சனி, 14 செப்டம்பர், 2019

பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல!

மதுரை மாநகரில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்திச் சிறப்பாக  மாற்றி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டுமானத்திற்கான வரைபடம் 20.1.2019 அன்று  வெளி யிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடம் வெளி வந்ததால் கடும் எதிர்ப்பு வந்ததாகவும் அவ்வாறு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.  ஆனால், அண்மையில் மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர்  வேலுமணி, கோபுரம் வடிவிலான  வரைபட அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலைய முகப்பு அமையும் என்றாராம். இவ்வாறு கூறித், திராவிடர் கழகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகக் கோயில்கள் இறைவழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லை. இலவசக்கல்வி, இலவசஉணவு, இலவச மருந்து, மருத்துவ வசதி, சொற்பொழிவு அரங்கம், கலை-பண்பாட்டுக் கருவூலம்  எனப் பல வகைகளிலும் மக்களோடு நெருங்கி மக்கள் நலன்காக்கும் பாசறைகளாகத் திகழ்ந்தன. கோயில்களால் பயன் உறுபவர்கள் பூசை செய்பவர்கள் மட்டுமல்லர். அழகு படுத்துபவர், வண்ணம் பூசுநர், துணிமணிகள் நெய்பவர்  அல்லது விற்பவர், பூ வேலை செய்பவர், கோலமிடுபவர்,  பாடற் கலைஞர்கள், சின்ன மேளம் பெரிய மேளம் வாசிக்கும் கலைஞர்கள், பிற கருவி இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், தச்சர்கள், கொல்லர்கள், பந்தல் அமைப்பாளர்கள், சமையலர்கள், வண்ணார், தோட்டக்காரர்கள்,  துப்புரவாளர்கள், கோயில் தொடர்பான பணியாளர்கள், நிதியாளர்கள், உண்டியல் எண்ணுபவர்கள் முதலிய பல்வகைத் தொழிலாளர்கள் கோயில்களைச் சார்ந்து வாழ்ந்து வந்தனர்.
திருவிழாக்காலங்களில் சிறுபொருள் வணிகமும் விளையாட்டுகள் தொடர்பான பொருள்கள், உணவுப்பொருள்கள் விற்பனையும் பூ வணிகமும் கேளிக்கை ஆட்டமும் பெருகித் தொடர்புடையவர்கள் நலன் காத்தன. நெய், எண்ணெய் விற்பனை, விளக்குகள், திரிகள் விற்பனை, தேங்காய், பூ, மாலை விற்பனை முதலான சிறு வணிகர்களும் பயன் உற்றனர்.கோயில்களிலும் திருவிழாக்காலங்களில் சாலைகளிலும் தண்ணீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் வைத்துப் பானங்கள் வழங்கினர்  திருச் சோறு வழங்கினர். இதனால் அற உணர்வும் மக்களிடையே தழைத்தது. இப்பொழுதும் இவற்றில் பெரும்பான்மை தொடர்கின்றன. கட்டுமானக் கலை,சிற்பக்கலை வாழும் இடங்களாகவும் கோயில்கள் உள்ளன.
எல்லாக் கோயில்களிலும் குளங்கள் உள்ளன. இதனால் சுற்றுவட்டாரத்தில் நீர் ஊறுவதற்கு வாய்ப்பாக உள்ளது. கோயில்களில் தல மரங்கள் எனப் போற்றப்படுவதால் மக்களுக்கு மர வளர்ப்பில் ஆர்வம் ஏற்படுகிறது. பஞ்சம், வறட்சிக்காலங்களில் கோயில்கள் அடைக்கல இல்லங்களாகத் திகழ்ந்துள்ளன. போர்க்காலங்களிலும் மக்கள் கோயில்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஈழத்தில் நடைபெற்ற பல இனஅழிப்புப்  போர்களின் பொழுது நல்லூர் கந்தசாமிக்கோயில் முதலான கோயில்களில் மக்கள் தஞ்சம் புகுந்ததையும் நாம் கண்டுள்ளோம்.
ஒரு காலத்தில் மன்னர்கள் வாழ்விடமாக இருந்த அரண்மனைகள்தான் பின்னர் கோயில்களாக மாறியுள்ளன. கோ + இல் என்றாலே தலைவனின் – மன்னனின் இல்லம் என்றுதான் பொருள். அதனால் அரண்மனையில் தொடர்ந்த நற்பணிகள் கோயில்களிலும் தொடர்ந்துள்ளன.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா” என ஒளவையார் கூறுகிறார்.
திருக்கோயில் இல்லாத திருவில் ஊர்” எனத் திருநாவுக்கரசர் கூறுகிறார்.
சியார்சு மிக்கேல், “தென்னிந்தியக் கோயில்கள் சுறுசுறுப்பான தொண்டு மையங்களாக இருந்தன; அவை வழிப்போக்கர்கள், பயணிகள், இறையன்பர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு இலவச உணவையும் அளித்தன;  மாணாக்கர்களுக்குத் தங்கும் வசதியையும் ஏற்படுத்தித் தந்தன” என்கிறார்.(இந்துக்கோயில் – அதன் பொருள் வடிவங்களுக்கான அறிமகம்: An Introduction to Its Meaning and Forms.)
எனவே, கோயில்களை மதங்களுடன்மட்டும் தொடர்பு படுத்திப் பார்க்கக்கூடாது.
தமிழர்களுக்கே உரிய கோயில்களை இந்துமத அடையாளமாகப் பார்ப்பதும் தவறு. தமிழர் மதம் இந்து மதம் அல்ல என்னும் பொழுதுதமிழர் சமய அடையாளமான கோயில்களை மட்டும் இந்து மத அடையாளமாகக் கூறுவது குற்றம் அல்லவா?
இறை ஏற்புக் கொள்கையும் இறை மறுப்புக் கொள்கையும் உலகெங்கும் உள்ளன. அவ்வாறிருக்கப் பெரும்பான்மை இறை ஏற்பர்களுக்கு அடையாளமான கோயில் கோபுரத்தை பேருந்து நிலைய முகப்பில் அமைக்கக் கூடாது என்பது சரியல்ல. வேறு எங்கேனும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இறை மறுப்பர் தந்தை பெரியார் பெயரில் உள்ள பேருந்து நிலையத்தில் வைக்கலாமா என எண்ணலாம். தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, தம் இல்லம் வந்திருந்த  தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் முதலான விருந்தினர்களுக்குத் தாமே திருநீறு வழங்கி யுள்ளார். கோயில் அறக்கட்டளை பொறுப்பிலும் இருந்துள்ளார். இத்தகைய பண்பாளர் இப்பொழுது இருந்திருந்தால் கலை, நாகரிகம், பண்பாட்டு அடையாளமாகத் திகழும் கோபுரச்சின்னத்தை மறுக்க மாட்டார்.ஒன்றைவிட மற்றொன்று பெரிதாக அமைக்கப்படாமல், இரண்டையும் சம அளவில் வைக்கலாம்.
எனவே, திராவிடர் கழகம் கலை பண்பாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. மாறாக அரசுக் கட்டடக் கால்கோள்களின் பொழுது பூமி பூசையின் பொழுதும் அணைதிறப்பு முதலான தொடக்க நிகழ்வுகளின் பொழுதும் இறை வழிபாடு தொடர்பான பிற நேர்வுகளிலும் தமிழைத் துரத்திக் கொண்டுள்ளது. மதச்சார்பற்ற  அரசாக இல்லாமல் குறிப்பிட்ட வகுப்பாரின் சார்பாக  இயங்கிக் கொண்டுள்ளது. தமிழர் கோயில் கருவறைகளில் தமிழர் நுழையவும் தமிழ் நுழையவும் உள்ள தடைகளை உடைத்தெறியவில்லை. எனவே, இவற்றுக்கு எதிராகப் போராடி  இறை வழிபாட்டாளர்களின் உரிமைகளைக் காக்க முன்வரவேண்டும்பண்பாட்டுச் சின்னத்திற்கும் மதச்சின்னத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டு இனிச் செயல்பட வேண்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச் செய்தி 14.09.2019

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி 

  ஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம்.
 பிற மாநிலங்களின் தலைவர்கள் சாதிப் பெயர்களாலேயே அழைக்கப்படும் நிலையும் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்றழைக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. ஆனார்; காமராசு நாடார் என அழைக்கப்பட்டவர் காமராசர் ஆனார்பொதுவாக இன்றைய தலைவர்கள் சாதிப்பெயர்களுடன் அழைக்கப்படுவதில்லை. பொது மக்களிலும் பெரும்பான்மையர் சாதிப் பெயர்களுடன் குறிக்கப்படுவதில்லை. சாதி வழக்கமும் சாதிச் சண்டைகளும் சில இடங்களில் சாதிக் கொடுமைகளும் இருப்பினும் பொதுவாக வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிடும் பழக்கம் குறைவு.
  தமிழ்நாட்டில் மட்டும் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் என்ன? நீதிக்கட்சியின் தொண்டும் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மேற்கொண்ட பரப்புரைப் பணிகளுமே இந்த நிலை மாற்றத்திற்குக்காரணம். நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் மேற்கொண்ட அமைதிப்புரட்சியைப் பலர் உணரவில்லை.
  இத்தகைய அரும்பணிக்கு முன்னோடியாக வித்திட்ட ஆன்றோர் யார்? அவர்தாம் பகுத்தறிவுச் சுடர், தன்மதிப்பு இயக்கத் தலைவர், சிவகங்கைச் செம்மல் இராமச்சந்திரனார்.
  அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்விமாணவர்க்கு உணவு வழங்கும் திட்டம்! முதலான அவர் கொணர்ந்த தீர்மானங்கள் பல இன்றைக்குப் பகுதி அளவில் அரசுப்பள்ளிகளில் இலவசக்கல்வி, சத்துணவுத் திட்டம், என வெவ்வேறு பெயர்களில் செயலாக்கம் பெற்றுள்ளன. ஆனால், தொலைநோக்கில் இவற்றை அறிமுகப்படுத்திய ஆன்றோர் அவர்.
  “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவர் வழியில் வாழ்ந்த அவர், “சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே” என்ற அவலத்தைப் போக்க எடுத்த புரட்சிச் செயலே சாதி வால் இல்லாத் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
  செங்கற்பட்டில் தமிழ்மாகாணத் தன்மதி்ப்பு மாநாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 18, 19 ஆகிய இரு நாட்களும் நடைபெற்றது. இம்மாநாட்டில் வரலாற்றுச்சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொணர்ந்தார். அவைதாம் தமிழ் நாட்டில் பெரும்புரட்சியை ஏற்படுத்தின.
                திராவிட இயக்கங்கள் உருமாறி ஆட்சிச் சுவையில் மூழ்கியதால் இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்குரிய கொள்கையாகப் பாராமல், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்னும் தமிழ்நெறி பிறந்த மண்ணில் சாதிக் கொடுமைகளும் சாதிப்பிளவுகளும் அடியோடு அகல வேண்டும் என்னும் உறுதிப்பாட்டை அனைவரும் எடுகக்க வேண்டும். இது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின்பணி. தமிழ்நாட்டில் வாழும் அனைவரின் பணி.
  சிவகங்கைச் செம்மல் பெருநெருப்பாய்ப் பரவும் சிறு பொறியை விதைத்ததைப் பார்ப்போம்!
  மாநாடுகளிலும் சிறப்புக் கூட்டங்களிலும் இராமச்சந்திரனார் கொண்டு வந்த தீர்மானங்களும் தீர்மான முன்மொழிவு வழிமொழிவுச் சொற்பொழிவுகளும் ஆற்றிய தலைமை உரைகளும் சிந்தனையை வெளிப்படுத்திய சிறப்பு உரைகளும் என்றென்றும் போற்றப்படவேண்டியவையே. இருப்பினும் இந்தியா முழுவதும் வழிகாட்டியாகக் கொள்ளக்கூடிய இரண்டு தீர்மானங்களை இப்போது பார்க்கலாம்.
  சாதி வாலை வெட்டி எறியச் செய்த அத்தீர்மானங்கள் வருமாறு:
  1. மக்கள் தங்கள் பெயர்களுடன் சாதி அல்லது வகுப்பைக் காட்டும் பட்டங்களை இன்று முதல் வி்ட்டுவிடவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் தமிழக மக்களைத் தீர்மான வடிவில் கேட்டுக் கொள்கிறேன்.

  2. மக்கள் சாதி அல்லது சமயப் பிளவுகளைக் காட்டக் கூடிய குறிகளை எதிலும் எங்கும் அணிந்து கொள்ளக் கூடாது என்பது எனது இரண்டாவது தீர்மான வடிவாகும்.
 சாதிப்பட்டங்களைத் தூக்கி எறிய வேண்டிய தீர்மானங்கள் குறித்து அன்றைக்கே அவர் பேசிய பேச்சு இன்றைக்கும் நமக்கு வழிகாட்டியாகும். அவ்வுரையின் பகுதி வருமாறு:
  இத்தீர்மானங்களால் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை ஆயினும்நம் மனங்களில் ஒற்றுமை ஏற்படுத்த இது அவசியம்நம்மில் இத்தீர்மானம் சிலருக்குப் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தலாம்யாரும் அஞ்ச வேண்டியது இல்லைகோபமும் தேவை இல்லைசுயமரியாதையைக் காட்ட வந்த நாமே நீண்ட காலமாக இந்தத் தவறுகளைச் செய்திருக்கக்கூடாதுஇப்போதும் காலம் கடந்துவிடவில்லை.
   நமக்குப் பின்னால் நாடார்சேர்வைபிள்ளை எனும் வால் பட்டங்கள் நம்மைப் பிரித்து வைத்துள்ளனஇவற்றை நாம் மறந்து விட்டால் நம்மில் வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை அல்லவாமக்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள்எதிர்காலப் பகுத்தறிவுச் சமூகம் நம்மை இதற்காக நிச்சயம் வாழ்த்திப் புகழும்.
  நாம் அனைவரும் பகுத்தறிவுவாதிகள்முதலில் நாம் ஒன்றாவோம். சாதி பேதங்களைக் களைந்து உலகக் குடிமக்கள் ஆவோம். பின்னர் இந்துக்களும் கிறித்துவர்களும் முகம்மதியர்களும் என்றே வித்தியாசப்பட்டு நிற்பர்இனிவரும் நாளில் உலகத்து மனிதர்கள் எனும் ஓர் அமைப்பிற்குள் அவர்களையும் கொண்டுவந்து சேர்க்கும் உரிமை நமக்கு வந்துவிடும்.
  மாநாட்டுத தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களை ஒன்று கேட்டுக் கொள்வேன்இது முதல் இருந்த சேர்வை என்ற பட்டத்தை நான் தூக்கி எறிகிறேன்இனி நான் இராமச்சந்திரன் மட்டும்தான்என்னை யாரும் சேர்வை என்று அழைக்க அனுமதிக்க மாட்டேன்சௌந்திர பாண்டியன் அவர்களும் இனித் தனது பட்டமான நாடார் என்பதைத் தூக்கி எறிய வேண்டுகிறேன்மற்றவர்கள் அவரை நாடார் என இனி அழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் கடமைஇது நாம் நம் எதிர்காலத்திற்குச் செய்யும் சேவைசுயமரியாதைக்குத் தருகின்ற மரியாதையாகும்.
   அன்றைக்கு இராமச்சந்திரனார் விதைத்த சிறு விதை இன்று பெரு ஆலமரமாய் தழைத்தோங்கி நிற்கிறது. எதிர்கால நோக்குடனும் சமநிலை மன்பதையை உருவாக்கும் இலக்குடனும் அவர் கொண்டு வந்த சாதிப்பட்ட ஒழிப்புத் தீர்மானங்களே இன்றைக்குத் தமிழ்நாட்டில் செயல்பாட்டாய் மலர்ந்துள்ளது.
                ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்காகத் தம் உழைப்பையும் செல்வத்தையும் நல்கிய இராமச்சந்திரப் பெருமகனார், சாதிப்பற்றில் ஊறியிருந்த மக்களின் நிலையை உணர்ந்தும் அதே நேரம் முயன்றால் முடியாதது இல்லை என்ற நம்பிக்கையிலும்தான் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை எனப் பேசி உள்ளார். அவர் எண்ணியவாறு ஒரே இரவில் என்றில்லாமல் படிப்படியாக இன்றைக்கு அக்கனவு பெருமளவு நனவாகி உள்ளது.
   தமிழ்நாட்டில் சாதிப்பட்டங்களும் சாதி, சமயக் குறியீடுகளும் பெருமளவு குறைந்துள்ளன. ஆனால், இந்தியா முழுமையும் மக்கள் தத்தம் சாதி வாலை அறுத்தெறியும் – சாதி, சமயக் குறியீடுகளைத் துடைத்தெறியும் – நாளை விரைவில் கொணர நாம் பாடுபடவேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகி, நம் சம உடைமை அரசில் சாதிவாலுடன் உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதும் அரசின் பதவிகளை வகிப்பதும் அரசமைப்பிற்கு எதிரானது எனக் கூறித் தடை பெற வேண்டும். பிற மாநில அரசுகளையும் மத்திய அரசையும் இந்தியா முழுமையும் உள்ள தலைவர்களையும் அமைப்பினரையும் பொதுமக்களையும் அணுகி, மனமாற்றம் செய்து, ஒன்றே குலம் என்னும் நிலையை விரைவில் அடைய வேண்டும். இராமச்சந்திரனார் கண்ட கனவின்படி உலக மனிதர்கள் இயக்கம் என்னும் சாதி, சமய, நிற, பிற வேறுபாடற்ற உலகம் அமைய வேண்டும்.
   தமிழ்நாட்டில் கலை உலகைச் சார்ந்த இறக்குமதியாளர்கள் சாதி வாலுடன் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். சில தலைவர்கள் சாதி வாலுடனே இயங்குவதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். சாதி வாலுடன் உழலுபவர்களைத் தூக்கி எறியும் மனப்பான்மையை நாம் பெறவேண்டும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தமிழ் நெறிப்படி உலகம் ஒன்றே என்னும் நிலையை நாம் அடையப் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் பாரெங்கும் நிகழும் படுகொலைகளை நிறுத்த இயலும். அனைவரும் இணை என்னும் நிலையை அடைய முடியும். எல்லார்க்கும் எல்லாம் என்னும் உயர்வை எட்ட முடியும்.
                புரட்டாசி 02, தி.பி. 1915 / 16.09.1884  அன்று தோன்றி மாசி 15, தி.பி. 1964 / 26.02.1933 அன்று மறைந்த இராமச்சந்திரப் பெருமகனார் வாழ்ந்த காலம் குறைவுதான். ஆனால், பகுத்தறிவுப் பாதையிலும் தன்மதிப்பு உணர்விலும் ஒவ்வொருவர் செயல்களிலும் அவர் வாழ்ந்து கொண்டுள்ளார். அவரது புவி வாழ்வு குறைவாக இருந்தாலும் புகழ் வாழ்வு என்றென்றும் தொடரும். அவரது புகழ்வாழ்வில் நம்மையும் இணைத்துக் கொள்ள சாதி என்ற சொல்லை அறியாத உலகை நாம் ஆக்குவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 11.09.2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 42, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

42

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்லாமைகுறள் எண்: 408)
நல்லவர் அடையும் வறுமையினும் துன்பம் தருவது கல்லாதவரிடம் சேரும் செல்வம் என்கிறார் திருவள்ளுவர்.
கல்லாதவரிடம் சேரும் செல்வம் அரசிற்குப் பாரமே என்கின்றனர் அரசியலறிஞர்கள்.
கல்லாதாரிடம் சேரும் செல்வத்தைக் குறிப்பிடுவதால் நல்லார் என்பது கல்வியறிவுள்ள நல்லார் என்னும் உட்பொருள் உடையதாக உள்ளது.
பேரறிவாளன் செல்வம் ஊருணி நீர் நிறைந்ததுபோன்றும்(குறள் 215) நல்லவனிடம் உள்ள செல்வம் பயன்மரம் பழுத்துப் பயன்தருவதுபோன்றும் (குறள் 216) பெருந்தகையாளனிடம் சேரும் செல்வம் மருந்துமரம்போன்றும் (குறள் 217) விளங்கும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். கல்வியறிவிலார் செல்வம் பெற்றால் தொடர்பு இல்லாதவர் நன்கு உண்ண தொடர்புடையவர்கள் பசித்திருப்பர்(குறள் 837) என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். எனவே, கற்றறிந்த நல்லார் வறுமையில் செம்மையுடன் திகழ்வர். எனவே, இதுவரை அவரால் உதவிகள் பெற்ற சுற்றத்தாரும் உற்றாரும் நண்பர்களும் வறியவர்களும் பயன் தடைப்பட்டு வருந்துவர் என்று நல்லார் துன்புறுவர். என்றாலும் பெற்ற கல்வியறிவால் நல்ல வழிகளில் வறுமையைத் தாங்கும் திறனும் வறுமையைப் போக்கும் வழிமுறைகளும் கொண்டு துன்பத்தைத் தணிப்பர். ஆனால், கல்வியறிவில்லாதவன் செல்வம் பெற்றும் தீய வழிகளில் செலவழித்தும் தக்கவர்க்கு உதவாமல் துன்பம் விளைவித்தும் வாழ்வான்.
மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய இருவரும் “செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பர்” என்று செல்வச்செருக்கால் பிறருக்குத் துன்பம் செய்வர் என்கிறார்கள்.  பரிதி,  “நல்லோரிடத்தில் வறுமை வருந்தும்; அது போல கல்லாதாரிடத்தில் செல்வம் வருந்தும்” என்று அருமையாகக் கூறுகிறார். “கல்லாரிடம் வறுமையும் கற்ற நல்லாரிடம் செல்வமும் சேர்வது முறைமை. முறைமை மாறினால் தீமைதான்” என்கிறார் பேரா.சி.இலக்குவனார்
ஒரு தொழிலில் அத் துறை அறிவைக் கற்காமல் செல்வத்தைச் செலவழிப்பவன் தொழிலாளர்களுக்கும் அத்தொழிலைச் சார்ந்துள்ள நிறுவனங்கள், அந்நிறுவனத் தொழிலாளர்களுக்கும் துன்பம் விளைவிப்பவனாக இருக்கிறான்.
நல்லாரின் வறுமையினும் துன்பம் தருவது கல்லாரின் செல்வமே!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 13.09.2019