கொழும்பு, ஜூலை 15: எக்காரணத்தை முன்னிட்டும் நாட்டின் இன ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயலில் தாங்கள் ஈடுபடமாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அரசு மீது பல்வேறு அவதூறு கருத்துகளை பரப்பி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் டல்லஸ் அழகபெருமாள் கூறியதாக டெய்லி மிர்ரர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகளை ஒடுக்கி பயங்கரவாதத்தை வேரறுத்து, வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது ஆளும் அரசு. ஆனால் இதை சில எதிர்க்கட்சித் தலைவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவர்கள் பொறாமை அடைந்துள்ளனர். இதனால்தான் அவர்கள் அரசுக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றனர். புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ள வடக்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் சிங்களர்களை குடியமர்த்த இலங்கை அரசு முயற்சித்து வருவதாக சிலர் பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றனர். வடக்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் போரினால் வெளியேறிய மக்களை அதே பகுதியில் மீண்டும் குடியமர்த்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. அதற்கான நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் குடியமர்த்தல் பணி ஏற்கெனவே தொடங்கி கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. அங்கு இதுவரை ஒரு சிங்கள குடும்பம்கூட குடியமர்த்தப்படவில்லை. நாட்டில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவது, மக்கள் மத்தியில் இன வித்தியாசமில்லா ஒருமைப்பாட்டை உருவாக்குவது, அமைதியை ஏற்படுத்துவது போன்றவற்றில் இலங்கை அரசு நிச்சயம் வெற்றி பெற்றே தீரும் என்று டல்லஸ் அழகபெருமாள் தெரிவித்ததாகவும் டெய்லி மிர்ரர் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தும் செயலில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரியமிக்க வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தும் நோக்கில்தான் அங்கு மறுவாழ்வு பணியை அரசு தாமதித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதுபோன்ற நிலையில், தமிழர்கள் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தும் திட்டம் இல்லை என்று இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிபர் ராஜபட்சவும் இதேக் கருத்தைக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்
சிங்களத்தலைவர்கள் பேச்சு நீர் மேல் எழுத்து என்பது யாவரும் அறிந்தது. உண்மையிலேயே இன ஒருமைப்பாட்டில் அவர்களுக்கு ஈடுபாடு இருப்பின் தடுப்பு முகாம் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் வதைக்கப்படும் தமிழ் மக்களை உடனே விடுவிக்க வேண்டும். அவரவர்கள் தாங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல வழி வகை செய்ய வேண்டும். தொண்டு நிறுவனங்கள் நேரடியாக அவர்களுக்கு உதவ வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். மனச் சான்று உள்ள சிங்கள மக்களும் இதழாளர்களும் பொய்த்திரையை அகற்றி உண்மையை உலகறியச் செய்து வரும் பொழுது இவர்கள யாரை ஏமாற்றப் பொய்யுரையும் புனைந்துரையும் புகல்கிறார்கள்? இங்கு வாழும் சிங்களத் துதிபாடிகளும் அடிமைகளும் இதனைப் பரப்பினாலும் உண்மை வெளிவந்துதான் தீரும்.
இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/16/2009 1:03:00 AM
7/16/2009 1:03:00 AM