வெள்ளி, 18 அக்டோபர், 2024

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 112 & 113 ; என்னூலரங்கம்

 




பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர். 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649) –––

தமிழே விழி!                  தமிழா விழி!             

நிகழ்வு நாள் : ஐப்பசி 03, 2055

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

தி.இரா.நி். (எசு.ஆர்.எம்.) கலை அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர்.

செவ்வாய், 15 அக்டோபர், 2024

தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – ம.இராசேந்திரன் உரை

 




கனடா நாட்டின் தொல்காப்பிய மன்றமும் தமிழ் நாட்டின் இலக்குவனார் இலக்கிய இணையமும்  இணைந்து  கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினைச் சிறப்புற நடத்தியுள்ளன..

இந்நிகழ்வின் தொடர்ச்சியாகச்,   சென்னை  எழும்பூரில் தே.ப.ச.(ICSA) மைய அரங்கத்தில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் இலக்குவனார் தொல்காப்பிய விருதுகள் வழங்கு விழாவும் நூல்கள் வெளியீடும் நடைபெற்றன.

விழாவின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணைய ஒருங்கிணைப்பாளருமான தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன், நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் மறைந்த முரசொலி செல்வம், தலைநகரத் தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் புலவர் த.சுந்தரராசன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதும் அனைவரும் எழுந்து அமைதி அஞ்சலி செலுத்தினர்.

இலக்குவனார் திருவள்ளுவன் தம் தலைமையுரையில் கனடாத் தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் சிரீதாசு செல்வநாயகி தலைமையில் சிறப்பாகக் கனடாவில் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக இங்கே இலக்குவனார், தொல்காப்பிய விருதுகள் வழங்கலும் இரு நூல்கள் வெளியீடு, தொல்காப்பிய ஆன்றோர் நாட்காட்டி வெளியிடலும் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். தமிழ் நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கருநாடகா, கனடா வில் இருந்தும்  தொல்காப்பிய அறிஞர்கள் இருபத்திருவர் தெரிந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

விருதாளர்களையும் பல்வேறு மாட்டங்களி்ல் இருந்து வந்துள்ள தொல்காப்பிய அறிஞர்களையும் தமிழ் ஆன்றோர்களையும் தமிழன்பர்களையும் வரவேற்றுக் கவிஞர் தமிழ்க்காதலன் உரையாற்றினார்.

இலக்குவனார் திருவள்ளுவன் படைப்புகளான ‘தமிழ்ச்சிமிழ்-தொல்காப்பியம்’, ‘தொல்காப்பியமும் பாணினியமும்’  ஆகிய இரு நூல்களையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு வெளியிட்டார். தமிழ்ச்சிமிழ் நூலில் தொல்காப்பியம் தொடர்பான சிறப்பான மேற்கோள்களையும் அந்நூல் குறித்த விவரங்களையும் சிறப்பாகத் தொகுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தொல்காப்பியமும் பாணினியமும் நூலில்  தொல்காப்பியத்தின் சிறப்புகளையும் இல்லாச் சிறப்புகளைக் கூறிப் பாணினியத்தை உயர்த்திக் கூறுவதையும் ஆய்வு முறையில் வெளிப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டினார்.

இவ்விரு நூல்களையும் முறையே பேரா.முனைவர் மரிய தெரசாவும் தமிழ்த்தொண்டர் சுப வேல்ராசாவும் பெற்றுக் கொண்டனர்.

தொல்காப்பிய ஆன்றோர்கள் முப்பதின்மர் ஒளிப்படங்கள் அடங்கிய 10/2024-12/2028 இற்கான நாட்காட்டியை மேனாள் தேர்தல் ஆணையர் முனைவர் சோ.அய்யர்  இ.ஆ.ப. .(ப.நி.), வெளியிட்டார். வாசுகி கண்ணப்பன் அறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன் பெற்றுக் கொண்டார்.

அடுத்து உரையாற்றிய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், இலக்குவனாரின் தமிழ்ப்பணிகளையும் போராளிப் பண்புகளையும் செயற்பாடுகளையும் பாராட்டிப் பேசினார்.

தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் விழா பேருரை யாற்றினார். பாதுகாப்புச்சட்டப்படி கைதான ஒரே ஒரு தமிழாசிரியர் இலக்குவனார்தான் என்னும் வரலாற்று உண்மையை எடுத்துரைத்தார். அரசின் ஆட்சிமொழிக் கொள்கையையும் தமிழ்வழிக் கல்வியையும் நிறைவற்ற தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொண்டதற்கே சிறைவாசம் என்றால் இஃது என்ன நியாயம் என்று கலைஞர் கேட்டார் என்றார். ‘நெஞ்சுக்கு நீதி’ தன் வரலாற்று நூலில் தனக்குத் தமிழ் உணர்வையும் தன்மதிப்பு உணர்வையும் ஊட்டியவர் இலக்குவனார எனக் கலைஞர் குறிப்பிட்டுள்ளார் என்றார். தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிட்ட தென்குமரி என்பது இன்றைய குமரி அல்ல. கடல் கொண்ட குமரிக்கண்டம் என்று விளக்கினார்.   நுண்ணிய தமிழ்நூல்களுக்கான கடவுச்சொல்லைத் தந்து சென்றவர்கள் தொல்காப்பியரும் திருவள்ளுவரும். இரு கடவுச்சொற்களையும்  ஒரு சேர இணைத்துத் தந்தவர் இலக்குவனார் என்றார். இலக்குவனார் விருதுகள் தொல்காப்பிய விருதுகள் பெறும் அனைவரையும் வாழ்த்தினார்.

பின்னர் விருதுகள் வழங்கப் பெற்றன. இலக்குவனார் விருதாளர்களுக்குப் பொறி.இலக்குவனார் திருவேலன் பொன்னாடை அணிவிததார். தொல்காப்பிய மணி, தொல்காப்பியச் சுடர், தொல்காப்பிய இளமணி விருதாளர்களுக்குப் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பொன்னாடைகள் அணிவித்தார். முனைவர் ம.இராசேந்திரன் விருதுக் கேடயங்களை வழங்கினார்.

  தொல்காப்பியம் குறித்து ஆங்கிலத்தில் நூலும் கட்டுரைகளும் எழுதியுள்ள, தொல்காப்பியப் பாமாலை எழுதி அதை நாட்டியமாக அரங்கேற்றச் செய்த முனைவர் பொ.நா.கமலா

தொல்காப்பியம் குறித்து ஆங்கில நூல்களும் கட்டுரைகளும் எழுதிய,  தொல்காப்பியரைப் பிறநாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டு ‘ஒப்பில் தொல்காப்பியம்’ படைத்த முனைவர் ப. மருதநாயகம்

கனடாவில் கடந்த 9 ஆண்டுகளாகத் தொல்காப்பிய மன்றம் நடத்தி வருவதுடன் தொல்காப்பிய வகுப்புகள் எடுத்து வருபவரும் முதலாவது உலகத்  தொல்கா்பபிய ஆராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவருமான முனைவர் செல்வநாயகி சிரீதாசு . இவர்களுக்கான விருதைக் கனடாவில் இருந்து வந்திருந்த முனைவர் இல.சுந்தரம் பெற்றுக்கொண்டார் அவர் கனடாவில் நடைபெற்ற தொல்கா்பபிய மாநாடு குறித்துக் கூறியதுடன் மாநாட்டு மலர், கருத்தரங்கக் கட்டுரை மலர், தொல்காப்பியர் சிலை ஆகியவற்றை முனைவர் ம.இராசேந்திரன், பெருங்கவிக்கோ, முனைவர் சோ.அய்யர் இ.ஆ.ப.(ப.நி.), இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோருக்கு வழங்கினார்.

கணவர் முனைவர் க.ப.அறவாணனுடன் இணைந்து தொல்காப்பியக் களஞ்சியம் உருவாக்கிய முனைவர்  தாயம்மாள் அறவாணன்

தொல்காப்பியக் கால ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவரும் செம்மொழி நிறுவனம் மூலம் தொல்காப்பியம தொடர்பான ஆய்வுகளுக்கும் மொழிபெயர்ப்பிற்கும் அடிப்படையாக இருந்தவருமான முனைவர் க. இராமசாமி (அவர் சார்பில் நண்பர் பெற்றுக்கொண்டார்)

‘மலையாள மொழியில் தொல்காப்பியம்’ என மலையாளத்தில்ஆராய்ச்சி நூல் எழுதிய முனைவர் கோபிநாதன் (அவர் சார்பில் நண்பர் பெற்றுக்கொண்டார்)

தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்புகளை விரிவான ஆங்கில முன்னுரையுடனும், உரைக்குறிப்புகளுடனும், கருவிமொழிப் பொருளகராதியுடனும் பதிப்பித்த முனைவர் வெ.முருகன்

குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் சிலை அடிப்படைப் பணிகள் ஆற்றிய புலவர் த.சுந்தரராசன் அவர்களுக்கு வழங்கப்பட இருந்த விருது அவர் மறைந்தமையால் குடும்பத்தாரிடம் சேர்க்கப்படும்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தை நிறுவி அதனை உலக நாடுகள் பலவற்றிலும் தொடங்கவும் அவை மூலம்  தொல்காப்பியம் உலகெங்கும் பரவவும் வித்தாகவும் விழுதாகவும் விளங்கும் முனைவர் மு.இளங்கோவன்(அவர் சார்பில் நண்பர் பெற்றுக்கொண்டார்)

25 ஆண்டுகளாகத் தொல்காப்பியத்தைக் கற்பித்து வருபவரும் தொல்காப்பியப் பயிலரங்கங்களிலும் மாநாடுகளிலு ம்பங்கேற்று வருபவமான முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்

தொல்காப்பியத்திற்குச்  சிறப்பகராதி உருவாக்கியவரும் திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் என்ற முறையில் தொல்காப்பியத்தைப் படைப்புத்துறையிலும் ஆய்வுததுறையிலும் ஒளிவிடச் செய்கிறவருமான முனைவர் த. விட்ணுகுமாரன்.

ஆகியோர் இலக்குவனார் விருதுகளைப்பெற்றுக் கொண்டனர்.

பின் வருவோர் தொல்காப்பிய மணி விருதாளர்கள் ஆவர்.

தொல்காப்பியம் எழுத்ததிகார எளிய உரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் எளிய உரை ஆகியவற்றின் மூலமும் தொல்காப்பியத் தொடர் வகுப்புகள் மூலமும் தொல்காப்பியத்தை எளிய முறையில் மக்களிடையே பரப்பி வரும் புலவர் கு.வெற்றியழகன்

தொல்காப்பிய முற்றோதல் முதலில் நிகழ வழிகாட்டியவரும் தேனியில் வையைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் மூலம் தொல்காப்பியத்தைப் பரப்பி வருபவரும் உலகளாவிய நிலையில் தொல்காப்பியததை இளைய தலைமுறையினருக்கச் சொண்டு செல்பவருமான புலவர் ச.ந.இளங்குமரன்

தொல்காப்பியம் தொடர்பான பொருண்மைகளை முதுகலை, இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு எடுத்துக் கொண்டவர்; தொல்காப்பிய ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு நூல்களை எழுதி வருபவர்; மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழன்பர்களுக்கு இணையவழியில் தொல்காப்பிய வகுப்பு எடுத்துவரும் முனைவர் மு. சோதிலட்சுமி

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனி, ஞாயிற்குக் கிழமைகளில் தொல்காப்பியத் தொடர் வகுப்புகளைச் சிறப்பாக நடத்தி வருபவரும் தொல்காப்பியக் கோட்பாடுகள் அடிப்படையில் கட்டுரை எழுதி வருபவரும் தம் மாணாக்கர்களுக்குத் தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுத்தலைப்புகளைத் தருபவருமான முனைவர் த. தான் இஃச்டோனி

மாணவ நிலையிலேயே தொல்காப்பியப்பாதையில் நடைபோடத் தொடங்கியவரும் தொல்காப்பியத்திற்கு மாணவர் உரையை எழுதியவரும் முனைவர் பட்டத்தையும் தொல்காப்பியம் குறித்து வழங்கியவரும் அயல் மாணாக்கருக்குத் தமிழ் கற்பித்து வருபவருமான முனைவர் இல.சுந்தரம்.

தொல்காப்பிய முழுமை உரை எழுதியுள்ளவரும், இன்று ஒரு சொல் என்றொரு குழுமம் தொடங்கி அதன் வழியாக, நாளும் ஒரு சொல்லைத், தொல்காப்பியம், அடிப்படையில் பகுத்து, பொருண்மை வழங்குபவரும் தொல்காப்பியத்தை நாளும் பரப்பி வருபவருமான திருமிகு சொல்லாக்கியன் (சு.தீனதயாளன்) (கனடாவிள்ள இவர் சார்பில் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.)

பல்துறைப்பணிச்சிறப்பு மிக்கவரும் தொல்காப்பியப் பிள்ளைத்தமிழ், தொல்காப்பியம் சொல் அடைவு, தொல்காப்பியத் துணைவன்(கணியம்/software), தொல்காப்பியம் (கணியம்/software) முதலியவற்றைப் படைத்துத் தொல்காப்பியச் சிறப்பை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டி வருபவருமான கவிஞர் ம.பீட்டர்

மதுரை  தொல்காப்பியர் மன்றத்தின் தலைவராகத் தொல்காப்பியத்தைப் பரப்பும் பணிகளை ஆற்றி வரும் தமிழ்த்திரு அ.இருளப்பன்

மதுரை  தொல்காப்பியர் மன்றத்தின் செயலராகத் தொல்காப்பியத்தைப் பரப்பும் பணிகளை ஆற்றி வரும் தமிழ்த்திரு கரு.முருகேசன்

ஆகியோருக்குத் தொல்காப்பியச் சுடர் விருதுகள் வழங்கப்பெற்றன.

உலகத் தொல்காப்பியத் தூதர்கள்  செல்வி முத்தமிழ்ச் சாமினி, செல்வி செந்தமிழ்ச் சாலினி ஆகிய இரட்டைச்சிறுமியர் தொல்காப்பியம் முழுமையையும்  முற்றோதல் செய்வதால் தொல்காப்பிய இளமணி விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை அவர்கள் சார்பில் தேனி ச.ந.இளங்குமரன் பெற்றுக் கொண்டார்.

விருதாளர்கள் முனைவர் பொ.ந.கமலா, முனைவர் ப. மருதநாயகம், புலவர் ச.ந. இளங்குமரன், முனைவர் மு.சோதிலட்சுமி ஆகியோர் ஏற்புரை வழங்கினர். நிறைவாகத் தமிழ்த்தொண்டர்  வேல் சுப்புராசு நன்றி நவின்றார்.

இலக்குவனார் இலக்கிய இணையம்  வழங்கிய விருது பெற்ற அனைவரும் பல்வேறு வகைகளில் சிறப்பாகத் தமிழ்ப்பணி யாற்றி  வருபவர்கள். எனினும் இங்கே அவர்களின் தொல்காப்பியப் பணிகள் மட்டுமே கருதிப் பார்க்கப்பட்டன. இந்நிகழ்வில் விருதாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் மகிழும் வகையில் அனைவருக்கும் இரு நூல்களும் தொல்காப்பிய ஆன்றோர் நாட்காட்டி வழங்கப்பட்டன.

அனைவரும் எப்போதும் நினைத்து மகிழும் வகையில் குறித்த காலத்தில் தேநீருடன் தொடங்கி உரிய காலத்தில் உணவுடன் முடிந்து இலக்குவனார் இலக்கிய இணையத்தின் விருதுகள் வழங்கு விழா மிகச்சிறப்பாக நிறைவுற்றது.









ஞாயிறு, 13 அக்டோபர், 2024

சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 3, இலக்குவனார் திருவள்ளுவன்

 

சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 3, இலக்குவனார் திருவள்ளுவன்