செவ்வாய், 30 ஏப்ரல், 2024

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும்

 




கனடா தொரண்டோ நகரில் புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 ஆகிய நாள்களில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் பொழுது பின் வருமாறு விருதுகள் வழங்கப் பெறும். தகுதியானவர்கள் தங்கள் தகைமை குறித்த விரவங்களை அனுப்பலாம். பிறரும் தக்கவர்கள் பற்றிய விவரங்களை அனுப்பலாம். அனுபப் வேண்டிய மின்வரி thamizh.kazhakam@gmail.com

1. இலக்குவனார் விருது

தொல்காப்பியத்தைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்களுக்கும் தொல்காப்பியம் குறித்த ஆராய்ச்சி நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டடவர்களுக்கும் இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் எனப் போற்றப்பெறும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பெயரில் இலக்குவனார் விருதுகள் வழங்கப்பெறும்.

2. தொல்காப்பியச் சுடர் விருது

தொல்காப்பியர் புகழையும் தொல்காப்பியத்தையும் பல்வேறு வகைகளில் பரப்பி வருவோருக்கும் அமைப்பினருக்கும் தொல்காப்பியச் சுடர் விருதுகள் வழங்கப் பெறும்.

3. தொல்காப்பிய நன்மணி விருது

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் கட்டுரை அளிக்கும் தொல்காப்பிய ஆர்வலர் ஒவ்வொருவருக்கும் தொல்காப்பிய நன்மணி விருது வழங்கப் பெறும்.

விருது பெற விரும்புவோர் தங்களின் பணி குறித்த குறிப்புகளுடன் பெயர், முகவரி, மின்வரி, பேசி எண் ஆகிய விவரங்களையும் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்துடன் thamizh.kazhakam@gmail.com என்னும் மின்வரிக்கு வைகாசி 17, 2055/ 30.05.2024 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டுகிறோம்.

இரு பக்க ஆய்வுச் சுருக்கம் tolcanada@gmail.com மின்வரிக்கு வந்து சேர வேண்டிய நாள் 01.05.2024 இற்கு முன் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எழுத்து மூலமாக நீட்டிப்பு கேட்பவர்களுக்கு 10-5-2024(சித்திரை 27) வரை காலம் நீடிக்கப்படும்கருத்தரங்கம் தொடர்பான பிற விவரங்களை https://www.tolkappiyam.ca இணையத் தளத்தில் காண்க. ஐயப்பாடு இருப்பின் 9884481652(இலக்குவனார் திருவள்ளுவன்) எண்ணிற்குத் தொடர்பு கொள்க.

இலக்குவனார் திருவள்ளுவன்                                  முனைவர் செல்வநாயகி

ஒருங்கிணைப்பாளர்                                                   தலைவர்

இலக்குவனார் இலக்கிய இணையம்                    தொல்காப்பிய மன்றம், கனடா

https://www.facebook.com/watch/?mibextid=oFDknk&v=859229232634552&rdid=87T1eZ41fWZexdvn





குறிப்பு : கலைஞர் தொ.கா. வேந்தர் தொ.கா., தமிழன் தொ.கா. மதிமுகம் தொ.கா., செம் தொ.கா., 5 அலைவரிசை தொ.கா., புதிய தலைமுறை தொ.கா., வெளிச்சம் தொ.கா., குமுதம் ஊடகம், தினமணி, தினமலர், தமிழ் இந்து, மேலும் செய்தியாளர் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து ஊடகத்தினருக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி.

 

ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்!



தமிழீழச் சான்றோர், தமிழீழ விடுதலைச் செம்மல் ஐயா ஈழவேந்தன் இயற்கை எய்தினார் என்ற செய்தி நெஞ்சத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொண்ணூற்றொரு அகவையில் விடைபெற்றார் என்றாலும், மனம் துயரம் கொள்கிறது. கனடா நேரப்படி 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் குளியலறையில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட பாதிப்பே இறப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட ஈழவேந்தனுடன், தமிழ்நாட்டில் பழகி, நட்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்புகள் எனக்கு வரலாற்றுக் கொடைகள்!

தமிழீழத்தில் வங்கி அதிகாரியாக இருந்த கனகேந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இறங்கி ஈழவேந்தன் ஆனார். வேலையை இழந்தார். இலங்கையில் வாழ முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போருக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில் நடத்திய தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பாக உரையாற்றினார். நாங்கள் முன்மொழிந்த தன்னுரிமைத் தீர்மானத்தை ஆதரித்தார். பிராமணியம் குறித்து மறக்க முடியாத ஒரு கருத்தைச் சொன்னார். தமிழ்ச் சிவநெறியின் ஆன்மிகச் சான்றோர்களாகத் தடம் பதித்துள்ள திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களைத் தமிழ்ப் பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்லை. இத்தனைக்கும் ஞானசம்பந்தர் வடமா பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் என்றார்.

தமிழீழத்திற்கு சனநாயக வழிமுறைகளில் தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வந்த ஈழவேந்தன் அவர்களை, 2000ஆம் ஆண்டு திசம்பர் 4 அன்று, வாச்பாயி தலைமையிலான பா.ச.க. – தி.மு.க. கூட்டணி ஆட்சி, தமிழ்நாட்டை விட்டு – இலங்கைக்கு நாடு கடத்தியது. அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் திமு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இலங்கைக்குச் சென்ற ஈழவேந்தன் அவர்கள், விடுதலைப்புலிகள் ஆதரவுடன் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தமிழீழத்தில் இயங்க முடியாத அளவுக்கு சிங்கள ஆதிக்க அரசின் கெடுபிடிகள் அவரை நெருக்கிய நிலையிலும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், அவர் கனடா சென்று வாழ்ந்து வந்தார். அங்கு தமிழீழ விடுதலைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். அங்கும் தனது இறுதிக் காலம் வரையிலும், முதுமையையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கங்களில் பங்கேற்று வந்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதியின், “பிம்சுடெக் பேரழிவில் தமிழர் தாயகங்கள்” நூலின் அறிமுக நிகழ்வு, 2019இல் கனடாவில் நடந்தபோது, அதில் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து வந்தார்.

தமிழ்நாட்டின் தனித்தமிழ் – மொழியியல் அறிஞர் – பேராசிரியர் – முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள் ஈழவேந்தன் அவர்களின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சென்னையில் உள்ளார்கள்.

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று சுருங்கி வாழாமல் தமிழினம், தமிழ் மொழி, தமிழீழம் எனத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, இறுதிவரை ஈகவேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இல்லத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.  

 பெ. மணியரசன்தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

===============================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam ===============================