சனி, 21 ஜூன், 2014

இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு : சாலினி தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்



இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு
நான் பங்கேற்கும் நேரலை ஒளிபரப்பு
இன்று - ஆனி 7, தி.ஆ.2045 / சூன் 21, 2014 சனி
 இரவு 7.00  மணி முதல் 8.00 மணிவரை
சாலினி தொலைக்காட்சியில் 
'நீதிக்காக' நிகழ்ச்சியில்
அ.(எச்.)இராசா (மாநில, பா.ச.க. துணைத்தலைவர்),
 நீலகண்டன் (சென்னை மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர்) ஆகியோரும் உரையாடுகின்றனர்.
 நிகழ்ச்சியாக்கம் திரு முருகேசன்,  
 ஒருங்கிணைப்பாளர் திரு தௌபக்கு

7799077380  அலைபேசி எண் மூலம் நீங்களும் உங்கள் கருத்தைப் பதியலாம்.

வலைத்தள முகவரி: www.shalinitv.com 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



வெள்ளி, 20 ஜூன், 2014

'உத்தமம்' பித்தமம் ஆக வேண்டா!




'உத்தமம்' பித்தமம் ஆக வேண்டா!

-          அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

  உத்தமம் என்று அழைக்கப்படும்  உலகத் தமிழ்-தகவல்தொழில்நுட்ப மன்றம் என்னும் (INFITT) அமைப்பு உத்தமமாகச் செயல்படவில்லை என்ற வருத்தம் பலரிடமும் உள்ளது. நன்கு வளர வேண்டிய அமைப்பு தேய்பிறையாக மாறிவருவதற்குச் சான்று அண்மையில் தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர் எண்ணிக்கையாகும். பதினால்வர் பங்கேற்ற இக்கூட்டத்தில் உரையாளர்கள், த.இ.க.க. அலுவலர்கள் எண்ணிக்கையைக் கழித்தால் ஒற்றைப்பட எண்ணிக்கையில் உள்ளவர்கள்தாம் பங்கேற்றுள்ளனர். அதிலும் மூவர் வெளியூர்களில் இருந்து  அல்லல்பட்டு ஆர்வமுடன் வந்து சலிப்புடன் திரும்பியவர்கள். நிகழ்வில்  பங்கேற்ற முனைவர் அனந்தகிருட்டிணன், முனைவர் பொன்னவைக்கோ முதலானவர்கள் நல்லறிவுரை வழங்கியுள்ளனர். இவற்றைக் கேட்டுத் தன் போக்கை உத்தமம் மாற்றிக் கொண்டால் இவ்வமைப்பு தோன்றியதன் நோக்கம் நிறைவேறும். உறுப்பினர்கள் தங்களிடையே பரிமாறிக் கொள்ளும் கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குவது உத்தம அமைப்பினருக்கு உதவும் என்ற நோக்கில் நான் அவற்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

  அறிந்தோ அறியாமலோ தவறுநேரும் பொழுது சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளும் போக்கு இருப்பதாக நம்புவதால்தான் இவற்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், சிதம்பரத்தில் திசம்பர் 28-30,2012 இல் நடைபெற்ற  11 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், தமிழ் தொடர்பான கட்டுரைகளை ஒதுக்கி வைத்து, மாநாட்டு மலரில் புறக்கணித்ததை  அவ்வமர்வு மேடையில்  சுட்டிக் காட்டினேன். உடனே அவற்றைச் சரி செய்வதாகவும், இனி மாநாட்டு மலரில்  அவையும் இடம் பெறும் என்றும் இம்முறை, இணையத்தில் நடைபெறும் என்றும்  திரு மணிமணிவண்ணன் கூறினார். சில நினைவூட்டல்களுக்குப் பின் இணையப் பதிப்பில் அனைத்துக் கட்டுரைகளும் இடம் பெற்றன. அதேபோல், ஒரு முறை திருஅ.இளங்கோவன் அவர்களிடம், மலேசியாவில் நடைபெற்ற 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்துப் பாராட்டி நான் தமிழக அரசியல் இதழில் கருத்து தெரிவித்தது குறித்தும் (http://thiru2050.blogspot.in/2013/09/blog-post_4333.html) ஒன்றும் சொல்லவில்லை; குறைகளைச் சுட்டிக்காட்டி அனுப்பிய உத்தமத்திற்குப் பாராட்டும் பரிந்துரையும் என்னும் தலைப்பிலான கருத்துகளுக்கும் (http://thiru2050.blogspot.in/2013_08_18_archive.html) ஒன்றும் மறுமொழி இல்லையே! இவற்றையெல்லாம் படித்தாவது பார்க்கின்றீர்களா எனக் கேட்டேன். உடனே அவர், “உங்கள் அறிக்கை  தெரிவித்த வழிகாட்டு முறை அடிப்படையில் அடுத்த மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று குறிப்புகளாக எடுத்து வைத்துள்ளோம். அவற்றைப் பின்பற்றப் போகிறோம் என்றார். பொதுவாக உத்தமத்திற்கு மடல் அனுப்பினால் மறுமொழி வராது என்பதைப் பொய்யாக்கும் வண்ணம் இப்போதைய தலைவர் முனைவர் வாசுரெங்கநாதன்,  உடன் மறுமொழி அனுப்புகின்றார். எனவே, கருத்துகளைச் செவி மடுத்து ஏற்கத்தக்கன எனக் கருதக்கூடியவற்றில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இவற்றைத் தெரிவிக்கின்றேன்.


  எந்த அமைப்பும் அதன் விதிமுறை, செயல் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த அமைப்பாகத் தோன்றும். ஆனால், உண்மையில் அதன் செயல்பாடுகள்தாம்  அதன் சிறப்பை உணர்த்துவனவாக அமையும். இந்த அடிப்படையில்தான் என் கருத்துகளும் அமைகின்றன.

  உத்தமத்தின் முதல் நோக்கமே கணியறிவியலை வளர்ப்பதற்கான அமைப்பு இதுவல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் மொழியையும் தகவல் தொழில் நுட்பம், தமிழ் இணையம் முதலானவற்றின் மூலமாக மேம்பாடடையச் செய்வதுதான் இதன் அடிப்படை நோக்கம் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘கணி நுட்பர்களுக்குத்தான் இடம் என்பதுபோன்ற போக்கால் இவ்வமைப்பு  பெறவேண்டிய வளர்ச்சியைப் பெறாமல் இருக்கிறது. கணிநுட்பர்களின் தமிழார்வமும் தமிழ்க்கணியன்கள் முதலானவற்றை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கும்  கணிணி, அலைபேசி முதலான எதுவாயினும் தமிழ்ப்பயன்பாட்டுடன்தான் விற்பனைக்கு வரவேண்டும் என்ற விழைவும் பெரிதும் பாராட்டப்படவேண்டியனவே. ஆனால், தங்கள் ஆர்வத்தைத் தமிழ்ப்புலமையாக எண்ணித் தமிழ்த்துறையினரைப் புறக்கணிப்பதால்தான் தளர்ச்சியைக் காண்கின்றது.

  முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் இராதா செல்லப்பன், முனைவர் துரை மணிகண்டன், முனைவர் இளங்கோவன் முதலான பலரும் தமிழில் கணித்தமிழ்பற்றி நல்ல நூல்களை எழுதியுள்ளனர். இத்தகைய கணிணி தொடர்பான தமிழ்நூல்கள் பரவலாக விற்கப்படுவதற்கு உத்தமம் உதவலாம். மாணாக்கர்களிடடையேயும் இளைஞர்களிடையேயும் கணிணி தொடர்பான  போட்டிகள் வைத்து இவை போன்ற நூல்களை வாங்கிப் பரிசுகளாக  வழங்கலாம். தமிழ்க்கம்ப்யூட்டர்போன்ற தமிழ்க்கணிணி இதழ்களின் ஆண்டுக்கட்டணத்தைப் பரிசாகச் செலுத்தி, தமிழ்க்கணிணி இதழாளர்களை ஊக்கப்படுத்தி, மாணாக்கர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் விழிப்புணர்வை உண்டாக்கலாம்.  மாநாடுகள், கூட்டங்கள் முதலானவற்றின்பொழுது உரையாளர்களுக்கும் அழைப்பாளர்களுக்கும்  தமிழ்க்கணிணிநூல்களை வழங்கலாம். மலிவு விலையில் கணிணிச் சொல்லாக்கம், பயன்பாடு குறித்த நூல்களை வெளியிடலாம். தமிழ் விசைப்பலகைகளைத் தள்ளுபடி விலையில் வழங்கலாம். கலைச்சொல்லாக்கங்கள்  பற்றிய படைப்புகளையும அவற்றைப் பயன்படுத்தும் கட்டுரைகளையும் பரவலாக வெளியிட ஊக்கப்படுத்தலாம். தமிழ்ப்பிழைதிருத்திகள் மேம்பாட்டிற்கு உதவலாம். இவ்வாறாக உத்தமத்தின் பணி பரவலாக அமையலாம்.

 இப்பொழுது நான் உத்தமம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதைவிட என்னென்ன செய்திருக்கக்கூடாது என்பனைவற்றைத் தெரிவிப்பது நன்று என எண்ணுகிறேன்.

  திசம்பர் 2013 இல் நடைபெற்ற தேர்தல்,  வாக்குப்பயன்பாடு அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக இருந்தது. தகவல் தொழில் நுட்ப அமைப்பு, இணைய  வழியாக நடத்தும் தேர்தலில், இணைய வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறில்லாததால், வாக்களிப்பில் குளறுபடி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என எண்ணுவதில் என்ன தவறு? இதுபோன்ற வெளிப்படையான தேர்தலை நடத்தக் கூடாது.

  உலகளாவிய உறுப்பினர்(member at large scale) எனக்கடைசி நேரத்தில் அறிவித்துத் தேர்தல் நடத்தியதும் நடத்திய முறையும் உத்தமத்திற்கு மாறாக்களங்கம் ஏற்படுத்துவனவே! பொதுவாக, உத்தமத்தின் பொதுக்குழு உறுப்பினர்களும் செயற்குழு உறுப்பினர்களும் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு,  இதில் குறிப்பிட்ட மண்டிலத்தில் போதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாத போதுமட்டும் அந்தந்த மண்டில அளவில் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், மண்டில அளவில் தேர்தலை நடத்திவிட்டு, உடன் உலக அளவில் தேர்தலை நடத்தியது தவறாகும்.  இத்தகைய அகல் முறை தேர்தலின் நோக்கமே சமச்சீரான சார்புநிலை வேண்டும் என்பதுதான். ஆனால், இப்பொழுது நடந்திருப்பது என்ன?

 அமைப்புவிதிகளுக்கிணங்க 8 மண்டிலங்களுக்கும் மொத்தம் 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 35 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படியாயின் எந்தெந்த மண்டிலத்தின் முழுச் சார்புநிலை அமையவில்லையோ அந்தந்த மண்டிலத்திற்கு மட்டும் உலகளாவிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க  வேண்டும். அவ்வாறில்லாமல் பதவி ஆசை உள்ளவர்கள் தாங்கள் அதிகாரம் செலுத்தவும் தங்கள் நலம் விரும்பிகள் வெற்றி பெறவும் குறுக்கு வழியில் நடத்திய தேர்தலாக அமைந்து விட்டது. இந்திய மண்டிலத்தில் 16 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு மீண்டும் உலகளாவியமுறை உறுப்பினர் தேர்வு ஏன்?

  பொதுக்குழு உறுப்பினர்கள் குறைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நால்வர், வட அமெரிக்காவிற்கு ஒருவர், ஐரோப்பாவிற்கு மூவர், ஆசுதிரேலியாவிற்கு இருவர், மத்திய ஆசியா-ஆப்பிரிக்காவிற்கு இருவர் என்றுதானே பன்னிருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போதிய சார்புநிலை இருக்கும் மண்டிலங்களுக்கு இம்முறை மூலம் குறுக்கு வழியில் அமைப்புவிதி வரையறைக்கு மிகுதியான பொதுக்குழு உறுப்பினர்களை அமர்த்தியது முறைகேடுதானே! மத்திய ஆசியா-ஆப்பிரிக்க மண்டிலத்தில் ஒருவரும் உறுப்பினர் இல்லை என்னும் பொழுது அம்மண்டிலத்தில் கருத்து செலுத்தி ஆர்வமுள்ள யாரையாவது இம்முறையில் தேர்ந்தெடுத்திருந்தால், அம்மண்டிலத்தில் உத்தமம் வளர்ந்திருக்கும் அல்லவா?
 

 உறுப்பினர் வரையறையிலும் மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்குமான உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி அங்கே உத்தமத்தை மேலும் வளர்க்கலாம் அல்லவா?

  இந்தியாவிலும் பிற எல்லா மாநிலங்களிலும் சார்பு இருக்கும் வண்ணம் தனி உறுப்பினர் எண்ணிக்கையை வரையறுப்பின் புதுச்சேரியிலும் கருநாடகாவிலும்  மட்டுமல்லாமல்   பிற மாநிலங்களிலும் உத்தமம் வளருமல்லவா?

  உத்தம விதிகளின் 13 ஆம்  பிரிவு வெளிப்படைத்தன்மை பற்றிக் கூறுகின்றது. ஆனால், 'அப்படி என்றால் என்ன?' எனக் கேட்கும் நிலைதான் உத்தமத்தில் உள்ளது. வரவு-செலவு விவரமோ,  தணிக்கை விவரமோ வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை. பொதுக்குழு, செயற்குழுவின் திட்டங்களோ,  முடிவுகளோ உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. உத்தம விதி பொதுஅவை (general body) குறித்துக் கூறுகின்றது. ஆனால், உறுப்பினர்கள் ஈராண்டுக்கொரு முறை தேர்தலின் பொழுதுதான் தொடர்பு கொள்ளப் படுகிறார்களே தவிர அவர்களுக்கு என எந்த உரிமையும் இல்லை. பொது அவை ஒருமுறை கூட முறையாகக் கூட்டப்பட்டதில்லை. பொதுஅவையில் தமிழ்க்கணிணி சார்ந்த அமைப்பின் சார்பாகவும் உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம். அப்படி யாரும் நியமிக்கப்படவில்லை. தமிழ்த்துறையையே கணிணித்தமிழ்த்துறையாக மலரச் செய்த முனைவர் ந.தெய்வசுந்தரம் இருப்பின் கணிணித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் உள்ளோர் சார்பு இருப்பதாகப் பொருள். தமிழ்க்கணிணி இதழாசிரியர் செயகிருட்டிணன் இருப்பின், அவ்விதழில் பங்கேற்கும் கணிணித்தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றதாகப் பொருள். இவ்வாறு கணித்தமிழ் வளர்ச்சிக்குப்பாடுபடுவோரை  பொது அவையிலும் உலகளாவிய  உறுப்பினர் முறையிலும் தெரிவு செய்யலாம்.

  நீதிமன்றம் சென்றிருந்தால் முறையற்ற தேர்தல் என்பதை அறிவித்திருப்பார்கள். இத்தகைய முறைகேடான தேர்தலில் குறுக்கு வழியில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவித்து,  சார்புநிலை  இல்லா மண்டிலங்களுக்கு மட்டும் இம் முறையில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்தத் தேர்தலே செல்லாது என்றாலும் குறைந்தது இதனையாவது சரி செய்ய வேண்டும். (முன்பே மனச்சான்று இருப்பின் மறுதேர்தல் நடத்துக  என்னும் தலைப்பில் நான்   அனுப்பிய மடலைப் படித்துப் (https://mail.google.com/mail/u/0/?tab=wm&pli=1#search/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/142edf3049df2f31) பார்க்கவும்.)

 இந்தியப்பிரிவு மலேசியப் பிரிவு என்ற அமைப்பு முறை தேவையற்ற ஒன்று. அதிலும் இந்தியப்பிரிவில் தலைவர், துணைத்தலைவர், செயல் இயக்குநர், பொருளாளர் என நால்வராம்!  மலேசியாவில் தலைவர் மட்டுமாம்! இந்தப் பாகுபாடு எதற்கு?  மொத்தப் பொறுப்பாளர்களில் மிகுதியான பேர் தமிழ்நாட்டவராக இருக்கும் பொழுது இந்தியப்பிரிவு என்ற கட்சி அரசியல்வாதிகளைப் போன்ற  பதவி ஆசை எதற்கு என்று புரியவில்லை? இவர்கள் பாராட்டிற்குரிய பணிகளை ஆற்றியிருந்தாலும் யாரால், எப்பொழுது, எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதும் மருமமாகவே உள்ளது.   

  உறுப்பினர்கள் பட்டியல், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல், பொறுப்பாளர்கள் பட்டியல் தந்திருக்கும் உத்தம வலைப்பக்கத்தில் பொதுக் குழு உறுப்பினர்கள் பட்டியலும் தரலாமல்லவா? அதை மறைப்பது ஏன்?

  உத்தமம், தமிழ் நெடுங்கணக்கு, வரிவடிவம், ஒலி பெயர்ப்பு முதலியன குறித்து எக்காலத்திலும் யாருக்கும் முன்மொழிவோ பரிந்துரையோ, அனுப்புதலோ கலந்தாய்வு அல்லது கட்டுரை வாசிப்பு நடத்துவதோ கூடாது.   அவ்வாறில்லாமல் தமிழுக்குக் கேடு விளைவிக்கும் இதுபோன்ற ஆராய்வுகளில் ஈடுபடும் எனில்,  உத்தமம் பித்தமம் ஆகிவிடும்.

  கணிணி அறிவியல் வளம் தமிழுக்குக் கிடைப்பதையும் கணிணி அறிவியல் மூலம் தமிழ் வளத்தை உலகெங்கும் பரப்புவதையுமே நோக்கமாகக் கொண்டு உத்தமம் செயல்பட்டால் உத்தம உத்தமமாகி விடும் என்பதில் ஐயமில்லை.

ஆனி 7, 2045 / சூன் 15,2014 இல் கூடுவோர் சிந்திக்கவும்!

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (திருக்குறள் 466)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும் (திருக்குறள் 468)

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் மெய்யுரைகளை எண்ணுவோம்! எண்ணியாங்கு எய்துவோம்!

உயர்தமிழை வளர்த்து உத்தமம் உயர்ந்தோங்குக!