வியாழன், 13 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

 




 (தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு தொடர்ச்சி)

 பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர், வேங்கைவயல் தெருவில் பட்டியலினச் சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்க வெறியினர்  மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது.

“குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். ஆனால்,  சாதிவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும் வகையில் திமுக அரசின் காவல்துறை பாதிக்கப்பட்ட பட்டியலினச் சாதி  மக்களையே விசாரணை என்ற பெயரில் அழைத்து குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக ஒப்புக் கொள்ளுமாறு ஆசை காட்டியும் மிரட்டியும் அடித்து அச்சுறுத்தியும் அலைபேசிகளை(செல்போன்களை)ப் பறிமுதல் செய்தும் வருகின்றது. ஏற்கெனவே சாதிவெறியர்களின் வன்கொடுமைக்கு வேங்கைவயல் மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில் அவர்களில் ஒருசிலரின் மீதே பொய்யாகப் பழிசுமத்த முயல்வது அரசே நிகழ்த்தும் சாதிய வன்கொடுமையாகும், அரசும், அதிகாரிகளும், ஆதிக்க சாதி அதிகார வருக்கமும் சேர்ந்துகொண்டு நடத்தும்  சாதிய ஒடுக்குமுறையாகும். இது மிகுந்த கண்டனத்திற்கும் உரியதாகும்.

இன்னொருபுறம் பாதிக்கப்பட்ட மக்களை அரசு தரப்பில் எந்தவொரு அமைச்சரும் நேரடியாகச் சென்று பார்க்கவில்லை என்ற விமரிசனம் நீடித்துவருகிறது. அதுமட்டுமின்றி, எந்த கோவிலுக்குள் பட்டியலினச் சாதி மக்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துச் சென்றாரோ அதே கோயிலுக்குள் மீண்டும் அம்மக்களை நுழைய விடாமல் தடுக்கும் செய்தியும் வந்துள்ளது. பட்டியலினச் சாதி மக்கள் கோயிலுக்குச் சென்று வந்த பிறகு சாதி ஆதிக்க ஆற்றல்கள் கோயிலுக்கு தீட்டுக் கழித்துள்ளனர். ஏற்கெனவே, கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர், இரட்டைக் குவளை முறையைக் கடைபிடித்தவர் ஆகிய இருவரும் சிறைப்படுத்தப்பட்டாலும் அவர்கள் மீது ப.சா., ப.இ.(S.C., S.T.) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்படவில்லை. இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று சாதிவெறியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக தமிழக அரசு சாதி  வெறியர்களைப் பாதுகாக்க முயல்வதை அறிய முடிகிறது.  

இம்மாவட்டத்தில்  ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்கள்   பட்டியலினச் சாதி மக்கள் மீது தொடர்ந்து சாதிய ஒடுக்குமுறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இறையூரிலும்  அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும்  கோயிலில் நுழையத் தடை, இரட்டை குவளை முறை, கடைகளில் பொருட்களைக் கொடுக்க மறுப்பது,  கல்விக் கூடத்தில் பாகுபாடு காட்டுவது என  வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அங்கு மட்டுமின்றித்  தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றாலும் மேற்படி கூற்றுக்குச் சான்றாகத்,  தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசிடம் கேட்ட பொழுது   தமிழகம் முழுவதும் 341 ஊர்களிலும் பட்டியலின சாதி மக்கள்  மீது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அரசே பதிலளித்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். எனவே, இறையூர் கொடுமை என்பதை  ஏதோ சில விசமிகள் தெரியாமல் செய்துவிட்டது போலவும், இதை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவும் மாற்றுவதற்கு திமுக அரசு முயலக்கூடாது.

பாசிச பாசக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இந்தியா முழுவதும் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. ஆர்எசுஎசு சங் பரிவார அமைப்புகள் தமிழகத்தி்ல் வேரூன்ற,  சாதிக் கட்சிகளோடு கூட்டு வைத்து செயல்படுவதைத் தனது செயல்தந்திரமாக வகுத்துச் செயல்படுகிறது. இது சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு அரசியல் பலத்தை அளித்திருக்கிறது. 

சாதிய  வன்கொடுமையில் ஈடுபட்ட  சாதி ஆதிக்கச் சக்திகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யவும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் தமிழக அரசைக் கோருகிறோம்.  மேலும், கடந்த ஒராண்டில் தமிழகம் எங்கும் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் புலனாய்வு செய்வதற்கு சனநாயக இயக்கங்களின் பிரதிநிதிகள்,  நேர்மையான நீதிபதிகள்,  அனைத்துச் சாதி உழைக்கும் மக்கள் அடங்கிய புலனாய்வுக் குழு ஒன்றை  அமைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

[இதுதான் அந்த அறிக்கை, சனவரி 15 நாளிட்ட அறிக்கை. நானும் சேர்ந்து எழுதிய அறிக்கை. இந்த அறிக்கையில் திமுக ஆட்சியின் அணுகுமுறை குறித்தும் காவல் துறையின் புலனாய்வு குறித்தும் தெளிவாகச் சொல்லியிருப்பதைத் தோழர் புளியந்தோப்பு மோகன் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்.]

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113

புதன், 12 ஜூலை, 2023

11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




11ஆவது உலகத்தமிழ்மாநாடு முடிந்தது. 

மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன?

கடந்த வெள்ளி, சனி , ஞாயிறு (07,08,09.07.2023) சென்னையில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் மலேசியாவிவ் இதே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திச் சூலை 21-23இல் 11 ஆவது உலகத்தமிழ்மாநாடு நடைபெறுவதாக அறிவித்து அதற்கான் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

11 ஆவது மாநாடு நடந்து முடிந்த பின் 12 ஆவது மாநாடுதானே நடைபெற வேண்டும். அப்புறம் ஏன் மீண்டும் 11 ஆவது மாநாடு ?

முன்பே குறிப்பிட்டுள்ளதைப் போலத் தமிழ்மாநாடுகளை ஆர்வமுள்ள யாரும் நடத்தலாம்.   ஆனால், ஒரே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி வெவ்வேறு ஆட்கள் நடத்துவது எப்படிச் சட்டப்படி முறையாகும்?

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம்(பு) [IATR-N] என்றாவது பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்றாவது பெயரை மாற்றிக் கொண்டு அதன் சார்பில் நடத்தலாம். அப்படி நடத்தும் பொழுது இது முதல் மாநாடுதான். அப்படித்தான் குறிப்பிட வேண்டும்.

10 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் இம்மாநாட்டை நடத்துகையில் முந்தைய தலைவர் இதை நடத்துவதாகக் கூறுவது எப்படி ஏற்புடைத்தாகும்? குறைந்தது இக்குழுவைக் கூட்டச்செய்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையிலான இம்மன்ற ஆட்சிக் குழுவை அகற்றிப் புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெற்று நடத்தினால் நன்றாக இருந்திருக்கும். அப்படி நடத்தியிருந்தால் பொன்னவைக்கோ அமைப்பினர் விலகியிருப்பர். சென்னையில் 11ஆவது மாநாடு நடந்திருக்காது. அப்படியில்லாமல் முறைப்படியான அமைப்பின் பெயரைப் பிறர் பயன்படுத்துவது எங்ஙனம் முறையாகும்?

உ.த.ஆ.மன்றத்தின் புதிய பொறுப்பாளர்களாகப் பொறி.அரசர் அருளாளர் தலைவராகவும், முனைவர் ப.மருதநாயகம் செயலராகவும்(இந்தியா) தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களது ஒப்புதல் இன்றி இதே மன்றத்தின் பெயரை எவ்வாறு பிறர் பயன்படுத்த முடியும்?

புதிய பொறுப்பாளர்கள் உடன் நீதிமன்றத்தை நாடி, மாநாடு நடத்தத் தடையில்லை என்றும் ஆனால், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றப்பெயரைப் பயன்படுத்தி மாநாடு நடத்துவது தவறு என்றும் முறையிட்டு வெற்றி காண வேண்டும். அப்பொழுதுதான் பெயர்க் குழப்பம் ஏற்படாது. நாளை இதே போல், மற்றொருவர் இதே பெயரில் செயற்படும் நிலையும் வராது.

தமிழின் பெயரால் ஒற்றுமை மேலோங்க வேண்டுமே தவிரப் பிளவுகள் ஏற்படக் கூடாது.

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்” (குறள் 735) கூடாது எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதை ஏற்றுச் செயற்பட வேண்டும்.

தமிழ், தமிழ்நாட்டிலும் தன் அரசியமைப்புக் கட்டுப்பாட்டிலான இந்தியாவிலும் தனக்குரிய இடத்தைப் பெறவில்லை. உலகில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பெரும்பாலான இடங்களில் மதிப்பிழந்தே வாழ்கின்றனர். ஒரு புறம்  தமிழின் சிறப்பு உலகில் பரவிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் தமிழ் வழங்கும் பகுதிகள் தேய்ந்து கொண்டே உள்ளன. இவற்றில் கருத்து செலுத்தித் தமிழையும் தமிழர்களையும் வாழ வைக்க வேண்டிய தமிழ் அமைப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொண்டு தமிழுக்கு இழிவு தேடித் தரலாமா? எனவே, ஒன்றுபடுங்கள்! உயர்வு காணுங்கள்!

ஆதலின் புதிய பொறுப்பாளர்கள் விரைந்து செயற்பட வேண்டும். மலேசிய மாநாட்டினரும் தவற்றினை உணர்ந்து புதிய அமைப்பின் பெயரில் முதல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். அத்தகைய மாநாட்டிற்கு நம் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

தோழர் தியாகு எழுதுகிறார் 145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு



(தோழர் தியாகு எழுதுகிறார்  144 :சாதி என்பது வதந்தி அல்ல! தொடர்ச்சி)

வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு

வேங்கைவயல் திண்ணியத்தை நினைவூட்டுவதாக உள்ளது என்பது இரண்டுக்கும் பகைப்புலமாக உள்ள சாதியப் பாகுபாட்டையும் ஒடுங்கியர் (தலித்து மக்கள்) மீதான தீண்டாமை இழிவையும் மனத்தில் கொண்டு சொல்லப்பட்டது. அதே போது வரலாற்றில் இருவேறு நிகழ்ச்சிகள் நூற்றுக்கு நூறு முழுதொத்தவையாக இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் உருத்திட்டமாகப் பகுத்தாய (concrete analysis of concrete data) வேண்டும்.

திண்ணியம் பற்றிய உருத்திட்டமான தரவுகள் அனைத்தும் ஐயந்திரிபறக் கிடைத்த பிறகே அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைச் சட்ட நோக்கிலும் சமூக நோக்கிலும் ஆய்வு செய்து அந்தக் கட்டுரையை எழுதினேன். வேங்கைவயல் தொடர்பாகவும் இப்படி ஓர் ஆய்வை முன்வைப்பதற்கு எனக்குக் கிடைத்துள்ள தரவுகள் போதுமானவையாக இல்லை. உங்களிடம் இருக்கும் தரவுகளை எனக்குத் தந்துதவ வேண்டுகிறேன். அல்லது நீங்களே அப்படி ஓர் ஆய்வை எழுதினால் தாழியிலேயே வெளியிடலாம்.  

நான் இந்தச் சாதிய விசாரணை குறித்து மௌனம் காப்பது உங்களுக்கு வியப்பை அளிப்பதாகச் சொல்வதுதான் எனக்கு வியப்பாய் உள்ளது. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

வேங்கைவயலில் திமிறி வழியும் சாதியத்தைக் கண்டிக்கவில்லை என்றும், வேங்கைவயல் புலன்விசாரணை முறையை ஆதரித்து எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்றும் வருத்தப்பட்டுள்ளீர்கள். அவர்கள் யாரானாலும் கண்டிக்க வேண்டியதே. நானும் உங்களோடு சேர்ந்து அவர்களைக் கண்டிக்கிறேன். கள்ள மௌனம் சாதிப்பவர்களும் கண்டனத்துக்குரியவர்களே. பாசக கூட திமுக ஆட்சி மீது களங்கம் கற்பிப்பதற்காக ஒடுங்கியர்(தலித்து)களுக்குக் காசு கொடுத்து அவர்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களையே மலம் கலக்கச் செய்திருப்பார்கள் என்று கூறியது யார்? நானும் இதை நம்பவில்லை. தமிழ்நாட்டில் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கும் சாதிக் கொடுமைகள், இந்தியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அலட்சியம், ஆளுநர் ஆர் என். இரவி, பாசக போக்குகள், சாதி இந்துக்களின் கூட்டு மனசாட்சி இந்த ஒவ்வொன்று குறித்தும் நீங்கள் எழுதியிருப்பதை அட்டியின்றி ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறான போக்குகள் குறித்து நானும் எமதியக்கம் சார்பில் பல தருணங்களில் பேசியுள்ளேன்.

நான் இந்தச் சாதிய விசாரணை குறித்து மௌனம் காக்கிறேனா? உரக்கப் பேசுகிறேனா? என்று நீங்களும் தாழி அன்பர்களும் முடிவு செய்யுமுன் சில செய்திகளைக் கவனப்படுத்துகிறேன்.  

1)    சென்ற சனவரி 23ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியீட்டு நிகழ்வுக் கருத்தரங்கில் நான் பேசியது:+

https://youtu.be/Mlj66zApuus

இந்த உரையில் இறையூர் வேங்கைவயல் பற்றி நான் பேசியுள்ள  ஒவ்வொரு பகுதியையும் எடுத்து எழுதி வைத்துக் கொண்டு அதில் என்ன சிக்கல் என்று சொல்லுங்கள். பேசுவோம்.

2)    கடந்த சனவரி 7ஆம் நாள் செங்கிப்பட்டியில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் பொதுக்குழு வேங்கைவயல் கொடுமையைக் கண்டித்தது மட்டுமல்ல, முன்னணி சார்பில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்தது. அன்று மாலை செங்கிப்பட்டியில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நான் வேங்கைவயல் கொடுமை குறித்து விரிவாகப் பேசினேன். புதுக்கோட்டையில் சனவரி 11ஆம் நாள் தோழர் பாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3)    வேங்கைவயல் கொடுமை குறித்து விரிவான ஆய்வுகள் செய்த தோழர் கரிகாலன் ((உ)ரூட்சு வலையொளி) அவர்களை அழைத்து, சனவரி 23ஆம் நாள் செய்தி அரசியல் அணுக்க(‘சூம்‘) நிகழ்வில் பேசச் செய்தோம்.

4)    பாசிச எதிரப்பு மக்கள் முன்னணியின் பொதுக் குழுவிலும் செயற்குழுவிலும் வேங்கைவயல் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. பிறகு முன்னணி சார்பில் சனவரி 15ஆம் நாள் வேங்கைவயல் அறிக்கை குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டோம். இந்த அறிக்கையை வரைந்து ஒவ்வொரு கட்டமாகத் திருத்தம் செய்து இறுதியாக்கியதில் என் பங்கு முகன்மையானது என்று நான் சொல்வதை நம்புவீர்கள் அல்லவா?

இதோ அந்த அறிக்கை (முழுமையாக):

திமுக அரசே! இறையூர் வேங்கைவயலில் பட்டியலின சாதி மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களைக் கண்டுபிடித்து வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்! கடந்த ஓராண்டில் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் பற்றி உயரதிகார நீதி விசாரணை நடத்துக!

தமிழக மக்களே! சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடுக!

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113

செவ்வாய், 11 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 144 : சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் – தொடர்ச்சி) 

சாதி என்பது வதந்தி அல்ல! – ரோகித்து வேமுலா

ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்த உரோகித்து சக்கரவர்த்தி வேமுலா  2016 சனவரி 17ஆம் நாள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டிற்று. மீயுயர் கல்வி நிறுவனங்களில் ஒடுங்கியர்(தலித்து)களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக் கொணருவதற்கு அது தூண்டுதலாக அமைந்தது.

257 பேர் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட  யாகூபு மேமனுக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்த உரோகித்திற்கும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தின் செயற்பாட்டாளருக்கும் இடையே எழுந்த சண்டையைத் தொடர்ந்து உரோகித்து மீதும் அம்பேத்துகர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த  ஐந்து மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது; 2015 சூலையில் மாதந்தோறும் அவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை உரூ.25,000 நிறுத்தப்பட்டதுடன் கல்லூரியின் தங்கு விடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.  அவர் தூக்கிட்டுக் கொண்டதே ‘உமா அண்ணா’வின் அறையில்தான்! 

உரோகித்தின் தற்கொலையைத் தூண்டியதாகப்  பாரதிய சனதா கட்சியின்  செகந்தராபாத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான   பி. தத்தாத்திரேயா மீதும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பாராவு மீதும் வழக்கு பதியப்பட்டது.

உரோகித்து வேமுலாவின் முகநூல் இடுகைகளைச் “சாதி என்பது வதந்தி அல்ல” என்ற தலைப்பில் அவரது நாட்குறிப்பாக நிக்கிலியா என்றி தொகுத்துள்ளார். அதிலிருந்து சில வரிகள்:

2015 செட்டம்பர் 3:

ஒரு நாள்.

ஒரு நாள்,

நான் ஏன் ஆவேசமாக இருந்தேன்

என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

நான் ஏன் சமூக நலன்களுக்கு மட்டும்

சேவை செய்யவில்லை  என்று புரிந்து கொள்வீர்கள்.

ஒரு நாள்,

நான் ஏன் வருத்தம் தெரிவித்தேன்

என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

அந்த நாளில்,

வேலிகளுக்கு அப்பால் கண்ணிகள்

இருப்பதைப் புரிந்து கொள்வீர்கள்.   

ஒரு நாள்,

வரலாற்றில் என்னை மோசமாக,

மஞ்சள் பக்கங்களில் காண்பீர்கள்.

நான் அறிவாளியாக இருந்திருக்கலாம்

என்று நினைப்பீர்கள். ஆனால்

அந்த நாள் இரவு என்னை

நினைவில் கொள்வீர்கள்,

என்னை உணர்வீர்கள்,

மூச்சில் ஒரு புன்னகையை வெளிப்படுத்துவீர்கள்.

அந்த நாளில் நான் உயிர்த்தெழுவேன்.

2014 செட்டம்பர் 7:

[தலைப்பில்லை.]

கடவுள் எனப்பட்டது கல்லாயிற்று,

கல்லெனப்பட்டது கடவுளாயிற்று.

கல்வி வளாகத்தில் அரசியல் என்பது

வாக்குக் கணக்குகளாகச் சுருங்குகிறது

சவர்ணர்கள் வாமனனைத் தழுவிக் கொண்டார்கள்

தேசியவாதிகள் வண்டி வரிசை கொண்டுவந்தார்கள்

‘கம்யூனிசுட்டுகள்’ வழி செய்து கொண்டார்கள்

தீவிரர்கள் நேரந்தவறித் தூங்கி விட்டார்கள்

சமயச் சார்பிலார் ஒதுக்கிடம் தேடினார்கள்

அறிவாளர்கள் இதெல்லாம் தேவையில்லை என்று மௌனமானார்கள்.

ஒடுங்கியர்(தலித்து)கள் இந்தப் போரில் உடைந்து கிடந்தார்கள்

இது அவர்களின் ‘சொந்த’ச் சிக்கல் என்ற முத்திரையோடு

எம்முடைய குரல்கள் எண்ணிக்கையில் குறைவே எனலாம்

எமது தெளிவுரை வீண் எனலாம்

எமது எதிர்ப்பு உம் கலாசார நடையின்

பெருவலிமையின் அடியில்

மடிந்து போகலாம்

ஆனால் தோழர்களே, குறித்துக் கொள்ளுங்கள்

வரலாற்றை அழிக்க முடியாது 

உங்கள் மௌனம் நினைக்கப்படும்

உங்கள் வெறுப்பு மன்னிக்கப்படாது

நீங்கள் வாக்குக் கேட்டு வரும் போது

உங்களோடு கைகுலுக்க மறுப்போம்

நீங்கள் சிரித்தால் பதிலுக்குச் சிரிக்க மாட்டோம்

அந்த நாளில், எமது ஆதரவுக்காக

நீங்கள் அலையும் போது

உங்களைக் கடந்து போவோம்,

உங்கள் கருணைச் சொற்களால்

அசையாமல், தொடப்படாமல்

அந்த நாளில்,

நம்பிக்கையும் இரண்டகமும் விளையாடுவோம்

உம்மைப் போலவே!

தோழர்களே, நினைவிருக்கட்டும்!

2013 ஆகட்டு 3:

தேசச் சரித்துருலு மொழிபெயர்ப்பு:

எந்த நாட்டின் வரலாற்றைப் பார்க்கிறாய்?

பெருமைப்பட என்ன காரணம் உள்ளது?

மாந்தக் குலத்தின் வரலாறு முழுக்க

மற்றவர்களைச் சுரண்டுதலே

மாந்தக் குலத்தின் வரலாறு முழுக்க

ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதே

மாந்தக் குலத்தின் வரலாறு முழுக்க

போர்களில் சிந்திய குருதியில் நனைந்து

திகிலே அதன் முதல்

பேய்க் கூட்டங்கள் அதன் விலை

மாந்தக் குலத்தின் வரலாறு முழுக்க

வக்கற்றவரின் குருதி குடிப்பதே

வலுத்தவர் இளைத்தவரை அடிமைகளாக்கி

கொலைகாரர் புவியின் உரிமையாளராகி

வரலாற்றில் புகழேணி ஏறினர்

புவியில் போர்க் களமாகாத இடம் காண முடியாது

இறந்த காலம் முழுக்கவே இரத்தத்தால்

கண்ணீரால் ஈரமானதே

அழிந்த குடும்பங்கள்

சிதைந்த மக்கள் கூட்டங்கள்

ஆதரவற்றோரின் அழுகைகள்

வரலாற்றில் எதிரொலி

தீநெஞ்சம், தன்னலம்,

குற்ற உடந்தை, அழுக்காறுகள், பூசல்கள்

தந்திரங்கள் மாறுவேடங்களே கருவிகள்

வரலாற்றின் பாதை அமைத்தன

செங்கிசுக்கான், தாமர்லேன்,

நாதிர்சா, கசினி, கோரி,

சிக்கந்தர் – அவர்கள் யார் என்பது பெரிதா?

வைக்கிங்குகள், வெள்ளை ஊனர்கள்,

சிதியர்கள், பார்சிகள்,

பிண்டாரிகள், கொள்ளைக் கூட்டம்

காலத்துக்கு வாள்களால் அமைத்த பாலம்

பட்டினியிலும் வெறித்தனத்திலும்

அறியாமையின் இருண்ட காலங்கள்

அறியப்படாத கடைக்கோடியரின் வழியில்

அணிவகுத்த மக்கள் – [எண்ணம்]

ஒவ்வொன்றும் நமது சாதனை என்று,

நாமே புவியின் ஆண்டைகள் என்று

அரசாட்சிகள் கட்டி செயற்கையாகச்

சட்டங்கள் செய்தனர்.

பிறவகைப் படைகள் எழுந்த போது,

அட்டை வீடாகச் சரிந்தனர்.       ,

போரிட்டுக் கொண்ட படைகளிலிருந்து

எழுந்தது வரலாறு

நிலைத்து நீண்டு சென்ற ஏமாற்று

வலுத்தாரின் கொடுங்குற்றங்கள்

செல்வந்தரின் சூழ்ச்சித் திட்டங்கள்

இன்றுங்கூட? இனி விட மாட்டோம்

ஒருவரை ஒருவர் சுரண்டுதல்

ஓரினத்தை வேறினம் சுரண்டுதல்

இந்த அடிப்படையில் சமூகநீதி

இன்றுங்கூட? இனி நடவாது.

சீனத்தில் ரிக்சா இழுப்பவர்

செக்கு நாட்டு சுரங்கத் தொழிலாளி

அயர்லாந்தில் கப்பல் துடைப்பவர்

தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும்

ஓடண்டோட்டுகள், சூலுக்கள், நீக்ரோக்கள்,      

அனைத்துக் கண்டங்களையும் சேர்ந்த வெவ்வேறு இனத்தவர்

ஒரே குரலில் வரலாற்றின் உண்மை இயல்பைக்

கூவிச் சொல்வார்கள்

எந்தப் போர் ஏன் நடந்தது?

எந்த அரசாட்சி எவ்வளவு காலம் நீடித்தது?

தேதிகள், ஆவணங்கள்

இவையல்ல வரலாற்றின் சாறம்

நண்பனே!

இந்த அரசியின் காதல் செய்திகள்

அந்தப் படையெடுப்புக்கான செலவுகள்

சூழ்ச்சித் திட்டங்கள், கணக்குகள்

இவையல்ல வரலாற்றின் சாறம்

நண்பனே!

வரலாற்றின் இருண்ட மூலைகளில்

ஒளிந்துள்ள கதைகள்

இப்போது தேவைப்படுகின்றன

நைல் ஆற்றங்கரை நாகரிகத்தில்

ஒளித்து வைத்தாலும் ஒளியாத உண்மை:

எளிய மனிதன் எப்படி வாழ்ந்தான்?

தாசு மகாலைக் கட்டியதில்

கல் சுமந்த உழைப்பாளர் யார்?

அரசகுலப் படையெடுப்பில்

எளியார் புரிந்த வீரச்செயல்கள் என்ன?

நண்பனே, மன்னரைச் சுமந்த பல்லக்கு அல்ல,

யார் அந்தப் பல்லக்குத் தூக்கிகள்?

தட்சசீலத்தில், பாடலிபுரத்தில்,

மத்தியதரைக் கடலின் கரைகளில்,

அரப்பா மொகஞ்சதாரோவில்

குரோமன்யான் குகை முகப்புகளில்

வரலாற்றின் விடிவெள்ளிக் காலங்களில்

மாந்தக் கதையின் வளர்நிலை என்ன?     

என்ன நாடு? என்ன காலம்?

சாதித்தது என்ன பேருண்மைகள்?

என்ன சிற்பம்? என்ன இலக்கியம்?

என்ன அறிவியல்? என்ன இசை?

எக்கதிர்கள் நோக்கி இந்தத் துறவு?

என்ன கனவு? என்ன வெற்றி?

[ரோகித் வேமுலாவின் ‘சாதி என்பது வதந்தி அல்ல தொகுப்பிலிருந்து]

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 112