சனி, 13 மே, 2023

(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9

 




(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) சிங்கப்பூரில் நடத்த இருந்த 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் வரும்

ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08 & 09.2023

செம்மணஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறும். சென்னையில் நடைபெறுவதால் கூடுதலாகக் கட்டுரையாளர்களைத் தெரிவு செய்கின்றனர். கட்டுரையாளர்களுக்கு அனுப்பப்பெறும் அழைப்பு மடல்கள் வரும் திங்கள் இரவிற்குsள் அனுப்பப்படடு விடும் என இவ்வமைப்பின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தெரிவிததார்.

மாநாட்டை முன்னிட்டுப் பின்வரும் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன.

1நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

நூலாசிரியர்கள் தத்தம் நூலை வெளியிடுவதற்கு வாய்ப்பாக 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியீட்டு நிகழ்வில் தங்கள் நூல்களும் இடம் பெற விரும்புபவர்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள், நூலின் பெயர், நூலாசிரியர் பெயர், வெளியீட்டாளர் பெயர், நூல் விலை, தொடர்பு முகவரி, பேசி எண், மின்வரி முதலிய விவரங்களைத் தமிழில் வரும் வைகாசி 32 / சூன் 15 ஆம் நாளுக்குள் மாநாட்டுக் குழுவிற்குத் தெரிவிக்க வேண்டும். மின்வரி: < organizing-committee@icsts11.org > . வெளியீட்டில் இடம் பெற விரும்பும் நூல் ஒவ்வொன்றின் ஐந்து படிகளை ஆனி 15 / சூன் 30 ஆம் நாளுக்குள் மாநாட்டு முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

2. நூல் விற்பனை அரங்கம்

உலகத்தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் கூடும் மாநாட்டின் பொழுது தத்தம் நூல்களை விற்கவும் அறிமுகப்படுத்தவும் மாநாட்டு நூல் விற்பனை அரங்கத்தைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியீட்டாளர்களாக உள்ள நூலாசிரியர்களும் சிறிய பதிப்பகத்தாரும் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்க இயலாமல் வருந்துகின்றனர். அவர்களின் வருத்தத்தைத் துடைக்கவும் நூலாசிரியர்களை ஊக்கப்படுத்தவும் நல் வாய்ப்பாக விற்பனை அரங்கத்தை மாநாடு அமைக்கிறது. எனவே, பங்கேற்கும் ஆர்வமுள்ளவர்கள் வரும் ஆனி 5 /  சூன் 20 ஆம் நாளுக்குள் மாநாட்டு முகவரிக்குத் தங்கள் வெளியீட்டக அல்லது பதிப்பக முகவரியையும் பேசி எண்களையும் இடம் பெறும் புத்தகப்பட்டியல்களையும் தமிழில் அளிக்குமாறு வேண்டுப்படுகிறார்கள். நூல்களை ஆனி 20/  சூலை 5 அன்று மாநாட்டு வளாகத்தில் கொண்டு சேர்க்கத் தெரிவிக்கப்படுகிறார்கள். தங்கள் பதிப்பக அல்லது நூல் விவரப் பதாகையையும் தமிழில் அளிக்க வேண்டப்படுகிறார்கள்.

3. கலை நிகழ்ச்சிகள்

மாநாட்டை முன்னிட்டு இருநாள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், மயிலாட்டம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான் கூத்து, களியலாட்டம், கைச்சிலம்பாட்டம், கட்டைக் காலாட்டம், குறவன் குறத்தி யாட்டம், கருப்புச்சாமியாட்டம் முதலிய நாட்டுப்புறக்கலைகள், தமிழிசை, பரத நாட்டியம், மூலம் தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மூவேந்தர்கள் சிறப்பு, வள்ளல்கள் சிறப்பு முதலிய தமிழைச் சிறப்பிக்கும் கலைநிகழ்ச்சிகளை அளிக்க முன்வருவோர் வரலாம். கலைக்குழுவின் பெயர், குழுத்தலைவர் பெயர், பங்கேற்போர் எண்ணிக்கையும் பெயர்களும், முகவரி, பேசி எண்,  பிற தொடர்பு விவரம் ஆகியவற்றை வரும் வைகாசி 16 / மே 30 ஆம் நாளுக்குள் மாநாட்டு முகவரிக்குத் தெரிவிக்க வேண் டியுள்ளனர். உலகத்தமிழாராய்ச்சியாளர்கள் முன்னிலையில் தத்தம் கலைத்திறமையையும் தமிழின் சிறப்பையும் வெளிப்படுத்த விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்கேற்புக் கலைஞர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

நல்வாய்ப்புகளை அனைவர் பயன்படுத்திக் கொள்ள  வேண்டுகிறோம்!

தோழர் தியாகு எழுதுகிறார் 99 : பதிவுகள் தளத்தில் செவ்வி 6

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 98: பதிவுகள் தளத்தில் செவ்வி 5 – தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 6

யமுனா :

பொதுவாக மார்க்குசியத்தின் தேசியம் தொடர்பான அணுகுமுறையை இடித்தாய்வு செய்யும்(விமர்சிக்கும்) போது மார்க்குசியம் இரண்டு விசயங்கள் தொடர்பாக வரலாற்று முறையிலான – அடம்பிடித்த படியிலான தவற்றைச் செய்திருக்கிறது என உரொனாலுடு மங்கு(Ronald Mang) தனது நூலில் குறிப்பிடுகிறார். பெண்கள் தொடர்பான சிக்கலையும் தேசியம் தொடர்பான சிக்கலையும் அணுகிய விதம் அதனது புரட்சிகரத் தன்மைக்கே அவையிரண்டும் சவாலாக உருவாக வேண்டிய சூழலை உருவாக்கி விட்டதென அவர் அவதானிக்கிறார். இன்னும் தேசியம்  பெண்களின் உயிர் மறுஉற்பத்தி சார்ந்த விசயங்களைக் கட்டுப்படுத்தும் பிற்போக்கான கருத்தியலாகவும் வளர்ந்திருக்கிறது எனும் விமர்சனமும் அதன் மீது உண்டு. இவ்வகையில் தமிழ்த் தேசியத்தில் ஒரு சமூக சக்தியாகப் பெண்கள் பற்றிக் குறிப்பிபடவேயில்லை – அவர்கள் தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன?

தியாகு:

சமூகநீதிப் போராட்டத்தின் ஒரு கூறாக ஆணாதிக்கத்திற்கெதிரான பெண்களின் போராட்டத்தை வரவிருக்கும் “தலித்தியமும் தமிழ்த் தேசியமும்” நூலில் விரிவாகக் குறிப்பிடுகிறேன். நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் எல்லாவிதமான ஆதிக்கங்களையும் சாதிய ஆதிக்கத்தோடு தொடர்புபடுத்த முடியும் என நான் அதில் விவாதிக்கிறேன். ஆணாதிக்கத்தைக் கூட சாதிய ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கருவியாக விளக்கிய அம்பேத்துகரை மேற்கோள் காட்டுகிறேன். எவ்வாறாக இராசபுத்திரர்களின் உடன்கட்டை ஏறும் பழக்கம் கூட அகமணமுறையைப் பாதுகாக்குமுகத்தான் ஏற்படுத்தப்பட்டது என அம்பேத்துகர் சொல்கிறார். பாரதிராசாவினுடைய ‘கருத்தம்மா‘ திரைப்படத் திறனாய்வுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசினேன். ‘கருத்தம்மா’ படத்தில் ஏன் இந்த பெண் சிசுக் கொலைப் பழக்கம் வந்தது என்பதை பாரதிராசாவினால் சரியாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை என்று நான் கூறினேன். வரதட்சணைக் கொடுமையால் சிசுக் கொலை நடப்பதாக அந்தப் படத்தில் அவர் சொல்கிறார். வரதட்சணைக் கொடுமையால் பெண்சிசுக் கொலை நடைபெற வேண்டுமானால் எந்தச் சாதியில் வரதட்சணைக் கொடுமை அதிகமாக இருக்கிறதோ அந்தச் சாதியில்தான் அந்தச் சிசுக்கொலை நடந்திருக்கவேண்டும். வரதட்சணைக் கொடுமை என்பது பார்ப்பனர்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடமும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் எந்தப் பார்ப்பனக் குடும்பத்திலும் நாட்டுக் கோட்டைச் செட்டியார் குடும்பத்திலும் பெண்சிசுக் கொலை நடக்கவில்லை. மாறாக முக்குலத்தோரில், தேவர் குடும்பஙகளில் நடக்கிறது – வரதட்சணை என்பதை ஒப்புக் கொள்ளாத சாதியில் பெண் சிசுக்கொலை இருக்கிறது. வரதட்சணைக் கொடுமை என்பது அவர்களிடம் இல்லை. தற்போது தலித்துகளுக்கிடையில் கூட வரதட்சணைப் பழக்கம் வந்திருக்கிறது. பார்ப்பனமயமாதலின்  தாக்கமாகத்தான் அது மற்றவர்களிடம் பரவியிருக்கிறது. தாங்களும் அவர்களைப் போல் நடந்து கொள்ளவும் இருக்கவும் மற்ற சாதிகள் முயற்சி பண்ணுவதின் விளைவுதான் வரதட்சணைக் கொடுமை இவர்களிடம் வந்திருக்கிறது. நான் அந்தப் படத்தின் உள்ளிருந்தே ஒரு உதாரணம் கொடுத்தேன். கருத்தம்மாவை ஒருவன் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்யப் போவான். போகும் போது இதோ இந்தச் சீதனத்தை வைத்துக் கொள் என்று கொடுப்பான். மாப்பிள்ளை பெண்ணுக்குச் சீதனம் கொடுத்து கல்யாணம் பண்ணிக் கொள்கிற பழக்கம்தான் தேவர் சாதியில் உண்டே தவிர பெண்வீட்டார் அவனுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் பண்ணுகிற பழக்கம் கிடையாது. எனில் தேவர் குடும்பத்தில் எப்படி பெண்சிசுக்கொலை நடக்கும்? இது வரதட்சணைக் கொடுமையோடு தொடர்புடையதல்ல, அந்தச் சாதியின் படைத் தொழிலோடு சம்பந்தமுள்ளது. அது படைச் சாதி (martial caste). அவர்கள் போர்களுக்குச் செல்கிற போது இயல்பாகவே ஆண்பெண் விகிதம் மாறிப் போய் விடுகிறது. ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி விடுகிறது. பெண்களின் தொகை அதிகரிக்கிற போது திருமணம் செயவதற்கு அவர்கள் சாதியை மீறி வெளியில் போக வேண்டிய கட்டாயம் வருகிறது. இதைத் தடுக்க வேண்டுமெனில் – சாதியைக் காப்பாற்ற வேண்டுமெனில் –  ஆண்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெண்களின் எணணிக்கையைக் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இராசபுத்திரர்களின் மத்தியில் இது உடன்கட்டை ஏறும் பழக்கமாக இருந்தது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், தேவர்கள் மத்தியில் இது பெண்சிசுக் கொலையாகியது என்று சொன்னேன். 

யமுனா:

தமிழ்த் தேசியத்தின் புரட்சிகரத் தன்மை, அதனது சமூக வருக்க சக்திகள் பற்றி இது வரை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்த் தேசியத்தின் எதிரிகளென எவரை வரையறுக்கிறீர்கள்?

தியாகு: 

தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு எது தடை – தேசிய வளரச்சியென்பதை சமூகத்தின் சனநாயக வளர்ச்சியாக – மனிதத் தன்மை கொண்ட, மனிதநேயம் கொண்ட ஒரு கட்டமைப்பை நோக்கிய சமூகத்திற்கான தடையாக – குமுகவியம், பொதுவுடைமை யெல்லாம்(சோசலிசம் கம்யூனிசமெல்லாம்) நீண்ட கால நோக்கம் – அதற்குள் எல்லாம் நாங்கள் இப்போது போகவில்லை – ஒரு சனநாயக சமூகத்தை – மனித சமத்துவம் நிலவும் “பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்” என்ற நிலையைக் கொண்டுவந்தால் போதும், இப்போது அந்தவொரு சமூகத்திற்கு எது தடையாக இருக்கிறது என நாம் பார்க்கிறோம். இரண்டு தடைகள் இருக்கின்றன. ஒன்று, தில்லி ஏகாதிபத்தியம், மற்றது சாதியம். தில்லி ஏகாதிபத்தியம் என்கிற போது இந்திய  அரசைக் குறிப்பிடுகிறேன். இதனது சமூகச் சக்திகளை மூன்று விதமாக வரையறுக்கிறோம். ஐரோப்பா மாதிரி இந்தியச் சமூகத்தை வருக்கப் பகுப்பாய்வுக்குள், வருக்கக் குறுக்கல் வாதத்துக்குள் கொண்டுவர முடியாது. அந்தக் கட்டத்தை நாம் தாண்டிப் போய் விட்டோம். ஆனால் வருக்கம் இல்லையென்றோ வருக்க நிராகரிப்பு என்றோ நாம் சொல்லவில்லை.

1)     அந்நிய நிதி மூலதனத்தோடு இணைந்து செயல்படுகிற, அதனைச்  சார்ந்திருக்கிற – உலகமயமாதல்  மற்றும் ஏகாதிபத்தியப் போக்குகளின் கருவியாகச் செயல்படுகிற – இந்தியப் பெருமுதலாளி வருக்கம். இவர்களை நாம் பன்னாட்டு மூலதனத்தினர் என்று வரையறுக்கிறோம். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று நாங்கள் சொல்கிற போது இவர்கள் பன்னாட்டு மூலதனத்தினர்தான். வருக்கெமன்று பார்க்கும் போது இவர்கள்தான் முதல் எதிரிகள்.

2)     சமூகச் சக்திகள் என்று பார்க்கிற போது உத்தியோகத் துறை மற்றும் பொருளுற்பத்தியில் இருக்கக் கூடிய மூலதனம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பார்ப்பன பனியா வருக்கம். இது சாதிய அடிப்படை கொண்டது.

3)      இந்துத் தேசியம் என்கிற இந்தியத் தேசியம்: இந்தி மொழி ஆதிக்க சக்திகள். இவர்கள் சார்பில் நடைபெறுவதுதான் இந்திய அரசு அதிகாரம் என்று நாம் வரையறை செய்கிறோம். இவர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் எமது நோக்கம். இதற்கான புரட்சிகர சக்திகள் யார்? இயல்பாகத் தமிழ்த் தேசியம் என்பது எந்தெந்தச் சக்திகளின்  வளர்ச்சிக்குத் துணை செய்யுமோ அந்தச் சக்திகள். – அப்படிப் பார்க்கிற போது பாட்டாளி வருக்கம் – பாட்டாளி வருக்கம் இன்னும்  முழு வளர்ச்சி பெறாத போதும் –  வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளி வருக்கம் என்று கொள்ளலாம். – அதே போல சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள் – இவர்கள்தான் பிரதான சக்திகள். இதைப் போலவே பிற்படுத்தப்பட்ட சாதியினர் – இவர்களைப் பொறுத்து இரண்டு விதமான போக்குகளை எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது – அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகப் போராட வேண்டும். அவர்களே அடிமைகள் எனும் அளவில் அவர்களுக்கு மேலிருக்கிற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். போராட்டப் போக்கில்தான் இந்தச் சக்திகளை நாம் ஒன்றுபடுத்த முடியும். அடுத்தாகச் சமுதாயத்தில் இருக்கும் சனநாயக சக்திகள். இதில் எந்த வருக்கமும் உள்ளடங்கும். எந்தச் சாதியும் இதற்குள் வரலாம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65

வெள்ளி, 12 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 98 : பதிவுகள் தளத்தில் செவ்வி 5

 

தோழர் தியாகு எழுதுகிறார் 98 : பதிவுகள் தளத்தில் செவ்வி 5



(தோழர் தியாகு எழுதுகிறார் 97: பதிவுகள் தளத்தில் செவ்வி 4- தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 5

தமிழ்த் தேசியத்தின் ஓர்மையும் பன்மையும்

யமுனா:  

நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசியம் ஒரு பலப்பண்பாட்டு(மல்ட்டி கல்ச்சுரல்) மன்பதையாக இருக்குமா?

தியாகு:

இல்லை – ஒரு பகுதி, சிறுபான்மையர் இருப்பர். ஆனால் முதன்மை மன்பதை (main stream) ஒன்று இருக்கும். பலப்பண்பாட்டு குமுகத்தில் முதன்மை மன்பதை (main stream) என்ற ஒன்று இருக்காது. அப்படிப் பார்ப்பது தமிழர் தாயகத்தை மறுப்பதாகும். தமிழர்களின் தாயகம்தான் தமிழ்நாடு  தமிழ் இனத்தின் வாழ்விடம் இது. நமது எல்லைதான் இது. இதில் சிறுபான்மையினர்க்கு இடம் உண்டு. சிறுபான்மையினர்க்கான உரிமை வேறு. தேசியத்தின் உரிமைகள் வேறு. இரண்டையும் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. சிறுபான்மையினர்களின் உரிமைகள் அங்கிகரிக்க்ப்பட்டு மதிக்கப்படும்அதே நேரத்தில் இது தமிழர்களின் தேசியத் தாயகம்.

யமுனா:

இப்போது சிறுபான்மையினர் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

தியாகு: 

மொழிவழிச் சிறுபான்மையினர் எல்லையோரங்களில் இருப்பவர்கள். கன்னடர்கள் இருக்கிறார்கள்.  மலையாளிகள் இருக்கிறார்கள்.

யமுனா: 

தமிழ்ப்பண்பாடு(கலாச்சாரம்) என்று சொல்கிற போது நீங்கள் பொது மொழி, பொதுப் பண்பாடு போன்றவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். இவ்வகையில் மதம் இங்கு எந்தவிடத்தில் பொருந்துகிறது?

தியாகு: 

தேசம் என்கிற அமைவில் பல்வேறு கூறுகள் இடம்பெறுகின்றன. அகக்கூறுகள் மற்றும் புறக்கூறுகள். புறக்கூறுகள் என்கிற போது அவர்கள் பேசும் மொழி, அவர்கள் வாழக் கூடிய நிலப்பரப்பு. இதில் அவர்களின் தெரிவென்று ஏதுமில்லை. இனச் சிறுபான்மையினர் என்பது சரியான சொல்லாட்சி இல்லை. மொழிச் சிறுபான்மையினர் என்று சொல்லலாம். நாம் மதம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மதம் ஒடுக்குமுறைக்கான கருவியாகிற போது – பல்வேறு மொழி பேசும் பல தேசிய இனங்களைச் சார்ந்தவராயினும் யூதர்களை மதத்தின் பெயரில் ஒடுக்கியதால் அதுவே அவர்களை இணைக்கக் கூடிய காரணியாயிற்று. ஒரே மதத்தில் கூட ஒடுக்கப்பட்டவர்களும் ஒடுக்குபவர்களும் இருப்பர். தென் ஆப்பிரிக்க எடுத்துக்காட்டைப் பாரக்கலாம். கறுப்பர்களின் கிறித்துவப் பிரிவு என்பது வேறு. வெள்ளையர்களின் கிறித்துவம் என்பது வேறு. அயர்லாந்து சிக்கலில்  கத்தோலிக்கமும் திருத்த அவையினர்(protestant) சிக்கலும் தலையாய சிக்கலாக இருக்கிறது. நமது சிக்கலில் மதம் ஒரு காரணமாக வைத்து ஒடுக்குமுறை அமையவில்லை. இங்கு நமக்கிடையிலுள்ள  சிக்கல் சாதிய வேறுபாடுதான். அது நமக்கு வெளியிலிருந்து வருவது அல்ல.

யமுனா: 

மதம் தொடர்பாகப் பார்க்கிற போது மொழியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மொழி சார்ந்த பண்பாட்டை நாம் பேசுகிற போது மொழி மதச்சார்பற்றதாக இல்லாதிருக்கிறதை நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. மொழி தொடர்பான ஆய்வுகளிலிருந்து  பாரக்கிற போது மதம் தொடர்பான சார்புநிலையினின்று மொழியைப் பிரித்துப் பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக ஈழத்தில் சைவத்திலிருந்து தமிழ் மொழியைப் பிரித்துப் பார்ப்பது கடினம். அம்மொழி மதச்சார்பற்ற மொழியாகவில்லை. அதைப் போலவே மொழி நாம் பேசுகிற மன்பதைச் சூழலில் சாதி ஆதிக்கத்தினுடைய கருவியாக இருக்கிறது. அவ்வகையில் மொழி மத ஆதிக்கத்தினுடைய கருவியாக இருக்கிறது. ஜரோப்பிய மொழிகளுக்கும் நமது மொழிகளுக்கும் இருக்கிற மிகப் பெரிய வேறுபாடுகளில் ஒன்று  மேற்கில் மொழிக்குள் மதச்சார்பற்ற மற்றும் பாலாதிக்கநீக்க மொழிக்கான நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது மொழிகளில் அவ்வகையிலான முயற்சிகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை. கலைஞர் கருணாநிதி பேசுகிற தமிழும் கிருபானந்தவாரியார் பேசுகிற தமிழும் ஒடுக்கப்பட்ட ஒருவர்(தலித்து) பேசுகிற தமிழும் பல்வேறு வகைகளில் வேறுபாடானது. மொழி மதநீக்கம் அடையாத போது எவ்வாறு மொழியைத் தேசியத்தின் பொது அலகாக நீங்கள் வரையறுக்கிறீர்கள்?

தியாகு:

உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். தமிழ் மொழி முழுக்க மதநீக்கம் பெற்ற மொழிதான். மொழி அதனளவில் ஒரு வருக்கக் கருவியோ சாதியக் கருவியோ மதக் கருவியோ அல்ல. மொழியை எதற்கும் பயன்படுத்திக்   கொள்ள முடியும். தமிழ்ப் பண்பாடு என்பது சமயப் பண்பாடு அல்ல. இன்னும் சமயப் பண்பாடு வெறும் ஆதிக்கப் பண்பாடு கிடையாது. சாதியச் சிந்தனைகள் வைதிகக் கருத்துகள், இலக்கியங்கள் எந்த மொழியில் வந்தனவோ அதே மொழியில்தான் சித்தர் பாடல்களும் வள்ளலார் பாடல்களும் வந்தன.  எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குறள். திருக்குறள் போன்ற மதநீக்கம் பெற்ற இலக்கியம் சாதிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு சமத்துவக் கருத்துகள் நிறைந்த இலக்கியமென்று வேறொன்று இல்லை. குறளியம் என்பதோர் அமைப்பு, ஒரு முறைமை. நமது தமிழ் மன்பதையின் நடந்திருக்கக் கூடிய சமூக நீதிக்கான, சமத்துவத்துக்கான போராட்டத்துக்கான மிகப் பெரிய வரலாற்றுப்  பதிவு திருக்குறள்தான். தமிழில் திருக்குறளுக்குப் பிற்பாடுதான் பிற இலக்கியங்களைச் சொல்லலாம். மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழிகளோடு ஒபபிட்டுப் பார்ப்போமானால் தமிழ் அதிக அளவில் மதநீக்கம் கொண்டது. அதிக அளவில் முற்போக்கு சக்திகளின் பக்கம் நிற்பதாகும். என்னளவில் தமிழ் அனைத்து மக்களுக்குமான மொழிதான்.

விசு:

நாம் வரையறுத்திருக்கிற பொதுவான தமிழ்த் தேசியத்திற்கு மொழி, பண்பாடு, குறிப்பிட்ட எல்லை இம்மாதிரியான ஒரு வரையறைக்குள் தமிழ்ப் பண்பாடு என்பது ஒரு பொதுவான பண்பாடு இருக்கிறதா? தமிழ்ப் பண்பாடு என்பதையும், தமிழ் வாழ்முறை என்பதையும் நீங்கள் எப்படி வரையறுக்கிறிர்கள்?

தியாகு:

வருக்க மன்பதையில் பண்பாடு என்பது இரண்டு முனைகளின் போராட்டமாகத்தான் இருக்கும். சமூக நீதிக்கான சக்திகளும் அதற்கு எதிரான சக்திகளும் காலங்காலமாகப் போராடி வருகிற ஒரு சமூகத்தில் தமிழ்ப் பண்பாடு என்பதும் போராடுகிற இரண்டு முனைகளைக் கொண்ட ஒரு பண்பாடுதான். இந்தத் தமிழ் பண்பாட்டில் சாதியத்திற்கு இடமில்லை. இந்தத் தமிழ்ப் பண்பாட்டில் பார்ப்பனியத்திற்கு இடமில்லை. இந்தத் தமிழ்ப் பண்பாட்டில் மானுடச் சமத்துவத்தை மறுக்கும் கடவுள் கொள்கைக்கு இடம் கிடையாது. ஆத்திகம் ஒரு கூறாக இருந்தால் நாத்திகம் ஒரு கூறாக இருக்கும்.  இதைத்தான் நாம் தமிழ்த் தேசத்தின் பண்பாடு என வரையறுக்கிறோம்.

விசு:

பலப் பண்பாடு, பன்முக வரலாறு என்கிற வகையில் இங்கு பல விடயங்கள் முன்வந்திருக்கின்றன. உயர் சாதி தாழ்ந்த சாதி பிற்பட்ட  ஒடுக்கப்பட்பட மக்கள் போன்றவர்களின் பண்பாடு என்பது தமிழ்ப்பண்பாட்டுக்குள் வருகிறதா?

தியாகு:

அமெரிக்கத் தேசிய வளர்ச்சியிலும் அமெரிக்க ப் பண்பாட்டு வளர்ச்சியிலும் கறுப்பர்களுக்கு ஒரு பங்கு உண்டு. அமெரிக்கத் தேசிய வரலாறு என்பது வெள்ளையர்கள் சென்று செவ்விந்தியர்களை  அழித்தது மட்டுமல்லவே? அவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டிலும் நீங்கள் குறிப்பிடுகிற அனைவரும் உள்ளடங்குவர். ஆபிரகாம் இலிங்கனுடைய போராட்டத்துக்கும் கறுப்பின மக்களின் போராட்டத்துக்கும் எவ்வாறாக அமெரிக்க வரலாற்றிலும் பண்பாட்டிலும் இடமிருக்கிறதோ அவ்வாறே தமிழ்ப் பண்பாட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பங்கிருக்கிறது. பண்பாடு என்பதை ஓர் இறுகிய நிலையாகப் பார்க்க முடியாது. அதை இயங்கியல் முரண்களுக்கிடையிலான போராட்டமாக (டைனமிக்காக)ப் பார்க்க வேண்டும். நம்மைப் பொறுத்த அளவில் எதுவெல்லாம் குமுக மாற்றத்துக்குத் துணை நிற்கக் கூடியதோ, எது தேசியத்தனிநிலைக்கும் சாதியத்தனிநிலைக்கும் எதிரானதோ அதுவெல்லாம் தமிழ் தேசியப் பண்பாட்டுக்குள் இயங்கும். இதைத்தான் தமிழ் வரலாறாக நாம் பாரக்கிறோம்.

விசு:

இவ்வாறாகப் பொதுமைப்படுத்தும் போது ஒடுக்கப்பட்டவர்களுடைய வரலாற்றில் எந்தவிதமான கூறுகளை நாம் எடுத்துக் கொள்கிறோம் – எதனை விலக்குகிறோம்?

தியாகு:

திருக்குறள் என்பது ஒடுக்கப்பட்டோர் இலக்கியம். யார் கடைக்கோடியில் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அவர்களது விடுதலைக்கான இலக்கியம்தான் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம். எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது ஒடுக்கியம். சித்தர்களிடம் இந்த வேகத்தைப் பார்க்கலாம். பாரதியின் சாதிய எதிர்ப்பில் அதைப் பாரக்கலாம். இந்தியத் தேசியப் பண்பாட்டில் எஞ்சி நிற்பது ஆதிக்கப் பண்பாடு மட்டும்தான். முருகன் குறத்தியை மணந்து கொள்கிற தமிழ்க் கடவுளாகத்தான் இருக்கிறான். தேவயானியைக் கொண்டுவந்து அவனோடு இணைக்கும் போதுதான் நமக்குச் சிக்கல் வருகிறது. இவ்வகையில் தமிழ்த் தேசியப் பண்பாடு என்பது அனைத்து வகையான ஆதிக்கப் பண்பாடுகளுக்கும் எதிரானதாகிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65

வியாழன், 11 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 97 : பதிவுகள் தளத்தில் செவ்வி 4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 96: பதிவுகள் தளத்தில் செவ்வி 3- தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 4

அடுத்ததாகத் தேசிய இயக்கத்தில் வரும் இராணுவவாதம் தொடர்பாகப் பார்ப்போம். இராணுவவாதம் என்பது தேசிய விடுதலை இயக்கத்தில் மட்டுமல்ல, குமுகவியத்திலும்( சோசலிசத்திலும்) வந்திருக்கிறது. நிறஒதுக்கலுக்கு எதிரான ஏ.என்.சி.யின்  (ஆப்பிரிக்க தேசியப் பே்ராயம்) போராட்டத்தில் கூட வந்திருக்கிறது. மண்டேலா இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அரசியல் போராட்டப் பட்டறிவுகளிலிருந்து முதிர்ச்சியடைவதற்கான நீண்ட வாய்ப்பு ஏ.என்.சி.க்கு இருந்தது.  ஆனால் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு அம்மாதிரிப் பட்டறிவுகள் இல்லை. நிரம்பவும் அடிப்படை நிலையில் இருந்தவர்கள். கற்றுக்  கொள்ள வேண்டிய பருவத்தில் இருந்தவர்கள். ஒரு பட்டறிவும் கிடையாது. பட்டறிவு வாய்ந்த அரசியல் தலைமை பாதியிலேயே விட்டுவிட்டுப் போய் விட்டது. ஆனால் ஏ.என்.சி.யில் நீங்கள் அபபடிப் பார்க்க முடியாது. அரசியல் தலைமைதான் இராணுவத் தலைமையாக மாறுகிறது. மண்டேலா எல்லாக் கட்டங்களையும் தாண்டி வந்தவர். அங்கோலாவில் நாம் பார்த்தோம். எம்.பி.எல.ஏ மட்டும்தான் கடைசிவரை போராட்டத்தில் நின்றது. யுனிட்டா  தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசின் கருவியாகவும், என்.எல்.ஏ. சிஜ.ஏ.வின. கைக்கூலியாகவும் ஆனது. இதற்காக நாம் அங்கோலாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் குறை சொல்ல முடியாது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்மறைப் போக்குகள் பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட ஒரு தேசியத்தின் வெளியிலிருந்து ஏகாதிபத்தியத்தாலும் இந்திய அரசாலும் உள்ளிருந்து சாதியத்தாலும் வளர்ச்சி மறுக்கப்பட்டு தடைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு தமிழ்த் தேசியம் என்பது முற்போக்கானது. குடிநாயகத் தன்மை கொண்டது. குடிநாயக உள்ளடக்கம் கொண்டது. அந்த உள்ளடக்கத்தைச் சரியான வழியில் வெளிப்படுத்துகிற கடமை தமிழ்த் தேசியத்திற்காகப் போராடுகிற சக்திகளின் கையில் இருக்கிறது. இதற்கு மாறான வடிவத்தை வெளிப்படுத்துபவர்களை எதிர்க்கிறோம். எம்முடைய தமிழ்த் தேசியத்தில் கொடுங்குழுவிய(பாசிச) ஆபத்து இல்லை. அப்படியாக நாம் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. 

யமுனா: 

தமிழ்த் தேசியத்தின் திட்டம் மற்றும் அதனது அரசியல் தந்திரோபாயம் என்ன? அதனது நேச சக்திகள் என்று எதனைக் கருதுகிறீர்கள்?

அதன் தலையாய எதிரிகள் என எதை வரையறுக்கிறீர்கள்? இந்தியத் தேசியம் என்பது பல்வேறு அண்டைத் தேசியங்களைக் கொண்ட அரசாக இருக்கிற சூழலில் இக்கேள்வி மிக முக்கியத்துவமுள்ளது என நான் கருதுகிறேன். ஒரு குறிப்பான சிக்கலான பிரச்சினை இங்கு என்னவென்றால் – நாங்கள் தேசியம் என்கிற போது ஒரு மொழியை வரையறுக்கிறோம். ஒரு எல்லையை வரையறுக்கிறோம். ஒரு பண்பாடடையும் வரையறுக்கிறோம். எனக்கு அதிகம் பரிச்சயமான தென் இந்தியச் சூழலில் இருந்து சிக்கலைத் துவங்கலாம் என நினைக்கிறேன். தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், ஆந்திரா என  (நமது விவாதத்தின் பொருட்டு) நான்கு தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பிரதேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லா மாநிலங்களிலும் குறிப்பான மொழி பேசுகிறவர்களை மட்டும் கொண்டதாக இம்மாநிலங்கள் இல்லை. தமிழகத்தில் இருக்கிற ஆறு கோடிக்கும் மேலானவர்கள் அனைவருமே தமிழ் பேசுபவர்கள் இல்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பிற மொழி பேசுபவர்களும் உள்ளார்கள். இதே மாதிரியான ஒரு கலப்பான நிலைதான் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் நிலவுகிறது. இவவாறான சூழலில் கன்னட தேசியம், கேரள தேசியம், ஆந்திர தேசியம், தமிழக தேசியம் போன்றன முன்வைக்கப்படக் கூடிய சூழல் இருக்கிறது. எனில் இந்தத் தேசிய இனங்களின் சிக்கல்களை எதிரொலிப்பவர்களுக்கிடையிலான உறவுகள் முரண்கள் எவ்வகையில் அமையப் போகின்றன? 

தியாகு:

தமிழ்த் தேசியம் என்று சொல்கிற போது பிற மொழி பேசுகிறவர்கள் தொடர்பான சிக்கலில் இரண்டு விதமான நிலைகள்  இருக்கின்றன. ஒன்று வீட்டுத் தாய்மொழியாக மட்டும் பிற மொழிகளைக் கொண்டவர்கள். வாழ்க்கை மொழியாகத் தமிழை  ஏற்றுக் கொண்டவர்கள். அது தவிர்க்க முடியாதது. ஒரு  இயக்கத் துடிப்புள்ள சமூகம் (‘டைனமிக் சொசைட்டி’) அப்படித்தான் இயங்கும். அது ஒரு பெரிய கொதிகலன். அதற்குள் வருவதையெல்லாம் அது கலந்து ஒன்று சேர்த்துக் கொள்ளும். அப்படியில்லையெனில் அந்தச் சமூகத்தின் இயக்கமே சந்தேகத்துக்குரியதாகி விடும். அவ்வாறு தமிழ் மன்பதை என்பது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறிய தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மற்ற மற்றத் தேசிய இனத்தவர்களை, மற்ற மொழி பேசுகிற மக்களை உள்வாங்கி விட்டது. தேசிய இனத்துக்குரிய இலக்கண வரையறையில் பொது மொழி என்று சொல்கிறோமேயொழிய தாய்மொழி என்று சொல்வதில்லை. தாய்மொழியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமேயில்லை.

தென் ஆப்பிரிக்கத் தேசியத்தில் பார்த்தோமெனில் வரலாற்றுப் படிநிலைவளர்ச்சி என்பது எவ்வாறு பங்கு வகிக்கிறதெனப் பார்க்க முடியும். 13 மொழி பேசுகிற மக்கள் அவர்கள். மண்டேலாவின் மொழி வேறு. புத்துலேசியினுடைய மொழி வேறு. ஆனால் அவர்களுடைய மொழிகளெல்லாம் இயல்பாக வளர்ந்து தேசிய மொழிகளாக மலர்ந்து தனித்த தேசிய இனங்களாக வளரக் கூடிய வளர்ச்சிப் போக்கு என்பது வெள்ளையர்களின் குடியேற்ற ( காலானி)ஆதிக்கத்தினால் பாதியில் குறுக்கீட்டுக்குள்ளாகியது. எனவே இந்த மக்களெல்லாம் வளர்ந்து தேசிய இனம் ஆகிய பிறகு நமது விடுதலைக்குப் போராடுவோம் எனப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே அவசரமாக அவர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அவர்களுக்கு ஏற்கெனவே கல்வித் துறை சார்ந்து ஆங்கிலம் பழகி இருந்தது.

ஆங்கிலத்தையே பொது மொழியாக எடுத்துக் கொணடார்கள். மண்டேலா விடுதலையாகி வெளிவந்து ஆங்கிலத்தில்தான் உரையாற்றினார். தென்னாப்பிரிக்க தேசம் என்பது உருவாகி வளர்ந்த போது, தேசியம் ஏற்கெனவே நிறஒதுக்கலுக்கெதிரான போராட்டத்தில் உருவாகி விட்டது. தென்னாப்பிரிக்கத் தேசியத்தின் மொழி ஆங்கிலம். சொவெட்டோ கிளர்ச்சி என்பது ஆங்கிலத்துக்கு ஆதரவாக, ஆப்பிரிக்கர் மொழித் திணிப்பிற்கு எதிராகத்தான் நடந்தது. ஆகவே பொதுமொழி என்பது முக்கியமாகிறது. தமிழ்ச் சமுதாயத்தில் பெரும் பகுதியானவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வீட்டு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பொது மொழியாகத் தமிழைக் கொண்ருப்பவர்களைத் தமிழர்கள் அல்லாதவர்கள் என்று கருத நியாயமேயில்லை. அவர்களும் தமிழ்த்தேசிய இனத்தினுடைய ஒரு பகுதியே ஆவர். ஏற்கெனவே ஒன்று கலந்துவிட்டார்கள். இன்னும் கலந்து கொண்டே இருக்கிறார்கள். அந்தச் செயல்போக்கு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.

பிறிதொரு பகுதியினர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாத் தேசிய இனங்களிலும் இருப்பார்கள். எல்லையோரத்தில் வாழக் கூடியவர்கள். அவர்கள் தொடர்ந்து எங்கிருந்து வந்தார்களோ அந்தத் தாய்நாட்டோடு பிணைப்புகள், கொடுக்கல்வாங்கல் உறவு வைத்திருப்பார்கள். ரொம்பவும் அண்மைக் காலத்தில் வந்து குடியேறித் தம் அடையாளத்தைக் காத்துக் கொண்டிருக்கிற சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். இவர்கள் சிறுபான்மையினர். இவர்கள் உலகெங்கிலும் இருப்பவர்கள்தான். நமது நாட்டில் மட்டும் அதிசயமாக இருக்கிறவர்கள் அல்லர். இதற்காக இவர்கள் தேசிய அடையாளத்தைக் கைவிட்டு விடுகிறார்கள் என்றோ தேசிய மொழியைக் கைவிட்டுவிடுகிறார்கள் என்றோ பொருளன்று. இந்தப் போக்கும் ஒரு புறம் இருக்கும். தேசியச் சிறுபான்மையினர் உரிமை என்பதும் பிறிதொரு பக்கம் இருக்கும். மொழி, மதம், பண்பாடு ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து வாழ்ந்தால் தன்னாட்சி சுயாட்சி – autonomy  – உள்பட அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்படும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65

புதன், 10 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 96 : பதிவுகள் தளத்தில் செவ்வி 3

 





(தோழர் தியாகு எழுதுகிறார் 95: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி3

தமிழ் மன்பதையைப் பொறுத்த வரைக்கும் – நமக்கிருக்கிற ஒரே சிக்கல் தில்லி அல்ல. அது சிக்கல்களில் ஒன்று. அரசியல் அதிகாரம் அங்கே இருப்பதனால் உடனடியான அரசியலில் அதை அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிக்கல் அத்தோடு முடிவதல்ல. நமக்கு இங்கே நமக்குள் இருக்கிற சிக்கல் முக்கியமானது. நமது தேசிய வளர்ச்சிக்கான தடைகள் – நமது தேசியச் சந்தை உருவாவதற்கான தடைகள் – குடிநாயக உறவுகளுக்கான தடைகள் –  மொழி வளர்ச்சிக்கான தடைகள் – அனைவரும் கல்வி கற்பதிலுள்ள தடைகள் அனைத்துமே தேசியத்திற்கான தடைகள்தாம். நாம் ஒரு தேசமாக ஒன்றுபடுவதிலுள்ள தடைகள் – முதன்மையாக இதில் சாதியத்தை நாங்கள் முன்வைக்கிறோம். இது தொடர்பாக எமது இயக்கத்தில் ஒரு விவாதம் நடந்தது. தமிழ்த் தேசியம் என்பதை அதனளவில் வலியுறுத்துவதல்ல எமது நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் குமுக நீதி என்பதைத்தான் நாம் வலியுறுத்துகிறோம். தேசிய குடிநாயகம் அல்லது தமிழ் நிகரியம் என்று இதைச் சொல்கிறோம். எந்தத் தேசியமும் வெறுமனே புறம்நோக்கிய பார்வையிலிருந்து வளர முடியாது. அது மக்களிடமிருந்து வர வேணடும் என்றாலே  உள்ளார்ந்து பார்க்க வேண்டும். அது சிக்கல்களைத் தீர்க்கிறதோ இல்லையோ அஃது அடுத்த சிக்கல். திலகர் காலம் வரைக்கும் பேராயம்(காங்கிரசு) ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாறவில்லை. ஏனெனில் வெறுமனே புறம் நோக்கியதாக இருந்தது. உள்ளார்ந்து மோசமாக,  தீவிரமற்றதாக (conservative) இருந்தது. அதை ஒரு மக்களியக்கமாக மாற்ற காந்தி என்ன செய்ய வேண்டியிருந்ததெனில் – உள்ளார்ந்து அவரளவிலே சில சீர்திருத்தங்களை முன்வைத்துத்தான் ஒரு மக்களியக்கமாக மாற்ற முடிந்தது.

தீண்டாமை சொந்தச் சிக்கல் என்று சொன்னார்கள் இவர் வருகிற வரைக்கும். இவர்தான் தீண்டாமை குற்றம், அது குமுகப் பகைக் குற்றம், அஃது எதிர்க்கப்பட வேண்டும் என்று சொன்னார்.  ஏதோ ஒரு வகையிலான சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டியிருந்தது. அது புரட்சிகரமானது அல்ல. காந்தியின் சீர்திருத்தவாதம் என்பது நிலப்பிரபுத்துவ குமுகம் தொடர்பான, சாதியக் குமுகம் தொடர்பான சீர்திருத்தவாதம். நம்மளவில் தமிழ் மன்பதை ஒன்றுபடுவதற்கான தடைகள் என்னவென்று பார்க்க வேண்டும். நாம் மார்க்குசியத்தின் அடிப்படையில் இரண்டுவிதமான தடைகளைப் பார்க்கிறோம். புறத்தடை, அகத் தடை இரண்டையும் பார்க்கிறோம். இரண்டுமே நமக்கு எதிராக இருக்கின்றன. எந்தக் கருத்தியலும் வளர்கிற போது – நாம் தேசியம் என்று வருகிற போது – தேசிய மன்பதை வளர்ச்சி என்று வருகிற போது – நமது குமுகம் வளர வேண்டும் என்கிற போது – தேசிய மன்பதையாகத்தான் வளர வேண்டும்.  காரல் மார்க்குசு சொல்கிற போது – “the working class organizes itself on a national basis and it is national in its outlook to that extent, though not in the bourgeois sense” – தொழிலாளி வருக்கம் தேசிய அடிப்படையில் தன்னை அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும், அந்த அளவுக்கு அது தேசியக் கண்னோட்டம் கொண்டது,  ஆனால் முதலாளித்துவப் பொருண்மையில் அல்ல. இலெனின் என்சைக்கிளோபீடியாவுக்கு மார்க்குசு தொட்பாக எழுதிய குறிப்பில்  இதை மேற்கோள் காட்டுகிறார். ஒரு  பன்னாட்டுக் கருத்தரங்கில் இலாஃபார்க்கு போன்றவர்கள் நாம் தேசியத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கிறார்கள். மார்க்குசு இது பற்றி எழுதுகிறார்:

“நேற்று பன்னாட்டுப் பேரவையில் (அகிலம்) இப்போதைய போர் குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது…. ‘இளைய பிரான்சு’ பேராளர்கள் (தொழிலாளர் அல்லாதார்) எல்லாத் தேசிய இனங்களும், தேசங்களும் கூடக் ‘காலாவதியாகி விட்ட காழ்ப்புகளே’ என்று அறிவித்தார்கள்…. தேசிய இனங்களை இல்லாமற்செய்து விட்ட நம் நண்பர் இலாஃபார்க்கும் மற்றவர்களும் நம்மிடம் ‘பிரெஞ்சு’ பேசினார்கள், அதாவது அவையில் பத்திலொரு பங்கினர்க்குப் புரியாத மொழியில் பேசினார்கள் என்று சொல்லி நான் என் உரையைத் தொடங்கிய போது ஆங்கிலேயர்கள் சிரித்து விட்டார்கள்….”

கூட்டத்தில் இருக்கிறவர்களில் பத்திலொருவருக்குப் பிரெஞ்சு மொழி தெரியாது. பிரெஞ்சு மொழி பேசிக் கொண்டு தேசிய இனத்தை ஒழிக்க வேண்டும்  என்கிறார்கள். உங்களால் பிரெஞ்சு மொழியை ஒழிக்க முடியவில்லை என்றால் பிரெஞ்சு தேசிய இனத்தையும் ஒழிக்க முடியாது என்று சொன்னார். பன்னாட்டியம் என்பது தேசியத்தை ஒழிப்பதோ அல்லது தேசியத்தை மறந்து விடுவதோ அல்ல. தேசியத்தை அங்கீகரிப்பது, அவற்றின் சமத்துவத்திற்காகப் பேராட வேண்டும் என்பதுதான்.

தேசியவாதத் தனித்தன்மை (national exclusiveness) சிக்கலுக்கு இப்போது வருவோம். எல்லாவிதமான தனித்தன்மை எதிராகவும் நாம் போராட வேண்டும். நியாயமான குமுக அடிப்படை கொண்ட காரணங்களுக்காக ஒடுக்கப்பட்டோர்(தலித்து) இயக்கத்தைத் திரட்டுகிறோம். இயக்கத்திற்குள் ஒடுக்கப்பட்டோர்(தலித்து) தனித்தன்மை வருமானால் அதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் இயக்கமானவுடன் என்ன செய்கிறார்கள் – தாம் தனியே இருக்க வேண்டும் எனப் பிறரை மறுக்கிறார்கள். இவையெல்லாம் கடந்த காலக் குமுகக் கருத்தியலின் தொடர்ச்சியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். இவ்வகையில் தேசியத்தனித்தன்மை என்பதும் வரும். அதை எதிர்த்து நாம் போராடியாக வேண்டும். முதலாளித்துவத் தேசியம் என்பது ஒரு போக்கு. அது மக்களைப் பற்றிக் கவலைப்படாது.. இன்னொரு போக்காக புரட்சிகர குடிநாயகத் தேசியம். நான் பாட்டாளி வருக்க தேசியத்திற்குள் போக விரும்பவில்லை. ஏனெனில் பாட்டாளி வருக்கம் முழு வளர்ச்சி பெறாத ஒரு குமுகத்தில் நீங்கள் பாட்டாளி வருக்கத்தவனாக எல்லாவற்றையும் அணுக முடியாது. 

புரட்சிகர குடிநாயகம் என்று இலெனின் குறிப்பிட்டது போல நாங்கள் புரட்சிகரக் குமுக நீதி என்று குறிப்பிடுகிறோம். தமிழ்நாட்டுச் சூழலில் அது புரட்சிகரக் குமுக(சமூக)நீதி. புரட்சிகரக் குமுகநீதிக் கண்ணோட்டத்திலான தமிழ்த் தேசியம். இந்தத் தேசியம் தேசியத தனித்தன்மைக்கு எதிரானது. குணா போன்றவர்கள் முன்வைக்கிற கெடுங்குழுவியப் போக்குள்ள தேசியத்திற்கு எதிரானது. தெலுங்கு மொழி பேசுகிறவர்கள் தமிழர்கள் அல்லர், அவர்களை வெளியேற்ற வேண்டும் போன்ற கருத்துகளை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. வரலாற்றுப் படிநிலை வளர்ச்சி(பரிணாமம்), உருவாக்கம் (historic evolution, historic making) என்பது ஒரு நீண்ட செயல்போக்கு கொண்டது. மிகுந்த வரலாற்றுத் தன்மை கொண்டது. இந்த அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள். இரத்தத் தூய்மை அடிப்படையில் தேசிய இனம் உருவாவதில்லை. அவர்களை இணைத்துக் கொண்டுதான் தேசிய இனம் உருவாகிறது. அமெரிக்கத் தேசியத்தைப் பார்த்தோமாயின் வெளிப்படையாகத் தெரியும். நவீன எடுத்துக்காட்டு அமெரிக்கா. அவர்கள் பண்பாட்டில் மட்டுமல்ல, மொழியிலேயே இதை நாம் காணலாம். அடிப்படையில் ஆங்கிலச் சொல்வளம் (vocabulary),  கட்டமைப்பு (structure). உச்சரிப்பு எனும் வகையில், கொச்சை(slang) எனும் வகையில் அது பல வகைகளைத் தனக்குள் இணைத்துக் கொள்கிறது. ஆகவே தூயத் தமிழ்த் தேசியம், கலப்பில்லாத தமிழ்த் தேசியம் போன்ற கருத்துகள் எனக்கில்லை. நான் விரும்புகிற தமிழ்த் தேசியம் அகன்ற குடிநாயகக் கண்ணோட்டத்தோடு கூடிய, குமுக மாற்றத்துக்குத் துணை செய்யக் கூடிய, மக்கள்நலன் சார்ந்த, குமுக நீதியை நிலைநாட்டக் கூடிய தமிழ்த் தேசியமாகும்.

அப்படி இல்லாத தேசியங்கள், செருமானியக் கொடும்பேரினத்துவம்(நாசிசம்) என்று சொன்னீர்கள்.. இந்திய வகைக் கொடுங்குழுவியம் இருக்கிறது, ஒரு வரலாற்றுக் கட்டம் வரைக்கும் பிரித்தானித் தன்னாளுமைக் (ஏகாதிபத்தியத்திற்)கெதிராக இந்தியத் தேசியம் எதிர்மறையானதாக இருந்தாலும் கூட ஒரு ஆக்கப்பூர்வமான பாத்திரம் வகித்தது. உள்ளார்ந்து அதற்கு எந்த முற்போக்குப்  பாத்திரமும் இல்லை. அது சாதியத்தோடு சமரசம் செய்து கொண்டது. சாதியத்தைப் பாதுகாத்தது. ஆக்கப்பூர்வமான வரலாற்றுக் காலக்கட்டம் கடந்த பின் அது முற்றிலும் ஏதிர்ப்புரட்சித்தன்மை கொண்டதாக, பிற்போக்கானதாக ஆகியது. அது முழுக்க இந்துத்துவத்தைச் சார்ந்து நிற்கிறது. இராமன் போல் எங்களுக்கு ஒரு தேசியநாயகன் வேண்டுமென மல்கானி கேட்கிறான். பார்ப்பனியக் கருத்தியல் அரசியலாக இந்தியத் தேசிய அரசியல் இருக்கிறது. விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மதச்சார்பின்மைவாதிகள் உள்பட இந்திய தேசியத்தை முன்வைக்கிற அனைவருமே தவிர்க்க முடியாமல் இந்துத்துவத்தின் பக்கம் போய் விடுகிறார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65

செவ்வாய், 9 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 95 : பதிவுகள் தளத்தில் செவ்வி 2



(தோழர் தியாகு எழுதுகிறார் 94: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 2

அப்படியான நிலை வரும் போது இந்தக் குறிப்பிட்ட வரையறைக்கு வெளியில் இருக்கிற அனைவருமே அன்னியர்களாகப் பாரக்கப்படுவார்கள். மற்றவர்கள் அல்லது அடையாளமற்றவர்கள் எனும் அளவிலேயே பார்க்கப்படுவார்கள். இவ்வாறான தருணங்களில் தனிநிலையை(‘எக்சுக்ளூசிவி’டியை)க் கோருவதால் மற்றவர்களையும் விளிம்புநிலையில் இருக்கிறவர்களையும் அழிக்கத் தேசியவாதிகள் நினைப்பார்கள். இன்றைய தேசியம் குறித்த உரையாடல்களில் இதை இனச்சுத்திகரிப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஈழத்திலும் முசுலீம் மக்களின் பாலான விலக்கம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகி வருகிறது. என்னுடைய அழுத்தம் இங்கு யாதெனில் தேசியக் கருத்தியல் உருவாக்கத்தில் இந்தத் தனிநிலையை (‘எக்சுக்ளுசிவி’டியை)க் கோரிக் கொள்வதுதான் மிகவும் எதிர்மறையான கூறாக இருக்கிறது. தேசிய சோசலிசத்தில் இனக் கொலை தொடர்பான என்ன ஆபத்து இருந்ததோ அந்த ஆபத்து விமர்சனமற்ற எல்லாத் தேசியங்களிலும் இருக்கிறது என்பதுதான் வரலாறாக இருக்கிறது.

மார்க்குசிய இயங்கியலை எழுதிய குணாவின் வல்லிய(பாசிச)த் தமிழ்த் தேசியம் தெலுங்கு பேசுகிற தணிந்த(தலித்து) மக்கள் உள்ளிட்டுத் தமிழகத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிற தெலுங்கு பேசுபவர்களை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்கிறது. இந்த வெளியேற்றம் என்பது அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு.  தமிழ்த் தேசியத்தின் பெயரிலான இனக்  கொலை நடவடிக்கைக்கான முசுதீபு. இதுதான் இனக் கொலையாகக் கொசொவாவில், பொசுனியாவில், (உ)ருவாண்டாவில் தேசியத்தின் பெயரில் நடந்தது. இது அப்பட்டமான வல்லியம்(பாசிசம்) என மார்க்குசியரான கோ.கேசவனும் தணிந்திய(தலித்திய)க் கோட்பாட்டாளரான அ.மார்க்குசும் குறிப்பிடுகிறார்கள் இவ்வாறான சூழ்நிலையில் இருந்துதான் நீங்கள் முன்வைக்கும் தமிழ்த் தேசம் பற்றிய எனது கேள்விகள் அமைகின்றன. இவ்வாறான வரலாற்று அனுபவத்திலிருந்து நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசத்தின் கருத்தியல் மற்றும் எதிர்காலம் எவ்வாறாக இருக்கப் போகிறது என்று கருதுகிறீர்கள்?

தியாகு: 

உங்களுடைய உதாரணம் ஒரு குறிப்பிட்ட வரலாற்று இயக்கத்தின் உதாரணம். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு இயக்கம் எடுக்கக் கூடிய முடிவின் தன்மைகள் தொடர்பான உதாரணம். நாம் கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரு கருத்தியலாக தேசியம் என்ற பொதுக் கோட்பாட்டைப் பேசாது வரலாற்றுப் போக்கை பார்த்தோமானால் சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தேசிய சமுதாயங்கள் உருவாவது என்பது – அந்த தேசிய சமுதாயங்களுக்குப் பொருத்தமான தேசிய அரசுகள் உருவாவது என்பது – ஒரு முற்போக்கான பங்கு வகிக்கிறது. இது இன்று நேற்றல்ல.

லெனின் தனது தேசிய இனச் சிக்கல் குறித்த ஆய்வுகளில் தேசிய இனச் சிக்கலை எப்படி அணுக வேண்டும் என்று  சொல்லும் போதும் இதுதான் முதலில் செய்தது. முதலாளித்துவ வளர்ச்சியினுடைய எந்தக் கட்டத்தில் ஐரோப்பா எப்படி ஒரு பிற்போக்கு ஐரோப்பாவாக — முடிமன்னராட்சி, மதக் குருமார்களின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பாவாக – அவ்வாறான அரசுகளாக இருந்த போது – தேசிய அரசுகளாக மொழிவழிப்பட்ட எல்லைக்குட்பட்ட அரசுகளாக இல்லாமல் எப்படிக் கலந்து கிடந்தன என்பதையும்  பார்ப்பதோடு, சனநாயக வளர்ச்சிப் போக்கில் சமய மறுமலர்ச்சி, மதக் குருமார்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட நிலைமை, வாக்குரிமையின் விரிவாக்கம்  இதனோடு இணைந்துதான் தேசிய அரசுகளின் உருவாக்கத்தை அவர் பார்க்கிறார். சமூகத்தில் ஏற்படுகிற சனநாயக வளர்ச்சிக்குப் பொருத்தமான ஓர் அரசு வடிவம்தான் தேசிய அரசு வடிவம். 

இதை ஏன் இலெனின் இப்படிப் பார்க்கிறார் என்கிற போது – தேசியம் என்பது ஒரு கருத்தியல், அஃது ஓர் உணர்வு, அஃது ஒரு மனநிலை எனப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தக் கருத்தியலுக்கும் உணர்வுக்கும் மனநிலைக்கும் ஒரு புறஞ்சார்ந்த அடிப்படை இருக்கிறது. புறஞ்சார்ந்த அடிப்படையில்லாத ஒரு கருத்தியலைத்தான் நாம் கற்பிதம் என்று கூறுகிறோம். மொழி என்பது கற்பிதமல்ல. ஒரு மொழி பேசுகிற மக்கள் ஒரு நிலப்பரப்பில் சேர்ந்து வாழ்வது கற்பிதமல்ல. இப்படி வாழ்கிற போது அவர்களுக்கிடையில் ஏற்படுகிற மனநிலை அவர்களுக்கென்று ஏற்படுகிற பண்பாடுகள் போன்றன ஒரு புறநிலை அடிப்படையிலிருந்து எழக் கூடிய அகநிலைக் கூறுகள். அதே போல ஒரு தேசியச் சந்தையினுடைய உருவாக்கம், சரக்கு உற்பத்தியினுடைய வளர்ச்சி இவையெதுவுமே கற்பிதமல்ல. அனைத்துமே புறநிலையானவை. வரலாற்று வழியில் இவை இணைந்துதான் ஒரு தேசம் உருவாகிறது. தேசம் என்கிற மக்கள் சமுதாயம் உருவாகிறது. தேசிய சமுதாயம் என்பது கற்பிதமல்ல என்கிற போது இந்தத் தேசியச் சமுதாயத்தின் வளர்ச்சிக்குரிய ஒரு கருத்தியலாக, அதை நிலைப்படுத்திக் கொள்கிற ஒரு கருத்தியலாக தேசியக் கருத்தியல் உருவாகிறது. 

தேசியக் கருத்தியலில் இரண்டு போக்குகள் இருக்கின்றன. ஒன்று வெளியிலிருந்து வருகிற தடைக்கெதிராகத் தன்னை அது நிலைநாட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. தேசியச் சமுதாயம் ஒரு சமுதாயமாக ஒன்றுபட வேண்டும், தங்களை ஒருங்கிணைந்த முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு முழுமைப்பட்ட ஒருமையாக மாற்றிக் கொள்ள வெளியிலிருந்து வருகிற தடைகள்  இருக்கிற மாதிரி உள்ளிருந்தும் வருகிற தடைகள் இருக்கின்றன.  உள்ளிருந்து வரக் கூடிய தடைகள் என்பது ஒரு பிரபுத்துவ சமுதாயத்தில் அச்சமூக வளர்ச்சிக்கே தடையாக இருக்கிறது. அவர்கள் மொழி அடிப்படையில் இன அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முகவரி பெறுவதற்கே தடையாக இருக்கிறது. நம்முடைய சமுதாயத்தில் நாம் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு தேசிய இனம் என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு இங்கு இரண்டு தடைகள் இருக்கின்றன. ஒன்று வெளியிலிருந்து வரக் கூடிய ஆதிக்க தேசியம். இரண்டாவதாக சமூகத்துக்குள்ளிருந்து வருகிற சாதியம். இந்த இரண்டு விதமான தடைகள் இருக்கின்றன.  அப்போது தேசிய வளர்ச்சி என்பது இந்த இரண்டு தடைகளுக்கும் எதிரான வளர்ச்சிதான். இந்த இரண்டு தடைகளுக்கும் எதிரானது எனும் அளவில் அது வரலாற்று வளர்ச்சியில் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறது. எந்த ஒரு கருத்தியலுமே வரலாற்று வழியில்  அதனது பாத்திரம் முடிந்த பிறகு நிலைநிறுத்தப்படுகிற போது, அதனது தேவையைக்  கடந்து அது வாழ்கிற போது அது பிற்போக்காக மாறிப் போகிறது அல்லது பிற்போக்குத்தனத்தின் கருவியாகக் கூட அது மாறிப் போகிறது. ஜெர்மன் தேசியம் என்பது பிரஷ்யன் முடிமன்னராட்சிக்கு எதிராக இருக்கிற வரைக்கும் ஜெர்மனி துண்டு துண்டாகப் பிளவுண்டு கிடப்பதை மாற்றி ஒன்றுபடுத்துவதற்கு உதவுவது எனும் வரைக்கும், போலந்து பிரான்ஸ் மற்ற தேசியஇனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தும் கருவியாக இருந்த பிரஷ்ய முடிமன்னராட்சியை எதிர்த்து மற்ற தேசிய இனங்களின் விடுதலைக்கு உதவிய வரைக்கும் வரலாற்று வழியில்  அது முற்போக்குப் பாத்திரம் வகிக்கிறது. லெனின் இது பற்றிக் குறிப்பிடுகிற போது 1789 பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி 1871 முடிய ஐரோப்பாவில் இந்த முற்போக்குப் பாத்திரம் இருக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்து ஐரோப்பாவைப் பொறுத்த அளவில் தேசிய இயக்கம்  என்பது முடிந்து போய் விட்டது. சனநாயகப் புரட்சியின்  ஒரு பகுதியாகத்தான் ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவாகின. அவ்வகையில் தேசியம் என்பது அங்கு முடிந்து போய் விட்டது. அதற்குப் பின்புதான் வல்லியம்(பாசிசம்)  போன்றவை உருவாகின்றன. இந்தத் தேசியம் என்பது ஒடுக்கப்பட்ட இனத்தினது தேசியமாக இல்லாமல் ஓர் ஆதிக்கத் தேசியமாக இருக்கிறது. இது பழையதைப் பயன்படுத்திக் கொள்ளும், கற்பனையாக எதிரிகளைக் கூட உருவாக்கிக் கொள்ளும். நீங்கள் சொல்கிற தனித்துவம்( ‘எக்சுக்ளூசிவ்நெசு’ ) போன்ற தேசியத்தின் எதிர்மறைக் கூறுகள் அப்போது முன்னுக்கு வந்து விடுகின்றன. இவற்றை நாம் எதிர்க்கிறோம். முதல் செய்தி யாதெனில் ஐரோப்பாவில் தேசியம் என்பது ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்தது. அந்தக் கட்டத்திற்குப் போகாத நம்மைப் பொறுத்த வரைக்கும், ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்த வரைக்கும் – தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த அளவில் ஒரு மாற்றம் வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65