வியாழன், 19 செப்டம்பர், 2019

தேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்

அகரமுதல


ஆத்மாநாம் அறக்கட்டளை
அகநி வெளியீடு இணைந்து நடத்தும்
‘தேவரடியார் கலையேவாழ்வாக’ 
முனைவர் அ.வெண்ணிலாவின் ஆய்வுநூல் குறித்த விவாத அரங்கம்
புரட்டாசி 04, 2050 சனி 21.09.2019 மாலை 5.30
அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் தளம், கோட்டூர்புரம்

– கவிஞர் மு.முருகேசு

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 44

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்லாமைகுறள் எண்: 410)
சிறந்த நூல்களைக் கற்றவர்களே மக்கள். கற்காத மற்றவர்கள் விலங்கிற்கு ஒப்பாவர் என்கிறார் திருவள்ளுவர்.
“கல்வி கற்காத மனிதர்கள் புதிய விலங்கிற்குச் சமமாவர்” என்று கூறிக் கல்வியை அரசறிவியலறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
அனையர் என்றால் அத்தன்மையர் எனப் பொருள். இலங்கு என்றால் திகழ்தல் எனப் பொருள். நம்மைச் சிறப்புடன் திகழச்செய்யும் நூல்களைக் கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
கற்காதவரை விலங்குடன் நேரடியாகத் திருவள்ளுவர் ஒப்பிடவில்லை. விலங்கிற்கும் மக்களுக்கும் எத்தகைய வேறுபாடு உள்ளதோ அத்தகைய வேறுபாடு கற்றவர்க்கும் கற்காதவர்க்கும் உள்ளது எனக் கூறியுள்ளார் என உரையாசிரியர்கள் பலரும் கூறுகின்றனர். விலங்குகளுக்கு ஐந்தறிவுதான். எனவே, ஆறாம் அறிவைப் பயன்படுத்தி நூல்களைக் கற்கவோ அதனால் சிறக்கவோ விலங்குகளுக்கு முடியாது. கல்வி கற்காத மக்களும் ஆறாம் அறிவைப் பயன்படுத்திச் சிறப்பாக வாழ முடியாது. எனவே, நேரடியாக ஒப்பிட்டுக் கூறுவதால் தவறில்லை. அதே நேரம், “மக்களை நோக்க விலங்கு எவ்வளவு இழிந்ததோ” என்றெல்லாம் விளக்கம் அளிக்கின்றனர். மக்களுக்கு உதவும் விலங்குகளை இழிவாகக் கருத வேண்டா. ஆனால், ஆறாம் அறிவு இல்லாததால் அவை மனிதர்க்கு அடிமையாக இருக்கின்றன. கல்வி பெறாதவர்களும் கற்றவர்க்கு அடிமையாக இருப்பர் என்றும் கருதலாம்.
தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் ஊருக்கும் தன் நாட்டிற்கும் உதவக் கல்வியறிவு தேவை. கல்வியால் திட்டமிட்டு இடர்ப்பாடுகளைக் களைந்தும் நலப்பாடுகளைப் பெற்றும் சிறக்கவும் பிறரையும் நாட்டையும் சிறப்பிக்கவும் செய்ய முடியும். கல்வியறிவு பெறாதவர் விலங்குபோல் திரிந்து வீணில் காலத்தைக் கழிக்க வேண்டியதுதான். கல்வி கற்காதவர்கள் பட்டறிவால் சிறக்கவில்லையா என்கின்றனர் சிலர். கல்விக்கூடம் செல்லும் வாய்ப்பை இழந்தாலும் பின்னர் அவர்களும் நூலறிவைப் பெற்றுத்தான் சிறக்கின்றனர். நூலறிவு இல்லையேல் அவர்கள் பட்டறிவு வீணாகும்.
கல்வி கற்காமல் விலங்குபோல் இராதே!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

விருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50

அகரமுதல


நிகழ்வு 50

காவேரியிலிருந்து கங்கை வரை –

மிதிகைப் (மோட்டார் சைக்கிள்) பயணப் பட்டறிவுகள்

சிறப்புரை :   பிரபு ,  மயிலாடுதுறை

     மூகாம்பிகை வளாகம்
     சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
     ஆறாவது தளம்
      மயிலாப்பூர்      சென்னை 600 004

புரட்டாசி 04, 2050  / 21.09.2019  (சனிக்கிழமை)
நேரம்  மாலை 6.00 மணி


அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 43

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு
 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்லாமைகுறள் எண்: 409)
செல்வம், செல்வாக்குடன் மேலான நிலையில் பிறந்திருந்தாலும் கல்வியறிவில்லாதவர் அவர்களைவிடக் கீழான நிலையில் பிறந்த கற்றவர்க்கு ஈடாகமாட்டார் என்கிறார் திருவள்ளுவர்.
“அனைத்திலர் பாடு” என்றால் “அவ்வளவு பெருமை இல்லாதவர்”  என்று பொருள்.
பதவி, செல்வம் முதலியவற்றால் வரும் உயர்வு தாழ்வு என்பன நிலையானவை அல்ல. காலச்சக்கரம் மாறுவதுபோல் இவையும் மாறும் தன்மையன. மாறும் இவற்றின் அடிப்படையில் உயர்வு, தாழ்வைக் கற்பித்துக் கொள்வது தவறு எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். கல்வியால் பெறும் சிறப்பு நிலையானது. கல்வியின்மையால் பெறும் தாழ்ச்சி அதற்குரியவர் கல்வியைப் பெறும் வரை மாறாமல் இருக்கும்.  ஆள்வோரும் அறிஞரை மதிப்பர். எனவேதான், மன்பதையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் பிரிவுகளைப் புறந்தள்ளிக் கல்வியால் சிறந்த கற்றவர் பிரிவில் இருக்க வேண்டும் என்கிறார்.
“மேலிருந்தும்” எனத் தொடங்கும் திருக்குறளில்(973) மேல், கீழ் என்பனவற்றைச் சாதியாகக் குறிப்பிடாமல்  மேல்நிலை, கீழ் நிலை என்றுதான் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுபோல்தான் இங்கும் கருத வேண்டும்.
மேல்சாதி, கீழ்ச்சாதி  என்னும் பாகுபாட்டு அடிப்படையில் கற்றவரே மேல்சாதி என உணர்த்தத் திருவள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார் எனப் பெரும்பான்மையர் கூறுகின்றனர். பழந்தமிழ்நாட்டில் சாதிப்பகுப்பு இல்லை. எனினும் திருவள்ளுவர் காலம் சாதிக்கருத்து திணிக்கத் தொடங்கிய காலமாக இருக்கலாம். எனவே, உயர்வு தாழ்வு என்பது சாதி அடிப்படையில் இல்லை. கல்வியின் அடிப்படையிலானது என்பதை வலியுறுத்தவே கற்றவர் உயர்ந்தோர், கல்லாதவர் தாழ்ந்தோர் எனக் கூறுவதற்காக இத்திருக்குறளை எழுதியுள்ளார் என்று கருதி இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.
பின் வந்த ஒளவையார், “சாதி இரண்டொழிய வேறில்லை”  என்று கூறி, “இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்” என்றார். ஆனால், திருவள்ளுவர் கற்றார் உயர்ந்தோர், மற்றார் தாழ்ந்தோர் என்கிறார். எனவே, கல்லாமை இல்லாமல் ஆகும் வண்ணம் அரசும் மக்களும் செயல்படவேண்டும்.
பிறப்பில் மேல், கீழ் என்று கற்பிக்காதே! மேலான சிறப்பைத் தரும் கல்வியில் சிறந்திடு!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 17.09.2019

திங்கள், 16 செப்டம்பர், 2019

‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்

அகரமுதல

‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை  : இப்போதும்… ஈரவாடை….. 
                பதினெட்டு வருடங்களுக்குப் பின்பு, ‘உயிர்ச்சுழி’  இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. முதல் பதிப்பினைச் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பில் தேவைக்கு ஏற்பச் சில படிகள் மறுஅச்சு செய்து வெளியிடப்பட்டாலும் முறையான இரண்டாம் பதிப்பாக இதைக் கொள்ளலாம்! ஆம்! பதினெட்டு வருடங்கள் என்பது மிகப் பெரிய கால இடைவெளிதான்!
                இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை மீண்டும் வாசிக்கின்ற போது, ஒரு பழைய ஒளிப் படத்தினைக் காண்பது போன்ற பரவசமும், அது உண்டாக்கும் ஏக்கமும் தான் மிஞ்சுகிறது. எல்லாவற்றையும் கடந்து போகக் கூடிய ஆற்றல், காலத்திற்கு மட்டுமல்ல, கலை வெளிப்பாட்டிற்கும் உண்டு. காலம் தந்த மனிதர்கள் இவர்கள் என்றாலும், அந்த காலத்தாலே கடந்து விடமுடியாதவர்களாக நிலைக்கின்றபோது, அவர்கள் வழியாகவே ஒரு கலைப் பண்பு துளிர்த்து விடுகிறது! சொல்லப்பட்டவர்களும், சொல்லப்பட்ட விதமும், சொல்லப்பட்டதில் இருந்து சொல்லப்படாதவையும் மனத்தில் ஒரு சித்திரத்தைத் தோற்றுவித்துச் செல்கிறது!
                திருகலான மொழியோ, புதிர்த்தன்மை கொண்ட மொழியோ, பூடகமோ, தத்துவச்சாயலோ, கோட்பாட்டுப் பின்புலமோ இல்லாத புனைவு, இது. அப்படித்திட்டமிட்டு உருவாக்கப்பட்டதும் அல்ல, இது. அதன் இயல்பிலே வெளிப்பட்டவை, அவரவர் வாழ்வு அவரவருக்கு வெளிச்சம், அவரவர் கண் வெளிச்சத்திலே தான் உலகின் வெளிச்சத்தினைக் காணமுடியும்!
                     ‘மாறுதடம்’, ‘நான்+ நீ’ கால மாற்றத்தில் மனிதர்களின் மாறுபட்ட முகங்கள், ‘மரம்’  ‘ஈரம்’  ‘உயிர்ச்சுழி’ ‘ஒருவரும் ஒருவனும்’   ‘வேடிக்கை மனிதர்கள்’ கதைகளில் இருப்பவர்கள்  என்றும் இருப்பவர்களாக இருக்கிறார்கள், அவர்களோடு தான் நாமும் இருக்கிறோம். ‘சந்திப்பிழைகள்’ கதையில் காலத்தின் பாய்ச்சலை நீங்கள் பார்க்கலாம், இந்த இருபது வருடத்தில் தொழில் நுட்ப மாற்றமும் மனித வாழ்வின் இயங்கு தளங்களின் மையங்களைக் காணலாம். மற்றபடி ஒட்டு மொத்தத் தொகுப்பில் பூத்துக்கிடக்கும் ஈர வாடை ஏற்கெனவே நான் புழங்கியதுதான். இந்த தொகுப்பு வெளிவந்த போது இதற்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பினை இப்போது நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன், அப்படியான ஒரு வாய்ப்பினை மீண்டும் உருவாக்கித் தந்த புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace) மு.வேடியப்பன் அவர்களுக்கு என் அன்பினையும் நன்றியையும் பதிவு செய்கிறேன்.
 பாரதிபாலன் , 23.05.2019  
 புத்தகம் கிடைக்குமிடம்
புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace)
6, மகாவீர் வளாகம், முனுசாமி சாலை
க.க.நகர், சென்னை 600 078
பேசி 087545 07070
இவற்றையும் காண்க: 
படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி
மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் – வல்லிக்கண்ணன்               

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…!

 கட்சி உறுப்பினர்களைக் குடும்ப உறுப்பினர்கள்போல் நடத்திய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாதுரை என்னும் அவரின் பெயரின் சுருக்கம்போல் அண்ணா என்பது திகழலாம். ஆனால், உண்மையில் கோடிக்கணக்கான தம்பியர் அவரைப் பாசமுடன் அழைத்த சொல்லே அண்ணா என்பது. தம்பிக்கு என மடல் எழுதி விழிப்புணர்வு ஊட்டிமையால் வயது வேறுபாடின்றி அனைவருக்குமே அவர் அண்ணா ஆனார். எனவேதான் அவர் மறைவின் பொழுது  திரண்டிருந்த மக்கள் கூட்டம் உலகிலேய மிகுதியான இறுதி அஞ்சலி எனக் கின்னசு உலக ஆவணப்பதிவு அறிவித்தது.
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாட்டின் நலன்களுக்காகக் குரல் கொடுத்த அப்பெருந்தகை அவற்றை நனவாக்கலாம் என எண்ணினார். தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பேற்ற பின்னர் அவற்றை நிறைவேற்றவும் தொடங்கினார். மேலும் சில ஆண்டுகளேனும் அவர் வாழ்ந்திருந்தார் எனில் அனைத்துக் கனவுகளையும் நடைமுறையாக்கி இருப்பார். என்னசெய்வது? நமக்கு அந்த நற்பேறு வாய்க்கவில்லை. அவரது கட்சியினரும் அக்கட்சி வழிவந்தவர்களும் அவரது பிறந்த நாளின் பொழுதும் நினைவு நாளின் பொழுதும் அவரை நினைத்தால் மட்டும் போதாது. இனியேனும் அவர் கனவை நனவாக்க வேண்டும்.
தமிழின் பெருமையைத் தமிழர்களே உணராமல் இருக்கிறார்கள். எனவேதான் தமிழ்க்கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் குறைந்து கொண்டே வருகிறது. தமிழைப் புறக்கணித்துப் பிற மொழிகளைத் தாங்கிக்கொண்டுள்ளார்கள். பேரறிஞர் அண்ணா, “தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதை தமிழனிடத்திலேயே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பதை அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்.(தம்பிக்குக் கடிதம் – 03.07.1960)” என்று அன்றே சொன்னார். அந்த அவமானம் இன்னும் நீங்கவில்லை. எனவே, தமிழின் சிறப்பைத் தமிழர்களும் தமிழ்நாட்டவர்களும் அறியச் செய்ய வேண்டும்.
“தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே, பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம் இவற்றைக் கண்டித்து, அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழிகாண வேண்டும்” எனப் பேரறிஞர் அண்ணா(இந்தி எதிர்ப்பு மாநாடு – திருவண்ணாமலை – 1957) வேண்டியதை இப்பொழுதாவது அரசும் தமிழன்பர்களும் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் தமிழ் மேலும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படும்.
தமிழ் ஏற்றம் பெறுவதற்கு ஒரே வழி ஆட்சிமொழியாகத் தமிழ் விளங்க வேண்டும் என்பதுதான். 1967 இல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 5 ஆண்டுகளுக்குள் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக நடவடிக்கை எடுத்தார். மூவாண்டு முனைப்புத்திட்டம் மூலம் பல துறைகளில் தமிழ் ஆட்சிமொழியாகத் திகழ நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவரது எதிர்பாராத மறைவு ஆட்சிமொழித் திட்டத்தை முடக்கிப்போட்டுவிட்டது.அவர், எந்த மொழியும் ஏற்றம் பெற்று வாழவேண்டுமானால், மக்களின் மதிப்பைப் பெற்று வாழவேண்டுமானால், அம்மொழி அரசாங்க அலுவல் மொழியாகவும் அமைதல் வேண்டும் என்பது அரிச்சுவடி! தமிழ் இவ்வளவு வளம் பெற்றதாகத் திகழ்வதற்குக் காரணம், முன்னாளில் முடியுடை மூவேந்தர்களும் தமிழையே துரைத்தன மொழியாகக் கொண்டிருந்ததனர். அதனால் புலவர் கூடிடும் மன்றங்களிலும் பூவையர் ஆடிடும் பூம்பொழில்களிலும், போர்க்களத்திலும், உழவர் மனையிலும், தமிழே முதலிடம் பெற்றிருந்தது. யவனத்துக்கும், பிற நாட்டுக்கும், தமிழர்கள் வாணிபம் செய்யச் சென்றனராமே, கலங்களில், அந்தக் கலங்களிலே தமிழ் பேசியன்றோ சென்றனர். அந்தத் தமிழுக்கு ஆட்சி மொழியாளரின் மொழி என்கின்ற உரிமை நிலை இருந்ததால்தான் உயர்நிலை கிடைத்தது. ஊராள்வோருக்கு உரிய மொழி வேறு, மக்களுக்குள்ள மொழி வேறு என்ற நிலை இருப்பின் எம்மொழிச் சிறக்கும் – எம்மொழி உயரும்? (இந்தியும் தமிழ் மகனும் – கட்டுரை – 21.05.1950) எனத் தமிழ் ஆட்சிமொழியாக அணி செய்ய மக்களிடையே உணர்வு ஊட்டி வந்தவர். அந்த உணர்வைச் செயலாக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டார். அவை அவரது மறைவினால் தொய்வுற்றன. தமிழ்நாட்டில் தொடர்ந்து தி.மு..அல்லது .தி.மு..தான் ஆட்சியில் இருக்கின்றனஆனால்தமிழ்தான் இல்லை.  வருகைப்பதிவேடுகள் கூடத் தமிழில் இருப்பதில்லை. தமிழில் பணியாளர்கள் கையொப்பம் இடுவதில்லை. அறிக்கைகள், ஆணைகள் தமிழில் இல்லை. செய்தி இதழ்களில் அடிக்கடி மாறுதல் ஆணை போன்ற ஆணைகள் வெளிவருகின்றன. ஒன்றாவது தமிழில் உள்ளதா என்றால் இல்லை . 
பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் பேராசிரியர் சி.இலக்குவனார் அரசு முத்திரையில் உள்ள ‘சத்யமேவ செயதே’ என்னும் பிறமொழித் தொடரை நீக்கிவிட்டுத் தமிழில் ‘வாய்மையே  வெல்லும்’ என மாற்ற வேண்டும் என்றார். இதனை ஏற்ற பேரறிஞர் அண்ணா சத்தியம் தான் சரி, வாய்மை பொருந்தாது என மூதறிஞர் இராசாசி போன்றோர் கூறியும் தமிழ்ச்சொல்லான வாய்மை என்பதுதான் மிகச் சரி எனக் கூறி அதனை நடைமுறைப்படுத்தினார்.
தமிழ் என வாயளவில் சொல்லாமல் செயல்வழியாகத் தமிழை நிலை நிறுத்தினார். பிற மொழிப் பெயரோ பிற மொழி எழுத்தோ நம் பயன்பாட்டில் இருக்கக் கூடாது எனக் கனவு கண்டார் பேரறிஞர் அண்ணா. “ஜாதி என்ற சொல்லே தமிழிலில்லை. அதன் முதல் எழுத்தான  தமிழ் எழுத்தில்லை. சாதியை ஏற்றுக் கொண்டது போலவே ஜ-வை, ஏற்றுக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றார். தமிழ் மக்கள் அனைவரும் கிரந்த எழுத்துகள் இல்லாத பெயர்களையே பயன்படுத்த வேண்டும் எனக் கனவு கண்டார். இன்றைக்கு நாம் பெயரில் கிரந்த எழுத்து இருந்தால்தான் நல்ல பெயர் எனத் தவறாகக் கருதுகிறோம். நல்ல பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களை விடப்பொருள் புரியாத பிற மொழிப்பெயர்களே உயர்வானவை எனத் தவறாகக் கருதுகிறோம். சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ்ப்பெயர்களைத் தேடவேண்டிய நிலைக்கு நாம் தள்ளி விட்டோம்.
பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாகிட இனியேனும் தமிழகம் விழிக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டுப் பயன்பாட்டிலும் தமிழ் இருந்தால் நாட்டுப் பயன்பாட்டிலும் தமிழ் வந்து விடும். ஆண்டிற்கு இருமுறைமட்டும் பேரறிஞர் அண்ணாவின் பெயரை ஒலித்துவிட்டுப் பின்னர் அமைதி காத்துப் பயனில்லை. கல்விமொழியாக, வேலைவாய்ப்பு மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அறிவியல் மொழியாக, முழுமையான ஆட்சி மொழியாகத் தமிழ் வீற்றிருந்தால் பேரறிஞர் அண்ணா அங்கெல்லாம் இருப்பார். அதுவே அவருக்கு நாம் செய்யும் சிறப்பு.
வாழ்க தமிழர்கள் வளமெல்லாம் பெற்று!வாழ்க தமிழர்கள் வையகம் வாழ்ந்திட!வாழ்க தமிழ் அறம் தாரணி தழைத்திட!வாழ்க தமிழ் மொழி இனிமை பொங்கிட!
(பேரறிஞர் அண்ணா)
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி, 15.09.2019