சனி, 25 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : குறள்நெறி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள் – தொடர்ச்சி)

குறள்நெறி

தமிழ்த் தேசியத்தில் கலாச்சாரம் என்பதை எதன் அடிப்படையில் வரையறுக்கிறீர்கள்? சல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரமா?

பண்பாடு என்பதே ஒரு சமூகத்தை ஒன்றுபடுத்தியிருக்கிற விழுமியங்களின் தொகுப்பு. ஆதிக்கத்துக்கும் அடிமைக்குமான போராட்டம் அல்லது நீதிக்கும் அநீதிக்குமான போராட்டம் எப்படிச் சமூகத்தில் வேரூன்றியிருக்கிறதோ, அதேபோல் இரு பண்பாடுகளுக்கிடையேயான ஒரு போராட்டம்தான் ஒரு தேசிய இனப் பண்பாடாக அமைகிறது. பிறப்பினால் வேற்றுமை பாராட்டுவதையும், சாதியத்தையும் நியாயப்படுத்துகிற பண்பாடு ஒருபக்கம். இதை எதிர்த்து, பிறப்பினால் வேற்றுமை இல்லை என்று சொல்கிற பண்பாடு மறு பக்கம். இந்த இரண்டும் இன்றோ, நேற்றோ முளைத்து விடவில்லை. நம்முடைய வரலாறு நெடுகிலும் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஒருபக்கம்தான் திருவள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை நீடிக்கிறது. மற்றொரு பக்கம் பார்ப்பனக் கருத்தியல்கள்.

முற்போக்கான தமிழ்த் தேசிய பண்பாடு என்பதன் அடையாளமாகக் குறள்நெறியை முன்வைக்கிறோம். குறள்நெறி என்பது சமத்துவம், பகிர்வு, அன்புடைமை என்பதை அடிப்படையாகக் கொண்டது. நிலையாமைதான் அதன் மெய்யியல். இதைத்தான் நாம் தமிழ்த் தேசிய பண்பாடு என்கிறோம்.

இது சாதியத்திற்கு, மதவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற ஒரு பண்பாட்டு நிலைப்பாடு. தமிழ்த் தேசியப் பண்பாடு விரிவடைவதன் ஒரு பகுதிதான் சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது. எழுத்துகளின் வடிவங்கள், உடைகள் என எல்லாவற்றிலும் காலத்திற்குத் தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் சமத்துவப் பண்பாட்டின் இழைகளாக இருக்க வேண்டும். சமத்துவப் பண்பாட்டின் மாற்றங்களுக்கு இணையாகத் தான் இந்தப் பண்பாடு வளர வேண்டும்.

பல்வேறு பண்பாடுகளும் ஒரு தமிழ்த்தேசிய பண்பாட்டோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இணைவுகளை அங்கீகரிக்கிற ஒரு பண்பாட்டைத் தான் நாம் தமிழ்த் தேசியப் பண்பாடு என்கிறோம். தமிழ் நாட்காட்டி வைத்திருப்பதால் அதையே தான் பயன்படுத்த வேண்டும் என்று அருத்தம் கிடையாது. உலகம் முழுவதும் பயன்படுத்தும் நாட்காட்டியை நாமும் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் நம்முடைய மாதங்கள், வருடங்கள் போன்றவற்றையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சல்லிக்கட்டைப் பொறுத்த வரை, விளையாட்டுகள் சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையில் இருந்துதான் வருகின்றன. விலங்குகளோடு இரண்டு கால் விலங்குகளாக மனிதன் இருந்த நிலை மாறி கால்நடைகளை உழவுக்குப் பயன்படுத்துவது, தன்னுடைய பயணத்திற்குப் பழக்கப்படுத்துவது என மாற்றத் தொடங்கிய காலத்தில்தான் சல்லிக்கட்டு தொடங்கியிருக்கும். பிரபுத்துவ, சாதியச் சமூகத்திற்கு முன்னதாகவே சல்லிக்கட்டு இங்கே இருந்து வந்திருக்கிறது.

நிலப்புரபுத்துவச் சமூகத்தின் ஒரு கூறாகத் தான் சல்லிக்கட்டு இருந்திருக்கிறது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. அஃதாவது தன்னிடமிருந்த அடிமைகளையும், மாடுகளையும் நிலப்பிரபுக்கள் மோதவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் சல்லிக்கட்டு என்ற ஒரு கூற்றும் உள்ளதல்லவா?

ஒவ்வொரு பழக்கமும் அந்தந்தக் காலத்தின் நிகழ்வை உள்வாங்கித்தான் மாறும். ஆடு, கோழி பலியிடுவது என்பது நீண்டகாலமாக நம் மக்களின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இடையில் நிலப்புரபுத்துவக் காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது அடிமைகள் ஆடு, கோழிகளை நிலச்சுவான்தார்கள் வீட்டில் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தது. தஞ்சை, திருவாரூரின் ஒரு சில பகுதிகளில் இந்தப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. பொங்கல் பண்டிகையிலும் நிலப்பிரபுத்துவம் வந்து விட்டது. அதற்காகப் பொங்கலை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?

சமூகத்தின் உற்பத்திப் பெருக்கமும், ஆதிக்கச் சக்திகளும், அதன் கருத்தியலும் தேசியப் பண்பாட்டில் கலப்பதை நாம் அடியோடு தடுத்து விட முடியாது. இதன் அடிப்படையில்தான் சல்லிக்கட்டையும் பார்க்க வேண்டும். இதிலிருக்கிற பிரபுத்துவத்தை ஒழிக்க வேண்டும். எல்லாரும் கலந்து கொள்ளும் படியும் பாதுகாப்பானதாகவும் அதை மாற்ற வேண்டும். நம்முடைய இயக்கம் சார்பில் சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கெனவே இருக்கிற பழக்கம் அது, அப்படியே தொடரட்டும், காலப்போக்கில் அது மறையட்டும் என்றுதான் சொல்கிறேன். அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்த் தேசியவாதிகள் கற்பு என்ற பெயரில் பெண்களை மறுபடியும் வீட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ‘குட்பு-கற்பு’ சிக்கலின்போது பெண்ணியவாதிகளால் வைக்கப்பட்டது, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒவ்வொரு கருத்தும் சமூகத்தில் எப்படி வந்தது, யாரைப் பாதுகாக்க வந்தது என்று பார்க்க வேண்டும். ஒரு பெண்ணுக்குச் சமூகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அவளைப் பாதுகாக்கக் கற்பை வைத்தார்கள்.

எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய விழுமியங்களோ, கருத்துகளோ கிடையாது. ஒவ்வொரு கருத்தும் ஒரு காலத்திற்குப் பொருந்தும்; இன்னொரு காலத்திற்குப் பொருந்தாது. கலையும் இலக்கியமும் கடவுளையும், அரசரையும் புகழ்ந்து பாடுவதற்கே என்ற நிலையில் இருந்தபோது ‘கலை கலைக்காகவே, இலக்கியம் இலக்கியத்துக்காகவே’ என்ற முழக்கம் வந்தது. அப்போது அது மிகவும் முற்போக்காகக் கருதப்பட்டது. பின்னர் அதுவும் பின்னால் தள்ளப்பட்டு ‘கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற கருத்து முற்போக்குக் கருத்தாக இப்போது இருக்கிறது.

இப்படித்தான் கற்பும். பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு காலகட்டத்தில் பாதுகாப்புக்கு ஒருவன் தேவை என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட கருத்துதான் அது. ஆனால் இன்று அது பெண்ணை அடிமைப்படுத்துகிற கருத்தாக மாறி விட்டது. எனவே அதை எதிர்ப்பதைப் பற்றி எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் அது சனநாயகத்தின் பெயரில் சமூக உறவுகளில் வன்முறையை – அராசகத்தை நுழைப்பதாக இருக்கக் கூடாது.

குட்பு முன்மொழிந்த கருத்து வன்முறை(அராசகம்). அதனால் அதை எதிர்த்தோம். அதில் ஆணாதிக்கச் சிந்தனை எதுவும் கிடையாது. எங்கெல்சு குடும்பம் என்ற அமைப்பை சனநாயகப்படுத்துவது பற்றிப் பேசுவார். குடும்பம் என்ற அமைப்பில் ஆணாதிக்கச் சிந்தனையும், சுதந்திர மறுப்பும் இருப்பதைக் களைய வேண்டும். குடும்பத்தையே ஒழித்து விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. குடும்ப ஒழிப்பு தமிழ்த் தேசிய இனத்தின் சமூகக் கட்டமைப்பையே சீரழித்து விடும்.

ஓர் ஒழுங்கை எதிர்ப்பது என்பது இன்னொரு ஒழுங்கை கட்டமைப்பதற்காகவே தவிர, ஒழுங்கே இல்லாமல் எப்படியும் போகலாம் என்பதற்காக அல்ல.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 300

வெள்ளி, 24 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள்

 




 (தோழர் தியாகு எழுதுகிறார் : கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (3)(ஆ)

தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள்

நேர்காணல்: மினர்வா & நந்தன்

மா.பொ.க.வில்(சி.பி.எம்மில்) இருந்து வெளியேறியதும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினீர்கள் அல்லவா?

இந்தியா இலங்கைக்குப் படை அனுப்புகிறது. ஈழத்தில் தமிழ் மக்கள் இந்தியப் படையால் கொல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதுதான் திலீபன் மன்றத்துக்கான அடிப்படை. விடுதலைக் குயில்கள் அமைப்பு நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் இணைந்து 1993இல் தமிழ்த் தமிழர் இயக்கம் ஆரம்பித்தோம். அவர் அப்போதே சொன்னார் “உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு தத்துவார்த்தச் சிந்தனை கிடையாது, தி.மு.க. நல்லதாக இருந்தால் அதில் போய் இணைஞ்சுக்கலாம். ஆனா இருக்கிற தி.மு.க. நல்ல தி.மு.க.வா இல்லை அதுதான் சிக்கல்”. அதன்பிறகு தன்னுரிமையா விடுதலையா போன்ற பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. விவாதங்களின் முடிவில்தான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆரம்பமானது.

நக்சலைட்ட வாழ்க்கையிலும் சரி, தமிழ்த்தேசியவாதியாகவும் சரி பல்வேறு ஒடுக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறீர்கள். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

நக்சலைட்டு வாழ்க்கையின் போராட்ட வடிவமே ஆயுதப் போராட்டம்தான். சிறையில் இருக்கும் போதும் ஆயுதப் போராட்டத்தை நடத்த விரும்பினோம். வாய்ப்பு கிடைத்த போது அதைத்தான் செயற்படுத்தினோம். எனவே அதற்குப் பதிலான அவர்களின் அடக்குமுறையும் அந்த வடிவத்திலே தான் இருந்தது. எவ்வளவோ சித்திரவதைகள், அடி, உதை எல்லாவற்றையும் சந்தித்து விட்டோம். அதோடு ஒப்பிடும்போது தமிழ்த் தேசியவாதியாக அடக்குமுறையைச் சந்திக்கவே இல்லை. ஏதோ பேசுகிறோம், தடை செய்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்ற அளவில்தான் இருக்கிறது. மக்கள் போராட்டம் அந்த அளவுக்கு வளரவில்லை. வளர்ந்தால் அடக்குமுறை வரக் கூடும்.

தமிழ்த்தேசியவாதிகள் வைக்கும் முழக்கங்களில் ஒன்று ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்பது. நீங்கள் பெரியாரைப் படித்தவர். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பெரியாரின் தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கத்தில் இருந்து தொடங்கிப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் வரை தமிழ்த் தேசியம்தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சியும் தி.மு.க எட்டிய அந்த வெகுசன எல்லையை எட்டவே இல்லை. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி, சம்பத்து போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே தமிழ்நாட்டின் வெகுமக்களை, தமிழ்த்தேசிய இனத்தைத் தி.மு.க. அளவுக்குச் சென்று சேரவில்லை.

1965இல் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு முக்கியப் பங்கு உண்டு. 1938இல் பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். எல்லைமீட்புப் போராட்டத்தில் பெரியார் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேவிகுளம், பீர்மேடு பறிபோவதைப் பற்றியோ, திருப்பதியை இழப்பதைப் பற்றியோ அவர் கவலைப்படவே இல்லை. அதே நேரத்தில் பொருளியல் வழியில் வடமாநிலத்தவர், மார்வாடிகள் இங்கு ஆதிக்கம் செய்வதைப் பற்றி பெரியாருக்கு ஒரு பார்வை இருந்தது.

திராவிடம் என்ற கருத்தியலினுடைய வரலாற்று உள்ளடக்கம் தமிழ்த்தேசியம்தான். தமிழ்த்தேசியத்தின் உருத்திரிந்த வடிவம்தான் திராவிடம்.

அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்த போது பெரியார் “மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கு முன்னால் நாமும் திராவிட நாடு பற்றிப் பேசினோம். இப்போதுதான் மொழிவழி மாநிலங்கள் அமைந்து விட்டதே, இப்போது எந்த மலையாளியோ, தெலுங்கனோ தனிநாடு கேட்கிறானா? எனவே தனித்தமிழ்நாடு தான் நம் நோக்கமே தவிர, திராவிட நாடு அல்ல. இந்தச் சூழ்நிலையில் திராவிட நாடு கேட்பது ஒரு மோசடி” என்று கூறினார். இன்னொரு சமயத்தில் “நான் ஆதித்தனாருடன் இணைந்து தனித்தமிழ்நாடு கேட்டுப் போராடுவேன்” என்றே பெரியார் குறிப்பிட்டார்.

அண்ணாவிடம் பொதுக்குழு மாநாட்டில் கோவை செழியன் “கட்சியின் பெயரை மாற்ற வேண்டும். இங்கு திராவிட நாடு எங்கிருக்கிறது? நாம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறோம். எனவே தமிழர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும்” என்று கேட்கிறார். “அப்படி மாற்றினால் அதைச் சொல்லியே பெரியார் நம்மை ஒழித்துத் தள்ளிவிடுவார். அதைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்று அண்ணா கூறினார்.

பின்னால் தி.மு.க.விலிருந்து வைகோ பிரிந்தபோது நான் அவரிடம் கூறினேன். “இதுதான் நல்ல சந்தர்ப்பம். இதைப் பயன்படுத்தி திராவிடம் என்ற சொல்லை ஒழித்து விட்டு தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ, மறுமலர்ச்சி தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ வையுங்கள்” என்று சொன்னேன். “அய்யோ இதை வைச்சே கலைஞர் ஒழிச்சுடுவார்” என்று பதறினார் வைகோ.

திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தியத் தேசியமும் ஒருகட்டம் வரைக்கும் முற்போக்கானது. இந்தியத் தேசியத்தை ஆதரித்த காங்கிரசுகாரரான சோமசுந்தர பாரதியார் தமிழ்த்தேசியம் என்ற பேச்சு வந்தபோது அதை ஆதரித்துப் பெரியாரோடு ஒன்றுபட்டார். இராசாசியை ஆதரித்த ம.பொ.சியும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை ஆதரித்தார். எனவே திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்த்தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த வரை அது முற்போக்கானது தான்.

திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்” என்பதுதான் சரியாக இருக்க முடியும். திராவிடம் என்பது முந்தைய காலத்துக்குரிய ஒரு கருத்து. ‘அந்த சிறைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது’ என்று சொன்னால் அது சிதைவாக மாறும்.

திராவிடம் என்ற வார்த்தை இந்தி எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தமிழ்மண் காப்பு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது போன்றவை தான். இதுதான் திராவிடம் என்றால் திராவிடத்தின் உள்ளடக்கம் தான் தமிழ்த்தேசியம். ஆனால் இந்த உள்ளடக்கத்தை இழந்து திராவிடம் என்ற சொல் வெறும் பதவிச் சண்டைக்கான சொல்லாக இன்று சிதைந்து சீரழிந்து கொண்டிருக்கிறது.

அதாவது நாற்காலி அரசியலில் கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்று சொல்கிறீர்களா?

ஒவ்வொரு புரட்சியும் ஓர் அரசியல் புரட்சியில் இருந்துதான் தொடங்குகிறது. அரசியல் புரட்சியின் முக்கியமான கேள்வி யாருக்கு அதிகாரம் என்பதுதான். அதிகாரத்தைக் கைப்பற்றாமல் சமூகத்தை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பொருளியலை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பண்பாட்டை மாற்ற முடியாது. அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதில் தவறே இல்லை.

ஆனால் இவர்கள் தேடும் அதிகாரம் மேலே சொன்ன மாற்றங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் அல்ல. 1952இல் தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த அதிகாரத்தின் மூலம் திராவிட நாடு சாத்தியமில்லை என்பதால் அவர்கள் போட்டியிடவில்லை. அதே தி.மு.க.தான் 1957இல் போட்டியிடுகிறது. இப்போது வரை அது நீடிக்கிறது. இடையில் கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆசை காட்டினார்கள்; இவர்கள் பலியானார்கள்.

கட்சி தேர்தலில் நிற்காத போது தொழிற்சங்கப் போராட்டம், மொழிப் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். நிறைய இளைஞர்களை ஈர்த்தார்கள். போராட்டங்களுக்காக மாதக்கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்தார்கள். தேர்தலில் போட்டியிட்ட போது பதவிகளின் மீது மோகம் வந்தது. அந்தப் பதவிகள் தங்கள் நோக்கங்களுக்கு உதவுமா என்று பார்க்கத் தவறி விட்டார்கள். அப்படியே தங்களது குறிக்கோளையும் இழந்து விட்டார்கள். இலக்கைக் கைவிட்டு அமைப்பைப் பாதுகாத்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு ‘இங்கே கொஞ்சம், தில்லியில் கொஞ்சம் கிடைத்தால் போதும்’ என்கிற நிலைக்கு வந்து விட்டார்கள்.

உண்மையான அதிகாரமல்லாத அதிகாரத்தின் மீது கொண்ட மயக்கம் இது. இவர்கள் கையில் இருக்கிற அதிகாரத்தை வைத்துக் கொண்டு இலவசங்கள் தருவதைத் தவிர எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தேர்தலின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதால்தான் நாங்கள் (தமிழ்த் தேசியவாதிகள்) தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 300

வியாழன், 23 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும் – தொடர்ச்சி)

கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்


அந்த நேரத்தில் மா.பொ.க.(சி.பி.எம்.) மாவட்ட மாநாடு நடைபெற்றது. நான் குழு(கமிட்டி) பதவியை விட்டு விலகினேன். இதற்குக் காரணமாக, ‘என் கீழே இருக்கும் உறுப்பினர்களிடம் என்னால் அதிக நாட்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை விட்டு விலகுகிறேன்’ என்று சொன்னேன். இதுதொடர்பாக உ.இரா. வரதராசனுடன் கடுமையான விவாதம் நடைபெற்றது. ‘குழுப் பதவியை விட்டு விலகினாலும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்’ என்று அவர் கூறினார். ‘நீங்கள் யார் என்னைக் கண்காணிப்பதற்கு, நாங்கள் கண்காணிக்க வேண்டிய நிலையில்தான் தலைவர்கள் இருக்கிறீர்கள்’ என்று கூறினேன்.

மாநாட்டில் எனக்குப் பேசுவதற்கு எட்டு நிமிடம் ஒதுக்கப்பட்டது. நான் பேச ஆரம்பித்ததுமே குறுக்கிட்டு, ‘தி.மு.க.வில் பேசுவது போல் பேசக் கூடாது’ என்றார்கள். ‘நீங்கள் சோ.ராமசாமி பேசுவது போல் பேசாதீர்கள்’ என நான் பதில் கூறினேன். இனிமேல் கட்சிக்குள் போராடி வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

நேருவின் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஏ. நல்லசிவன் அறிக்கை கொடுத்தார். அஃது ஓர் ஏமாற்று மோசடி என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன். ‘அனைத்து மொழிகளும் சமம் என்கிற இலெனினின் கொள்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா, அல்லது இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் தேவை என்கிற நேருவின் கொள்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ எனக் கேட்டிருந்தேன். அவர் கட்சிக்குள் ஒரு சிறந்த சனநாயகவாதி. என்னை அழைத்து அது குறித்து விவாதித்தார். பேச்சு விடுதலைப் புலிகள் பக்கம் திரும்பியது. ‘புலிகள் போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை, ஆனால் தொழிற்சங்கத்தில் கிடைப்பது போல இடைக்கால நிவாரணம் தற்போது கிடைப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் இல்லையா?’ என்று கேட்டார்.

இடைக்கால நிவாரணம் தொழிற்சங்கத்தைக் கலைப்பது போல இருக்கக் கூடாது’ என்று நான் சொன்னேன். இதேபோல் பல வாக்குவாதங்கள் நடைபெற்றன. 1989 செட்டம்பர் 15ஆம் நாள் திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய நாள். நாங்கள் மூன்று தோழர்கள் இணைந்து திலீபன் மன்றம் ஒன்றை அறிமுகம் செய்தோம் அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஈழச்சிக்கல் குறித்து நான் விரிவாகப் பேசினேன். கூட்டத்தில் மா.பொ.க.வைக் கடுமையாகத் தாக்கிப் பேசினேன்.

கூட்டம் நடைபெறப் போகிறது என்று அறிந்தவுடனே, நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கட்சியில் இருந்து சொன்னார்கள். அதைமீறி நான் கலந்து கொண்டேன். மறுநாள் தீக்கதிர் பத்திரிகையில் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது. மா.பொ.க.வுடன் உறவு முறிந்து போன பின்னணி இதுதான். அவர்கள் பேச்சளவில், எழுத்தளவில் இந்தியாவைப் பல்தேசிய இன மக்களை கொண்ட நாடாகக் கூறினாலும், அவர்களின் வேலைத் திட்டம் இந்தியாவை ஒரே நாடாகக் கருதுகிறது.

சாதி ஒழிப்பு குறித்துத் தனியான சிந்தனையோ, வேலைத்திட்டமோ அவர்களிடம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை நிலப் பிரபுத்துவச் சமூகத்தின் மிச்சசொச்சம் தான் சாதி. வர்க்கப் போராட்டம் நடந்து முடியும் போது சாதி தானாக ஒழிந்து விடும் என்பதுதான் அவர்களது கருத்து. இதனால்தான் இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. இட ஒதுக்கீடு தொழிலாளி வருக்கத்தைப் பிளவுபடுத்தி, முதலாளித்துவ ஒழிப்பு ஐக்கியத்தை அழித்து விடும் என்பது அவர்கள் கருத்து.

கட்சியின் பார்ப்பனத் தலைமை மட்டுமே இதற்குக் காரணமல்ல. கட்சியின் அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது. கட்சிக்குள் முழுநேர ஊழியர்களாக வருபவர்கள் ஆ.கா.க.(எல்.ஐ.சி.) சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் போன்றவற்றில் இருந்துதான் கட்சிக்குள் வருகிறார்கள். மண்டல் குழு பரிந்துரை, இட ஒதுக்கீடு போன்றவை இந்தப் பார்ப்பன ஊழியர்களை நேரடியாகப் பாதிக்கும். எனவே இதனை அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். இதைத்தான் கட்சித் தலைமை எதிரொலிக்கும். சமூகநீதிக் கொள்கையில் அவர்களுக்கு உண்மையான அக்கறை கிடையாது.

தேசிய இனச்சிக்கல், சாதிச் சிக்கல்கள் போன்றவற்றில் ஆளும் வருக்கத்தின் பார்வைதான் அவர்களின் பார்வை. இடது வண்ணம் பூசப்பட்ட ஆளும் வருக்கப் பார்வை. அடிப்படையில் அவர்கள் இந்திய ஆளும் வருக்கத்தின் பக்கம் நிற்கிறார்கள். நாம் தமிழ்த் தேசியம் சார்ந்தோ, சாதி ஒழிப்பு சார்ந்தோ பேசினால் அவர்களுக்கு அது எதிரானது. எனவே நான் அவர்களோடு மாறுபட்டேன்.

அப்போதிருந்த மா.பொ.க. நிலைக்கும், இப்போதிருக்கும் நிலைக்கும் ஏதாவது வித்தியாசத்தை காண்கிறீர்களா?

முன்னைவிட மோசமாக இருக்கிறது. 1964இல் கட்சியின் முதல் வேலைத்திட்டம் குறித்த விவாதம். அதில் தேசிய இனச்சிக்கல் குறித்துப் பேசுகிறார்கள். கருத்து வேறுபாட்டால் கட்சி இரண்டு பிரிவாக நின்றது. ஏ.பாலசுப்பிரமணியம், சுந்தரய்யா போன்றவர்கள் ‘தேசிய இனச்சிக்கல் என்பது இலெனினின் கொள்கைதான். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் பிரிந்து போகும் உரிமையோடு கூடிய, தன்வரையறை உரிமை கொண்ட தேசிய இனங்களின் ஐக்கியமாக இருக்க வேண்டும்’ என்றார்கள்.

1912இலேயே தாலின் “இந்தியாவில் தேசிய இனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வளர்ச்சி இந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. பின்னாளில் தேசிய இனங்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்தும்” என்று எழுதினார். 1920களிலேயே இந்தியாவில் மொழிவழித் தேசிய இனங்கள் தங்களை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டார்கள். அதனுடைய ஒரு வெளிப்பாடுதான் பெரியாரின் தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம். தமிழ்த்தேசியம் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் முயற்சி அது. பஞ்சாபில் ‘அகாலி’ இயக்கம் ஒருபுறம் பிரிட்டனை எதிர்த்துக் கொண்டே ‘பஞ்சாப்பு பஞ்சாபிகளுக்கே’ என்ற முழக்கத்தை முன்வைத்தது.

இதற்கெல்லாம் முன்னோடியாக வங்காளம் திகழ்ந்தது. வந்தே மாதரம் பாடலை சட்டர்சி எழுதும் போதே ஏழு கோடி மக்கள்தொகை என்றுதான் எழுதினார். பாரதியார் அதை முப்பது கோடி என்று மொழிபெயர்த்தார். ஏனெனில் சட்டர்சி எழுதியது வங்கதேசத்துக்கான பாடல்தான். பிற்காலத்தில் ஆந்திராவில் எழுந்த தெலுங்கானா போராட்டம் என்பது தெலுங்கு தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம்தான்.

ஆனால் பொதுவுடைமைக் கட்சி 1941இல் பாகித்தான் பிரிவினைக் கோரிக்கையின் போதுதான் தேசிய இனச்சிக்கலுக்கு முதன்மைத்துவம் தருகிறது. அதற்காக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. இறுதியில் இந்தியா என்பது பிரிந்து போகும் உரிமையுடைய பல்வேறு தேசிய இனங்களை உடைய ஒரு பல்தேசிய நாடு என அறிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில்தான் பாகித்தான் தனிநாடு கேட்கிறது. எனவே அதை ஆதரிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்கள்.

பாகித்தான் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரங்கள், ‘நேரு ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், எனவே அவரது கையை வலுப்படுத்த வேண்டும்’ எனச் சீனா, சோவியத்து கருதியது போன்ற பல்வேறு பின்னணிகளில் பொதுவுடைமைக் கட்சி தேசிய இனச்சிக்கலில் தங்களுக்கிருந்த கொள்கையைக் கைகழுவியதுஇ.எம்.எசு. போன்ற தலைவர்கள் ‘தன்வரையறை(சுயநிருணய) உரிமையை ஆதரித்தால் இந்தியப் பாட்டாளி வருக்கம் பிளவுபட்டு விடும். ஆனால் மார்க்சியக் கட்சி என்ற முறையில் தேசியத் தன்வரையறை(சுயநிருணய) உரிமையை எதிர்க்க முடியாது, அதே நேரத்தில் அதை வலியுறுத்தவும் கூடாது’ என்ற நிலையை எடுத்தார்கள்.

வெளிப்படையாகத் ‘தன்வரையறை(சுயநிருணய) உரிமையை ஆதரிக்க வேண்டும்’ என்ற மற்றொரு கருத்தும் அங்கே வெளிப்பட்டது. எனவே இதை விவாதித்து முடிவெடுப்பதாக அறிவித்து 72 வரை எட்டு வருடங்கள் கட்சிக்குள் விவாதங்கள் நடைபெற்றன. மாநிலங்களில் இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தன்வரையறை(சுயநிருணய) உரிமைக்கு ஆதரவாக (பி.இராமமூர்த்தியை எதிர்த்து, ஏ.பாலசுப்பிரமணியத்திற்கு ஆதரவாக) அதிகம் பேர் வாக்களித்திருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அது மறுதலிக்கப்பட்டது. இறுதியில் இந்தியா விருப்பம் சார்ந்து இணைந்த தேசிய இனங்களின் ஒன்றியமாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இது கட்சியின் தீர்மானம்.

இந்தியாவுக்குச் சொன்ன இந்த கருத்தை, அளவுக்கு மீறி அவர்கள் இலங்கையில் திணித்து விட்டார்கள். சமீபத்தில் கொசோவாவுக்கும் விடுதலை கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் வங்கதேசப் பிரிவினையை ஆதரிக்கிறார்கள். ஏனெனில் மேற்கு வங்காளத்தில் கட்சி பெரிய கட்சி. அதனால் வங்க மக்களின் தேசிய உணர்வை எதிர்த்து நிற்க முடியவில்லை. இதற்கு வங்கத் தேசிய உணர்வு மட்டும் காரணமல்ல. இந்திய ஆளும் வருக்கத்தின் கொள்கை இவர்களது கொள்கையாக இருப்பதும் ஒரு காரணம்.

வங்கதேசப் பிரிவினை பாகித்தானை பலவீனப்படுத்தும். எனவே இந்திய ஆளும் வருக்கம் அதை ஆதரிக்கிறது. பொதுவுடைமையர்களும் ஆதரிக்கிறார்கள். இந்தியப் படையை இலங்கைக்கு ஆளும் வருக்கம் அனுப்பிய போது அதை வரவேற்றார்கள். இப்படித்தான் முன்னைக் காட்டிலும் மா.பொ.க.(சி.பி.எம்மின்) நிலைமை பலமடங்கு மோசமாகி விட்டது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 299

புதன், 22 நவம்பர், 2023

தமிழ்ப் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910), விடுதலை

 




தமிழ்ப் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910)

இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்கார வேலர் – இரத்தினம் அம்மையார் ஆகியோரைப் பெற்றோராகக் கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் படித்த அவர் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்தேர்ந்தவர்.
தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் போப்பைச் சந்தித்த போது இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.
எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சி, இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள். திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம் – தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும். தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்களையும் எழுதியுள்ளார்.

சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன், குறள்நெறி ஆகிய ஆங்கில இதழ்களையும் நடத்தியுள்ளார். தமிழாசிரியராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத் தலைவராக, முதல்வரலாகப் பரிணமித்தவர்.

திருவாரூரில் தமிழாசிரியராய்ப் பணி யாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் கலைஞர் .தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் குறிப் பிட்டுள்ளார்.

கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் குழுவின்(அகாடமிக் கவுன்சில்) உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு புலவர் குழு செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் சிறைவாசத்தை அனுபவித்தவர்.

“தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத் திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும்.” தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.

இலக்குவனார் பிறந்த ஊரான வாய்மேட்டில் இலக்குவனார் நடுநிலைப்பள்ளி 26.01.0953 இல் தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது.

“தமிழ்நாட்டின் உணர்வுக்கும் தமிழ் மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது கடமை, தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர்” என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டு செயல்பட்ட இலக்கு வனார் பிறந்த நாள் இன்று!

  • விடுதலை நாள் 17.11.2023

தோழர் தியாகு எழுதுகிறார் : மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : மூலதனம் தமிழாக்கம் – தொடர்ச்சி)

மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும்: தியாகு

கீற்று நேர்காணல் (3)(அ) : மினர்வா & நந்தன்

சிறையில் இருந்து வெளியே வந்ததும் மா.பொ.க.(சி.பி.எம்)-இல் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்?

நானும் தோழர் இலெனினும் சிறையில் இருந்த படி கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடிநிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.) தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்குசியக் கட்சியின் சோதிபாசு, ஈ.எம்.எசு, பி.இராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்ய முற்பட்டது. அவர்களில் பலர் தலைமறைவாகிச் செயல்பட்டனர்.

கேரளத்தில் நெருக்கடிநிலையைக் கண்டித்து மார்க்குசியக் கட்சி முழு அடைப்புப் போராட்டமே நடத்தியது. தலைவர்களைக் கைது செய்த இந்திரா காந்தி அரசு அவர்களை மிசாவில் அடைக்கவில்லை. வலதுசாரி வல்லிய(பாசிச)க் கட்சிகளை அடக்கத்தான் இந்த நெருக்கடிநிலை என உலகிற்கு இந்திராகாந்தி அறிவித்தார். இதற்கு இ.பொ.க.(சி.பி.ஐ.) ஆதரவு தெரிவித்தது. சோவியத்து அரசும் இதை நியாயப்படுத்தியது. நெருக்கடி நிலை இடதுசாரிகளுக்கு எதிரானதல்ல என்று காட்டிக்கொள்ளத்தான் இ.பொ.க.(சிபிஎம்) உயர்மட்டத் தலைவர்களை அரசு கைது செய்யவில்லை.

ஆனால் அந்தத் தலைவர்களாலும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்கள் நடத்திய பத்திரிகைகளும் முன்தணிக்கை செய்யப்பட்டே வந்தன. இந்த நடவடிக்கைகளால் எங்களுக்கு மா.பொ.க.(சி.பி.எம்.) மேல் பெரிய மரியாதை இருந்தது. இந்திய ஆளும் வருக்கம் பற்றிய பார்வை, இந்திய முதலாளிகளின் ஆதிக்கம், விவசாயம் பற்றிய தெளிவு போன்றவற்றில் மார்க்குசியக் கட்சிக்கு அறிவியல் வழிப்பட்ட பார்வை இருந்தது.

அதேபோல்’ சீனத்தின் பாதையே எங்கள் பாதை’ என்று சொல்லும் மா.இலெ.(எம்.எல்) கட்சிக்கும், சோவியத்து என்ன செய்தாலும் சரி என்று சொல்லும் இ.பொ.க.(சி.பி.ஐ.) கட்சிக்கும் இடையே சுதந்திரமான ஒரு கட்சியாக மா.பொ.க.(சி.பி.எம்.) தான் இருந்தது. இதனால் உலகக்ப் பொதுவுடைமை இயக்கங்கள் எதுவும் மா.பொ. கட்சியை ஆதரிக்கவில்லை. பெய்சிங்கு வானொலியில் இவர்களைப் ‘பன்னாட்டு அனாதைகள்’ என்றே கூறினார்கள்.

சீனாவின் ஒரே நிரந்தரத் தலைவர் மாசேதுங்குதான் என அவர்கள் (கட்சியின் ஒன்பதாம் பேராயத்தில்) அறிவித்த போது இங்குள்ள மார்க்குசியர்கள் அதைக் குறையாய்வு செய்தார்கள். ‘உரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பு தவறே செய்ய மாட்டார், எனவே அவரையே பின்பற்ற வேண்டும் என கத்தோலிக்கர்கள் கூறுவது போல் இருக்கிறது’ எனக் குறையாய்வு செய்தார்கள். ஏ.பாலசுப்பிரமணியமும் ‘சோவியத்தோ, சீனாவோ எந்த ஓர் இடமும் குருபீடம் போல் செயல்பட முடியாது’ என எழுதினார். இவ்வாறு அவர்கள் ஒவ்வொன்றிலும் மாறுபட்டு நின்றது எங்களை ஈர்த்தது. இதனால் சிறையிலிருந்த போதே மா.பொ.க.வில்(சி.பி.எம்மில்) சேர்ந்தோம்.

அமைப்பு கட்டுவது, பத்திரிகை நடத்துவது, போராடுவது எனச் சிறைக்குள் வழக்கம் போல் எங்களது செயல்பாடுகள் தொடர்ந்தன. அந்த நேரத்தில்தான் ஈழப்போராட்டம் வலுப்பெறுகிறது. அதில் மா.பொ.க.(சி.பி.எம்.) எடுத்த நிலைப்பாட்டில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. அவர்கள் முற்றிலும் இந்திய அரசின் நிலையை ஆதரித்தார்கள். ஈழப்போராட்டம் நியாயமானது என்ற கருத்து எங்களுக்கு இருந்தது.

ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிறைக்குள்ளேயே பெரிய எழுச்சி ஏற்பட்டது. மதுரை சிறைச்சாலையில் செயவர்த்தனே கொடும்பாவி எரிக்கப்பட்டது. நான் அப்போது திருச்சி சிறையில் இருந்தேன். அங்கு 1,500 கைதிகளையும் திரட்டி சிறைக்குள் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினோம். அதில் ஈழச் சிக்கல்களை விளக்கி நான் பேசினேன்.

1983இல் சிறையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்கினோம். அதில் முதல் கோரிக்கையாக ஈழப் போராட்டத்தை நியாயப்படுத்தினோம். அதைத் தவிரவும் பத்தாண்டுகள் ஆன ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக அந்தப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக ஒருநாள் உண்ணாவிரதமிருந்து அந்தப் பணத்தை ஈழ அகதிகள் நிதிக்காக அரசுக்கு அனுப்பினோம். சிறையில் இருந்து பதினைந்து நாட்கள் விடுப்பில் வெளியே போய் சிறைப் போராட்டத்துக்குப் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.

அதற்கு முன்னதாக 1979ல் சிறைக்குள் ஒரு கைதியைக் காவலர் அடித்துக் கொன்று விட்டு தற்கொலை செய்து விட்டதாகக் கூறினார்கள். இதை எதிர்த்துக் கைதிகள் சிறைக்குள் போராட்டம் நடத்தினார்கள். காவலருக்கும் கைதிகளுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. தேவாரம்தான் அபோது கா.து.த.(டி.ஐ.சி.)ஆக இருந்தார். கைதிகள் மீது துப்பாக்கிச்சூடும், பிரம்படியும் (இலத்தி சார்சும்) நடைபெற்றது. அதன் பிறகுதான் சிறைக் கைதிகளுக்காக ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் உருவாவதற்கு வெளியிலிருந்த மா.பொ.க.(சி.பி.எம்.) தோழர்கள்தான் கடுமையாகப் போராடினார்கள்.

1983 சிறைப் போராட்டத்திற்கு பிறகு எனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே ஈழப் போராட்டத்தை முன்னிறுத்திக் கருத்து வேறுபாடுகள் உருவாயின. தேசியத் தன்வரையறை உரிமையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தை மார்க்குசியக் கட்சி மறுதலித்தது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1985இல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். வெளியே வந்ததும் ம.பொ. கட்சியின் முழுநேர ஊழியராகச் சேர கட்சி அழைத்தது. மூலதனம் பதிப்பு வேலைகள் காரணமாக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில் கட்சியுடனான என்னுடைய முரண்பாடும் அப்படியேதான் இருந்தது. சிறையில் இருக்கும் போது, மார்க்சியக் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.பரமேசுவரன், இலெனின் கூறியதாக ஒரு கருத்தை வெளியிட, அதை நான் மறுத்தேன். இதனால் அவருக்கும் எனக்கும் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. அதனால் நான் சிறையில் இருந்து விடுப்பில் வெளியே வரும் போது எனக்கு எந்த உதவிகளும் செய்யக் கூடாது எனத் தோழர்கள் சிலருக்கு அவர் கூறியிருந்தார்.

செம்மலர் பத்திரிகையில் பாரதிதாசன் குறித்து கட்டுரை ஒன்று வெளியானது. அதில் பாரதியின் வழித்தோன்றல்தான் பாரதிதாசன் எனவும், அவரைப் போலவே இவரும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தினார், இடையில் திராவிடம் என்று போனாலும் இறுதியில் மீண்டும் அவர் பாரதியின் கருத்துக்கு வந்து விட்டார் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதை மறுத்து நான் எழுதினேன்.

‘பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இருந்த தனிப்பட்ட உறவு என்பது வேறு. பாரதியார் அடிப்படையில் இந்திய தேசியக் கவி. பாரதிதாசன் தமிழ்த் தேசியக் கவி. பாரதிதாசன் பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டதில் இருந்து இறுதிக் காலம் வரை அந்த நிலைப்பாட்டில்தான் இருந்தார். இந்திய-சீன எல்லைப் போரின் போது, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும், நேருதான் இந்தியாவின் தலைவராக இருக்க வேண்டும் என்ற கருத்துதான் பெரியாருக்கு இருந்தது. அதைத்தான் பாரதிதாசனும் எதிரொலித்தார். அதை வைத்துக்கொண்டுதான் இவர்கள் அவரை இந்திய தேசியக்கவி என்று கூறுகிறார்கள்.

பின்னாட்களில் சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சியுடனும், சி.பா.ஆதித்தனாருடைய நாம் தமிழர் கட்சியுடனும் அவருக்கு நெருக்கம் அதிகமானது. அந்த நாட்களில் பெரியாரையே அவர் திட்டிக் கொண்டிருந்ததாக அவருடைய மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் கடைசி வரை தமிழ்த்தேசியம் பக்கம்தான் நின்றார். எனவே அவரை இந்தியத் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தினார் என்று எழுதுவது சரியல்ல’ என்று எழுதினேன்.

இந்தக் கட்டுரையை வெளியிட செம்மலர் பத்திரிகை மறுத்து விட்டது; கட்டுரை பாலம் இதழில் வெளிவந்தது. இப்படித் தொடர்ச்சியாகக் கட்சியுடன் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டன. 1987இல் இந்திய-இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதை மா.பொ.க. ஆதரித்தது. இதற்கு மேல் சகித்துக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலை அப்போதுதான் ஏற்பட்டது. இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள சந்துரு அப்போது வழக்கறிஞராக இருந்தார். அவர் மா.பொ.கட்சியைச் சேர்ந்தவர். இந்தியா இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவதைக் கண்டித்து நடைபெற்ற மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டார்.

கட்சி அவரை அழைத்து ‘ஏன் கலந்து கொண்டீர்கள்’ என விளக்கம் கேட்டது. “நான் மனிதன், அதனால் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டேன்” என அவர் விளக்கம் சொன்னார். அதனையடுத்து சந்துரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் நான் இனி கட்சியில் நீடிக்க முடியாது என்பதை உணர்த்தின. நான் அப்போது மூலதன வேலைகள் காரணமாக அம்பத்தூரில் தங்கியிருந்தேன். அம்பத்தூரை விட்டு வெளியே சென்று நான் பேசக் கூடாது என்று கட்சி என்னை முடக்கியது.

தேசிய இனச்சிக்கல்கள், ஈழச்சிக்கல்கள் தொடர்பாகக் கட்சிக்குள் ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து மறுதலித்தார்கள். எம்ஞ்சியார் இறந்த தினத்தன்று பகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தடைபட்டிருந்ததால், திரும்பிச் செல்ல முடியாமல் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தோம்.

‘பேசுவதற்கு ஒன்றுமில்லை, இன்றாவது ஈழச்சிக்கல் குறித்துப் பேசுவோம்’ என வலியுறுத்தி நான் பேச வைத்தேன். அன்று உறுப்பினர்களுக்குள் கடுமையான மனக் கசப்பு ஏற்பட்டது. சோதிபாசு பேசியது இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையில் ஒன்றாகவும், தீக்கதிரில் வேறாகவும் வெளிவந்திருந்தது. அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு தீக்கதிர் பத்திரிகை பொய்ச் செய்தி வெளியிடுகிறது என வாதிட்டேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 299

செவ்வாய், 21 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : மூலதனம் தமிழாக்கம்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் : நாம் வந்த பாதை தவறு – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(இ) : மினர்வா & நந்தன்


மூலதனம் தமிழாக்கம்


சிறையில் இருக்கும் போது நீங்கள் செய்த மிக முக்கியமான பணி மூலதனத்தை மொழிபெயர்த்தது. அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சிறைக்குச் செல்லும் வரை மார்க்குசு, இலெனினின் எழுத்துகளை அதிகம் படித்தது இல்லை. படித்திருந்தால் சாரு மசூம்தாரின் எழுத்துகள் என்னை ஈர்த்திருக்காது. சிறைக்குள் நான் முதலில் படித்தது இலெனினின் புத்தகங்கள். அதுதான் எல்லாப் புத்தகங்களையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மார்க்குசின் கூலியுழைப்பும மூலதனமும் போன்ற சிறுசிறு புத்தகங்களைப் படிக்கும் போதுதான் இதற்கெல்லாம் அடிப்படை மார்க்குசின் ‘மூலதனம்’ என்பது தெரிந்தது. என்னுடைய மாமாதான் அக்கா வழியாக மூலதனம் ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.

சிறையில் இருந்த தோழர் இலெனினும், ஏ.சி..கே.வும் நான் மூலதனத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
(அப்போது நாங்கள் தூக்குக் கைதிகள். 1974 ஏப்பிரலில் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் கைதிகளாகி விட்டோம். அந்த ஆண்டு மே மாதம்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க சிறைப் போராட்டம்.)
1975இல் மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தேன். 76 நடுவில் மூலதனத்தின் முதல் பகுதியை மொழிபெயர்த்து முடித்து விட்டேன். 77இல் என்னை மதுரை சிறைக்கு மாற்றினார்கள். அங்கிருந்து மொழிபெயர்த்த பகுதிகளைத் தோழர் ஏ. பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பினேன். அவர் என்.சி.பி.எச்.-இடம் ஒப்படைத்தார். அவர்கள் இரா. கிருட்டிணையாவிடம் கொடுத்து கருத்துக் கேட்டார்கள். அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். சோவியத்தில் 12 வருடங்கள் தங்கி இருந்து பல புத்தகங்களை மொழிபெயர்த்தவர். பல மூலதன மொழிபெயர்ப்புகளை மறுதலித்தவர். ஆனால் அவர் என்னுடைய புத்தகத்தை வெளியிடலாம் எனக் கருத்து தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பை மாசுகோவிற்கு அனுப்பினார்கள். அவர்கள் மூன்று பகுதிகளையும் சேர்த்து வெளியிடலாம் எனக் கருத்து தெரிவித்தார்கள். 79 கடைசியில் மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் மொழிபெயர்த்துத் தருமாறு தோழர் பாலசுப்பிரமணியம் என்னிடம் கேட்டார். அப்போது நான் சென்னை சிறையில் இருந்தேன். 80 சனவரி இறுதியில் தொடங்கி ஏப்பிரல் 22ஆ ம் தேதி இரண்டாம் தொகுதியை மொழிபெயர்த்தேன். தினமும் இவ்வளவு நேரம் எனத் திட்டமிட்டு இந்த வேலையைச் செய்தேன். ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் இரவு இரண்டு மணி வரை கூட எழுதியிருக்கிறேன்.

மே முதல் நாள் மூன்றாம் தொகுதியை ஆரம்பித்து நவம்பர் 7ஆம் நாள் மொழிபெயர்த்து முடித்தேன். என்னுடைய புத்தகங்களோடு கலந்து அதை வெளியே அனுப்பினேன். அதன் பிறகு அடுத்தடுத்த வருடங்களில் திருச்சி, கடலூர் எனப் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய மொழிபெயர்ப்பு மாசுகோவில் அச்சாகிக் கொண்டிருந்தது. அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்குத் தமிழ் தெரியாததால் ஒவ்வொரு எழுத்தையும் பெரிதாக வடிவமைத்து வைத்துக்கொண்டு உருவத்தைப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக அச்சேற்றிக் கொண்டிருந்தார்களாம்.

அந்த நேரத்தில் சோவியத்து வீழ்ந்தது. இதில் என்னுடைய மொழிபெயர்ப்பும் காணாமல் போனது. ஆனால் என்.சி.பி.எச்.-இடம் அதனுடைய தட்டச்சு வடிவம் இருந்தது. அதை அவர்கள் ஒரு காப்பிரைட்டரிடம் கொடுக்க அவர் அதை் தப்பும் தவறுமாகத் திருத்தி வைத்திருந்தார். அதை மீண்டும் திருத்தி வடிவமைப்பதற்காக, ‘மூன்று வருடங்கள் தொடர்ந்து மாசுகோவில் தங்கியிருக்க மொழிபெயர்ப்பாளரை அனுப்ப முடியுமா? என்று மாசுகோவில் இருந்து கேட்டார்கள். நான் அப்போது சிறையில் இருக்கிறேன். விடுமுறையில் இரண்டு மூன்று நாட்கள்தான் வெளியில் வந்து போக முடியும். இதற்கு முன்னரே என்னுடைய தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதைக் குறிப்பிட வேண்டும்.

எனவே புத்தக வடிவமைப்பைச் சென்னையிலே செய்யலாம் என முடிவெடுத்து நான் சென்னை சிறைக்கு மாற்றல் வாங்கி வந்தேன். சிறையில் இருந்து கொண்டே அதன் திருத்த வேலைகளில் ஈடுபட்டேன். 85 நவம்பர் கடைசியில் விடுதலையானேன். மொழிபெயர்ப்புக்குத் தேவைப்பட்டது இரண்டு ஆண்டுகள்தான். ஆனால் அதைத் திருத்தி அமைப்பதற்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டன. அத்தனை உழைப்பையும் கொடுத்து எல்லா வேலைகளையும் முடித்த பிறகு புத்தகம் வெளிவர வேண்டா என என்.சி.பி.எச். முடிவெடுத்து விட்டார்கள்.

கலைஞர் ஆட்சிக்கு வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு நாகநாதன் சமதக்கினியின் மூலதன மொழிபெயர்ப்பைக் கொண்டுவர முயன்றார். கலைஞரின் முன்னுரையோடும் ஐந்து இலட்ச உரூபாய் நிதிஒதுக்கீட்டோடும் அது வெளிவந்தது. மூலதனம் என்ற பெயரில் அது மிக அபத்தமாக வந்த புத்தகம்.

அப்போதும் ‘செலவு அதிகமாகும்’ எனக் கூறி என்னுடைய புத்தகத்தை வெளியிட என்.சி.பி.எச். யோசித்தது. ‘முன்வெளியீட்டுத் திட்ட அறிவிப்பு வெளியிடலாம்’ என்ற யோசனையைக் கூறினேன். அதன்படி பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்கள். ஊர் ஊராகப் போய்ப் பேசினேன். நல்ல வரவேற்பு இருந்தது. புத்தகமும் வெளிவந்தது.

என்னுடைய மொழிபெயர்ப்பில் முதல் புத்தகம் மட்டும்தான் சரியாக வந்திருப்பதாகக் கருதுகிறேன். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் புரிந்து கொள்ளக் கடினமானவை. மார்க்குசு முதல் தொகுதிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். பிரெடெரிக்கு எங்கெல்சு இரண்டாம் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளும், மூன்றாம் தொகுதிக்கு 9 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டார். முதல் தொகுதி இலக்கியத் தரத்தோடு இருக்கும். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் வெறும் ஆய்வுக் குறிப்புகளாக இருக்கும். இன்னமும் யாராவது தமிழில் அதை எளிமையாக மொழிபெயர்க்க முன்வந்தால் அவர்களுக்கு குறிப்புகள் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இன்னொரு முறை மூலதனத்தை எளிமையாக மொழிபெயர்ப்பது சாத்தியமா என்று தெரியவில்லை.

சிறையில் இருந்து வெளி வந்தபிறகு மா.பொ.க.(சிபிஎம்) கட்சியில் சேர்ந்தீர்கள். அதற்கு என்ன காரணம்?

நான் காங்கிரசில் இருந்த போதே மா.பொ.க.(சி.பி.எம்.) செயலாளராக இருந்த தோழர் ஏ.பி. (ஏ. பாலசுப்பிரமணியம்) அவர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது. சிறையில் இருந்த போது மீண்டும் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. நெருக்கடிக் காலக்கட்டத்தின் போது மா.பொ.க.(சி.பி.எம்.), “நாடு ஒரு சருவாதிகார அரசியலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் வல்லிய(பாசிச)த் தன்மையுடையவை” என்ற கருத்தை வெளியிட்டது. இது எங்களை ஈர்த்தது. இ.பொ.க.(சி.பி.ஐ.) இந்திய அரசின் அடக்குமுறைக்கு ஆதரவாக இருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.)தான் அதை உறுதியோடு எதிர்த்தது.

‘சீனா போன்று ஒரே மொழி பேசக் கூடிய நாடாக இந்தியா இருந்தால், மா.பொ.க.(சி.பி.எம்.)தான் சரியான வழி காட்டக் கூடியதாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. ஆனால் இந்தியா பலமொழிகளைப் பேசுகின்ற, பல சாதிகளைக் கொண்ட நாடாக இருப்பதால்தான் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. சாதி, மொழி இரண்டு சிக்கல்களும் இல்லாத இந்தியாவிற்கு அறிவியல்பூர்வமான வேலைத் திட்டம் என்பது மா.பொ.க.(சி.பி.எம்.)உடையதுதான். ஆனால் அவை இரண்டும் இந்தியாவில் சிக்கல்களாக இருப்பதும், அவை குறித்து மா.பொ.க.(சி.பி.எம்.) கவனம் கொள்ளாமல் இருப்பதும்தான் இன்றளவுக்கும் அந்தக் கட்சிக்கு இருக்கும் பெரிய பலவீனம். நக்குசலைட்டுகளும் அப்படித்தான் இருந்தார்கள். சாதியை ஓர் உணர்ச்சி அடிப்படையில்தான் நாங்கள் அணுகினோம்.

தேசிய இன தன்வரையறை உரிமையையும் தோழர்கள் பாலசுப்பிரமணியம், சுந்தரய்யா போன்றவர்கள் ஆதரித்தார்கள். இராமமூர்த்தி, இ.எம்.எசு. போன்றவர்கள் எதிர்த்தார்கள். இந்த ஒரு நிலைப்பாட்டைத் தவிர மற்றக் கொள்கைகளில் எங்களுக்கு மா.பொ.க.(சி.பி.எம்.)உடன் வேறுபாடு இருக்கவில்லை. எனவே மா.பொ.க.(சி.பி.எம்.-இல் சேருவது என முடிவெடுத்தோம். 75இல் இதுகுறித்து ஏ. பாலசுப்பிரமணியத்துக்குக் கடிதம் எழுதினோம். அவர் எங்களைச் சிறையில் வந்து சந்தித்தார். அதிலிருந்து நாங்கள் சி.பி.எம். உறுப்பினர்கள்தான். சிறையிலிருந்து விடுதலையாகி, பின்பு கட்சியிலிருந்து நான் நீக்கப்படும் வரை மா.பொ.க.(சி.பி.எம்.) உறுப்பினராக இருந்தேன்.

(மா.பொ.க.)சி.பி.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள், தமிழ்த் தேசியத்திற்கான சாத்தியங்கள், தமிழ்த் தேசியவாதிகள் தனித்தனியாக செயல்படுவது, பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கியது, சல்லிக்கட்டு தமிழரின் அடையாளமா உள்ளிட்ட கேள்விகளுக்கு தியாகுவின் பதில்கள் நிறைவுப் பகுதியாக – அடுத்து…)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 298