சனி, 2 ஜூலை, 2016

குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா, வந்தவாசி




அகநி வெளியீட்டகம் -இலயா அறக்கட்டளை சார்பாக

குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா

   அகநி வெளியீட்டகம்-இலயா அறக்கட்டளை சார்பாகக் குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரிலுள்ள பாரதி சமூக – கல்வி ஆய்வு மையத்தில்  ஆனி 12, 2047 சூன் 26, 2016 அன்று நடைபெற்றது.
   இந்நிகழ்விற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார்  தலைமையேற்றார். கொடுங்காளூர் மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.
     நிகழ்வில், வந்தவாசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்சாரி, நூலகர் கு.இரா.பழனி,  இலயா அறக்கட்டளைச் செயலாளர் மா. யுவராசு, ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கவிஞர் மு.முருகேசு வாழ்த்துரை வழங்கினார்.
        சிற்றூர்ப்புறக் குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்களை வந்தவாசிச் சட்டமன்ற உறுப்பினர் எசு. அம்பேத்குமார் வழங்கிச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “நான் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி.  சிற்றூர்ப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான ஒரு நிகழ்ச்சியாக  இஃது அமைந்திருப்பதில் உளமார மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்குப் பெற்றோர்கள் அனைவரும் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
        சிற்றூரில் நன்றாகப் படிக்கிற குழந்தைகள் பெரிய நிறுவனங்களில் நேர்காணல்களுக்குச் செல்லும்போது அச்சமும் தயக்கமும் கொள்கிறார்கள். ஆங்கிலம் தெரியாது என்கிற பயமே அவர்களைப் பேச விடாமல் செய்கிறது. இதற்காகப் பெரிய நிறுவனங்களில் நேர்காணல்களுக்குச் செல்பவர்களுக்குத் தயக்கத்தைப் போக்கும் வகையில் பயிற்சி அளிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள இருக்கிறேன். அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வரவேண்டும். அரசுப் பள்ளியில் படித்தாலும் நல்ல மதிப்பெண் பெற முடியும், உயர் பதவிகளுக்குச் செல்ல முடியும் என்பது இன்றைக்கு  நடைமுறையாகி வருகிறது. வந்தவாசித் தொகுதியின் கல்வி வளர்ச்சிக்காக என்னாலான பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார்.
      சிற்றூர்ப்புற ஆசிரியர்களுக்கான பயிற்சியை மாநிலக் கருத்தாளர்கள் சங்கர், பரமேசுவரி ஆகியோர் அளித்தனர்.
         நிறைவாகத், தேசூர் மு.சீவா நன்றி கூற, நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

[படங்களை அழுத்தின் பெரியஅளவில்காணலாம்.]

கருத்துகள் - views: காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழ...

கருத்துகள் - views: காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழ...: அகரமுதல 140, ஆனி12,2047 / சூன் 26,2016 காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா இலக்குவனார் திர...

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா


காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா

அழை-கம்பன்கழகம் :azhai_kambankazhagam
அன்புடையீர்
வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா  ஆனி 19, 2047 /  2.7.2016  சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா கல்யாணமண்டபத்தில் நடைபெறுகிறது.
6.00மணி – இறைவணக்கம்
6.05. வரவேற்புரை – பேராசிரியர் மு.பழனியப்பன்
6.10  உரை :
முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய
திரு. . இரா. மாது,
திருச்சிராப்பள்ளி
கம்பன் கழகச் செயலாளர்.
6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி
6.55 – கம்பராமாயணம் பற்றி நூற்றுக் கணக்கில் அதிக நூல்களை வெளியிட்ட பெருமைக்குரிய வானதி பதிப்பக~பதிப்புத்திலகம்| திரு வானதி இராமநாதன் முனைவர் பட்டம் பெற்றமைக்காகப் பாராட்டு
மணிமேகலைப்  பதிப்பகம் திரு.இரவி. தமிழ்வாணன்
திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பேராசிரியர்; திரு சபா. அருணாசலம்
வாழ்த்திச் சிறப்பித்தல்
தேவகோட்டை நிலக்கிழார்
திரு. சோம. நாராயணன்
7.40 ஏற்புரை –  முனைவர் வானதி இராமநாதன்
7.45 – சுவைஞர்கள் கலந்துரையாடல்
8.00 நன்றி
8.05 சிற்றுண்டி
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க
அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

வெள்ளி, 1 ஜூலை, 2016

நாள் கணக்கிடும் முறை – சி.இலக்குவனார்




தலைப்பு-நாள்கணக்கிடும் முறை-சி.இலக்குவனார் :thalaippu_naalkanakkidum_murai

நாள் கணக்கிடும் முறை

  நள்ளிரவு அரைநாள் என்று குறிப்பிடப்படுகின்றது. தமிழர்கள் நண்பகல் தொடங்கி மறுநாள் நண்பகல் வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டதாக நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். “நள்ளிரவை’ அரைநாள் என்பது அதை வலியுறுத்துகின்றது. நள்ளிரவிலிருந்து மறுநாள் இரவு வரையில் ஒருநாள் என்ற ஆங்கிலேயர் கணக்கிடும் முறையும், ஞாயிற்றுத் தோற்றம் தொடங்கி மறுநாள் ஞாயிற்றுத் தோற்றம் வரையில் கணக்கிடும் இன்றைய முறையும், பண்டைத் தமிழர் முறையுடன் ஒப்பிடுமிடத்து, குறைபாடுடையன என்று தெள்ளிதில் விளங்கும்.
-செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர்
முனைவர் சி.இலக்குவனார்:
சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்: பக்கம்.119