திங்கள், 26 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம் தொடர்ச்சி)

உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்

2016 சனவரி 17 – ஐதரபாத்து பல்கலைக் கழகத்தின் விடுதி அறை ஒன்றில் அறிவியலரும் செயல்வீரரும் அம்பேத்துகர் மாணவர் சங்கத் தலைவருமான ரோகித் வேமுலா பிணமாகக் கிடந்தார்! ஆம், அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். முந்தைய நாள் சில மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஆட்சியாளர்கள் தொடுத்த பொய் வழக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலை வளாகத்தில் பட்டினிப் போராட்டம் தொடங்கியிருந்தார்கள். உணவு மறுப்புப் போராட்டக் கொட்டகையிலிருந்து வெளியே சென்ற உரோகித் விடுதி அறை ஒன்றில் போய்த் தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டுக் கொண்டார். பாரதிய சனதா கட்சித் தலைவர் பண்டாரு தத்துரேயாவின் தூண்டுதலால் கைப்பாவையான பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அடக்குமுறைக்கு எதிராகத்தான் உரோகித் வேமுலாவும் தோழர்களும் போராடினார்கள். ஐதராபாத்து பல்கலைக்கழக ஆட்சி உரோகித்து உள்ளிட்ட ஐந்து மாணவர் தலைவர்களை இடைநீக்கம் செய்தது. இதற்கு எதிராக நடைபெற்ற மாணவர் போரட்டப் பின்னணியில்தான் உரோகித்து தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலையல்ல, படுகொலை என்று உரோகித்தின் மாணவத் தோழர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.        

உரோகித்து இளம் மார்க்குசிய ஒடுங்கியவர்(தலித்து)களில் ஒருவர், இந்துத்துவக் காலத்தில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் திறமான அரசியல் திட்டம் வகுத்து மாணவர்களுக்கு வழிகாட்டும் தலைவராக வளர்ந்து கொண்டிருந்தவர்; அயரா உழைப்பாற்றலும் கொள்கைவழி அரசியல் தெளிவும், மாணவ ஒடுங்கிய (தலித்து) தலைவர்களிடையே திறந்த மனமும் கொண்டவராகத் திகழ்ந்தவர் என்று அவரின் தோழர்கள் சொல்கின்றார்கள்.  பலகலைக்கழக ஆட்சியால் உரோகித்தும் மற்றவர்களும் குறி வைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் முசுலிம்களுக்கு எதிரான பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் அம்பலமாக்கிப் பலவழிகளிலும்  இயக்கம் நடத்திக் கொண்டிருந்தார்கள், பல்கலை வளாகத்தில் ஒடுங்கியவர்(தலித்து)களையும் முசுலிம்களையும் ஒன்றுபடுத்துவதற்காகப் பாடுபட்டார்கள். இந்துத்துவ பாசிசத்துக்கு எதிரான  ஒடுங்கிய(தலித்து) மாணவர்களின் போராட்டம்தான் உரோகித்துக்கும் மற்றவர்களுக்கும் எதிரான அடக்குமுறைக்கு வழிகோலியது. 

உரோகித்தின் தற்கொலை முடிவை நம்புவது கடினமாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமான தோழர்கள் சொல்கின்றார்கள்.  ஒடுங்கிய(தலித்து) மாணவர் தலைவர்களுக்கு எதிரான பொய் வழக்கும் அடக்குமுறையும் உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என்ற வருத்தம் உரோகித்து வேமுலாவுக்கு இருந்தது என்றும், தன்னுயிர் தந்தாவது மக்களின் உளச்சான்றினைத் தட்டியெழுப்ப அவர் எண்ணியிருக்கலாம் என்றும் அவர்கள் நினைக்கின்றார்கள். உயர்கல்வி நிறுவனங்களில் இழிவுக்காளாகும் ஒடுங்கிய (தலித்து) மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது புதிய செய்தியன்று என்றாலும் உரோகித்தைப் போன்ற ஒரு தலைவர் இந்த முடிவை எடுத்தது அதிர்ச்சிக்குரியதே என்கிறார்கள்.

உரோகித்தின் மாணவத் தோழர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்:

“உரோகித்து போய் விட்டார் என்ற உண்மையை மனங்கொள்ள முடியவில்லை. எதுவும் சொல்ல இயலவில்லை. மாணவர் போராட்டம் தொடர்கிறது. ஐதரபாத்து பல்கலை மாணவர் போராட்டத்துக்கு ஆதரவும் தோழமையும் காட்டுவோம்.”

“பல்கலைவளாகங்களில் ஒடுங்கிய (தலித்து) மாணவர்கள் தற்கொலைக்கு இறுதித் தீர்வு சாதிப் பாகுபாட்டினை ஒழிப்பதுதான். இதற்கிடையில் தீண்டாமையால் இழிவுக்கு ஆளான மாணவர்கள் தங்கள் ஒடுங்கிய (தலித்து) ஓர்மையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஒடுங்கியர் (தலித்து)களாகப் பெருமையுடன் போராட முன்வர வேண்டும். இதோ என் அருமை நண்பர், இனிய தோழர், நாடெங்கும் புகழ் பெற்ற மாணவர் தலைவர், பல வெற்றிகளை ஈட்டியவர், சுடர்மிகு அறிவாளர், ஒடுங்கிய (தலித்து) மார்க்குசியர். தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு விட்டார். தோழர் உரோகித்து வேமுலா! உங்கள் மறைவு வீண் போகவிடோம்!”

[உரோகித்து வேமுலா ‘நாட்குறிப்புகள்’ நாளைய தாழி மடலில்]

தோழர் தியாகு,

தாழி மடல் 111

ஞாயிறு, 25 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தமிழ்நாடு இனி தொடர் அரசியல் வகுப்பில் தொடர்ந்து கலந்து கொள்கிறவரா நீங்கள்? அண்மையில் இந்த வகுப்பில் தமிழ்நாட்டில் அச்சுப் பணியின் முன்னோடிகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வகையில் திரு சி.வை.தாமோதரம் பிள்ளையின் பெயரைக் குறிப்பிட்டேன். தொடர்ந்து நம் இணைய வகுப்பில் கலந்து கொள்கிறவரான அபுதாபியைச் சேர்ந்த முதுநிலைப் பொறியாளர் சிங்கை கவிதா சோலையப்பன் தாழி அன்பரும் ஆவார். அவர் திரு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை அனுப்பியுள்ளார். படியுங்கள் 

       செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்குப் புது வாழ்வு

(அ)

    நாம் மறந்த தமிழ் அறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை  

– கவிதா சோலையப்பன்

தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய்த் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய்த்தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை முதன்முதலில் நூல்களாய்ப் பதிப்பித்து இன்று நம் கைகளுக்கு எளிதாய்க் கிடைக்கச் செய்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.  இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலானோர் இப்பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

முறையாகப் பாதுகாக்கப்படாமல் நீர், நெருப்பு, கரையான் இவற்றால் அழிந்து வந்த தமிழ் இலக்கிய ஏடுகளைப் பதிப்பித்துப் புதுவாழ்வு தந்தவர் தாமோதரம் பிள்ளை. இன்று தமிழ்த் துறையில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெரும்துணையாக இருப்பவை இவர் பதிப்பித்த நூல்களே. தமிழ் நூல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற நோக்கங்களால் தனது வாழ்நாள் முழுமையும் எழுதுவதிலும் பதிப்பிடுவதிலும் ஆர்வம் காட்டினார்.

தமிழகத்தில் இன்று பதிப்பாளர்கள் ஏராளம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகப் பதிப்புத் துறையில் வணிகத்திற்காக அல்லாமல் தமிழ்மீது தான் கொண்ட அன்பால் தமிழ் நூல்களைப் பதிப்பித்த முதல்வர். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை என்றால் எத்துணையோ நூல்கள் செல்லுக்கும் பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால் இவரின் தொண்டு தமிழும், தமிழரும் இருக்கும் வரை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுபட்டி என்ற ஊரில் வைரவநாத பிள்ளை, பெருந்தேவி அம்மாள் இவர்களுக்கு மகனாக 1832இல் பிறந்தார். பன்னிரண்டு வயதிலேயே தமிழில் சில இலக்கண, இலக்கிய நூல்களைத் தனது தந்தையிடம் கற்றுக் கொண்டார். பின்னர், கவிராயர் முத்துகுமாரரிடம் இலக்கண, இலக்கியங்களை முறையாகப் படித்தார்.  மொழிப் பற்று இல்லாத மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன? எனக் கேள்விக்கணைகள் தொடுத்தவர்.

1853இல் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய போது, தனது இருபதாம் வயதிலேயே “நீதிநெறி விளக்கம்” என்ற நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுத் தமிழ் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். அதே ஆண்டு தினவர்த்தமானி என்ற தமிழ் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்க தாமோதரம் பிள்ளைக்கு அழைப்பு வரவே, அழைப்பிற்கு உடன்பட்டு சென்னை வந்தார். ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ்மொழி கற்றுக் கொடுத்தார்.

ஏடுகளைத் தேடி இரவு பகல் பாராமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். தேடுதலில் கிடைக்கும் ஓலைச் சுவடிகள், எடுக்கும் போதே ஓரம் ஒடிந்து விழும்; கட்டை அவிழ்க்கும் போதே துண்டு துண்டாய்க் கொட்டும்; இன்னும் எழுத்துகள் பாதி அழிந்தும் பாடல்கள் வரிசையின்றியும் இருக்கும். தமிழ் நம் தாய்; அவள் உருக்குலைந்து அழிகின்ற போது நமக்கு என்ன என்று நாம் இருக்க முடியாது என்றார். இப்படிச் சிதைவுற்ற ஓலைச் சுவடிகளைப் பிரித்து எடுத்து காகிதத்தில் அச்சிடுவது அவ்வளவு எளிமையான செயல் இல்லை.

முதலில் ஏடுகளை மிகக் கவனத்துடன் பிரித்தெடுக்க வேண்டும்; பின் ஏட்டிலுள்ள எழுத்துகளைப் படிப்பதற்கும் அவற்றை முறைப்படுத்தி விளக்குவதற்கும் தனித்திறன் வேண்டும். அத்தகைய திறமையும் புலமையும் கொண்டிருந்தார் தாமோதரனார்.

19ஆம் நூற்றாண்டு ஐரோப்பியரின் தாக்கத்தால் உரைநடை வளர்ச்சி பெற்று செய்யுள் வடிவம் குறைந்திருந்த காலம். தமிழ் இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறியாமல் இருந்த காலம் அது. அக்காலத்தில் செய்யுள் வடிவிலான ஏடுகளைப் படித்து ஆய்வு செய்யும் போது தாமோதரம்பிள்ளைக்கு சில சந்தேகங்கள் தோன்றி விடும். அவற்றைத் தீர்க்கத் தக்கவர் இல்லாமல் வருந்தி மன உளைச்சலால் உணவின்றி உறக்கமின்றி இருப்பாராம்.

சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ் அறிஞராகச் சில காலம் பணியாற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப்பெற்று 1858இல் நடத்திய பி.ஏ தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவராகப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1868ஆம் ஆண்டு தனது முப்பத்தாறாம் வயதில் தொல்காப்பியச் சொல் அதிகாரத்திற்கு சேனாவரையர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார். பாண்டிய மன்னன் கைகளுக்குக் கிடைக்காமல் இழந்ததாய்க் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தனது கடும் உழைப்பினால் கண்டு பிடித்து, ஆராய்ந்து, பதிப்பித்து வெளியிட்டார்.

இவரின் இலக்கிய மீள் கண்டுபிடிப்பு தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உணர்வினை வழங்கியது. ஈழத்து ஆறுமுக நாவலரின் வழிகாட்டுதலால் தொடர்ந்து பதிப்புப் பணியைச் சிறப்புடன் செய்து வந்தார். வீரசோழியம் (1881),திருத் தணிகைப் புராணம்,  இறையனார் அகப்பொருள்,  நச்சினார்க்கினியாரின் தொல்காப்பிய எழுத்து,  பொருள் அதிகாரங்களுக்கான உரைகள், கலித்தொகை, இலக்கண விளக்கம் ஆகிய பழமையான நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.

 1871இல் சட்டம் பயின்று கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் 1884ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தொடங்கிய இப்பதிப்பு முயற்சியால் பண்டைய இலக்கியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிக் கொணரப்பட்டன. 1887இல் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்குச் சீவக சிந்தாமணி ஏடுகளைக் கொடுத்துப் பதிப்பிட உதவினார். பதிப்புத் துறையில் நாட்டம் செலுத்தியதோடு நூல்கள் பலவும் எழுதி வெளியிட்டார். கட்டளைக் கலித் துறை, சைவ மகத்துவம், சூளாமணி வசனம், நட்சத்திரமாலை ஆகிய நூல்களையும். காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி என்ற நாவலையும் இயற்றி வெளியிட்டார்.

 1896இல் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய (இ)லீலாவதி, சுலோசனை என்ற இரண்டு நாடகங்களின் ஒரு பகுதியைச் சென்னை பல்கலைக் கழகப் பாடமாக அமைத்திட சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் அனுமதி பெற்றுத் தந்தார். தமிழ் நாடக நூல் ஒன்றைப் பல்கலைக்கழகப் பாடமாக வைத்தது அதுவே முதல் முறை. இவரின் அரும் பணியால் இலக்கியப் படைப்புகள் அழிக்கப்பட முடியாதவையாயின. தனது அரும் பெரும் தமிழ்த் தொண்டினால் பரிதிமாற்கலைஞர், உ.வே. சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களின் பாராட்டினையும் பெற்றார். தமிழுக்கும் தமிழருக்கும் நலன்கள் பல செய்து பதிப்புத் துறைச் செம்மல் எனப் புகழ் பெற்ற தாமோதரம் பிள்ளை   1-1-1901 அன்று சென்னையில் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் தமிழருக்கு அருளிச் சென்ற செல்வக் களஞ்சியங்களான இலக்கிய நூல்கள் என்றும் மறையாதவை.

(தொடரும்)

தோழர் தியாகு,

தாழி மடல் 111