தூண்டில் திருவிழா
பள்ளி விடுமுறை நாட்களில் தூண்டிலோடுதான் சுற்றுவோம். கண்மாய், ஊருணி, ஏரி, குளம், குட்டை, ஏந்தல், தாங்கல் எனப் பல்வேறு நீர்நிலை அமைப்புகள்
வருடம் முழுதும் தண்ணீர் நிரம்பி இருந்த பொற்காலம் அது. பசுமைச் சூழலில்
மரமேறுதலும் கவட்டையும் நம் மரபு விளையாட்டாக இருக்கும் வரை பறவைகள் பற்றிய
தொடக்கநிலை அறிவு நம்மிடம் இருந்தது. பின் வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடி
போன்ற பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுகிற போது இயற்கை பற்றிய அறிவு
விரிவடையும். இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் மரபு அறிவியல்
வளர்ச்சியின் இயல்பு இது. முக்குளிப்பான், சிறகி, நெய்காக்கா, நாரை,
கொக்கு, ஆலா, உல்லான், மீங்கொத்தி, மரங்கொத்தி, வானம்பாடி, குயில், புறா,
பனங்காடை, தைலாங்குருவி, ஆள்காட்டி, தேன்சிட்டு, ஆந்தை, பருந்து, கழுகு,
கிளி, காகம், நாகணவாய், மயில், கீச்சான் என்று அதன் உருவத்தாலும் அவை
எழுப்பும் ஒலியாலும் பறவைகளை அடையாளப்படுத்தும் அறிவு நம்மிடம் இருந்தது.
அவ்வறிவை கவட்டை, மரமேறும் விளையாட்டு, வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடி
போன்ற பண்பாட்டுத் தொடர்புகளின் நீட்சியால் பெற்று இருந்தோம். அவ்வாறே
மீன்கள் – நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய தொடக்க நிலை அறிவைத் தூண்டில்,
பானைப்பொறி, கொட்டுப்பொறி போன்ற மரபு முறைகளால் பெற்றிருந்தோம். கெண்டை,
கெளுத்தி, குரவை, விரால், ஆரா, வெளிச்சி, உழுவை, அயிரை, விலாங்கு, தவளை,
நண்டு, நத்தை, பாம்பு என்று நீர்வாழ் உயிரினங்களை அடையாளப்படுத்தும் தொடக்க
நிலை அறிவும் நம்மிடம் இருந்தது. பின் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிற போது
அவ்வறிவு விரிவடையும்.
உலகமயமாக்களின் விளைவால் இயற்கை பற்றிய
மரபு அறிவை நாம் இழந்துவிட்டோம். இன்று நம்மைப் பொறுத்தவரை பறப்பது பறவை,
நீந்துவது மீன், நிற்பது மரம் அவ்வளவுதான். நம் பிள்ளைகள் அறிந்து
வைத்திருக்கும் ஒரே பறவை ‘சினப்பறவை'(Angry Bird) தானே. பறவைகள் அழிந்து
வரும் சூழலில் கவட்டையை ஊக்கப்படுத்துவது அபத்தம், சட்டமீறல் என்ற போதும்
பறவை இனங்கள் அழிவுக்கும் கவட்டைக்கும் தொடர்பு இல்லை என்பதையும்
தெளிவுபடுத்த வேண்டும். நீர், நிலம், மலை, காடு என இயற்கையை
முதலாளிகளுக்காகக் கூறுபோடும் தனியாதிக்க உற்பத்தி முறையும் அதற்கு
அடிபணியும் அரசுகளுமே நமது இயற்கை வளம் – பல்லுயிர் சூழல் அழிவுக்கு
காரணம்.
இயற்கை மீட்பை பன்முகத்தன்மை கொண்ட
பண்பாட்டுத் தளத்தில் இருந்து தொடங்குவதே உலகமயத்திற்கு எதிரான மக்கள்
திரட்சியை உருவாக்கும். அழிந்து வரும் நமது நாட்டு மீன்களை ஆவணப்படுத்தி
மீட்கும் நோக்கோடு தூண்டில் திருவிழா நிகழ்வை கயல் நாட்டு மீன்கள் – மீனவர்
வாழ்வியல் நடுவமும், மதுரை சூழலியல் பேரவையும் இணைந்து ஒருங்கிணைக்கின்றன.
இது போன்ற நிகழ்வுகளை தங்கள் ஊர்களில் அனைவரும் செய்யலாம். நிகழ்வில்
பங்கெடுக்க விரும்புவோர் அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும். வாய்ப்புள்ளோர்
வாருங்கள், தூண்டில் போடலாம்!
இடம்: ஊருணி, நேசனேரி, திருமங்கலம், மதுரை
நாள்: மார்கழி 18, 2046 / 03.01.2016,
ஞாயிறு, காலை 7.00 மணி
தொடர்புக்கு: 8489723624, 989447961