(தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும் – தொடர்ச்சி)
“ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”
இடையன்குடியின் பழங்குடிகளான நாடார்கள், அவர்களின் பனையேறும் தொழில், அவர்கள் வாழ்ந்த குடிசைகள்… இவை எல்லாவற்றையும் பற்றி இரா.பி. சேதுப்பிள்ளை எழுதுவதைப் படித்த பின்… இன்றைக்குள்ள இடையன்குடியைப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது.
“இத்தகைய செம்மணற்பரப்பிற் சிறந்தோங்கி வளரும் பனைமரங்கள் கண்களைக் கவர்ந்து குளிர்விக்கும் செழுமை வாய்ந்தனவாம். பிளந்த கள்ளியும் விளிந்த முள்ளியும் நிறைந்த தேரியினில் கற்பகத்தருவெனத் தழைத்துச் செழித்து வளரும் பனைகளே அந்நிலத்தில் வாழும் மாந்தற்குப் பழுதற்ற செல்வமாகும். காலையும் மாலையும் பனையேறிப் பதநீர் வடித்துப் பண்புறக் காய்ச்சி, கட்டி செய்து விற்றுக் காலங்கழிக்கும் ஏழை மக்களே அவ்வூர்ப் பழங்குடிகளாவர். காலுடுவெல் ஐயர் அவ்வூரிற் போந்த பொழுது கூரை வேய்ந்த குடிசைகள் தாறுமாறாகக் கட்டப்பட்டிருந்தன. மனைகளைச் சூழ்ந்து முள்நிறைந்த கள்ளியே வேலியாக அமைந்தது. நேரிய தெருக்கள் எங்கும் காணப்படவில்லை. ஊர் நடுவேயமைந்த அகன்ற வெளியிடத்தில் ஓங்கி உயர்ந்த புளி மரங்கள் ஆங்காங்கு நின்று நிழல் விரித்தன. அவ்வெளியிடத்தில் ஒரு மூலையில் வழிபாட்டுக்குரிய கிருத்துவக் கோயிலும் வேதியர்க்குரிய சிறு வீடும் அமைந்திருந்தன.”
காலுடுவெல் அம்மனையைத் தம் இருப்பிடமாகக் கொண்டு கோயிலையும் குடியிருப்பையும் திருத்தி அமைத்தார். கள்ளியையும் முள்ளியையும் களைந்தெறிந்தார். தெருக்களைத் திருத்தமுற வகுத்து, கிணறுகளமைத்து மரங்கள் நட்டு சிறு வீடுகள் கட்டுவித்தார். முத்தாய்ப்பாக…
“எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த அவ்வூர்ச் சிறுவர் சிறுமியர்க்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்கக் கருதிப் பாடசாலைகள் நிறுவினார்.”
பெண்மக்கள் கல்வி கற்றல் பெருந்தவறு என்ற கருத்தை மாற்றியமைக்க காலுடுவெல் அரும்பாடுபட்டார். “விலங்கொடு மக்களனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்” என்பதன் கருத்தை விரித்துரைத்து ஆண் மக்களும் பெண் மக்களும் கல்விகற்று அறிவுடையர் ஆவதற்கு வழிகோலினார்.
காலுடுவெல் நிறுவிப் போற்றி வளர்த்த கல்விக் கூடங்கள் இன்றளவும் இடையன்குடியிலும் சுற்றுவட்டாரத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி வழங்கி வருவதைக் காண முடிகிறது.
இடையன்குடியில் அழகுற அமைந்த வரிசையான வீடுகளில் இப்போது குயிருப்போரில் பலரும் ஆசிரியர்கள் என்ற செய்தியைக் காலுடுவெல் நினைவகப் பணியாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
கல்வியறிவு ஒரு சமுதாயத்தை எப்படி எல்லாம் மாற்றியமைக்க முடியும் என்பதற்குத் தமிழ்நாட்டில் நாடார் சமுதாயமே முதற்சான்று. நாடார் சமுதாயக் கல்விமரம் தழைப்பதற்கு வித்தூன்றியவர் வேறு யார்? காலுடுவெல் ஐயரேதாம்!
வீதிகளின் நேர்மையும் வீடுகளின் செம்மையும் ஆண்பெண் பிள்ளைகளின் கல்வி வளமையும் காலுடுவெல்லைக் களிப்புறச் செய்தன. வீதி திருத்தி வீடு திருத்திக் கல்வி திருத்திக் கடைசியாகத்தான் கோயில் திருத்த முனைந்தார் அப்பெருமகன். “ஊர் நடுவேயமைந்த வெளியிடத்தில் விழுமிய கோயில் எடுக்க விழைந்தார்” என்பார் சேதுப்பிள்ளை.
பிதா சுதன் ஆவி என்பது கிறித்துவ நம்பிக்கையில் திரித்துவம் எனப்படுகிறது. ஆங்கிலத்தில் TRINITY என்பதை நல்ல தமிழில் மும்மை எனலாம். காலுடுவெல் கட்டியது HOLY TRINITY CHURCH. தூய திரித்துவ தேவாலயம். நாம் தூய மும்மைக் கோயில் எனலாம்.
திரி என்பது ஆங்கிலத்திலும் இந்தி உள்ளிட்ட ஆரிய மொழிகளிலும் மூன்றைக் குறிக்கும். திரி பலநேரம் தமிழில் திருவுடன் குழம்பி விடுகிறது. காலுடுவெல் கட்டிய கோயிலைத் திருத்துவ ஆலயம் என்று சிலர் எழுதுகின்றனர். திரித்துவ ஆலயம் என்பதுதான் சரி என்று நினைக்கிறேன். ஈழத்திலும் ஆங்கிலத்தில் TRINCOMALEE என்று திரிந்து போன திருக்கோணமலையைத் திரிகோணமலை என்றும் எழுதுகின்றனர். திருக்கோணமலைதான் சரி என்று நினைக்கிறேன். அறிவார்ந்த அன்பர்கள் தெளிவாக்கினால் நன்றாக இருக்கும்.
இடையன்குடியில் காலுடுவெல் கட்டிய கோயிலைச் சுற்றிப்பார்த்து வியந்த படி அருள்திரு கிப்புசனிடம் என் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தேன். அவரும் சளைக்காமல் விடையிறுத்துக் கொண்டே இருந்தார்.
இரா.பி.சே. சொல்வது போல், “கிறித்துநாதர் பெருமைக்கேற்ற வகையில் புறக்கோயில் கட்டத் தொடங்கு முன்னமே ஐயர் தம் மனத்தில் அகக்கோயில் கட்டி முடித்தார். ஆலயம் அமைக்கும் முறைகளைச் செவ்வையாக அறிந்திருந்த ஆங்கில நாட்டு ‘ஆலய நிருமாணச் சங்க’த்தாரிடம் காலுடுவெல் ஐயர் தம் கருத்தைத் தெரிவித்தார்.”
அச்சங்கத்தார் வரைந்தனுப்பிய பெருங்கோயிலுக்குரிய வரைபடங்களைக் கண்ட காலுடுவெல் ஐயரின் உள்ளம் துள்ளியெழுந்ததாம்!
அப்பொழுது ஆங்கில நாட்டு நண்பர் ஒருவர்க்கு எழுதிய நிருபத்தில் (கடிதம்) “ஆலய நிருமாண சங்கத்தார் வரைந்துதவிய படங்களால் எனக்கு ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும் மிச்சம்” என்று குறிப்பிட்டாராம் கால்டுவெல் ஐயர்!
ஆங்கில நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பொருள் திரட்டிக் காலுடுவெல் தொடங்கிய திருப் பணி நிறைவுற 33 ஆண்டுகள் ஆயின. இந்தக் கோயிலின் ஒவ்வொரு கல்லிலும், குறிப்பாக ஒவ்வொரு சாளரத்திலும் கலை வண்ணம் மிளிரக் காணலாம்.
இடையன்குடி திரித்துவக் கோயிலின் இனிய கோயில் மணியோசை கேட்ட போது, அந்தக் கோயில் மணிகளை காலுடுவெல் இலண்டனிலிருந்து கப்பலில் வரவழைத்தார் என்ற செய்தி நினைவுக்கு வந்தது.
கோயில் மணி பார்க்கப் படியேறி மேலே செல்லப் புறப்பட்ட போது… அந்த ஏற்றம் ஒரு புறம் இவ்வளவு கடினமாகவும் மறு புறம் இவ்வளவு மனத்துக்கின்பமாகவும் இருக்கும் என்று நினைக்கவில்லை. ஏறுவோமா?
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 238