வெள்ளி, 29 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!-தொடர்ச்சி)

பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்

இனிய அன்பர்களே!

மதுரையைக் கதைக் களனாகக் கொண்டு, மா-இலெ தோழர்களை முதன்மைக் கதை மாந்தர்களாகக் கொண்டு, 1980களைக் கதைக் காலமாகக் கொண்டு அன்பர் சாம்ராசு படைத்துள்ள புதினம் கொடை மடம்.

இறுதியாகப் பெயர் கொடுப்பதற்கு முன்பே இந்தப் புதினத்தைச் சாம்ராசு எனக்குப் படிக்கத் தந்தார். அது சரியான அலைச்சல் நேரம் என்றாலும் சிலநாளில் படித்து முடித்தேன். எடுத்தால் கீழே வைக்க முடியாத இலக்கியச் சுவை! சாம்ராசு நகைச்சுவை உணர்வில் சரியான ‘லந்துக்காரர்’ என்பது அவரோடு பழகும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான்! எள்ளலும் துள்ளலுமான அவரது எழுத்து நடை மீது எனக்குள்ள மதிப்பையும் வியப்பையும் இந்தப் புதினம் பெரிதும் உயர்த்தி விட்டது.

கதைக்கு நடுவே அவர் கோத்துள்ள (‘கோர்த்துள்ள’ என்பது பிழை) முத்து முத்தான உபகதைகளில் ஒன்றைத் தாழி மடலில் (321) வைகை தன்னை ஆறு என உணர்ந்த வேளை என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தேன்.

கூடல் மாநகரை உயிர்ச் சித்திரமாகத் தீட்டும் இந்தப் புதினத்துக்குக் கொடை மடம் என்ற தலைப்பை அகழ்ந்தெடுத்துக் கொடுத்தவர் சாம்ராசின் தோழர்களில் ஒருவரான இசை. அன்பர் சாம்ராசு பெருஞ்செல்வந்தர் – அத்துணைச் சொத்து! அத்தனையும் அருமையான நண்பர்கள்! எடுத்த காரியம் யாவற்றிலும் (‘யாவிலும்’ எனபது பிழை) கைகொடுத்து நிற்பவர்கள்! அவருக்கென்றால் அவர் வழியாக எனக்கும்!

இசை தேடிக் கொடுத்த தலைப்பு ஒரு புறநானூற்றுப் பாடலில் வேர் கொண்டிருப்பது கருத்துக்குரிய செய்தி:

புறநானூறு – 142

         கொடைமடமும் படைமடமும்

பாடியவர்: பரணர்
பாடப்பட்டவர்: வையாவிக் கோபெரும் பேகன்
திணை: பாடாண்
துறை: இயன்மொழி

“அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரிபோலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான் பிறர் படைமயக் குறியோனே.”

அரசன் பேகன் வீரக் கழல் அணிந்த தன் கால்களால் யானைக் கடாவை அடக்கி ஆள்பவன். மழையானது நீர் இல்லாக் குளத்தில் பெய்ய வேண்டும். வயலில் பொழிய வேண்டும். அவ்வாறன்றி களர்நிலத்திலும் பொழிவது போல வள்ளல் பேகன் கொடை வழங்குவதில் ஒரு மடையனாக விளங்குபவன். ஆனால் போரின் போது மடமை இல்லாதவன். நல்லவர்களை விலக்கி அல்லாதவர்களைக் கொல்பவன்.

புறநானூற்று பேகனைப் புதுமக் காலத்து மா-இலெ தோழர்களுடன் ஒப்பிட்டுக் காட்ட விரும்புகின்றாரா சாம்ராஜ்? எதில் ஒப்பிடுவது? களர்நிலத்தில் பெய்த மழை போல் அவர்களின் ஈகம் வீணாகி விட்டது என்பதிலா? நல்லவர்களை விலக்கி அல்லாதவர்களைக் கொல்வதிலா? இந்த ஆய்வு தொடக்கக் கால ‘நக்சல்’களில் ஒருவனாகிய எனக்குள் சில வினாக்கள் எழுப்பிற்று. அடுத்தடுத்து எழுதுகிறேன்.

1973ஆம் ஆண்டு மதுரையைச் சின்னாபின்னமாக்கிய அந்த மழை வெள்ளம் பற்றிய சாம்ராசின் எழுத்தைப் பகிர்ந்து இன்று முடித்துக் கொள்கிறேன்:

“வைகை எப்போதாவது தன்னை ஆறு என உணர்ந்து வெள்ளமாகப் பெருக்கெடுப்பதுண்டு.”

மதுரைக்கு நடுவே ஒரு மலைப்பாம்பாக நெளிந்து கிடக்கும் வைகையை ஆறு என மதுரைக்காரர்களாவது உணருவதுண்டா? மதுரைக்கு அடிக்கடி போய்வரும் என்னைப் போன்றவர்களாவது உணருவதுண்டா? நாம் இயற்கையின் படைப்புகளையும் அவற்றின் ஆற்றலையும் உணரத் தவறும் போது இயற்கை சீறியெழுந்து தன்னை உணர்த்திக் கொள்வதாகச் சொல்கிறீர்களா சாம்ராசு?

தோழர் தியாகு
தாழி மடல் 414

(தொடரும்)

வியாழன், 28 டிசம்பர், 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 86-90

86. Abetment of assaultதாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை
 
திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித்,   தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும்.  

தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது.

  தாவு/தாக்கு  பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான assiliō  இருந்து assault உருவானது. மக்கள் பேச்சு வழக்கில் assault என்றால் அலட்சியம் என்று பொருள் கொண்டு பயன்படுத்துகின்றனர்.
87. Abetment of desertion of soldier, sailor or airman.தரைப்படை, கப்பற்படை, வான்படை விரர்கள் வெளியேறத் தூண்டுதல்  

முப்படையைச் சேர்ந்தவர்களைத் தம் பணிப்பொறுப்புகளைக் கைவிட்டு ஓடுவதற்குத் தூண்டுதலாக இருப்பது இ.த.ச. பிரிவு 135 இன் கீழ் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத்தொகை விதிப்பு அல்லது இரண்டுமான தண்டனைக்குரிய குற்றமாகும்.
88. Abetment of escape of persons arrestedதளையிடப்பட்டவர்கள் தப்பியோட உடந்தை  

கைது செய்யப்பட்டவர்கள் தப்பிச் செல்வதற்குத் தூண்டுதலாகவோ உடந்தையாகவோ இருப்பவர்களும் குற்றவாளிகளே.
89. Abetment of insubordinationகீழ்ப்படியாமைக்கு உடந்தை  

கீழ்ப்படியாமை என்பது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதைக் குறிக்கிறது. இ.த.ச.பிரிவு 138 இது குறித்துக் கூறுகிறது.   

தரைப்படை, வான்படை, கப்பற்படையைச் சேர்ந்த எந்த ஒருவரும் பணிப்பொறுப்பிலிருந்து தப்பி ஓடினால்,- பணியைக் கைவிட்டு ஓடினால், அத்தகைய செயலுக்கு உடந்தையாக இருப்பவரும் தண்டனைக்குரியவரே.  

படைஞர், மேலலுலவர்களின் அல்லது படைத்துறையின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பதற்குத் தூண்டுதலாக அல்லது உடந்தையாக இருப்பவர், 6 மாதம்வரையிலான  சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது இரண்டும் விதிக்கப்படுவதற்கு உரியவர்.
90. Abetment of mutinyகலகத்தைத் தூண்டுதல்  

படைஞர் அல்லது படைத்துறை அலுவலர் தம் பணியிலிருந்து கடமை தவற ஈர்ப்பவர் அல்லது கலவரம் செய்யத் தூண்டுபவர், வாணாள் சிறைத்தண்டணைக்கு அல்லது பத்தாண்டு வரையிலான தண்டனையும் ஒறுப்புத்தொகையும் விதிப்பதற்கு உரியவராவார்(இ.த.ச.பிரிவு 131).  

இத்தூண்டுதலால் கலகம் நேர்ந்தது எனில் அதற்குக் காரணமானவர், மரணத்தண்டனை அல்லது வாணாள் தண்டனை அல்லது பத்தாண்டுகாலத் தண்டனை அல்லது சிறைத்தண்டனையுடன்   ஒறுப்புத்தொகையும் தண்டனையாக விதிப்பதற்குரியவராவார். (இ.த.ச.பிரிவு 132)  

mutiny  என்றால் ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சி, படைவீரர் கலகம், கலகம், கிளர்ச்சி, கலவரம், சட்டப்படியான அதிகாரத்தை வெளிப்படையாகப் புறக்கணிக்குங் கலகம், படைத் தலைவர்களுக்கு எதிரிடையாகப் படைவீரர்கள் செய்யுங் கலகம் எனப் பலவாறாகக் கூறப்படுகிறது. இங்கே படைஞர்கள் செய்யும் கலவரத்தைக் குறிக்கிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

புதன், 27 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!

 




(தோழர் தியாகு பகிர்கிறார் : (இ)யூத இசுரேலும் இந்து இந்தியாவும்- தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பெத்தலகேம் – கீழவெண்மணி:

மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!

இன்று கிறித்து பிறப்பு நாள். சமயப் பண்டிகை எதுவும் நான் ஒருபோதும் கொண்டாடியதில்லை. கிறித்து பிறப்பு நாள் பற்றிப் பெரிதாக நினைப்பதும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு கிறித்துநாதர் பிறந்த பெத்தலகேம் பற்றி எண்ணாமலிருக்க முடியவில்லை. உலகம் எங்கும் கிறித்துமசு கொண்டாடப்படுகிறது என்றாலும் இந்தக் கொண்டாட்டத்தின் உச்ச மையம் பெத்தலகேம்தான். ஆனால் அந்தத் திருத்தலம் பண்டிகை கொண்டாடும் நிலையில் இல்லை. பாலத்தீனத்தில் இசுரேல் நடத்தி வரும் அழிவுப் போர் பெத்தலகேமையும் விட்டு வைக்கவில்லை.

பாலத்தீனத்தின் பெத்தலகேம் நகரம். ‘மிகவும் மோசமான கிறித்துமசை’ எதிர்கொள்கிறது, ஏனெனில் இசுரேல் போர் சுற்றுலாப் பயணிகளையும் வழிபட வருவோரையும் அச்சுறுத்துகிறது என்று கடந்த சில நாட்களாகவே செய்திகள் வருகின்றன. சீயோனியர்களின் வன்பறிப்புக்கு உள்ளான மேற்குக் கரையில் அமைந்த பெத்தலகேமில் எவாஞ்சலிக்கல் (உ)லூத்தரன் தேவாலயத்தில் இயேசுநாதர் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து கிடக்கும் காட்சியை ஒரு பெண் உருவாக்கியுள்ளார்.

இந்த முறை மட்டுத்தொழுவதில் கட்டட இடிபாடுகளில் குழந்தை இயேசு கிடக்கிறார். அவரது உடை பாலத்தீனர்களுக்கே உரியது. பாலத்தீனத்தில் இசுரேல் நடத்தி வரும் இனவழிப்பில் படுகொலை செய்யப்படும் பல்லாயிரம் குழந்தைகளுக்கு இந்தக் குழந்தை இயேசு ஒரு குறியீடு மட்டுமே.

சனவரி 25 வெண்மணி நாள். என்னைத் தீவிரமான பொதுமை இயக்கத்துக்கு, அதிலும் ஆய்தப் போராட்ட இயக்கத்துக்கு உந்திய ஒரு நிகழ்வு. கீழவெண்மணியில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட அந்தக் கொடுமைதான். அதற்குப் பழிதீர்க்கும் வனமத்துடன்தான் வீட்டையும் படிப்பையும் துறந்து புரட்சிக்கு வந்தேன். எத்தனையோ மாற்றங்களுக்கு இடையே அந்த வன்மத்தை மட்டும் நான் தணித்துக் கொள்ளவே இல்லை.

சாதி ஒழிப்பு, அதற்கு வழிகோலும் தமிழ்த் தேசிய விடுதலை என்ற இலக்குகளை அடையும் வரை இந்த வன்மத்தை அடைகாத்து வருவேன். அன்று சில பகைவர்களைக் குறிவைத்து அழித்தொழிப்புக்காகப் புறப்பட்டேன். இன்று சாதி ஒழிப்புக்கும் தேசிய விடுதலைக்கும் பகையாக நிற்கும் இந்திய அரசக் கட்டமைப்பை அழித்தொழிப்பதையே இலக்காகக் கொண்டு இயங்குகிறேன். சரியாகச் சொன்னால் இயங்குகிறோம். நம்மை அடக்கியாளும் இந்திய வல்லரசியத்தை ஒழிக்காமல் சாதியொழிப்பு வெறுங்கனவே.

இயேசு நாதர் உயிர்த்தெழுக! பாலத்தீன மக்களின் விடுதலைக்கு வழிகாட்டுக! இசுரேலியக் குண்டுவீச்சில் கொல்லப்படும் ஒவ்வொரு பாலத்தீனக் குழந்தையும் ஓர் இயேசுதான். இவர்கள் அனைவருமே உயிர்த்தெழுவார்கள். விடுதலைக் கனவு மெய்ப்படச் செய்வார்கள்.

வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டு வருவார்கள்! தம்மை எரித்த நெருப்பை ஏந்தி வருவார்கள்! வகுப்புச் சுரண்டலையும் சாதி அடிமைத்தனத்தையும் சுட்டெரிப்பார்கள்.

(பெத்தலகேம், வெண்மணி ஆன்மாக்களை இதயமேந்தும் இந்த நாளில் சென்னையில் அன்புக்குரிய சாம்ராசின் புதினம் ‘கொடைமடம்‘ கவிக்கோ அரங்கில் வெளியிடப்பட்டது. வெளியிடும் பெருமையை எனக்குத் தந்தனர். )

தோழர் தியாகு
தாழி மடல் 415

(தொடரும்)

செவ்வாய், 26 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : (இ)யூத இசுரேலும் இந்து இந்தியாவும் – பேராசிரியர் இராசன் குறை

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மதத்துக்கு ஒரு தேசம் என்ற பிற்போக்கான கொள்கையின் அடிப்படையில் பாலத்தீன மண்ணில் திணிக்கப்பட்ட (இ)யூத தேசம்! இதுதான் இசுரேல்-பாலத்தீனப் பூசலுக்கு அடிப்படைக் காரணம்! தேசத்துக்கு மதத்தை அடிப்படையாகக் கொள்வது இன்றைய உலகில் படுபிற்போக்கானது! தேசம் எதுவானாலும் சரி! மதம் எதுவானாலும் சரி! இந்தியாவை ‘இந்து இராட்டிரம்’ ஆக்கத் துடிப்பவர்கள் குறித்து நமக்கு இசுரேல் ஓர் எச்சரிக்கை! இசுரேலின் புராணப் பின்னணியை விளக்கியும், இந்தியாவில் சாவர்க்கரின் ஆர்எசுஎசு இந்துத்துவம் திணிக்க முற்பட்டுள்ள ‘இந்து இராட்டிர’த்துடன் அதனை ஒப்பிட்டும் பேராசிரியர் இராசன் குறை அவர்கள் எழுதியுள்ள தெளிவான கட்டுரையைத் தாழியில் நன்றியுடன் பகிர்கிறேன். –

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

பேராசிரியர் இராசன் குறை எழுதுகிறார்…

மத அடையாளத் தேசம்: உருவாகி விட்ட (இ)யூத இசுரேலும்
இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்

அறுபதுகள், எழுபதுகளில் கோடை விடுமுறை என்றால் ‘டென் கமாண்ட்மென்ட்சு’ (Ten Commandments, 1956) திரைப் படத்தைத் திரையரங்குகளில் திரையிடுவார்கள் – பள்ளி மாணவர்களைப் பெற்றோர் கூட்டிச் செல்வார்கள் என்பதால்.

எகிப்தில் அடிமைகளாக இருந்த (இ)யூதர்களை மோசசு கடவுளின் துணையுடன் விடுவித்து அவர்களுக்குக் கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலமான இசுரேலுக்கு கூட்டிச் செல்வதுதான் கதை. மோசசு குழந்தையாக ஆற்றில் விடப்பட்டு எகிப்து இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு, அரச குடும்பத்தில் வளர்வார், கருணனைப் போல!

பின்னர் உண்மை வெளிப்பட்டு, நாட்டை விட்டுத் துரத்தப்படுவார். அலைந்து திரிந்து சினாய் மலையில் ஏறிக் கடவுளின் குரலைக் கேட்பார். கடவுள் கட்டளைப்படி எகித்து சென்று மன்னருடன் வாதாடி, பலவித உற்பாதங்களைத் தோற்றுவித்து, பெருந்திரளான அடிமைகளுடன் வெளியேறுவார். அவர்கள் செங்கடலை நெருங்கும் போது மன்னனின் படைகள் துரத்திக் கொண்டு வரும். மோசசு கோலை உயர்த்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிடும். இந்தக் காட்சிக்கு அரங்கில் பெரும் கரவொலி எழும்பும். அந்தக் கடல் பிரிந்து கொடுத்த வழியில் (இ)யூதர்கள் கடந்து அக்கரை சென்ற பின், துரத்திக் கொண்டு வரும் மன்னனின் படைகள் அதில் இறங்கியவுடன் கடல் மூடிக் கொண்டு அவர்களை மூழ்கடித்து விடும்.

இப்படியாகத் தப்பி வந்த மக்களுக்கு மோசசு மூலமாகப் பத்து கட்டளைகளைக் கடவுள் கொடுப்பார். அதன்படி வாழ்ந்தால் அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு நிலத்தைத் தருவதாகக் கூறுவார். அப்படி வாக்களிக்கப்பட்ட நிலம், Promised land என்பதுதான் இசுரேல் என்று இப்போது அழைக்கப்படும் பாலசுதீனம் என்பது புராணம், நம்பிக்கை.

(இ)யூதர்களின் தோரா, பைபிள் உள்ளிட்ட மத நூல்களில் குறிப்பிடப்படும் இந்தக் கதைக்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது. கிடைத்துள்ள வரலாற்று ஆதாரங்களின்படி சிந்தித்தால் அப்படியெல்லாம் நடந்திருக்கும் சாத்தியம் அதிகமாக இல்லை. ஆனால், ஏசு கிறித்து பிறந்த நேரத்தில், கிறித்துவ மதம் தோன்றிய நேரத்தில் (இ)யூதர்கள் பாலத்தீனத்தில் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. கிறித்து பிறப்புக்கு பிறகான நானூறு, ஐந்நூறு ஆண்டுக் காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி ஐரோப்பா முழுவதும் பரவிப் பல்வேறு நாடுகளில் வசிக்கத் தொடங்கினார்கள். பாலத்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்கள் பெருமளவு இசுலாமிய மதத்தைத் தழுவினார்கள்.

பொது ஆண்டு 500 முதல் பொது ஆண்டு 1900 வரை பல்வேறு நாடுகளில் வாழ்ந்த (இ)யூதர்கள் பாலத்தீனம்தான் சொந்த ஊர் என்று எண்ணி வந்தார்கள் என்று கிடையாது. அவர்கள் குடியேறிய நாடுகளில் வருத்தகம் செய்தும், வட்டித் தொழில், வங்கித் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டும் வாழ்ந்தார்கள். ஆனால் இவர்களுக்கும் பொதுச் சமூகத்துக்கும் இடைவெளியும், முரண்பாடுகளும் நிலவி வந்ததும், (இ)யூதர்களுக்கு எதிரான வன்முறை, சமூக விலக்கம், கட்டாய வெளியேற்றம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்ததும் உண்மைதான். இதன் உச்ச கட்டமாகத்தான் இட்டிலரால் இலட்சக்கணக்கான (இ)யூதர்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் இரண்டாம் உலகப் போர் நேரத்தில் நிகழ்ந்தது.

புராணத்தை வரலாற்றாக்கிய தீர்வு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே (இ)யூதர்களுக்கென ஒரு நாடு தேவை என்ற எண்ணம் உருவாகத் தோன்றியது. கடவுள் எஃகோவாவால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி எனப்படும் இசுரேல்/பாலத்தீனம்தான் அது என்ற சிந்தனையும் உருவானது. இந்தச் சிந்தனையால் பல்வேறு நாடுகளில் வசிக்கும் (இ)யூதர்களுக்கும் அவர்கள் பல தலைமுறைகளாகப் பார்த்தே இராத, நினைத்தே இராத பாலத்தீனம் அவர்களது சொந்த ஊர், உரிமையுள்ள நிலம் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதன் உச்சமாகத்தான் இசுரேல் என்ற நாடு இங்கிலாந்தால் உருவாக்கப்பட்டதும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் (இ)யூதர்களுக்கு அந்த நாட்டுக்குத் “திரும்பி வரும் உரிமை” (Right to Return) வழங்கப்பட்டதும் நடந்தது. அஃதாவது எத்தனையோ தலைமுறைகளாக ஃபிரான்சிலோ, அமெரிக்காவிலோ வாழ்ந்து வரும் வம்சாவழியைச் சேர்ந்த (இ)யூதர் ஒருவர் இசுரேலுக்குச் சென்று குடியேற நினைத்தால் அது ‘திரும்பிச் செல்வதாக’க் கருதப்படும்.

இந்த முரண்பாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இலங்கையின் மலையகத் தமிழர்களை யோசித்துப் பாருங்கள். அவர்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யத் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களின் வம்சாவழிகள்தான். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குத் ‘திரும்பி வரும் உரிமை’ கோர முடியுமா? சாத்திரி- சிரிமாவோ 1964 ஒப்பந்தத்தின்படி திரும்ப வர ஏற்கப்பட்டவர்களிலேயே பலர் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னும் குடியுரிமை இல்லாமல் அவதிப்பட்ட கதை பேசப்பட வேண்டியது. இப்படி நன்றாக அறியப்பட்ட வரலாற்றில் இடம்பெயர்ந்தவர்களின் சந்ததியருக்கே திரும்பி வரும் உரிமை இல்லாத போது, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சென்றிருக்கலாம் என யூகிக்கப்படுபவர்களின் சந்ததியருக்கு ‘திரும்பி வரும் உரிமை’ வழங்குவது எவ்வளவு முரண்பாடானது!

இசுரேல் நாட்டினை எதிர்க்கும் சனாதன (இ)யூதர்கள்
சனாதனம் என்றால் மாறாதது என்று பலரும் கூறுவதை சமீப காலங்களில் கேட்டுள்ளோம். அதனால் மாற்றங்களை விரும்பாதவரை சனாதனி என்கிறோம். பொதுவாக இவர்கள் பிற்போக்காளர்களாக இருப்பார்கள். ஆனால், (இ)யூதர்கள் விடயத்தில் ஒரு சுவாரசியமான முரண் ஏற்படுகிறது. (இ)யூத மத நம்பிக்கையில் ஒரு பகுதி கடவுளின் கட்டளைகளை (இ)யூதர்கள் பின்பற்றாததால், அவர்களுக்குத் தருவதாகச் சொன்ன பூமி வழங்கப்படவில்லை என்பதாகும். அதனால் அவர்கள் பல்வேறு நாடுகளிலும் வாழ்வதுதான் சரியே தவிர, தங்களுக்கென ஒரு நாடு என இசுரேலை உருவாக்கியதும், அந்த நிலத்திலிருந்து பாலத்தீனியர்களை அகற்றியதும் தவறு என்பது சனாதன (இ)யூதர்களில் ஒரு பிரிவினரின் கருத்து.

(இ)யூதர்களின் சம்பிரதாயப்படி ஆண்கள் தாடி வளர்த்து கறுப்பு ஆடையும், கறுப்புத் தொப்பியும் அணிய வேண்டும். அவ்வாறு மத வழக்கத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் சனாதன (இ)யூதர்கள் இசுரேலுக்கு எதிராகப் பதாகைகள் ஏந்தி நியூயார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை நான் பலமுறை கண்டுள்ளேன். நீங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம். பல நேரம் இவர்கள் ‘JEWS AGAINST OCCUPATION’ என்ற பதாகையையும் பிடித்திருப்பர். அதாவது இசுரேல் நாடு என்பது பாலத்தீனியர்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதே பொருள். கீழேயுள்ள படத்தில் தோரா என்ற (இ)யூதர்களின் புனித நூல் பாலத்தீனம் முழுவதையும் பாலத்தீனியர்களின் இறையாண்மைக்கு விட்டு விட வேண்டும் எனக் கூறுவதாக ஒரு பதாகையை ஏந்தியுள்ளதைக் காணலாம்.

இந்தியாவில் சனாதனிகள் இப்போது மிகுந்த ஆவேசத்துடன் சனாதன எதிர்ப்பாளர்களைக் கண்டித்துப் பேசுகிறார்கள். சனாதனம் என்றால் அது வருணாசிரம தருமம் அல்ல, தீண்டாமை அல்ல என்று சொல்கிறார்கள். அவர்களெல்லாம் இது போல “நாதி மறுப்பே சனாதனம்”, “வருண பேதம் கடவுளுக்கே அடுக்காது”, “உங்கள் சாதிக்குள் திருமணம் செய்யாதீர்கள்”, “சாதிக்குள் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்துவது அதர்மம்”, “பார்ப்பனர்கள் யாருக்கும் உயர்ந்தவர்கள் அல்லர்”, “சனாதனம் சாதீயத்தை எதிர்க்கிறது”, “தீண்டாமை என்பது கொடிய பாவம்” என்றெல்லாம் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு ஊர்வலம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதுவும் விபூதி, திருமண் முதலிய சின்னங்களை நெற்றியில் அணிந்து, குடுமி வைத்தவர்கள் இப்படியெல்லாம் பதாகைகளை ஏந்தி வந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் இவர்கள் செய்வதில்லை. சனாதனம் என்றால் இதுதான், சனாதனம் என்றால் அதுதான் என்று வாயினால் பசப்புகிறார்களே தவிர, திட்டவட்டமாகக் களத்தில் இறங்கி சாதி மறுப்புப் பிரச்சாரம் செய்வதில்லை.

சனாதன (இ)யூதர்களைப் பாருங்கள். பாலத்தீனத்தை விடுவியுங்கள். பாலத்தீனியர்களிடம் இறையாண்மையைக் கொடுங்கள் என்று திட்டவட்டமாகக் கோருகிறார்கள்.

இந்துத்துவத்தின் புண்ணிய பூமி கருத்தாக்கம்
(இ)யூதர்களுக்குக் கடவுள் வாக்களித்த பூமி இசுரேல் என்று சொன்னதால் எப்படி தேசம் என்ற நவீன அரசியல் அடையாளம், மதத்துடன் பிணைந்துகொண்டதோ, அது போன்றதுதான் சாவர்க்கர் புண்ணிய பூமி என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதும். உண்மையில் இந்துத்துவத்தின் சாராம்சமே அதுதான். அதன்படி யார் ஒருவரின் புண்ணியத் தலங்கள் இந்திய எல்லைக்குள் இருக்கிறதோ அவர்தான் இந்தியர். முசுலிம்கள், கிறித்துவர்கள் ஆகியவர்களின் புண்ணியத் தலங்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழுமையான குடிமக்கள் கிடையாது. இவ்வாறு நாட்டின் குடியுரிமையை மதம் என்பதுடன் பிணைப்பதுதான் மத அடையாளத் தேசியம் ஆகும்.

அரசாங்கம் அதிகாரபூர்வ மதமாக ஒரு மதத்தை ஏற்பது என்பது கூட பிரச்சினை கிடையாது. குடியுரிமையை, குடிநபரின் வரையறையை மதம் என்பதுடன் இணைப்பதுதான் கடுமையான பிரச்சினை. ஆங்கிலத்தில் தேசம் என்ற வார்த்தையை ‘நேசன்’ என்று கூறுகிறோம். இதன் மூலச் சொல் இலத்தீன் மொழியில் பிறப்பினைக் குறிப்பதாகும். ஒருவரின் பிறப்பு சார்ந்ததே அவரது தேசம் என்பது.

உதாரணமாக அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஆரிசு என்பவர் இருக்கிறார். இவரின் தாயார் சியாமளா சென்னையில் பிறந்தவர். தந்தை சமைக்காவில் பிறந்தவர். ஆனால், கமலா அமெரிக்காவில் பிறந்ததால் அந்த நாட்டின் குடிநபர் ஆகிறார். அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிட முடிகிறது. துணை அதிபராக முடிகிறது. அமெரிக்காவில் பல இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார்கள். இந்து மதத்தினரும் அங்கே அதிபர் தேர்தலில் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ஒரு இந்து, (இ)ரிசி சுனக்கு இருக்கிறார். அவர் காசியைப் புண்ணியத் தலமாக நினைத்தால் அது குறித்து இங்கிலாந்தில் யாரும் கவலைப்படவில்லை. மதத்துக்கும் குடியுரிமைக்கும் இந்த நாடுகள் முடிச்சுப் போடவில்லை.

ஆனால் சாவர்க்கரின் இந்துத்துவம் முடிச்சுப் போடுகிறது. இந்தியாவைப் புண்ணிய பூமியாகக் கொள்ளாதவர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்க முடியாது என்ற கருத்தை அது விதைக்கிறது. இசுரேலின் அடிப்படையான மோசசு கதைபோல சாவர்க்கர் இராமாயணத்தைப் பயன்படுத்துகிறார். இராமர்தான் இந்தியாவை ஒரே நாடாக இணைத்தவர் என்று கூறுகிறார். இராமாயணம் ஒரு புராணக் கதையாகும். ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட வரலாறு அல்ல. மேலும் வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை என்பது மத்தியப் பிரதேசத்தில் இருப்பதாகக் கருதும் ஆய்வாளர்கள் பலர் இருக்கிறார்கள்.

புராணத்தை வரலாறாக ஆக்குவதிலும், மதத்தைத் தேசமாக ஆக்குவதிலும் இசுரேலின் முன்மாதிரிக்கும், இந்துத்துவச் சிந்தனைக்கும் நிறைய ஒப்புமைகளைக் காணலாம். உள்ளபடி சொன்னால் குடியுரிமைச் சீர்திருத்தச் சட்டம் என்பது ஒரு வகையில் இந்துக்களின் “திரும்ப வரும் உரிமை” எனலாம். பிற நாடுகளில் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டால் கொடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்காமல், இந்துக்களாக இருந்தால் குடியுரிமை வழங்கலாம், இசுலாமியர்கள் என்றால் முடியாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுப்பது குடியுரிமையையும், மதத்தையும் இணைக்கும் செயல் என்பதால்தான் போராட்டங்கள் வெடித்தன.

இந்துத்துவ அணியினரின் வெளிப்படையான இசுரேல் ஆதரவு என்பது, முசுலிம்களைப் பொது எதிரியாக காண்பதிலிருந்து, பல வகையான தொடர்புப் புள்ளிகளைக் கொண்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. இசுரேல் மேலும் வலுப்பெறுவது இந்துத்துவர்களின் வேலைத் திட்டத்தை ஊக்கப்படுத்தவே செய்யும். ‘மதமே தேசம்! புராணமே வரலாறு’ என்ற முழக்கத்துக்கு இசுரேல் மிகவும் அனுசரணையான சிறந்த முன்மாதிரியாகும்.

கட்டுரையாளர் குறிப்பு:

இராசன் குறை கிருட்டிணன் – பேராசிரியர், அம்பேத்துகர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

தோழர் தியாகு
தாழி மடல் 352

(தொடரும்)

திங்கள், 25 டிசம்பர், 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 : இலக்குவனார் திருவள்ளுவன்

       25 December 2023      அகரமுதல



(சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொகுப்பு)

சட்டச்சொற்கள் விளக்கம் 81-85

81. Abetment by aidதூண்டல் உதவி  

குற்ற உடந்தை உதவி – குற்றவாளி, குற்றம் புரிவதற்கு வேண்டுமென்றே உதவி, தூண்டுதலாக இருப்பது.  
குற்றம் புரிய அல்லது குற்றச் செய்கையை எளிமையாக்கத் தூண்டுநர் உதவுகையை இது குறிக்கிறது.

குற்றவாளிக்கு உதவும் எண்ணம் இருப்பதே முதன்மையானது.   தூண்டுதல் என்பது, குற்றவாளி குற்றத்தைச் செய்யும்போது, குற்றம் புரிய ஏவுதல் அல்லது சொல்லிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல் அல்லது வழிகாட்டுதல் என்பன அடிப்படைப் பொருள்களாகும்.

குற்றவாளி ஒரு குற்றத்தைச் செய்யும்போது அவருக்கு உதவுவதையும் இது குறிக்கும்.  

இந்தியத் தண்டிப்புச்சட்டம் பிரிவு 107(IPC Section 107)குற்ற உடந்தை பற்றி உரைக்கிறது.
82. Abetment by conspiracy  சதி உடந்தை  

குற்றச் சதி வாயிலான உடந்தை  

ஒரு குற்றச் செயல் நடைபெறுவதற்கு அதற்கான சதியில் கருத்துரை வழங்கியோ அக்குற்றச் செயலுக்குரிய உதவுநராக இருந்தோ உடந்தையாயிருத்தல்.    

Cōnspīrātiō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரட்டிப்புச்சதி.
83. Abetment by defamationஅவதூறு வாயிலாக உடந்தையாக இருத்தல்  

இணையத் தளங்களில் சொற்போருக்கு இடந்தரும் கருத்துகளை எழுதுபவர்கள் மீது,கடும் நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், இ.த.ச. பிரிவுகள் 499-502 அவதூறு தொடர்பானவை; பேச்சு உரிமை,

கருத்துரிமை,தன்னுரிமையான சிந்தனை ஆகியற்றிற்கு எதிராக இப்பிரிவுகள் உள்ளனவாகக் கூறி இவற்றை நீக்க வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது.
84. Abetment by instigationதூண்டுதல் வாயிலாக உடந்தையாயிருத்தல்  

இ.த.ச.107 இன்கீழ்க் குற்றத்தைச் செய்வதில், மறைமுகமாகப் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.   இதன்படிக் குற்றச் செயலைச் செய்யத் தூண்டுதலாக இருத்தல், சதி செய்தல், உடந்தையாக இருத்தல் முதலியன தண்டனைக்குரிய குற்றச் செயலாகிறது.
 85. Abetment of a thingஒன்றைச் செய்யத் தூண்டுதல்

  ஒரு குற்றச் செயலைச் செய்யத் தூண்டுதல்.  

ஒருவர் அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து சதி செய்து சட்டச்செயலை விடுத்தல் அல்லது சட்ட முரண் செயலைச் செய்தல்.  

ஒன்றைவேண்டுமென்றே சித்திரிப்பதன் மூலம் அல்லது அவர் வெளிப்படுத்த வேண்டிய ஒரு பொருளை மறைப்பதன் மூலம் அல்லது குற்றச் செயல் ஒன்றைச் செய்விப்பதன் அல்லது அடைவதன் மூலம் அல்லது செய்யவோ அடையவோ முயல்வதன் மூலம் குற்ற உடந்தையாளர் ஆகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

தோழர் தியாகு எழுதுகிறார் : ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை

 



(தோழர் தியாகு எழுதுகிறார் : இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை!

அட்டோபர் 7 இசுரேல் மீது ஃகாமாசு தாக்குதலுக்குப் பின் நூறு நாட்களுக்கும் மேலாயிற்று. இசுரேல் அரசு காசா மீது தரை வழிப் படையெடுப்புத் தொடங்கி 75 நாட்களுக்கு மேலாயிற்று. சற்றொப்ப 1,500 இசுரேலியர்களும் 20,000 பாலத்தீனியர்களும் கொல்லப்பட்டிருப்பதாகக் கணக்கிடபப்டுகிறது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலார் போருக்குத் தொடர்பில்லாத குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்!

ஃகாமாசு பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளில் 130 பேர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இசுரேலியச் சிறைகளில் ஆயிரக்கணக்கான பாலத்தீனியர் வதையுறுகின்றனர். அவர்களின் தொகை நாளும் பெருகி வருகிறது.

காசாவிலும் மேற்குக் கரையிலும் உயிரிழந்தோர் தவிர 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடுமையாகக் காயமுற்றுள்ளனர். காயமுற்றவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூட வாய்ப்பில்லை. காசாவின் மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் இடம்பெயர்ந்துள்ளனர். உண்ண உணவில்லாமல், குடிக்க நீர் இல்லாமல், ஒதுங்கவும் பதுங்கவும் இடமில்லாமல் அம்மக்கள் பட்டும் பாடு சொல்லி மாளாது. காசா முழுக்கத் தரைமட்டமாக்கப்படுகிறது.

வெற்றுடம்போடும் வெள்ளைக் கொடியோடும் தங்களை நாடி வந்த பிணைக் கைதிகள் மூவரைக் கூட இசுரேலியப் பாதுகாப்புப் படை (IDF) சுட்டுக் கொன்ற கொடுமை இசுரேலிய அரசின் இனக் கொலை நோக்கத்துக்குச் சான்றாகும்.

இசுரேல் போர்நிறுத்தம் செய்ய மறுக்கிறது, அதற்கு அமெரிக்க வல்லரசு முண்டு கொடுத்து நிற்கிறது. ஈரரசுத் தீர்வை ஏற்றது வரலாற்றுப் பிழை என்று இசுரேலியத் தலைமைச்சர் நெத்தன்யாகு அறிவித்துள்ளார். அதாவது காசாமுனை, மேற்குக் கரை, எருசலம் உள்ளிட்ட பாலத்தீனம் முழுவதையும் இசுரேலுடன் இணைத்து அகன்ற இசுரேல் அமைப்பதுதான் அவரின் திட்டம். பாலத்தீன மக்களை இனவழிப்புச் செய்வதே இதன் பொருள்.

இந்தப் பகைப் புலத்தில் பாலத்தீன விடுதலையை ஆதரித்து உலகெங்கும் நடைபெறும் எழுச்சிப் பேரணிகளில் மண்ணதிர விண்ணதிர ஒரு முழக்கம் ஒலிக்கிறது:
FROM THE RIVER TO THE SEA
PALESTINE SHALL BE FREE

யோர்தான் ஆறு முதல் மத்தியதரைக் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை!

இந்த முழக்கத்தை எழுப்புகிறவர்களில் பாலத்தீனர்கள், அராபியர்கள், முசுலிம்கள் 10 விழுக்காடு கூட இல்லை. இஃது உலகெங்கும் இளைஞர்கள், மாணவர்கள், முற்போக்காளர்களின் முழக்கமாக ஒலிக்கிறது. யூதர்களில் ஒரு பிரிவினரும் இதே முழக்கத்தை எழுப்புகின்றனர்.

இனவழிப்பின் பெருங்கொடுமையால் யூத மக்களைப் போல் துன்புறுபவர்கள் வேறு யாருமில்லை. தங்கள் பெயராலேயே இன்னோர் இனவழிப்பு – பாலத்தீன இனவழிப்பு — நடப்பதை அவர்கள் எப்படி ஒப்புவார்கள்? அதனால்தான் “NOT IN OUR NAME” என்று அவர்கள் முழங்குகின்றார்கள். யூத சமுதாயத்தின் உளச்சான்றாகிய அவர்களை உளமார வணங்குவோம்.

தோழர் தியாகு
தாழி மடல் 409

(தொடரும்)