வியாழன், 3 ஏப்ரல், 2025

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 126 & 127; நூலரங்கம்

 




கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643) 

தமிழே விழி!                                                    தமிழா விழி!

பங்குனி 23, 2056  ஞாயிறு 06.04.2025  காலை 10.00 மணி

நூலாய்வு

உடல் உறுப்புகள் விளக்கம், இலக்குவனார் திருவள்ளுவன்

 




பழந்தமிழர்கள் உடலுறுப்புகளுக்கு வைத்துள்ள பெயர்களும் அவர்களது அறிவியல் அறிவை உணர்த்துன்றன. சான்றாகச் சிலவற்றைப் பார்ப்போம்.

‘உடு’ என்பதன் அடிப்படையில் உயிருக்கு உடுப்பு போல் அமைந்தது உடல் எனப்பட்டது.

பண்டத்தை உள்ளே வைத்துக்கட்டப்பட்டது பொதி. அதுபோல் உறுப்புகளை அடக்கிய உடல் ‘பொதி’  எனப்பட்டது.  கட்டப்படுவதை யாக்கை என்பர்.

தோல், நரம்பு, எலும்பு, தசை, குருதி முதலிய தாதுக்களால் யாக்கப் பெற்றிருப்பதால்  யாக்கை என்றனர்.

கூடை முடையப் பெற்றிருப்பது  போல் ‘தாதுக்களால்’   முடையப்பட்டது முடை என்று சொல்லப்பட்டது.

உயிர் புகுவதற்குரியது உடல்; ஆதலின் உடலைப்  புகல் என்றனர்; திரண்டு அமைந்ததைப் பிண்டம்  என்பர்; உயிர்மிகளால் திரண்டுஅமைந்த உடல் பிண்டம்  எனப்படுகிறது. இவை  போன்று அறிவியல் உண்மையின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் உடலுக்குக் குறிக்கப்பெற்றுள்ளன.

உடலின் உள் உறுப்புகளுக்கு வாயிலாக அமைந்துள்ள உறுப்பிற்கு வாய் எனப் பெயர் இட்டுள்ளனர்.

உதடு என்றால் விளிம்பு என்று பொருள். வாயின் விளிம்பாக அமைவதால்  உதடு என்றனர்.

உதடுகள் மலரிதழ்கள் போல் மென்மையாக உள்ளமையால் இதழ்கள் என்று குறிக்கப் பெற்றன.

அதர் என்றால் வழி என்றுபொருள். உள்ளுறுப்புகளுடன் தொடர்பு கொள்ளவழியாக அமைவதால் இதழ்கள் அதரங்கள் என்று அழைக்கப் பெற்றன.

முகத்தில் ‘தொளை’  போன்ற பகுதியில் அமைந்த உறுப்புகள் அப்பொருளில் கண்கள் எனச் சுட்டப் பெற்றன.

கட்டடத்தின் மேனிலை முகப்பிற்கு நெற்றி என்று பெயர். உடலின் மேனிலையில் முன்பகுதியில் அமைந்துள்ள உறுப்பு நெற்றி எனப்பட்டது.

துளை அல்லது குழியுடைய பொருள்களைக்  கன்னம்  என்பர். எனவேதான் சுவரில் திருடர்கள் போடு துளைக்குக் ‘கன்னம்  வைத்தல்’ என்கின்றனர். இதுபோல் முதலில் துளையுள்ள காதிற்குக் கன்னம்  என்று பெயர் வைத்திருந்துள்ளனர். பின் அப்பெயர் முகத்தில் குழிவாகத் தோன்றும்  கதுப்பிற்குக் கன்னம்  எனப் பெயராக மாறியது.

உடலுக்கு முகப்பாக அமைவதால் முகம் என்றும் முகத்தில்  முனை போல் உள்ளதால்  மூக்கு என்றும் பெயர் வைத்துள்ளனர்.

வாயின் இறுதிப் பகுதி என்ற பொருளில் வயிறு என்றும் இரை தங்கும் பை என்ற பொருளில் இரைப்பை என்றும் பெயரிட்டனர்.

நுரை போன்ற தோற்றத்தில்  பல  காற்றறைகள் கொண்ட உறுப்பிற்கு நுரையீரல் என்று பெயரிட்டனர்.

உடலின் கால் பாகத்தில்  அமைவதைக் கால் என்றும் அரைப்பகுதியில் அமையும் உறுப்பிற்கு அரை என்றும் உடலின் நடுவாகிய இடைப்பகுதியில்  அமைவதால் இடை என்றும் பெயரிட்டனர்.

குருதி ஓட்டத்தில் நடுவாக இருந்து செயல்படும் உறுப்பிற்கு நடு என்னும் பொருளின் அடிப்படையிலான  நெஞ்சம் என்று பெயரிட்டனர்.  அகன்ற பரப்புடைய உடல் பகுதி என்பதால் ‘ அகலம்’  என்றனர்; பின்னர் அகலம் என்னும்  பொருளுடைய ‘மார்பு’  என்னும் பெயரையும்  சூட்டினர்.

உடலின் பக்கவாட்டில் அமைந்த உறுப்புகளுக்குப் பக்கம் என்னும் பொருளும் செயல்பாடுகளுக்குக் காரணமாக அமைவதால்  செயல் என்னும் பொருளும் வரும் வகையில் கைகள் எனப் பெயரிட்டனர்.

உடலில் தொடுத்தாற்போல் கால்கள் அமைய இணைப்பாக அமையும் உறுப்புகளுக்குத் தொடைகள் எனப் பெயரிட்டனர்.

உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடனிருப்பது உடல் அல்லது உடம்பு எனப்பட்டது. மேலும், முழு உடல் உடம்பு எனவும் தலையற்ற உடம்பு உடல் எனவும் உடலற்ற தலை முண்டம் எனவும் உயிரற்ற உடம்பு உடலம் எனவும் கூறப்பெறும். குஞ்சு பொரித்தபின் அதனுடனான தொடர்பு நீங்கப் பெற்றதே முட்டைக் கூடு. உயிர் நீங்கிய பின் தொடர்பற்றுப் போகும் உடம்பும் குடம்பை அல்லது கூடு எனப் பெற்றது.

உயிர் நீங்கிய உடல், கட்டை போல் கிடப்பதால் ’ கட்டை’  என்றும் கூறினர். கட்டை போல் எரிவது அல்லது மண்ணோடு மண்ணாகப் போவதுதானே உடல்!

 இவ்வாறு அனைத்து உறுப்புகளின் பெயர்களும் தோற்றம் அல்லது செயல்முறை அடிப்படையில் அறிவியல் உணர்வுடன் சூட்டப்பட்டுள்ளன. 

     புதிதாய் முளைக்கும்  மீசைக்கு அருப்பம்  என்றும்மெல்லிய அரும்பு மீசையைக் கரிக்கோடு என்றும்  வளர்ந்த மீசையை மீசை என்றும்  குறித்தனர். தாடி ‘அணல்’  எனப்பெறும்.

புதன், 2 ஏப்ரல், 2025

இலக்குவனார் திருவள்ளுவனுக்குப் படைப்பாற்றல் அரசு விருது

 




விருது வழங்கிப் பாராட்டியது.







புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின் நிறுவனர்,தலைவர், செயலர், பொருளர், பிற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருந்தனர்.

யானையியல் – இலக்குவனார் திருவள்ளுவன், புதிய அறிவியல்




(யானை) இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யானையின் மதிப்பை வெளிப்படுத்தும். யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான பல பெயர்கள் உள்ளன.

தும்பி, கரிணி, தோல், கண் டாலி,
கும்பி, கறையடி, குஞ்சரம், பகடு,
களிறு, பூட்கை, கரி,மா தங்கம்,
வழுவை, வேழம், வாரணம், மொய்யே,
உம்பல், எறும்பி, உவாவே,பொங்கடி,
தந்தி, அத்தி, கடிவை, கயமே,
நாகம், சிந்துரம், தூங்கல், நிருமதம்,
புழைக்கை, வல்விலங்கு, நால்வாய், புகர்முகம்
மதாவளம், தந்தா வளம்,மருண் மாவே,
கைம்மா(ப்), பெருமா, மதமா, வயமா,
மத்த மா,வே மதகயம், ஆம்பல்,
இபம்(ஏ), போதகம், களபம்,யா னைப் பெயர்
(பிங்கல நிகண்டு பா. 2412)

என யானைக்குரிய 45 பெயர்களைப் பிங்கல நிகண்டு கூறுகின்றது. (இவ்வாறு 170 பெயர்கள் உள்ளன என விக்சனரி கூறுகிறது. தமிழில் இருந்து பிற மொழிக்கு மாறி மீண்டும் தமிழில் பழக்கத்திற்கு வந்துள்ள சில சொற்களும் இவற்றில் அடங்கும்.) யானையின் தன்மைகளை உணர்ந்து இப் பெயர்கள் பழக்கத்திற்கு வந்துள்ளன எனில் யானையைப் பற்றிய விரிவான அறிவு அனைவருக்கும் இருந்திருக்கின்றது என்றுதானே பொருள்.

யானைக்கான எலிபண்ட் (Elephant) என்னும் சொல்லிற்கு இலத்தீன் மொழியில் பெரு வளைவு என்று பொருள். பெரிய விலங்காகவும் வளைந்த தோற்றத்துடனும் காணப்படுவதால் இப் பெயரை வழங்கி உள்ளனர்.

பொதுவாக யானையின் தோல், செவி, முதலான சில வெளி உறுப்புகள் அல்லது பகுதிகள் குறித்து மட்டுமே அயல்நாட்டு அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், யானைச் செவி -கன்னம், தாலம்; யானை நடுச்செவி – வட்டம்; யானைச் செவி அடி – சூளிகை; யானைவாய்-தளவு; யானை உமிழ்நீர்-விலாழி; யானைவால் – தாலவட்டம்; யானைவால் நுனி – வேசகம்; யானைவால் கீழிடம் – வெருகம்; யானை முன்கால் – காத்திரம்; யானைப் பின்கால் –அபரம்; யானை முகம் – மதகம், மத்தகம், கும்பம் என்பன போன்று ஒவ்வோர் உறுப்பின் பகுதியைப் பற்றிய விலங்கியலிறிவும் நம் தமிழ் முன்னோர் பெற்றிருந்தனர் (பிங்கல நிகண்டு).

உயரமாக இருத்தலால் உம்பல் என்றும் 60 ஆண்டிற்கு மேற்பட்ட யானையை உருவம் திரண்டு இருத்தலால் உவா என்றும் அழைத்தனர்.

கறை எனில் உரல் என்னும் பொருளுமுண்டு. உரலடி போல் – கறையடி போல் – பாதம் உடைய விலங்கு என்பதால் யானை, கறையடி எனப்பட்டது.

கரு நிறம் என்பதால் கரி எனப்பட்டது.

கையுடைய – துதிக்கையுடைய – விலங்கு (மா) என்பதால் கைம்மா எனவும் அழைக்கப்பட்டது.

பிற விலங்குகளில் இருந்து கையுடன் தனித்துக் காணப்பட்டமையால் தனி என்னும் பொருள் கொண்ட ஒரு என்பதன் அடிப்படையில் ஒருத்தல் என்றும் யானைக்குப்பெயர்.

துளையுடைய கை என்பதால் தும்பி என்றும் யானையைக் குறிப்பிட்டனர்.

நால் என்பது தொங்குதலைக் குறிக்கும்; தொங்குகின்ற வாய் உள்ளமையால் யானையை நால்வாய் என்றனர்.

முகத்தில் புள்ளி உள்ளமையால் யானையைப் புகர்முகம் என்றும் அழைத்தனர்.

கையையுடைய மலை போன்ற தோற்றம் கொண்டதால் கைம்மலை என யானையைக் குறிப்பிட்டு வியந்தனர்.

புழை என்றால் துளை எனப் பொருள். துளையையுடைய – புழையையுடைய – கை கொண்டுள்ள விலங்கு என்பதால் புழைகை என்றும் பூட்கை என்றும் யானையைக் குறிப்பிட்டனர்.

பெரிய விலங்கு என்பதால் பெருமா எனவும் பெரிய பாதத்தை உடையமையால் பொங்கடி எனவும் அழைத்தனர்.

கருமையான விலங்கு என்பதால் ஏனை என்று சொல்லி அது யானை ஆயிற்று.

உருண்டு திரண்டது என்னும் பொருளில் வழுவை என்றும் சங்கு போன்ற தலை உடையதாலும் புல்லைவாரிப் போடுவதாலும் வாரணம் என்றும் யானையைக் குறிப்பிட்டனர்.

நீர்ப் பறவைகளின் விரல்கள் இடையே உள்ள சவ்வுத் தோலின் பெயர் துதி. யானைத் தும்பிக்கையின் நுனியில் தோலுடன் ஒரு விரல் போன்ற உறுப்பு உள்ளமையால் அது துதிக்கை எனப்பட்டது.

கம்பத்தில் கட்டப்படுவதால் கம்பமா என்பது போன்று, எறும்பி, கடிறு, கடவை, கரபம், வயமா என்பனவும் யானையின் வேறு பெயர்களாக அமைந்துள்ளன.

கயம் என்றால் மென்மை என்றும் பொருள். யானையின் தலை மிகப் பெரியது; ஆனால், உள்ளே கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும் உள்ளன. நெற்றி எலும்பு, மண்டைப் பக்க எலும்புகள், முன் மேல் தாடை எலும்புகள், மேல்தாடைஎலும்பு, மூக்கெலும்பு, அண்ணவெலும்புகள் ஆகியவற்றிலும் பிற எலும்புகளிலும் பெரிய காற்றறைகள் இருக்கின்றன. இவ்வமைப்பினால் பெரியதலை எலும்புகள் மிகுதியான கனமில்லாமல் அமைந்திருக்கின்றன. எனவே மென்மையானது. ஆதலின் மென்மையான தலை என்னும் பொருளில் கயந்தலை என்றனர். எனவே கயந்தலை என்பது அத் தலையையுடைய யானையையும் குறிப்பதாயிற்று. யானைக் கன்று கயந்தலை எனவும் கயமுனி எனவும் குறிக்கப் பெறும்.

கயம் என்னும் சொல்லே சமசுகிருதத்தில் கசமாக மாறி கசமுகன் என்று குறிக்கப்பெறலாயிற்று. கசமுகன் என்று சொல்லும் பொழுது இனிமையாக இல்லை என்பதுடன் அயற் சொல் என விலக்க வேண்டிய உள்ளது. அதனையே கயமுகன் என்னும் பொழுது அதன் அறிவியல் உண்மையைப் புரிந்து பெருமை கொள்ள முடிகின்றது. இவ்வாறு யானைக்குத் தமிழில் உள்ள பெயர்களே வெவ்வேறு வடிவங்களில் இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளில் வழங்குகின்றன.

பிறப்பிட அடிப்படையில் மலையானை, வன யானை, ஆற்று யானை என யானை வகைப்படுத்தப் பெறும்.

பனைத்திரள் அன்ன பருஏர்எறுழ்த் தடக்கை
கொலைச்சினம் தவிரா மதனுடை முன்பின்
வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு,யானை
 (அக நானூறு: 148)

யானை பனைமரத்தைப் போன்று பருத்த கையை உடையது; கொல்லும் சினம் நீங்காத செருக்குப் பொருந்திய வலிமை கொண்டது; வண்டுகள் மொய்க்கும் மதம் உடையது; உயர்ந்த கொம்பையுடையது. இவ்வாறு மேற்குறிப்பிட்ட சங்கப்பாடல் யானையை விளக்குகிறது.

…………. கறைஅடிக்
குன்று உறழ் யானை (பெரும்பாணாற்றுப்படை: 351-352)
நெடுங்கை யானை (பெரும்பாணாற்றுப்படை:394)
பெருங்கையானை (பெரும்பாணாற்றுப்படை: 436)
பெருநல் யானை (பட்டினப்பாலை:251,மதுரைக் காஞ்சி:235)
கடுங்கண் வேழத்துக் கோடு (குறுந்தொகை:100:4)


இலக்கியப்பாடல்களில் இத்தகைய குறிப்புகள் உள்ளமையால் யானை பற்றிய அறிவியல் நூலில் சிறப்பான செய்திகள் இருந்திருக்க வேண்டும்.


யானைக்கண் சிறியதாக இருப்பதைப்போன்று இலைகளில் அல்லது காய்களில் சிறிதாகப் புள்ளி விழும் ஒரு வகைப் பயிர் நோய் யானைக்கண்நோய் எனப் பெறும். யானையின் காலைப்போல் பருத்துத் தோற்றமளித்துக் கால் வீங்கி இருக்கும் ஒருவகை நோயை யானைக்கால் நோய் என அழைத்தனர். ஆனால், யானை நோய் என்பது யானைக்கு வரும் பாகலம் என்னும் காய்ச்சலைக் குறிக்கும். அடங்காத அளவு ஏற்படும் பேரளவுப் பசி, யானைத்தீ எனப் பெறும். மணிமேகலைக் காப்பியத்தை அறிந்தவர்களுக்குக் காயசண்டிகைக்கு ஏற்பட்ட யானைப்பசிநோய் பற்றித் தெரியும்.

யானைத தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை :

என மணிமேகலை (உலக அறவி புக்க காதை, 17 : 7-8) கூறுகிறது. இவ்வகைப் பெயர்களும் யானை பற்றிய அறிவியல் தன்மைகளைப் பொதுமக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உணர்த்துகிறது.

பிங்கல நிகண்டு, பெருங்குருகு என்னும் பறவையை யானை உண் குருகு என்கிறது. யானை பயிருண்ணி; ஊனுண்ணி அல்ல. எனவே, யானை உண்ணும் குருகு – யானையால் உண்ணப்படும் குருகு – எனப் பொருள் வராது. பெருங்குருகு என்னும் பறவைதான் யானையை உண்ணும்பறவையாக மிகுந்த வல்லமையுடன் இருந்திருத்தல் வேண்டும்.

மேலும், யானைச் செவி -கன்னம், தாலம் யானை நடுச்செவி – வட்டம் ,யானைச் செவி அடி – சூளிகை ,யானைவாய்-தளவு ,யானை உமிழ்நீர் விலாழி- யானைவால் – தாலவட்டம், யானைவால் நுனி – வேசகம், யானைவால் கீழிடம் – வெருகம் ,யானை முன்கால் – காத்திரம், யானைப்பின்கால் -அபரம் , யானை முகம் – மதகம்,மத்தகம், கும்பம் என்பன போன்று ஒவ்வோர் உறுப்பின் பகுதியைப் பற்றிய விலங்கியலிறிவும் நம்தமிழ் முன்னோர் பெற்றிருந்தனர் (பிங்கல நிகண்டு).

யானைபற்றிய பொதுவான குறிப்புகள் வருமாறு: –

யானைகள் ஏறத்தாழ 8 அடி முதல் 10 அடிவரை உயரம் உடையன ஏறத்தாழ 5,400 அயிரைக்கா(கிலோ) எடை உடையன. 22 திங்கள் பேறுகாலத்திற்குப்பின் யானைக்கன்றுகள் பிறக்கின்றன. இவை ஏறத்தாழ 90 அயிரைக்கா(கிலோ) எடை இருக்கும்.

யானையின் மூக்குத் துளைகள் நீளமாகவும் வளைந்து கொடுக்கக்கூடியனவாகவும் உள்ள தசைப்பிணைப்புகளால் இணைந்த அமைப்பே தும்பிக்கை எனப்பெறுகிறது.

ஆசிய யானைக்கு முன்கால்களில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும் உள்ளன. ஆப்பிரிக்க யானைக்கு முன்கால்களில் 4 அல்லது 5 நகங்களும் பின்கால்களில் 3 நகங்களும் உள்ளன.

யானைகளின் இயல்பான வேகம் மணிக்கு 6 அயிரைக்கோல்(கி.மீ.) எனினும் தேவைக்கேற்ப 40 அயிரைக்கோல்(கி.மீ.) வரை விரைந்து செல்லும் இயல்பின.

யானை பெருத்த பருத்த உருவமாக இருப்பினும் நடக்கும் பொழுது ஒலி எழுப்பாமல் மென்மையாக நடக்கும். அதன் கால்களின் அடிப்புறத்தில் உள்ள மென்மையான சதைப்பகுதியே நடப்பதால் ஏற்படும் அதிர்ச்சியைக்குறைத்து உடலைப் பாதுகாப்பதுடன் ஒலி ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றது.

யானையின் மருப்புகள் ஆண்டிற்கு ஏறத்தாழ 17 சிறுகோல்(செ.மீ.) வளரும் இயல்புடையன. இத்தகைய வளர்ச்சி அதன் இறுதிக்காலம் வரை தொடர்ந்தாலும் பொதுவாக இரண்டரை கோல்(மீட்டர்) நீளம் உடையன. எடை 45 அயிரைக்கா(கிலோ) வரை இருக்கும்.

உண்பதற்கான கிழங்கு வகைகளுக்காகப் பூமியைத் தோண்டவும் தண்ணீரைப்பெற்றுக் கொள்ளவும் பிற விலங்குகளில் இருந்து தங்களைப்பாதுகாக்கும்ஆயுதமாகவும் இவை பயன்படுகின்றன. ஆனால், மக்கள் இவற்றைச் சிற்பம் செதுக்கவும் வேறு பயன்பொருள்கள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.

யானைப்போரைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் உவமையாகக் கூறுவதால் சங்கக்காலத்தில் யானை ச்சண்டை என்பது பரவலாக நடைபெற்றிருக்க வேண்டும்(திருக்குறள் 758).

குழுக்களாக இணைந்து வாழும் யானைகளைப் போன்று நாமும் ஒற்றுமையாக இணைந்து வலிமையுடன் வாழ்ந்தால் இனப்படு கொலை நடந்திருக்காது அல்லவா?

புதிய அறிவியல் – சனிக்கிழமை, ஆவணி 30, 2043 08:55 இதிநே
Saturday, September 15, 2012 08:55 IST

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தமிழ் முத்துக்கள் விருது வழங்கு விழா, இளவேனில் விழா-தமிழர் தன்னுரிமைக் கட்சி





திங்கள், 31 மார்ச், 2025

நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




தலைப்பைப் பார்த்ததும் இசுலாமியருக்கு எதிராக அலலது நோன்பைப் பழிக்கும் வகையில் சொல்வதாகக் கருதக் கூடாது. தூய நோன்பு குறித்த சொல்லாட்சி தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் இரமலான் நோன்பு குறித்துத் தெரிந்து கொள்வோம்.

(அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும்) உறுதி யேற்பு(கலிமா), தொழுகை, நோன்பு, தானம், மெக்கா நகரில் உள்ள கஅபாவிற்குப்) புனிதப் பயணம்(Hajj) ஆகியன இசுலாத்தின் ஐந்து தூண்களாகும். கஅபா(Ka aba) என்றால் அரபி மொழியில் கனச்சதுரம் எனப் பொருள். கனச்சதுர வடிவிலான கோயில் அவவாறே அழைக்கப் படுகின்றது. ஐந்து தூண்களுள் ஒன்றாகிய நோன்பை மேற்கொள்வது இசுலாமிர்யகளின் கடமையாகிறது. இதனைக் குழுவாகவும் கூட்டமாகவும கொண்டாடும் குமுகச் செயல் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

 இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் வகையில் நோன்பை மேற்கொள்கிறார்கள்.

உலகெங்கும் இரலான் நோன்பும் நோன்புத் துறப்பு நிகழ்வும் நடக்கத்தான் செய்கின்றன. நோன்புத் துறப்பு உண்கை என்பது அவரவர் குடும்பத்தில் பெரும்பாலும் நிகழும். எனினும் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி வாசல்களில்  இந்நோன்புத் துறப்பு பொதுவாக நிகழ்த்தப்படுகின்றது. தனிப்பட்ட செல்வர்களும் பெரும் நிறுவனங்களும் பொது நோன்புத் துறப்பை நடத்தி அனைவரையும் பங்கேற்கச் செய்கின்றனர். நோன்புத் துறப்பு விருந்தில் நோன்பு மேற்கொள்ளாதவர்களும் பிற சமயத்தவர்களும் பங்கேற்கின்றனர்.

நம் நாட்டிலும் நோன்புத் துறப்புப் பொது விருந்தில்  பிற சமயத்தவரும் கலந்து கொள்கின்றனர். ஆனால், நோன்பு மேற்கொள்ளாதவர்கள் இவ்விருந்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? இதனைச் சமய நல்லிணக்கம் என்கின்றனர். இசுலாமியர் அழைப்பை ஏற்றுப் பிற சமயத்தவர், குறிப்பாக இந்துக்கள் பங்கேற்பது சமய நல்லிணக்கமா? இந்துக்கள் தரும் ஆடிக் கூழையும் இசுலாமியர்கள் ஏற்பது சமய நல்லிணக்கமா? ஒவ்வோர் ஆடி ஞாயிறன்றும் அம்மனுக்குக் கூழ் படைத்து மக்கள் அனைவருக்கும் வழங்குகின்றனர். இப்பொழு தெல்லாம் வணிக நோக்கில் ஆவணி முதல் ஞாயிறன்றும்  ஆடி 5ஆவது ஞாயிறு என்று கூழ் ஊற்றுவது வழக்கமாகி விட்டது. மதுரை முதலான சில நகரங்களில் பங்குனித் திங்களில் கூழ் ஊற்றுகின்றனர். இக்கூழை இந்துக்கள் விரும்பி வாங்கிச் சுவைக்கின்றனர். ஆனால் இசுலாமியர்களும் கிறித்துவர்களும் தீண்டத் தகாததாக ஒதுக்கி விடுகின்றனர். இந்துக்கள் இசுலாமியர்களின் நோன்புக் கஞ்சியை வாங்கி உண்பதுபோல் இசுலாமியர்களும் ஆடிக் கூழை வாங்கி உண்பதுதான் உண்மையான நல்லிணக்கமாகும். இனிமேல், இரமலான் நோன்புத் துறப்புப் பொது விருந்து நடத்தும் கட்சியினர் ஆடிக்கூழ் வழங்கும் நிகழ்வினை நடத்தி இசுலாமியர்களையும் பிற சமயத்தவரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையான சமய நல்லிணக்கம் பரவும்.

அவ்வாறில்லாமல் வாக்கு அரசியலைக் கருத்தில் கொண்டு நோன்பு மேற்கொள்ளாமல் நோன்புத் துறப்பு விருந்தில் பங்கேற்பதும் நோன்புத் துறப்பு விருந்தை வழங்குவதும் முற்றிலும் தவறாகும். மக்களை ஏமாற்றும் இச்செயலில் ஈடுபட வேண்டா என அனைத்துக் கட்சியினரையும் வேண்டுகிறோம்.

இனி நாம் நோன்புத் துறப்பு விருந்து குறித்துப் பார்ப்போம்.

இசுலாமியர்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை புரிவர். அவை, சூரிய உதயத்திற்கு முந்தைய வைகறை நேரம்(பசர்/Fajr), சூரியன் உச்சியில் இருக்கும் உச்சி வேளை எனப்படும் நண்பகல் நேரம்(ழுகர்/zuhr), பிற்பகல் நேரம்(அசர்/asr), சூரியன் மறையும் படுஞாயிறு நேரம். அஃதாவது அந்தி நேரம்(மகுரிபு/maghrib). இரவு தொடங்கும் நேரம்(இசா/isha) ஆகிய வேளைகளில் தொழுகை புரிவர்.

இசுலாமியர்களின் கடமையான ஐவேளை தொழுகையை சலா(Salah) அல்லது நமாசு(namaz) என்று குறிப்பிடுவர். இதில் சலா என்பது தொழுகையைக் குறிப்பிடும் அரபுச் சொல். நமாசு என்பது தொழுகையைக் குறிக்கும் பெருசியன் சொல்.

இசுலாமியர் பின்பற்றும் நாட்காட்டியில் ஆண்டின் ஒன்பதாவது மாதம் இரமலான். இத்திங்கள் முழுமையும் பகல் நேரத்தில் உண்ணாநோன்பு இருப்பர். அஃதாவது, இரமலான் மாதத்தில் அதிகாலை முதல் அந்திமாலை வரை உணவு, தண்ணீர், சாறுகள் முதலிய நீருணவு, உடலுறவு ஆகியவற்றைத் தவிர்க்கின்றனர். நோயாளிகள், வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு. ஆயினும், இவ்வாறு விடப்பட்ட நோன்புகளைப் பின்னர் நோற்றுக் கொள்ள கட்டளையிடடப்பட்டுள்ளனர். இரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் பகல் நேர நோன்பே இரமலான் நோன்பு எனப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் கதிரவன் மறைவிற்குப் பின் – நீண்ட நேரப் பகல் உண்ணா நோன்பிற்குப் பிறகு  – அந்தி (மகுரிபு)த் தொழுகை முடித்து உட்கொள்ளும் உணவே இஃப்தார்(Iftar) என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய மறைவிற்குகுப் பிறகு உண்ணா நோன்பை முடிக்க உண்ணும் உணவாகும். நோன்பு முடிப்பதற்கு உட்கொள்ளும் உணவை நோன்பு திறப்பு என்று சொல்லலாமா? இஃது என்ன கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா?

நோன்பு வேளையைத் துறந்து உண்ணும் வேளையைத் தொடங்கும் இதனை நோன்புத் துறப்பு என்று சொல்ல வேண்டும். நோன்பைத் துறப்பது நோன்புத் துறப்பு ஆகுமேயன்றி நோன்புத் திறப்பாக எப்படி ஆகும்? யாரோ தொடக்கத்தில் தவறுதலாக நோன்புத் திறப்பு என்று சொல்லிவிட அல்லது தவறாக எழுதி அதையே பரப்பி விட எங்கும் நோன்புத் திறப்பு என்றே சொல்லப்படுகிறது.

இது குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதியது தினமணியில் அன்புள்ள ஆசிரியர் பகுதியில் பெட்டிச்செய்தியாக வந்திருந்தது– இதன் பின்னர் இதனைப் படித்தவர்களுள் சிலர் நோன்புத் துறப்பு என்பதைப் பின்பற்றி வருகின்றனர். எனினும் பெரும்பான்மையர் நோன்புத் திறப்பு என்றே சொல்லி வருகின்றனர்.

இனியேனும் நோன்புத் திறப்பு என்பதற்கு முடிவுகட்டுவோம்.நோன்புத் துறப்பு என அழகு தமிழில் சொல்வோம்.

நாளும் நோன்பை நோற்று நோன்புத் துறப்பு மேற்கொள்ளும் இசுலமியர்களுக்கு வாழ்த்துகள்.

பங்குனி 17, 2056 / 31.03.2025