தமிழைக் கற்காமல் பிற மொழிகளைக்கற்பதையே பெருமையாகக் கருதுவோரை விரட்டும் பாரதியார்
வேறுவேறு பாசைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
(பாரதியார் தேசிய கீதங்கள், போகின்ற பாரதம்:3)
(எப்போதும் எங்கும் ஆங்கிலத்தையே பயன்படுத்துவோர்) ஆங்கிலப் பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும், சீட்டாடும் போதும், ஆசாரத் திருத்த அவைகளிலும், வருணாசிரம சபைகளிலும், எங்கும், எப்போதும், இந்தப் ‘பண்டிதர்கள்’ ஆங்கிலம் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாத்திர விசாரணை, அரசநீதி நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுதவேண்டும்.
எழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்!
சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவைநடத்திய ‘கீழடியில் கிளைவிட்ட வேர்’ – சிறப்புக் கருத்தரங்கம், அரங்கு நிரம்பிய பார்வையாளர்களுடன் மாநாட்டைப் போல் எழுச்சியாக நடைபெற்றது.
தமிழர் தொன்மை நாகரிகத்தைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு குறித்து,கார்த்திகை 22, ஞாயிறு 2019 திசம்பர் 8 மாலை, சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை ‘கீழடியில் கிளைவிட்ட வேர்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடத்தியது.
சென்னை பெரியமேடு நற்கதிப்படை (தி சால்வேசன் ஆர்மி) அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைப் பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன் தலைமை தாங்கினார். கீழடியின் வரலாறு மறைக்கப்படுவது குறித்துத் தனது தலைமையுரையில் முழுநிலவன் எடுத்துரைத்தார்.
த.க.இ.பே. தலைவர் பாவலர் கவிபாசுகர் கீழடி அகழாய்வு எப்படித் தொடங்கியது என்பது குறித்து திரைக்கதைப் போல உரையாற்றி, எழுச்சிமிகு கவிதையும் வழங்கி வரவேற்புரையாற்றினார்.
முன்னதாக, நிகழ்வின் தொடக்கமாக இசைக்கலைஞர் திரு. த. இரவீந்திரன் அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரு. இரவீந்திரன் அவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் நினைவுப் பரிசு வழங்கினார்.
‘கீழடித் தொன்மை’ என்ற தலைப்பிலான, ஒளிப்படக் கண்காட்சியைத் திரைக்கலைஞர் திரு. பொன்வண்ணன் திறந்து வைத்து உரையாற்றினார். இக்கண்காட்சியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களின் ஒளிப்படங்கள் இடம் பெற்றன. பார்வையாளர்கள் பலரும் அதனை ஒளிப்படம் எடுத்துச் சென்றனர்.
‘மாண்டவர்களின் மறபிறப்பு’ என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் கருத்துரையாற்றினார். கீழடித் தமிழர் நாகரிகம், பாரத நாகரிகமாகவும், திராவிட நாகரிகமாகவும் திரிக்கப்படுவதைத் தனது பேச்சில் தோழர் பெ. மணியரசன் சுட்டிக்காட்டினார். கீழடிக்கும் ஆதிச்சநல்லூருக்கும் இன்னும் உள்ள தொல்லியல் ஆய்விடங்களுக்கு இன்று பெரும் எண்ணிக்கையில் செல்லும் இளையோர், நமது தமிழர் தொன்மை நாகரிகத்தை புரிந்து கொண்டு பரப்புவதோடு, உரிமை பெற்ற தமிழர்களாக எதிர்கால மக்கள் வாழ்வதற்குப் பணியாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிறைவாக, ‘மண்மூடிய தமிழர் வாழ்வு’ என்ற தலைப்பில், கீழடியை அகழாய்வு செய்து வெளிப்படுத்திய இந்தியத் தொல்லியல் துறை ஆய்வறிஞர் திரு. அமர்நாத்து இராமகிருட்டிணன் காட்சிப் படங்களுடன் கருத்துரையாற்றினார். கீழடிக்கு முன்னதாக வைகை ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களுக்கு ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு தமது வீட்டில் கிடைத்த கருப்பு சிவப்பு வகை சிறிய வகைத் தாழியைக் கொண்டு வந்து அளித்த ஒரு முதியவரின் படத்தை முதல் முறையாக வெளியிட்டு, இவர்களைப் போன்றோர்தாம் இந்த ஆய்வுக்கு முகாமையான உதவிகளைச் செய்தனர் என்று தெரிவித்தார். இதில் கிடைத்த தொல்லியல் சின்னங்களின் படங்களை மக்கள் மயமாக்கியது குறித்தும், இத்தொல்லியல் பணியைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் எடுத்துரைத்தார். நிகழ்வை, தோழர் நா. வைகறை ஒருங்கிணைத்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் பி. (இ)யோகீசுவரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலவன், அண்ணல் தங்கோ பெயரன் திரு. செ. அருள்செல்வன், ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம் முதலான பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் நிகழ்வில் பார்வையாளராகப் பங்கேற்றனர்.
அரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த பார்வையாளர்கள் பலர் நின்று கொண்டே சிறப்பு விருந்தினர்களின் உரையைக் கேட்டனர்.
செய்தித் தொடர்பகம், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை. =============================== பேச: 9841604017, 9677229494 முகநூல்: www.fb.com/thakaeperavai இணையம்: www.kannottam.com ===============================
உலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்
குடியுரிமைத் திருத்தச் சட்ட வரைவு, நாடு முழுவதும் கொண்டு வரப்படவுள்ள தேசியக் குடியுரிமைப் பதிவேடு ஆகியன மக்களாட்சிக்கு எதிரானதென நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
காசுமீரில் நடக்கும் வன்முறைகளைக் கண்டிப்பதோடு பல்வந்துசிங்கு இரசோனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை விலக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
உலக மனித உரிமைகள் நாளைதை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலுமிருந்து மனித உரிமை ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மனித உரிமை ஆர்வலரும், தில்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான திரு.பாரிவேந்தன் கலந்துரையாடினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திரு.இராசீவுகாந்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து விவரித்தார். கல்வி உரிமைச் சட்டம், புதிய கல்விக்கொள்கை ஆகியன குறித்துக் கல்வியாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் எடுத்துரைத்தார்.
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் திசம்பர் 8 2019 ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். அப்பாசறையின் பொறுப்பாளர்களான திரு.மதுசூதனன், திருமதி. சிவசங்கரி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
உலக மனித உரிமைகள் நாள் கருத்தரங்கின் இறுதியில் கீழ் வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1: குடியுரிமைச் சட்ட திருத்த வரைவு
பிறநாட்டு மதச்சிறுபான்மை ஏதிலிகளைப் பாதுகாக்கிறோம் எனும் பெயரில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் வண்ணம் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வரும் மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தியாவிலுள்ள இலங்கையைச் சார்ந்த மதச்சிறுபான்மையினரான ஈழத்தமிழர்களை இந்தச் சட்டத்திருத்தத்தின் கீழ் கொண்டு வராததின் அடிப்படையில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்கிறது என்பதையும் இந்த அவை சுட்டிக்காட்ட விரும்புகிறது.
தீர்மானம் 2: தேசிய குடியுரிமைப் பதிவேடு
இந்திய ஒன்றிய அரசு நாடு முழுமைக்கும் கொண்டு வரத் திட்டமிடும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின் மூலம் இலட்சக்கணக்கான மக்களை நாடற்றவர்களாக மாற்றும் மனிதாபிமானமற்ற திட்டத்தை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 3: காசுமீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள்
காசுமீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை இந்த அவை வன்மையாகக் கண்டிப்பதுடன், காசுமீர் மக்கள் அவர்களின் சொந்த மண்ணில் சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழ உலக மன்பதை குரல் கொடுக்க வேண்டுமென இந்த அவை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4: பல்வந்து சிங்கு இரசோனாவின் தூக்குத்தண்டனையை நீக்குதல்
எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலையில் கடந்த 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் சீக்கியர் பல்வந்து சிங்கு இரசோனாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தூக்குத் தண்டனையை உடனடியாக விலக்கி ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒன்றிய அரசையும், பஞ்சாபு மாநில அரசையும் இந்த அவை வற்புறுத்துகிறது.
தீர்மானம் 5: 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்தல்
ஆயுள் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தனு, பேரறிவாளன், செயக்குமார், இராபர்ட்டு பயசு, இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி தமிழ்நாடு அரசின் அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநரையும், இந்திய ஒன்றிய அரசையும் இந்த அவை வலியுறுத்துகிறது.
அடையாளப்படுத்தப் பட்டுள்ள ஈழத்தமிழர்களையும் புறக்கணித்துள்ள இந்திய ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டுமென இந்த அவை கோரிக்கை விடுக்கிறது.
தீர்மானம் 10: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழ்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (2)இன் படியும், ஆட்சி மொழிச் சட்டத்தின் 7 ஆவது பிரிவின் படியும் தமிழைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகக் கொண்டு வர மேலும் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் இந்த அவை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 11: மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து உயிரிழந்த 17 அப்பாவிகள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 அப்பாவி ஏழைகள் உயிரிழந்ததற்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதோடு மேற்கொண்டு இதனைப் போன்ற கெடுநிகழ்வுகள் நேரா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்த அவை கேட்டுக்கொள்கிறது
தீர்மானம் 12: பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் ஈழ ஏதிலிகளை நடத்தக் கோருதல்
இந்திய ஒன்றியத்தில் நீண்ட காலமாகத் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் ஏதிலிகளுக்கான பன்னாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு இந்தியாவில் வாழும் ஏனைய நாட்டு ஏதிலிகள் போல் அங்கீகரிக்கப்பட வேண்டுமென இந்த அவை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 13: கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல்
இந்திய ஒன்றியம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதையும், ஆரம்பக் கல்வியிலேயே பொதுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவதையும் கைவிடுமாறும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுமாறும் இந்திய ஒன்றிய அரசை இந்த அவை வற்புறுத்துகிறது.
தீர்மானம் 14: பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையும், பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து உடனடியாக அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளால் எவ்வித பாதிப்பும் நேராத வகையில் தகுந்த பாதுகாப்பு அளித்திட இந்திய ஒன்றிய அரசையும் மற்றும் மாநில அரசையும் வலியுறுத்துகிறோம்.