வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன் காலமானார்

அகரமுதல

எழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன்
இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று  புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார்.
இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை ‘பரணி’ என்ற இதழில் 1961இல் வெளியானது.
அன்று முதல் தொடர்ந்து படைப்புலகில் இயங்கி வந்தார் பிரபஞ்சன். சிறுகதை, புதினங்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்கி வந்தார். இதனால் இதழுலகை விட்டு விலகி எழுத்துலகில் பயணித்தார்.
இவர் தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1995இல் இவரது வரலாற்றுப் புதினம் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. ‘ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை’ (டயரிக்குறிப்பை) ஆதாரமாகக் கொண்டு இது படைக்கப்பட்டது.
இவரது படைப்புகள்   இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, சுவீடிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 57 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்த இவர், இளம் எழுத்தாளர்கள் பலரது எடுத்துக்காட்டு எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
பிரபஞ்சன், கடந்த ஓராண்டாகப் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கடந்த 15ஆம்  நாளன்று அவரது உடல்நலம் மோசமடைந்தது. இதையடுத்துப் புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) பிரபஞ்சன் காலமானார்.
இவரது நாடகமான ‘முட்டை’ தில்லிப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள் ‘பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.இவரது மனைவியின் பெயர் பிரமிளா இராணி. இவருக்கு மூன்று  ஆண் மக்கள் உள்ளனர்.
இவர் சென்னையிலும் புதுச்சேரியிலுமாக வாழ்ந்து வந்தார். இலக்கியத்துக்குப் பிறகு இசையே  தலைமையான வாழ்விடம் எனக் கொண்டவர்.
 இவர் பெற்ற விருதுகள்
சாகித்திய அகாதமி விருது – வானம் வசப்படும் (1995)
பாரதிய பாசா பரிசத்துத் விருது
கோயம்புத்தூர் கத்தூரி இரங்கம்மாள் விருது – மகாநதி
இலக்கியச் சிந்தனை விருது – மானுடம் வெல்லும்
சி. பா. ஆதித்தனார் விருது – சந்தியா
நேற்று மனிதர்கள் -தமிழக அரசின் பரிசு
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -தமிழகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு
இவரது படைப்புகள் சில
1970 – க்குப் பிறகுதான். ஏறத்தாழ 300 கதைகள், இருபத்தைந்திற்கும் மேற்பட்ட புதினங்கள்  ஏறத்தாழ இருநூறு  கட்டுரைகள் பங்களிப்பாகத் தமிழுக்குத்  தந்திருக்கிறார்.
புதினங்கள்
மானுடம் வெல்லும் (1990)
வானம் வசப்படும் (1993)
இன்பக் கேணி (1995)
காகித மனிதர்கள் (1995)
தீயிலே வளர்சோதி (1995)
தீவுகள் (1996)
வசந்தம் வரும் (1996)
நானும், நானும்… நீயும், நீயும்.. (1998)
கண்ணீரால் காப்போம் (1998)
பெண்மை வெல்க (1999)
நீலநதி (1999)
முதல் மழைத் துளி (2000)
சந்தியா (2001)
சுகபோகத் தீவுகள் (2005)
நேசம் மறப்பதில்லை (2007)
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் (2007)
காதலெனும் ஏணியிலே… (2007)
உள்ளங்கையில் ஒரு கடல் (2009)
மகாநதி
காகித மனிதர்கள்
பதவி
ஏரோடு தமிழர் உயிரோடு
அப்பாவின் வேட்டி
குறும் புதினம்
ஆண்களும் பெண்களும்
எனக்குள் இருப்பவள் (2008)
சிறுகதைத் தொகுப்புகள்
பூக்களை மிதிப்பவர்கள் (1996)
விட்டு விடுதலையாகி (2001)
நேற்று மனிதர்கள்
இருட்டு வாசல்
ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
பொன் முடிப்பு (2003)
பிரபஞ்சன் சிறுகதைகள் -1 (2004)
பிரபஞ்சன் சிறுகதைகள் -2 (2004)
நாடகங்கள்
முட்டை
அகல்யா
சீவநதி(2003)
கட்டுரை
மயிலிறகு குட்டி போட்டது
தமிழ் இழப்பும் இருப்பும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வார்த்தைகள் எல்லோரிடமும் இருக்கின்றன.
வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக் கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம்.
நான் வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறேன்.
ஆகவே, நான் பேச விரும்புகிறேன். – பிரபஞ்சன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்பால் இணைந்து, அன்பால் புரிந்து கொண்டு அன்பே தலைமையான ஓர் உலகத்தை உருவாக்கும் தொழிலையே நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனித குலம் அன்பினால் மட்டுமே தழைக்கும், என்பதே என் செய்தி. – பிரபஞ்சன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி: விக்கிபீடியா, தினமணி, மின்னம்பலம்
விரிவிற்குக் காண்க பிரபஞ்சன் – இணையத்தளம் https://www.prapanchan.in/   

வியாழன், 20 டிசம்பர், 2018

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! – அமைதி ஆனந்தம் மடல்


அகரமுதல

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்!

வல்லுநர் குழு அமைக்க வேண்டுகோள். 

ஆ. இரா.அமைதி ஆனந்தம் ஆவணிப்பூர் இராமசாமி <aa384485@gmail.com
பெறுநர்
இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய அரசு.
படி :
இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு.
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு.
இந்திய அமைச்சர், மனித வள மேம்பாடு, இந்திய அரசு.
இந்திய அமைச்சர்,  அறிவியல், தொழில்நுட்பம், இந்திய அரசு.
இந்திய அமைச்சர், தகவல் தொழில்நுட்பம், இந்திய அரசு.
முதலமைச்சர்கள், இந்தியா.
ஐயா,
உளறல் அல்ல; உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை; கி.மு. 1500 – 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எழுத்து ஒலியை /ஓசையை மையமாக வைத்துதான் நாடு கடந்து வந்தவர்கள் சமக்கிருதத்தை உருவாக்கினார்கள். சமக்கிருதத்தில்இருந்து எந்த இந்திய மொழியும் உருகாகவில்லை; உண்மையில், தமிழின் நீட்சிதான் சமக்கிருதம். சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்.
எழுத்து மொழியாக உருவான சமக்கிருதம் மக்கள் பேசும் மொழியாக இல்லாமையால், இலக்கிய வளம் இருந்த போதும் அன்று போல் (பாணினி காலம்) இன்றும் மாறாமல் அப்படியே உள்ளது.
ஆனால், மக்கள் பேசும் மொழியாக இருந்த தமிழ் காலம்தோறும் மாறி மாறி பல பல இந்திய மொழிகளாக, (உதாரணமாக இந்தியாக,  மராத்தியாக, பஞ்சாபியாக),  சம க்கிருத த் தாக்கத்தால் பிரிந்தது. எனினும் மூலத் தமிழ், தமிழக அளவில் (இந்தியாவில்) குறைந்த எழுத்துகள் உள்ள மொழியாக உருவாகி அன்று போல் இன்றும் தனித் தன்மையுடன்  வாழ்கின்றது.
குறிப்பாகக், கூட்டு எழுத்து (combined alphabets), ஒட்டு எழுத்து (conjunct alphabets), மறைமுக எழுத்து (implicit alphabets), போன்ற சிக்கலான எழுத்துகள் (complicated alphabets), இல்லாமல் இருப்பது தமிழின் தனிச்சிறப்பு.
ஆனால், தன்னலம் மிகுந்த பலர் இந்த உண்மையை வெளியில் தெரியாமல் மறைக்கின்றனர்.
இதனை இந்திய அரசு அலசி ஆராய உயர்நிலை மொழி ஆய்வு வல்லுநர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்.
இந்த உண்மையை இந்த உயர்நிலைக்குழு நிலைநாட்டும் என்று நம்புகிறேன்.
அன்புடன் / Ever Yours
ஆ. இரா.அமைதி ஆனந்தம் / A.R.Amaithi Anantham