ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

புத்தகங்களே படிக்கட்டுகள் – கவிஞர் மு.முருகேசு


புத்தகங்களே படிக்கட்டுகள் 


 வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டமும்  திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியும் இணைந்து தேசிய நூலக வார வாசிப்பு விழிப்புணர்வு விழா நடத்தின.
இவ்விழாவில், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் புத்தகங்களே என்றும் படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்று நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு குறிப்பிட்டார்.
   இவ்விழாவிற்குப் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.
  திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியின் நூலகர் கே.கலாராணி, உதவி நூலகர் எசு.காந்திமதி, அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
  விழாவிற்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு,  ’வாசிப்பால் உலகை நேசிப்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
”புத்தகம் வாசிப்புப் பழக்கத்தை இளம் அகவையிலேயே குழந்தைகளின் மனத்தில் விதைக்க வேண்டும். இன்றைக்குப்  பொதுவாகவே நமது வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றோம். படிப்பதைவிடப் பார்ப்பது நமக்குப் பிடித்தமானதாக மாறிப்போயிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் புத்தகம் படிப்பது, விளையாடுவது  என்பதையெல்லாம் மறந்து, கைப்பேசியைப் பயன்படுத்துவதிலும், கணிணியில். காணொளி ஆட்டங்களை  விளையாடுவதிலும் மிக அதிகமாக ஈடுபடுகிறார்கள். இதனால் இளம் அகவையிலேயே அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் தடைப்படுகிறது.
        ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் புத்தக வாசிப்பே மிகுந்த பயனளிக்கும். குழந்தைகளைக் கோயில்களுக்கும் திரையரங்குகளுக்கும் பெற்றோர்கள் அழைத்துச் செல்வதைப் போல், நூலகங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். உலக அறிஞர்கள், இந்தியத் தலைவர்கள் நம்மோடு பேசுவதற்காகப் புத்தகங்கள் வழியே காத்திருக்கிறார்கள். பாடப்புத்தகம் படிப்பது மதிப்பெண் பெறுவதற்காக என்றால், மற்ற சமூக – கலை – இலக்கிய – வரலாற்று நூல்களைப் படிப்பது வாழ்வில் நம்மை உயர்த்திக் கொள்வதற்காகவே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சுவாசிப்பதால் வாழ்கிறோம்; புத்தகங்களை வாசிப்பதால் வளர்கிறோம் என்கிற எண்ணமிருந்தால், அனைவரும் புத்தகம் படிக்கிற நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ள முடியும். அண்ணல் காந்தியடிகள், பண்டித சவகர்லால் நேரு, சட்ட மேதை அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா போன்ற பல தலைவர்கள் புத்தகங்களின் வழியே சமுதாய மறுமலர்ச்சிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாம் புத்தகங்களை வாசிப்போம். சமுதாயத்தின் புதிய தலைமுறை வாசிப்பதனால் மட்டுமே விழிப்புணர்வை அடைய முடியும்” என்று குறிப்பிட்டார்.
  விழாவில், மாணவிகளுக்காக நடத்தப்பட்ட ’புத்தக விநாடி -வினா’வில் வெற்றிபெற்ற  திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரி மாணவிகள் எழில்வாணி, அன்புச்செல்வி, ஐசுவரியா, திவ்வியா, சிந்துசா, தெய்வானை, தி.சங்கீதா, இலக்கியா, இ லதா, பவித்திரா ஆகியோருக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு, புத்தகப் பரிசுகளை வழங்கினார்.
 கல்லூரியைச் சேர்ந்த 192 மாணவிகள் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர்.
 நிறைவாக, வந்தவாசி அரசுக்கிளை நூலகர் சா.தமீம் நன்றி கூறினார். நூலக உதவியாளர் பு.நாராயணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

வந்தை அன்பன்