heding-thamizharkalin-thaazhvumvazhvum
  ‘தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று’உணர முடியாத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த மக்கள் இன்று தம் நிலை கெட்டுத் தறிகெட்டுத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வீழ்ந்து கிடக்கும் நிலை ஏன்? ‘தாய்த்திருநாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பாமல்’ ‘மானமொன்றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருப்பது’ஏன்? ‘சொந்த நாட்டிற் பரர்க் கடிமை செய்தே வாழ்ந்திடோம்-இனி-அஞ்சிடோம்’என்று உரைக்காமல், ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி’ ‘கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி’ ‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும் சிந்தை இரங்காமல்’வீழ்ந்து கிடப்பதேன்? ‘ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராதுபோல வந்த மாமணியைத்’தோற்கச் செய்தது ஏன்? ‘ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனையடுத்த தீவுகள் பலவினும் பூமிப்பந்தின் கீழ்ப்-புறமுள்ள பற்பல தீவினும் பரவி இவ் வெளிய தமிழச் சாதி, தடியுதை யுண்டும் காலுதையுண்டும் கயிற்றடி யுண்டும், வருந்திடுஞ் செய்தியும்’எரிகுண்டடி பட்டும் கொத்துக் குண்டு வீச்சிலும் மடிந்து எஞ்சியோர் மண்ணகழ் பொறிகளால் மண்ணிலே புதைக்கப்பட்டுப் போயும் அவற்றினும் மிஞ்சியோர் திறந்தவெளி வதைக் கொட்டடியில் உதைபட்டு அடிபட்டு வதைபட்டு உறுப்பிழந்தும் உணர்விழந்தும் பசியிலும் நோயிலும் நலிந்தும் அழிந்தும் போவது கேட்டும் நல்லுணர்வின்றி நமக்கென்ன வந்தது என்று பொன்னும் மண்ணும் பொருளும் பிறவும் சேர்த்தும் பதவிகளும் உதவிகளும் பெற்றும் தம்மை உயர்த்தியும் தமிழை உயர்த்த மறந்ததேன்? தமிழர்களைக் காக்க மறந்ததேன்? அவர்களின் குறைகளைப் போக்க மறந்ததேன்? ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’என்பதை உணர்ந்தும் ‘வாழ்வும் தாழ்வும் தமது கைகளில்’என்பதை அறிந்தும் உயர் வாழ்வினை மறந்து தாழ்ந்து வீழ்ந்து கிடப்பதேன்? இந்நிலை மாறி நன்னிலை வரும் நாள் எந்நாளோ? எவராலோ? உலக நாடுகள் அனைத்திலும் தமிழ் உயரிய நிலை எய்திடும் நாள் எந்நாளோ? எவராலோ? உலக முனையின் ஒரு சிறு முனையிலும் சீரிய தமிழருக்குச் சிறு கேடு நிகழும் எனில் சீறியே தமிழர் துடைத்திடும் பொன்னாள் எந்நாளோ? எவராலோ? கட்சித் தலைமைக்கும் நடிப்புக் கூட்டத்திற்கும் கொத்தடிமையாய் இராமல் தன்னுணர்வு கொண்டு தமிழுணர்வு பெற்று தரணியை வென்றிடும் நன்னாள் எந்நாளோ? எவராலோ? ‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு’எங்கள் பகைவர் எங்கோ மறையும் நாள் எந்நாளோ? எவராலோ? ‘நாமடைந்த துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத்’துடைக்க ‘துறைதோறும் துறைதோறும் சீறிவந்தே செயல் செய்வார்’உளரோ? இலரோ? உலகெங்கும் உள்ள உண்மைத் தமிழர்களின் உள்ளம் கேட்கும் இத்தகைய வினாக்களுக்கு விடை தருவார் யாரோ? எவரோ?
  இமயத்தில் கொடியேற்றிய தமிழர், உலகெங்கும் வெற்றி உலா வந்த தமிழர், உலகெங்கும் உள்ள மொழிகள், பண்பாடுகள், கலைகள், நாகரிகங்கள் தோற்றத்திற்கும் மாற்றத்திற்கும் வளமைக்கும் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வித்தாய் விழுதாய், ஊனாய் உணர்வாய் விளங்கிய தமிழர், அறத்திலும் மறத்திலும் சிறந்தோங்கிய தமிழர் அடைந்திருந்த வளமார் வாழ்வையும் அடைந்துள்ள தகையிலாத் தாழ்வையும் அறிஞர் பலர் ஏற்கெனவே எடுத்துரைத்துள்ளனர். ஆகவே, நான் புதியதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் தாழ்வுகளுக்குக் காரணமான தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவற்றைப் போக்குவதற்கு ஆற்ற வேண்டிய அரும்பணிகள் மொழிக்காப்பும் இனத் தொண்டுமே ஆகும். எனவே அவற்றுள் சிலவற்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
1. உலக நூல்களைப் படைத்திடுக!
  சிந்துவெளி நாகரிகம், அரப்பா நாகரிகம், மொகஞ்சதாரோ நாகரிகம் ஆகியன தமிழர் நாகரிகமே! பிற உலக நாகரிகங்களும் தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடையனவே! ஆனால், இவை பற்றிய நூல்கள், கட்டுரைகள், பிற படைப்புகள் ஆகியவற்றில் தமிழர் நாகரிகம் பற்றிய சிறு குறிப்பு கூட இடம் பெறுவதில்லை. எனவே, உலக வரலாறு, உலகப் பண்பாடுகள், உலக நாகரிகங்கள், உலகக் கலைகள், உலக வணிகம், உலக மொழிகள், உலக இனங்கள், உலக மொழிகளில் அகராதிகள், பொருள் களஞ்சியங்கள், அறிவியல் களஞ்சியங்கள் என உலகளாவிய நூல்களைப் படைக்க வேண்டும். அவற்றைத் தமிழ் இனத் தோற்றம், தமிழ் நிலத் தோற்றம், தமிழ் மொழித் தோற்றம், தமிழ்ப் பண்பாட்டுத் தோற்றம், தமிழ் நாகரிகத் தோற்றம், தமிழ்க் கலைகள் தோற்றம், தமிழ் வணிகத் தோற்றம், என்பனவற்றைத் தொடக்கமாகக் கொண்டு படைக்க வேண்டும். இந்திய வரலாறும் உலக வரலாறும் குமரி முனையில் இருந்து தொடங்கப் பெற வேண்டும் எனப் பல்துறை அறிஞர்கள் பலர் கூறினும் இந்திய வரலாற்று நூல்களிலேயே ஒரு சில பக்கங்கள்தாம் தமிழுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு இல்லாமல் அனைத்து நாட்டு வரலாற்று நூல்களும் தமிழ்நிலத் தோற்றத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும்.
  உலகப் புகழ் பெற்ற அகராதிகளைப் புரட்டிப் பார்த்தால் மறைவாக நமக்குள்ளேயே பழங்கதைகள் பேசப்படும் தமிழ்நாடு என்பது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. மொழி என்ற அளவில் பார்த்தால்தான் சில அகராதிகளில் மட்டும் தமிழ் என்றால் என்ன என்று குறிக்கப் பெற்றிருக்குமே தவிர அவ்வகராதிகள் வழங்கும் மொழிப் பட்டியலில் தமிழ் இடம் பெறவில்லை. இவ்வாறு இல்லாமல் எல்லா மொழி அகராதிகளிலும் அந்தந்த மொழிச் சொற்களில் தமிழில் இருந்து நேரடியாக உருவானவை பற்றிய குறிப்பும் தமிழில் இருந்து பிற மொழிக்குச் சென்று அவ்வம் மொழியில் இடம் பெற்ற சொற்கள் பற்றிய குறிப்பும் அந்தந்த சொற்களுக்கு நேராகவே குறிக்கப்பட வேண்டும். இத்தகைய அகராதிகளை உலகெங்கும் உள்ள மொழிகளில் உருவாக்க வேண்டும். தமிழ் நிலத்திற்கு அண்மையில் உள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலான தமிழ்ச் சேய் மொழியினரே தமிழின் தாய்மையை அறியாமலும் அறிந்தாலும் ஏற்காமலும் உள்ள சூழலில் உலகளாவிய இத்தகைய மொழி அகராதிகளே தமிழின் தாய்மையையும் தொன்மையையும் உலகறியச் செய்யும்.
  பிற நாட்டு அறிவியல் களஞ்சியங்களும் தமிழ் அறிவியலோடு தொடர்புபடுத்தி உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பயிரினங்களுக்கு உயிர் உள்ளமை பற்றிய குறிப்பு எனில் தொல்காப்பியர் கூறும் ‘ஒன்றறிவதுவே உற்றறிவதுவே’என்னும் நூற்பாவைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். ‘இராடார்’எனப்படும் ‘பார்வல்’பற்றிய குறிப்பு எனில் புறநானூறு கூறும் ‘பார்வல் பாசறை’பற்றிய குறிப்பு இடம் பெற வேண்டும். வானூர்தி பற்றிய தெனில், ‘வலவன் ஏவா வான ஊர்தி’பற்றியும் சீவக சிந்தாமணி குறிப்பிடும் மயில் விமானம் பற்றியும் கம்பர் குறிப்பிடும் வானூர்தி பற்றியும் இவ்வாறான பிற குறிப்புகள் பற்றியும் இடம் பெற வேண்டும். வான்குடை பற்றிய செய்தி எனில் போகர் சித்தர் பறப்பித்த வான்குடைபற்றியும் இடம் பெற வேண்டும். வானியலாயின் தமிழ் வானியல் செய்திகளும் இடம் பெற வேண்டும். இவ்வாறு தமிழ் அறிவியல் செய்திகளுடன் இணைத்துப் பிற நாட்டு அறிவியல் களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டால்தான் தமிழின் அறிவியல் சிறப்பைப் பிறர் அறிவர்.
  கலை, பண்பாட்டு, நாகரிக, இறையியல் நூல்களிலும் தமிழோடு உள்ள தொடர்பை முன்னிலைப்படுத்தி எழுத வேண்டும். குரவைக் கூத்து, தெருக்கூத்து, நாட்டியம் முதலான தமிழ்க் கலைகளுடனான தொடர்பு குறித்துக் குறிக்கப் பெற வேண்டும். பிறநாட்டு அறுவடை விழாக்களைப் பற்றிக் குறிக்கும் பொழுது பொங்கல் விழாவுடன் உள்ள தொடர்பு குறித்துக் குறிக்கப் பெற வேண்டும். தமிழ் நாட்டு நாகரிகச் சிறப்பால் அந்தந்த நாட்டு நாகரிகங்கள் பற்றிய வளர்ச்சி குறிக்கப் பெற வேண்டும். இறை வழிபாட்டிலும் தமிழ்நாட்டோடு உள்ள தொடர்பு குறிக்கப் பெற வேண்டும். எடுத்துக்காட்டாக சப்பானிய அகராதியில், சேவற்கொடியும் மயிலும் உடைய முருகன் படம் இருக்கின்றது; ஆனால் சப்பானிய நாட்டுச் சிறு தெய்வமாகத்தான் குறிப்பு உள்ளது. அவ்வாறில்லாமல், தமிழ்க்கடவுள் முருகன் என்ற குறிப்புடன் பொருள் விளக்கம் அமைய வேண்டும். இவ்வாறே தமிழோடு தொடர்புடைய சொற்கள் தக்க விளக்கத்துடன் பிற மொழிகளில் குறிக்கப்பட வேண்டும்.
  கடல் வணிகமாயின் வரலாற்றிற்கு முந்தைய காலத்திலேயே தமிழர் மேற் கொண்ட கடல் பயணங்கள் பற்றியும் கடல் வணிகம் பற்றியும் தமிழ் நாட்டோடு கொண்டிருந்த வணிகத் தொடர்பு பற்றியும் குறிப்பு இடம் பெற வேண்டும். பல நாடுகளின் வரலாறு, நாகரிகம், மொழி வரலாறு பற்றிய செய்திகளில் அவை தோன்றும் முன்பே தோன்றிச் சிறந்திருந்த தமிழக வரலாறு, நாகரிகம், மொழிச் சிறப்பு பற்றிக் குறிப்பிட வேண்டும். உலகின் பல பகுதிகளில் புல் பூண்டு கூட முளைக்காத காலக் கட்டத்தில் சிறந்தோங்கி வளர்ந்திருந்த தமிழகச் சிறப்பினைப் பிறர் அறியச் செய்ய வேண்டும்.
  உலகெங்கும் பரந்துள்ள அறிவும் ஆற்றலும் தீரமும் துணிவும் கொண்ட ஈழத் தமிழர்கள் , தாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டின் பல்துறை நூல்களிலும் தமிழ் பற்றிய குறிப்பு இடம் பெறும் வகையில் புதிய நூல்கள் பல இயற்றிட வேண்டும். பிற நாடுகளில் குடிபுகுந்து அந்நாட்டு வளத்தை மேம்படுத்த உழைத்து வரும் தமிழ் மக்களும் அந்தந்த நாட்டு இலக்கியங்கள், தொழில், அறிவியல் முதலான துறைகளில் தமிழின் முதன்மையை அறியும் வகையில் நூல்கள் படைக்க வேண்டும். ‘செய்க பொருளை’என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கட்டளையை ஏற்றுப் பொருள் ஈட்டினால்தான் செல்வாக்கு கிடைக்கும்; செல்வாக்கு கிடைத்தால்தான் சொல்வாக்கு வெற்றி பெறும் என்பதை உணர்ந்து வள வாழ்விலும் உயர வேண்டும். இத்தகைய நேர்வில் உலகளாவிய நூல்களைப் படைக்கவும் இயலும்; அவ்வாறு படைக்கப்படும் நூல்களுக்கு மதிப்பும் கூடும். எனவே, உலகப் படைப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டாக முன்முறையாக நாம் தமிழ்நோக்கிலான உலக நூல்களைப் படைக்க வேண்டும்.
-    பன்னாட்டுத் தமிழுறவு மன்ற
6-ஆவது உலகத் தமிழர்கள் ஒற்றுமை மாநாடு – 2009
தி.பி.2040,புரட்டாசி 9,10,11 * கி.பி.2009 செப்டம்பர் 25,26,27
கோலாலம்பூர், மலேசியா