திருச்சி, செப். 3: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 60 வயதைக் கடந்த 11 பேராசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கூட்டம் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில், 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, முனைவர்கள் ச.சு. ராமர் இளங்கோ, க. நெடுஞ்செழியன் உள்பட 11 பேராசிரியர்கள் நீக்கப்பட்டனர்.இந் நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குத் துணைவேந்தர் கே. மீனா அளித்த பதில்:"ஆட்சிக் குழுக் கூட்டத்தில், 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில்தான் செயல்படுத்தப்பட்டது. இதில், தனிப்பட்ட முறையில் எந்தவித நோக்கமும் இல்லை' என்றார் மீனா.பின்னர், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பெ. கோவிந்தசாமி கூறியது:"ஆட்சிக் குழுக் கூட்டத்தில் 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அவர்களுக்கு 65 வயது வரை நீட்டிப்பு அளிக்கலாம் எனத் துணைவேந்தர் தெரிவித்தார். ஆனால், அதை உயர் கல்வித் துறைச் செயலர் கணேசன் மறுத்தார். 60 வயதைக் கடந்தவர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது என அரசாணை உள்ளதாகவும் செயலர் குறிப்பிட்டார். மேலும், இந்தத் தீர்மானத்துக்கு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோவின் பதவிக் காலத்தில் இறுதியாக நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டவை. அந்தத் தீர்மானங்கள் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டவை.ஆனால், ஆய்வுத் திட்டங்கள் மேற்கொண்டு வரும் கெüரவப் பேராசிரியர்களை நீக்கவில்லை. திறமையானவர்களைத் தக்க வைத்துள்ளோம். நீக்கப்பட்ட பேராசிரியர்களிடம் எந்தவித ஆய்வுத் திட்டங்களும் கையில் இல்லை. என்றாலும், அவர்களுடைய திறமையைச் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வோம்' என்றார் கோவிந்தசாமி.இதைத்தொடர்ந்து, ஆட்சிக் குழு உறுப்பினர் பீ.மு. மன்சூர் கூறியது:"உயராய்வு மையங்களில் தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தலில் அரசின் நிதியுதவியுடனும், அனுமதி பெற்றும் நியமிக்கப்படும். மற்றொன்று, பல்கலைக்கழக ஊதியம் அளித்து நியமனம் செய்யப்படும். இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள உயராய்வு மையங்களில் பல்கலைக்கழக நிதி மூலம் ஊதியம் அளிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பணியிடங்களில் நியமனம் மற்றும் நீக்கம் செய்வதற்கு ஆட்சிக் குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது' என்றார் மன்சூர்.பொன்னவைக்கோ மறுப்பு:இதுகுறித்து முன்னாள் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோவிடம் தொலைபேசி மூலம் கேட்டபோது அவர் கூறியது:"என்னுடைய பதவிக் காலத்தில் நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இதுபோன்ற பொருள்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதுதொடர்பாக, ஆட்சிக் குழுக் கூட்ட நிகழ்வு புத்தகத்தில் எந்தவிதக் குறிப்பும் இல்லை. இறுதியாக நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்திலும் என்னை வாழ்த்தி அனுப்புவதற்கான தீர்மானம்தான் நிறைவேற்றப்பட்டதே தவிர, எந்தப் பொருளும் கொண்டு வரப்படவில்லை. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு விதிமுறைப்படி, முழு நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கெüரவப் பேராசிரியர்கள், வருகைதரு பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 65 எனப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், உயராய்வு மையங்களில் அனுபவமிக்கவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு உள்பட்டவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும் என அரசாணையில் இல்லை. இந்த விதிமுறைகள் எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகம் செய்த தவறை மறைக்க என் பெயரைப் பயன்படுத்துகின்றனர்' என்றார் பொன்னவைக்கோ.
கருத்துக்கள்
பல்கலைக்கழக நல்கை ஆணையத்தின் விதிக்கேற்ப 65 அகவை வரை பணியில் இருக்கலாம். மத்தியப் பல்கலைக்கழகங்களில் 70 அகவை வரை பதவியில் இருக்கலாம். இந்தியா ஒரே நாடு என்றால் பணி அகவைத் தகுதியில் ஏன் பாகுபாடு? தமிழக அரசு விதிகளுக்கிணங்க ஓய்வு அகவை 58. ஆனால், இ.ஆ.ப. (/இ.கா.ப.) அலுவலர்கள் 60 வரை உள்ளனர். அப்படியாயின் 58இலேயே அவர்களுக்கும் ஓய்வு வழங்க வேண்டும்க அல்லது 2 ஆண்டுகளுக்கான செலவை மத்திய அரசில் வாங்க வேண்டும். இ.ஆ.ப. அலுவலர்கள் ஓய்விற்குப்பின் தகவல் உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம் முதலான பல இடங்களில் பதவியில் இருக்கலாம் என்றால் கல்வியாளர்கள் இருக்க என்ன தடை? வேண்டிய பலரை வேலையில் அமர்த்துவதற்காக 11 கல்வியாளர்களை நீக்குகின்றார்களா? தகுதியின் அடிப்படையில் பணி நியமனங்கள் இருக்க வேண்டும் என விழிப்புடன் செயல்படலாமே தவிர கல்வியாளர்களை வீட்டிற்கு அனுப்புவது முறையல்ல.
கண்டனத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கண்டனத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2010 8:36:00 PM
9/4/2010 8:36:00 PM
ஓய்வு பெற்ற பின்னரும் எப்படியாது இவர்கள் உயர்மட்டத்திலு ள்ளவர்கள் உதவியுடன் பதவியில் ஒட்டிக் கொண்டு விடுகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் எத்தனை இளைஞர்கள் உள்ளனர். அணைத்து பணப்பயன்களும் பதவிக் கு வந்தவர்கள் ஆனால் இவர்கள் ஒழுங்காக பணிசெய்வது கிடையாது முறையாக நியமிக்கபடாதவர்களை இவர்கள் சுரண்டி தங்கள் சாதனைகளாக காட் டிக் கொள்வார்கள். உயரதிகாரிகளுக்கும் தெரியும் இவர்கள் ஆதரவு தேவையை கருத்தில் கொண்டு அவர்களும் துணை போ கின்றனர்.
By Unmai
9/4/2010 8:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 9/4/2010 8:19:00 AM