சனி, 11 ஏப்ரல், 2020

மகுடை 19 விளைவித்த எண்ணங்கள்- பேரரசி முத்துக்குமார்

மகுடை 19 விளைவித்த எண்ணங்கள்

       அனைவருக்கும் வணக்கம்.
எனது பெயர் பேரரசி. நான் பாரிட்டின் மாரா இளம் அறிவியல் கல்லூரி, படிவம் 2 மாணவி ஆவேன். ‘இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை’ (Movement Control Order)  இன் போது எனது பட்டறிவைப் பற்றி நான் உங்களுடன் பகிர விரும்புகிறேன்.  உலகமயமாக்கலின் இந்த நூற்றாண்டில், நமது அன்புக்குரிய நாடான மலேசியா, மகுடை 19(கொரானா 19) நோயால் தாக்கப்பட்டுள்ளது. மகுடை 19(கொரானா 19) என்றால் என்ன? WHO அதாவது ‘உலக நலவாழ்வு அமைப்பின்’ படி மகுடை 19/COVID 19, 2019 புதிய மகுடைத் தொற்று என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய், சீனாவின் உஃகானில் 2019 திசம்பர் 31 அன்று அப்பகுதியில் அமைந்துள்ள கால்நடைச் சந்தை மூலம் தொற்றியது. மகுடை 19 இன் தொற்று, காற்று, இருமல் மற்றும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் வழியாகப் பரவுகிறது. ஒருவருக்கு மகுடை 19 மகுடை 19 இருந்தால் அவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுச் சிக்கல்கள் போன்ற அறிகுறிகள் காணப்படும். COVID 19 நம் நாட்டில் தற்போதைய முதன்மைச் சிக்கல்களில் ஒன்றாக மாறிவிட்டது, ஏனெனில் அது மரணத்திற்கு வழிவகுக்கிறது.
             இன்றுவரை, மலேசியாவில்  4,346 மற்றும் அதற்கு மேற்பட்ட மகுடை 19 தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதனால், 8 ஆவது மலேசியப் பிரதமரான தான் சிரீ முகைதீன் யாசின் மார்ச்சு 18 முதல் ஏப்பிரல் 14 வரை அனைத்து மலேசியர்களுக்கும் நடை இயக்கக் கட்டுப்பாடு (movement control order) என்ற பாதுகாப்பு நடவடிக்கையை வெளியிட்டுள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்பிரல் 28ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மகுடை 19-ஐ கட்டுப்படுத்த முடியாவிட்டால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நடை இயக்கக் கட்டுப்பாடு  அதிகரிக்கக் கூடும். இவ்வகையான சிக்கல்கள் அனைத்து மலேசியர்களும் தங்கள் உடல்நலம் மற்றும் அவர்களது குடும்பங்களின் உடல்நலத்தைப் பற்றியும் கவலைப்பட வைக்கிறது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் அனைத்துக் கடைகளும் மூடப்படும் என்பதால் அவர்கள் கடையில் இன்றியமையாப் பொருட்களை வாங்கத் தொடங்கினர். எல்லா உணவையும் வாங்கக்கூடிய வர்களையும்,  அதனை வாங்க இயலாத மக்களையும் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
இந்த விடுமுறை நீண்டது என்றாலும் அது மகிழ்ச்சியாகவே இல்லை. ஏனென்றால், சிறையில் அடைத்து வைத்தது போல நடைக் கட்டுப்பாடு என்னை உணர வைக்கிறது. இது மிகவும் சலிப்பை ஏற்படுத்துகிறது. அன்றாடம் என் அம்மாவின் சுவையான சமையல் உண்டாலும்,   வீட்டில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருப்பதால் எனது உடலின் எடை அதிகரிக்கின்றது என்று கவலைப்படுகிறேன். ஆனால் மாரா இளம் அறிவியல் கல்லூரி மாணவராக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஏனென்றால், மாணவர்களின் கற்றலைக் குறித்து அக்கறை கொண்ட பல ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் ஏற்கெனவே கூகுள் வகுப்பறை, ‘ஓஎசுஇஎம்’, ‘பிளிப்கிரிட்’ பிறவற்றின் மூலம் மெய்நிகர் வகுப்பறைக் கற்றலைத் தொடங்கினர். தற்போதைய கற்றலின் அடிப்படையில் தகவல்களைக் கண்டுபிடிக்க அனைத்து ஆசிரியர்களும் சிரமப்படுவதைக் கண்டு நான் மிகவும் நன்றியுள்ளவளாகக் கருதுகிறேன். இந்தச் சூழ்நிலையை என் அம்மா, அப்பா மூலமும் உணர்ந்தேன், ஏனென்றால் அவர்களும் ஆசிரியர்களாக வேலை செய்கிறார்கள்.
           தற்செயலானது என்றாலும் மகுடை 19 இன்னும் பலரின் உயிரை எடுத்துக்கொண்டிருக்கின்றது என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது. ஏனென்றால் இது பலருக்குப் பரவி  மிரட்டலாக உள்ளது. இறந்தவர்களில் சிலர் மருத்துவர்கள் ஆவர். மகுடை 19  தொற்றிய நோயாளிகளின் பாதுகாப்பிற்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நேரத்தைத் தியாகம் செய்த மருத்துவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நோயாளிகளுக்காக மருத்துவர்கள்  தினமும் மருத்துவமனையில் உட்கார்ந்து வீட்டிற்குச் செல்லாமலும், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடாமலும் இருக்கின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மகுடை 19(COVID 19) நோயால் பாதிக்கப்பட்டுத் தீவிரப்பண்டுவப் பிரிவில்  இருந்தனர். என் நலவாழ்வுமிக்கக் குடும்பத்துடன் இருப்பதற்கு நான் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் சுவையான உணவை வழங்கிய என் அம்மாவுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
மிகவும் சலிப்பான இந்த விடுமுறையில், நான் என் நண்பர்களைப் பார்க்காமல் இருக்கும் வாய்ப்பை இழக்கிறேன். நான் முழு உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவியாக இருந்ததால், குடும்பத்தினருடன் விட நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டேன். அங்குள்ள கற்றல் சூழ்நிலையையும் நான் இழக்கிறேன். வீட்டில் நான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன், திறன்பேசியுடன் விளையாடுகிறேன், என் அம்மாவுக்கு உதவுகிறேன். கல்லூரியில் நான் பூப்பந்து, வட்டை ஆட்டம்(Frisbee game) விளையாடுவதால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் அண்மையில் நான் என் அம்மாவுக்கு உதவுவதில் விடாமுயற்சியுடன் இருந்தேன். ஒவ்வொரு மாலையும், நான் என் அப்பா, தங்கை ஆகியோருடன் வட்டாட்டம்(கேரம்) விளையாட்டை விளையாடுவேன். இரவில், இணையப் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட திகில் திரைப்படங்களைப் பார்ப்போம்.
       என் ஓய்வு நேரத்தால் நான் சலிப்படைகிறேன். நான் சமூக ஊடகங்களில் குறிப்பாக படவரி(Instagram), உம் குழலி(youtube) முதலியவற்றில் இணைந்திருப்பேன். படவரியில் நகைச்சுவைகள், படவரித்தொலைக்காட்சி ஆகியவற்றைப் படிக்க பார்க்க விரும்புவேன். திரு பீனின் காணொளிகைளப் பார்க்க விரும்புவேன். ஏனென்றால் உரோவன் அட்கின்சன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஆவார். இந்த வகையான உடற்பயிற்சி எனக்கு மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் எனது நேரத்தையும்  செலவிட உதவுகிறது. தற்போது, மாணவர்களின் நேரத்திற்குப் பயனளிக்கும் வகையில் சில  கட்சிகள், சங்கங்கள் பல போட்டிகளை நடத்துகின்றன. போட்டியில் பங்கேற்க என் பெற்றோர் என்னை ஊக்குவித்தனர். எனவே இந்த வழியில் எனது ஓய்வு நேரத்தை நிரப்ப முடியும். 5 ஆம் ஆண்டு மாணவியாக இருக்கும் என் தங்கைக்குக் கற்பிக்க என்  நேரத்தைச் செலவிட முடிந்தது. இது எனது குழந்தைப் பருவக் கற்றல் பட்டறிவுகளை நினைவூட்டுகிறது.
மகுடை 19 நோய்த்தொற்று பற்றி நான் கவலைப்பட்டாலும், அதை எவ்வாறு தடுப்பது என்ற  வழிமுறைகள் உள்ளன என்பதைக்கண்டு நான் நிம்மதியடைந்தேன். அவற்றில், கண்கள், மூக்கு, வாயைத் தொடாதீர்கள், ஏனெனில் இது மகுடை 19 தொற்றும் இடமாகும் என்ற கூற்று, 31/3/2020 அன்று வெளியான ‘தி சன்’ செய்திக்குறிப்புக்கு இணங்க, மனிதர்கள் தங்கள் முகத்தை ஒரு மணி நேரத்திற்கு 23 தடவைகள் தங்களின் வாய், மூக்கு, கண்களைத் தொடுகிறார்கள். கூடுதலாக, நாம் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் ஏனெனில் இது நம் கைகளில் உள்ள நோய்மிகளைக் கொல்லும். மக்களுக்கிடையேயான தூரம் குறைந்தது 1 பேரடி(மீட்டர்) என்பதை  அனைவரும் அவசியம் உறுதிப்படுத்த வேண்டும்.
இதற்குமுன் என்னைப்போல் விடுமுறையை எப்படிக் கழித்திருந்தாலும் நாம் மகுடைநோய் பரவாமல் இருக்க நம்மால் ஆன கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும் அடுத்தவர்களுக்கு உதவவும் வேண்டும்.
        இந்த மகுடை 19 மிகவும் ஆபத்தானது. எனவே, மலேசியர்களாகிய நாம் உடனடியாகச் செயல்பட வேண்டும்.  கடுமையான நோய்மிகளைத் தடுக்க அரசாங்கத்தின் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும். மகுடை 19 நோயாளிகளை விரைவாகக் குணப்படுத்தவும், மலேசியர்கள் அனைவரையும் கோவிட் 19 அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றவும் என்று நான் கடவுளிடம் வழிபடுவேன். ஏப்பிரல் 28 க்குப் பிறகு கல்லூரிக்குச் செல்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
மலேசியாவை நேசி! தூய்மையான மலேசியா!
நன்றி.
 பேரரசி முத்துக்குமார்
படிவம் 2
மாரா இளம் அறிவியல் கல்லூரி பாரிட்டு, மலேசியா


செவ்வாய், 7 ஏப்ரல், 2020

மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்! இலக்குவனார் திருவள்ளுவன்


மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்!

 

மகுடை(கரோனா) நோய் பற்றிய செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம், நோய் தொடர்பான விளக்கங்களையும் அறியலாம்.
தொற்றுத் தடுப்பிற்காக முகத்தில் அணியும் கவசத்திற்கு எண்கள் குறிப்பிடுகின்றனர். இப்பொழுது குறிப்பிடப்படுவது என்.95 ஆ? எண் 95ஆ என்ற ஐயப்பாடு பலருக்கு வருகிறது. இங்கே’ என்’ என்பது எண்ணைக் குறிக்கவில்லை.
NIOSH – National Institute for Occupational Safety and Health என்பதன் ஆங்கில முதல் எழுத்தான ‘என்’(N) என்பதைக் குறிக்கிறது. அமெரிக்காவில் உள்ள இதனை, நாம் ‘தேசியத் தொழிற்பாதுகாப்பு நலவாழ்வு நிறுவனம்’ எனலாம். அப்படியானால் தமிழில் இதன் முதல் எழுத்தான ‘தே’ என்பதைப் பயன்படுத்தலாமா? சிலர் இதனைத் ‘தொழிற்பாதுகாப்பு நலவாழ்விற்கான தேசிய நிறுவனம்’ என்றுகூடச் சொல்வர். மேலும் இந்நிறுவனத்தின் நோக்கம் நலவாழ்விற்கான பாதுகாப்புதான். அப்படியானால் ‘பா’ என்று சொல்லலாமா? இதனைவிடக் கா என்று குறிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். ‘கா’ என்றாலே தீமை வரவொட்டாமல் காப்பாற்றுதல், தீதிலிருந்து விலக்குதல், தீயவற்றைத் தடுத்தல் என்னும் பொருள்கள் உள்ளன. எனவே, தொற்றுக் காப்பிற்கான இதனைச் சுருக்கமாகக் ‘கா’ என்றே குறிக்கலாம்.
அப்படியானால் 95 என்பது எதனைக் குறிக்கிறது என்ற எண்ணம் வரும். இது காற்று வடிகட்டுதலின்  மதிப்பீட்டு அளவைக் குறிப்பதாகும். அஃதாவது, வான்வழித் துகள்களில் வடிகட்டும் அளவைக் குறிப்பதே இந்த எண். இந்த இடத்தில் 95 விழுக்காட்டுத் துகள்களை வடிகட்டுகிறது என இதன் சிறப்பைக் குறிக்கிறது. (எனினும் இஃது எண்ணெயை எதிர்க்காது.) எனவே, நாம் என்.95 எனக் குறிப்பதை விட 95 விழுக்காட்டுக் காப்புப் பயன் உடைய கவசத்தைக் கா 95 எனத் தமிழில் குறிப்பதே சிறப்பாகும்.
இந்த இடத்தில் கவசம் தமிழ்ச்சொல்தானா என்ற ஐயப்பாடு வரும். mask என்பதை,  முகத்திரை, முகமூடி, பகுதி மறைப்பு, முகக்காப்பு வலை, கவசம் எனப் பல சொற்களால் குறிப்பிடுகின்றோம்.  கவ் என்பதில் இருந்து உருவான கவயம் என்பது கவசமாக மாறி உள்ளது. இதனைச் சமசுகிருதத்தில் கவச என்று குறிப்பிட்டதும் நாம் தமிழலல்ல என எண்ணி விட்டோம். கவசம் தமிழ்ச்சொல்தான். எனினும் முகம் முழுவதையும் மறைக்காமல், மூக்கு, வாய்ப்பகுதிகளை மட்டும் மறைப்பதால் நாம் பயன் அடிப்படையில் மூச்சுக்காப்பு எனலாம். எனவே, அரசு கா 95 மூச்சுக்காப்புகளைப் போதிய அளவில் வாங்கி அனைவருக்கும் வழங்க வேண்டும் எனலாம்.
தொற்றுத் தவிர்ப்பிற்காகச் சொல்லப்படும் தொடர் social distancing என்பதாகும். அப்படி என்றால் குமுகாயத்திலிருந்து விலகி இருத்தல் அல்ல. நாம் அதன் ஒரு பகுதிதான். ஆனால், மன்றங்கள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விருந்துகள் என்பனபோன்று குமுகாய நடவடிக்கைகளின் பகுதியான பொது நிகழ்வில் இருந்து விலகி இருத்தலையே குறிக்கிறது. விலகி இருத்தல் என்பதைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன.
இராமலிங்க அடிகளார் (மூன்றாம் திருமுறை, 005. சல்லாப வியன்மொழி, பாடல் 5 அடி 4) விலகி இருப்பதைக் குறிப்பிட, “ஒற்றியிரும் என்றுரைத்தேன்” என்கிறார்.
ஒற்றிப்போதல் என்றால் விலகிச் செல்லுதல் எனப்பொருள். ஒற்றிப்போடுதல் என்றால் தள்ளிவைத்தல் என்று பொருள். இதுவே இப்போது ஒத்திவைத்தல் என மாறி வழங்கி வருகிறது. எனினும் விலகி இருத்தலை ஒற்றியிருத்தல் எனக் குறிப்பது மிகப் பொருத்தமாக இருந்தாலும் இன்றைய வழக்கத்தில் நாம் உரிய பொருளை நேரடியாகப்புரிந்து கொள்ள இயலாது.
எழவாங்குதல்  என்றாலும் முகம் காட்டாமல் தொலைவில் இருத்தல் என்று பொருள். மேலும், கவிப்பு, தாவு, துலை முதலான சொற்களும் விலகி இருத்தலைக் குறிக்கின்றன. இவற்றையெல்லாம் வெவ்வேறு பொருள்களில் இப்பொழுது பயன்படுத்துவதால் வேறு சொல்லே சிறப்பாக அமையும். குமுகாயம் என்பதை அவ்வாறே குறிப்பிடாமல் குமுகாய  நிகழ்வு என்பதைக் குறிப்பாகக் கொண்டு நாம் நிகழ்வுச்சேய்மை எனலாம். அஃதாவது கூடிக்களிக்கும் நிகழ்வுகளில் இருந்து சேய்மையாக இருத்தல். ( distance = சேய்மை என்றும் பொருள்.)
            எனவே, மகுடைத் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளகூட்ட நிகழ்வுகளில் இருந்து விலகும் கூட்ட விலகலை – நிகழ்வுச் சேய்மையைக் கடைப்பிடிப்போம் என்போம்.
            அடுத்துத் தற்தடைக் காப்பு.
Quarantine என்பது, தொற்றுத் தடைக்காப்பு, நோய்த்தொற்றுத்தடுப்பு, தொற்றுத்தடுப்புத் தனிப்படுத்தல் என்னும் பொருள்களை உடையது. மருத்துவர்கள் கூறுவதும் அரசு வலியுறுத்துவதும் நம்மை நாமே தனிப்படுத்தி வைத்துக் கொள்ளல். அதுவே,  தற்தடைக் காப்பு(self-quarantine). மகுடைத் தொற்று நோய்மியானது தொற்று உள்ளவரிட மிருந்து வெறும் ஆறு அடி தொலைவு தான் செல்ல இயலும். எனவே, நாம் தனிமைப்படுத்திக்கொண்டு விலகி இருப்பதன் மூலம் உடன்இருக்கும் யாருக்கேனும் இத் தொற்று இருப்பின் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலும்.
அடுத்து வல்லுநர்கள் சொல்வது, அளவுக்கோட்டை மட்டப்படுத்தல்.
flattening the curve என நோய் நிலை வரைபடத்தில் உள்ள வளைவுக்கோடு தட்டையாகும் வண்ணம்  நோய்நிலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். (நோய்நிலை வரை)வளைவு தட்டையாக்கல் எனலாம்.
அடுத்தது ஒதுக்கம்(isolation)
ஒதுக்கம் என்பது தற்தடைக்காப்பிலிருந்து மாறுபட்டது. இங்கே, தொற்றுக்கு ஆளானவர்களை அவர்கள் மூலம்தொற்றுக்கு ஆளாகாதவர்களிடம் நோய் பரவக்கூடாது என்பதற்காகத் தனித்து ஒதுக்கி வைப்பதைக் குறிப்பது. இதனைப் பின்பற்றினால்தான் ஒருவருக்கு வந்த தொற்று பிறருக்குப் பரவாது. மகுடைத் தொற்றிலும் இது பின்பற்றப்படவேண்டும்.
 அடுத்தது தொற்று ஐயப்பாட்டில் உள்ளவர்களை ஆய்வு செய்தல். இது குருதி ஆய்வு, உறிகை ஆய்வு என இருவகைப்படும். உறிகை ஆய்வு என்பதைச் சிலர், ஆங்கிலத்தில் தவறுதலாக ‘swap test’ எனக் குறிப்பிடுகின்றனர். swap என்றால் பகர மாற்றம் எனப் பெயர். இது ‘swab test’ எனக் குறிக்கப்பெற வேண்டும்.
அடுத்தது தொற்றுப் பெருக்க விகிதம். ஒவ்வொரு தொற்றுநோய்மிக்கும் இரண்டு குணங்கள் உண்டு. முதலாவது தொற்றுப் பெருக்க விகிதம் எனப்படும் R0 (ஆர் நாட் – ‘R Naught’). தொற்றுநோய்மி உள்ள ஒருவர் இயல்பாக எவ்வளவு பேருக்கு இந்த நோய்மித் தொற்றைத் தர வாய்ப்பு உள்ளது என்பதே தொற்றுப் பரவு விகிதம். இதுவே அடிப்படை இனப்பெருக்க எண் என்றும்  சில நேரங்களில் அடிப்படை இனப்பெருக்க விகிதம்  என்றும் சொல்கின்றனர். இனப் பெருக்கம் என்பதைவிடத் தொற்றுநோய்மிப் பெருக்கம என்பதன் சுருக்கமாகத் தொற்றுப்பெருக்கம் என்பது சரியாக இருக்கும்.
அடுத்து நோயரைத் தனிமைப்படுத்தி வைக்கும் அறை அல்லது கூடம் பற்றியது. பகுக்கப்படுவது பகுதி என்பதுபோல் தனித்தனியே வகுத்து அமைக்கப்படும் வார்டு(ward) என்பதை வகுதி எனலாம்.
நோயருக்கு மூச்சுயிர்ப்பிற்கு உதவும் இயந்திரம் பற்றிப் பார்ப்போம்.
அறைகளில் இருக்கும் வெண்டிலேட்டர் என்பதை நாம் காலதர் என்கிறோம். கால்+அதர்;  கால் என்றால் காற்று; அதர் என்றால் வழி. காற்று வரும் வழி எனப்பொருள். காற்றுவாரி என்றும் இதனைச் சொல்வர். அதேபோல் நோயருக்கு மூச்சு உயிர்ப்பு உதவியாக உள்ள வெண்டிலேட்டரையும் காலதர் என்றால் தவறில்லை. ஆனால், பொருள் குழப்பம் வரும். எனவே, வேறு சொல் தேவை. எல்லாருமே வெண்டிலேட்டர் என்றே குறித்து வருகின்றனர். ஓர் அகராதி மூச்சுக்காற்றுவாரி என்று குறிப்பிடுகிறது. சொல்வழக்கில் செயற்கைச் சுவாசக் கருவி என்போரும் உள்ளனர். மூச்சுக்காற்றுக்கு உதவும் இதனை மூச்சதர் எனலாம்.
சீரான மூச்சிற்கு உதவும் மற்றொன்று மூச்சுச்சீராக்கி (respirator). சிலர் மூச்சதரை மூச்சுச் சீராக்கி என்கின்றனர். பலர், கவசம் என நாம் சொல்கின்ற மூச்சுக்காப்பினை மூச்சுச் சீராக்கி என்கின்றனர். பொதுவாக மூச்சதர் நோயருக்கு உதவுவதுபோல், அவர்களைக் கவனிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவுவது மூச்சுச் சீராக்கி.
நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் அந்நோய்த்தொற்றின் காரணமாக இறந்தவர்களுக்கும் உள்ள விகிதம் ஆட்கொல்லி விகிதம்(case fatality rate- CFR) எனப்படுகிறது. மகுடைநோயின் ஆட்கொல்லி விகிதம் நாளும் மிகுதியாவதுதான் வேதனையான ஒன்று.
மகுடை நோய் தொடர்பானவை மட்டுமல்ல, பிற நோய் தொடர்பாகவும் உள்ள இவற்றை நாம் தமிழிலேயே குறிப்பிட்டுப் பயன்படுத்துவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
காண்க –
மகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்!

மகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்


மகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்!

எங்குப் பார்த்தாலும் கரோனா, கரோனா என்று அச்சுறுத்திக் கொண்டுள்ளார்கள். அதற்குள் இஃதென்ன புதிதாக மகுடை என எண்ண வேண்டா. அதற்கான தமிழ்ச்சொல்லே இது!
கரோனா என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மணிமுடி/மகுடம். இச்சொல் மாலை, மலர் வளையம் என்னும் பொருள் கொண்ட கரோனே என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.
கரோனா என்பது வட்டவடிவத்தில் இருப்பதைக் குறிப்பதால் சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டமும் கரோனா எனப்படுகிறது. அதுபோல் தோற்றத்தின் அடிப்படையில் வட்டமாக மணிமுடி/மகுடம்/கிரீடம்போல் உள்ள, ஒரு தொற்று நோய்மிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கிரீடம் என்பது தமிழல்ல எனச் சொல்லப்படுகிறது. எனவே, பிற சொற்களில் எது பொருத்தமாக அமைகிறதோ அப் பெயரை இந்நோய்மிக்கு நாம் சூட்டலாம்.
நாம் நேரிடையாக மணிமுடித் தொற்றி என்றோ மகுடம் தொற்றி என்றோ சொன்னால் அவற்றில் இருந்து தொற்றப்பட்ட நோய் எனத் தவறாகப் பொருள் கொள்ளப்படும். இரவீந்திரன் வேங்கடாசலம், ஏறத்தாழ ஒத்துவரும் வகையில் மகுடம் தொற்றி என்றுதான் குறிப்பிடுகிறார். மகுடத்தின் உச்சியில் முள்முடி போல் இருப்பதால் சிலர் அப்படித்தான் முள் தொற்றி அல்லது முள்முடித் தொற்றி அல்லது முள்மூடித் தொற்றி என்கின்றனர். அப்படியானால் முள்ளில் இருந்து தொற்றப்படும் நோய் என்றுதானே பொருள் ஆகும். மேலும், முள்முடி அணிவித்தது இயேசுவின் மரணத்திற்கு முன்பு வழங்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று. சிலர் இதனை எண்ணவும் வாய்ப்பு உள்ளது.
 எனவே, நாம் நேர்ச்சொல்லை அவ்வாறே பயன்படுத்தக் கூடாது. தோற்றத்தைக் குறிக்கும் சொல்லில் இருந்து புதுச்சொல் ஆக்குவதே சிறப்பாக இருக்கும். அவ்வாறு பார்க்கும் பொழுது மகுடத்தில் இருந்து மகுடை என்று நம்மால் சொல் உருவாக்க இயலுகிறது. எனவே, மகுடை என இத்தொற்றி நோய்மிக்குப் பெயர் சூட்டலாம்.
சிலர் மகுடம் தமிழல்ல எனத் தவறாகப் புரிந்து கொண்டு இச்சொல்லை மறுக்கின்றனர். மகிழ் ->மகிழம் ->முகுளம் ->முகுடம் ->மகுடம். மொட்டுப் போன்ற கூம்பிய மணி முடி என அறிஞர்கள் இச்சொல் தமிழ் என்பதை விளக்குகின்றனர்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, இதனை, முகம் ->முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி, முகடு = உச்சி, வீட்டின் உச்சி, வாணமுகடு, தலை, உயர்வு; முகடு -> (முகடம்); ->மகுடம். இனி, முகிழ் ->முகிழம் ->முகுளம் ->முகுடம் ->மகுடம் = மொட்டுப் போற் கூம்பிய மணிமுடி என்றுமாம் என்று விளக்கித் தமிழ்ச்சொல் என்பதை மெய்ப்பிக்கிறது. பேராசிரியர் பரோ இச்சொல்லைத் தென் சொல்லென்றே கூறுவார் எனவும் குறிக்கிறது.
அடுத்து மகுடைக்கும்  கோவிடு 19(COVID-19) என்பதற்கும் என்ன தொடர்பு அல்லது வேறுபாடு என எண்ணுகின்றனர். Corona Virus Disease 2019  என்பதன் சுருக்கமாகவும் 2019 இல் ஏற்பட்டது என்பதைக் குறிக்கவும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இத்தகைய இடங்களில் நாம் மகுடைத் தொற்றி 19 எனக் குறிப்பிட்டால் போதும்.
ஆனால் சிலர் முள்மூடி/முள்முடிக் காய்ச்சல் என்கின்றனர். மேலேவிளக்கியதன் அடிப்படையில் இவை தவறு என அறியலாம்.
சிலர் வைரசு(virus) என்பதைக் கடுநோய் எனக் குறிக்கின்றனர். உரிச்சொல்லாகவும் வரும் ‘கடு’ என்பதற்குக் கடுமை, வலி உண்டாதல், நஞ்சு முதலான பல பொருள்கள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் இவ்வாறு குறிப்பதாகவும் கூறி முள்மூடிக் கடுநோய் என்கின்றனர். வைரசு என்பதை நோய் நுண்மி என்பதன் சுருக்கமாக நோய்மி என்பதே சரியானதாக இருக்கும். மேலும் முதலில் சொன்னதுபோல் முள்மூடிக் கடுநோய் என்றால் முள் மூடியால் வந்த கடுநோய் எனப் பொருளாகும். இதேபோல் மகுடக்கடு என்பதும் பொருந்தி வராது.
சிபிச்சக்கரவர்த்தி என்பவர், “சிலவிடங்களில் பெயர்களுக்கான மதிப்பை வழங்க வேண்டும். மகுடக்கடு போன்ற பெயர்கள், இருக்கிறதிலே இது தான் கடுமையானது என்று பொருள் தரக்கூடும். ஆனால், அப்படி இருக்க தேவையில்லையே. ஆனால், அதன் மூலப்பெயரான கொரோனா அதன் அடையாளமாகிவிட்டது. எத்தனையோ கிருமிகளில் இருந்து இதை வேறுபடுத்திக்காட்ட இதன் பெயர் ஒன்றே போதுமானது” என்கிறார். கடு என்பது குறித்த கருத்து சரிதான். அதற்காக அயற்பெயரையே பயன்படுத்த வேண்டும் என்பது சரியாகாது. நம் மொழியில் சொன்னால்தான் அதன் கடுமை புரியும்.
 கரு, கருமம் அடிப்படையில் காரியம் உருவாகி அதில் இருந்து  கிரியம் > கிரியை > கிருமி என்னும் சொல் உருவாகி இருக்கலாம். முருகேசன் மருதாசலம் கேரளாவில் வழங்கும் பணிய மொழியில் இரி என்றால் கிருமி. இச்சொல்லே கிருமியாக மாறியிருக்கும் என்கிறார். இம்மொழி பேசுநர் உதகமண்டலத்திலும் வாழ்கின்றனர். இருப்பினும் நோய்நுண்மியான இதனை நோய்மி எனலாம்.
சொல்லாய்வு தொடர்பான முகநூல் குழுக்களில் பேரா. செ.இரா.செல்வக்குமார், பொறி. மணி.மணிவண்ணன்,  செய்(நாடார்) முதலான பலரும் தத்தம் கருத்துகளைக் குறிப்பிட்டுக் கொரானாவிற்கான சொற்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து. செயபாண்டியன் கோட்டாளம்,  “எத்தனைத் ‘தமிழார்வலர்’ இருக்கின்றனரோ அத்தனைப்  பெயர்கள் கொண்ட கரோனா வைரசு இறைவனுக்கு நிகரானது. வாழ்க!” என்கிறார். எனினும் பல்வேறு பெயர்கள் இருந்தால், படிப்பவர்கள் வெவ்வேறாகக் கருதிக் குழப்பம்தான் ஏற்படும். சுருக்கமாகவும் தவறான புரிதலுக்கு இடமில்லாததாகவும்  மூலச்சொல்லிற்கு ஏற்றதாகவும் சொல் ஒன்றையே நாம் பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் நான் COVID = மகுடை(த்தொற்றி) என்பதைச் சுருக்கமான ஏற்ற சொல்லாகக் கருதுகிறேன்.
சார்சு கொரானா, மெர்சு கொரானா,  நாவல் கொரனா என்றெல்லாம் சொல்கிறார்களே! அவற்றைப் பார்ப்போம்.
சீனாவில் 2002 இல் வெங்கடுமை மூச்சுநோய்க் குறி(severe acute respiratory syndrome) கண்டறியப்பட்டது. இதனால் ஏற்பட்ட மகுடைத் தொற்றுக்கு இதன் பெயரையே சூட்டினர். இதன் தலைப்பெழுத்துச்சொல்தான் சார்சு(SARS) என்பது. தமிழில் நாம், சுருக்கமாக வெம்மூ மகுடை எனலாம். 2002இல் 37 நாடுகளில் 8273பேர் பாதிப்பிற்குள்ளாகி 775பேர் மடிந்துள்ளனர்.
மத்தியக்கிழக்கு மூச்சுநோய்க் குறி மகுடை நோய்மி(Middle East Respiratory Syndrome Corona virus) என்பதன் ஆங்கிலப்பெயரின் தலைப்பெழுத்துச் சொல்லே மெர்சு(MERS) என்பது. உலக நல்வாழ்வு அமைப்பு(WHO)  இதனால் 1638பேர் பாதிப்புற்று 587பேர் இறந்ததாக் குறிப்பிடுகிறது. முழு உலகிற்கும் பெரும் அச்சுறுத்தல் எனப் பல ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது குறிப்பிட்டுள்ளனர். [யமீல் சக்கி(Jamil Zaki) உடன் பலர் 2012,  பெரியாசுலோவு(Pereyaslov)  உடன் பலர் 2013. பியாலெக்கு(Bialek) உடன் பலர் 2014, அசார்(Azhar) உடன் பலர் 2014 ].
செளதி உயிரறிவியல் இதழ்(Saudi Journal of Biological Sciences) சூலை 2016 முதலான இதழ்களிலும், நோய்கட்டுப்பாடு தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) முதலான அமைப்புகளின் அறிக்கைகளிலும்(2014)  பன்னாட்டுப் பொதுநலவாழ்வுக் களஞ்சியம் முதலான தொகுப்பு மலர்களிலும் இவை தொடர்பான கட்டுரைகளையும் செய்திகளையும் காணலாம். இவற்றில் உள்ள கருத்துகள் செவிடன் காதில் ஊதிய சங்குகளாகப் போனவற்றை விளக்கினால் கட்டுரை திசை மாறும்.
2002 இல் வந்த மகுடையைப் புதிய தொற்று என்றுதான் சொன்னார்கள். எனினும் அதற்குப் பெயர் சூட்டியதாலும் இப்போதைய மகுடையின் கொடுங்கடுமைத் தீவிரத்தாலும் இதனைப் புதிய மகுடை நோய்மி என்கின்றனர்.
மகுடையைத் திடீர்ப்பெருக்க(outbreak) நோய் எனலாம். இது கொள்ளை நோயா(epidemic)? என்றால் இத்தொற்று நோய், அதற்கும் மேலான தீங்கானது. ஒட்டுமொத்தமாகத் திருடி வாரிச்சுருட்டிக் கொண்டு செல்வதைக் கொள்ளை(யடித்தல்) என்கிறோம். அதுபோல் உயிர்களைப் பெருவாரியாகக் கொண்டு செல்லும் நோயைக் கொள்ளைநோய் என்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது நாடு, அல்லது கண்டம், அல்லது உலகம் முழுவதும்  பாதிப்பிற்குள்ளாக்கி உயிர்களைக் கொல்லும் நோயைப் பெரும்பரவல் நோய் என்கின்றர். இவ்வாறு சொல்வதை விட அகண்ட பரப்பில் ஏற்படும் தொற்றுநோய் என்பதால் அகல் பரப்புத் தொற்றி எனலாம். பெரும்பரப்பு என்பது பேரளவிலான பரப்பைக் குறிப்பது. அகல் பரப்பு என்பது முழுமையான பரப்பைக் குறிப்பது.
மகுடை(கரோனா) நோய் பற்றிய சொற்களை அறிந்ததன் மூலம் அந்நோய்பற்றிய விளக்கங்களையும் அறிந்துள்ளோம். இவை தொடர்பான என்.95 கவசம், சமூக விலகல் முதலான பிற சொற்களை அடுத்துத் தனியாகப் பார்ப்போம்.
இலக்குவனார் திருவள்ளுவன்
காண்க –
மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்!