(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு ஈ – தொடர்ச்சி)
சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)
கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! 2/4
அதே நாளில், 44 பேர் இறப்பு தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது (30.11.1970). தீர்ப்பு வழங்கப்பட்ட போது, 23 எதிரிகளும் இருந்தனர். கீழ்வெண்மணியில் கோபாலகிருட்டிண நாயுடுவுக்கும் மற்ற 8 பேருக்கும் 10 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சட்ட விரோதக் கூடல், குற்றச் செயலில் ஈடுபடல், தீவைப்பு ஆகியவற்றுக்காகத் தண்டனை வழங்கப்பட்டது. கொலைமுயற்சிக் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, 7 பேருக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் கொலைக் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இவ்விரு அமர்வு வழக்குகளிலும் விசாரணை நடத்தியது ஒரே அமர்வு நீதியர்தான் என்றாலும், அவை இருவேறு வழக்குகளாக விசாரிக்கப்பட்டன. முதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் இரண்டாம் வழக்கில் சாட்சிகளாயினர். இதேபோல், இரண்டாம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் முதல் வழக்கில் சாட்சிகளாயினர். குறிப்பாகக், கீழ்வெண்மணி வழக்கில் முதல் குற்றவாளியான கோபாலகிருட்டிண நாயுடு பக்கிரிசாமி கொலை வழக்கில் முதல் சாட்சியாக இருந்தார்.
அமர்வு நீதிமன்றத்தால் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கோபால், 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இராமையா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் (Crl.A.No.23/1971). கீழ்வெண்மணி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் அவர்களின் குற்ற நிரூபணத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர் (Crl.A.No.1208/1970). உள்ளபடியே, அவர்களின் மேல்முறையீடு கோபால் வழக்குக்கு முன்பே செய்யப்பட்டது. இதேபோல், கீழ்வெண்மணி வழக்கில் விடுவிக்கப்பட்டோருக்கு எதிராக அரசின் மேல்முறையீடும் கீழ்வெண்மணி வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டுக்கு முன்பே செய்யப்பட்டது. விளக்கவியலாக் காரணங்களால் முந்தைய மேல்முறையீடு பட்டியலிடப்படவில்லை. மறுபுறம், பக்கிரிசாமி கொலைக் குற்ற வழக்கு மேல்முறையீடு (Crl.A.No.23/1971) கே. என். முதலியார், இராகவன் ஆகியோர் அடங்கிய இரட்டை நீதியர் ஆயத்தின் முன்பு முதலில் பட்டியலிடப்பட்டது. குற்றவியல் வழக்குகளில் மிகவும் கண்டிப்பானவர் எனப் பெயர் பெற்றவர் நீதியர் கே.என். முதலியார். இந்தக் காரணங்களால்தான் கீழ்வெண்மணி மேல்முறையீடுகள் விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லையோ, என்னவோ?
அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை இரட்டை நீதியர் ஆயம் உறுதி செய்தது. கோபாலுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் இராமையாவுக்கு 5 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்தது. அஃது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்றது. அவர்களுக்காக இடதுசாரி வழக்குரைஞர் ஆர்.கே. கார்க்கு வாதாடினார். உச்ச நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை 13 ஆண்டுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தள்ளுபடி செய்தது.
மேல்முறையீட்டை விசாரித்த நீதியர்கள் அதனைச் சாதாரணக் குற்றவியல் மேல்முறையீடு போல் விசாரித்தனர். உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள ஓட்டைகளை விளக்கி, உயர் நீதிமன்ற முடிவுகளில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கல் தொடர்பான பிரச்சினையிலாவது ஈடுபாடு காட்டி, ஏற்கெனவே கழிந்த தண்டனைக் காலத்தை ஒரே தண்டனையாகக் கருதி, அவர்களை விடுவித்திருக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போது, உச்ச நீதிமன்றம் அப்படிச் செய்ய மறுத்து, பின்வருமாறு கருத்துக் கூறியது: –
“திரு கார்க்கு எம்முன் கடைசியாக முன்வைத்த வாதுரை என்னவென்றால், ஏ-1, ஏ-2 ஆகியோர் ஏற்கெனவே அனுபவித்து விட்ட தண்டனையைக் கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றம் அவர்களின் மீதத் தண்டனைக் காலத்தை நீக்கி விட வேண்டும் என்பதே. திரு கார்க்கு முன்வைத்த இந்த வாதுரையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக, மகாராட்டிரா அரசு-எதிர்-மேயர் ஃகேன்சு சியார்சு, ஏஐஆர் (1965) எசு.சி 722 வழக்கில் தெரிவிக்கப்பட்ட பார்வைகளை இங்கே குறிப்பிடலாம்:
”உச்ச நீதிமன்றத்தின் நிலைபெற்ற விதியின்படி, கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனையில் ஏதும் சட்டவிரோதத் தன்மையோ, ஏதும் கொள்கைச் சிக்கலோ இருந்தாலோ ஒழிய, அதில் இந்நீதிமன்றம் குறுக்கிடாது.”
“இங்கு நாம் ஏற்கெனவே கூறியது போல், எதிரிகள் 1, 2 ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறிவுக்குகந்த எவ்வித ஐயத்துக்குமிடமின்றி நேரில் கண்கண்ட சாட்சிகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் அவர்கள் மீதான தண்டனையைக் கீழமை நீதிமன்றங்கள் உறுதிசெய்தன. இந்தியத் தண்டனைச் சட்டம் 302, 364 பிரிவுகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளவாறு, அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கும் பொருண்மையில் சட்டவிரோதத் தன்மையோ கொள்கைச் சிக்கலோ எதுவும் இல்லை. எனவே கீழமை நீதிமன்றங்கள் விதித்த தண்டனையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.”
(1986 (2)) SCC 93)
ஆனால் கீழ்வெண்மணிக் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடைப்பிடித்த அணுகுமுறை எவரையும் கொதிப்படையச் செய்யும். புலனாய்வு செய்தது சென்னை மத்தியக் குற்றவியல் பிரிவு என்றாலும், நீதியர்கள் புலனாய்வில் குறை கண்டு, அமர்வு நீதிமன்றத் தீர்ப்பையும் குற்றாய்வு செய்தனர்.
கீழ்வெண்மணிக் கொலை மேல்முறையீடு வேறு இரு நீதியர் ஆயத்துக்குச் சென்றதைத் தெரிந்து கொண்ட உயர் நீதிமன்ற அரசு வழக்குரைஞர் ஆயத்துக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். பக்கிரி கொலை, 44 பேர் கொல்லப்பட்ட கீழ்வெண்மணிக் கொலை ஆகியவற்றை ஒரே அமர்வு நீதியர் விசாரித்து, தண்டனை உறுதி ஆணையிட்டதாக அவர் கூறினார். இரு வழக்குகளிலும் பல சாட்சியங்களும் எதிரிகளும் பொதுவாக உள்ளதாகக் கூறினார். எனவே பக்கிரிசாமி கொலை வழக்கு மேல்முறையீட்டை விசாரித்த அதே இரு நீதியர் ஆயம் கீழ்வெண்மணி கொலை வழக்கு மேல்முறையீட்டையும் விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால் நீதியர்கள் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து, அதற்கு விசித்திரமான காரணம் கூறினர்:
“குற்ற எண் 327/1968 தொடர்பான குற்றங்களைப் பொறுத்த வரை, அமர்வு நீதிமன்ற வழக்கு எண்கள் 80/1969, 26/1970 ஆகியவற்றில் எதிரிகளாகச் சேர்க்கப்பட்ட இருபத்துமூன்று மிராசுதாரர்கள் பற்றி மட்டுமே நாங்கள் கவனம் கொள்கிறோம். இதனுடன் இணைந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்ட்ட பெரும்பாலான உழவர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட மிராசுதாரருக்கு எதிரான இந்த வழக்குகளில் அரசுத் தரப்பு சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
“இரு வழக்குத் தொகுப்புகளையும் தனித் தனியாக விசாரித்து, இரு வழக்குகளிலும் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் நல்வாய்ப்பு ஒரே அமர்வு நீதியருக்கு இருந்துள்ளது. இரு வழக்குத் தொகுப்புகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிரான குற்றவியல் மேல்முறையீடுகளை ஒரே ஆயம் விசாரித்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். வெவ்வேறான நிகழ்ச்சிகள் நடந்த வரிசையை இன்னுமெளிய கோணத்தில் பார்க்கும் வாய்ப்பு நீதிமன்றத்துக்குக் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும். நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான சரியான பார்வைக் கோணத்தையும், அவை எந்தக் காலவரிசையில் நடந்திருக்க வேண்டும் எனபதையும் நீதிமன்றத்துக்கு வழங்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்ட மதிப்புமிகு அரசு வழக்குரைஞருக்கும் எதிர்தரப்பு வழக்குரைஞருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.”
மாநில முதலமைச்சருக்கு 11.04.1968 அன்று நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக முதல் எதிரி கோபாலகிருட்டிண நாயுடு எழுதிய கடிதத்தைத் தீர்ப்புரை விரிவாக மேற்கோளிட்டுக் காட்டுகிறது. தட்டச்சிட்ட 95 பக்கத் தீர்ப்பில் முதல் எதிரியின் கடிதம் 3 பக்கங்களில் இடம்பெற்றது. அக்கடிதத்திலிருந்து நீதியர்கள் மேற்கோள் காட்டிய பகுதி பின்வருமாறு:
“மிராசுதாரர்களின் முறைப்பாடு என்னவென்றால், இவ்வாறான ஒவ்வொரு சந்திப்பிலும் தொழிலாளர்களுக்குக் கொஞ்சம் சலுகை வழங்க வேண்டும், இது தொழிலாளர் தலைவர்களின் மாண்பு உயரச் செய்யும். இந்தத் தலைவர்களின் நோக்கம் பஞ்சத்தை, அதாவது “மாவோயிசத்தின் நாற்றங்காலை”த் தோற்றுவிப்பதாகும் என்கிறார். உண்மையில் சென்னை மாநில முதலமைச்சருக்கு முதல் எதிரி 11.04.1968 அன்று எழுதிய கடிதத்தில் (தட்டச்சுத் தொகுதி 2, பக்கம் 64), இந்த முறைப்பாடு இடம்பெற்றுள்ளது…”
முதல் எதிரியின் மேல்முறையீட்டையும் நீதியர்கள் பின்வருமாறு குறிப்பிட்டனர்:
“மேல்முறையீட்டு விண்ணப்பர் தன சொந்தப் பாதுகாப்பு குறித்தும் தன் குடும்பத்தார் பாதுகாப்பு குறித்தும் அஞ்சுகிறார். அவர் இப்போதெல்லாம் வலி சுமந்து வாழ்வது போன்ற நிலைதான். தனக்கு எதிராகத் திட்டமிட்ட வன்முறையலை உயர்ந்து வருவதை சட்டம-ஒழுங்குப் பாதுகாப்புப் படை எதிர்த்துத் தடுக்கவில்லை என்றால் தன் உயிர் பறிபோகும் என்று அவர் அச்சப்படுகிறார். எனவே அவர் மாண்புமிகு முதலமைச்சரின் மதிப்பும் சிறப்புமான தலையீடு வேண்டி தாழ்மையுடன் முறையீடு செய்கிறார்.”
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 293