வெள்ளி, 17 ஜூலை, 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 47:
மட்டுநகர் சிறையுடைப்பு!



தமிழர்களின் கடைகளையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்கு அடையாளம் காட்டியவரும், புத்தமத வெறியரும் தொழிற்சங்கத் தலைவருமான சிறில் மத்தியூதான் ராணுவ-சிங்கள வெறிக் கும்பலின் தமிழர் அழித்தொழிப்பு திட்டங்களின் "மூளை' எனப்படுபவர்.இந்த மத்தியூ பாராளுமன்றத்தில் புத்தமதப் பலாத்காரத்தை நியாயப்படுத்திப் பேசினவர் ஆவார்.""சிங்களவர்கள் பல வருடங்களாகவே தளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பான்மையான இனமாக இருக்கும்போது அவர்கள் ஏன் ஆசியாவிலும் பெரும்பான்மையராக இருக்கக் கூடாது'' என்று கூச்சலிட்டார்.சிங்கள இனவாத வெறியுடன் கூடவே பாசிச ஜெயவர்த்தனா அரசாங்கம் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடுத்த அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கடுமையான பலாத்காரத்துடன் ஒடுக்கியது. அதேசமயம் சிங்களவர்களின் அட்டூழியத்தைக் கண்மூடி மெüனியாகவே எதிர்கொண்டது.தமிழர் வாழும் பகுதியில் பீரங்கி வண்டிகளைத் தெருக்களில் நடமாடவிட்டும், ஹெலிகாப்டர்களைத் தாழ்வாகப் பறக்கவிட்டும் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.கொழும்புக்கு வெளியே பதின்மூன்று மாவட்டங்களில் ராணுவ சிவிலிய நடவடிக்கைகளை ஒன்றிணைக்க 10 மூத்த ராணுவ அதிகாரிகளையும், மூன்று உயர்மட்ட அதிகாரிகளையும் அரசு நியமித்தது.இலங்கையின் 13,000 பேர் கொண்ட இலங்கை ராணுவத்தில் பாதிக்கு மேல் யாழ்ப்பாணப் பகுதியில் மட்டுமே குவிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு நிற்க வைக்கக்கூடிய பகுதியாக அது மாற்றப்பட்டது.யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ராணுவ ஆட்சியாலும், நெருக்கடி நிலை சட்டங்களாலும் பலப்படுத்தப்பட்டதன் விளைவாக எவ்வித பின்விளைவு பற்றியும் பயமின்றி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவதில் சர்வ சுதந்திரமாகச் செயல்பட ராணுவம் அனுமதிக்கப்பட்டது. மேலும் பிரிவினை கோரும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்து ஓர் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.இக்கலவரத்தின் உச்சகட்டத்தில் அரசாங்கம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மக்களின் சடலங்களை, அவர்கள் யார் என்ற விவரம் தெரிவிக்காமல் புதைக்கவும், எரிக்கவும் அனுமதித்தது. லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமானது, இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பற்றி கருத்துக் கூறுகையில், இலங்கையில் செய்யப்பட்டிருக்கும் அரசியல் சட்டத் திருத்தம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சட்டங்களைக் காட்டிலும் மிக மோசமான சட்டமாகும் என்று கூறுகிறது.இச்சட்டத்தின்படி விசாரணை இன்றி 18 மாதம் சிறை வைக்கவும், விருப்பப்படி கைது செய்யவும், சந்தேகப்படும் யாரையும் மிக மோசமான சித்திரவதை வழிமுறைகளில் விசாரணை செய்யவும், நடைமுறையில் வரம்பில்லாத அதிகாரத்தை ராணுவத்திற்கு அளிக்கிறது.இவ்வளவு வன்முறைகளும், கொலைகளும், கொள்ளைகளும் நடத்தப்பட்ட ஜூலைக் கலவரம் சிங்களச் சிப்பாய்கள் 20 பேர் கொல்லப்பட்டதன் தொடர்நிகழ்வு என்று ஜெயவர்த்தன அரசும் வேறு சிலரும் பிரசாரம் செய்தார்கள்.ஆனால், தன்னை மறந்த நிலையில் ஜெயவர்த்தன ஜூலைக் கலவரத்தின் இரு வாரங்கள் கழித்து, பி.பி.சி நிருபருக்கு அளித்த பேட்டியில், ""இவ்வன்முறை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜூலை முதல் வாரத்தையடுத்து, கலவரத்தைத் தூண்டும் நோக்கில் தமிழருக்கு எதிரான உணர்வுடன் ராணுவம் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டது. இந்தச் செய்தியை வேண்டுமென்றே மறைத்துவிட்டார்கள்'' என்று கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.ஏககாலத்தில், லண்டனில் இருந்து வெளியாகும் "கார்டியன்' இதழ், சிப்பாய்களின் கட்டுக்கடங்காத செயல் என்னவென்று ஏராளமான படங்களுடன் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?பேருந்து நிலையம் சென்று 18-20 வயதுள்ள மாணவர்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றனர். பின்னர் ஒரு கிராமத்தில் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். அதன்பின்னர், அவர்கள் அனைவரும் முகாம் செல்லுமாறு உத்திரவு இடப்பட்டது.பின்னர், அதே சிப்பாய்கள் சாதாரண உடையில் திரும்பவந்து ஒவ்வொரு வீடுகளிலும் நுழைந்து சுட்டுத்தள்ளிக் கொண்டே, கையில் கிடைத்தப் பொருள்களையெல்லாம் வாகனத்தில் எடுத்துப்போட்டுக்கொண்டே சென்றனர்.இப்படிப்பட்ட வன்கொடுமை நடைபெற்ற பின்னர்தான் போராளிகள் இந்த இரக்கமற்ற சிப்பாய்களுக்குத் தண்டனை அளித்தனர் என்றும் "கார்டியன்' செய்தி வெளியிட்டிருந்தது(தகவல்: கு.வெ.கி.ஆசான், "ஈழ விடுதலைப் போர்' 1948-1996).இப்படுகொலைகள் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் இருவரும் "இலங்கையின் இனப்படுகொலைகள்' என்னும் தலைப்பில் கடிதம் எழுதியதுடன், அதை தகவல் தொடர்புச் சாதனங்களுக்கும் அளித்தனர்.வெலிக்கடைச் சிறைச்சாலையில் உயிர் தப்பிய 19 தமிழ் இளைஞர்களும் நிர்மலா நித்தியானந்தனும் ஜூலை 27-ஆம் தேதி இரவு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். வெலிக்கடைத் தாக்குதலின்போது படுகாயமுற்றிருந்த இக்கைதிகள் ராணுவ வீரர்களினால் பஸ்ஸிற்குள் குப்புறப்படுத்திருக்கும்படிக் கட்டளையிடப்பட்டனர். அங்கு காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் இழிவான வார்த்தைகளினால் ஈழப் போராளிகளை ஏசியதுடன் அவர்களைத் தாக்கியும் துன்புறுத்தினர்.வெறும் தண்ணீர்கூடக் கொடுக்கப்படாது அன்றிரவு முழுவதும் அங்கு வைத்திருக்கப்பட்ட இக் கைதிகள் மறுநாள் 28-ஆம் தேதி காலை மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு விமானப்படை விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர். விமானத்தில்கூட காயமுற்றிருந்த இக்கைதிகள் கீழே குனிந்தபடி இருக்குமாறு பணிக்கப்பட்டனர்.ஜூலை 28-ஆம் தேதியும் அதற்குப் பின்னரும் சிங்களப் பிரதேசங்களிலிருந்த ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 பேரும் மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போராளிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சமயம் அங்குள்ள புத்தவிகாரையில் கைக்குண்டுகள், பெட்ரோல், டயர் போன்றவை அங்கு முகாமிட்டிருந்த ராணுவத்தினரால் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.இவை மட்டுநகர்ச் சிறைச்சாலை உட்பட மட்டுநகரை எரிப்பதற்காகச் சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை மீண்டும் கொழும்பிற்கு மாற்ற சில நாள்களுக்குப்பின் அரசு முயற்சியெடுத்தது. சிங்கள அரசின் இம்முயற்சியை ஈழப் போராளிகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முறியடித்தனர்.இவர்கள் விடுதலைப் போராட்டத்தை வெளியே தொடர்வதற்காகவும் இனவெறி அரசு தம்மைக் கொல்வதற்கான முயற்சியைத் தவிடுபொடியாக்கும் எண்ணத்துடனும் செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு சுமார் 7.45 மணியளவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மக்கள் விடுதலைப் படையினரின் முன்முயற்சியால் மட்டுநகர்ச் சிறையைத் தகர்த்துப் புதிய வரலாறு படைத்தனர்.மொத்தம் சுமார் 60 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்து விடுதலைப் போராட்டத்தை மேலும் ஊக்கத்துடன் தொடர்ந்தனர். (சிறையில் இருந்த பிற விடுதலைக் குழுக்களும் இதில் இணைந்து பங்கெடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.) மட்டுநகர்ச் சிறையுடைப்புச் சம்பவமானது உலகின் சமீபகால வரலாற்றில் மிகப்பெரியது என்பதுடன், எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் கைது செய்யப்படாது தப்பிவிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.** -ஸ்ரீலங்கா, வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்-ஈழ மக்கள் செய்தி தொடர்பு வெளியீட்டிலிருந்து.
கருத்துக்கள்

Tamils life is now totally hanging on Singalise animals hands, India is giving weapon to kill tamils. India and China is not allowing world countries to save tamils. India, Chaina & Sri Lanka will pay price for tamils killings. God will punish the criminals.

By yogaraja
7/17/2009 1:08:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக