நல்ல கட்டுரை. எனினும் இந்திய ஆரிய அரசு சிங்களத்திற்கு ஆதரவாக இருக்கும் வரை கட்சத்தீவை மீட்க முடியாது. இதனைத் தமிழ்நாட்டுச் சிக்கலாகக் கருதாமல் அனைத்து மாநில - அனைத்துக் கட்சி - நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் உணர்த்தி ஒன்றுபட்டுப் போராடி வெற்றி காண வேண்டும்.அதற்கான முயற்சியை எளியோர் ஏந்தல் தோழர் தலைவர் நல்லக்கண்ணு மேற்கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
Last Updated :
எண்ணூரிலிருந்து குளச்சல் துறைமுகம் வரை 1,076 கி.மீ. நீள கடற்கரை வளமுள்ளது தமிழ்நாடு. 13 மாவட்டங்கள், 591-க்கு மேலான கிராமங்களில் 15 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். நெய்தல் நிலத்தில் வாழும் இந்தத் தொன்மையான குடிமக்கள், நாட்டின் தென்கோடிக் கடற்கரையின் காவலர்களாகவும் பணியாற்றி வந்த பழங்குடியினர். வங்கக்கடலில் மீன் பிடித்தும், முத்துக் குளித்தும், மேற்கத்திய நாடுகளோடு வணிகத்தொடர்பும் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகளில், கடந்த பத்தாண்டுகளில்தான் கடலில் மீன் பிடிக்க முடியாமலும் கரையில் அமைதியாக வாழ முடியாமலும், இவர்கள் தங்களது வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் பயணித்துச் சேர்த்துவரும் கடல் பொருள்களின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆண்டுக்கு ரூ. 50,000 கோடியாகும்! ஆனால், இந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்கும் கட்டுப்பாடு! கரையோரங்களில் குடியிருப்பதற்கும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்களான மீனவர்கள் மீன்பிடிக்கும் கடலுக்கு எல்லை விதிக்கப்படுகிறது. ஆழ்கடலில் பிடித்துவரும் மீனுக்கும் அளவு எல்லை போடப்படுகிறது. ஆனால், 15 பெரிய டிராலர்கள், மீன்பிடிக் கப்பல்களின் உரிமையாளர்களுக்கோ, ஆழ்கடலில் மீன் குஞ்சுகளைக்கூடப் பறித்து அள்ளிச் செல்லும் உரிமை வழங்கப்படுகிறது. வியாபாரிகளான கப்பல் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமை மீன்பிடித் தொழிலைத் தங்களது வாழ்வாதாரமாகக் காலங்காலமாகச் செய்துவரும் மீனவர்களுக்கு மறுக்கப்படுவது என்ன நியாயம் என்பதுதான் கேள்வி.உலகமயமாக்கல் கொள்கையால், மண்ணின் மைந்தர்களான மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. கப்பல் உரிமையாளர்களுக்குக் கடலே சொந்தமாக்கப்பட்டுள்ளது; கடற்கரையும் அழகுபடுத்தப்பட்டு சுற்றுலா மையங்களாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், உயர்தரப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் வணிக வளாகங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. இத்தனை தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு, மீன்பிடித் தொழிலையே அன்றாட வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்கள் மீனவர்கள். வேறு வழி? அவர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாதே.1974-1976-ம் ஆண்டுகளில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், குறிப்பாக நாகப்பட்டினம், கோடியக்கரை, தொண்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரையில் 7 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றால், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். அடித்துக் கொல்லப்படுகிறார்கள். வலைகள் அறுத்தெறியப்படுகின்றன. படகுகளை வெட்டி அழிக்கிறார்கள். மீன்களை மீண்டும் கடலில் வீசிவிடுகிறார்கள். நிர்வாணப்படுத்தி தலைமன்னார் சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள்.2010 முடிய - தமிழக மீனவர்கள் 571 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்கள் 1,200 பேர், அழிக்கப்பட்ட விசைப்படகுகள் 300, சேதப்படுத்தப்பட்டவை 600. காணாமல் போனவர்களும் உண்டு; தலைமன்னார் சிறைகளில், கைதிகளாகச் சிலர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பொருள் சேதமும், மீனவர்கள் அடைந்த பொருள் இழப்பும் ரூ. 25,000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் நொந்து வேதனைப்படும், தமிழக மீனவர்களைப் பற்றி மத்திய அரசும், அமைச்சர்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. தமிழக அரசும் தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம், தமிழக மீனவர்களின் மீது ஒப்புக்குக் கண்ணீர்விட்டு ஆதரவைத் தெரியப்படுத்துவதோடு சரி.டச்சுக்காரர்கள் இலங்கையை அடிமைப்படுத்திய காலத்தில் உருவாக்கிய இலங்கை வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. கி.பி.1600-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறியது வரை, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னர் 1948-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டப்படி, கச்சத்தீவு தமிழக அரசுக்குச் சொந்தமாக்கப்பட்டது.தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை, நட்பு முறையில் மத்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.முதல் ஒப்பந்தம் 1974-ல் கையெழுத்தானது. இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் கையெழுத்திட்டார்கள். நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரண்சிங் பேசியது -""பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு முக்கால் சதுர மைல் அளவுள்ளதாம். இந்த ஒப்பந்தத்தை நாம் உறுதி செய்கிறபோது, மீன் பிடிக்கும் உரிமை, பண்டிகைக்கான சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்ற உரிமைகள் கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இருந்தது. வருங்காலத்துக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு அங்கத்தினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென நினைவுபடுத்துகிறேன். இவ்வொப்பந்த அடிப்படையில் இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்குப் போய் வருவதற்கு இதுவரை பெற்றிருந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள். எனவே, போக்குவரத்து அனுமதி ஆவணங்களையோ அல்லது விசா போன்றவற்றையோ வேண்டுமென இலங்கை அரசு கோர முடியாது.ஸ்ரீலங்கா - இந்தியக் கப்பல்கள் இதுவரை பாரம்பரியமாக அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிப்பார்கள். இதுவரை என்னென்ன உரிமைகள் இருந்து வந்ததோ நம்முடைய படகுகள் அந்தப்பக்கம் செல்வதற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் வருவதற்கும் கச்சத்தீவு பயன்படுத்தப்படுவதற்குரிய அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பது இந்த ஒப்பந்தத்திலிருந்து ஏற்படுகிறது.''ஆனால், இன்றைய காலகட்டத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டுவதோடு விட்டுவிடாமல், உயிரையும் பறிக்கும் பாதகச் செயலில் ஈடுபட்டு வருகிறது. தமிழக மீனவர்களுக்கு விரோதமான செயலில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.கச்சத்தீவை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். அதற்கு 31.8.2010 அன்று பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத்தீவு ஒப்பந்தம் புனிதமானது, பவித்திரமானது அதனை ரத்துசெய்ய முடியாது'' என்றெல்லாம் கூறியுள்ளார்.பாக். நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பேணிக்காக்க வேண்டிய கடமையில் இருந்து மத்திய அரசு விலகி நிற்கிறது. தமிழக அரசு இதற்கு உடந்தையாக வேடிக்கை பார்க்கிறது.இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசு அறிவித்த பிறகும், தமிழக மீனவர்களை வேட்டையாடும் செயலை இலங்கைக் கடற்படை நிறுத்தியபாடில்லை. ஜெகதாப்பட்டினம் பாண்டியன், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார் போன்றோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ் இலங்கை சென்று மீனவர் பிரச்னை குறித்துப் பேசிவிட்டுத் திரும்பியபோதும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேடிக்கை பார்த்துக்கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளன. சில நாள்களுக்கு முன்னர்கூட ராமேஸ்வரம் மீனவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. உடைமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் வந்தன.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், ""இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்ய வேண்டுமே தவிர, சுட்டுக்கொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார்.இந்திய மீனவர்களைக் கைது செய்யலாம் என இலங்கை அரசுக்குப் பிரதமரே பச்சைக்கொடி காட்டுவது வேதனை அளிக்கிறது. மேலும், பிப்ரவரி 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், ""சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும் போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது.அதேவேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன்பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள், இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இலங்கை மீனவர்களும், மீன்பிடித் தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பது நியாயம்'' எனக் கூறியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கூறுவதைக் கவனிக்கிறபோது, அவர்கள் இலங்கை ராஜபட்ச அரசுக்கு வக்காலத்து வாங்குவதாகத்தான் இருக்கிறதே தவிர, இந்திய மீனவர்கள் பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அப்படியானால், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி, உரிமைகள் பற்றிக் கவலைப்பட யாருமே கிடையாதா? அவர்கள் நாடில்லா அனாதைகளா? அந்நிய தேசத்துப் பிரஜைகளா?1987-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் தமிழர்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு - கிழக்கு மாகாணத்தை ஒருங்கிணைக்க அடிகோலியது. இலங்கைத் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் இல்லை என்பதைப் பறைசாற்றியது. அந்த ஒப்பந்தத்தை இனவாத ஜே.வி.பி. தொடுத்த வழக்கின் காரணமாக இலங்கை நீதிமன்றம் ரத்து செய்தது.இலங்கை அரசு, ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருத முடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் பலியிடப்படலாமா? இந்திய நாட்டில் தமிழக மீனவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது நியாயமாகுமா?எனவே, கச்சத்தீவை மீட்கவும், அங்கு இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும், நிரந்தரத்தீர்வு காண்பதற்கான எல்லா வழிகளும் காண ஒன்றுபட வேண்டும்.