ஆலயத்தில் வழிபாடு தமிழில் இல்லை
அங்காடிப் பெயர்ப்பலகை தமிழில் இல்லை
ஞாலமதில் தமிழனுக்கு நாடு இல்லை
நாடின்றிப் போனதனால் நாதியில்லை
சீலமிகு தமிழ் மழலைப் பெயர்களெல்லாம்
சீர்மேவும் செந்தமிழில் இல்லை இல்லை
ஓலமிடல் நன்றல்ல; ஒன்று சேர்ப்போம்
ஒருமுறைதான் பிறப்புண்டு; நின்று பார்ப்போம்
திரைஇசையில் தூயதமிழ்ப் பாடல் இல்லை
திரைப்படங்கள் பெயர்கூடத் தமிழில் இல்லை
கரைபுரளும் காவிரிக்கு உறுதி இல்லை
கன்னடத்துத் தேசியத்தில் தமிழ்நாடில்லை
திரைகடல் சூழ் ஈழத்தில் அமைதி இல்லை
தீர்த்துவைக்கப் பாரதமும் விரும்பவில்லை
விரைந்தொன்று சேருங்கள் தமிழர்களே
விடிவுக்கு முடிவெடுப்போம் வெற்றி காண்போம்
அன்னைத் தமிழ்படிக்க ஆணையிட்டால்
அடுக்குமா என்கின்றார் தமிழ்ப்பகைவர்
கன்னலின் சாறுதனை ஒதுக்கிவிட்டுக்
கள்ளினைப் பருகிடுதல் நன்றோ சொல்வீர்
தன்னையே தந்தேனும் தமிழகத்தில்
தாய்மொழியில் கல்விபெறத் துணையிருப்போம்
என்னவிலை தந்திடவும் தயங்கமாட்டோம்
என்னதான் விளைவெனினும் துணிந்து நிற்போம்
- த.மாசிலாமணி: *நின்று பார்ப்போம்*: நந்தன் இதழ் சனவரி 16-31“. 2000
--