தமிழ்நாட்டில் செயல்வழிக் கல்வி தொடங்கப்பட்டபோது சில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டாலும், "தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தை மாற்றி அமையுங்கள், வீட்டுப்பாடங்களை ஒழியுங்கள்' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்திய சென் இப்போது கூறியுள்ள கருத்தைப் பார்க்கும்போது, செயல்வழிக் கல்வி நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை. அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை (இந்தியா) என்ற அமைப்பு, மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது, அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு, மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன. வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு (டியூஷன்) அனுப்புகின்றனர். இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.இந்த ஆய்வுகளின்படி, தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை. முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும், பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை. இதற்கு தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது. குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை. உரையாடல், விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன. குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர். 5 வயதுக்குப் பிறகு, தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல், மொழி ஆகியவற்றின் அடிப்படை, படித்தல், எழுதுதல், ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது. பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர். ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில், இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள். வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள். பேசினார்கள், சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள். பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள். அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும், தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது. மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள், கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது. நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள். எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள். வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள். புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள். தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட, குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பாடத்திட்டங்கள், அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில், எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால், அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு, உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும், இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை."உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக, நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது. ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 6:51:00 AM
By மக்கள் சக்தி கட்சி
12/26/2009 6:23:00 AM
By Allahu AKbar
12/26/2009 5:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*