சனி, 28 செப்டம்பர், 2019

இந்தித் திணிப்பு அல்ல, இந்தியே கூடாது! - இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி




இந்தித் திணிப்பு அல்ல, இந்தியே கூடாது! 

மத்திய அரசின் துணையுடன் இந்தி, ஆழமாக வேரூன்றித் தன் நச்சுக்கிளைகளைப்  பரப்பி வருகிறது. நம்மை எதிர்ப்பவரை நாம் எதிர்க்கவோ, நம் இனத்தை அழிக்க முயல்பவரை நாமும் அதே முறையைக் கையாண்டு அவர்களுக்கு எதிராக திருப்பிப் பயன்படுத்துவதில் தவறில்லை. உலகெங்கும் நடைபெறும் உரிமைப்போரின் அடிப்படையே இதுதான். ஆனால், அவ்வாறு இந்தியை எதிர்க்க நம்மவர்களுக்கு அச்சம். அதனால், இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்கின்றனர். இது தவறான கூற்று என்பதுதான் எனது கருத்தாகும்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் மாநிலத்தில் இந்தியை வளர்க்க எல்லா உரிமையும் உண்டு. அதனைப் பரப்ப எண்ணினாலும் தங்கள் பணத்தைக் கொண்டு அதற்கான நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால், அடுத்தவர்கள் பணத்தில் அடுத்தவர்கள் இல்லங்களில் இந்தியை நுழைக்க உரிமை கிடையாது.

இந்தி இனிமையான மொழி என்றெல்லாம் கதை அளந்து அதைப் படிப்பதால் என்ன தவறு என்றும் சிலர் எழுதுகின்றனர். அம் மொழி இனிமையானதா இல்லையா என்பதல்ல பேச்சு. அதனை விருப்பப்பாடம் என்ற  போர்வையில் நம்மிடம் திணித்து நம் மொழியையும் நம்மையும் அழித்து வருவதை நாம் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அதற்கு நாம் இந்தியை எதிர்த்துத்தான் ஆக வேண்டும். நாம் இந்தியை எதிர்த்தால்தான் இந்தி மொழியர் நமது பலமான எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கி,  இந்தித்திணிப்பைக் கை விடுவர்.

சிலர் “இந்தியைக் கற்பது என் உரிமை. அதற்கான வாய்ப்பை நல்க வேண்டியது அரசின் கடமை” என்றெல்லாம் கூறுகின்றனர். ஒவ்வொரு குடிமகனும் விரும்பும் மொழியை எல்லாம் கற்றுத் தருவது அரசின் வேலை அல்ல. தாய்மொழியையும் தாய்மொழியிலான கல்வியையும் தருவதுதான் அரசின் கடமை. அவரவர் விரும்பினால் அவ்வாறு தனிப்பட்டுப் பயில்வதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைப் பின்பற்றிக்கொள்ள வேண்டும்., அதற்காகப் பிறர் பணம் செலவழிக்க விரும்பக்கூடாது. ஏனெனில், அவ்வாறு . இந்தியைக் கற்பது பிறர் பணத்தில்தான். (இங்கே இந்திக்குக் கூறுவது சமசுகிருதத்திற்கும் பொருந்தும்.)

முதலில் நாம் தமிழ்நாட்டில் உள்ள ‘தட்சிண இந்தி பிரச்சாரச் சபை’ என்ற பெயரில் இயங்கும் பரப்புரை  அவையத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திக்கு பிரச்சார சபை இருப்பதைப் போல், தமிழுக்கோ பிற மாநில மொழிகளுக்கோ தம் மொழியல்லாத வேறு பிற மாநிலங்களில் இவ்வாறான பிரசார சபைகள் இல்லையே. பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் எல்லா மொழிகளுக்கும் பரப்புரை அவையம் அமைய வாய்ப்பு வழங்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் எந்தப் பள்ளிக்கூடமாயினும் விருப்பப்பாடம் அல்லது பகுதி 1, 2, 3, 4  என்று  ஏதாவது போர்வையில் இந்தி மொழிக்கல்வி கற்றுத் தருவதை நிறுத்த வேண்டும். அப்படி என்றால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியை எப்படி படிப்பது என்ற கேள்வி எழலாம். அதற்கு அவர்கள் தனிப்பட்ட முறைகளில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது தாய்மொழியைப் பயின்று கொள்ளலாம்.

இப்படி எல்லாம் சொல்ல வேண்டியதன் காரணம் என்ன? என்று எண்ணலாம்.

மத்திய அரசின் புதிய முடிவின்படி  நாட்டின் குடியரசுத்தலைவர் முதலான உயர் பொறுப்பில் உள்ளவர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் என யாராயினும் பொது நிகழ்ச்சியில் இந்தியில்தான் உரையாட வேண்டும். இந்தியை எல்லா மாநிலங்களிலும் அன்றாடப் பயன்பாட்டு மொழியாக மாற்ற வேண்டும் என்பது நடைமுறைக்கு வருகிறது.

எனவே, மத்தியப் பொறுப்பாளர்கள், ஆளுநர்,  மக்களவை, மாநிலங்களவை  ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் அதிகாரிகள், மத்திய நிறுவன அதிகாரிகள்  என மத்திய அரசுடன் தொடர்புடையவர்கள் யாவரும் தமிழ்நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றால் இந்தியில்தான் பேச வேண்டு்ம். அது பொதுக்கூட்டமாக இருந்தாலும் தொலைக்காட்சி உரையாடலாக இருந்தாலும் நலஉதவித்திட்ட நிகழ்ச்சியாக  இருந்தாலும் எதுவாயினும் இந்திதான் அங்கே இருக்க வேண்டும்.! இந்தி அமரும்பொழுது எவ்வகை சிறு முயற்சியுமின்றித் தானாகவே இங்குள்ள தமிழும் பிற மொழிகளும் இடம் பெயர்ந்து அழியும். இந்திதான் நம் பயன்பாட்டு மொழி எனில்,  நாம் விரைவிலேயே தமிழர் என்ற நிலை மாறி பெயரும் அடையாளமும் மாறத்தானே செய்யும்!

இந்தி  இப்போது  தமிழ்நாட்டில் திணிக்கப்படுவது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதற்குக்காரணம் இந்தி பெரும்பான்மையர் மொழி என்ற தவறான கூற்றும் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பொய்யான பரப்புரையுமாகும். இந்திப்பகுதிகளில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் இந்திமொழிபேசுவோர் நாளும் வேலை தேடி,  இங்கே வருவதும் நன்கறிந்த தமிழ் மக்கள் இனியும் அதை நம்பமாட்டார்கள் எனலாம். எனவே,  மொழியறிவு என்று தவறாக  எண்ணி வேண்டத்தகாத இந்தியைப் படித்து நம் உயிரினும்மேலான தமிழ்மொழி அழிவிற்கும்அதன் மூலமான இன அழிவிற்கும் தமிழகமக்களே  ஆளாக வேண்டா!

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு. (திருவள்ளுவர், திருக்குறள் 821)

உள்ளத்தில் பொருந்தி வராமல்,  வெளியே பொருந்தி வருவதுபோல் வரும் நட்பு எத்தகையது? கேடு செய்வதற்கு வாய்ப்பு அமையும்பொழுது, பொருளைத் தாங்கி உதவுவதுபோல் காட்சியளித்து,  அப்பொருளை வெட்டி எறிவதற்கு உதவும் பட்டடை போன்றது. இந்நட்பைத் தூக்கி எறிய வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

பொதுமொழி, தேசிய மொழி, அலுவலக மொழி, நாட்டுமொழி என்றெல்லாம் பொய்யான உடையணிந்து நட்பு பாராட்டும் இந்தியும் கேடு செய்யக்கூடியதே! நம்மைத் தாங்குவதுபோல் தோன்றி நம்மை அழிப்பதே! கேடு செய்து வருவதே! எனவே, நாம் அதனைத்  தூக்கி எறிய வேண்டும்!

எனவே,

இந்தி எப்போதும்வேண்டா! வேண்டவே  வேண்டா!

என ஆணித்தரமாகக்கூறி

இந்தியை எதிர்ப்போம்!

நம்மைக் காப்போம்!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 20.09.2019

தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் : ப.திருமாவேலன்

அகரமுதல

தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும்
தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அருப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம்.
தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை:
தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது.
தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய இராசராச சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த சமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய சரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில், 1900-இன் தொடக்கக் காலத்தில் தமிழ்த் தேசிய இயக்கம் என்பது தொடங்கப் பட்டு விட்டது. அதற்குத் திராவிட இயக்கம் என்பதுதான் பெயர்.
தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள்
பெரியாருடைய எழுத்துகளை, பெரியாருடைய பேச்சுகளை, பெரியார் நடத்திய பத்திரிகைகளை, பெரியாருடைய கட்டுரைகளை உண்மையில் கண் இருந்தவன் படித்திருப்பானேயானால், அவனுக்குத் தெரியும், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள் என்பதுதான்.
பெரியார் அவருடைய தொடக்கக் காலத்தில் எழுதிய அனைத்துக் கட்டுரைகளிலும், ‘திராவிட’ என்று எழுதினால், ஓர் அடைப்புக் குறியில் ‘தமிழ்’ என்று எழுதுவார். ஒரு கட்டுரையில், ‘தமிழ்’ என்று எழுதினால், அதற்கு அடுத்து அடைப்புக் குறியில் ‘திராவிட’ என்று எழுதுவார்.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்:
அப்படியானால், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகப்பிரசங்கிகள் சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப் பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறிஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள்தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரு பொருள் தரக்கூடிய இரு வேறு சொற்கள் என்பதுதான்.
பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டா; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேய பாவாணருடைய ‘திராவிடத்தாய்’ என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்’ என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள்.
பாவாணர் சொல்வது என்னவென்றால்,
‘‘இக்கால மொழியியலும், அரசியலும்பற்றித் தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” இது ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15 ஆம் பக்கத்தில் எழுதியவர் தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.
‘தமிழ் என்பதுதான் – தமிழம் என்றும் – த்ரமிள என்றும் – திரமிட என்றும்- திரவிட என்றும் – த்ராவிட என்றும் – இறுதியில் திராவிடம்’ என்று உச்சரிக்கப்பட்டது’ என்று எழுதியவர் பாவாணர் அவர்கள்.
ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம்!
எனவே, பெரியார் அந்தச் சொல்லை இனச் சொல்லாகவோ மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்’ என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும்.
‘திராவிட இனம்’ என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.
அவர் திராவிடம் என்கின்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கின்ற காலக்கட்டத்தில் அவர் சொன்னது, ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன். ‘திராவிடர் கழகம்’ என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத் திருப்பேன்” என்றார். இதுதான் தந்தை பெரியார்.
1956 ஆம் ஆண்டுகளில் மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு, தமிழ்நாடு சென்னை மாகாணமாக உருவாகிய பிறகு, கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் பிரிந்த பிறகு, இப்பொழுதாவது நீங்கள் தமிழர் கழகம் என்று சொல்லக்கூடாதா? என்று கேட்டபொழுது, 1955 ஆம் ஆண்டு இறுதிக் காலகட்டத்தில், நவம்பர் அல்லது திசம்பரில் அவர் எழுதிய தலையங்கத்தில், ‘‘ஆரியனுக்கு, திராவிடன் என்று சொன்னவுடன் எவ்வளவுக் கோபம் வருகிறதோ, அவ்வளவுக் கோபம் தமிழன் என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது எப்பொழுது வருமோ, அப்போது நான் தமிழர் கழகம் என்று வேண்டுமானால் பெயர் சூட்டத் தயாராக இருக்கிறேன்” என்கிறார்.
அப்படியானால், தன்னுடைய அரசியல் தத்துவத்திற்கு எந்த வார்த்தை சரியான வார்த்தையாக இருக்கும் என்று அவர் நினைத்தாரோ, அந்த வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்து திராவிடர் கழகம் என்று பயன்படுத்தினார்.
தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்:
இந்த நோக்கத்தை, பெரியாருடைய நோக்கத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் – தனித்தமிழ் தந்தை என்று சொல்லப்படுகின்ற மறைமலையடிகள் சொன்னார், 1940-களில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் அல்லது 1948 இல் தந்தை பெரியார் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு மறைமலையடிகள் பேசும்போது சொன்னார்,
‘‘நான் 25, 30 ஆண்டுகளாக எழுதினேன், ஆரியத்திற்கு எதிராக. என்னை அழிப்பதற்கு ஆரியம் பல்வேறு வழிகளில் முயன்றது; பல்வேறு தமிழறிஞர்களும் அந்தக் காரியத்தை செய்தார்கள். ஆனால், பெரியாருடைய இயக்கம் என்று வந்ததோ, அதற்குப் பிறகுதான் என்னுடைய நூல்கள் அதிகமாக விற்க ஆரம்பித்தன. என்னுடைய இயக்கத்தை, என்னுடைய நூல்களை, என்னுடைய சிந்தனையை மிக அதிகமாகப் பரப்பியவர்கள் பெரியார் இயக்கத்தவர்களே” என்று சொன்னது தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்.
இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா?
மறைமலையடிகளைவிட, இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா? அவரை விட இவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?
அதேபோல, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தமிழ்த் தொண்டாற்றிய 27 பேரின் பட்டியலை சொல்லும்போது, தொல்காப்பியர், திருவள்ளுவரில் தொடங்கி, 11 ஆவது இடத்தில் தந்தை பெரியாரைக் குறிப்பிடுகிறார், தமிழ்த் தொண்டாற்றியவர்கள் யார்? என்பதில்.
27 பேரை வரிசைப்படுத்துவதில் 11 ஆவது இடத்தை பெரியாருக்குத் தருகிறார் பாவாணர் என்றால், இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களைவிட, பாவணர் என்பவர் தந்தை பெரியாரை அறியாதவரா?
தமிழ் அறிஞர் இலக்குவனார் :
மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார்
அதேபோல், தமிழ்நாட்டில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் திருக்குறளை வீதிதோறும், ஊர்தோறும் திருவள்ளுவர் மன்றங்களை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் தமிழ் அறிஞர் இலக்குவனார் அவர்கள்.
மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார் என்று சொன்னவர் இலக்குவனார்.
இலக்குவனாரைவிட, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?
பெரியார் தன்னுடைய வாழ்நாளில் பேசிய தமிழ்த் தேசிய கருத்துகளுக்கு இணையாக, நான் கிட்டத்தட்ட ஒரு 5, 6 பெரியாருடைய வரிகளை மட்டும் சொல்கின்றேன். தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராவது இந்த வார்த்தைகளை உச்சரித்து இருக்கிறார்களா? அல்லது உச்சரிப்பதற்கான முதுகெலும்பாவது அந்தத் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இருந்திருக்கின்றதா என்பதை வரலாற்றினுடைய பக்கத்தில் இருந்து நாம் யோசித்தாக வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் ஏராளமான கருத்துகளை, இந்தத் தமிழ் உணர்வுக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ்நாட்டினுடைய விடுதலைக்குப் பேசினார்கள் என்று சொன்னால், அதை அடுக்குவதற் கான கால நேரம் என்பது இப்போதைக்கு இல்லை.
தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?
ஆனால், ஒரே ஒரு வார்த்தை, 1955 இல் பெரியார் எழுதுகிறார்:
தமிழ், தமிழ்நாடு என்று பெயர்கூட இந்த நாட்டிற்கு இருக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுவிடுமானால், என்னுடைய வாழ்வு எதற்காக இருக்கவேண்டும்? என்று எழுதிய தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையும் இழந்தான் என்று 1939 இல் பேசியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதைவிட தமிழ்த் தேசியத்திற்கான கூற்று வேறு என்ன வேண்டும்?
திராவிடர் கழகத்திற்குத் திருக்குறள்தான் வழிகாட்டி, வேறு நூல் இல்லை” என்று 1948 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியாரின் மூன்று முக்கிய கொள்கைகள்!
‘‘திராவிடர் கழகம் எனது தலைமைக்கு வந்த பிறகு, மூன்று முக்கிய கொள்கைகளை சொல்லி வருகிறேன்.
மனிதன் இழிவு நீங்க வேண்டும்.
எனது தமிழ்நாடு தனியாக ஆகவேண்டும்.
அதுவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்.
நமக்கு ஆகவேண்டியதெல்லாம் இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே” என்று 1951 இல் சொன்ன தந்தை பெரியாரே, தமிழ்த் தேசியத்தினுடைய மூலவர்.
‘‘நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக்கொள்ளாமல், வேறு பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ‘சூத்திரர் கழகம்’ என்றுதானே வைத்துக் கொள்ளவேண்டும்” என்று 1959 இல் சொன்னவர் அவரே!
‘‘இந்தி மொழியால் தமிழ்க் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை. இந்தி மொழியால் மட்டுமல்ல, வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியால் நம்முடைய கலாச்சாரம் அடியோடு அழிந்து விடும். இப்போதே வடமொழி நாட்டில் புகுந்து, நம்முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டுவிட்டது. அதற்காக நாம் இந்தியை எதிர்த்துப் போராடவேண்டியது இருக்கிறது” என்று, 1948 இல் இந்தித் திணிப்பை தமிழர்களின் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்பாக உருவகப்படுத்தியதைப்போல, ஒரு தமிழ்த் தேசிய சிந்தனை என்பது இருந்திருக்க முடியுமா?
‘‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆரியம் ‘‘சமயத்” துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலேயே, தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை, குறைந்துவிட்டது” என்று, தனது இறப்புக்கு ஓராண்டிற்கு முன்பு 1972 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால்,
நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும்
தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால், இடது கை போல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்குக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத் தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், ஒளவையாரும்தான்
‘‘நம்முடைய பண்டைய திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிடவேண்டுமானால், ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும்தான் நாம் சிறந்த அறிவாளிகளாகச் சொல்ல முடியும்” என்று, பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான்.
‘‘மொழி உணர்ச்சியில்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைப்போ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததியினருக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்யவேண்டுமானால், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்” என்று தன்னுடைய மரணத்திற்கு ஓராண்டிற்கு முன்பு சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து…
இப்படி தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழ்த் தேசியத்தினுடைய ஆட்களினுடைய பரப்புரையில், நம்மவர்களுக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது; ஒருவேளை பெரியார், தமிழுக்கு எதிராக இருந்தாரோ, தமிழினத்திற்கு எதிராக இருந்தாரோ என்று, சில இளைஞர்களுக்கு அதுபோன்ற மயக்கங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையில், பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து நாடெங்கும் பரப்புரை செய்யவேண்டிய காலக்கட்டமாக இந்தக் காலக்கட்டம் அமைந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியத்தினுடைய கூறுகளை, பெரியாரிடம் தமிழ்த் தேசியக் கூறுகள் எத்தனை இருக்கின்றன என்பதை நான் பட்டியலிட்டபோது, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகள், தமிழருடைய இனப் பெருமை, தமிழ்நாட்டினுடைய பெருமை, தமிழர்களின் கடந்த காலப் பெருமை, தமிழ்ப் பெருமை, தமிழுக்கு முதன்மை, நாட்டின் பெயர் தமிழ்நாடு, தனித்தமிழ்நாடு, வடமாநிலத்தவர் எதிர்ப்பு, மலையாள, ஆந்திரர், கன்னடர் எதிர்ப்பு, இந்திய அரசு எதிர்ப்பு, தமிழே ஆட்சி மொழி, தமிழே பயிற்று மொழி, தமிழே வழிபாட்டு மொழி, தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும், தமிழ்நாட்டில் தமிழனே வாழவேண்டும், சமசுகிருத எதிர்ப்பு, மார்வாடி எதிர்ப்பு, ஈழத் தமிழர் நலன், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மொழிவாரி மாகாண ஆதரவு, தட்சணப் பிரதேச எதிர்ப்பு, வடவர் சுரண்டல் எதிர்ப்பு, திருக்குறள் பரப்புதல், மூடப் பண்டிகைகளுக்கு எதிர்ப்பு, வடவர் பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு, தமிழர் விழாக்களுக்கு ஆதரவு, பொங்கல் திருநாளே தமிழர் திருநாள், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய கொள்கை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழ் தொழி லாளர் நலன், தமிழ் முதலாளிகள் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், தமிழர்களுக்குள் பிரிவினை இல்லை, சாதி எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர் ஒற்றுமைக்கு வலியுறுத்தல், தமிழர் என்ற சொல்லாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்
(22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரை எழுத்து வடிவத்தில்)
நன்றி – மின்னம்பலம்

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 48, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

48

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 414)
அறிவு நூல்களைக் கற்கும் வாய்ப்பை இழந்தாலும் அவ்வாறு கற்றவர்களிடம்  கேட்டறிக! இது தளர்ச்சியின் பொழுது ஊற்றுநீர்போல் பெருகித் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர்.
தயான்னே சில்லிங்கு(Dianne Schilling) முதலான கல்வியாளர்கள் கேட்டலே உயர்வு தரும் எனக் கூறி அதற்கான பத்து வழிமுறைகளையும் கூறுகின்றனர்.
ஒற்கம் என்றால் தளர்ச்சி. “தளர்ச்சியாவது, வறுமையாலேனும் அறியாமையாலேனும் நோயினாலேனும் இழப்பினாலேனும் நேரும் மனத்தடுமாற்றம்” என்கிறார் தேவநேயப்பாவாணர். ஒருவன்+கு= ஒருவற்கு.(ஒருவர்+கு=ஒருவர்க்கு). தளர்ச்சி வந்தபொழுது கேள்வியறிவு ஊன்றுகோல் போலத் தாங்கி  உறுதியான உதவி புரியும் என்கின்றனர் உரையாசிரியர்கள். ஊன்று என்பது னகரம் திரிந்து  ஊற்று ஆனதாகவும் குறிப்பிடுகின்றனர். அடுத்த குறளில் “ஊற்றுக்கோல் அற்றே”(415) என ஊன்றுகோலுடன் ஒப்பிட்டுச் சொல்வதால் இங்கும் ஊன்றுகோலாகக் கூறியிருக்க வாய்ப்பில்லை. ஊற்றுநீர் போல அறிவுபெருகத் துணையாகும் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுவது இயல்பாக உள்ளது.
நல்லோர் சொற்கள் நமக்கு நற்துணையாக வருவன. எனவே, கேள்விச் செல்வத்தைத் தொடர்ந்து பெற்றால், உடனே நன்மை புலப்படாமல் போகலாம். ஆனால், இடையூறு வரும் பொழுது அதனைச் சமாளிக்க உறுதுணையாக அமையும். ஊருணி நீர் பெருகி உதவுவதுபோல் அறிவூற்று உற்ற துணையாக அமையும். எனவே, படிக்காவிட்டாலும் படித்தவர் சொல்லும் அறிவுக்கருத்துகளைக் கேட்க வேண்டும். கற்றிலன் என்பது ஒன்றுமே கற்காதவரையும் குறிக்கிறது. நமக்குத் தேவையான மெய்ப்பொருள் நூல்களையும் துறையறிவு நூல்களையும் கற்காதவரையும் குறிக்கும்.
படிக்காவிட்டாலும் படிக்காதவர் மூலம் நூல் கூறும் அறிவுக்கருத்துகளைக் கேட்டுப் பெறுக!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 24.09.2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 47, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


     27 செட்டம்பர் 2019      கருத்திற்காக..

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

47

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 413)
செவி உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் அவி உணவு கொள்ளும் ஆன்றோர்க்கு இணையாக மதிக்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.
உணவு, பண்பை வரையறுக்கிறது என இவான் திமித்திரசெவிக்கு(Ivan Dimitrijevic) முதலான பல வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு உணவியலிறிஞர்கள் இன்றைக்குக் கூறுவது இக்குறள் மூலம் முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிமேலழகர் அவி உணவு என்பது தேவர்க்கு வேள்வித்தீயில் கொடுப்பன என்கிறார். இவர் வழியில் இக்கால உரையாசிரியர்களும் வேள்வித்தீயில் அவிக்கப்படும் உணவு என்கின்றனர். தீயில் இடப்படும் உணவு தூய்மையாகித் தேவர்க்கு உணவு ஆகுமாம். தீயில் இடப்படுவன அழியத்தானே செய்யும்! அழிந்தபின் யாருக்கும் உணவு ஆக முடியாதே! அவ்வாறிருக்க இங்கே தீயில் இடப்படுவது எங்கோ உள்ளதாகக் கூறப்படுபவர்களுக்கு எங்ஙனம் உணவாகும். தீயில் பொருள்களைப் போடும் ஆரிய வேள்விக்கு எதிரானவர் திருவள்ளுவர்(குறள் 259). அவர் அத்தகைய வேள்வி உணவை எங்ஙனம் போற்றிக் கூறியிருப்பார்.
‘அவி’தல் = குறைதல்; அவியுணவு = ‘குறைவான உணவு’ என்று விளக்குகிறார் புலவர் குழந்தை. குறையுணவு உண்டு புலனடக்கி வாழும் ஆன்றோர் போலக் கேள்விச் செலவம் உடையோர் மதிக்கப்பெறுவர் என்கிறார் இவர்.
அவி உணவு = அவிக்கப்பட்ட உணவு = தீய தன்மை கெடுக்கப்பட்ட உணவு என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார்.
உணவிற்கும் பண்பிற்கும் தொடர்பு உண்டு. குறைந்த அளவு நல்லுணவை உண்டு ஆன்றோர் சிறக்க வாழ்கின்றனர். இத்தகைய ஆன்றோர்களுக்கு ஒப்பானவர்கள், கேள்விச்செல்வத்தை மிகுதியும் உடையவர்கள் எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.
கேள்விச்செல்வம் பெற்று ஆன்றோர்க்கு இணையாக வாழ்க!
– இலக்குவனார் திருவள்ளுவன்தினச்செய்தி 23.09.2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 46, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

46

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 412)
செவிக்கு உணவாகிய கேள்வியறிவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர்.
உணவு அளவு, உணவின் தன்மை ஆகியவற்றிற்கும் காம உணர்விற்கும் தொடர்பிருப்பதாகப் பாலியற் கல்வியாளர் முனைவர் மாரியன் பிசர் (Maryanne Fisher Ph.D.) முதலான அறிவியலறிஞர்கள் பல வகைகளில் தெரிவிக்கின்றனர்.
மணக்குடவர் “பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார்” என விளக்குகிறார். இவ்வாறே கூறும் பரிப்பெருமாள், எல்லாக் காலமும் கேட்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
செவிக்கு ஊட்டமாக அமைவது  கேள்வி உணவு. இஃது எல்லாக் காலமும் பெறப்பட வேண்டும். கேள்வி உணவு சரியாக அமையாத சில பொழுது மட்டுமே வயிற்றுக்கு உணவு தரப்பட வேண்டும். எனவே, கால வரம்பின்றி எக்காலமும் உண்பது உடலுக்குக் கேடு. செவிக்குத் தொடர்ச்சியாக உணவு வழங்காமல் இருப்பது உள்ளத்திற்கு கேடு.
செவியுணவின் நிறைவைக் கூறும் திருவள்ளுவர் வயிற்றுக்கான உணவின் அளவையும் உணர்த்துகிறார். பேராசிரியர் சி.இலக்குவனார், “வயிற்றை நமது அடிமையாக வைத்து நாம் கொடுப்பதை உண்ணச் செய்தல் வேண்டும். நாம் அதன் அடிமையாகி அதனை நிரப்புவதற்காகவே வாழ்ந்து கொண்டிருத்தல் கூடாது. வயிற்றுக்கு அடிமையானோர்க்கு வாழ்வே கிடையாது.” என்கிறார்.
எழுத்து மொழி தோன்றாக் காலத்தில் செவிவழியே செய்திகளும் கருத்துகளும் பரவின. எழுத்து மொழி தோன்றிய பின்னரும் கல்வியில் கேள்வியும் சரி பாதியானது. எழுதுவதைப் படிக்கும்  பொழுது இருக்கும் உணர்வை விட உணர்ச்சியாக அவற்றைப் பேசும் பொழுதும் இனிமையாகப் பாடும் பொழுதும் கேட்டால் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. உள்ளம் அவற்றை ஈர்ப்பதற்கான நேரமும் குறைகிறது. எனவே, கேள்விச்செல்வம் சிறந்ததாகத் தொடர்ந்து வேண்டப்படுகிறது.
செவி உணவு கிடைக்காத பொழுது வயிற்றுக்கு உணவு அளி!
– இலக்குவனார் திருவள்ளுவன்தினச்செய்தி 21.09.2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 45, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 45

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 411)
செல்வங்களுள் சிறப்புடையது செவிச்செல்வம். அது எல்லாச் செல்வங்களிலும் தலைமையானது என்கிறார் திருவள்ளுவர்.
கல்வியின் சிறப்பையும் கல்லாமையின் இழிவையும் கூறிய திருவள்ளுவர் அடுத்துக் கேள்வியை வைத்துள்ளார். கேள்வி என்றால் வினா என்று நாம் தவறாகப் பொருள் கொள்கிறோம். “கேள்வி என்றால் வாழ்க்கைக்குப் பயன்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல்”  எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார். “செல்வமாவது செவி, மெய், வாய், கண், மூக்கு இவற்றுள் செவியான் விளையும் உணர்வு பெரியது” என்று பரிதியும்  “உலகத்துச் செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்த செல்வம் யாதெனின், செவிச்செல்வம்” என்று காலிங்கரும் விளக்குகின்றனர்.
தனம், தானியம், தைரியம், வீரம், வித்தை, கீர்த்தி, விசயம், அரசு என்னும் எட்டு வகைச் செல்வத்திலும் பெரிது கேள்விச்செல்வம் என்கிறார் பரிதி.
பரிமேலழகர், பொருளால் வரும் பிற செல்வங்கள் நிலையற்றவை என்பதாலும் துன்பத்தை விளைவிப்பன என்பதாலும் அவற்றை விடக் கேள்விச்செல்வமே தலையாயது என்று விளக்குகிறார்.
பணிதல்….செல்வர்க்கே செல்வம்(குறள் 125), அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்(குறள் 241), வேண்டாமை அன்ன விழுச்செல்வம்(குறள் 363), கேடில் விழுச்செல்வம் கல்வி(குறள் 400) எனத் திருவள்ளுவரே குறிப்பிடும் செல்வங்களுள் தலையாயது கேள்விச்செல்வம் எனலாம்.
“கற்றலின் கேட்டலே நன்று” என்பது ஏன் வந்தது? இன்றைய அச்சு முறையிலும் இணையப் பயன்பாட்டிலும் ஆளுக்கு ஒரு நூல் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, படிப்பு பரவலாகிறது.ஆனால் ஓலைச்சுவடி முறையில் எழுதி எழுதித்தான் படிகள் எடுக்க இயலும். எனவே, படிப்பதை விடக் கற்றோரிடம்  கேட்டு அறிவு பெறும் வழக்கமே மிகுதியாக இருந்துள்ளது. கல்வியில் ஐயம் அகற்றித் தெளிவு பெறவும் ஆழக் கற்கவும் கேள்விச்செல்வம் பெரிதும் துணையாக இருந்துள்ளது. எனவே, கேள்விச்செல்வம் போற்றப்படுகிறது.  இக்காலத்திலும் நாமாகப் படித்துப் புரிந்து கொள்வதைவிட நன்கு கற்றவர் சொல்வதைக் கேட்பது எளிதில் புரிகின்றது. கற்றலில் கேட்டலும் சரிபாதியாகின்றது. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர் சொல்வதை வேறு ஏதோ ஒரு மூலையில் உள்ளவர் அல்லது உலகெங்கும் உள்ளவர்கள் கேட்பதற்கு உரைப்பதிவுகள், காட்சிப்பதிவுகள், ஒலி-ஒளி பரப்புகள் முதலான அறிவியல் வசதிகள் உதவுகின்றன. ஆதலின் இன்றும் கேட்டுப்பெறும் அறிவு முதன்மை இடத்தைப் பெறுகின்றது.
கேள்விச்செல்வத்தைத் தலைமையானதாகப் போற்று!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 20.09.2019