வியாழன், 16 ஜூலை, 2009

மாணவர்கள் மீது போலீஸ் தடியடி ஏன்? - முதல்வர் கருணாநிதி



சென்னை, ஜூலை 15: தலைமைச் செயலகத்தில் நுழைய முற்பட்டு காவல் துறை அதிகாரிகளைத் தாக்கி சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதால்தான் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறினார். எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால், இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பேரவையில் அதிமுக உறுப்பினர் டி. ஜெயக்குமார், பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் உறுப்பினர் மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், ம.தி.மு.க. உறுப்பினர் ஞானதாஸ் ஆகியோர் புதன்கிழமை எழுப்பிய சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் அளித்த பதில்:- ""சமச்சீர் கல்வி வேண்டும், பள்ளி - கல்லூரிகளில் நன்கொடையைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமிட்டு இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலர் செல்வா, அதன் மாநிலத் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முன் அனுமதி ஏதும் இன்றி தலைமைச் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைய செவ்வாய்க்கிழமை முற்பட்டனர். சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டிருப்பதை காவலர்கள் சுட்டிக்காட்டி அவர்களைத் தடுத்த நிறுத்த முற்பட்டபோது, தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முயற்சித்து அவர்கள் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். சட்டப் பேரவை நிகழ்ச்சிக்கு குந்தகம் ஏற்பட்டு விடாமலும் தலைமைச் செயலகத்துக்குள் மாணவர்கள் அத்துமீறி நுழைந்து விடாமலும் இருப்பதற்காக காவல் துறையினர் எச்சரிக்கை செய்தனர். அதைக் கேட்காமல் மாணவர்கள் நடந்து கொண்டதால், வேறு வழியின்றி குறைந்தபட்ச பலத்தை காவல் துறையினர் பிரயோகித்து கூட்டத்தினரைக் கலைத்தனர். 19 பேர் காயம்: இந்தச் சம்பவத்தில் ஒரு ஆய்வாளர், மூன்று காவலர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 16 பேர் காயம் அடைந்தனர். தற்போது மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் நான்கு பேர் "டிஸ்சார்ஜ்' செய்யப்படும் நிலையில் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்தபோது, குழுமிய 72 பேரில் 49 பேர்தான் மாணவர்கள் என்றும் மீதமுள்ள 23 பேர் மாணவர்கள் அல்லாதவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மாணவர்களின் பெயரால் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, அதை மேலும் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். பெற்றோருக்குத் தகவல்: இதில் கலந்து கொண்ட 49 மாணவர்களின் பெற்றோருக்கும் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் சட்ட மீறல்கள் குறித்து மாநகர ஆணையர் தகவல் அனுப்பியுள்ளார். மேலும் மாணவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147, 341, 353, 323, 188-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்'' என்றார் முதல்வர் கருணாநிதி. டி. ஜெயக்குமார் (அதிமுக): இந்தச் சம்பவத்தில் நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர வந்த மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் (பா.ம.க.): இந்தச் சம்பவத்தில் ஒட்டுமொத்த காவல் துறையின் மீது குறை இல்லை. தலைமைச் செயலகப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, போராட்டத்தில் ஈடுபடுவோரைச் சமாதானப்படுத்தும் பக்குவம் இல்லை. மாறாக, போலீசார் தடியடி நடத்தியதில் மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். பாக்கியா, அனீஃப் என்ற இரண்டு மாணவர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். முதல்வர் கருணாநிதி (குறுக்கிட்டு): உயிருக்குப் போராடும் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். மகேந்திரன் (மார்க்சிஸ்ட்): மாணவர்கள் மீது தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய காவல் துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேணடும். சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): போராட்டத்தில் ஈடுபடுவோரை ஒடுக்குவதில் தி.மு.க. அரசின் அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. சமச்சீர் கல்வி, பள்ளி - கல்லூரிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுத்தல் ஆகிய மாணவர்களின் கோரிக்கைகளில் எந்தவிதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
கருத்துக்கள்

அரசின் கொள்கைக்கு உடன்பாடாகத்தான் மாணாக்கர்கள் வந்துள்ளனர். அரசு இப்படிப்பட்ட கோரிக்கைகளை வரவேற்க வேண்டும். வந்திருந்தவர்களில் சார்பாளர்கள் சிலரையாவது தலைமைச் செயலகத்திற்குள் நுழைய இசைவளித்து உரியவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாணாக்கர்கள் அல்லாதவர்கள் எனப்படுவோர அஞ்சல் வழியிலோ வேறு வகையிலோ கற்பவர்களாகக் கூட இருக்கலாம். எவ்வாறாயினும் இளைஞர்கள் அரசின் கொள்கைனை விரைவில் நடைமுறைப்படுத்தும் கோரிக்கையுடன்தான் வந்துள்ளனர். காவல்துறையினர் ஏவலில் அரசு இயங்கினால் ஆட்சிக்குத்தானே அவலம். எனவே அனைவர் மீதான வழக்குகளை நீக்க வேண்டும். இனி இதுபோல் வருபவர்களை ஒழுங்கு படுத்தி நமது கோரிக்கைகளைச் செவி கொடு்த்துக் கேட்டார்கள் என்ற நிறைவுடன் திரும்பிப் போகும் வண்ணம் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/16/2009 7:26:00 AM

கோட்டை முன்பு பேரணி நடத்த முயன்ற மாணவர்கள் மீது போலீஸ் தடியடி



சென்னை, ஜூலை 14: சமச்சீர் கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, வலியுறுத்தி தலைமைச் செயலகம் (கோட்டை) நோக்கி, பேரணி நடத்த முயன்ற மாணவர்கள் மீது போலீஸôர் செவ்வாய்க்கிழமை தடியடி நடத்தினர். இதில், மாணவிகள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 மாணவிகள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தைச் (எஸ்.எஃப்.ஐ.) சேர்ந்த 120 பேர் தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தடையை மீறிச் செல்ல திட்டமிட்டனர்.
....................
................
விரிவான செய்திக்குக் கோடிட்ட வரிகளைச் சொடுக்குக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக