்று காவியங்கள் படித்தார்.

பொதுமை இயக்கம் இன்று வரைக்கும் கூட சாதியச் சிக்கலுக்கு உரிய முகன்மை தரவில்லை என்ற குற்றாய்வு உண்டு. வகுப்பு (வருக்கம்) அல்லாத குமுகக் கூறுகளை உரியவாறு அறிந்தேற்காத வகுப்புக் குறுக்கியத்தை (CLASS REDUCTIONISM) அப்போதே கடந்து நின்றார் தமிழ்ஒளி. வகுப்புச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் இணைத்துச் சாடும் தெளிவு தமிழ்ஒளியின் எல்லாப் படைப்புகளிலும் காணக் கிடைக்கிறது.

தலித்து என்ற சொல் அப்போதே புழக்கத்துக்கு வந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்க தலித்து என்ற சொல்லை ஆள்வதில் பிழையில்லை என்றால், தமிழ்ஒளியைத் தலித்து இலக்கிய முன்னோடி என்று குறிப்பிடலாம்.

தமிழ்ஒளியின் மூன்று காவியங்களும் தணிந்த(தலித்து) மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், தணிந்த(தலித்து) மக்களின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் பேசுகின்றன. வீராயி என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தணிந்த(தலித்துப்) பெண்.

ஐந்து தொகுதிகளாக வந்துள்ள தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் கதைமாந்தர்களில் பெரும்பாலார் தணிந்தோர்(தலித்துகள்), தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களே.

அக்காலத்தில் இடதுசாரி இயக்கப் படைப்புகளில் நேராகச் சாதியச் சிக்கல்களைப் பேசுவதில் தயக்கம் காணப்பட்டது. சாதியை வெறும் மேற்கட்டுமானம் என்றும், கிழாரியச் சுரண்டல் ஒழிந்தால் சாதிய ஒடுக்குமுறையும் ஒழிந்து போகும் என்றும் கருதுவதே பொதுமை இயக்கத்தின் பொதுவான பார்வையாக இருந்தது. போராட்டப் பட்டறிவுகள் இந்தப் பார்வையில் மாற்றம் கொண்டுவந்த நேர்வுகளும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

அக்காலத்திலேயே தமிழ்ஒளி பாட்டாளியக் கண்ணோட்டத்தில் சாதிய எதிர்ப்பையும் தணிந்தோர்(தலித்து) விடுதலையையும் பாடினார்.

மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.

தாமரை இலக்கிய இதழில் வனமலர் என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகள் எழுதினார்.

தமிழ் ஒளி, விஜய ரங்கம் விஜயன் சி.வி.ர என்பன அவருடைய புனைப்பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். சனயுகம் என்னும் திங்கள் இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்கியக் கருத்துகளைப் பரப்பினார்.

அகவை இருபது வரை புதுவையில் வாழ்ந்து பாரதிதாசன் இல்லத்திலேயே கிடையாய்க் கிடந்த தமிழ்ஒளி அக்காலத்தில் எழுதிய தம் கவிதைகள் அனைத்தையும் இரு தொகுதிகளாக்கி வெளியிடும் முயற்சியில் தோல்வி கண்ட பின் 1945இல் சென்னைக்குப் புறப்பட்டார்.

கவிஞர் தமிழ்ஒளி தோற்றத்தில் எளியவர் ஆயினும் தெளிவானவர், மனத்திட்பம் மிக்கவர்” என்பார் சஞ்சீவி. திடசித்தம் உடையவர். சென்னை வந்து ஈராண்டுக்குப் பின் கருப்புச் சட்டையைக் களைந்து பொதுமைக் கட்சியில் இணைந்தார்தடை செய்யப்பட்டுத் தலைமறைவான பிறகும் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேரப் பணியாளராகி முனைப்புடன் உழைத்தார்.

தமிழ்ஒளியின் பொதுமை இயக்கச் செயல்பாட்டின் காலம் 1947-54 என்பார் சஞ்சீவி. அவர் பொதுமை இயக்க அனுதாபியாகவோ ஆதரவாளராகவோ அல்ல, ஒரு பொதுவுடைமையாளராகவே வாழ்ந்தார், உழைத்தார். 1947இல் தமிழ் ஒளி படைத்த மூன்று குறுங்காப்பியங்கள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு நூல்களின் அட்டைகளிலும் ‘சுத்தி அரிவாள்’ சின்னம் இடம் பெற்றிருந்தது.

இவை தவிர அவர் படைத்த தனிக் கவிதைகளின் திரட்டாக, ‘நீ எந்தக் கட்சியில்?’-‘மே தினமே வருக!’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறு நூல்களும் வெளிவந்தன. மேற்கூறிய இரு காவியங்களும், இரு கவிதைத் திரட்டுகளும் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களுக்கு அவர் செலுத்திய காணிக்கை என்றே கூறலாம்.

தமிழ்ஒளியின் புரட்சியமான வகுப்புப் போராட்ட(வருக்கப் போராட்ட)க் கவிதைகள் உலகில் வகுப்புப் போராட்டம் உள்ளளவும் பொருந்தக் கூடியவை.

பாட்டாளியாகவும் தமிழனாகவும் இருப்பதில் தமிழ்ஒளியின் ஓர்மைக்கு எவ்விதச் சிக்கலும் முளைக்கவில்லை.

அவர் தான் யார் என்பதை ஓங்கிச் சொன்னார்:

தமிழனே நான் உலகின் சொந்தக்காரன்
தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து!
அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்!
அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்!”

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 319

புதன், 6 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : கலியுகமும் கிருதயுகமும்

 





(தோழர் தியாகு பகிர்கிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க. – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கலியுகமும் கிருதயுகமும்…

கலி முத்திப் போச்சு! இது கலி காலம்! இப்படியெல்லாம் மக்கள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்துத் தொன்மவியலின் பார்வையில் உலகக் குமுகாயம் நான்கு வளர்ச்சிக் காலங்களின் வழிச் செல்கிறது. இவை நான்கு உகங்களாகக் குறிக்கப்படுகின்றன: கிருத யுகம் (சத்திய யுகம்), திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்!

இந்த நான்கு உகங்களின் கால அளவைப் பார்த்தாலே இது புராணிகக் கதை என்பது விளங்கும்.
1) கிருதயுகம் – 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்;
2) திரேதாயுகம் – 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள்;
3) துவாபரயுகம் – 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்;
4) கலியுகம் – 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.
இப்போது நடப்பது கலி உகமாம்! கலிஉகம் முடிந்ததும் மீண்டும் கிருத உகம் தொடங்குமாம்! அடுத்து திரேதாஉகம், துவாபரஉகம், மீண்டும் கலிஉகம் என இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்குமாம்!


கலிஉகம் எப்போது தொடங்கியது? கண்ணன் (கிருட்டிண பரமாத்துமா) இறந்த நாளில் கலிஉகம் தொடங்கியதாகச் சிறிமண் மகாபாகவதம் (முதல் கந்தம்: அத்தியாயம் – 15, சுலோகம் – 36). இராமன் பிறந்த நாள், கிருட்டிணன் இறந்த நாள் இதெல்லாம் ‘அவாவா’ நம்பிக்கையைப் பொறுத்தது. இது பற்றிக் கேள்வி எழுப்பினால் அவாள் மத நம்பிக்கை புண்படும். ஆனால் இந்த நம்பிக்கையிலும் அவாளுக்குள் நிறைய வேறுபாடுகள் உண்டு.

கி.பி. (பொது ஊழி) 476ஆம் ஆண்டு பிறந்த வானியலர் ஆரியபட்டர் சொல்கிறார்… கி.மு. (பொ.ஊ.மு.) 3102 பிப்ரவரி 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலிஉகம் தோன்றியதாம்! வராகமிகிரர் என்னும் மற்றொரு வானியலர் சொல்கிறார்… கலிஉகம் கி.மு. (பொ.ஊ.மு.) 2449ஆம் ஆண்டில் தொடங்குகிறதாம்!

கலிஉகம் 4,32,000 ஆண்டுகள் என்ற கணக்கையே மறுக்கிறார் சிறியுக்குதேசுவர்: கலிஉகம் 2,400 ஆண்டுகள்தானாம்! 1,200 ஆண்டு இறங்குமுகம், 1,200 ஆண்டு ஏறுமுகமாம்! இப்போது நடப்பது துவாபர உகமாம்!
கலிஉகத்தில் என்னவெல்லாம் நடக்குமாம்?
அரசர்களின் செங்கோல் தாழுமாம்! கொடுங்கோல் ஏற்றம்.பெறுமாம்! வரிகள் உயருமாம். அரசுகள் இறை நம்பிக்கையையும் இறை வழிபாடுகளையும் பாதுகாக்க மாட்டார்களாம்! அரசே மக்களை வாட்டி வதைக்குமாம்! மக்கள் உணவின்றித் தவிப்பார்களாம்!

(ஏதோ கொஞ்சம் நம்ம மோதிசிக்குப் பொருந்துவது போலவும் உள்ளது! பொருந்தாதது போலவும் உள்ளது அல்லவா?)

கலிகாலத்தில் மக்கள் எப்படி இருப்பார்களாம்? பொறாமை கூடுதலாகுமாம்! ஒருவருக்கொருவர் வெறுப்பு வளருமாம். குற்றவுணர்ச்சியே இல்லாமல் கொலைகள் நடக்குமாம்! காம வெறியும் பாலின ஒழுக்க கேடும் சமூகத்தில் தலையெடுக்குமாம்!

ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காதாம்! அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து வருமாம்! அப்படித்தான் சில காரியங்கள் நடக்கின்றன!

திருமணம் அவரவர் விருப்பபடி நடக்குமாம்! பெரியவர் இசைவின் பேரில் அல்லவாம்! நல்லது, நடக்கட்டும்!

கலிஉகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழுமாம். வெள்ளை குதிரையில் வந்து கலிஉக நிகழ்வுகளுக்குக் காரணமான “கலி”யுடன் போரிட்டுத் தீயசக்திகளை அழிப்பாராம். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய உகம் (கிருத உகம்) பிறக்குமாம்.

இந்துத் தொன்மவியலின் கருத்துருக்களைக் காலத்துக்கேற்ப மீட்டெடுத்து அவற்றுக்குப் புது உள்ளடக்கம் தந்து தமது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர் பாவலர் பாரதியார்.
கலியுகம், கிருதயுகம் ஆகிய தொனமங்களை முறையே பழமைக்கும் புதுமைக்குமான குறியீடுகளாக அவர் ஆளும் அழகையும் அதனால் விளையும் தெளிவையும் அடுத்த மடலில் பார்க்கலாம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 317

செவ்வாய், 5 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க….

 




 (தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க…

“வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

இது பாரதியார் எழுதிய தமிழ்மொழி வாழ்த்து என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் ஆழமான உட்பொருளை எண்ணிப் பார்த்தீர்களா? தமிழ்மொழியை வாழ்த்திப் பலரும் பலவாறு பாடியுள்ளனர். ஆனால் இந்தப் பாட்டு வெறும் வாழ்த்துப் பாடலாக மட்டும் நின்று விடவில்லை.
பாரதியார் தமிழ்மொழியின் அழகைப் போற்றுவதோடு அதன் பயனையும் எடுத்துரைக்கிறார். “பண்பும் பயனும்” என்பாரே திருவள்ளுவர், அத்தகைய பார்வை இது.
தமிழ் வாழ்க! என்றென்றும் வாழ்க! வானத்தின் கீழ் கிடக்கிற அனைத்தையும் அறிந்துரைக்கும் வளமார் தமிழ் மொழி வாழ்க! அண்டம் முழுவதிலும் அசைந்தாடும் பொருட்களும் நிகழ்வுகளுமான பொருண்மையை நமக்கு அறியத் தருவது தமிழ்மொழி! வானம் அளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி என்றால் அளந்து முடித்து விட்டதா? அளந்து கொண்டிருக்கிறதா? அளக்கப் போகிறதா? எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். வளர் மொழி என்பதும் அதே போலத்தான்! வளர்ந்த மொழி, வளரும் மொழி, வளர வேண்டிய மொழி! உயிரோட்டமான மொழி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்.
பாரதியின் இந்த வாழ்த்துப் பாடலில் என்னைப் பெரிதும் ஈர்த்த பொருட்செறிவு மிக்க வரி இதுதான்: சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே! சூழ்கலி என்றால் என்ன? தமிழ்மொழி ஓங்கினால் வையகம் எப்படித் துலங்கும்? ஒரு மொழி வாழ்வதற்கும் உலகம் துலங்குவதற்கும் என்ன தொடர்பு? இந்த வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக –
நாளை (19.09.2023) செவ்வாய் பிற்பகல் பூவிருந்தவல்லியில் திரு இருதயக் குருத்துவக் கல்லூரியின் தமிழ்க் கழகத்தில் “சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க” என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 317

திங்கள், 4 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு

 




(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 4/4-தொடர்ச்சி)

ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு 

– குருநாதன் சிவராமன்

சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி அவர்கள் பற்றவைத்த நெருப்பு சனாதனிகளைச் சுட்டெரிக்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

“சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். சிறந்த உதாரணம் ஐயா வைகுண்டர் அவர்கள். அவர் மனிதனாக பிறந்தார். ஆனால் கடவுளாக வணங்குகின்றோம்” என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை. இந்தப் பேச்சு வழக்கம்போல அவரின் அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது.

ஐயா வைகுண்டரைக் கடவுளாக வணங்கும் மக்கள் தற்காலத்தில் பலர் உள்ளார்கள், குறிப்பாகத் தென் மாவட்டங்களில். அது தனிநபர் விருப்பம் என்பதால் அதை விமர்சிக்க முடியாது. ஆனால் ஐயா வைகுண்டர் ஒரு சனாதனி எனச் சொல்லும் வரலாற்றுத் திரிபை அம்பலப்படுத்தி உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை.

ஐயா வைகுண்டரின் சிந்தாந்தம் “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்” என்பதுதான். அதனால்தான் உருவ வழிபாட்டை ஐயா வழி நிராகரிக்கிறது. ஐயா பதிகளில் (கோவில் அல்ல) உள்ளே ஒரு கண்ணாடி மட்டுமே இருக்கும். இது எப்படிச் சனாதனம் ஆகும்?

1800களில் திருவிதாங்கூர் சமத்தானத்தில் பெண்களுக்கு மார்பு சேலை அணிதல், இடுப்பில் குடம் எடுத்தல், பொன்நகைகள் அணிதல் ஆகியன தடை செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் தலைப்பாகை கட்டுதல், மீசை வளர்த்தல், வளைந்த கைப்பிடி கொண்ட குடையைப் பயன்படுத்தல் தடை செய்யப்பட்டிருந்தது.
தங்கள் குழந்தைகளுக்கு இந்துக்கடவுளரின் பெயரை சூட்டுவது தடுக்கப்பட்டன. 
ஐயா வைகுண்டரின் பெற்றோர்கள் அவருக்குத் தாங்கள் விரும்பிய ‘முடிசூடும் பெருமாள்’ என்ற பெயரைச் சூட்ட முடியாமல் ‘முத்துக்குட்டி’ என்ற பெயரையே தேர்ந்தெடுக்க நேர்ந்தது.

சாதிக் கொடுமைகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க ‘அய்யா வழி’ என்னும் தனி சமயத்தைத் தோற்றுவித்தார் ஐயா வைகுண்டர். அவர் சனாதனத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலோ, சனாதனம் அவரை ஏற்றுக் கொண்டிருந்தாலோ ஏன் ஒரு தனிச் சமயத்தைத் தோற்றுவிக்கப் போகிறார்?

இடுப்பில் கூட துண்டு அணிய முடியாத நிலை இருந்தது. ஐயாவழியில் துண்டைத் தலைப்பாகையாய் அணியச் சொன்னார் ஐயா வைகுண்டர். இன்றும் ஐயா வழியில் தலைப்பாகை அணியும் வழக்கத்தின் பின்னணி இதுதான்.

ஐயா வழியில் அனைத்து மக்களும் பதியின் உள்ளே வரை செல்ல முடியும். சாதி வேறுபாடு, பாலியல் வேறுபாடு, பொருளாதார வேறுபாடு என எந்த வேறுபாட்டுக்கும் ஐயா வழியில் இடமில்லை. அனைத்து மக்களும் சரிசமமாக அமர்ந்து அன்னம் உண்ணும் பழக்கம் இன்றும் அனைத்து அய்யா வழி பதிகளிலும் இருக்கிறது.

ஐயா வழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன. இதனை சனாதனம் ஏற்றுக் கொள்கிறதா?

ஐயா வழியின் வழிபாட்டு முறைகள் அனைத்தும் எளிய தமிழில் இருக்கின்றன. சமற்கிருத மந்திரங்களுக்கு எந்த இடமுமில்லை. இதனைச் சனாதனம் ஏற்றுக் கொள்ளுமா?

தாழக் கிடப்பாரை தற்காப்பதே தருமம்” என்றார் ஐயா வைகுண்டர் என்னும் போராளி.
காணிக்கையிடாதீங்கோ,
காவடிதூக்காதீங்கோ,
வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ
‘ என்று அகிலத்திரட்டு நூலில் இருக்கிறது.

பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகிய மூடப் பழக்கங்களைக் கடுமையாகச் சாடினார் ஐயா வைகுண்டர்.

பொய்யில்லை பிசாசுயில்லை

பில்லியின் வினைகளில்லை

நொய்யில்லை நோவுமில்லை

நொன்பலத் துன்பமுமில்லை” என்கிறார் அய்யா வைகுண்டர்.

சாதியை உருவாக்கியவர்களை ‘கலிநீசன்‘ என கடுமையாகச் சாடுகிறார் ஐயா.

“அறிந்து பலசாதி முதல் அன்பொன்றுக்குக் குள்ளானால்

பிரிந்து மிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்“

“தான மானங்களும் அதைப் பெற்றவர்க்குக்

கிட்டிக் கொள்ளும் பேதமில்லை மகனே“

(தான தருமம் தவம் முதலானவற்றின் பலன்கள் அவற்றை மேற்கொண்டவர்களுக்குத் தவறாமல் கிடைக்கும். இதில் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற பேதங்களுக்கு இடமில்லை மகனே)

“அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்து ஆண்டிடுங்கோ,

எவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாம்“

ஒவ்வொருவரும் அவரவர் சம்பாதிக்கும் பொருளை அவரவரே தம் குடும்பத்தாருடன் அனுபவியுங்கள். எவனுக்கும் பதறி தேடிய பொருளை அவனிடம் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம்)

ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன்

பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே

(ஏழைச் சாதிகளுக்குக் கல்வியும், ஞான நூல்களும் தேவையற்றவை என்று நீசர்கள் வகுத்த நெறியை மாற்றும் வகையில், நீயும் அறிவைப் பெறும் படியாக உன் கையிலும் ஏட்டையும் எழுத்தாணியையும் தருவதோடு பலவிதப் பட்டங்களும் விருதுகளும் தந்து என் பலநாள் பகையைத் தீர்த்துக் கொள்வேன் மகனே)

இவ்வாறு அகிலத்திரட்டு முழுக்க ஆதிக்க எதிர்ப்பு ஓங்கி இருக்கிறது. சனாதனம் எந்த இடத்தில் இவ்வாறு கூறுகிறது?

மக்களைப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகக் கூறுபோடும் வருணாசிரமக் கட்டமைப்பை ஐயா வழியோடு ஒப்பிடுவதே தவறு.

சனாதனத்திற்கு எதிராகக் கலகம் செய்த புத்தர், நாராயண குரு, வள்ளலார், ஐயா வைகுண்டர் என எல்லாருக்கும் காவிச் சாயம் கொடுக்கப் பார்க்கிறது பாசக. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கே மதச் சாயம் பூசும் கும்பல் ஆச்சே இது!

– குருநாதன் சிவராமன்

தாழி மடல் 306

(தொடரும்)
தோழர் தியாகு