வியாழன், 26 மே, 2022

சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்

 அகரமுதல


சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்

சிறுவர் சிறுமியர் குறள்நெறி வழி நடைபோட வந்துள்ள திங்கள் மின்னிதழ் குறள் விருந்து.

உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தால் இலவச இணைய இதழாக வெளியிடப்பெறுகிறது.

இதன் ஆசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார். பொறுப்பாசிரியர் முற்போக்குப்பாவலர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு. முனைவர் முரசு நெடுமாறன் சிறப்பாசிரியராக உள்ளார். பொறி தி.ஈழக்கதிர் இணை ஆசிரியராக உள்ளார்.

கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கப் பொருளாளராகவும் உள்ள இதன் பொறுப்பாசிரியர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு எழுதிய தலைமைப்பண்பிற்கு உயிர்நேயம் தேவை என வலியுறுத்தும் வகுப்பறை-சிறுவர் கதை விருந்து முதல் இதழில் இடம் பெற்றுள்ளது.

 மாணவ எழுத்தாளர் செல்வன் செ.குருபரன் எழுதியுள்ள புலவரை வென்ற தெனாலிராமன் என்னும் சிறுகதையும் விருந்து படைத்துள்ளது.

இரு கதைகளுமே திருக்குறள் நெறியை வலியுறுத்துவன.

முகப்புப்பக்கம் குறளைக் கற்போம் குழந்தைகளே என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது.

 நீங்களும் குறள் விளக்கக் கதைகள், கட்டுரைகள்,கவிதைகள்  அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்வரி: anjal@kuralvirtual.com

சிறாரிலக்கியத்திற்கும் குறள்நெறிக்கும் வலிவும் பொலிவும் சேர்க்கும் குறள் விருந்து பல்சுவை பரப்பி நிலைப்பதாக!

ஞாயிறு, 22 மே, 2022

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா

 அகரமுதல



திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா



திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகத்தில்(ஓட்டலில்) மே 18, 2022 மாலை 6 மணிக்கு  நடைபெற்றது.

விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர்கள் அன்பில் மகேசு பொய்யாமொழி, மனோ தங்கராசு, நாகர்கோவில் மாநகரத் துணைத் தலைவர்  மேரி பிரின்சி இலதா, வழக்குரைஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து முதலானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ‘கலகக்காரன்’ என்னும் காணொளிப் பாடல் வெளியிடப்பட்டது.