ஒரு நாட்டு மக்களின் மனித உரிமைகளைக்
கட்டுப்படுத்தவோ அல்லது அங்குள்ள ஒரு மனித இனத்தையே அழித்துவிடும் போக்கில்
அந்த நாட்டின் ஆட்சி ஈடுபடவோ முற்பட்டால், அத்தகைய மனிதநேயமற்ற
நடவடிக்கைகளைத் தடுத்திடவும் - ஆணவப் போக்குடைய ஆட்சியைத் தக்கபடி
திருத்தவும் ஐக்கிய நாடுகள் அவைக்குப் பொறுப்பும் அதன் நடவடிக்கைகளுக்குத்
தீர்மானங்கள் மூலமான அதிகாரமும் தரப்பட்டுள்ளன.
ஆட்சியின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து ஆளுங்கட்சிக்கு
வேண்டாதவர்களை, வேறுபட்ட இன மக்களை அழித்தொழிக்கும் முறையை 1933-இல்
ஜெர்மனியில் எதேச்சாதிகாரி ஹிட்லர் துவக்கி வைத்தார்.
முதலாவதாக "நாஜி' கட்சியைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம்
சட்டவிரோதமான கட்சிகளாக நீக்கப்பட்டன, அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர், யூத
இனத்தவர்கள் கைது செய்யப்பட்டு "கான்சென்ட்ரேஷன் காம்ப்'
(திருத்தியமைக்கும் முகாம்) என்ற இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடைப்பிடித்த அரசியல் கொள்கையை ஒருவன் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், பிறந்த
இனத்தை ஒருவனால் எப்படி திருத்திக்கொள்ள முடியும்? அப்படிப்பட்டவர்களை மனித
இனத்திலிருந்தே - மனித வாழ்விலிருந்தே மாற்றிப் பிணமாக்கும் திட்டங்களில்
ஹிட்லர் ஆட்சி ஈடுபட்டது. அதற்காகச் சித்ரவதை சிறைக்கூடம் பயன்பட்டது.
முதலாவதான சித்ரவதைச் சிறைக்கூடம் 1933 மார்ச் மாதத்தில் ஜெர்மனியில்
டச்சோவ் என்ற ஊரில் கட்டப்பட்டது. 1933 முதல் 1945-இல் ஹிட்லர் ஆட்சி
தோற்கடிக்கப்படும்வரை அந்த ஒரு முகாமில் மட்டும் அடைக்கப்படடவர்கள்
எண்ணிக்கை 35 லட்சம். அவர்களை நிறுத்திவைத்தும், ஓடவைத்தும் குறி பார்த்து
சுட நாஜிப் படைவீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சிக் களமாக அதைப்
பயன்படுத்தினார்களாம். போர் முடியும் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்களை
வெளியேற்றி அவர்கள் சென்ற இடம் தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டதாம்.
1939-க்குப் பிறகு ஹிட்லரின் படைபலம் ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளை
அடிமைப்படுத்தியபோது, அந்த நாடுகளில் 1,200 சித்ரவதை சிறைச்சாலைகள்
உருவாக்கப்பட்டன.
இரண்டாவது உலகப் போரில் மாண்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6 கோடி
இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இவர்களில் நேரடியான போரிலும்,
தோல்விக்குப் பிறகு மறைவாகவும் ஆயுதங்கள் தாங்கி மாண்ட போர் வீரர்களைவிட,
குண்டு வீச்சுகளில் சிக்கியும் - பஞ்சம், பட்டினி, நோய் ஆகியவற்றால்
பாதிக்கப்பட்டும் - இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 4 கோடிக்குமேல் இருக்கும்
என்று கருதப்படுகிறது.
ஹிட்லர் படையெடுப்பினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் அதிகமான அளவில் மாண்டவர்கள் பொதுமக்கள்தாம்.
இரண்டாவது உலகப் போர் முடிந்ததும், மீண்டும் ஒரு பிரமாண்டமான அழிவுப்
போரைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்ட 1945 ஜூன் 26-இல் அமெரிக்காவின்
சான்பிரான்சிஸ்கோ நகரில் 50 நாடுகள் கூடி "ஐக்கிய நாடுகள் சபை' (யூ.என்.ஓ.)
என்னும் அமைப்பை உருவாக்கின.
ஐக்கிய நாடுகளின் குறிக்கோள்களை விளக்க "ஐ.நா.ஆவணம்' வெளியிடப்பட்டது.
அதன் முன்னுரையில் "ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய குறிக்கோள், உலக
நாடுகளிடை ஒருமைப்பாட்டையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதுடன், இனம்,
பால், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளைத் தவிர்த்து, அடிப்படை மனித
உரிமைகளையும் சுதந்திரத் தன்மையையும் பாதுகாப்பதுதான் முதன்மையானது'' என்று
வலியுறுத்தப்பட்டது.
இத்தகைய ஆவணம் எழுத்து மூலமான ஒரு அறிமுகப் பத்திரமே தவிர, அது
சட்டபூர்வமான ஆதாரமாக ஆகாது என்பதால், அதில் பங்குபெரும் நாடுகள் அவற்றை
ஏற்றுக்கொள்ளவும் நிறைவேற்றவும் சட்டபூர்வமான விதிமுறைகளை வகுத்துக்கொள்ள
வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் கருதினார்கள். அதன்படி, "மனித உரிமைகள்
பற்றிய உலக அறிவிப்பு-1948' என்பது ஐ.நா. அவையின் பொதுக்கூட்டத்தில் 1948
டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
போருக்குப் பிறகு வாழ்விழந்து அலைந்து திரியும் மக்களைப்
பாதுகாப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் "அகதிகள் நிவாரண அமைப்பு' 1950
டிசம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதனையொட்டி மக்களின் அடிப்படை
உரிமைகளை நிர்ணயிக்கும் நோக்கத்தில் 1951 ஜூலை மாதத்தில் ஐ.நா. சபையின்
தீவிரமான ஆய்வுக்குப் பிறகு "ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு'
ஏற்படுத்தப்பட்டது.
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், ஒரு கடும் போர் நடைபெற்று அதில்
வெற்றிபெறக்கூடிய வாய்ப்பை உடைய ஒரு நாடு, வெற்றி அடைவதற்குச் சிறிது
முன்னும் வெற்றி அடைந்த பிறகும், இன-மொழி-கலாசார அடிப்படையில் - தோல்வி
அடைந்த மக்களைக் குறிவைத்து அடிமைகளாக அகதிகளாக, அழித்திட
ஆரம்பித்துவிடும்.
உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம் முழுமையாக வெற்றி
அடைந்துவிட்டதாகவும், போராளிகளின் தலைவர்களும் முகாம்களும் அடியோடு
அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இனி அமைதி வழியில் மக்கள் வாழ்வதற்கு இலங்கை
அரசு ஆக்கப் பணிகளை நிறைவேற்றும் எனவும் 2009 மே 19 இலங்கை குடியரசுத்
தலைவர் ராஜபட்ச அறிவித்தார்.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழர்களுக்கு இலங்கை
அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட இன அழிவு கொடுமைகளைக் கண்டித்து 2009 மே
இறுதியில் ஜெனீவாவில் கூடிய மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில், ஆஸ்திரியா,
பல்கேரியா, பெல்ஜியம், சைப்ரஸ், செக்., எஸ்போனியா, எஸ்டோனியா, பின்லாந்து,
ஜெர்மனி, கிரேக்க நாடு, ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க்,
நெதர்லாந்து, போலந்து, சுலோவேனியா, சுவீடன், இங்கிலாந்து உள்ளிட்ட 20
ஐரோப்பிய நாடுகள், இலங்கை செய்த போர்க்காலக் குற்றங்களை ஆராய ஒரு
தீர்மானத்தை முன்வைத்தன. அப்பொழுது அமெரிக்கா அந்த அமைப்பில் உறுப்பினராக
இல்லை.
ஐ.நா. மனித உரிமை அமைப்பில் உள்ள 47 நாடுகளில் 20 நாடுகளின் ஆதரவைப்
பெற்ற தீர்மானம் அது. தீர்மானம் இன்னும் கடுமையாக, தெளிவாக இருக்க வேண்டும்
என்று சில நாடுகள் கருதின. ஆயினும் விவாதம் நடைபெறும்பொழுது திருத்தங்கள்
கொடுக்கலாம் எனப் பல நாடுகள் காத்திருந்தன.
ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்குக்
காரணம், ஹிட்லரின் நாஜிச ஆட்சியில் மக்கள்பட்ட அவதிகளை - அழிவுகளை அந்த
நாட்டுத் தலைவர்கள் மறந்துவிடவில்லை. மீண்டும் அத்தகைய இன அழிவு ஆட்சி
எங்கு தலையெடுத்தாலும் அதை அவர்கள் வெறுத்தார்கள். கடுமையாக எதிர்க்க
முற்படுகிறார்கள்.
ஐரோப்பிய நாடுகள் அனுப்பியத் தீர்மானத்துக்கு எதிராக, இலங்கையின்
பிரதிநிதி, போருக்குப்பின் இலங்கை பல புனரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றி
வருவதாகவும், அதற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டும் என்றும் ஒரு
எதிர்ப்புத் தீர்மானத்தை அனுப்பி வைத்தார்.
இலங்கைத் தீர்மானத்தை ஆதரித்து அதன் மனுவில் கையெழுத்திட்ட நாடுகள்:
இந்தோனேசியா, சீனா, செüதி அரேபியா, பாகிஸ்தான், மலேசியா, பஹ்ரைன்,
பிலிப்பின்ஸ், கியூபா, எகிப்து, நிகாரகுவா, பொலீவியா ஆகியவை மட்டுமல்ல,
இந்தியாவும்கூட என்பதுதான் வேதனையான ஒன்று.
நியாயமாகப் பார்த்தால் இலங்கைத் தமிழர்கள் மீது நடைபெற்றுவரும் இன
அழிவுச் செயல்பாடுகள் பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பில் முதலில்
நின்று கண்டனத் தீர்மானத்தை இந்தியாதான் கொடுத்திருக்க வேண்டும்.
இந்தியாவுக்குப் பதிலாக ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை
ஆதரிக்கவில்லை என்பதுடன் நிற்காமல், குதிரை கீழே தள்ளியதுமல்லாமல்
குழியையும் பறித்த கதையாக, இலங்கை அரசு செய்த நடவடிக்கைகளுக்குப்
பாராட்டுத் தெரிவிக்கும் படுபாதகத் தீர்மானத்தில் இந்தியாவின் பிரதிநிதி
கையெழுத்தும் போட்டார் என்றால், அதற்குக் காரணம் இந்திய அரசாங்கம் எடுத்த
முடிவு அது என்பதால்தான்.
முழுவிவரங்களைப் பெறுவதற்காக, நேரடியாக ஜெனீவா மனித உரிமை அமைப்புக்கு,
அங்கு விவாதம் பற்றிய நடவடிக்கை விவரங்களைக் கேட்டு, முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் என்ற முறையில் நான் வேண்டுகோள் அனுப்பினேன். அந்த விவரங்கள்
முழுமையாக நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை நிலையக்
காப்பகத்தில்தான் கிடைக்கும் என்று பதில் வந்தது. அதன்படி நியூயார்க் ஐ.நா.
தலைமை அமைப்புக்கு நான் எழுதினேன், ஜெனீவா அமைப்பில் நடைபெற்ற கூட்டத்தில்
தரப்பட்ட தீர்மானத்தின் பிரதியையும் விவாதங்களின் முடிவையும் எனக்கு ஐ.நா.
தலைமை அமைப்பு அனுப்பியது.
இலங்கைத் தமிழர்களுக்கான இன அழிவை, ஆபத்துகளை வெளிப்படுத்தி தக்க
நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இருந்த அக்கறை, இந்திய
அரசாங்கத்துக்கு ஏற்படவில்லை என்பதைவிட, எந்த இலங்கை அரசாங்கம் இலங்கைத்
தமிழர்களுக்கு அநீதியை - இன அழிவை அர்ப்பணித்ததோ, அந்த அரசாங்கத்துக்கு
இந்திய அரசாங்கம் ஆதரவு தந்து, அடிபணிந்து, ஆராதனை செய்ததுதான் இந்திய
அரசியல் வரலாற்றில் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத அவமானம்.
அப்பொழுது இலங்கை முன்வைத்த பாராட்டுத் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க
வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி. ராஜாவும்
எதிர்க்கட்சியினர் பலரும் எழுப்பிய வேண்டுகோள்களை இந்திய அரசாங்கம்
அலட்சியப்படுத்தியது. இந்தியாவின் போக்கின் காரணமாகத்தான் ஐரோப்பிய நாடுகள்
தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்தன.
இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்கு ஊறு செய்த இலங்கை அரசின்
செயல்பாடுகள் பற்றி எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு, தகுந்த பொறுப்பை -
நடவடிக்கைகளை - இலங்கை அரசு எடுக்காமலிருப்பது குறித்து அமெரிக்கா அனுப்பிய
தீர்மானம் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் 2013 மார்ச் 20 விவாதத்துக்கு
வந்தது.
சென்ற தடவை இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டும் தீர்மானத்தில்
கையெழுத்திட்டு ஆதரவு தந்த இந்தியா, இந்தத் தடவையும் இலங்கையை ஆதரிக்கும்
என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் திமுக, அதிமுக, மதிமுக
மற்றுமுள்ள கட்சிகள் ஒன்றுபட்டு விவாதத்தைக் கிளப்பியதால்,
நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இலங்கை அரசு அங்கு வாழும்
தமிழர்கள்மீது நடத்திவரும் அழிவுப் போராட்டத்தைப் பெரும்பாலான
எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகக் கண்டித்து அமெரிக்கத் தீர்மானத்தை மேலும்
கடுமையாக்கும் விதத்தில் திருத்தங்களை இந்திய அரசாங்கம் கொண்டுவர வேண்டும்
என வலியுறுத்தின.
நாடாளுமன்ற விவாதங்களைவிடக் கடும் கண்டனம் தமிழகம் முழுவதும் பெரும்
வகையில் எழுந்தது. அதிலும் கல்லூரி மாணவர்கள் எடுத்த ஊர்வலங்களும் கட்சி
சார்பற்ற பல்வேறு அமைப்புகளின் உண்ணா நோன்புகளும் கதவடைப்புகளும் பெரும்
அளவில் எழுச்சியை ஏற்படுத்தின.
2009-இல் இலங்கையை நட்பு நாடாகக் கருதி இந்திய அரசு எடுத்த அலட்சியப் போக்கை இனியும் தொடர முடியாது என்று தெரிந்தது.
இலங்கைக்கு இந்தத் தடவை ஆதரவு கொடுப்பது இந்திய ஆளுங்கட்சிக்கு ஆபத்தான முடிவாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
போர் முடிந்து அமைதி துவங்க ஆரம்பித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம்
அறிவித்து 47 மாதங்களாகியும், போர்க்காலத்தில் ஏற்படும் அழிவைவிட அதிகமான
துயரங்களைப் பிறந்த நாட்டில் அகதிகளாக, அடிமைகளாக ஈழத் தமிழர்கள்
அனுபவித்தது தெரியவந்தது. இலங்கை அரசாங்கமே இதற்குக் காரணம் என்கிற கசப்பான
உண்மையை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியது.
2009}இல் மனித உரிமை அமைப்பு கூடியபொழுது இந்தியாவின் பிரதமராக
இருந்தவர் மன்மோகன் சிங்தான். அப்பொழுதும் பிரதம மந்திரிக்கு பிரதம
ஆசிரியராக -மேற்பார்வையாளராக இருந்தவர் சோனியா காந்திதான். அதே நிலைமைதான்
இப்போதும் தொடர்கிறது.
அப்பொழுது பிரதமருக்குப் பிரதம ஆசிரியராக இருந்த சோனியா காந்திதான்
தற்பொழுதும் பிரதம ஆசிரியர். ஆனாலும் ஒரு சிறு மாறுதல் - சோனியா காந்தி
பிரதம ஆசிரியராக நீடித்தாலும். துணைப் பிரதம ஆசிரியராக ராகுல் காந்தி
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரே பாடம், கைகட்டி நிற்பவர் ஒரே மாணவர். ஆனால், ஒரே சமயத்தில்
நியமிக்கப்பட்டுள்ள இரு ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில்
சொல்லியாக வேண்டும்.
இரண்டு ஆசிரியர்களுக்கும் உள்ள தகுதி, திறமைகள் என்னவென்றால்
நேரு-காந்தி குடும்பப் பரம்பரையின் நான்காவது தலைமுறையின் "தவிர்க்க
முடியாத' தலைவர்கள். காந்திக்கும் நேருவுக்கும் கடமைப்பட்ட பாரத தேசியக்
காங்கிரஸ் கட்சிதான் குடும்பப் பரம்பரை ஆட்சியின் பாரத்தைச் சுமக்க
வேண்டியதாக ஆகிவிட்டது.
குடும்ப ஆட்சி என்றதும், இலங்கை அரசாங்க நிர்வாகத்தில் ராஜபட்ச
குடும்பத்தினர் ஒரு பரவலான பேராட்சியைப் பங்குபோட்டு நடத்தி வருகிறார்கள்.
தற்பொழுது அங்கு உள்ள முக்கியமான அரசாங்கம் - அதனையொட்டிய அதிகார பீடங்கள்
எல்லாவற்றிலும் ராஜபட்சவின் நெருங்கிய குடும்பத்தினர் பலர் ஏகபோக
ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். அவை பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம்.
மகிந்த ராஜபட்ச குடியரசுத் தலைவர், அவரது தம்பி கோத்தபய ராஜபட்ச ராணுவ
அமைச்சகத்தின் செயலாளர் - இலங்கை அரசமைப்பின்படி குடியரசுத் தலைவர் கீழ்
ராணுவம் இருக்க வேண்டும். இரண்டாவது தம்பி பாசில் ராஜபட்ச பொருளாதார
மேம்பாட்டுத் துறையின் அமைச்சர், நான்காவது தம்பி சமல் ராஜபட்ச அந்த நாட்டு
நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர். ராஜபட்சவின் மருமகன் சசீந்தர ராஜபட்ச, உவி
மாநிலத்தின் முதன்மந்திரி, நாடாளுமன்ற அவைத்தலைவர் சமல், ராஜபட்சவின் மகன்.
சமீந்தர ராஜபட்ச, ஸ்ரீலங்கா விமானக் கம்பெனியின் டைரக்டர், மகிந்த
ராஜபட்சவின் மருமகன்கள்: ஜலியா விக்ரமசிம்கா அமெரிக்காவில் இலங்கை அரசின்
தூதர், உதய விக்ரமசூரியா ருஷியாவில் இலங்கை அரசின் தூதர், பிரசன்ன
விக்ரமசூரியா விமான நிலையங்களின் சேர்மன், மகிந்த ராஜபட்சவின் மைத்துனர்
நிஷாந்த விக்ரசிங்கா ஸ்ரீலங்கா விமானக் கம்பெனியின் சேர்மன்.
அரசாங்கத்தையும் அரசியலையும் "நேரு-காந்தி' பெயர்களை இணைத்து ஒரு
குடும்பம் பரம்பரைப் பாசத்துடன் இந்தியாவில் தலைமையேற்று ஆட்சி
நடத்துகிறது.
இலங்கைத் தீவில் ராஜபட்ச குடும்பப் பரம்பரையின் ஆட்சி
ஆரம்பித்திருக்கிறது. அது பரவலான ஆட்சி, அமெரிக்கா-ரஷியா பல நாடுகளிலும்
பரவியுள்ளது.
குடும்பப் பாசம் மிக்கவர்களாக இருக்கும் இந்திய ஆட்சியாளர்களும் இலங்கை
ஆட்சியாளர்களும், நெருங்கிய நட்புப் பாராட்டுவதில் வியப்பென்ன இருக்கிறது?
குடும்பங்கள் குடும்பங்களுடன் இணைந்து தேசத்தைத்தான் கொள்ளையடித்தன
என்றால், இப்போது குடும்பங்கள் சர்வதேச அளவில் கைகுலுக்கி, ஆரத் தழுவி
ஒருவர் மற்றவரைப் பாதுகாக்க முற்பட்டிருக்கிறார்கள். பாவம், அப்பாவி
மக்கள்!
கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
( தமிழ் இதழ்களில் ஆங்கிலப்பதிவு உள்ளது போல் ஆங்கில இதழில் தமிழ்ப்பதிவை வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில்...)