ஆந் திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி தெலங்கானாவைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவ் எந்த நேரத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினாரோ தெரியவில்லை, அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் மத்திய அரசிலும் மாநில அரசிலும் முதிர்ந்த அரசியல் தலைவர்கள் யாருமே இல்லாத வெற்றிடம் இருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.மத் திய அரசில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் கூட கட்சித் தலைமை காட்டும் கண் ஜாடைக்கு ஏற்ப செயல்படும் பிரதமராகத்தான் மன்மோகன் சிங் இருக்கிறார் என்பது உலகம் அறிந்த உண்மை. அதிலும் ஆந்திர விவகாரம் என்ன என்பதைப் பத்திரிகைகள் மூலமும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொல்வதிலிருந்தும்தான் மன்மோகனால் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, சொந்த அனுபவத்திலிருந்து தெரிந்துகொள்ள அவருக்கு வாய்ப்பே கிடையாது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரான சோனியா காந்தியின் நிலைமையும் கிட்டத்தட்ட அதேதான். காங்கிரஸ்காரர்கள்கூட அவருக்குக் கட்டுப்பட மறுத்து தெலங்கானா வேண்டும் என்றும் தெலங்கானா கூடாது என்றும் இரு கட்சிகளாகப் பிரிந்து நிற்கின்றனர் என்பதிலிருந்து, இந்தப் பிரச்னையில் அவருக்கு எந்த அளவுக்கு அரசியல் முதிர்ச்சியும், விஷய ஞானமும் உண்டு என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி அரசியல் அனுபவஸ்தர் என்றாலும் அவருடைய அனுபவம், அறிவு எல்லாம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே என்று கட்சித்தலைமை கோடி காட்டிவிட்டதால் அவருக்கும் ஆர்வம் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். அரசியலிலிருந்தே ஓய்வுபெற வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு சலிப்பும் விரக்தியும் அடைந்திருக்கிறார் அவர். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட இதர மூத்த தலைவர்களும் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் செயல்படுவது என்ற எதிர்பார்ப்பு நிலையிலேயே இருப்பதால், இரு தரப்பாரையும் ஓரிடத்தில் அமர்த்தி சமரசம் பேசி, ""பிரிவதாக இருந்தாலும் சேர்வதாக இருந்தாலும் அதை அமைதியாகச் செய்வோம், மாநிலத்தின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்க வேண்டாம்'' என்று கேட்டுக்கொள்ளும் பக்குவம் தெரிந்தவர்களாக இருக்கவில்லை.அரசியல் தலைமையில் வெற்றிடம் என்பது இதுதான். இந்தக் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்த நினைக்கும் இளம் மாணவர்களுக்கும், உணர்ச்சி வேகத்தில் கொதித்தெழும் பொதுமக்களுக்கும் விவரமும் தெரியவில்லை. விளைவுகளைப் பற்றியும் கவலையில்லை.ஆந்திரம் அப்படியே இருந்தாலும் பிரிந்தாலும் எல்லா தரப்பினரின் வாக்குகளும் நமக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கம்தான் ஆளும் கட்சி அழுத்தமாகச் செயல்படத் தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.இதனி டையே பத்திரிகைகளில் வரும் தகவல்கள் நமக்குக் கவலையையே அளிக்கின்றன. கடந்த 10 நாள்களாக மருந்து, மாத்திரைத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட முடியாமல் 400 கோடி ரூபாய்க்கும் மேல் உற்பத்தி முடங்கிவிட்டது.""ஹைதரா பாத் நகருக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள், அங்கு கிளர்ச்சி வலுத்து வருகிறது, நிலைமை சரியில்லை'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தன்நாட்டு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் தங்களது ஹைதராபாத் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.ஹைதராபாத் நகரில் கணினி மென்பொருள்துறை நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதால் அங்கு வெளி நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து பணி செய்யும் பலர் முதல் முறையாக தங்களுடைய நகரத்தின் கதி என்ன, நமக்குப் பாதுகாப்பு இருக்குமா என்று அஞ்ச ஆரம்பித்துள்ளனர்.ஹைத ராபாதிலும் ஆந்திரத்தின் பெரிய நகரங்களிலும் ஹோட்டல் விடுதிகளில் தங்குவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. யாரும் மாநிலத்துக்குள் துணிந்து வருவதில்லை. இதனால் வருவாய் குறைந்துவிட்டது.தெலங்கானா வேண்டும் என்போரும், வேண்டாம் என்போரும் தினமும் ஊர்வலம் போவதும் வன்முறையில் இறங்குவதும் அச்சுறுத்தலாக இருப்பதால் வளர்ச்சிப்பணிகள் முற்றாக நின்றுவிட்டன. மாநிலத்தின் அரசு நிர்வாகம் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முடியாமல் திணறுகிறது.முதல்வர் கே. ரோசய்யாவை, மறைந்த முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு இப்போது பல மடங்காகிவிட்டது. மாநிலத்தை ஆளுநர் ஆட்சியில் தாற்காலிகமாகவாவது கொண்டுவந்தால் நிலைமை மேம்படும் வாய்ப்பு இருப்பதைப்போலத் தோன்றுகிறது. அப்படிச் செய்தால் அடுத்து பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டி வருமோ என்று மத்திய தலைமை கருதுவதால் இந்தத் தேவையற்ற இழுபறி நிலைமை தொடர்கிறது. தாயே ஆனாலும் குழந்தையை மார்போடு அளவுக்கு மீறி இறுக் கமாக அணைத்துக் கொண்டால், குழந்தை திமிறி அந்தக் கட்டிலிருந்து விடுபடத் துடிக்கும். மொழியுணர்வால் கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதி மக்கள் தெலங்கானா பிரிவதை வன்மையாக எதிர்க்க எதிர்க்க, பிரிந்தே தீருவது என்று தெலங்கானா பகுதி மக்கள் தங்கள் நிலையில் மேலும் தீவரமடைவதைத் தவிர்க்க முடியாது.வாயின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரேநேரத்தில் வெவ்வேறு விதமாகப் பேசும் விசித்திரம் பார்த்திருக்கிறீர்களா? தெலங்கானா பிரச்னையில் காங்கிரஸ் கட்சியினர் வெளியிடும் கருத்துகள் அதைத்தான் நினைவூட்டுகின்றன. வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கி, ஆந்திர மாநிலத்தை இடியாப்பச் சிக்கலில் மாட்டி வைத்திருக்கும் காங்கிரஸ் தலைமையின் அதிபுத்திசாலித்தனத்தை நினைத்தால் சிரிக்காமல் என்ன செய்ய?உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்!
By Ilakkuvanar Thiruvalluvan
12/19/2009 3:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*
ராஜிவ் காந்தியும் சரி, அவரது இத்தாலிய மனைவியும் சரி, வெளி நாட்டிலே வாழ்ந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அவர்களுக்கு இந்த நாட்டின் மீது பற்று, அக்கரை இருக்கும் என எதிர்பார்த்தவர்கள், எதிர்பார்ப்பவர்கள், முட்டாள்கள். அவர்களுக்கு இந்திய அரசு என்பது ஒரு பணம் கொள்ளையடிக்க குவிந்து கிடக்கும் ஒரு கருவூலம். அதில் பல பீரங்கிகள், குட்ரொசிகள் வருவார்கள். இந்திய மக்கள் அவர்கள் கொள்ளையடிக்க ஓட்டுபோடுவார்கள், அவ்ர் இற்ந்து விட்டால், அவ்ர் குடும்பமும் வாரிசுகளும் திரும்பவும் கொள்யடிக்க ஓட்டுபோடுவார்கள்
By தமிழ்க் கூர்மை
12/20/2009 1:26:00 PM
By thulasingam Jayaram
12/19/2009 9:43:00 PM
By RAVI
12/19/2009 8:07:00 PM
By SlaveTamilOfIndia
12/19/2009 5:38:00 PM
By M.S.Boobathi
12/19/2009 5:22:00 PM
By M.S.Boobathi
12/19/2009 5:21:00 PM
By tamizan(eezam)
12/19/2009 3:09:00 PM
By thamizhan
12/19/2009 12:52:00 PM
By tamizhan
12/19/2009 12:51:00 PM
By நொந்துபோன தமிழன்
12/19/2009 12:50:00 PM
By Adithyan
12/19/2009 12:39:00 PM
By Adithyan
12/19/2009 12:26:00 PM
By s.suresh
12/19/2009 12:26:00 PM
By Rajasekaran Iyer
12/19/2009 12:07:00 PM
By ATamil
12/19/2009 8:57:00 AM
By Raghu
12/19/2009 8:28:00 AM
By raj
12/19/2009 8:26:00 AM
By நவீன் சென்னை
12/19/2009 8:11:00 AM
By kandasamy
12/19/2009 7:24:00 AM
By பாலாஜி
12/19/2009 4:09:00 AM